தீக்குரவை - ரித்விக் கட்டக் (தமிழில் - தீனன்)முதல் அலை

 

தீக்குரவை -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

 முதல் அலை

     (திரை மேலே செல்ல, கருப்பு நிறமுடைய மற்றொரு இருள் திரை மேடையின் முகப்பை மறைத்திருக்கிறது. திடீரென விளக்குகள் ஒளிர, மேடை வெளிச்சம் கொள்கிறது. மேலிருந்து ஒரு பதாகை கீழ்நோக்கி விரிகிறது. அந்தப் பதாகையில், " முகத்திரைகளைக் கிழிப்பதே இந்த நாடகத்தின் நோக்கம்" என்று எழுதப்பட்டுள்ளது. பின்னணியில் ஒரு பெண் பாடிக்கொண்டிருப்பது கேட்கிறது.)

பாடல்:  சச்சிமாதாவே, நான் நான்கு யுகங்களிலும் பிறவி துயரடைந்தவள்.

              சத்ய யுகத்தில் சீதையாக இருந்தேன்,

              திரேதா யுகத்தில் திரௌபதியாக இருந்தேன்,

              துவாபர யுகத்தில் சகுந்தலையாக இருந்தேன்,

              கலி யுகத்தில் இந்த பிஷ்ணுப்பிரியா

              தாயே, நான் நான்கு யுகங்களிலும் பிறவி துயரடைந்தவள்.

             என்னை அரவணைக்க யாருமில்லை, வாழ்வு இப்படியே முடிகிறது

              ஆயினும் நான் இந்த ஜகத்தை இயக்குகிறேன், சச்சிமாதாவே.

    {மேற்கு வங்கம், ஒடிசாவில் வைணவத்தைப் பரப்பிய ஆச்சாரியரின் மனைவி பெயர் பிஷ்ணுப்பிரியா, இந்த நாடகத்தின் பாத்திரத்தின் பெயரும் அதுவே.}

   (மேடை முழுவதும் எதிரொலி போல் அந்தப் பாடல் கூட்டாகப் பாடப்படுகிறது. ஆனால் மேடையில் இன்னும் எந்தப் பொருட்களோ, நடிகர்களோ இல்லை. காலியான மேடையின் இடதுபுறம் இருந்து ஆசிரியர் தாராசரண் தர்க்கபாகீஷ், அவரது மனைவி சாச்சி, மகள் பிஷ்ணுப்பிரியா ஆகியோருடன் நுழைகிறார். தாராசரண் பெரிய வியப்பேதுமின்றி சுற்றுப்புறத்தைச் சுற்றி உணர்ச்சியற்று பார்வையைச் செலுத்துகிறார்.)

தாராசரண்: சாச்சி! வெகுகாலம் ஆகிவிட்டது. இப்போது அது என்ன நிலையில் இருக்கும் என்று தெரியவில்லை. இதோ இங்கே இருக்கிறது அது! இதுதான் அந்த வீடு. சாச்சி இதுதான் அந்த வீடு! பல காலம் கடந்து நாம் மீண்டும் இங்கேயே வந்துவிட்டோம் சாச்சி. இதுதான் நமது நிலம், நமது சொத்து எல்லாமே. நாம் இனி இதை நமது மனதுக்கு நெருக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். வங்காளத்தின் அத்தியாயம் முடிந்துவிட்டது. அது அவ்வளவுதான். நான் சென்ற வடக்கு வங்காளத்தின் ஜல்பகுரியில் கூட மனிதர்கள் தங்களைத் தாங்களே பூமியிலிருந்து அழிந்துபோன உயிரினங்களாக மாற்றிக் கொள்வதை என் கண்ணால் பார்த்தேன். எனது பூர்வீக சொத்துகளான இந்த வீடு, இந்த கிராமத்துப் பள்ளி, இவைதான் இனி நமது வாழ்வுக்கு மீண்டும் அர்த்தம் கொடுக்கும்.

சாச்சி: எனக்கு தெரியவில்லை.. இத்தனை ஆண்டுகள் கழித்து நமது வாழ்க்கை நமக்குத் திரும்பக் கிடைக்குமா? பிஷ்ணு அப்போது சிறுமி. இப்போது அவள் வளர்ந்துவிட்டாள். உண்மையிலேயே வளர்ந்து விட்டாள். 

பிஷ்ணுப்ரியா: (குறும்புடன்) அம்மா! எனக்கு நீங்கள் சொல்லும் இந்த வளரும் விஷயங்கள் ஒன்றும் புரிவதில்லை. நான் என் விருப்பம் போல விளையாடவே விரும்புகிறேன்.  இந்த உலகம் வாழ்வதற்கு அற்புதமான அழகான ஒன்று. இங்கு இருக்கும் எல்லாமே மிகவும் அழகாகத் தோன்றுகிறது. இந்த வானம், வயல்கள், ஆறுகள், எல்லாமே வியப்பைத் தருகிறது.  ஆமாம் தானே அம்மா! ஆம் நான் விளையாடவே விரும்புகிறேன். மனம் போல் விளையாடுவது எவ்வளவு அழகானது தெரியுமா? இதுதான் வாழ்க்கை.

தாராசரண்: சரி என் தங்கமே, நீ விளையாடு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீ உன் மனம் போல விளையாடு. இத்தனை வருடங்கள் கடந்து நாம் ஏன் மீண்டும் இந்த நிலத்துக்கே திரும்பியுள்ளோம் என்று உனக்கு தெரிந்திருக்காது. ஏன் தெரிய வேண்டும்? நீ உன் போக்கில் விளையாடு. உனது முன்னோர்கள் பிறந்து வளர்ந்த இந்த நிலம் உன்னுடையது. இந்த நிலம், இந்த ஆகாயம், நதிகள் எல்லாம் உன்னுடையது என்பதால் இதை விட வேறு எங்கு உன்னால் இத்தனை இன்பத்தை அடைய முடியும். இதுதான் நீ கட்டற்ற சுதந்திரத்துடன் வாழ வேண்டிய இடம்.

சாச்சி: சரி சரி, இப்போது வீட்டைச் சுத்தம் செய்வோம். இப்போது அது என்ன நிலைமையில் இருக்கிறது என்றே தெரியவில்லை.

தாராசரண்: ஆம். வாருங்கள் செல்வோம்.

    (மேடையின் இடதுபுறம் இருந்து தாராசரணிடம் பயின்ற முன்னாள் மாணவன் சுஷோவன் நுழைகிறான். தாராசரணின் கால்களைத் தொட்டு சுஷோவன் வணங்க, அவனைத் தாராசரண் கூர்ந்து பார்த்துவிட்டு, அவனிடம் பேசத் தொடங்குகிறார்)

தாராசரண்: சுஷோவனா இது! எப்படி இருக்கிறாய், நீ நிரம்ப வளர்ந்து விட்டாய், இப்போது பார்க்க அழகாக இருக்கிறாய். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

சுஷோவன்: ஐயா, நான் செய்தித்தாளில் ரிப்போர்ட்டராக வேலை செய்கிறேன். நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள் எனக் கேள்விப்பட்டேன், அதனால் தான் பார்க்க வந்தேன்.

    (சுஷோவன் சாச்சியின் பாதங்களையும் தொட்டு வணங்குகிறான்.)

தாராசரண்: அதோ, நீ சிறுவயதில் சேர்ந்து விளையாடிய பெண், எனது மகள்.

சாச்சி: உனக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் சுஷோவன். நீ என் மகளை பல வருடங்களாகப் பார்க்கவில்லை தானே, என் அன்பு மகள் இப்போது நிரம்ப வளர்ந்துவிட்டாள்.

     (சுஷோவன் பிஷ்ணுப்பிரியாவை நோக்குகிறான். பிஷ்ணுப்பிரியா சற்று வெட்கத்துடன் மேடையின் ஓரமாய் நிற்கிறாள்.)

சுஷோவன்: நீ இப்போது மிக அழகாகத் தெரிகிறாய் பிஷ்ணுப்பிரியா. ஆனால் நீ ஏன் இன்னும் நடக்கக் கற்றுக்கொள்ளவில்லை?

பிஷ்ணுப்பிரியா: (வெடுக்கென அவன் பக்கம் திரும்பி) ஏனென்றால் நான் ஆடவும் பாடவும் கற்றுக்கொண்டேன். ஆனால் நீ இன்னும் நிற்கக்கூட கற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

சுஷோவன்: (புன்னகையுடன்) மறுபடியும் நாம் முட்டிக் கொள்ள ஆரம்பித்துவிட்டோமா? சரி இந்த நட்பான கிண்டல்களைப் பிறகு வைத்துக்கொள்ளலாம்.

பிஷ்ணுப்ரியா: நாங்கள் மிகவும் எளிமையான கிராமத்தார்கள். நகர பழக்க வழக்கங்களுடன் பொருந்துவது எங்களுக்குக் கடினம்.

தாராசரண்: ஒன்றும் கவலைப்படாதே பிஷ்ணுப்பிரியா. உனக்கு விரைவில் இது பழகிவிடும். சரி, சுஷோவன், நீ உன் பத்திரிகை வேலைக்கு மத்தியில் இந்த கிராமத்துக்கு இப்போது வர எதாவது காரணம் உண்டா?

சுஷோவன்: ஐயா, இந்த வழியே வரும் சரக்கு ரெயில்களை சில சமூகவிரோதிகள் வழிமறித்து நிறுத்தி, பொருட்களைக் கொள்ளையடிக்கின்றனர் என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. வங்காளதேசத்தில் இருந்து பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன என்றும் தகவல் கிடைத்தது. அதைப் பற்றி செய்தி சேகரிக்க பத்திரிகையின் ஆசிரியர் என்னை அனுப்பி வைத்தார். ஆனால் நீங்கள் மீண்டும் இங்கு வர என்ன காரணம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

தாராசரண்: வங்காளதேசம் இப்போது கடத்தல்காரர்கள், அக்கிரமக்காரர்கள் பிடியில் உள்ளது. சமூக விரோத சக்திகள் தங்கள் கரங்களை அகல நீட்டி வருகின்றன. மிகப்பெரிய பிரச்சனை பெண்களைப் பற்றி தான். இந்தக் குற்றவாளிகள் பாவம் பெண்கள் என்று துளியும் நினைப்பதில்லை. என் மகள் பிஷ்ணுப்பிரியா கூட - ஏன் பிஷ்ணுப்பிரியா மட்டும், எல்லா பெண்களுக்கும் அங்கு அதே நிலை தான்.

சுஷோவன்: எனக்கும் அதைப்பற்றி எல்லாம் தெரியும். 

தாராசரண்: எல்லாம் தெரிந்து என்ன செய்ய? இதற்கு முடிவே கிடையாதா? என்னதான் தீர்வு?

சுஷோவன்: தீர்வுக்கு நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும், ஐயா.

தாராசரண்: ஆனால் எதுவரை  காத்திருப்பது? நாம் காலம் காலமாக காத்திருக்க முடியாது. கேவலம், மனிதன் என்பவன் மரிக்கக் கூடியவன்.

சுஷோவன்: சரி ஐயா, அதைப் பற்றி நாம் இப்போது பேச வேண்டாம். நீங்கள் இனி இங்கு என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?

    (தாராசரணும், சுஷோவனும் மேடையின் முனையில் நின்று பேசிக்கொண்டிருக்க, பின்னணியில் சாச்சி வீட்டின் தரையைத் தூர்த்துக்கொண்டும், பிஷ்ணுப்பிரியா பொருட்களை மும்முரமாக அடுக்கி வைத்துக்கொண்டும் உள்ளனர்.)

தாராசரண்: கிராமத்துப் பள்ளியை மீண்டும் கட்டும் திட்டம் உள்ளது.

சுஷோவன்: இது சிறந்த திட்டம் ஐயா! தற்சமயம் அதுதான் சிறிந்ததாக இருக்கும். இங்கு மீண்டும் நீங்கள் அறிவு மற்றும் ஞானத்தின் விதைகளை விதைக்க வேண்டும். அறிவின் விதை இந்த மண்ணில் இருந்து துளிர்க்க வேண்டும்.

பிஷ்ணுப்ரியா: (பழங்காலக் காதல் பாடல் ஒன்றைப் பாடுகிறார்.)                    

                           தெய்வம் புறம் செல்ல,

                           அகத்தே எவருமில்லை.

                           இன்பம் எங்கே? துன்பம் எங்கே?

                           யாரை எங்கே காண்பேன்?

                           நானோ பிஷ்ணுப்பிரியா,

                           என் விஷ்ணு (சைதன்யர்) எங்கே போனார்? 

சுஷோவன்: (பிஷ்ணுப்ரியாவைப் பார்த்தவாறு, விடைபெறுவதற்கு முன் தாராசரணிடம் கூறுகிறான்.)  நான் சில நாட்கள் இந்தப் பகுதியில் தகவல்களைச் சேகரித்துவிட்டு சென்றுவிடுவேன். எனது பணி முடிந்ததும் உங்களை மீண்டும் வந்து சந்திப்பேன்.

     (பிஷ்ணுப்பிரியா, சுஷோவனை நோக்கி வேகமாக ஓடி வருகிறாள். பின்னணியில் இசை தொடங்குகிறது.) 

பிஷ்ணுப்ரியா: நீ நிச்சயம் திரும்பி வருவாய் தானே?

      (இருவரும் மேடையில் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு உறைந்து நிற்கின்றனர்.)

சுஷோவன்: நிச்சயம், நான் நிச்சயம் வருவேன்.

     (சுஷோவன் விடைபெறுகிறான்.)

சாச்சி: என் மகள் மிகவும் புத்திசாலி.

     (சாச்சி-யும் மேடையில் இருந்து வெளியேறுகிறாள்.)

தாராசரண்: என் மகள் மிகவும் எளிமையான, அப்பாவிப் பெண்.

     (தாராசரணும் மேடையில் இருந்து செல்ல, பிஷ்ணுப்ரியா மீண்டும் அதே பாடலைப் பாடுவது கேட்கிறது. ராஜா, ராணா இருவரும் மேடையில் இடதுபுறம் இருந்து தோன்றுகின்றனர். அவளின் பாடலின் மெட்டுக்கு ஒத்து இருவரும் கை தட்டுகின்றனர். பிஷ்ணுப்பிரியா திரும்பி அவர்களை பார்க்கிறாள். மேடை முழுதும் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது.) 

ராஜா: பாடு! பாடு! மறுபடியும் பாடு!

ராணா: ! நான் என் உணர்ச்சிகளில் இருந்து மீண்டு வந்துவிட்டதுபோல் உள்ளது. 

ராஜா: அதைத் தான் நாம் பிருந்தாவனத்தின் வசீகரம் என்று அழைக்கிறோம்.

      (பிகு மேடையில் நுழைகிறான்.)

பிகு: ஆகா! செம கட்ட. எங்கிருந்து பிடிச்சீங்க இவள?

ராஜா: வாய மூடு முட்டாள் பையா! இவள் தாராசரண் தர்க்கபாகீஷ் உடைய மகள். 10 வருடத்திற்கு முன் இங்கிருந்து சென்றானே அவன் தான். அந்த பயல் மீண்டும் திரும்ப வந்துவிட்டான்.

ராணா: எதுவாக இருந்தாலும் சரி, இந்த பீஸ் ரொம்ப கொழுத்துருச்சி

       (பிஷ்ணுப்ரியாவைக் குறிப்பிட்டு)

பிகு: இவளை மட்டும் சரக்கு வண்டி ரெயில் கார்டுகளுக்கும், டிரைவர்களுக்கும் கரெக்ட் பண்ணி விட்டோம்னா, பணத்தைப் பத்தி நாம கவலைப்படவே தேவை இல்ல.

ராஜா: இவ செம பீஸ் டா. வங்கதேசத்துல இருந்து பொருட்களைக் கடத்த இவள பயன்படுத்துனோம்னா, யாரும் இனிமே நம்ம கிட்ட பணத்துல பங்கு கேட்க மாட்டாங்க. நம்ம சொந்த தேவைக்கும் இவள பயன்படுத்திக்கலாம்.

பிகு: உண்மைதான்! நாம தான் இப்போ வங்காளத்தோட இளம் ரத்தம். கட்டணம், லஞ்சம் எதைப் பத்தியும் நாம கவலைப்படத் தேவையில்ல. எல்லாத்தையும் வழிக்கு கொண்டு வந்துரலாம்.

      (தூரத்தில் உறைந்துபோய் நிற்கும் பிஷ்ணுப்ரியா, இந்த இளைஞர்கள் பேசுவது எதுவும் புரியாமல் அவர்களை பார்த்த வண்ணம் இருக்கிறாள். ராய்சரண் மேடையின் இடதுபுறம் இருந்து தோன்றுகிறான்.)

ராய்சரண்: இதோ நான் வந்துவிட்டேன். ராய்சரண் தாரா. டவுன் போலீஸ் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியின் மருமகன் நான். ஆனால் அது சுத்த அபத்தம். அவரையும், அவரின் குடும்பத்தில்  உள்ள யாரையும் எனக்கு தெரியாது. ஆனால் இந்த முட்டாள் கிராமத்தான்களிடம் இருந்து பணத்தைக் கறக்க எனக்கு அந்த முகமூடி தேவை. என்னைக் காட்டிக் கொடுத்துவிடாதீர்கள், பிறகு என்னால் அவர்களை ஏய்க்க முடியாது. நான் அவர்களின் நண்பனும், வழிகாட்டியும் ஆவேன். ஏய், ராஜா, ராணா, பிகு, மியா, வடக்கு வங்காளத்தில் இருந்து வரும் சரக்கு ரெயில் நாளை அதிகாலை ஜங்க்ஷனில் நிற்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் திருடுவதிலிருந்து எனக்கு சேரவேண்டியதை சரியாகக் கொடுத்துவிடுங்கள். எல்லாம் வழக்கம்போல தான்.

பிகு: சரி சரி, நீங்கள் 50 சதவீதத்துக்கு குறைத்து வேலை பார்க்கமாட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

ராய்சரண்: நானே அந்த ஐம்பது சதவீதத்தையும் வைத்துக்கொள்கிறேன் என்று நினைக்கிறீர்களா? அதில் இருந்து நான் பங்கு கொடுக்க வேண்டும். கடைசியில் எனக்கு 20 சதவீதம் மிஞ்சினாலே அதிர்ஷ்டம் தான். மீதம் எல்லாமே எனது மேலதிகாரிகளின் வாய்க்குத் தான்.

ராஜா: அங்கே பாருங்க தலைவரே. நம்மகிட்ட இளசா நல்லா பழுத்த புது பொண்ணு ஒன்னு இருக்கு. அவள பயன்படுத்திகிட்டா, நிறைய விஷயம் செய்யலாம்.

ராய்சரண்: அந்த விஷயத்துக்கு இப்போ போக வேண்டாம். அது நிறைய பிரச்னையைக் கொண்டு வரும்.

பிகு: நீங்க சொல்றதும் சரிதான்.

   ("அவங்க அரசியல புரிஞ்சுக்க முடியல", "நீ அதிகம் பேசுற", "வாய் மூடு" என அவர்கள் பேசுவது பின்னணியில் விட்டு விட்டு கேட்கிறது.)

                                            

ராஜா: சரி எல்லாரும் கலைஞ்சு போங்க. நீதியின் காவலர்கள் வராங்க.

     (எல்லோரும் அங்கிருந்து கலைந்து செல்ல, துர்காசரண் நாய்ரத்னா, ரகுதேவ் சரபோபௌமோ மற்றும் உத்பல் வித்யாபூஷண் ஆகியோர் மேடையில் நுழைகின்றனர்.)

துர்காசரண்: வியட்நாமின் கடைசி மிச்சமும் இன்னும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இந்த அமெரிக்கர்கள் எங்கே சென்றனர்? லோன் நோல் (கம்போடியா ராணுவ சர்வாதிகாரி)க்கு இனி என்ன நடக்கும்? ஏய் ரகுதேவ், உத்பல் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ரகுதேவ்: சகோதரா துர்காசரண், உங்கள் எல்லா புதிய தவறுகளையும் நீங்கள் சரி செய்ய வேண்டிய நேரம் இது. அல்ஜீரியாவின் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் அர்ஜென்டினாவுக்கு என்ன நடக்கும்? சிஐஏ (அமெரிக்க உளவுத்துறை) அர்ஜென்டினாவின் அதிபர் அல்லெண்டே ஆட்சியைக் கவிழ்த்து அவரைத் தீர்த்துக்கட்டி விட்டதே!

உத்பல்: இந்த முட்டாள் சிந்தனைகளில் நீ மூழ்கியிருக்க வேண்டியது தான். தென் ஆப்பிரிக்கா, பூடான், ரொடீசியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உனக்கு ஒன்றும் தெரியாது போலிருக்கிறதே.

துர்காசரண்: சரி சரி, ராய்சரண் வீட்டின் முன் கூடி, இந்த விஷயங்களுக்கு தீர்வு என்ன என்று சிந்திப்போம் வாருங்கள். இந்திய தத்துவம் என்பது புரிந்துகொள்ள முடியாத ஆழமுடையது தெரியுமா! அதில் நாம் மூழ்கினால் மட்டுமே அதன் அடியாழத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க முடியும். சரி வாருங்கள் இங்கிருந்து விடைபெறுவோம்.

உத்பல்: உங்களால் ஒரு முறை மட்டும் தான் விடைபெற முடியும். ஆனால் இந்திய தத்துவத்தை எடுத்துக்கொண்டால் குருக்ஷேத்திர காலத்தில் இருந்தே பல தடவை நாம் விடைபெற வேண்டியிருக்கும். போர் தொடங்குவதற்கு முன்னர் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம், "பாரம்பரியத்தின் வேர் ஒருபோதும் அழியாது" என்று கூறியதை நினைவில் கொள்ளுங்கள்.

துர்காசரண்: அப்படியானால் ஞானம் தான் அனைத்திற்கும் அடிநாதம், அது உன்னை விட்டு விடைபெற்றுவிட்டது என்று கூற வருகிறாயா?

உத்பல்: அன்பு நண்பா, அதை நீ எனக்கு ஞாபகப்படுத்துவது எனக்கு வலியைத் தருகிறது.

ரகுதேவ்: இதையெல்லாம் பற்றி பேச நமக்கு சாட்சிகள் வேண்டும். எதுவும் அறியாமல் நாமாக பேசிக்கொள்வது யாருக்குத் தெரியப்போகிறது. நமது சிந்தனைகளை நாம் ஓரிடத்தில் குவிக்க வேண்டும்.

துர்காசரண்: அதனால்தான் சொல்கிறேன், வாருங்கள் ராய்சரணின் இடத்துக்குச் செல்வோம். அங்கு நாம் நமது இந்த தர்க்கங்களில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியும். வாருங்கள் செல்வோம்.

    (மூவரும் மேடையை விட்டு வெளியேறுகின்றனர். பிஷ்ணுப்பிரியாவின் சிறுவயது தோழி கனிகா நடனம் ஆடியபடி மேடையின் இடப்புறம் இருந்து தோன்றுகிறாள். அவளை தொடர்ந்து பிஷ்ணுப்பிரியாவும் மேடையில் நுழைகிறாள்.)

கனிகா: “அழகிய நீல நிற ஆடையுடுத்தி" பாடலைப் பாடுகிறாள். 

       (ரவீந்திரநாத் தாகூரின் Gahana Kusuma என்ற பாடலில் வரும் வரிகள்)                                          


பிஷ்ணுப்ரியா: கனிகா, நீ இன்னும் அதே குறும்புத்தனத்தோடுதான் இருக்கிறாய்.

கனிகா: அன்புத் தோழி   இதயத்தின் இக்கரை, அக்கரை, இரு கரைகளும் நீரில் அடித்துச் சென்றிடஎன்று பாடுகிறாள்

பிஷ்ணுப்ரியா: நீ யாருக்காக இவ்வளவு துறுதுறுப்புடன் இருக்கிறாய்.

கனிகா: உனக்காகத் தான் தோழி. நீ இல்லாமல் இவ்வளவு காலமும் நான் தனியாகவே இருந்தேன்.

பிஷ்ணுப்ரியா: சரி, இப்போது கொஞ்சம் நிறுத்துகிறாயா

கனிகா: (பிஷ்ணுப்ரியாவின் தோள்களைச் சுற்றி கைகளை வளைத்து உற்சாகத்துடன்) நீ வந்துவிட்டாய், மீண்டும் நீ என் வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டாய். சரி வா, நாம் இருவரும் இந்தக் கிராமத்தை ஒரு வழி செய்வோம். இங்குப் பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் மக்கள் அவர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்று நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். தங்கள் சுயத்தைப் பற்றி எப்படி அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை.  இந்த மேடையில் நடப்பதைப் பார்த்து  கொஞ்ச நேரம் பொழுது போக்க மட்டுமே அவர்கள் இங்கு வந்துள்ளனர். தமக்கு உள்ளும் வெளியும் இருக்கும் இன்பத்தைப் பற்றி அவர்கள் ஏதுமறிய மாட்டார்கள். எல்லாம் சொல்லுங்கள் ஹரி.. ஹரி..ஹரி.. என்று!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

அணங்கு (பகுதி -4) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)