ரித்விக் கட்டக்: ஒரு புரட்சிக்காரனின் மனசாட்சி - தீனன்

 

ரித்விக் கட்டக்: ஒரு புரட்சிக்காரனின் மனசாட்சி - தீனன்

     இன்று மீளாத துயிலில் ஆழ்ந்திருக்கும் வங்காள மொழி சினிமா கடந்த நூற்றாண்டில் இந்திய சினிமாவின் முகமாக திகழ்ந்த வரலாறு உண்டு. சினிமா என்ற ஊடகம் உருவானது முதல் இயல்பாகவே அது அதிகாரம் மற்றும் பணம் படைத்தோரின் கட்டுப்பாட்டில் ஒரு போகப் பொருளாகப் புழங்கி வந்தது. இந்தத் தன்மையை உடைத்து சினிமாவை வெகு மக்களுக்கான ஊடகமாக மாற்றிய புரட்சியே புதிய அலை. செல்வச் சீமான்களின் உறவுச் சிக்கல்களைக் கூறி வந்த சினிமா பஞ்சைப் பராரிகளின் வாழ்க்கைப் பாடுகளைக் கூறத் தொடங்கியது. அலங்காரமான செட்களில் இருந்து தெருவுக்கு இறங்கி பொதுச் சமூகத்துடன் ஒன்றுபட்டு உயிரோட்டம் பெற்றது. இந்த அலை ஒரே வீச்சில் சினிமாவின் அர்த்தத்திற்குப் புது அரிச்சுவடி எழுதியது. எல்லா நாடுகளிலும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தப் புதிய அலை உருவாகியிருக்கிறது. இந்தியாவில் இந்த அலை வங்காளத்தில் இருந்து எழுந்து நாடெங்கும் பரவியது எனலாம். (Parallel Cinema)  பேரலல் சினிமா என்ற பதத்தால் இது குறிப்பிடப்படுகிறது. வங்கத்து அலையின் முகங்களாக மூன்று இயக்குநர்களைக் கூற முடியும். சத்யஜித் ரே, மிர்ணால் சென், ரித்விக் கட்டக்.

    முதலாமவர் உலக அரங்கில் பேசப்பட்ட அளவுக்கு மற்றைய இருவரும் வெளியே தெரியவில்லை. ஆனால் அவர்களின் சினிமா அன்றைய இந்தியாவின் அடித்தட்டு மக்களின் நாடித்துடிப்பை வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டது. மூவரில் ரித்விக் கட்டக்கை Hidden gem எனக் கூறலாம். 1925ஆம் ஆண்டு வங்கத்தின் டாக்கா நகரில் பிறந்த இவர் விடுதலைக்குப் பின்னர் மேற்கு வங்கத்தில் குடியேறினார். நாடக நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கிய கட்டக் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய நாடக சங்கத்தின் உறுப்பினர். நாடக நடிப்பு மற்றும் இயக்கம் என்ற பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் கட்டக். தனது கருத்தை வெகு மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஊடகமாக மட்டுமே அவர் சினிமாவைப் பாவித்தார். வெற்றி இயக்குனரான பின்னும் அவர் தனது நாடகப் பணியை நிறுத்திக் கொள்ளவில்லை. தனது 52 வயது வரை குறுகிய காலமே வாழ்ந்த கட்டக், மொத்தம் 8 திரைப்படங்களை இயக்கியுள்ளார். கட்டக் ஒரு அகவயக் கலைஞன். தனது பார்வையைக் கலையாக வெளிப்படுத்திவிடும் பேரவா கொண்டு இயங்கியவர். தனது வாழ்வை அதற்கான விலையாகத் தந்தவர். ஒவ்வொரு கலைஞனுக்கும் குறிப்பாக இயக்குனர் மற்றும் எழுத்தாளர்களுக்கு அவர்களைப் பாதித்த ஒரு விஷயம் இருக்கும். அது அவர்களைத் தொந்தரவு செய்த வண்ணம் இருக்கும். அவர்கள் எத்தனை முயன்றாலும் அவர்களின் மனம் இறுதியில் அதற்கே வந்து சேரும். அவர்களின் ஒவ்வொரு படைப்பிலும் அதன் தாக்கமும் பிரதிபலிப்பும் நிச்சயமாக இருக்கும். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதைத் தவிர்க்க முடியாது. ரித்விக் கட்டக்கிற்கும் அப்படியொரு விஷயம் உண்டு. அது வங்கப் பிரிவினை. ஒருங்கிணைந்த வங்காளம் மேற்கு வங்காளமாகவும் கிழக்கு பாகிஸ்தானாகவும் உடைக்கப்பட்ட ரணம் ரித்விக் கட்டக் என்ற கலைஞனை நச்சரித்து தன்னை மீள மீள வெளிப்படுத்திக் கொண்டது. கட்டக்கின் அனைத்துப் படைப்புகளிலும் கதைச் சரடு வங்கப் பிரிவினையும் அதன் தாக்கமுமே. மதத்தின் பெயரால் தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளம் உடைக்கப்படுவதைப் போல் வங்காளிகள் என்ற ஒற்றை அடையாளத்தால் பெருமையுடன் வாழ்ந்தவர்கள் இந்து, முஸ்லீம் என இனம் பிரிக்கப்பட்டு அவரவர் புதிய நாடுகளுக்குத் துரத்தப்பட்டு வீடிழந்து நாடிழந்து சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டனர். அதுவரை அண்டை வீட்டாராகவும் உற்ற நண்பர்களாகவும் இருந்தவர்கள் திடீரென மதப் பைத்தியம் பிடித்து ஆடியவர்களால் பகையாளிகள் ஆக்கப்பட்டனர். கிழக்குப் பாகிஸ்தானில் இருந்து கல்கத்தா வந்து சேர்ந்த இந்து குடும்பங்கள் ஆதரவின்றி அகதி நிலையில் சாலைகளிலும் ரெயில் நிலையங்களிலும் தஞ்சம் அடைந்து பட்டினி கிடந்து மாண்டனர். இது மேற்கு வங்க வரலாற்றில் அனைவரும் மறந்துவிட்ட ஒரு இருண்ட காலப் பகுதியாகும். சக இந்துக்கள் அரவணைத்து ஆதரிப்பார்கள், நேரு அரசாங்கம் ஆதரிக்கும் என்ற நம்பிக்கையும் தாங்கள் தலைமுறைகளாய் வாழ்ந்து வந்த இடத்தைத் துறந்து நம்பிக்கையில் கொல்கத்தா வந்திறங்கியவர்களுக்கு மிஞ்சியது காய்ந்த வயிறும் உயிரை உண்ணும் பஞ்சமுமே ஆகும்.

 மனிதனால் உருவாக்கப்பட்ட இத்தகைய ஏழ்மையை அக்காலத்திய கதைசொல்லிகள் பலர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் முதலாமவர் கட்டக். ஒரு கம்யூனிஸ்ட்டாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலை, ஏழ்மை, பிரிவினை தந்த துயரம், வங்காளிகள் என்ற அடையாள அழிப்பு கட்டக் வழி கோபாவேசமாக வெளிப்பட்டது. சினிமா என்பதை "கோபத்தை வெளிப்படுத்தக் கிடைத்த ஊடகம்" என்று கட்டக் கூறுகிறார்.

    சினிமாவைத் தவிர்த்து கட்டக் எழுதிய நாடகங்களிலும் இந்தத் தார்மீக கோபம் வெளிப்படுகிறது. அவர் ஆரம்பக் காலத்தில் எழுதிய முதல் நாடகத்தின் எழுத்துப் பிரதி கிடைக்கவில்லை. பின்னாளில் அவர் எழுதிய 5 நாடகங்கள் அம்ரிதா நிலஞ்சானா என்பவரால் வங்காளத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளது.  இந்த நாடகங்களின் கருப்பொருள் வங்கப் பிரிவினை மற்றும் அந்த காலகட்டத்திய வறுமை நிலையே. கம்யூனிஸ்ட்டாக இருப்பினும் கட்டக் ஒரு பிரச்சாரக் கலைஞனாக வெளிப்பட்டதில்லை. மாறாக அவர் தனக்கானதொரு கலைப் பாணியை உருவாக்கினார். உண்மையைத் தழுவிய ஆவணப்படச் சாயலோடு வங்காளத்தின் அழகியல் கலைச் சூழலுடன் அவரின் படைப்புகள் பெரும்பாலும் இருக்கும்.

     பல்லாயிரக்கணக்கான மக்களின் ஒரே மாதிரியான துயரங்களை, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியில் நிகழ்ந்தேறும் தனிமனித, குடும்ப மற்றும் சமூகச் சலனங்களை கட்டக் தனது கலையின் வழி வெளிப்படுத்துகிறார். அவரின் படைப்புகளில் கதாநாயகிகளே பிரதானம். சமூகம் படும் இன்னல்களை, அதனால் அதிகம் பாதிக்கப்படும் பெண்ணின் வழி அவர் விவரிப்பார். கல்கத்தா நகரின் ஒரு பேருந்து நிறுத்தத்தில் கையில் பலசரக்குப் பையை சுமந்து பேருந்துக்கு காத்து நிற்கும் ஒரு  துயரார்ந்த நடுத்தர குடும்பப் பெண்ணை கட்டக் பார்க்கிறார். அந்தக் காட்சியால் பாதிக்கப்பட்டு 'மேகே டாக்கா தாரா' (மேகம் மூடிய நட்சத்திரம்)வை இயக்குகிறார். தனது குடும்பத்துக்காக உழைத்து ஓடாய் தேயும் ஒரு பெண்ணைப் பற்றியது இப்படம்

     தனது படைப்புகளில் காட்சிப்படுத்தலுக்கு கட்டக் முக்கியத்துவம் கொடுக்கிறார். வங்காளத்தின் அழகையும் அதன் இனிமையான மனிதர்கள் படும் இடர்களையும் துயரார்ந்த அழகியலுடன் அவர் சித்தரிக்கிறார். கட்டக்கின் படமாக்கல் பாணியை அவரின் படங்களைப் பார்ப்போர் லயிக்காமல் இருக்க முடியாது. நாடகங்களிலும் காட்சி அமைப்புகளையே அவர் பிரதானப்படுத்துகிறார். அதன் வழி தனது கதைக்கான வலுவை அவர் நிறுவுகிறார். வங்கத்தில் ஓடும் பத்மா, மேக்னா, ஜமுனா ஆகிய நதிகள் கதாபாத்திரங்களாகவே அவரது படைப்புகளில் வருகின்றன. அந்த நதிக்கரையோரத்து மரக்குடில்கள்தான் அவரின் அனைத்து நாடகங்களிலும் வருகின்றன. நமது கதைமாந்தர் அதில் வசிப்போரே. நதியின் சலனங்களிலும், அசைவின்மையிலும், அதன் சப்தம் நிசப்தங்களோடும் அவர்கள் ஒன்றுபடுகின்றனர். இந்த நதிக்கரையோர வாழ்வை கட்டக் சொர்க்கமாக விவரிக்கிறார்.

    ஒரு நாடகத்தில் குடும்பம், பிரிவினையால் அந்தச் சொர்க்கத்தை விட்டு நரகத்திற்கு (நகரத்திற்கு) வந்து சிக்கிக் கொள்கிறது. மற்றொரு நாடகத்தில் அந்தச் சொர்க்கம் மனப் பிறழ்வுடைய தாயின் இன்பந்தரும் கனவாக நிலைக்கிறது. நதியோடு அந்த மாந்தர்களின் ஆழ்மை லயிக்கிறது. அதனோடு சலனப்படுகிறது. ஒரு கருணையற்ற இரவில் அந்த நதி உறவுகளைப் பிரிக்கிறது. அந்த நதியே நாட்டின் எல்லைக்கோடாகி வெருட்டுகிறது. பிரிதொரு கணம் உறவுகளை ஒன்று சேர்க்கும் தொடர்புக் கோடாக நதி பெருங்கருணை கொள்கிறது. மொத்தத்தில் ஒரு காலகட்டத்தின் மௌன சாட்சியமாக அவை நிலைகொள்கின்றன. வங்காளத்திற்கு உயிரூட்டும் நரம்புகளாக அவை பாய்ந்தோடுகின்றன. ஒரு நாடகம் இப்படி முடிகிறது, "நீங்கள் நிலத்தைப் பிரிக்கலாம்; ஆனால் வங்காளிகளின் இதயத்தை அல்ல".

    தனது நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் தொன்மங்களைக் கட்டக் பயன்படுத்தியமை கவனிக்கத்தக்கது. இவர் உருவாக்கிய மாந்தர்கள், மந்திரங்கள், உபநிஷத்துக்களை ஏதோவொரு கட்டத்தில் முணுமுணுப்பதுண்டு. இந்தத் தொடரில் முதலில் மொழியாக்கம் பெற்றுள்ள 'தீக்குரவை' நாடகத்தின் தலைவி பெயர் பிஷ்ணுப்ரியா. வங்காளத்தில் வைணவத்தைப் பரப்பிய சைதன்ய மகாபிரபுவுடைய மனைவி பெயர் இது. இறைநெறிக்கு திரும்பிய சைதன்யரின் மனைவி அனுபவித்த கையறுநிலையையே இந்த நாடகத்தின் பாத்திரமான பிஷ்ணுப்ரியாவும் அனுபவிக்கிறாள். நடனமும் நெருப்பும் இந்த நாடகத்தின் முக்கியக் கூறுகள். அதுவே  'தீக்குரவை' - நெருப்புக் கூத்து என்று பெயர் பெற காரணமாயிற்று. இது தனிமனிதர்களின் கதையோ, ஒரு குடும்பத்தின் கதையோ அல்ல. மாறாக அந்தக் காலத்திய சமூகத்தின் கண்ணாடி. தன் மகள் பிஷ்ணுப்ரியாவை நினைத்துக் கவலைப்படும் தந்தை தாராசரன், என் மகள், மட்டும் ஏன், வங்காளத்தின் அனைத்து பெண்களுமே ஆபத்தான சமூகச் சூழலில் தான் உள்ளனர் என்றே எண்ணமிடுகிறார்.

   கட்டக் தனது படங்களில் கடைபிடித்த கருத்தமைதியை நாடகங்களில் மீறுகிறார். ஒவ்வொரு நாடகமும் புரட்சிக்கான அறைகூவலோடு முடிகிறது. உயிர்வலி நாடகம் கல்கத்தா (இப்போது கொல்கத்தா)வில் ஒரே மாதத்தில் வறுமையின் கொடிய பிடியில் தற்கொலை செய்துகொண்ட நிஜ மாந்தர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு அமைந்துள்ளது. மரணித்த பின்னர் அவர்கள் அனைவரும் பூமியைத் தாண்டிய ஓரிடத்தில் விழிக்கின்றனர். அங்கு அவர்கள் தத்தமது கதைகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து சமூகத்தின் கூட்டு மனசாட்சியாக விவாதம் புரிகின்றனர். இறுதியில் தங்கள் நிலைக்கான விடையையும் கண்டறிகின்றனர். மூன்றாம் நாடகமான 'அந்தப் பெண்' மற்றையதை விட அகவயப்பட்ட படைப்பாகும். தனது குழந்தையை இழந்த தாய் பைத்திய நிலையை எட்டுகிறாள். அவள் மன நல விடுதியில் மூன்று மாதங்கள் கழிக்கிறாள். நாடகம் அந்தக் காலகட்டத்தில் அவள் அனுபவிக்கும் உளச் சிக்கல்களைப் பேசுகிறது. மனநலப் பிரச்சனை கொண்ட, குறிப்பாக அவர் பெண்ணாக இருந்தால் சமூகத்தில் அவர் மீது உருவாகும் பிம்பம் குறித்தும் நாடகம் வெளிச்சம் பாய்ச்சுகிறது. ரித்விக் கட்டக்கும் மனப்பிறழ்வுக்கு ஆளாகி மனநல விடுதியில் சில மாதங்கள் கழித்தவர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. தொகுப்பில் உள்ள மற்றைய இரண்டு நாடகங்கள் ஒவ்வொன்றும் எண்பது பக்கங்களுக்கு மிகும். அவை அக்காலத்திய வங்காளத்தின் கூட்டு மனதை மேலும் விரிவாக உணர்த்துவன. ஒன்று, பிரிவினைக்குப் பின் கிழக்கு பாகிஸ்தானில் தங்கள் வீடுகளை விட்டு கல்கத்தாவுக்கு வந்து சேரும் ஒரு குடும்பத்தின் சீர்குலைவைப் பேசுகிறது. மற்றொன்று மத வெறுப்பு மேலோங்கி ஒரு இஸ்லாமிய இளைஞனின் கொலைக்குக் காரணமான இந்து இளைஞன், குற்றவுணர்வு கொண்டு அந்த இளைஞனின் பெற்றோரைத் தேடி நண்பனுடன் வங்கதேசம் பயணிக்கிறான். அங்கு அவனுக்கான மீட்சி என்பது அன்பின் வழி கிடைக்கின்றது. மொழியாக்கம் பெற்றுள்ள மூன்று நாடகங்களின் தொடர்ச்சியாக இந்த இரு பெரும் நாடகங்களையும் மொழிபெயர்ப்பதற்கான முயற்சி தொடரும்.

     ரித்விக் கட்டக்கை மொழியாக்கம் செய்வதற்கு சிறப்பு காரணங்கள் உண்டு. அது அவரின் மேதாவிலாசமோ, கிளாசிக் இயக்குநர் என்ற பிம்பம் மட்டுமோ அல்ல. கட்டக் தன்னை, விடாமல் நச்சரித்த பிரிவினை, வறுமை ஆகிய துயர்களையே மீண்டும் மீண்டும் தனது படைப்புகளில் வெளிப்படுத்தி வந்தார். தனது கலைக்கு மட்டுமல்லாது தனது காலத்திற்கும் கட்டக் உண்மையாக இருந்துள்ளார். ஒரு கலைஞனின் உண்மையான அக்கறையுடன் உருவான ஒரு மறக்கப்பட்ட காலகட்டத்தின் ஆவணமாக அமைந்த படைப்புகளைத் தமிழுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். மதங்களுக்கு இடையேயான வெறுப்பு மீண்டும் மேலோங்கும் இன்றைய இந்தியச் சூழலில் மனதளவிலான  பிரிவினை ஒவ்வொரு நாளும் நடந்தேறுகிறது. எனவே முன்னெப்போதையும் விட ரித்விக் கட்டக்குடைய படைப்புகள் அவர் கோடிட்டுக் காட்டிய பிரிவினையின் கோரம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பொருத்தப்பாடு கொண்டதாகிறது. எனவே அவரது படைப்புகளையும், அதிகம் அறியப்படாத எழுத்துச் செயல்பாட்டையும் தமிழுக்குக் கொண்டுவருவது இன்னும் அவசியமான ஒன்றாக மாறுகிறது. காலத்தின் தேவையாகவும் உருவெடுத்துள்ளது.

     கட்டக்கின் சமகாலத்தவரும் அவரின் நண்பருமான சத்யஜித் ரேயின் பம்பாய் கொள்ளையர்கள், பாயோம்கேஷ் பக்ஷி ஆகிய துப்பறியும் புனைவுகள் தமிழுக்கு வந்துள்ளன. ஆனால் ரித்விக் கட்டக் குறித்து சில சிறப்பிதழ்களும், ஆங்காங்கே சில கட்டுரைகளும் மட்டுமே தமிழில் காணக் கிடைக்கின்றன. அவையும் கட்டக்குடைய திரைமொழி குறித்த விவரணைகளாகவே உள்ளன. ஆனால் கட்டக் பேசும் கருப்பொருள்கள் மீது இந்த நாடக மொழியாக்கம் ஒளி பாய்ச்சும் என்றே நம்புவோமாக.  

ஆங்கில மொழிபெயர்ப்பாளர் பற்றிய குறிப்பு:  

   வங்காளியான அம்ரிதா நிலஞ்சானா கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் எம்.பில் ஆங்கில இலக்கியம் பயின்று, டெல்லி பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக இருந்துள்ளார். நாடக விமர்சனப் பத்திகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். தொலைதூரப் பகுதிகளில் உள்ள சமூகங்களில் வாழும் கைவினைக் கலைஞர்களை அவர்களின் கலைகளை ஆவணப்படுத்தி வெளியுலகிற்கு கொணர்வதில் ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். 'ரித்விக் கட்டாக் - 5 நாடகங்கள்' புத்தகத்துடன் இவரது ஆக்கத்தில், 'ஸ்கார்லெட் டிராகன்ஃபிலைஸ் அண்ட் அதர் ஸ்டோரீஸ் ஆப் சுந்தர்பன்ஸ்' என்ற புத்தகமும் வெளிவந்துள்ளது.  

ரித்விக் கட்டக்: சாதாரணத்தின் பூதாகரம் -அழகுராஜ்

      ரித்விக் கட்டக் நூற்றாண்டை முன்னிட்டு சில குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்புகள் சிற்றிதழ்களின் வாயிலாக நிகழ்ந்துள்ளது. எதேச்சையான கட்டக் பற்றிய தேடலும் உரையாடலும் அவரது நூற்றாண்டைத் தெரியப்படுத்தின. நம் அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாகக் கருதும் ஒன்றினைக் கருவாகக் கொண்டு அதனைப் பூதாகரமாக மாற்றும் கலைத்துவம் அவரின் படைப்புகளில் இருந்து நாம் அறிய கிடைக்கின்றன. சதத் ஹசன் மண்ட்டோவின் சிறுகதைகளில் வெளிப்படும் சித்திரம் கட்டக்கின் நாடகங்களிலும் ஒளிந்துள்ளன. இருவரும் பிரிவினையின் துயரை தங்கள் ஆழ்மனதின் ஓசையாகக் கொண்டவர்கள். மண்ட்டோவிடம் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை தாக்கம் செலுத்தியதைப் போல் கட்டக்கை வங்காளப் பிரிவினை பெரிதும் பாதித்துள்ளது. பிரிவினையினால் இருத்தலியல் சிக்கலுக்கு உள்ளாகும் மனப்போராட்டத்தையும் வறுமைச் சூழலையும் இருவருமே கலையாக்கியுள்ளனர்.

     புதுமைப்பித்தன் தன் கதைகளில் துயரத்தின் வேதனையைப் பகடி தொனிக்கக் கூறி அதனைக் கலைத்துவமாக்குவார். ஆனால், கட்டக் அந்த துயரங்களால் அடையும் விளைவைத் தன்னுடைய ஆக்கங்களில் விவாதப் பொருளாக்குகிறார். மீட்சியடைதலை நோக்கிய பயணத்தையும் அது குறித்த உரையாடலையும் வளர்ப்பதோடு நிகழ்காலத்திய பிரச்சனைகளைத் தத்துவத்தின் துணை கொண்டு மாயவாதத்தோடும் தொன்மையுடனும் இணைந்த புனைவாக முன்வைக்கும் கலையாளுமை கட்டக்கிடம் இருந்து வெளிப்பட்டுள்ளது. தமிழில் பாரதியைத் துணைக்கழைப்பது போல கட்டக் தாகூரைத் தேவையான இடங்களில் பயன்படுத்துகிறார். தாகூரைத் துணைக்கழைப்பதோடு நில்லாமல், தான் வாசித்து தனக்குள் சிந்தனையைத் தூண்டி தொந்தரவுக்குள்ளாக்குகிற எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் கதாபாத்திரங்களின் உரையாடலுக்குள் பேசு பொருளாக்குகிறார்.  கற்றறிந்தோர் மற்றும் கல்லாதோரின் மனித மனங்களில் இருக்கும் கல்வி குறித்தான சிந்தனைப்போக்கை ஒரே நேர்கோட்டில் நிறுத்துவதற்கேற்ற முயற்சியையும் மேற்கொண்டுள்ளார்.

      பல நாடக எழுத்தாளர்கள் தொன்மத்தையும் நவீனத்தையும் இணைத்து வலிமையான கருத்துகளைக் கூறியிருக்கின்றனர். வரலாற்று மீளாய்வின் மூலம் பாத்திரங்களைக் கட்டமைத்து மாற்று உரையாடல் நிகழக் காரணமாகவும் இருந்திருக்கின்றனர். மனம் சார்ந்த பிரச்சனைகளைப் பேசியுள்ளனர். அவற்றிலும் கூட கதை மாந்தர்கள் மற்றும் கதைக்களத் தேர்வு அரசியல் பிரச்சினையாகவோ உடல் மற்றும் மனத்தின் வலிமை அல்லது பிறழ்நிலை குறித்த தேடலைச் சுட்டும் தன்மையிலேயோ அமைந்து விடுவதுண்டு. கட்டக் அதிலிருந்து மாறுபட்டு எளிய மனிதர்களையும் சமூகச் சிக்கல்களையும் அவற்றுக்கான காரண காரியங்களையும் தனது நாடகங்களில் வரும் கதாபாத்திரங்களினூடாக விவாதிக்கிறார். புற உலகத்தால் அக உலகம் பாதிப்புக்குள்ளாவதைப் பற்றிய கவனம் கட்டக்கின் நாடக உலகில் தனித்த இடத்தை அடைந்துள்ளது. 

      தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நாடகங்கள் இதுவரை தீனன் மூலம் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. வரக்கூடிய நாட்களில் வாரத்திற்கு இரண்டு பதிவுகளாக அவற்றை வெளியிட இருக்கிறோம். சென்ற ஆண்டின் இறுதியில் கட்டக் திரைப்படங்கள் குறித்தும் அவரது நாடகங்கள் குறித்தும் தீனன் என்னுடன் பகிர்ந்து கொண்ட போதே அவற்றை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ரித்விக் கட்டக்கின் நூற்றாண்டு என தெரிய வந்த போது அதனை மொழிபெயர்க்கலாம் என்ற தன்னுடைய எண்ணத்தை தீனன் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இப்போது இவை அவரது மொழிபெயர்ப்பில் தொடராக வெளிவருகின்றன. கட்டக் எழுதிய கட்டுரைகள் மற்றும் அவரது நேர்காணல்களுடன் மீதமுள்ள இரண்டு நாடகங்களையும் அவர் தமிழில் மொழிபெயர்ப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.


வாசிப்பதற்கான இணைப்புகள்

தீக்குரவை -முதல் அலை

தீக்குரவை -இரண்டாம் அலை

தீக்குரவை -மூன்றாம் அலை

தீக்குரவை - நான்காம் அலை

வங்காளத் திரைப்படங்கள் நேற்றும் இன்றும்: ரித்விக் கட்டக் நேர்காணல்   (தமிழில் -தீனன்)

உயிர்வலி (பகுதி 1) 

உயிர்வலி (பகுதி 2)

உயிர்வலி (பகுதி 3) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

அணங்கு (பகுதி -4) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)