உயிர்வலி (பகுதி 1) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

 உயிர்வலி (பகுதி 1) -ரித்விக் கட்டக் 

(தமிழில் -தீனன்)    

     'ஜ்வாலா' என்ற இந்த நாடகம் 1950ல் அப்போதைய உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டதாகும். இந்த நாடகம் எழுதப்படுவதற்கு சற்று அண்மையில் ஒரே மாதத்தில் கொல்கத்தாவில் பல தற்கொலைகள் நிகழ்ந்தன. இந்த நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் அவ்வாறு தற்கொலை செய்தவர்களில் அடங்குவர். நாடகத்தில் வரும் பைத்தியக்காரன் கதாபாத்திரத்தைத் தவிர மற்ற அனைவரின் பாத்திரங்களும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்த நாடகத்தை ஒரு ஆவணப்படமாகவே கருதலாம். 

     கதாபாத்திரங்களின் பின்னணியை வைத்து பார்க்கும்போது இந்த நாடகத்தின் பின்னால் இருக்கும் கூறுகளான வலியும் வேதனையும் கடத்தப்பட வேண்டுமென்பதை நிகழ்த்துபவர் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த நாடகத்தை அரங்கேற்றும்போது ஜான் ஸ்ட்ரின்ட்பெர்க் -ஐ மனதில் வைத்துக்கொள்ளுங்கள். சுவீடன் நாட்டு நாடக ஆசிரியரான ஜான் ஸ்ட்ரின்ட்பெர்க், உணர்வு வெளிப்பாட்டைக் கடத்தும் உணர்ச்சி நாடகத்தை அமைக்க உளவியலையும் இயல்புவாதத்தையும் இணைத்து பயன்படுத்தியவராக அறியப்படுகிறார். அது மட்டுமின்றி, எதார்த்தமான வட்டார வழக்குகளைத் தனது நாடகங்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளார். 

மொழிபெயர்ப்பாளர் உரை:

    இந்த நாடகம் வங்காளப் பிரிவினைக்குப் பிறகு எழுதப்பட்டது. மூலப் பிரதியில் கட்டக், தற்போது வங்கதேசமாக உள்ள பகுதியில் பேசப்படும் வங்காள மொழியின் வட்டார வழக்குகளில் இந்த நாடகத்தின் வசனங்களை எழுதியுள்ளார். ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பில் வட்டார வழக்கு சாத்தியப்படவில்லை. மூலப் பிரதியின் தன்மையை தக்கவைக்க தமிழ் மொழிபெயர்ப்பு பேச்சு வழக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தின் முழுமையைக் கடத்த முடியாது என்றாலும் அதன் வலியையும் வேதனையையும் ஓரளவு இவை தாங்கி நிற்கும். மேலும், தொடராக வெளியிடுவதற்கு ஏதுவாக தமிழ் பெயர்ப்பு நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

நாடகத்தில் வரும் கதாபாத்திரங்களின் உண்மைப் பின்னணி: 

நாடகத்தில் வருவோர்,

பெண் - ஷெபாலி பந்தோபாத்யாய். ரெயில் நிலைய அதிகாரியின் மனைவியான இவர், வறுமையால் தனது குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத துயரத்தில் வீட்டின் சமையலறையில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்து இறந்தார்.

நாடகத்தில் வரும் சிறுவன் கோக்கா (எ) கோகோன் - தாய், தங்கையுடன் கொல்கத்தா வந்த கோக்கா, ரயில் நிலையத்தில் யாசகம் பெற்று வந்தான். கொடும் பசியால் ஒரு நாள், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டான். 

நாடகத்தில் வரும் முதியவர் - பூர்ணோ பாபு. தனது அறுபதுகளில் இருந்த இவர், காரணமின்றி திடீரென வேலையை விட்டு நீக்கப்பட்டதால், உணவின்றி பல நேரங்களில் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துவிட்டு நாட்கணக்காக வேலை தேடி அலைந்தார். ஆனால் எந்த வேலையும் கிடைக்காத விரக்தியில் கொல்கத்தாவின் பர்மா ஷெல் கட்டிடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

நாடகத்தில் வரும் தொழிலாளி போலா - பராக்பூரில் சணல் தொழிற்சாலையில் தொழிலாளியாக இருந்தார். கண்ணுக்குத் தெரியாத அளவு நுண்ணிய சணல் துகள்கள் போலாவின் குடலுக்குள் சிறுக சிறுகச் சேர்ந்தன. அதன் விளைவாக காசநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு எந்த மருத்துவமனையும் சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. எனவே தனது வலியில் இருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொண்டார். 

நாடகத்தில் வரும் பியூன் - பிரசிடன்சி கல்லூரியில் பணியாற்றி வந்த இளைஞர். உயர் படிப்பு படிக்க வேண்டும் என தீரா ஆசையில் ரிப்பன் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் பிரசிடன்சி கல்லூரியில் அவர் வேலை செய்ததற்கான மீத பணம் வராததால் கையில் பணமின்றி தவித்தார். கட்டணம் செலுத்தாததால் ரிப்பன் கல்லூரி அவரைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. எனவே தனக்குச் சேர வேண்டிய பணத்தை வாங்க பிரசிடன்சி கல்லூரி பிரின்சிபலை பார்க்கச் சென்றபோது அவரால் அவமானப்படுத்தப்பட்டு துரத்தியடிக்கப்பட்டார். அடுத்த நாள் பியூனின் உடல் பிரசிடன்சி கல்லூரியில் உள்ள ஒரு அறையில் விட்டத்தில் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது. 

நாடகத்தில் வரும் பைத்தியக்காரன்- கொல்கத்தாவின் ஹெடோ பகுதியிலுள்ள நடைபாதையில் வசித்து வந்தவன். 

      (மேடையின் ஒரு பகுதி அலை அலையான புள்ளிகளாலான நிலமாய் காட்சியளிக்கிறது. அதன் முடிவில் மின்னல் தாக்கி முற்றிலும் எரிந்த நிலையில் ஒரு பழைய கருவேலமரம் நிற்கிறது. உயிரற்று நிற்கும் அதன் உயரமான கிளைகள் வானை முட்டும் வகையில் உள்ளன. புகை மற்றும் பனி அடர்ந்து அந்த மரம் வரை பரந்திருந்த நிலம், அதற்கு அப்பால் எதுவும் புலப்படாத அத்துவானமாக உள்ளது. அந்தப் பரப்பில் ஒன்றிரண்டு கற்றாழைகள் அதன் இருப்பை அறிவிப்பதுபோல் நிற்கின்றன. இடதுபுறமாக தேங்கிய நிலையில் பயன்படுத்தப்படாத ஒரு குளம் வெளிச்சத்தைப் பிரதிபலித்தபடி உள்ளது. அதில் எந்தவொரு உயிரினமும் இருப்பதற்கான அறிகுறிகளும் இல்லை. காற்றின் சிறு அசைவும் இல்லாமல் அனைத்தும் பாழ் நிலையில் உள்ளன.)

    முற்றான நிசப்தத்தில் மேடையின் திரை மேலே செல்கிறது. மின்னல், சத்தத்துடன் பளீரிட, அதன் வெளிச்சம் அனைத்தின் மீதும் பயங்கரமான உணர்வைக் கிளர்த்துகிறது. மீண்டும் மீண்டும் கேட்கும் ஒரு கேவலான குரலின் ஓலம் அந்த நிலத்தின் (மேடையின்) நிசப்தத்தை அறுப்பது போல் உள்ளது. கருவேல மரம் நடுங்கத் தொடங்கியது. சூரியனை மேகங்கள் மறைத்ததுபோல் அந்தப் பகுதியின் மேல் நிழல்கள் கன்னிகளாகக் கவிகிறது. அது ஒரு சபிக்கப்பட்ட நிலமாக பேய்த்தன்மை கொண்டு காட்சியளிக்கிறது. அந்த நிழல்களுக்கு நடுவே, அசையும் நீண்ட கூந்தலை விரித்து அங்கு ஒரு பெண் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்தப் பெண் இரத்தத்தை உறைய வைக்கும் வகையில் கூச்சலிடுகிறாள். 

    அவள் கூச்சலை நிறுத்த, ஒரு பளிச்சிட்ட மின்னல் (விளக்கு) வெளிச்சத்தில் அவள் முகம் தெரிகிறது. அவள் ஒரு அன்பான நடுத்தர குடும்பத்து மனைவியைப் போல காட்சியளிக்கிறாள். ஆனால் அவளின் முகத்தில் பாதி சதை, எரிந்த நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. தீயினால் சுட்டது போல அவளின் உடல் முழுவதும் கருப்பு வெள்ளையான குறிகள் இருக்கின்றன. அவள் அணிந்துள்ள சேலை பாதி எரிந்த நிலையில் இருக்க, அவள் பயங்கொண்டவளாக தனது வலது கையை முகத்தை நோக்கி உயர்த்துகிறாள். 

பெண்: ஆஆஆ... எரியுதே ! எரியுதே!

     (திடீரென ஒரு மென்மையான இளம் குரல் எங்கிருந்தோ கேட்கிறது.)

குரல்: அப்புறம்?

பெண்: என்ன?

     (பெண், அந்தக் குரல் எங்கிருந்து கேட்கிறது என்று சுற்றுமுற்றும் திரும்பி பார்க்கிறாள். அந்தக் குரல் வெடித்துச் சிரிக்கிறது.)

குரல்: பயந்துட்டியா?

பெண்: ஆமா

     (அவளுக்கு சுற்றுமுற்றும் யாரும் தெரியவில்லை, ஆனால் அவள் காலினருகில் ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன், மேலே உடை ஏதுமணியாது, இடுப்பில் மட்டும் துண்டு போன்ற ஒரு அழுக்குத் துணியைச் சுற்றியுள்ளான். அவனின் தலையில் உள்ள சீரற்ற சுருள் முடியின் சில கற்றைகள் இரத்தத்தில் நனைந்து அந்த ஈரத்தில் தலையோடு படிந்துள்ளன. அவனது முகத்தில் குறுக்கும் நெடுக்குமான கோடுகளாக இரத்தம் உறைந்துள்ளது. கோரமான பாவனையோடிருக்கும் அவனின் முகத்தில், இரு கண்கள் மட்டும் ஒளிர்ந்தபடி இருக்கின்றன. சிறுவன் தூக்கம் முறிப்பதுபோல் தனது கைகளை நெட்டி முறித்து கொட்டாவி விடுகிறான்.)

சிறுவன்: இப்ப தான் நீங்க இங்க வந்திருக்கீங்க, அப்படித்தான?

பெண்: ஆமாம் (தன்னிலை மறந்தவளாய் மிரட்சியுடன், தலையசைத்துக் கூறுகிறாள்.)

சிறுவன்: யாரு நீங்க? 

பெண்: நானா? நான் ஷெபாலி, ஷெபாலி பந்த்யோபாத்யாய், காளிகாட் ஸ்டேஷன்ல இருந்து வரேன்.

சிறுவன்: ஓ, சரி 

பெண்: இது என்ன இடம், நீ யாரு?

சிறுவன்: நான் கோகோன். நான் சமீபத்துல தான் இங்க வந்து சேர்ந்தேன்.

    (பெண், ஏதோ மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல சுற்றுமுற்றும் பார்க்கிறாள்.)

பெண்: நான் எங்க வந்துருக்கேன்? அடக் கடவுளே?

சிறுவன்: ரொம்ப வலிக்குதா? உக்காருங்க. உங்க உடம்புல இருக்குற எரிச்சல் கொஞ்ச நேரத்துல குறைஞ்சிடும்.

     (பெண்ணின் தோள் மீது கைகளை வைத்து அவளைச் சிறுவன் ஆறுதல்படுத்துகிறான்.)

பெண்: ரொம்ப விசித்திரமா இருக்கு? ஒருவேள நான், நான்...

சிறுவன்: செத்துட்டீங்க! இன்னும் உங்களுக்கு அது புரியலயா? யாரு, அவங்க வாழ்க்கையை அவங்களே அழிச்சிக்கிறாங்களோ அவங்க தான் இங்க வருவாங்க. நீங்க தீக்குளிச்சி தற்கொலை பண்ணிகிட்ட மாதிரி இருக்கு. ஆனா நா எப்பயும் தீ பக்கத்துல போனதே இல்ல. 

பெண்: ஆ! அந்தத் தீ! அருவருப்பான எரிஞ்ச வாசனை! ஆமா, அன்னைக்கு காலையில நான் முழுசா பைத்தியம் பிடிச்சு இருந்தேன். உனக்கு காளிகாட் எங்க இருக்குன்னு தெரியுமா?

சிறுவன்: ஆமா, கொல்கத்தாவுல இருக்குற காளி கோவில், எனக்கு அது தெரியும்.

பெண்: காளிகாட் ஸ்டேஷன் அதிகாரியா இருக்குற அந்த காளிதாஸ் பாபுவோட மனைவி நான், அவரு மாசம் எம்பது ரூபா சம்பளம் வாங்குறாரு.

சிறுவன்: நீங்க உங்களையே எரிச்சுக்க அதுவா காரணம்?

சிறுவன்: இல்ல, எங்க குடும்பத்துல மொத்தம் ஏழு பேரு, அஞ்சு பேரு குழந்தைங்க. எல்லாருக்கும் வாழ்வாதாரம் அந்த எம்பது ரூபா மட்டும் தான். உனக்கு அதெல்லாம் புரியாது. அந்த மாதிரி இருக்குறதுக்கு பதிலா பிச்சக்காரங்களா வாழ்ந்துட்டு போயிறலாம்.

     (சிறுவன் ஆர்வத்துடன்)

சிறுவன்: பிச்சக்காரங்களாவா?

     (பெண் விளக்கிக் கூற முற்படுகிறாள்.)

பெண்: பிச்சக்காரங்களா இருந்தா மானம் மரியாதை எதையும் காப்பாத்தணும்னு அவசியம் இல்ல. 

சிறுவன்: சரி, நீங்க உங்க கதையை முழுசா சொல்லி முடிங்க. அப்புறம் நான் என்னோடத சொல்றேன்.

பெண்: நிறைய பேர் இருக்குற ஒரு நடுத்தர குடும்பம் தினம் தினம் எவ்வளவு வலிய அனுபவிக்குதுனு சொல்லிப் புரிய வைக்க என்கிட்ட வார்த்தை இல்ல. ஒவ்வொரு நாள் கழியும்போதும், குழந்தைங்க சத்து இல்லாம ரொம்ப உடம்பு முடியாம போனதுங்க. அணைஞ்சுகிட்டு இருக்குற மெழுகுவர்த்தி மாதிரி வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில அவங்க இருந்தாங்க. எனக்கு சத்து இல்லாததுனால அதுல கைகுழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க முடியல. என்னோட மனசு நிலையா இல்லாம மோசமான ஊசலாட்டத்துலயே இருந்துச்சு. நான் சின்ன விஷயத்துக்கும் எரிச்சல் பட்டேன், சிடுசிடுத்தேன். என்னோட சிந்தனையும், மனசும் ஒன்னோட ஒன்னு பின்னிக் குழம்பிப்போய் இருந்துச்சு. 

     (பெண் வேதனையில் நெழியத் தொடங்கினாள்.)

சிறுவன்: என்னாச்சு? மறுபடியும் உடம்பு ரொம்ப எரியுற மாதிரி இருக்கா?

பெண்: இல்ல, இல்ல. அந்த உணர்வு ரொம்ப நேரம் முன்னாடியே போயிடிச்சு. அது முழுசா போயிடுச்சு. ஆனா இந்த வலி கொடுங்குற ஞாபகங்கள் மட்டும் என் மூளைக்குள்ள இன்னும் குத்திக்கிட்டே இருக்கு. என்னால அதுல இருந்து வெளிய வர முடியல. என்னால அத மட்டும் செய்ய முடியவே மாட்டேங்குது. 

     (சிறுவன் தனது தலையை ஆட்டுகிறான்) 

சிறுவன்: அது உங்களால இப்போதைக்கு முடியாது. உங்களுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு?

பெண்: நான் குழந்தைக்காக கொஞ்சம் பால் கடன் வாங்கிட்டு வந்து அத சூடு பண்ண சமையலறைக்குள்ள போனேன். நுட்டு, என்னோட மூணாவது குழந்தை, என் பக்கத்துல வந்து நின்னுகிட்டான். நுட்டுக்கு சாப்பாடு மேல அவ்ளோ விருப்பம். அவன் வாழ்க்கைல நல்ல சாப்பாடே சாப்பிட்டது கிடையாது. அவன் என்கிட்ட வந்து நின்னு "அம்மா"னு கூப்பிட்டான். 

     (பெண்ணின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.)

சிறுவன்: அழாதீங்க.. மனச தளர விடாதீங்க.

    (பெண் அழுகையிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு)

பெண்: நுட்டு சொன்னான் 'அம்மா, எனக்குச் சாப்பாடு வேணும்.' அத கேட்டு என்னால கோவத்த கட்டுப்படுத்த முடியல, அவன பலமா ஓங்கி அறைஞ்சுட்டேன். வலி தாங்காம அவன் அலறித் துடிச்சான். என் பொண்ணு குஹி: 'அம்மா, அம்மா நுட்டுவ பாருங்க, அவனுக்கு ஏதோ ஆயிடிச்சு'னு அலறுனா. என்னால என்னையே கட்டுப்படுத்த முடியல. நான் சுத்தமா நிதானம் இழந்துட்டேன். எல்லாரையும் அறைஞ்சு சமையலறைய விட்டு வெளியே துரத்திட்டேன். நான் பெத்த என் பிள்ளைங்க! பசியால துடிக்குதுங்க.. நான் அப்படியே கதவுல சாஞ்சி உக்காந்து கதறி அழ ஆரம்பிச்சேன். நான் ஏன் அழுகுறேன், என் மனசு எவ்ளோ ஆழமா காயம்பட்டு துடிச்சிக்கிட்டு இருக்குனு என்ன பத்தி அக்கறை பட யாராச்சும் இருக்காங்களா என்ன? நீயே சொல்லு? 

சிறுவன்: அந்தச் சமையலறையில வேற யாருமே இல்லையா?

பெண்: எனக்கு எதுவும் தெரியல, நான் அழுதேன், அழுதேன், அழுதுகிட்டே இருந்தேன். நீ எப்பவாவது உன்னையே அவ்வளோ வெறுத்து, சபிச்சு இருக்கியா?

சிறுவன்: இல்ல.

பெண்: இயலாமை என்ன முழுசா பிடிச்சு ஆட்டுச்சு, என்ன சுத்தி எல்லாமே இருட்டா தெரிஞ்சது. எங்கயும் முழு இருட்டு மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது. எப்படியோ, அங்க இருந்த மண்ணெண்ணெய் கேன் எனக்கு தெரிஞ்சது. அடுப்பு இன்னும் எறிஞ்சிகிட்டு இருந்ததும் எபப்டியோ என் கண்ணுல பட்டது. 

சிறுவன்: ஹம்ம்.. அப்போ நீங்க உங்க மேலயே மண்ணெண்ணெய் ஊத்தி தீ வச்சுக்கிட்டீங்க.

பெண்: ஆமா, என்னோட எல்லா வலியையும் போக்கிக்க நான் என்னையே எரிச்சுக்கிட்டேன். இனி வாழ்றதுக்கு எந்தக் கஷ்டத்தையும் அனுபவிக்கத் தேவை இல்ல. நான் செஞ்சதுதான் சரி. நிச்சயமா அது தான் சரி. 

சிறுவன்: அப்போ அவ்ளோ தான் விஷயம்! ஹம்ம்ம். 

பெண்: நான் இங்க வந்ததும் எனக்கு வலிச்சிக்கிட்டு தான் இருந்துச்சு. ஆனா இப்போ அது எல்லாம் போயிடிச்சு. ஆ! இது தான் நிம்மதி, இல்ல?

சிறுவன்: என்னது?

சிறுவன்: ஒரு அமைதியான மதிய நேரம் இந்த இருட்டு நிறைஞ்ச குளத்துள மூழ்கி எழுந்திரிச்ச மாதிரி இருக்கு இப்போ. எல்லா வலிகளையும் இதுல கழுவியாச்சு.

சிறுவன்: இதுலயா?

    (பெண் ஒரு வித சந்தேகம் தொனிக்க பதிலளித்தாள்)

பெண்: ஆமா, அதுக்காக தான் நான் இங்க வந்தேன்.

சிறுவன்: வலி எல்லாம் போயிடிச்சு, அப்படித்தான?

பெண்: ஆமா, அப்படி தான் இருக்கு. ஆனால் எனக்கு நிச்சயமா தெரியல.

சிறுவன்: நீங்க உங்க வலிய பத்தி பேசுனீங்க. என்னோட கதைய நீங்க கேக்கீங்களா?

பெண்: கண்டிப்பா கேக்கேன், சொல்லு.

சிறுவன்: நீங்க பிச்சைக்காரங்கள பத்தி பேசுனீங்க. சொல்லப் போனா நானே ஒரு பிச்சைக்காரன் தான்.

பெண்: ஓ! நிஜமாவா? அப்போ எனக்கு தெரிஞ்சு..

சிறுவன்: நான் அனுபவிச்ச வலிய பத்தி என்ன சொல்ல விடுங்க. உங்களுக்குத் தெரியுமா, எனக்கு ஒரு அம்மாவும், அக்காவும் இருந்தாங்க. நாங்க எல்லாரும் கிழக்கு பாகிஸ்தான்(வங்கதேசம்)ல இருந்து இங்க வந்தோம். இங்க காசுக்காக நாங்க தெருத் தெருவா பிச்ச எடுத்தோம். எங்க அம்மாவுக்கும், அக்காவுக்கும் எதுவும் கிடைக்காது. ஆனா எனக்கு ஜனங்க கொஞ்சம் சில்லறை காசு போட்டாங்க. ஆனா அது எங்களுக்கு பத்தல. ஹவுரா ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் பக்கத்துல இருக்குற டீ கடை வாசல்ல தான் நான் எப்போவும் போய் இருப்பேன். அப்போல்லாம் நான் நிறைய அழுவேன். ஆனா இப்போ இல்ல. சாப்பிட எதுவும் இருக்காது. என்னோட உடம்புல இருக்குற சக்திய எல்லாம் கடுமையான பசி உறிஞ்சிகிட்டு இருந்தது. நிறைய தடவ நான் தரையில மயக்கம்போட்டு விழுந்துருக்கேன். எல்லா பக்கத்துல இருந்தும் என்ன நெறிக்குற மாதிரி எனக்குத் தோணும். நீங்க எல்லாரும் வாழ்க்கைய வாழ்றத பத்தி பேசுறீங்க. நான் சொல்றேன், வாழ்க்கைனா என்னனு எனக்குத் தெரியும், உயிர் வாழ்றதுக்கே எவ்வளவு போராடணும்னு எனக்குத் தெரியும். உணர்ச்சிவசப்பட்டு நானும் அழுதுருக்கேன். அப்போ தான் ஒரு பெரிய ரயில் விசில் சத்தத்தோட பிளாட்பாரம் உள்ள வந்துகிட்டு இருந்தது. நான் மறுமுறை யோசிக்கவே இல்ல, ரயில் முன்னாடி குதிச்சிட்டேன். கிரீச்சுன்னு ஒரு சத்தம் மட்டும்தான் கேட்டுச்சு, எல்லாம் அப்டி-ங்கறதுக்குள்ள முடிஞ்சிடிச்சு. அதுக்கப்புறம், நான் இங்க இருந்தேன். 

பெண்: இங்க இருக்குறது எப்படி இருந்துச்சு?

சிறுவன்: இங்க வந்ததும் உங்களுக்கு எப்படி இருந்துச்சோ, நான் இங்க வந்தப்போவும் அப்படியே தான் உணர்ந்தேன். 

பெண்: அப்புறம் இப்போ, இப்போ எப்படி இருக்கு, தயவு செஞ்சு சொல்லேன்.

     (சிறுவன் சில கணம் அமைதியாக இருந்தான்)

சிறுவன்: என் அம்மாவும் அக்காவும் என் மேல ரொம்ப அன்பு வச்சிருந்தாங்க. உண்மைய சொல்லனும்னா, எங்க அம்மா ஞாபகம் எனக்கு வந்துகிட்டே இருக்கு. என்ன நம்புங்க நான் சொல்றது உண்மை. அவங்க என்னோட ஞாபகத்துல இன்னும் அப்படியே இருக்காங்க. என்ன ஆனாலும் என்னால அவங்கள மறக்க முடியாது. அவங்களால எவ்ளோ தூரம் முடியுமோ, அவ்ளோ அன்போட என்ன பாத்துக்கிட்டாங்க. அவங்க இப்போ எங்க இருக்காங்களோ அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்களோ எனக்கு எதுவும் தெரியாது. அவங்க இன்னும் உயிரோட தான் இருக்காங்களா? நிச்சயமா இருக்காங்களா?.. அவங்கள பத்தி எனக்கு சொல்ல யாரும் இல்ல. வேற யாரையும் எனக்குத் தெரியாது. அவங்கள பத்தி தெரிஞ்சிக்க முடியாத வலி என்ன ரொம்ப கடினமானவனா, முரட்டுத்தனமானவனா மாத்திடுச்சு. 

பெண்: கடினமாவா?

சிறுவன்: ஆமா, கடினமா. அப்படி இல்லேனா நான் இங்க இன்னும் இருந்திருக்க முடியாது. உங்க பையன் நுட்டுவுக்கு ஒரு துணைய விட்டுவிட்டு வந்திருக்கீங்கனு உங்களுக்கு நிச்சயமா தெரியுமா?, உங்க பொண்ணு குஹி, உங்க கைக்குழந்தைய உங்க கூடயே கூட்டிட்டு வந்திருக்கலாம்னு இப்போ தோணுதா? நீங்க இல்லாம உங்க கைக்குழந்த இப்போ நிறுத்தாம அழுதுகிட்டு கூட இருக்கலாம். நான் என் அம்மாவ பிரிஞ்சி எனக்குள்ளேயே துடிக்கிற மாதிரி, உங்கள பிரிஞ்சி உங்க குழந்தைங்க நிச்சயம் துடிச்சு போயிருப்பாங்க. இந்த வலி, நாம கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆழமான வலியா இருக்கலாம்.

பெண்: நிறுத்து! நான் என்னோட பழைய வாழ்க்கைக்குத் திரும்ப போக போறதில்ல. ஏன் போகணும். எப்படியும் அவங்கள இனி நான் கவனிச்சிக்க முடிய போறதில்ல. 

சிறுவன்: உங்களை இன்னும் அதிகமான வலில துடிக்க வைக்க அதுவே காரணமா இருக்கலாம். அவங்களையும் சேர்த்துதான். உங்க ஞாபகத்த உங்களால அழிக்க முடியாது. திரும்ப திரும்ப வர அந்த ஞாபகங்கள் உங்க மனசை என்னென்னைக்கும் துன்புறுத்தும். எங்க தாத்தா எப்போவும் சொல்லுவார்....

பெண்: உன்னாலயும் மறக்க முடியாது இல்லையா? எவ்வளவுதான் யதார்த்தத்துல இருந்து தப்பிக்க நினைச்சாலும், ஞாபகங்கள் உன்ன துரத்திக்கிட்டே இருக்கும் இல்லையா?

சிறுவன்: ஆமா.

     (பெண் தனது இதயத்தில்(நெஞ்சில்) கை வைக்கிறாள்)

பெண்: என்ன இது? திடீர்னு என்ன நடக்குது?

சிறுவன்: என்ன?

    (பெண் சத்தமாக அலறுகிறாள்)

பெண்: நான் திரும்ப போகணும். நான் திரும்ப போகணும்.. நான் போகணும்...

சிறுவன்: அமைதியா இருங்க. நீங்க இப்போ எந்த அளவு கலக்கத்துல இருக்கீங்களோ, அதே அளவு நானும் இங்க வந்தப்ப கலக்கத்துல இருந்தேன். அது இந்த இடத்தோடு சாபம்!

பெண்: உனக்கு கேக்கலையா? அவங்க அழுது தேம்பிகிட்டு இருக்காங்க. அந்த உலகத்துல எல்லாரும் அழுதுகிட்டு இருக்காங்க! என்ன யாராலயும் தடுக்க முடியாது. நான் போய் தான் ஆகணும். ஓ கடவுளே! நான் ஏன் தற்கொலை செஞ்சேன்?

சிறுவன்: அந்த உலகத்தோடு எல்லாக் கதவுகளும் அடைச்சிருக்கு. திரும்பப் போக எந்த வழியும் இல்ல. இனி எப்போவும் உங்களாக அங்க இருக்க முடியவே முடியாது. அப்படி ஏதாவது வழி இருந்திருந்தா, நான் இன்னும் இங்க இருந்துருக்க மாட்டேன். 

     (பெண்ணின் முகம் நடுக்கம் கொள்கிறது. அவள் சிறுவனை ஒரு கணம் பார்த்துவிட்டு, தேம்பி அழத் தொடங்குகிறாள். ஒரு கல்லின் மீது அமர்ந்து தனது முகத்தை அவள் மூடிக்கொண்டாள். சிறுவன் அவளை நோக்கி நடந்து சென்று, அவளின் தோள்களில் கை வைக்க முற்படுகிறான். ஆனால் அவளருகில் செல்லும்போதே சட்டென்று நின்று, திரும்பி, அவளுக்கு சற்று தூரத்தில் தரையில் அமர்ந்து கொண்டான். பெண் தனது முகத்தை நிமிர்த்திப் பார்க்கிறாள்.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

அணங்கு (பகுதி -4) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)