தீக்குரவை -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்) நான்காம் அலை


தீக்குரவை -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

நான்காம் அலை

    (திரை மேலே செல்ல, மேடை முழுவதும் விளக்கின் வெளிச்சம் பரவியுள்ளது. மேலிருந்து ஒரு பதாகை கீழே இறங்குகிறது. அதில், "இப்போது விதியை எதிர்கொள்ளுங்கள். இதே விதிதான் உங்களுக்கு உங்கள் வீடுகளில் காத்திருக்கிறது. உங்கள் வீட்டுக்குச் சென்று, உங்களுக்கான விதி என்ன செய்ய காத்திருக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள்")

     (ராஜா, ராணா, பிகு மேடையில் நுழைகிறார்கள். குடிபோதையில் மேடையின் நடுவில் அவர்கள் நிற்கின்றனர்.)

ராஜா: இன்று நல்ல வியாபாரம்.

ராணா: ஆமாம் நான் கொஞ்சம் காசு பார்த்துவிட்டேன்.

பிகு: ஆனால் இந்தப் பெண் பிஷ்ணுப்ரியா எனது சிந்தனையில் ஓடிக்கொண்டே இருக்கிறாள்.  அவளை நாம் எப்படி அடைவது என்று ஏதாவது திட்டம் இருக்கிறதா?

ராஜா: சாத்தியமே இல்லை. அவளது மனதை வெல்வதுதான் ஒரே வழி. அவள் மிகவும் பிரச்சனைக்குரிய பெண், அவளால் நமது வியாபாரமே அழிந்துபோகலாம்.

பிகு: ஏன் நீங்கள் அனைவரும் இப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள் சென்று ராய்சரணை சந்திப்போம். அவர் பக்கத்தில் இருக்கும் வயலுக்கு  வருகிறார்.  ஜல் பகுரியில் இருந்து நிறைய சரக்குடன் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று வருகிறது. அதை நாம் கைப்பற்ற வேண்டும். முதலில் காசு தான் முக்கியம், பின்னர் தான் காதல் விஷயங்கள் எல்லாம்.

    (அவர்கள் மேடையின் வலதுபுறமாக வெளியேறுகிறார்கள். யாரோ பாடிக்கொண்டிருப்பது கேட்கிறது. மேடையின் இடதுபுறம் இருந்து பிஷ்ணுப்ரியா கனிகாவுடன் நடனமாடியவாறு நுழைகிறாள்.)

கனிகா, பிஷ்ணுப்ரியா இருவரும் பாடுகிறார்கள்.         

 நீ எப்போது சென்றாய்?

ஏன் சென்றாய்?

நீ திரும்ப வரும்போது,

உனக்காக புதிய பாடலைப் பாடுவேன்.

அந்தப் பாடல் உன் மனதிற்குள்,

சலங்கை ஒலியாய் ஒலிக்கும்.

அன்று உன்னை நேசித்து,

பைத்தியமாய் அழுவேன்.

நீ என்னுடையவன், நான் உன்னுடையவள்,

இந்த வார்த்தையை நான் மறப்பேனா?

இந்த வார்த்தை கடைசி வரை,

அழியாமல்  அமரத்துவமாய் நிலைத்திருக்கும்

கனிகா: ஏன் பாடுவதை நிறுத்திவிட்டாய்?

பிஷ்ணுப்ரியா: நீ சொன்னது சரிதான். நான் அந்த உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளேன்.

கனிகா: அப்படியென்றால், காதலிக்கிறாயா?

பிஷ்ணுப்ரியா: ஆமாம் அது போன்ற ஒன்றுதான்.

கனிகா: அப்படியென்றால், காதல் என்ற வார்த்தையைச் சொல் பார்ப்போம்.

பிஷ்ணுப்ரியா: அந்த வார்த்தையை இப்போதே என்னால் சொல்ல முடியும். நீ தான் இது எல்லாவற்றுக்கும் பொறுப்பு.

கனிகா: கடவுளே! கடவுளே! உனக்கு காதல் வந்துவிட்டது. ஆனால் நான் என்ன செய்வேன்? எங்கிருந்து என்னுடைய காதலை நான் கண்டுபிடிப்பேன்?

பிஷ்ணுப்ரியா: உனது வாழ்க்கையில் அப்படி யாரும் இல்லையா?

கனிகா: ஒருவர் இருக்கிறார், ஆனால் அவர் எனது கற்பனை. எனக்காக யாரும் வராமலேயே எனது காதல் தொடரும் என்று நினைக்கிறேன்.

   (கனிகா பாடுகிறாள்)

இன்று புயல் வீசும் இரவில்

உன்னைச் சந்திக்க வருவேன்

என் உயிர் நண்பனே, என் காதலனே.”

(பின்பு ரித்விக் கட்டாக் இசையமைத்த பாடலைப் பாடுகிறாள்)

அவன் வருகிறான், அவன் வந்துகொண்டே இருக்கிறான்,

என் மனதிற்குள்.

அவன் என் உயிரில் இருக்கிறான்.

அவனுடைய உருவம் எப்படி இருக்கும் என்று மறந்துவிட்டேன்,

இருந்தாலும் அவனை என்னால் பார்க்க முடிகிறது.

அவன் என் அன்பிற்குரியவன்,

என்னைப் போலவே, அவனை நேசிக்க முடியுமா,

அவனை யாரேனும் அடைய முடியுமா?

என் வாழ்நாள் தவமே அது ஒன்றுதான்,

அதைத் தவிர  வேறெதுவும் இல்லை.”

பிஷ்ணுப்ரியா: அந்தப் பாடலை மட்டும் பாடாதே 

கனிகா: ஏன்? அந்தப் பாடல் நன்றாக இருக்காதா?

பிஷ்ணுப்ரியா: அப்படி இல்லை. அந்தப் பாடல் எனது மனதை ஆர்ப்பரிக்க வைக்கிறது. அதேநேரம், நான் இன்று மகிழ்ச்சியான மனநிலையிலும் இல்லை.

கனிகா: அது ஏன்? 

பிஷ்ணுப்ரியா:  எனக்குத் தெரியவில்லை. 

கனிகா: என்ன விளையாடுகிறாயா? நீ காதலில் மூழ்கியிருக்கிறாய், ஆனால் நான் அந்த இன்பம் தரும் பாடலைப் பாடுவதை நிறுத்தச் சொல்கிறாய்.

பிஷ்ணுப்ரியா: நான் உன்னைக் கொல்லப் போகிறேன் பார்.

கனிகா: எங்கே முயற்சி செய்.

    (இருவரும் சண்டையிடுவதுபோல நடன அசைவுகளைச் செய்கின்றனர். மெதுவாக அவர்கள் மேடையின் பின் பகுதிக்கு நகர்கின்றனர். அதேநேரம், துர்காசரண், ரகுதேவ், உத்பல் ஆகிய மூவரும் மேடையின் இடதுபுறம் இருந்து நுழைகின்றனர்.)

துர்காசரண்: உனது மகளைப் பற்றி உனக்கு எந்தக் கவலையும் இல்லையா?

ரகுதேவ்: எனக்கு அவள் திரும்பக் கிடைத்துவிட்டாள். அதைப் பற்றி மறந்துவிடுவோம். நடப்பது நடக்கட்டும். ஆனால் அமெரிக்காவின் சிஐஏ (அமெரிக்க உளவுத்துறை) மற்றும் நிக்சன் (அமெரிக்க அதிபர்) -ஆல் தென் அமெரிக்காவின் அல்லெண்டே (சிலி நாட்டு அதிபர்) கொல்லப்பட்டதற்கு எதிராகக் குரல் கொடுக்க யாரும் தயாராக இல்லையா?

உத்பல்: இந்தத் தேவிடியாள் மகன் நிக்சனும் அவனது அடியாட்களும் அதையே இந்தியாவிலும் செய்ய மாட்டார்கள் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.

துர்காசரண்: டியாகோ கிராசியா (இந்திய பெருங்கடலில் உள்ள தீவு நாடு - 1970கள் முதல் அமெரிக்க - பிரித்தானிய கூட்டுப்படைகளின் ராணுவத் தளமாக உள்ளது) விஷயத்தை எடுத்துக்கொண்டால், இந்தச் சம்பவத்தின் பின்னால் உள்ள மோசடிக்கு எதிராக மொத்த நாடும் போராடுகிறது. ஆனால் யாரும் இதற்கு தீர்வு காண விரும்புவதாய் தெரியவில்லை.

    (ராய்சரண், சிரித்தவாறு மேடையின் இடதுபுறம் இருந்து நுழைகிறார்.)

ராய்சரண்: நீங்கள் அங்குதான் தவறு செய்கிறீர்கள். முதலாலித்துவம் அதோடு நிற்கவில்லை. லியோன்டிவ் (ரஷிய தத்துவவாதி)ஐ நீங்கள் வாசித்திருக்கிறீர்களா? நவ காலனித்துவம் என்றால் என்னவென்று தெரியுமா? அது உங்களுக்கு தெரிந்தால், அந்த நாடு(டியாகோ கிராசியா) மீட்டெடுக்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டது உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த நாடு நிர்மூலமாகிவிட்டது.

    (சாச்சி மேடையின் இடதுபுறம் இருந்து ஓடி வந்து ராய்சரணை பிடித்து உழுகுகிறாள். அவளின் கூந்தல் முடியப்படாமல் விரிந்து கிடக்கிறது. அவளது கண்கள் அச்சத்தையும், நிர்க்கதியையும் வெளிப்படுத்துகின்றன.)

சாச்சி: (மூர்க்கமாக ராய்சரணை உலுக்குகிறாள்). நீ என்ன செய்திருக்கிறாய் தெரியுமா? நீ இந்த நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆடைகளை உருவி நிர்வாணமாக்கி இருக்கிறாய். சுஸ்மா மனநலம் பாதித்த நிலைக்கு சென்றுவிட்டாள்.

    (பயத்தில் ராய்சரணைத் தவிர மற்ற பண்டிட்கள் மேடையின் வலதுபுறம் வழியாக வெளியேறி ஓடுகின்றனர்.  வலதுபுறமாக சென்ற மூவரில் ரகுதேவ் மட்டும் குழப்பத்தில் மீண்டும் மேடைக்கு குறுக்கே மறு புறத்திற்கு ஓட, பின்னணியில் ஒப்பாரியை ஒத்த சோகமானப் பாடல் ஒலிக்கிறது - 'என் தாயே, ஓ என் தாயே')

ராய்சரண்: சாச்சி மா, உங்களுக்குத் தெரியுமா, அதாவது, சொல்லப் போனால், அந்த விஷயத்தை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் எல்லாம் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் உத்தரவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். நடவடிக்கைக்கு அனுமதி வாங்க ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு கோப்புகளை அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும், அது மட்டுமா, உயர் அதிகாரத்தில் உள்ளவர்களிடமும் நாங்கள் தான் பேச வேண்டும்.

     (தாராசரண் ஓடி வந்து சாச்சியைப் பிடித்து ஒரு புறமாக இழுக்க, இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி, ராய்சரண் மேடையின் வலதுபுறமாக நழுவிச் செல்கிறார்.)

தாராசரண்: என்ன செய்கிறாய் நீ? உனக்கு முழுதும் பைத்தியம் பிடித்து விட்டதா?

சாச்சி: என்னால் இதை எல்லாம் இன்னும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.  நான் பயத்தால் நடுங்கிக் கொண்டிருக்கின்றேன்.

தாராசரண்: ஒரு விதத்தில் என்னாலும் உனக்கு நிதர்சனத்தை புரிய வைக்க முடியவில்லை. இந்த அநீதி என்றென்றைக்கும் தொடர முடியாது. இந்த சீர்குலைவுக்கு நிச்சயம் ஒரு முடிவு இருக்கும். அந்த முடிவு,

"பரித்ரனாய் சாதுனாங் வினாசாய சா துஸ்க்க்ரிருதாம்

தர்மசங்ஸ்தாபராணாதாய சம்பஹாமி யுகே குகே" (கீதை)

சாச்சி: ஆனால்...

தாராசரண்: இந்த ஆனால், ஒருவேளை என்ற யூகங்கள் வேண்டாம்,  வா வீட்டுக்குச் செல்வோம்.

    (சாச்சி தனது கணவனின் மார்பில் தலை சாய்ந்திருக்கிறாள். இருவரும் எதுவும் பேசாமல், மேடையின் வலதுபுறமாக வெளியேறுகின்றனர். அவர்கள் சென்ற அடுத்த கணமே, பிஷ்ணுப்ரியா மேடைக்குள் நுழைகிறாள். அவள் நுழையும்போது மேடை முழுவதும் வெளிச்சம் நிறைந்திருக்கிறது. அவர் பரதநாட்டிய அசைவுகளைச் செய்துகொண்டிருக்க, மூன்று இளைஞர்கள் அவளைப் பார்த்துச் சிரித்த வண்ணம் மேடைக்குள் நுழைகின்றனர். பிஷ்ணுப்ரியா அதிர்ந்து அப்படியே நின்றுவிடுகிறாள்.)

ராஜா: ஆஹா! நாம் இப்போது பிருந்தாவனத்தில் இருக்கிறோம்.

ராணா: பணக்காரர்களின் அகராதியில் அதைத்தான் பிறப்புரிமை என்பார்கள்.

பிகு: நீ எங்களின் பிறப்புரிமை. நாங்கள் புதிய இளமைக்காகவும், புதிய வாழ்க்கைக்காகவும் புறப்படுகிறோம். நீ எங்களுடன் வந்தாக வேண்டும். இனியும் உன்னை எங்களால் விட்டுப் போக விட முடியாது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது.  எங்களுக்கு இருக்கும் பெரிய புள்ளிகளின் ஆதரவைப் பற்றி சிந்தித்துப் பார். பல பெரிய மனிதர்கள் எங்களைப் பாதுகாக்கின்றனர். நீ பிரச்சனை செய்தால் உன்னையும், உன் பெற்றோரையும் இந்த உலகத்தில் இருந்தே துடைத்தெறிந்து விடுவோம். வா எங்களோடு.

    (பிஷ்ணுப்ரியா நடுங்கத் தொடங்குகிறாள். ஓடிச் செல்ல திறந்தவெளி இருக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்க்கிறாள். ஆனால் அவளை மூன்று புறங்களிலும் மூவரும் சுற்றி வளைத்துள்ளனர்.)

பிஷ்ணுப்ரியா: நான் உங்கள் எல்லோருக்கும் தங்கையைப் போன்றவள். என்னை நீங்கள் போக விட மாட்டீர்களா?

ராஜா: உன் மீதும் உனது உடல் மீதும் நாங்கள் தீராக் காதல் கொண்டுள்ளோம். உன்னை நாங்கள் சுவைக்க விரும்புகிறோம். உன்னை ஆராய விரும்புகிறோம்.

ராணா: இது ஒரு வகையான ஆராய்ச்சி போல தான்.

பிகு: நாகரிகச் சமூகத்தில் வாழும் பெண்கள் இனம் எப்படிபட்டது என்பதை ஆராய்ச்சி செய்யும் முயற்சி தான் இது.

பிஷ்ணுப்ரியா: நான் கடினமான இரும்பு வளையல் அணித்திருக்கிறேன். உங்களில் ஒருவரையேனும் கொல்லாமல் நான் சாக மாட்டேன்.

ராஜா: வா சகோதரி, எங்களுக்கு எரிச்சலூட்டாதே. அமைதியாக எங்களுடன் வந்தால் நீ பத்திரமாக வீடு சென்று சேர்வாய். அது எங்களின் பொறுப்பு. சுஸ்மாவை நாங்கள் வீட்டுக்குத் திரும்ப அனுப்பினோம். எங்களை நம்பு, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நாங்கள் ஒருபோதும் கொடுக்க மாட்டோம்.

ராணா: பயப்படாதே. எங்களுக்கும் பயமில்லை. உனது தந்தை ஒரு விஷேசத்திற்கு சென்றுவிட்டதாக எங்களுக்கு முன்பே தகவல் வந்துவிட்டது.

பிகு: காலையில் முதல் பறவை பாட தொடங்கும் முன், நீ உன் வீட்டில் உள்ள உனது படுக்கையில் சந்தோசமாகப் படுத்துக்கொண்டிருப்பாய்.

பிஷ்ணுப்ரியா: அப்படியென்றால், நீங்கள் என்னை நாசமாக்க விரும்புகிறீர்கள். எனது தந்தை ஒரு ஏழை. நீங்கள் நான் அழகானவள் என்று நினைக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் தான் இன்றைய வங்காளத்தின் விதியை தீர்மானிப்பவர்கள் என்பதால், உங்களுக்கு என்னை அனுபவிக்க உரிமை இருக்கிறது அப்படித்தானே. ஆனால், அதற்கு முன் நான் உங்களிடம் ஒரு உதவி கேட்கலாமா?

ராஜா: அது என்ன?

பிஷ்ணுப்ரியா: நீங்கள் என்னைப் புசித்த பின் நான் உயிரோடு இருக்க மாட்டேன். ஆனால் சாவதற்கு முன், நான் என்னையே அழகானவளாகப் பார்க்க விரும்புகிறேன். என்னை ஒரு நல்ல சேலை கட்டிக்கொள்ள அனுமதியுங்கள்.

பிகு: அப்படியானால் இந்த விஷேசத்திற்காக நீ சிறப்பாக உடுத்திக்கொள்ள விரும்புகிறாயா?

பிஷ்ணுப்ரியா: ஆமாம், அதுபோல தான்.

ராஜா: அவளைப் போக விடுங்கள். நாம் இங்கே காத்திருப்போம். அவள் வெளியே வந்தவுடன் பிடித்துக் கொள்வோம்.

ராணா: அவளின் கடைசி ஆசையை நாம் கண்டிப்பாகப் பரிசீலிக்க வேண்டும், நீ என்ன சொல்கிறாய், பிகு?

பிகு: கடவுளின் அனுகிரகம் நமக்கு இருக்குமானால், நமக்கு அவள் கிடைப்பாள். அவளைப் போக விடுங்கள்.

    (பிஷ்ணுப்ரியா வெறுமையுடன் சிரித்துவிட்டு, மேடையின் கருப்புத் திரைக்குப் பின்னால் சென்று மறைகிறாள். சிறிது நேரத்தில் பிஷ்ணுப்ரியா தப்பிச் செல்ல பின் கதவைப் பயன்படுத்தும் சத்தம் கேட்கிறது.)

பிகு: என்ன இது? என்ன நடக்கிறது?

ராஜா: அவள் ஓடிவிட்டாள்.

ராணா: அவளை நான் மீண்டும் இங்கு இழுத்து வரப் போகிறேன். அவளைப் போக விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

    (மூவரும் மேடையின் வலதுபுறமாக ஓடி மறைகிறார்கள். மேடையின் ஓரிடத்தில் மட்டும் திகிலூட்டும் வகையில் மங்கிய வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. பல ஒலிகள் கலந்து கரடுமுரடான, அச்சமூட்டும் இசை, சத்தமாக கேட்கிறது. அவர்கள் அப்பெண்ணை மேடைக்குள் இழுத்து வந்து கருப்பு திரைசீலைக்குப் பின்னால் சென்று மறைகிறார்கள். மொத்த மேடையும் இருள் சூழ்ந்திருக்கிறது. பிஷ்ணுப்ரியாவின் அலறல் சத்தம் மட்டும் கேட்கிறது. இறுதியில் அந்த அலறல் சத்தம் ஒரு ஓலத்துடன், கேவலுடன் ஒடுங்குகிறது. அதே நேரம் ராய்சரண் கையில் ஒரு டைரி உடன் மேடைக்குள் ஓடி வருகிறார்.)

ராய்சரண்: ஏய் கவனியுங்கள் பசங்களா, அந்த பெண்ணுடன் உடனே வெளியே வாருங்கள். தாமதிக்காதீர்கள். நான் மாமா என்று ஏமாற்றிக் கொண்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் இங்கே வந்துள்ளார். அவரை நான் இதற்கு முன் சந்தித்ததே இல்லை. அவர் வந்ததும் உங்கள் மூவருக்கும் என்ன நடக்கும் என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் ஒன்று மட்டும் உறுதி, நான் செத்தேன்.

    (சுயநினைவின்றி இருக்கும் பிஷ்ணுப்ரியாவை தூக்கிக்கொண்டு மூவரும் கருப்பு திரையை விலக்கிக்கொண்டு மேடைக்கு வருகின்றனர். பிஷ்ணுப்ரியா ஆடைகள் களையப்பட்ட நிலையில் இருக்கிறாள்.)

ராய்சரண்: பெண்களை வேட்டையாடுவதற்கு என்ன தான் அவசியம்.  ரயில்களில் இருந்து திருடுவது, துப்பாக்கிகளைச் சுடுவது, குண்டுகளை எறிவது என இருக்கும் வரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. இப்போது அந்த ரிப்போர்ட்டர் சுஷோவன் மீண்டும் கிராமத்திற்கு திரும்பிவிட்டான். அவனது செய்தித்தாள் உங்கள் எல்லாத் தவறுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும். நீங்கள் தலைப்புச் செய்திகளில் வருவது பற்றி எனக்குக் கவலை இல்லை, ஆனால் நான் அனைத்தையும் இழந்துவிடுவேனே.

ராஜா: கவலைப்படாதீங்க தலைவா, அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ராணா, லைனுக்கு போ.

ராணா: அப்படியே,  எஜமானே.

பிகு: பக்கத்தில் இருக்கும் சேரியில் கேனில் கெரசின் கிடைக்கும்

ராஜா: வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு வேகமாகச் செயல்படுங்கள்.

     (ராணா மேடையின் வலதுபுறத்திற்கு ஓடுகிறான்.)

பிகு: எல்லாம் நடக்கும் வேளையில் வாருங்கள் அனைவரும் சேர்ந்து பச்சைச் சிலந்தியின் நடனத்தை ஆடுவோம். அதுதான் மரணத்தின் நடனம்.

     (அவர்கள் அனைவரும் நடனமாட, ராய்சரண் அவர்களுடன் சேராமல் நிற்கிறார். ராஜா ராய்சரணின் கையைப் பிடித்து இழுத்து, கையில் ஓங்கி அறைந்துவிட்டு கூறுகிறான் ---)

வா நண்பா எங்களோடு, நடனம் ஆடு.

     (ராணா கையில் கெரசின் கேன் உடன் பரபரப்புடன் வருகிறான். பிஷ்ணுப்ரியாவின் உடலின் மேல் கெரசினை ஊற்றித் தீ வைக்கிறான். மொத்த மேடையும் தீப்பிடித்து  எறிவதுபோல விளக்குகள் ஒளிர்கின்றன. சுஷோவன் மேடையின் வலதுபுறம் இருந்து மேடைக்குள் ஓடி வருகிறான். ராய்சரண் தனது டைரியைத் திறந்து தனது பேனாவை எடுத்து, பிஷ்ணுப்ரியாவின் வாக்குமூலத்தைப் பெற தயாராகிறார். கனிகாவும் மேடையில் நுழைகிறாள்.)

பிகு: நாங்கள் கற்றுக்கொண்ட புதிய மற்றும் கண்ணியமான மொழியில் கூறப்படுவது போல, நாங்கள் புதிய எல்லையை நோக்கிச் செல்ல உள்ளோம் என்பதைக் கூறிக்கொள்கிறேன். நாங்கள் வருகிறோம்.

   (மூன்று இளைஞர்களும் மேடையை விட்டு வெளியேறுகின்றனர்.)

ராய்சரண்: இங்கே பாருங்க சார், இந்த வழக்கை நாம் எப்படியாவது  முடிக்க வேண்டும். எனவே நான் எரிந்துகொண்டிருக்கும் பெண்ணின் மரண வாக்குமூலத்தைப் பதிவு செய்தாக வேண்டும். மொத்த கிராமமும் போலீசால் சுற்றி வளைக்கப்பட்டு விட்டது.

     (ராய்சரண் பிஷ்ணுப்ரியா கிடக்கும் இடத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்.)

ராய்சரண்: என் அன்பே, நீ செத்துக்கொண்டிருக்கிறாய். உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் ஓடிவிட்டனர். நான் தான் மாட்டிக்கொண்டேன். எல்லாவற்றையும் நான் இழக்கப் போகிறேன். உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார் என்று உன்னால் கூற முடியுமா, இந்த அருவருக்கத்தக்க பாவத்திற்கு யார் காரணம், சொல் யார் காரணம்?

சுஷோவன்: யார் காரணம், யார்?

     {மேடையில் திரையில் தோன்றும் படமாக்கப்பட்ட காட்சியில் பிஷ்ணுப்ரியா பார்வையாளர்களை நோக்கி பார்த்தவாறு இருக்கிறாள். பின் அவள் அவர்களைப் பார்த்து எச்சில் உமிழ்கிறாள். பின் மேடை இருளடைகிறது. பிஷ்ணுப்ரியா, கனிகா அனைவரும் வெளியேறுகின்றனர். (மூலப் பிரதியில் டிராப் கதவு மூலம் அவர்கள் வெளியேறுகின்றனர் என உள்ளது). பின் இரண்டு ஸ்பாட்லைட்டுகள் மட்டும் மேடையின் முன்புறத்தில் ஒரே இடத்தில் ஒளிர்கின்றன. சுஷோவன் எழுந்து மேடையின் முகப்பில் அந்த வெளிச்சத்தில் வந்து நிற்கிறான்.}

சுஷோவன்: இன்னும் எத்தனைக் காலம் தான் இந்த சமூகச் சீர்குலைவை நாடு பொறுத்துக் கொண்டிருக்கபோகிறது. இன்று நாம் இருக்கும் இந்த கொடுமையான சூழ்நிலையில் வாழ்வது என்பது இனியும் சாத்தியமில்லை. இந்த நாடகத்தைப் பார்க்க வந்த அனைவரும் அவரவர் பாதுகாப்பான வீடுகளுக்கு சென்று இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, நிம்மதியாக தூங்கிவிட்டு, அடுத்த நாள் காலை எழுந்து தாமதமின்றி நேரத்திற்கு வேலைக்கு செல்வீர்கள். ஆனால் இந்த அநீதி எந்தத் தீர்வுமின்றி தொடரும். இந்த அக்கிரமங்களுக்கு முடிவு கட்ட எந்தத் தீர்வும் இல்லையா? சிந்தித்துப் பாருங்கள்.

    {மேலிருந்து இறங்கும் பதாகையில், "மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அனைவரும் கிளர்ந்தெழுந்து அநீதிக்கு எதிராக ஒன்றுபட்டு புரட்சி செய்ய வேண்டும். சகோதர சகோதரிகளே, உங்களால் முடிகின்றபோதே கிளர்ந்தெழுங்கள், அனைத்துத் தடைகளையும் உடைத்தெறியுங்கள். இல்லையென்றால் எதுவும் நடக்கப் போவதில்லை." என்று எழுதப்பட்டுள்ளது (சுஷோவான் குரலில் அது வாசிக்கப்படுகிறது). திரை மெதுவாக விழுகிறது, 'மோதர் தேஷ்பாசி ரே' பாடல் பிண்ணனியில் ஒலிப்பது கேட்கிறது.

ஓ எங்கள் தேசவாசிகளே

வா என் உயிர் சகோதரா, வாடா ரஹீம் சகோதரா,

யார் இந்த கருப்பு நதியைக் கடப்பார்?


இந்த தேசத்தின் நடுவே பிசாசுகள் கொண்டு வருகின்றன

கருப்புப் பிரிவினை எனும் வெள்ளத்தை,

அந்த வெள்ளத்தில் மிதந்து அழிந்து போகிறது

நம் தேசத்தின் மானம்.


இந்த இடைவெளி எனும் நதிக்கு குறுக்கே

பாலம் கட்ட வேண்டுமானால்

எடு கோடாரியையும் ஆயுதத்தையும்,

ஹெய்யா ஹேய் ஹெய்யா முழங்கு,

இளைஞனே கட்டு பாலத்தை இப்போது!


இந்த நதி உன்னுடையதும் என்னுடையதுமான ரத்த ஆறு,

இந்த நதி நம் கண்ணீரால் நிரம்பியுள்ளது,

இந்த நதி நம் நெஞ்செலும்பைக் குடைந்து ஓடுகிறது,

நாம் இரு கரைகளிலும் இருந்து இருவர் கைகளையும் நீட்டுகிறோம்.

 

! இந்த நதியின் சுழல்களில் முதலைகள் ஒளிந்திருக்கின்றன,

அவை இன்பமான வீட்டை உடைக்கின்றன,

விளைநிலங்களை அழிக்கின்றன,

ஹெய்யா ஹேய் ஹெய்யா என்று முழங்கு,

இளைஞனே கட்டு பாலத்தை இப்போது!

 

ஹெய்யா ஹேய், பலம் கொண்டு முழங்கு,

பாலம் கட்டுவோம், பாலம் கட்டுவோம்.

நெஞ்சோடு நெஞ்சு சேர்த்து,

உள்ளத்து அன்பால் பாலம் கட்டுவோம்,

 

தீயவர்களின் தடைகளையும், வெறுப்பையும் தகர்ப்போம்,

சமத்துவமான சுதேசப் பூமியை உருவாக்கும் சபதத்தோடு

பாலம் கட்டுவோம்.

ஹெய்யா ஹேய், பலம் கொண்டு முழங்கு,

பாலம் கட்டுவோம்,

பாலம் கட்டுவோம்!” 

 

–—------------------------------------------முற்றும் —-------------------------------------------------------

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

அணங்கு (பகுதி -4) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)