உயிர்வலி (பகுதி -2) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

 உயிர்வலி (பகுதி- 2) -ரித்விக் கட்டக்  

 (தமிழில் -தீனன்)

பெண்: கோகோன்.

     (சிறுவன் தூரத்தில் பார்க்கிறான்)


சிறுவன்: என்ன?


பெண்: என் கிட்டே வா, தயவுசெய்து, என் கிட்டே வா. 

     (சிறுவன் அவளை நோக்கி எழுந்து நடக்கிறான், அவள் சொல்கிறாள்:)            என்கிட்ட சொல்லு, நான் என்ன செய்யட்டும்? தயவுசெய்து யாராவது சொல்லுங்களேன். நான் என்ன செய்வேன்!


சிறுவன்: நான் சொல்றேன். வாங்க, என்னோட வாங்க, மேலே. 


பெண்: ஏன்?


     (இருவரும் செல்ல)


சிறுவன்: பேசாமல் வாங்க. என்ன தெரியுது?


    (பெண் பரபரப்புடன்)


பெண்: அது சிவப்பு! இங்க இருக்குற ஆகாயம் ரொம்ப சிவப்பா இருக்குதே. ஏன் அது இவ்ளோ சிவப்பா இருக்கு?


சிறுவன்: அந்த சிவப்பு, வானத்தோட சோகத்தின் நிறம். தாத்தா அப்படித்தான் சொல்வார். அங்க ஒரு மேடான இடம் தெரியுதா? அந்த  இடத்தைத்  தாண்டிப் போய் பாத்தா, செவ்வானத்துக்கு ஒரு சின்ன திறப்பு இருக்குறது தெரியும். இந்த சிவப்பு இப்போ பாக்குற மாதிரி முடிவில்லாதது இல்ல. அங்க இருந்து தெரியுற அந்த திறப்பு வழியா ஒரு துண்டு நீல வானம் தெரியும். நான் அடிக்கடி அந்த மேட்டுக்கு போவேன். பறந்து விரிஞ்ச வானத்துல தூரத்துல அந்த ஒரு துண்டு நீலம் மட்டும் அமைதியா இருந்துக்கிட்டே இருக்கும். அந்த நீல வானத்துக்கு பின்னாடி இன்பமும், துன்பமும் கலந்த இன்னொரு உலகம் இருக்கு. இங்க தெரியுற நீலம் வழியாக அந்த உலகம் என்னோட பேசுற மாதிரி இருக்கும். நான் ரொம்ப விசித்திரமா உணர்வேன்!


பெண்: நான்.. நானும் அத பாக்கணும். 


சிறுவன்: சரி வாங்க போவோம். இப்படி ஏதாவது செஞ்சுக்கிட்டே இருந்தாதான் நம்மால மறக்க முடியும். நம்ம மனச நாம பலப்படுத்தனும். ஆனா அது நம்மால முடியுமா?


பெண்: என்ன.. என்ன சொன்ன நீ?


சிறுவன்: சரி அத விடுங்க. வாங்க போகலாம். 


     (இருவரும் மேடையின் மிகப் பின்னே செல்கின்றனர். கொஞ்ச தூரத்தில் பெண் நின்று, திரும்பிச் சிறுவனைப் பார்க்கிறாள். பெண்ணுக்குச் சற்று பின்னால் சிறுவன் நடப்பதை நிறுத்தி அப்படியே நிற்கிறான்.)


பெண்: என்ன ஆச்சு? ஏன் வர மாட்டேங்கிற?


சிறுவன்: ஒரு நிமிஷம், நான் ஒன்னு சொல்லணும். 


பெண்: என்ன?


சிறுவன்: உங்க.. உங்களுக்கு... உங்க... சரி, வாங்க போகலாம்.


பெண்: அட, என்ன, என்கிட்ட சொல்லு.


சிறுவன்: ஒன்னும் இல்ல. அதாவது, ஒரு விஷயம் என் தலைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. உங்களுக்கு இப்போ யாரும் இல்ல, ஆனா ஒரு சமயம் உங்களுக்கு எல்லாரும் இருந்தாங்க. எனக்கும் அப்படிதான். அதான் நான் சொல்ல நினைச்சேன். 


பெண்: சரி.... என்ன சொல்லனும்னு நினைக்குற?


சிறுவன்: வேணாம், அத விடுங்க.


     (சிறுவன் தனது தலையைத் திரும்பியபடி,  இரண்டு அடிகள் முன்னே எடுத்து வைக்கிறான். குழம்பிப் போனவளாகப் பெண்ணும் முன்னோக்கிச் செல்கிறாள். திடீரென சிறுவன், முணுமுணுக்கும் குரலில் அழைக்கிறான்.)


சிறுவன்: அம்மா, ஆ அம்மா, பாருங்க பாருங்க! வானத்தைப் பாருங்க, நீலம் தெரியுது பாருங்க!


     (பெண் துணுக்குற்றவளாய்)


பெண்: நீ என்ன சொன்ன?


சிறுவன்: இங்க இருந்து நம்மளால கொஞ்சம் மட்டும் தான் பார்க்க முடியும். பாருங்க.


பெண்: நீ என்ன என்னனு கூப்பிட்ட? நீ ஏதோ சொன்னியே, இல்லையா?


    (சிறுவன் புன்னகைக்கிறான்)


சிறுவன்: ஓ! அதுவா? நான் உங்களை 'அம்மா'னு கூப்பிடனும்னு ஆசைப்பட்டேன். என்னோட மனசு உங்கள அம்மானு கூப்பிடணும்னு ஆசைப்படுது.


    (பெண் வெளிறியவளாக, கிசுகிசுக்கிறாள்)


பெண்: அம்மா!


     (பின் சத்தமாக பேசுகிறாள்)


பெண்: இல்ல!


சிறுவன்: ஆனா ஏன்?


பெண்: நான் உன் அம்மா இல்ல. நான் உன் அம்மாவா இருக்கவும் முடியாது. நான் உன் அம்மா கிடையாது. 


சிறுவன்: உங்களுக்கு மனசு பாரமா தோணலயா? நீங்க தனிமையா இருக்கீங்கன்னு தோணலயா? அம்மா?


பெண்: ஆனாலும்..


    (சற்று குழந்தைத்தனமான குறும்பு புன்னகையுடன் சிறுவன், பெண்ணை நோக்கி ஓடிச்சென்று தனது கைகளை அவளைச் சுற்றி வளைத்து தழுவிக் கொள்கிறான். பெண் குனிந்து, தனது விரல்களால் மென்மையாக சிறுவனின் தலையைக் கோதுகிறாள், பின்னர் தலையை நிமிர்த்தி தூரத்தில் எங்கோ பார்வையைச் செலுத்துகிறாள்.)


பெண்: செத்த பின்னும் நாம வாழ வேண்டி இருக்கு. இல்லையா நுட்டு?


    (சிறுவன் ஆச்சர்யத்துடன் அவளைப் பார்க்கிறான். பெண் சற்று சங்கடமாக உணர்கிறாள்)


பெண்: ம்ம்ம். கோக்கா.


சிறுவன்: சொல்லுங்க அம்மா. அங்க வாங்க. இன்னொரு பக்கம் நீல வானம் நமக்காக காத்துகிட்டு இருக்கு. 


     (அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு சிறுவன் மேடையை விட்டு வெளியேறுகிறான். மேடை காலியாக உள்ளது. பின்னர், மலைக்குன்றின் மற்றொரு புறம் இருந்து வருவதுபோல் வெள்ளைக் கேசத்துடன், உணர்ச்சியற்ற முகம் கொண்ட பூர்ணோசந்தர் என்ற முதியவர் ஒருவர், மேடைக்குள் வருகிறார். குன்றின் உச்சியை (மேடையில் சற்று மேடான இடத்தை) அடைந்ததும், அவரது தோற்றத்தில் மாற்றம் தெரிகிறது. அவர் தன்னிலை மறந்தவராய் பரவசத்துடன் காணப்படுகிறார்.)


முதியவர்: அதோ அங்கே! அது போய்விட்டது! அந்த ஜன்னல்கள் சென்றுவிட்டன. இரண்டாவது தளம், முதல் தளம், தரைத் தளம்!  ஒரு சாலை விரைந்து வருகிறது. ஒரு சாலை! இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை!


     (அவரின் பரவசம் அகன்ற பின், அந்த குன்றின்மேல் அவர் அமர்கிறார். அவரின் கன்னங்கள் வழியே கண்ணீர்த்துளி வழிகிறது. இருபத்து நான்கு, இருபத்து ஐந்து வயது மதிக்கத்தக்க போலாநாத் என்ற தொழிலாளி மேடையில் தோன்றி, முதியவரை கண்கள் அகலத் திறந்து பார்க்கிறான். தொழிலாளியைப் பார்த்த முதியவர் எழுந்து நின்று, சற்று சங்கடத்துடன், தனது அங்கியின் ஓரத்தால் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார்.}


போலா: அப்போ சரி, பூர்ணோசந்தர்!  "உங்கள் கவசத்தைப் பூட்டுங்கள், தோழர்களே தயாராகுங்கள்."


முதியவர்: போலாநாத், அந்தப் பாட்டை இங்கே பாடாதே. அந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்னாவது உனக்குத் தெரியுமா?


போலா: ஏன்? எனக்கு அந்தப் பாட்டைப் பாடணும் போல இருக்கு. நான் பாடுவேன். அந்தப் பாட்டோட அர்த்தம் எனக்கு தெரியலேனா என்ன வந்தது. அது இருக்கட்டும், நீங்க ஏன் அழுறீங்க? உங்க பேரன நினைச்சா?


முதியவர்: சரி சரி. நீ ஏன் இவ்வளவு கவலைப்படுற? இப்படி இருந்தா உன்னோட உடற்கட்டை இழந்துருவே.


      (பெண்ணும் சிறுவனும் நுழைகின்றனர், தூரத்தில் நின்று..)


சிறுவன்: இங்க வாழ்ற இன்னொருத்தர் இருக்கார். அவர் ஒரு பியூன். எதோ கல்லூரிலே அவர் வேலை செஞ்சார். அவர் படிக்க ஆசைப்பட்டதால சாக வேண்டியதாயிடிச்சு. அப்புறம் அதோ, தாத்தா! தாத்தா இங்க பாருங்க, அம்மா, அதாவது... 


    (முதியவர் அவர்களைப் பார்க்கக் கூட முயலவில்லை)


முதியவர்: அப்புறம். எல்லாத்தையும் பத்தி அப்புறம் கேக்குறேன். என்னை யோசிக்க விடுங்க. உங்களையே நீங்க தெரிஞ்சுக்கணும், உங்க ஆன்மாவை அறிஞ்சுக்கணும். ஆனால் அது எப்படி வாழ உதவும். ஆன்மாவோட இருக்குறதெல்லாம் சரிதான். சுயத்தைப் பத்தி தெரிஞ்சிக்கணும்தான். ஆனால் உங்கள் வாழ்க்கை, குடும்பம், அவங்களுக்கு என்ன ஆகும்?


சிறுவன்: அப்போ நீங்க இன்னும் உங்க பேரனை பத்தி கவலைப்படுறீங்க சரியா? இந்த எண்ணங்கள்ள நீங்க மூழ்கிப் போயிட்டதா தெரியுது. அது இருக்கட்டும், அம்மா, இவரைத் தான் தாத்தானு கூப்பிடுவேன். இவருதான் அது. இவரைப் பத்தி சொன்னேனே ஞாபகம் இருக்கா? இவரு போஸ்ட் ஆபீஸ்ல என்ன வேலை பார்த்தார்னு எனக்குத் தெரியாது. ஆனா, அதுக்கப்புறம், ஒரு பெரிய கட்டிடத்துக்கு மேல இருந்து குதிச்சுட்டாரு. இவர நம்பி தான் இவரோட பெரிய குடும்பமே இருந்துச்சுன்னு சொல்றாங்க. அதேநேரம், இவர் ரொம்ப அறிவாளி, இவருக்கு நிறைய விஷயம் தெரியும்.


பெண்: இவருக்கு எல்லாமே தெரியுமா?


சிறுவன்: ஆமா, எல்லாத்த பத்தியும் தெரியும். 


      (முதியவர் பெண்ணை கவனிக்கிறார்)


முதியவர்: யாரு, நீ யாரு?


பெண்: ஐயா, நான் ஷெபாலி. என்னால இதுக்கு மேல வலிய பொறுத்துக்க முடியல! நான் நிறைய படிச்சவ இல்ல. எனக்கு எதுவும் தெரியாது. அதனாலதான் நான் தீயில எரிஞ்சு அழிஞ்சேன். 


முதியவர்: ஆனா ஏன் உன்னையே நீ எரிச்சிக்கிட்ட?


பெண்: என்னால வாழ்க்கைத் தந்த வலியோட கொடூரத்த தாங்க முடியல. என்னோட கணவர் மாசம் வெறும் 80 ரூபா தான் சம்பளமா வாங்குவார். அதுக்கு மேல, எனக்கு 5 குழந்தைங்க. ஒரு வங்காளி குடும்பத்த இப்படிப்பட்ட சூழ்நிலை என்ன செய்யும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்....


முதியவர்: இல்ல, இல்ல. நான் அதைக் கேட்க வரல. நீ ஏன் சாகுறதுக்கு தீக்குளிக்குறத தேர்ந்தெடுத்த. சாகுறதுக்கு வேற நிறைய வழிகள் இருக்குதே. 


பெண்: நான் வேற என்ன செய்ய முடியும். எனக்கு இந்த மாதிரி விஷயங்கள பத்தி எல்லாம் அவ்வளவா தெரியாது. என்ன பண்ணனும்னு யாரும் எங்கிட்ட சொன்னதே இல்ல. 


முதியவர்: நீ தண்ணீல மூழ்கியிருக்கலாம், கட்டிடத்தோடு மாடில இருந்து குதிச்சிருக்கலாம், இல்லேனா ரொம்ப எளிமையா, ரோட்டுல நடக்கும்போது வேகமாக வர கார் முன்னாடி பாய்ஞ்சிருக்கலாம். 


பெண்: உண்மைதான். நானும் அதையெல்லாம் யோசிச்சிருக்கேன். அழகழகா உடை உடுத்தி தினமும் சாயந்தரம் சாலையில நிக்குற பொண்ணுங்கள பத்தி யாராச்சும் யோசிச்சிருக்காங்களா? கொழுந்துவிட்டு எரியுற காட்டுத் தீ மாதிரி  என்னைப் போல அவங்கள்ல எத்தனை பொண்ணுங்களோட மனசு உள்ளுக்குள்ளயே எரிஞ்சிக்கிட்டு இருக்கும்னு யாருக்காச்சும் அக்கறை இருந்திருக்கா?  அவங்க வெளிய மட்டும் தான் போலியா சிரிக்குறாங்க. ஆனா அவங்க வலியும் அழுகையும், அவங்க  மனசோட ஆழத்துல சிறைப்பட்டிருக்கு. அதை அவங்க யாருக்கும் வெளிக்காட்ட மாட்டாங்க. அதேநேரம் யாரும் அவங்க வலிய புரிஞ்சுக்கவும் முயற்சி பண்ணமாட்டாங்க. 


முதியவர்: ஆமா, ஆமா, அது ரொம்ப சரிதான். என்னோட கதையை எடுத்துக்கோ, நான் அது எல்லாம் செஞ்சதில்ல, ஆனா, 4 மாடி கட்டிடத்தோட மாடியில இருந்து குதிச்சிட்டேன்.


பெண்: ஓ!


முதியவர்: அது ரொம்பவே சுலபமா இருந்துச்சு. நான் குதிச்சி கீழே விழுந்துகிட்டு இருந்தப்போ, அந்த சாலை என்னை நோக்கி வேகமாக வர மாதிரி இருந்துச்சு. ஒருத்தரோட கவனம் அந்த மாதிரி நேரத்துல ரொம்பக் கூர்மையானதா மாறிரும். கட்டிடத்தோட ஜன்னல்கள் ஒவ்வொன்னும் ரொம்ப வேகமா என்ன கடந்து போய்கிட்டு இருந்துச்சு. அந்த கணத்துல எல்லாமே முடிஞ்சிருச்சு.  என்னோட விலா எலும்புகள் இப்போ இல்ல. அது முழுசா நொறுங்கி சுக்குநூறா ஆகிடிச்சி.  


பெண்: உங்களுக்கு தெரியுமா, தீக்குளிச்சு சாகுறது உங்க மேல ஒரு வாடையை விட்டுட்டு போகும். அந்த நெருப்பு ஜுவாலை இருக்கே.. 


சிறுவன்: என்ன அம்மா?


பெண்: நான் நாலு, அஞ்சு வயசு பொண்ணா இருக்கும்போது அழகாவும், துறுதுறுனும் இருப்பேன். என்னோட கிராமத்து வீட்டுல, ராத்திரில நான் அழும்போதெல்லாம், எங்க அப்பா என்ன எடுத்து அவர் மார்போட அணைச்சுக்குவார். என்ன மென்மையா தட்டிக்கொடுத்து, தாலாட்டுப் பாடி தூங்க வைப்பார். அவர் என்ன தூக்கி தாலாட்டும்போது நான் அவர் மார்புல அப்படியே கரைஞ்சு போயிற போற மாதிரி இருக்கும். அப்புறம் அந்தத் தாலாட்டுப் பாட்டுங்க!.. அந்த வரிகள் எனக்கு இப்போ சரியா ஞாபகம் இல்ல, ஆனா இப்போ அதெல்லாம் அப்படியே முழுசா என் ஞாபகத்துல இருக்குற மாதிரியே தோணுது. அந்தக் காட்சி அப்படியே எனக்குள்ள பதிஞ்சிருச்சு. அந்த இருட்டு நிறைஞ்ச இரவு, வானத்துல மினுங்குற கொஞ்சம் நட்சத்திரங்க, ஆழமான தூக்கத்த ஏற்படுத்துற அந்தச் சோம்பலான தாலாட்டு இசை. இது தான் நான் சாகுற நேரத்துல எனக்குக் கடைசியா தோணுன விஷயம். விசித்திரமா இருக்குது, இல்ல?


முதியவர்: ஆமா, விசித்திரமா, ரொம்ப விசித்திரமா இருக்கு. நான் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். 


பெண்: கண்டிப்பா, சொல்லுங்க. 


முதியவர்: இங்க இருக்கானே போலா அவன் கதையை எடுத்துக்கோ, அவன் ஒரு சணல் ஆலைல தொழிலாளியா இருந்தான். வேலை செய்யும்போது கண்ணுக்கு தெரியாத மோசமான சணல் துகள்கல, தான் சுவாசிச்சிகிட்டு இருக்கோம்னு அவனுக்கு தெரியல. அவனுக்கு காசநோய் இருக்குனு தெரியுறதுக்கு ரொம்ப முன்னாடி இருந்தே அவன் அப்படி தான் இருந்துருக்கான். ஆனா விஷயம் தெரிஞ்சதும் போலாவுக்கு உதவி செய்யுறதுக்கு பதிலா, அவன் மில் முதலாளி, அவன வேலையை விட்டுத் துரத்திட்டான். வேலை இல்லாம, போலா வீடு வீடா, ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியா உதவி கேட்டு அலைஞ்சான். ஆனா எங்கேயும் அவனுக்கு இடம் கிடைக்கல. அதுக்கப்புறம்.....


போலா : நான் வாய் வழியா ரத்தத்த கக்க ஆரம்பிச்சேன். தினம் தினம் ரத்தத்த கக்குனேன். எனக்குப் போக எந்த இடமும் இல்ல. இந்த வேதனையை முடிவுக்குக் கொண்டு வர, நான் என் கழுத்தோட, காலோட, கல்ல கட்டிக்கிட்டு கால்வாய்ல குதிச்சிட்டேன். இந்த கிழவர் சொல்லி முடிக்க வேண்டியத நானே சீக்கிரமா சொல்லிட்டேன். இல்லேனா உங்கள அழ வைக்க, என்னோட கதையை ரொம்ப சோகமா நீட்டி முழக்கிச் சொல்ல இவர் ரொம்ப மெனக்கிடுவாரு. என்னோட கதை இது தான். அதுல கூட்டவோ குறைக்கவோ எதுவும் இல்ல. சரியா தலைவா, நான் இப்போ கிளம்ப வேண்டியிருக்கு. 


முதியவர்: இங்க இருக்குறத இப்ப எப்படி உணர்-ற ?

 

பெண்: மன்னிக்கணும், என்ன கேக்கீங்க?


முதியவர்: உனக்கு இப்போ எல்லாமே ஒரு முடிவுக்கு வந்த மாதிரி இருக்கா?


பெண்: இல்ல, இல்லவே இல்ல. 


முதியவர்: ஹம்ம். இன்னும் உலகப் பந்தங்களோட ஞாபகத்துல தான் நீ சிறைப்பட்டிருக்க, அது உனக்கு ரொம்ப வலிய கொடுக்குது. எனக்கும் அப்படித்தான்.


பெண்: நம்ம உலகப் பந்தங்கள்ள இருந்து விடுபட்டு, நிம்மதியா இருக்குற மாதிரி, எந்த இடமும் இல்லனு சொல்றீங்களா?


முதியவர்: அப்படி சொல்லாத. நிச்சயம் அமைதி நிறைஞ்ச ஒரு இடம் நமக்காக காத்துகிட்டு இருக்கும். 


சிறுவன்: தாத்தா, உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அந்த இடத்த பத்தி நீங்க பேசியிருக்கீங்க. 


முதியவர்: ஆமாம்.


சிறுவன்: அந்த இடம் எங்க இருக்கு?


முதியவர்: ஆமா, ஒரு இடம் இருக்கு, ரொம்ப அழகான உலகம் அது. அமைதியும் மனநிறைவும் நிறைஞ்ச அந்த உலகத்துக்கு போற வாசலைத் தான் நான் இப்போ தேடிகிட்டு இருக்கேன். நிச்சயம் அப்படி ஒரு இடம் இருந்தே ஆகணும். 


பெண்: தயவுசெஞ்சு சொல்லுங்க, அது எங்க இருக்கு? என்னால இனியும் இங்க பொறுமையா இருக்க முடியாது. 


சிறுவன்: ஏன்?..


முதியவர்: எனக்குத் தெரியாது அது எங்க இருக்குன்னு. 


சிறுவன்: அப்போ அப்படி ஒரு இடம் இல்லவே இல்ல...


முதியவர்: அப்படி சொல்லவே சொல்லாத. பண்டைய இந்தியாவோட உபநிஷதங்கள்ள(வேதங்கள்ள) அப்படி ஒரு உலகம் இருக்குறத கணிச்சிருக்காங்க. எந்த துயரங்களும் இல்லாத அப்படி ஒரு உலகத்தை பத்தி நாம (மனிதர்கள்) காலங் காலமா கனவு கண்டிருக்கோம். இன்னும் அத தேடிகிட்டு இருக்கோம். அந்த உலகத்துக்கான வழிய நாம கண்டுபிடிச்சாகனும். இப்போ நீங்க இங்க இருந்து போங்க. 


சிறுவன்: ஏன்?


முதியவர்: என்ன யோசிக்க விடுங்க. நான் அந்த வழிய கண்டு பிடிக்கணும்.


பெண்: சரி. நாங்க ஒரு சில வார்த்தை  மட்டும் சொல்லிட்டு இங்க இருந்து போறோம். 


முதியவர்: நீ என்ன சொல்ல போற?


பெண்: நான் அனுபவிச்சிக்கிட்டிருந்த என்னோட வலிகள்ல இருந்தும், துயரங்கள்ல இருந்தும் தப்பிக்க தான் தற்கொலைப் பண்ணிக்கிட்டேன். ஆனா அந்த வலி வேதனைல இருந்து ஏன் என்னால மீள முடியல?


முதியவர்: ஏன்னு நீ தான் சொல்லணும். 


பெண்: என்னோட பிள்ளைங்கள என்னால அப்படியே முழுசா மறந்துட முடியாது. 


முதியவர்: ஹம்ம். எதிர்காலத்த பத்தின எண்ணங்கள் இன்னும் உன்னைத் துரத்திக்கிட்டு இருக்கு. உன்னோட மரணத்தின் மூலமா நீ இன்னும் முழுசா அழியல. 


பெண்: இருக்கலாம். மரணம் தான் வலிகள்ல இருந்து விடுபடுறதுக்கான வழியா இருந்தா, அப்புறம் ஏன்... 


முதியவர்: ஆனா உன்னோட பிள்ளைகளும் வலியால துடிச்சிகிட்டுத் தான் இருக்காங்க. 


பெண்: அப்போ, அவங்களும் அதுல இருந்து விடுபட இதே வழிய தேர்ந்தெடுக்கணும்னு சொல்றீங்களா? ஐயோ!


சிறுவன்: என்ன சொல்றீங்க, அம்மா?


பெண்: அவங்கள பத்தி நினைச்சு பாரு கோக்கா. உன்னோட அம்மா, அக்கா, என்னோட குழந்தைங்க, இவரோட பேரன், பேத்தி எப்படி உயிர் வாழ முடியும்? எப்படி கஷ்டம் இல்லாம அவங்கள வாழ வைக்க முடியும்?


முதியவர்: அவங்க மட்டும் இல்ல. நம்மள போல இன்னும் ஆயிரம் ஆயிரம் மக்கள் வேதனையில எரிஞ்சிக்கிட்டு தான் இருக்காங்க.  நான் என் கண்ணால அவங்களை பாத்திருக்கேன். நம்மள போல அவங்களும் தப்பிக்க எந்த வழியும் இல்லங்ற சிந்தனைல தான் இருக்காங்க. நம்மள போல ஒரு நாள் அவங்களும் தற்கொலை பண்ணிக்கலாம். 


பெண்: எல்லாரும் எந்தப் பாதையில போகணும்னு நீங்க சொல்றீங்க?


முதியவர்: நாம வந்த அதே பாதை. நாம தான் அவங்களுக்கு இந்த பாதையை காண்பிச்சிருக்கோம். 


பெண்: இல்ல.


முதியவர்: 'இல்ல'னு சொன்னா என்ன அர்த்தம்? 'உங்க துயரங்கள்ல இருந்து தப்பிக்க தற்கொலை செஞ்சிக்கோங்க'ன்னு, நீ இந்த உலகத்துக்குச் சத்தமா அறிவிக்கலயா? நீ, நான், போலா, அந்த பியூன், கோக்கா, எல்லாரும் உலகத்துக்கு சத்தமா, அறைகூவல் விடுத்துருக்கோம். குழந்தைக உட்பட யாரெல்லாம் தொடர் துன்பத்தின் பிடியில சிக்கி தினம் தினம் சாகுறீங்களோ, உங்க வலியை வெல்ல யாரெல்லாம் நினைக்கிறீங்களோ, 'தயவுசெஞ்சு தற்கொலை செஞ்சிக்கோங்க' அப்படினு நாம இந்த உலகத்துக்கு சொல்லியிருக்கோம். 'உங்க வாழ்க்கையின் மிகப்பெரிய எதிரியா நீங்களே மாறுங்க. அப்புறம் எந்த போராட்டமும் இருக்காது. எந்த வலியும் இருக்காது. அது தான் மீட்சியா இருக்கும். அது தான் வேதவாக்கு.' 


பெண்: என் குழந்தைங்க ஏன் சாகனும்? அவங்க சாகணும்னு நான் எப்போவும் நினைச்சதில்ல. 


முதியவர்: நீ பொய் சொல்ற! அவங்க சாகனுன்னு நீ விரும்புன. வாழ்க்கையோட முடிவை நோக்குன வழியையும், அந்த வழியில நடக்குறதுக்கான வெளிச்சத்தையும்  நாம  தான் அவங்களுக்கு காண்பிச்சிருக்கோம். எல்லாப் பிரச்சனைக்கும் சாவு தான்  ஒரே தீர்வுனு அவங்கள நாம நம்ப வைச்சிருக்கோம். எல்லாம் முடிவுக்கு வந்தா தான் அமைதி கிடைக்கும்னு நாம அவங்களுக்கு சொல்லியிருக்கோம்.


பெண்: என்ன நம்புங்க. நான் அத விரும்பல. நிச்சயமா அப்படி நினைக்கல. எல்லாமே என்னை நெறிக்குற மாதிரி இருந்துச்சு,  அதான் நான் அதுல இருந்து ஓடி வந்தேன். கடந்து போற ஒவ்வொரு கணமும் என்னோட கழுத்துல சிக்கியிருக்குற துன்பக் கயிறு இன்னும் வலுவா இருக்குச்சு, அதான் நான் அப்படி செஞ்சேன். ஆனா அவங்க நிம்மதியா வாழணும், மனித இனம் மறுபடியும் தழைக்கணும்.


முதியவர்: சாத்தியமே இல்ல.. எல்லாம் சிதறிப் போயிடிச்சு.


சிறுவன்: நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் போய் நமக்கு மேல இருக்குற அந்தப் பரந்த சிவப்புக்கு நடுவில இருக்குற அந்தக் குட்டி நீல வானத்தை பார்க்கப் போறேன். (பியூன் புத்தகத்தை வாசித்தவாறு வர) ஹே, பியூன், இன்னும் புத்தகமெல்லாம் வாசிக்குறீங்களா?


முதியவர்: இதோ வந்துட்டான், பியூன்! கேளு, நான் உன்கிட்ட முன்னாடி ஒரு விஷயம் கேட்டிருந்தேனே. அது என்ன ஆச்சு?


சிறுவன்: (பியூனைப் பார்த்து) கவலைப்படாதீங்க. தாத்தா இது மாதிரி தான் அப்பப்போ கொஞ்சம் விநோதமா இருப்பாரு. அந்த மாதிரி சமயம் நாம அவர் கிட்ட போகவே கூடாது. சரி நான் போலாவை பாக்க போறேன்.


பியூன்: சரி.


முதியவர்: என்ன பியூன், ஏதாவது பேசு.


பியூன்: ஒவ்வொரு வினைக்கும் அதுக்கு சமமான எதிர்வினை இருக்கும்னு நியூட்டன் சொல்லி இருக்காரு. அது தான் நியூட்டனின் மூனறாம் இயக்க விதி. அப்புறம் வேற ஒரு புத்தகத்துல, என்ன புத்தகம்னு சரியா ஞாபகம் இல்ல, அதுல படிச்சேன், உலகத்தை ஆட்டிப்படைகிற பிரச்சனைகளைப் பத்தி ஏற்கனவே பலரும் தங்களோட கவலையைப் பகிர்ந்து, நிறைய விவாதிச்சும் இருக்காங்க. ஆனா, இந்த நேரத்தோட உண்மையான தேவை, உலகை மாத்துறதும், நாம உலகத்தை பார்க்குற பார்வைய மாத்துறதும் தான். உங்களுக்கு புரியுதா? மாற்றம் ஒன்னு தான் இப்போதைய தேவை. 


     (பியூன் பேச்சை நிறுத்தினான்.)




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

அணங்கு (பகுதி -4) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)