தீக்குரவை -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)மூன்றாம் அலை


தீக்குரவை -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்) 

மூன்றாம் அலை

     (திரை மேலே செல்ல, பம்பாயிலிருந்து வந்த நடிகை பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருக்கிறாள். பார்வையாளர் பகுதியில் முதல் வரிசையில் இதுவரை நாம் பார்த்த கதாபாத்திரங்கள் பல அமர்ந்திருக்கின்றன. நிகழ்ச்சி முடிவில், பண்டைய காலத்தில், நிமாய் என்பவன் தனது மறைந்த தந்தைக்குப் பிண்டம் வைக்க கயாவுக்கு சென்றதைக் குறிக்கும் வகையில், பொருளுலகில் இருந்து விலகி ஆன்மீக அழைப்பை நோக்கிச் செல்வது காட்டப்படுகிறது.  இந்தக் காட்சி நேர்த்தியாக இருக்க வேண்டும். நிமாய் கயாவில் இருந்து  ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்ற புதிய பெயருடன் ஊர் திரும்புகிறான். சைதன்யாவின் மனைவி  பிஷ்ணுப்ரியா(சைதன்யாவின் நிஜ மனைவியின் பெயர்) பண்டைய கால ஆடை அலங்காரத்துடன் தோன்றுகிறாள். தனது கணவன் ஆன்மீகவாதியாகி பிச்சைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அவள் சோகமான தொனியில் பாடல் ஒன்றைப் பாடியபடி, மேடையிலிருந்து வெளியேறுகிறாள். அதேநேரம் பார்வையாளர் வரிசையில் அமர்ந்துள்ள நமது நாடகத்தின் பாத்திரங்களான பிஷ்ணுப்ரியாவும், கனிகாவும் எழுந்து, அரங்கிலிருந்து வெளியேறுகின்றனர்.

முதல் இளைஞன்: இது முதல் தரமாக உள்ளது.

இரண்டாம் இளைஞன்: இதிலிருந்து என்ன புரிந்துகொண்டாய்? சொல்லு பார்ப்போம்.

முதல் இளைஞன்: வேறென்ன, நடனத்தைத் தான்.

இரண்டாம் இளைஞன்: இது வெறும் நடனம் மட்டும்தான் என்று சொல்கிறாயா?

முதல் இளைஞன்: அது தானே!

இரண்டாம் இளைஞன்: நீ இப்போது பார்த்தது இந்தியப் பாரம்பரிய நடனத்தின் ஒரு வடிவம். இதன் பெயர் பரதநாட்டியம். அதனோடு, இது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஆன்மீகப் பரிணாமம் மற்றும்..

முதல் இளைஞன்: யாருக்கு வேண்டும்? அதில் என்ன இருக்கிறது,  நான் அந்த இந்தி நடிகை நடனமாடுவதைப் பக்கத்தில் இருந்துப் பார்க்க முடிந்தது. அதுவே போதும். வா போகலாம்.

     (இரண்டு இளைஞர்களும் வெளியேற, ராஜா, ராணா, பிகு மூவரும் மேடையின் இடதுபுறமிருந்து தோன்றுகின்றனர்.)

பிகு: இந்த நிகழ்ச்சியைப் பார்க்க இருபது மைல் தொலைவில் இருந்தும் மக்கள் வந்திருக்கிறார்கள்.

ராணா: நாம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒலிபெருக்கிகள் மூலம் கிராமங்களில் அறிவித்திருந்திருந்தால் இன்னும் எத்தனைப் பேர் வந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்.

ராஜா: இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இருந்து இன்னும் நிறைய பணம் சம்பாதிக்கலாம்

பிகு: சரி அந்த நாட்டியக்காரி (நடிகை) எங்கு இருக்கிறாள்?

ராஜா: அவள் விஷயத்தில் நாம் இப்போது மூக்கை நுழைக்க வேண்டாம்.

ராணா: ஏன்?

ராஜா: அவள் இப்போது பாதுகாப்பாக இந்தப் பகுதியின் பணக்காரர்கள், பிரபலங்கள் வசம் இருக்கிறாள்.

பிகு: இது மோசம்,  நமக்கும் அவளின் ஒரு துண்டு கிடைக்காதா?

ராஜா: ஏய் அங்கே பார், அந்த இரண்டு துடுக்கான பெண்கள் இந்த வழியாகத் தான் வருகிறார்கள். அவர்களைப் பிடிப்போம்

பிகு: அதை என்னிடம் விட்டுவிடு.

    (பிகு கனிகாவைப் பிடித்து இழுக்க முற்படுகிறான். கனிகா சட்டென பின்வாங்கி, பிகுவின் கன்னத்தில் அறைந்துவிட்டு, அங்கிருந்து ஓடிச்சென்று மேடையின் வலதுபுறமாக வெளியேறுகிறாள். பிஷ்ணுப்ரியாவும் அவளைப் பின்தொடர்ந்து வெளியேற முயலவே, ராணா அவளை வழிமறித்து நின்று தடுக்கிறான்.)

ராஜா: எங்கே செல்கிறாய் அன்பே? எங்களுக்கு நீ தேவை.

பிஸ்ணுப்ரியா: நான் ஏன் உங்களுக்கு தேவை?

ராணா: உன்னை அடைய நாங்கள் துடித்துக்கொண்டிருக்கிறோம்

பிகு: நீ இல்லாமல், இரவு முழுமை பெறாது.

ராஜா: இப்போதெல்லாம் உன்னைப் பற்றி தான் நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன்

    (பிஷ்ணுப்ரியா நிர்க்கதியாகத் தோன்றுகிறாள். அதேநேரம், ராய்சரண் வெற்றிலையை மென்றவாறு மேடையின் இடதுபுறம் இருந்து தோன்றுகிறார்.)

பிஷ்ணுப்ரியா: இவர்களுக்கு என்ன தேவை என்று எனக்குத் தெரியவில்லை. என்னை நீங்கள் உங்களுடன் அழைத்துச் செல்வீர்களா?

ராய்சரண்: அன்பு சகோதரி, எல்லோரும் இந்த உலகத்திற்குத் தனியாகத் தான் வருகிறோம். உலகிலிருந்து செல்வதற்கான நேரம் வரும்போது நீ என்னுடனோ, நான் உன்னுடனோ சேர்ந்து செல்ல முடியாது. நாம் தனியாக வந்தோம், தனியாகவே செல்வோம். அந்தப் பரம்பொருள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளட்டும்.

    (புகையிலை வைத்த மற்றொரு வெற்றிலையை எடுத்து ராய்சரண் தனது வாயில் வைத்து  மெல்லத் தொடங்கினான்.)

ராஜா: இதில் நல்ல பணம் இருக்கிறது (பிஷ்ணுப்ரியாவிடம்)

ராணா: கங்குராம் கடையிலிருந்து நிறைய சுவையான இறைச்சிகளும் கிடைக்கும்.

ராய்சரண்: என் மனைவி இன்று வெற்றிலைக்கு நல்ல புகையிலையைப் பயன்படுத்தவில்லை. வீட்டுக்குச் சென்றதும் அவளுக்குப் பாடம் புகட்ட வேண்டும். சரி பசங்களா, சந்தோஷமாக விளையாடுங்கள். நான் வீட்டுக்குச் செல்கிறேன். ! எனது மூட்டு வாதம் இப்போதெல்லாம் அதிகம் தொந்தரவு செய்கிறது. இதில் இரத்தச் சர்க்கரை பிரச்சனை வேறு.

     (ராய்சரண் சிரித்தபடி தனது மீசையை முறுக்கிக்கொண்டு, மேடையின் வலதுபுறமாக வெளியேறுகிறார். தாராசரண் மேடையின் இடதுபுறமிருந்து நுழைகிறார்.)

தாராசரண்: என்ன பசங்களா? எப்படி இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள்?

ராஜா: நாங்கள் நலமாக உள்ளோம் ஐயா

பிகு: இப்போது என்ன திட்டம்?

ராணா: இங்கிருந்து கிளம்புவோம் வாருங்கள். இந்தக் கிழவன் மிகவும் ஆபத்தானவன்.

ராஜா: ஐயா, எங்களுக்குக் கொஞ்சம் முக்கியமான வேலை மிச்சம் இருக்கிறது. ஒரு கூட்டத்துக்குச் செல்ல வேண்டும். நாங்கள் நாளை வந்து உங்களைப் பார்க்கிறோம். இப்போது போய் வருகிறோம்.

    (மூன்று இளைஞர்களும் மேடையின் வலதுபுறமாக வெளியேறுகிறார்கள்.)

பிஷ்ணுப்ரியா: (பாடல் ஒன்றைப் பாடுகிறாள்.) 

          எங்கோ ஒரு நல்ல நாடு இருக்கிறது,

          அங்கே மனிதன் மனிதனை நேசிக்கிறான்.

          அந்த நாடு எங்கே என்று எனக்குத் தெரியாது,

          ஆனால் மனதிற்கு அதன் நினைவு வருகிறது.

          ஒருநாள் இந்த உலகம் அழகாக மாறும்,

          மனிதன் மனிதனை நேசித்தே தீருவான்

          எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகுமோ அறியேன்

          ஆனால் அந்த நாள் வருவது உறுதி

          அந்த நாளை நான் நேசிகிறேன்.”

தாராசரண்: ஏன் மிகவும் சோகமாக இருக்கிறாய்?

பிஷ்ணுப்ரியா: அப்பா, இந்த இடத்தை விட்டுத் தூரமாக வேறு எங்காவது சென்றுவிடுவோம்.

தாராசரண்: என்ன சொல்கிறாய்?

பிஷ்ணுப்ரியா: அப்பா, நிச்சயம் ஒரு நாள் இந்த உலகம் வாழ்வதற்கு அழகான இடமாக இருக்கும் என்று நான்  நம்புகிறேன். ஆனால் அப்படி நடக்க இருநூறு, ஐநூறு, ஏன் ஆயிரம் வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் நிச்சயம் ஒரு நாள் அப்படி நடக்கும் என்றே என் மனது சொல்கிறது. நாம் அனைவரும் அதை சாத்தியப்படுத்த உழைக்க வேண்டும். ஆனால் அந்த அழகான நாளைப் பார்க்க நாம் உயிரோடு இருக்க வேண்டுமே. அப்பா, இங்கிருந்து சென்றுவிடுவோம்.

தாராசரண்: அன்பு மகளே, உனக்குத் தெரியாது, ஆனால் நானும் உன்னைப் போலவே யோசிக்கிறேன். ஆனால் நாம் இங்கிருந்து எங்கே செல்ல? எனக்குச் செல்வதற்கு எந்த இடமும் இல்லை. இங்கே உங்களுக்கு தினமும்  இரண்டு வேலையாவது என்னால் உணவளிக்க முடிகிறது. இது எனது பூர்வீக வீடும்கூட. முன் பின் தெரியாத இடங்களில் நமக்கு என்ன எதிர்காலம் இருக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் இப்போது நீ இதையெல்லாம் சொல்ல என்ன காரணம்?

பிஷ்ணுப்ரியா: விடுங்கள் அப்பா. உங்களால் புரிந்துகொள்ள முடியாது. பரவாயில்லை.

தாராசரண்: எது பரவாயில்லை, அன்பே?

பிஷ்ணுப்ரியா: பரவாயில்லை என்றேன் அவ்வளவுதான். வாருங்கள் போவோம். 

    (சாச்சி மேடையின் இடதுபுறம் இருந்து தோன்றுகிறாள். தனது மகள் பிஷ்ணுப்ரியாவை பார்த்த மாத்திரத்தில் ஏதோ பிரச்சனை என்று சாச்சியால் உணர முடிகிறது. சாச்சி, பிஷ்ணுப்ரியாவை நோக்கி நடந்து சென்று, அவளது தலையில் மென்மையாக அன்புடன் கை வைக்கிறாள்.)

தாராசரண்: (என்ன செய்வதென்று தெரியாத குழப்பத்துடன்) என்ன ஆனது?

சாச்சி: ஏதோ சரியில்லை என்று என்னால் உணர முடிகிறது. நீங்கள் இப்போது இங்கிருந்து போங்கள். எங்களைத் தனியாக இருக்க விடுங்கள். இதுபோன்ற விஷயங்களில் நீங்கள் தலையிட வேண்டாம். உங்கள் வாழ்க்கை முழுவதும் சாஸ்திரங்களைக் கற்பதில் மூழ்கியிருந்தும், உங்களால் எதையும் புரிந்துகொள்ள முடிவதில்லை. இன்னும் பழைய சாஸ்திர சம்பிரதாயங்களில் தான் நீங்கள் சிறைபட்டுள்ளீர்கள். நீங்கள் பேசாமல் இருப்பதே நல்லது. இப்போது இங்கிருந்து செல்லுங்கள்.

தாராசரண்: என்ன இதெல்லாம்? சரி, நான் செல்கிறேன்.

சாச்சி: நான் பிறரின் முட்டாள்தனங்களைப் பல முறை கடந்து வந்துள்ளேன். நாமும் அதுபோல இருந்தாலும் பிரச்சனை இல்லை தானே.

தாராசரண்: நீ என்ன சொல்ல வருகிறாய்? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சாச்சி: உங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ள இந்தப் பாழடைந்த உங்கள் பூர்வீக வீட்டுக்கு நீங்கள் வந்துள்ளீர்கள். பிறகு பள்ளியையும் மீண்டும் திறந்தீர்கள். ஆனால் கடைசியில் என்ன நடந்தது? ஒன்றும் இல்லை. உங்களால் எதையாவது பாதுகாக்க முடிந்ததா?

தாராசரண்: குறைந்தது நமக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவாவது கிடைக்கிறதே இப்போது.

சாச்சி: சாப்பிடுவது தான் வாழ்க்கையில் எல்லாமுமா? அக்கறை கொள்ள வேறு எதுவுமே இல்லையா?

தாராசரண்: என் அன்பு மனைவியே, அது தான் இந்த நாட்களில் வாழ்வின் முக்கியத் தேவையே.

சாச்சி: ஆனால் நாளொன்றுக்கு இரண்டு வேளை உணவு மட்டுமே எல்லோருக்கும் முக்கியமானதாகி விடாது.

தாராசரண்: வேறு என்ன இருக்கிறது?

சாச்சி: மானத்தைக் காப்பாற்றுவது முக்கியமில்லையா?

தாராசரண்: ரகுதேவ் எந்த வெட்கமுமின்றி சுதந்திரமாகத் திரிகிறானே.

சாச்சி: செல்லுங்கள் இப்போது இங்கிருந்து.

     (தாராசரண் மனம் தளர்ந்தவராய் மேடையை விட்டு செல்கிறார். பிஷ்ணுப்ரியா தனது தாயை தனது கைகளால் சுற்றிக்கொண்டு கதறி அழத் தொடங்குகிறாள். சாச்சி தனது மென்மையான கரத்தால் தனது மகளின் நாடியில் கைவைத்து முகத்தை நிமிர்ந்துகிறாள்.)

சாச்சி: என்னிடம் சொல், என் அன்பு மகளே.

பிஸ்ணுப்ரியா: ! அம்மா! இங்குள்ள நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது அம்மா.

சாச்சி: எனக்குத் தெரியும் அன்பே, எனக்குத் தெரியும். ஆனால் நாம் இந்த அசிங்கங்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்தாக வேண்டும்.

பிஸ்ணுப்ரியா: என்னால் தாக்கு பிடிக்க முடியாது அம்மா? நான் இதுபோல் வாழமுடியாது. இது வாழ்வதாகவே ஆகாது.

    (பிஷ்ணுப்ரியா அழுதுகொண்டிருக்க, திரை கீழே இறங்குகிறது. மேலிருந்து கீழிறங்கும் பதாகையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "வாழ்வதில் நிறைய வகைகள் (வழிகள்) உள்ளன.")

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

அணங்கு (பகுதி -4) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)