அணங்கு (பகுதி -4) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

  அணங்கு  (பகுதி -4) -ரித்விக் கட்டக் 

(தமிழில் -தீனன்) 

மருத்துவர்: (பார்வையாளர்களை நோக்கி) நான் மருத்துவமனைக்குத் திரும்பி வந்தப்போ நடந்த சம்பவத்தை பத்தி தெரிய வந்ததும் புது மருந்துகளுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். சாந்தி சிகிச்சைக்கு எதிரா இல்ல. அவ மனசு எப்போவும் ஆசுவாசமா சுவாசிக்க  காற்றையும், பசுமையையும் எதிர்பார்த்து ஏங்கியபடியும் தான் இருக்கு. கோகோனை பத்தி யாரும் குறிப்பிடாத வரைக்கும் அவ மன  சமநிலையோட தான் இருக்கா. இப்போலாம் அவ தையல் வேலையில ஈடுபாட்டோட இருக்கா. குறிப்பாக குழந்தைங்களோட சாக்ஸ், ஸ்வட்டர் தைக்குறதுல. ஆனா அவ கணவனை ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்ட அன்னைக்கு மறுபடியும் பிரச்சனை ஆரம்பிச்சது.

    (மருத்துவர் பீடத்தை விட்டு இறங்கித் தனது இருக்கைக்குச் செல்கிறார். சாந்தியும், செவிலியும் மருத்துவருக்கு முன்னாள் வந்து நிற்கின்றனர்)

மருத்துவர்: உக்காரு. (சாந்தி இருக்கையில் அமர்கிறாள்.) நீ இங்க வந்து கொஞ்சம் காலம் ஆகிடுச்சு. இப்போ எப்படி உணர்ர.

சாந்தி: இப்போ ரொம்ப பரவாயில்லாம இருக்கு. ஆனா, டாக்டர் என்னை எப்போ இங்க இருந்து வெளிய விடுவீங்க? என் தலை இப்போ பாரமா இல்ல. முன்னாடி மாதிரி பலவீனமாவும் இல்ல. அது இப்போ சுத்தமா போயிடுச்சு. எனக்கு வேலை செய்ய பிடிச்சுருக்கு. அதுமட்டுமில்லாம, தோட்டத்துல நடக்கும்போது ரொம்ப நல்லா உணர்றேன். 

மருத்துவர்: ரொம்ப நல்லது. இன்னைக்கு உன்னை பார்க்க ஒருத்தங்க வராங்க. 

     (சாந்தி மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் யார் வருகிறார்கள் என அறிய முற்படுகிறாள்.)

சாந்தி: யாரு? என்னை பார்க்க யாரு வராங்க? 

மருத்துவர்: ஆமா, இன்னைக்கு உன்னைப் பார்க்க ஒருத்தங்க வராங்க.

சாந்தி: உண்மையாவா? அவன் இங்க வர்றானா? இவ்ளோ காலமா என்னை விட்டு அவன் எப்படி பிரிஞ்சு இருந்தான்?

     (அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது.)

மருத்துவர்: தயவுசெஞ்சு அழாத. அவன் இங்க இன்னும் கொஞ்ச நேரத்துல எப்போ வேணாலும் வந்துடலாம். 

சாந்தி: அவன் எவ்ளோ பெருசா வளர்த்திருக்கான்? இப்போ பார்க்க எப்படி இருக்கான்? அவன் உடல்நிலை எப்படி இருக்கு?

செவிலி: (சாந்தி அறியாதவாறு மருத்துவரிடம் சைகை செய்து) சார்----

மருத்துவர்: எஸ், எனக்கு தெரியும். இவ தன்னோட சிந்தனைகள்ல இருந்து இன்னும் வெளிவரணும்.

      (தாதி உள்ளே வருகிறாள்.)

தாதி: மிஸ்டர். நகூர் தாஸ் வந்திருக்காரு.

     (சாந்தி துணுக்குற்றவளாய் தாதியைப் பார்க்கிறாள். அவளின் கண்களில் அச்சமும், நம்பிக்கையின்மையும் தென்படுகிறது. கணவன் நகூர் தாஸ் நுழைகிறான். அவனின் மனநிலையிலும் வெளித்தோற்றத்திலும் எந்த  மாற்றமும் இல்லை.)

மருத்துவர்: வாங்க நகூர். சாந்தியை உங்களோட தோட்டத்துக்கு கூட்டிட்டு போங்க. 

      (சாந்தி வேகமாக மேடையின் மறுமுனையை அடைகிறாள். அங்கிருந்து ஓடிச் செல்ல அவள் முயல்கிறாள். ஆனால் செவிலியும் தாதியும் அவளைப் போக விடாமல் தடுக்கின்றனர்)   

சாந்தி: என்னை விடுங்க. என்னைப் போக விடுங்க. அவன் என்னைக் கொலை செய்ய வந்துருக்கான். உங்களுக்கு இரக்கமே இல்லையா? என் மேல கருணை காட்டுங்க. என்னைப் போக விடுங்க. ஓ கடவுளே! இந்தக் கொலைகாரனை இங்கிருந்து கொண்டு போ. அவனைக் கொண்டு போ.

மருத்துவர்: சிஸ்டர், அவளை அறைக்கு அழைச்சுட்டு போங்க. 

    (செவிலியும், தாதியும் பலம்கொண்டமட்டும் சாந்தியை வலுக்கட்டாயமாக அறைக்கு கூட்டிச் செல்கின்றனர். கணவன் நகூர் தாஸ் தனது முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு அழத் தொடங்குகிறான்.) 

மருத்துவர்: இந்த நோயை குணப்படுத்துறது அவ்வளவு சுலபம் இல்ல. ஒரே இரவுல அற்புதங்கள் நடக்குறதுக்கு இது ஒன்னும் நாடகமோ, நாவலோ இல்ல. 

கணவன்: ஆனா கிட்டத்தட்ட மூணு மாசம் ஆகிடுச்சு. என்னோட வீடே முடிவில்லாத பாலைவனம் மாதிரி வெறிச்சோடி கிடக்கு.

மருத்துவர்: அவ முழுசா குணமடையுற நாள் இன்னும் ரொம்ப தூரத்துக்கு இருக்குனு நான் நினைக்கல. அவளோட நிலைமை ரொம்பவே முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அந்த முன்னேற்றத்தை உங்களால கவனிக்க முடியாம இருக்கலாம். ஆனால் அவ இப்போ ரொம்பவே நல்லா, இயல்பா இருக்குறா, ஒரு விஷயத்தைத் தவிர. சாந்தி ரொம்ப ஆரோக்கியத்தோடும் இருக்கா. எடை கூட கூடியிருக்கா அவ. 

     (இந்த சம்பாஷணைக்கு இடையில், செவிலியும், தாதியும் சாந்தியை அவளது அறையில் உள்ள படுக்கையில் படுக்கச் செய்கின்றனர். அதன் பின் செவிலி அங்கிருந்து வெளியேறி மருத்துவர் முன் வந்து நிற்கிறாள்)

மருத்துவர்: சரி நகூர், நீங்க இப்போ போயாகணும். உங்களை நாங்க மறுபடியும் கூப்பிடுவோம்.

கணவன்: அவளுக்காகக் கொஞ்சம் துணியும், பழங்களும் கொண்டு வந்தேன். 

மருத்துவர்: அதை இங்க கொடுத்துட்டு போங்க. சிஸ்டர், அவர் கிட்ட இருந்து அத வாங்கிக்கோங்க. 

      (கணவன் தனது கைகளைக் கட்டியவாறு அமைதியாக தலையை தாழ்த்தி வணங்கிவிட்டு வெளியேறுகிறான்)

மருத்துவர்: (கவலை தோய்ந்த முகத்துடன்) சிஸ்டர், நோயாளி மருந்து அட்டையைக் கொடுங்க. (மருத்துவர் அதில் கிறுக்க, செவிலி அதை அவருக்காக தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.) அவளுக்கு வாரத்துக்கு எட்டு இ.சி.டி-களும், ரெண்டு ஷாட் இன்சுலினும் கொடுங்க. முதல் இ.சி.டிக்கு அப்புறம் அவளை கவனமா கண்காணிங்க. 

      (செவிலி மருத்துவர் சொன்னவற்றை எழுதிக்கொள்கிறாள். மருத்துவர் மெதுவாக பீடத்தின் மேல் வந்து நிற்கிறார்)

மருத்துவர்: (பார்வையாளர்களை நோக்கி). இ.சி.டி-ங்கிறது  எலெட்ரிக் கன்வலூஷன் தெரபி. இந்த சிகிச்சைல, மூளைக்குள்ள இருக்குற முடிச்சுகள ஒன்னு சேர்க்க ஏதுவா தலையில மின்சார அதிர்வலைகள் செலுத்தப்படும். இந்த சிகிச்சைல சில நேரங்களில் மூளையில இருக்குற முடிச்சுகள் ஒன்னோட ஒன்னு சிக்கிக்கிறதும் உண்டு.  இதுக்கு பதிலா ஊசி மூலாமாகவும் மருந்து செலுத்தலாம், ஆனா அதுக்கு ரொம்ப பணம் தேவைப்படும், ரொம்ப வலி நிறைஞ்சதாவும் இருக்கும். இந்த கட்டத்துல இ.சி.டி.யை பயன்படுத்துறது தான் சரியா இருக்கும்னு நான் நினைக்கிறேன். நீங்க இதை மறுபடியும் மறுபடியும் பாக்க விரும்ப மாட்டீங்க, அதனால கடைசி இ.சி.டி கொடுக்கும்போதும், அதுக்கு அப்புறமும் எப்படி இருக்கும்னு மட்டும் நான் உங்களுக்குக் காட்டுறேன்.

      (மருத்துவர் திரும்பி நின்று பீடத்தை விட்டு கீழறங்குகிறார். பின்னர் செவிலி, தாதி மற்றும் மூன்று உதவியாளர்களுடன் வருகிறார். இ.சி.டி  உபகாரணத்தோடு சாந்தியின் அறைக்குள் அவர்கள் நுழைகின்றனர். சாந்தி படுக்கையில் எழுந்து அமர்ந்து கொள்கிறாள்) 

சாந்தி: என்ன இதெல்லாம்? ஓ! மறுபடியும் வலியா! இன்னும் நான் மன சமநிலையோட இல்லைனு நீங்க நினைக்கிறீங்க. அப்படித்  தானே? டாக்டர், நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். நான் இப்போ நல்லா தான் இருக்கேன். என்னை இனியும் தண்டிக்காதீங்க. எனக்கு இன்னும் வலியைக் கொடுக்காதீங்க. நீங்க என்னை என்ன செய்ய சொன்னாலும் நான் செய்யுறேன். ஓ டாக்டர், நீங்க இன்னும் எவ்ளோ தான் கொடூரமானவரா இருப்பீங்க?

     (செவிலி அவளின் வாயில் குழாயைச் செலுத்தி தலையோடு பட்டிகளை இறுகக் காட்டுகிறாள். தாதியும் பிறரும் சாந்தியைப் படுக்கவைத்து கெட்டியாகப் பிடித்துக்கொள்கின்றனர். மருத்துவர் இயந்திரத்தின் பொத்தான்களை அழுத்துகிறார். மின் அதிர்ச்சி தொடங்குகிறது. சாந்தி நிலைகுலைந்தவளாய் வலியில் முனகல் ஒலியெழுப்பியபடி இருக்கிறாள். மேடையில் இருள் கவிகிறது. இசையுடன் சாந்தியின் ஓலங்கள் கலந்து எதிரொலிக்கத் தொடங்குகிறது. பின்னர் முற்றான நிசப்தம் மேடையில் குடிகொள்கிறது. அதன்பின் இருண்மையில் ஆழங்களில் இருந்து கேட்பதுபோல், மருத்துவருக்கும் சாந்திக்கும் இடையிலான உரையாடல் கேட்கிறது.)


மருத்துவர்: இப்போ எப்படி உணர்ற, சாந்தி?

சாந்தி: நான் இப்போ ரொம்ப லேசா உணர்றேன். மூச்சுவிடுறது.. உம்ம்.. 

மருத்துவர்: ...ரொம்ப கஷ்டமா இருக்கா?  

சாந்தி: இல்ல. ரொம்ப நிதானமா அவசரமில்லாம, ஏந்தலா இருக்கு இப்போ. எனக்கு தூங்கணும்போல இருக்கு.

மருத்துவர்: தூங்கு. 

     (சாந்தி இனிமையாகப் பாடிக்கொண்டிருப்பது மட்டும் பார்வையாளர்களுக்குக் கேட்கிறது. செல்ல மகனே, அன்பு மகனே, இனியும் அழாதே.)

மருத்துவர்: (இருளின் அடியாழத்தில் இருந்து அவரின் குரல் வெளிப்படுகிறது) நதியின் நடுவே பன்னெடுங் காலமா சேர்ந்த வண்டல் அடுக்குகளின் ஊடாகத் தீவு ஒன்னு திடீர்ன்னு வெளிப்படுது. விடியலோட இளம் கீற்று இருள் பொழுதுகளின் அந்தியில புலப்படுது. நீண்ட நெடிய சிகிச்சை மெல்ல மெல்ல பயன் அளிக்கிறதுக்கான அறிகுறிகளும், எதுவும் கைமீறி போயிறலங்கிறதும் தெரியுது. ரொம்ப நாட்கள் கடந்த பிறகு நான் இன்னைக்கு நகூரை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிருக்கேன்.

     (மேடையில் மீண்டும் ஒளி பரவுகிறது. நகூர், மருத்துவர் இருவரும் அருகருகே அமர்ந்துள்ளனர்)

மருத்துவர்: நீங்க தயாரா இருக்கீங்களா?

கணவன்: ஆமா. ஆனா... 

மருத்துவர்: மத்ததை எல்லாம் என்கிட்ட விட்ருங்க. அவளை நீங்க தாராளமா வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம். உங்களுக்கு உண்மையான சோதனை இனிமேதான் காத்துகிட்டு இருக்கு. அவ  இயல்பான சமூக வாழ்க்கையோட மறுபடியும் பொருந்திப் போகணும். அவள சுத்தி உளவுர கேலி, கிண்டல், அவதூறு எல்லாத்துக்கும் இடையில நீங்கள் தான் அவளுக்கு அரணா இருக்கணும். நம்ம நாட்டைப் பொறுத்தவரைக்கும் இது தான் ரொம்ப கஷ்டமான சவால். 

கணவன்: ஆனா அவள் என்னை வெறுக்குறாளே. 

     (சாந்தி செவிலியுடன் வருகிறாள். கணவன் தன் இருக்கையில் இருந்து எழுந்து நிற்கிறான். சாந்தி மற்றும் அவளது கணவன் நகூர் இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. சாந்தி உடனே தனது புடவை முனையை இழுத்து தலையில் போர்த்தி 'கோம்தா' அணிந்துகொள்கிறாள்.) 

மருத்துவர்: சாந்தி, இன்னைக்கு நீ வீட்டுக்கு போகப் போற. உன் கணவன் உன்னை கூட்டிட்டுப் போக வந்திருக்கார். 

      (சாந்தி எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறாள்.)

மருத்துவர்: ஏன் நீ பேச மாட்டேங்குற? வா, இங்க உக்காரு. 

      (சாந்தி ஒரு வார்த்தை கூட பேசாமல், கணவனின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு பிறகு மூத்தவர் என்ற முறையில் மருத்துவரின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறாள். வியப்படைந்தவனாய் கணவன் நகூர் சில அடிகள் பின்னே செல்கிறான். சாந்தி மருத்துவரின் அருகே செல்கிறாள்.)

மருத்துவர்: என்ன இது? சாந்தி, ஏன் நீ அழுகுற?

சாந்தி: நான் எப்படி இவர்கிட்ட என் முகத்தைக் காட்டுவேன். இவர் எனக்கு கடவுள் மாதிரி, அதே மாதிரி இன்னும் எத்தனையோ பேர்ல அவரை நான் கூப்பிட்டிருக்கேன். எனக்கு அது எல்லாமே அவர்தான். 

மருத்துவர்: உனக்கு அது எல்லாமே ஞாபகம் இருக்கா?

சாந்தி: ஆமா. எல்லாமே எனக்கு ஞாபகம் இருக்கு.  நான் இப்போ ரொம்ப தர்ம சங்கடத்துல இருக்கேன். 

மருத்துவர்: இல்ல சாந்தி, அவரை மோசமா பேசுனது நீ கிடையாது. அந்த நோய் தான் அப்படி பேச வச்சது. நீ ரொம்ப உடம்பு சரியில்லாம இருந்த. ஏன்னா உனக்கு ஒரு தாயோட மென்மையான மனசு இருக்கு. அழுதது, கூச்சலிட்டது எல்லாமே யதார்த்தத்துல இருந்து ரொம்ப தூரமா இருந்த அந்த தாய்தான். கோகோன் நிரந்தரமா போயிட்டான்னு இப்போ நீ உணர்த்திருப்பன்னு நம்புறேன்.    

      (சாந்தி ஆமோதிப்பது போல தலையாட்டுகிறாள்.)

மருத்துவர்: அழாதே, சாந்தி. உன்னோட கோகோன் புதிய உருவத்துல மறுபடியும் வருவான். அன்பின் கனிகள் பறிக்கப்படும்போது நம்ம எல்லாருக்கும் வருத்தமாதான் இருக்கும். ஆனா அந்தக் கனியை சுமக்குற மரம் ஒரு நாளும் அழியாது. அது மறுபடியும் துளிவிடும். வீட்டுக்குப் போ சாந்தி, உன் வீட்டுக்கு போ. உன்னோட விருப்பத்துக்காக வாழ பாரு. 

சாந்தி: நீங்க என்னை நிஜமாவே வெளிய அனுப்புறீங்களா?

செவிலி: ஆமா. நீ முழுசா குணமாகிட்ட. இது உனக்கான நேரம். உன்னை பத்தி மக்களோட அவதூறுகளையும்  அவநம்பிக்கைகளையும் நீ உலுக்கி எறிய வேண்டிய நேரம். பனை மரங்கள் நிறைஞ்ச அஞ்சனா நதிக்கரையோரத்துல நீ வாழ வேண்டிய நேரம். அங்க வெள்ளைப் பூக்கள் நிறைஞ்ச தோட்டத்தையும் வெளிர் நீல வண்ணம் தீட்டுன வீட்டையும் நீ உருவாக்க வேண்டிய நேரம். இன்னொரு கோகோன் நிச்சயம் வருவான். அவனுக்காக ஒரு வீட்டை உருவாக்கு. 

      (சாந்தி எல்லோரையும் நீங்கி, பீடத்தின் மேல் வந்து நிற்கிறாள்)

சாந்தி: இது தான் என்னோட கதை. எவ்வளவு வலி இருந்தாலும் எல்லா துன்பங்களுக்கும் நிச்சயம் தீர்வு இருக்கு. இவங்க எல்லாரும் என்னை எந்த காரணமும் இல்லாம தண்டிக்கிறாங்கனு நான் நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா அவங்க எல்லாரும் எனக்கு நல்லது தான் நினைக்குறாங்கனு இன்னைக்கு எனக்கு புரியுது. அவங்க என்னை நல்வழிப்படுத்தியிருக்காங்க. நான் இப்போ மறுபடியும் மாபெரும் ஜன சமுத்திரத்துக்கு திரும்பப் போறேன். நான் என்னோட பயணத்தைத் தொடங்குறதுக்கு முன்னாடி உங்க எல்லாருக்கும் பிரியாவிடை கொடுக்குறேன். சிஸ்டர் சுசித்ரா, என் நெத்தியில கொஞ்சம் குங்குமம் வைக்குறீங்களா? (செவிலி சுசித்ரா புன்னைகையுடன் அவள் நெற்றியில் குங்குமமிடுகிறாள்.) தப்பா எடுத்துக்காதீங்க, நான் இன்னும் சின்ன பெண் தான்.

      (சாந்தி ஒரு கையால் கணவன் நகூரைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் உடைமைகள் அடங்கிய பையைப் பிடித்தவாறு மேடையிலிருந்து வெளியேறுகிறாள். செவிலி புன்னகைக்கிறாள். மருத்துவர் மீண்டும் பீடத்தின் மேல் ஏறி நிற்கிறார்.)

மருத்துவர்: இந்தக் கதை இங்க முடிஞ்சிருக்கலாம், ஆனா சமூகத்தால நிராகரிக்கப்பட்டவங்களுக்காகத் தொடர்ந்து இங்க நாம காத்துக்கிட்டுத் தான் இருக்கணும். வறுமையிலான கூறுபோடப்பட்டவங்களுக்காகவும், மனுஷனாகவே ஏத்துக்கப்படாதவங்களுக்காகவும் நாம கண்டிப்பா காத்திருந்து தான் ஆகணும். நிராகரிக்கப்பட்டவங்களுக்காக குறிப்பா நான் காத்திருந்தே ஆகணும். (செவிலி மேடையை விட்டு வெளியேறுகிறாள்.) மக்கள் தொடர்ந்து துன்பப்பட்டுகிட்டு தான் இருக்காங்க. இடைவிடாத வலி நம்மை மரணத்தைப் பற்றி சிந்திக்க வைக்குது. ஆனா  புது வாழ்வு  மரணம்ங்குற போர்வைய கிழிச்சு புதிய தொடக்கத்துக்கு இழுத்துச்செல்லுது. எல்லா பிறப்பும் அப்படிதான். சாந்தி இன்னைக்கு அவ வீட்டுக்கு போயிட்டா. ஆனா இந்த அத்தியாயம் இதோட முடியணும்னு நான் விரும்புனாலும் சாந்தி ஒரு நாள் மறுபடியும் அதே மன நோயாள பாதிக்கப்பட்டு மறுபடியும் இங்க வரலாம். அதுனால என்ன? காச நோயை குணப்படுத்துனாலும் அது மறுபடியும் வரத்தான் செய்யுது. மறுபடியும் வந்தாலும் அதை மறுபடியும் களைய முடியும். நிரந்தரமா கூட. சாந்தி எந்த நோயினால பாதிக்கப்பட்டாலோ அதுவும் காச நோய் மாதிரிதான்.   மன நோய ஒரு முறை முயன்று குணப்படுத்த முடியலேனாலும் மறுபடியும் குறிப்பிட்ட காலம் தொடர்ச்சியான சிகிச்சைல அதைக் குணப்படுத்த முடியும். அப்படி குணமடைய அவங்களுக்கு தேவைப்படுறது எல்லாம் கருணையும், பரிவும், அன்பும், ஒத்துழைப்பும், முக்கியமா அவங்களையும் நம்மளை போல மனுசங்கதான்னு நாம நினைக்கிறதும்தான். அவங்களை தூரத்துல விலக்கி வைக்க எந்தக் காரணமும் இல்ல. ஆனா அதுக்கான சூழல் இன்னும் இங்க உருவாகல. உண்மையான சிகிச்சைங்குறது அன்பும் அரவணைப்பும் தான். சாந்தியைப் போல ஆழமா பாதிக்கப்பட்டவங்களுக்கு அதுதான் தேவை. உங்களுக்குப் புரியுதா? கடைசியா நான் உங்க கிட்ட நேரடியா இதைத்தான் கேக்குறேன். எனக்கு பதில்கள் வேணும். எப்போ அது கிடைக்கும்? எப்போ?

      (மருத்துவர் தனது கரங்களைக் காற்றில் அகல விரிக்கிறார். செவிலி அவசரமாக உள்ளே வருகிறாள்)

செவிலி: சார், புதுசா ஒரு நோயாளி வந்திருக்காங்க. 

      (தனது கணவனுடன் வந்த ஒரு திருமணமான பெண், நிலைகுலைந்து தரையில் விழுகிறாள்)

புதிய பெண்: (குரலை உயர்த்தி) என்னை எங்கே கூட்டி வந்திருக்கீங்க? இது என்ன சிறைச்சாலையா?

      (மேடையில் உள்ள எல்லோரும் அமைதியாக அப்பெண்ணை பார்த்தபடி இருக்கின்றனர். திரை விழுகிறது. பாடல் ஒலிக்கிறது.)

—-------------------------------------------- முற்றும்  —-------------------------------------------

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)