உயிர்வலி (பகுதி 3) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)
உயிர்வலி (பகுதி 3) -ரித்விக் கட்டக்
(தமிழில் -தீனன்)
முதியவர்: என்ன ஆச்சு, ஏன் பேசுறத நிறுத்திட்ட? பேசு.. நீ பேசமாட்ட.. நீயும் இன்னொரு போலா-வா ஆகிட்டு வர.
பியூன்: இல்ல, நான் போலா மாதிரி இல்ல. நான் நிறைய படிச்சிருக்கேன். பாருங்க, நான் இப்போ ரோமன் ரோலண்ட் (பிரஞ்சு நாடகாசிரியர் மற்றும் எழுத்தாளர்)ஐ வாசிச்சுகிட்டு இருக்கேன். ஆனால் எந்த பிரயோஜனமும் இல்ல. உலகத்தைப் பொறுத்தவரை, வாழ்க்கையோட கஷ்ட நஷ்டங்கள எதிர்கொள்ளுற தைரியம் இல்லாதவங்க நாம, அவங்களுக்கு நாம உதாரணமா ஆக முடியாது. நாம கோழைங்க!
முதியவர்: யாரு சொன்னா? அப்படி சொல்ல யாருக்குத் தைரியம் இருக்கு?
பியூன்: உலகம் நம்மளை பத்தி அப்படித்தான் சொல்லுது. நம்ம மேல அவங்களுக்கு எந்தப் பரிவும் இல்ல.
முதியவர்: கிடையாது! நாம தியாகிங்க. நான் சொல்றத கேளு. நீ படிக்கிற அகராதி படி, நாம உயிர்த்தியாகிங்க. நாம வாழ்க்கையால நசுக்கிக் கொல்லப்பட்டிருக்கோம். அப்படி இருக்கும்போது நாம விட்டுட்டு வந்த அந்த பேர எப்படி நீ சிறுமைப்படுத்தலாம்?
பியூன்: நீங்க இந்த இடத்துக்குப் புதுசு, இல்ல? தளர்ந்துபோன இன்னொரு நதி! இது எனக்கு சுவின்பர்ன் (ஆங்கில கவிஞர் மற்றும் நாடகாசிரியர்) எழுதுன 'கார்டன் ஆப் ப்ரோஸர்பைன்' கவிதைய நினைவூட்டுது. "எவ்வளவு களைப்படைஞ்ச நதியானாலும், ஏதோ ஒரு வழியில தன் பாதையைத் தேடி அது கடலில் போய் சேரத்தான் செய்யும்"
முதியவர்: இங்க பாரு, இந்தப் பொண்ணு அவ மேலே தீ வச்சிக்குற நிலைமைக்கு ஆளாகியிருக்கா. அவளை என்னனு கூப்பிடுவ? கோழைனா?
பெண்: ஆனா, அப்போ கூட நான் என் குழந்தைங்க அழிஞ்சுபோகணும்னு நினைக்கல. எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல, என்னோட குழந்தைங்க நல்லா இருக்கணும்னு தான் நினைச்சேன்.
முதியவர்: ஆனா அது நடந்துச்சா? இல்ல. அதுக்கு நேர் எதிரானதுதான் நடந்திருக்கு இல்ல?
பியூன்: யாரோட சாவ பத்தி நீங்க பேசுறீங்க?
முதியவர்: நான் நம்ம சந்ததிகள பத்தி பேசுறேன். இன்னும் உயிரோட இருக்குறவங்கள பத்தி பேசுறேன், இன்னும் அங்க வேதனைல எரிஞ்சிக்கிட்டு இருக்குறவங்கள பத்தி பேசுறேன்.
பியூன்: ஆமா, எனக்கும் தெரியும், அவங்களோட கூட்டு மனசுலயும் இப்போ அதே மாதிரியான எண்ணங்கள் தான் ஓடிக்கிட்டு இருக்கும். நம்ம நாட்டுல இருக்குற நிறைய மக்கள், நம்மல விடாம துரத்துர துன்பங்கள்ல இருந்து விடுபட ஒரே தீர்வு தற்கொலை தான்-னு நினைக்கிறாங்க. கொஞ்சம் கற்பனை செஞ்சு பாருங்க! இது ரொம்ப வியப்பான ஒரு விஷயம், இல்ல? தெருக்கள்ல, வீடுகள்ல, வேலையிடங்கள்ல பலர் இத பத்தி தான் சிந்திச்சிட்டு இருக்காங்க. ஆனா நாம என்ன பண்ணோம்? எதிர்த்து போராடுற தைரியத்த அவங்களுக்கு கொடுக்காம, ரொம்ப சுலபமான வழியை அவங்களுக்கு காண்பிச்சிருக்கோம்.
பெண்: ஆனா, நம்மளால என்ன பண்ணிருக்க முடியும்?
பியூன்: நம்மளால தீயில குதிக்குற அளவு ஆபத்தை எதிர்கொள்ள முடியுது. அதுக்கு பதிலா, நம்ம எல்லாரையும் ஆட்டிப் படைக்குற அடக்குமுறையையும் சர்வாதிகாரத்தையும் அம்பலப்படுத்த முயற்சி செஞ்சுருக்கலாம். ஆனாலும், நம்மளால அதுல எந்தளவு சாதிச்சிருக்க முடியும்னு எனக்கும் தெரியல. உங்களுக்கு தெரியுமா தாத்தா, சில நேரங்கள்ல எனக்கு ஹாம்லெட் (நாடகம்) நினைவுக்கு வர்றது உண்டு. "காலம் தடம் புரண்டு கிடக்கிறது, அந்தோ பரிதாபமே, அதை நேர் செய்யவே நான் பிறந்தேனோ?" இந்த மொத்த காலகட்டமே பயங்கரமானதாவும், நோய்மையோடயும் இருக்கு.
பெண்: எனக்குத் தெரியல. எனக்குத் திடீர்னு ரொம்ப பதட்டமா இருக்கு.
பியூன்: எனக்கு தெரியும் சகோதரி. அந்த உணர்வு எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். நானும் அத உணர்ந்திருக்கேன்.
பெண்: நீங்க ஏன் தற்கொலை செஞ்சுக்கிட்டீங்க. அதுக்கு என்ன காரணம்?
பியூன்: நான் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா அவங்க என்ன விடல. நான் கல்கத்தா பிரசிடென்சி காலேஜ்ல பியூனா இருந்தேன். நானே கஷ்டப்பட்டு சொந்த முயற்சில பள்ளிப்படிப்ப முடிச்சேன். அதுக்கப்புறம் ஒரு கல்லூரில சேர்ந்தேன். ஆனா நான் படிக்குறதுல இவ்ளோ உறுதியா இருக்குறது அவங்களுக்குப் புடிக்கல. நாம வாழுற இந்த உலகத்தைப் பத்தி நான் தெரிஞ்சிக்க ஆசைப்பட்டேன். இந்த உலகத்தோட ரகசியங்களை தேடி தெரிஞ்சிக்க நினைச்சேன். தெரியாத விஷயங்களை தெரிஞ்சிகணுங்குறது என்னோட தீராத ஆசையா இருந்துச்சு. என்னோட அந்த கனவு எவ்ளோ ஆழமானதுனு மத்தவங்களுக்கு புரிய வாய்ப்பில்ல. வேணும்னா நீங்க அத கற்பனை செஞ்சு பாக்கலாம். படிக்கவும் தெரிஞ்சிக்கவும் நிறைய விஷயங்கள் இருக்கு. அறிவியல்ங்குறது முடிவே இல்லாத கவிதை மாதிரி தனக்குள்ள ஆயிரமாயிரம் சாத்தியங்கள வச்சிருக்குறதா எனக்குப் பட்டுச்சு. ஆனா எனக்கு கல்விக்கான கதவ தெறந்துவிட யாருக்கும் தோணல. அதனால தான் தாத்தா, நான் புத்தகத்தோட மெல்லிசான பக்கங்கள திருப்பும்போது, அதுல இருக்குற வார்த்தைகள் எவ்வளவு உண்மைனு எனக்கு புரிஞ்சது. மனுஷனோட வரலாறு என்ன?.. அது வர்க்கப் போராட்டம் தான்.
முதியவர்: இப்போல்லாம் நீ எந்த வழில போறேனே என்னால யூகிக்க முடியல. ரொம்ப யோசிக்காதப்பா. புத்தகங்கள்ல ரொம்ப ஆழமாக மூழ்கிடாத. உன்னோட புத்தி பேதலிச்சிரும்.
பியூன்: இல்ல, இல்ல. அது பேதலிச்சு தான் இருக்கு. அத நான் சரி செய்ய நினைக்கிறன். இந்த உலகத்துல என்ன மாதிரி நூத்துக்கணக்கான, ஆயிரக்கணக்கான பேர் வாழ்க்கைல முன்னேறனும்னு வைராக்கியத்தோட இருக்குறத என்னால பாக்க முடிஞ்சது. இவங்க எல்லாரும் அறிவ தேடுற அவங்க பயணத்துல மெல்லச் செத்துத்தான் போகணுமா, அது தான் விதியா? இந்த உலகத்துல இருந்தே நான் தடம் தெரியாம அழிஞ்சுதான் போகணுமா? இந்தத் தடைகளை எல்லாம் ஏன் நிரந்தரமா நீக்க முடியல?
முதியவர்: நீ இவ்ளோ தூரம் யோசிக்கிறேனா, அப்புறம் ஏன் தற்கொலை பண்ணிக்கிட்ட?
பியூன்: இருங்க, இருங்க, அத மட்டும் வச்சு என்ன குறை சொல்ல முடியாது. ஏன்னா நான் வேற ஏதாவது வழி இருக்கான்னு தேடிப் பாத்தேன், ஆனா எனக்கு உதவி செய்ய யாருமே இல்ல, நான் தனியனா இருந்தேன். என்னால என்ன செய்ய முடிஞ்சிருக்கும். பிசாசுங்க உலகத்துல ரொம்ப ஆழமா வேர் விட்டிருக்குங்க. நான், நான் ரொம்ப ரொம்ப பலவீனமானவனா இருந்தேன்.
முதியவர்: அப்போ அதனாலதான் உலகத்த பிசாசுங்களோட கையில விட்டுட்டு நீ வந்தியா?
பியூன்: பாருங்க, வாழ்க்கை ஒன்னும் புத்தகம் மாதிரி கிடையாது. போராட்டம், வெற்றிய பத்தி புத்தகக்துல வாசிக்கும்போது நல்லா இருக்கும். ஆனா உண்மை, புத்தகப் பக்கங்கள விட்டு ரொம்பத் தூரமா இருக்கு. நான் என்ன செய்ய முடியும்?
முதியவர்: ஏன், உன்னால.... அது..
பியூன்: மிச்சம் இருக்குறது எல்லாமே வெறும் அமைதி மட்டும்தான்!
சிறுவன்: யாரு அங்க, யாரு??
பெண்: யாராவது வராங்களா?
(மின்னல் சத்தம் மீண்டும் மீண்டும் வெட்டி எதிரொலிக்கிறது)
முதியவர்: எல்லாரும் ஒடுங்க, ஓடி ஒளிஞ்சிக்கோங்க!
சிறுவன்: அம்மா, அம்மா, அப்படியே தரையில படுங்க, படுங்க.
(எல்லாரும் தரையில் படுக்க, மேடை காலியாகத் தோன்றுகிறது. மின்னல் வெட்டுகள் பளிச்சிட, ஒரு மேகம் நகர்ந்து வருகிறது. எல்லாம் திடீரென அமைதியாகிறது. கிழிந்த உடையணிந்த பைத்தியக்காரன் மேடையில் தோன்றுகிறான். குன்றின் மீது சென்று நின்றுகொண்டு போக்குவரத்துக் காவலர் போல கையை நீட்டி அசைக்கிறான். பெண் எழுந்துகொள்ள முயற்சிக்க, சிறுவன் அவளைத் தடுக்கிறான்}
சிறுவன்: அம்மா, அம்மா, அது ஒரு மனுஷன்!
பைத்தியக்காரன்: ஏய் நீ, இடது பக்கமா போ, நீ.., தள்ளுவண்டிக்காரா, நீ என்ன முட்டாளா, போ போ.. போ இங்கிருந்து!!
(முதியவர் மெதுவாக எழுந்து அவன் பின்னால் நிற்கிறார்)
பைத்தியக்காரன்: அட, போங்க சீக்கிரமா. ஏய் கார்-காரா வா, இந்த பக்கம் வா.
(பைத்தியக்காரன் திரும்பி முதியவர் தன் பின்னால் இருப்பதைப் பார்க்கிறான்)
பைத்தியக்காரன்: என்ன பெருசா எடுத்துக்காதீங்க. நான் வெறும் பைத்தியம் தான்.
முதியவர்: ஏன்?
பைத்தியக்காரன்: என்ன?
முதியவர்: நீ ஏன் பைத்தியக்காரனா இருக்க?
பைத்தியக்காரன்: என்ன பைத்தியக்காரன்னு கூப்பிட்டா, நான் பைத்தியக்காரன். என்ன நீங்க என்ன வேணா சொல்லிக் கூப்பிடுங்க. நீங்க என்ன முட்டாள் ஆடுனு கூப்பிடலாம், இல்ல உடுக்கைனு கூட கூப்பிடலாம். உடுக்கை எப்படி அடிக்கும்னு தெரியுமா, இப்படித்தான்: தக், தினத்தா தக் தினத்தா தக் தினத்தா.
(அனைவரும் இப்போது பைத்தியக்காரனை சுற்றி நிற்கின்றனர்)
பைத்தியக்காரன்: யாரு நீங்க எல்லாம்?
சிறுவன்: நாங்க எல்லாம் செத்தவங்க. ஆனா நீ அப்படி இல்ல.
பைத்தியக்காரன்: ஆமா, நிச்சயமா, வாய்ப்பே இல்ல. என்ன யாராலயும் சாகடிக்க முடியாது. ஆனா, பைத்தியக்காரனா இருக்குறது செத்துப்போறத விட மோசம்னு நீங்க நினைக்கலாம்.
பியூன்: உங்களுக்குப் புரியுதா பூர்ணோ தாத்தா?
முதியவர்: ஆமா, எனக்குப் புரியுது.
பியூன்: இவனோட அறிவ போல இவனோட ஆன்மாவும் செத்து போயிருக்கு. இவன் தன்னோட உடம்புக்குள்ள தான் இன்னும் வாழ்ந்துகிட்டு இருக்கான், ஆனா தாங்கமுடியாத வேதனையில இவனோட மனசு தற்கொலை பண்ணிருக்கு.
முதியவர்: நாம செத்துட்டதுனால, நம்மல சாக தூண்டுன வலியை பத்தி நம்மளால எதுவும் சொல்ல முடியாம இருக்கு. ஆனா இவன் மனதளவுலயே உயிரோட இல்ல, அதனால அவன பத்தியே அவனால சொல்ல முடியாது, சரியா?
பைத்தியக்காரன்: ஏன் முடியாது, என்னால முடியும். ஒரு பைத்தியக்காரன் என்ன சொல்லிட போறான்னு நீங்க நினைக்கலாம். ஆனா, ஹெடோ குளம் இருக்குற சதுக்கத்துக்குப் பக்கத்துல இருக்குற சந்திப்புல தான் நான் எப்போவும் இருப்பேன். நீங்க இப்போ அங்க போனா கூட அங்க இருக்குற நடைபாதை நிழல்ல நான் தூங்கிட்டு இருக்குறதைப் பாக்கலாம். இப்போ அங்க மத்தியான நேரம், அதனால அங்க இருக்குற இரும்பு வேலி தரைல சாய்வான நிழலா விழும். எனக்கு முன்னால இருக்குற டீக்கடைய இந்நேரம் மூடிகிட்டு இருப்பாங்க. அந்த கடைய நடத்துற பசங்க இந்நேரம் கடை முன்னாடி இருக்குற நாற்காலி, மேசைகள எல்லாம் அடுக்கி ஒழுங்குபடுத்திட்டு அங்க இருக்குற இடத்துல இப்போ ஓய்வெடுத்துட்டு இருப்பாங்க. அவங்க இப்போ தூங்கிட்டு இருக்காங்க. உங்களுக்கு தெரியுமா, இந்தப் பசங்க என்ன அடிக்கடி சீண்டுவாங்க.
(ஹெடோ வடக்கு கொல்கத்தாவில் உள்ள பூங்கா பகுதி. இப்போது ஆசாத் ஹிந்த் பாக் என்று அழைக்கப்படுகிறது)
சிறுவன்: ஆனா உன்னோட மொத்த கதையும் இவ்ளோ தானா, உன்னோட வேதனைக்கு இவ்ளோதான் காரணமா?
பைத்தியக்காரன்: இல்லையா பின்ன? நான் அந்த ஹெடோ சந்திப்புல சின்னத் துணிய சுத்திக்கிட்டு, கிட்டத்தட்ட துணியே போடாத மாதிரி, நான் பாட்டுக்குத் தனியா பேசிகிட்டு பிச்சை கேட்டுக்கிட்டும் விடாம அழுதுகிட்டும் இருப்பேன்.
பியூன்: ஆனா நீ இன்னும் அங்கதான் இருக்க, எத்தனையோ நகரங்கள் இருந்தும் இந்த இடத்துலயே நீ......
பெண்: ரொம்பப் பாவம்! உன்னோட வீடு எங்க இருக்கு?
பைத்தியக்காரன்: எனக்குத் தெரியாது. எனக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை எனக்குத் தெரிஞ்சிருந்தாலும், நான் உங்ககிட்ட சொல்லமாட்டேன். ஏன் சொல்லணும்? ஒரு வேலை நான் சொன்னேன்னா, எனக்கு நெருக்கமா இருக்குறவங்களையும் நீங்க பைத்தியமாக்கிடுவீங்க.
பெண்: ஏன் நீ இவ்ளோ கஷ்டப்படுற ?
முதியவர்: நீ யாருகிட்ட கேக்குற?
பெண்: நான் எல்லாருகிட்டயும் தான் கேக்குறேன். ஏன் இவ்ளோ சோகமும், வலியும் இருந்துகிட்டு இருக்கு? யாருகிட்டயாவது இதுக்கு பதில் இருக்கா?
பியூன்: ஒருத்தர்கிட்ட அதுக்கு பதில் இருக்கு. ஆனா அவர் இப்போ எங்க இருக்கார்னு எனக்கு தெரியல. "இரவின் இருண்மை கரைந்துவிட்டது"னு ரவீந்திரநாத் தாகூர் சொன்னாரு. "நான் ஓயப் போவதில்லை"னு ரோமன் ரோலண்ட் சொல்லியிருக்காரு.
(பியூன் புத்தகத்தை எடுக்கிறான்)
முதியவர்: ராமகிருஷ்ணரைப் பத்தி ரொலண்ட் எழுதுனத நான் படிச்சிருக்கேன். அது அற்புதமானது.
பியூன்: ரொலாண்ட் என்ன சொன்னாருன்னு தெரிஞ்சிக்கணுமா. எல்லா வலிகளையும் கடந்து வந்து அவரு சொல்றாரு 'சலனமற்ற அமைதி. உறங்கு, என் கபாலனே, நீ உயிர்ப்புடனும் கொந்தளிப்பிலும் இருக்கிறாய். உறங்கு என் ரத்தம் தோய்ந்த பாதங்களே! நீ மிகவும் கடினமாக உழைத்துவிட்டாய். பாதைக் கடினமானதாகவும், ஆபத்துகள் நிறைந்ததாகவும் இருந்தது. இருந்தபோதிலும், அந்தப் பாதை அழகாக இருந்தது. அந்தப் பாதையின் ஒவ்வொரு திருப்பத்திலும், எனது போராட்டத்திற்கான விலையை நான் மீட்டுக்கொண்டேன். அதன் பிறகு நான் பெற்றது...' 'அதன் பிறகு நான் வரலாறாவேன்' . ஆனால் என்னால முடியல. (புன்னகைக்கிறான்) என்னால முடியல.
சிறுவன்: இவ்ளோ நேரமா இவர் என்ன சொன்னார்? எனக்கு எதுவும் புரியல. அம்மா, நீங்க என்னோட அந்தக் குன்றுக்கு அந்தப் பக்கம் வாரீங்களா?
பெண்: இல்ல, எனக்கு எதுவும் செய்ய புடிக்கல.
(பெண் அமர்ந்திருக்க, அவளுக்கு முதுகுப்புறமாய் சிறுவன் இருக்கிறான்)
சிறுவன்: அப்படி தோணுறது இந்த இடத்தோட சாபம்!
பைத்தியக்காரன்: நான் சொல்றத கேளுங்க, இது எல்லாம் அர்த்தமில்லாத பேச்சு. ஒரு பைத்தியக்காரன் என்ன சொல்லிறப்போரான்னு நீங்க நினைக்கலாம். இருந்தாலும் நான் சொல்லுறேன்: பைத்தியமா இருங்க. எல்லாரும் பைத்தியக்காரங்களா மாறுங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பைத்தியத் தன்மையை நோக்கி உங்கள தள்ளுங்க. அப்போதான் வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமானதுன்னு உங்களுக்குப் புரியும். ரோட்டுல நின்னுகிட்டு, போறவங்க வரவங்க கிட்ட இதத்தான் நான் சொல்லுவேன். உங்களுக்குத் தெரியுமா, அவங்க நான் சொல்றதை கவனிப்பாங்க.
முதியவர்: அப்போ, நீ பைத்தியமானத்துக்கு அப்புறம் எல்லாமே அமைதியாகிடிச்சுன்னு சொல்லுறியா?
பைத்தியக்காரன்: மகாபிரபுவே, அதை நான் சொல்லவும் வேண்டுமா? (ஏளனமாக)
பெண்: ஒரு பைத்தியமா இருக்குறது எப்படி இருக்கும்னு சொல்லேன்?
பைத்தியக்காரன்: இந்தப் பக்கம் வாங்க (பெண்ணின் அருகில் செல்கிறான்) நான் உங்களுக்குத் தனியா அதைச் சொல்றேன். பைத்தியமா இருக்குறது ஒரு மாதிரி கசப்பா இருக்கும், கொஞ்சம் புளிப்பாவும் இருக்கும், தெரியுமா.
முதியவர்: அப்படினா என்ன அர்த்தம்?
பைத்தியக்காரன்: கொஞ்சம் உப்பும், மிளகும் தூவிவிட்டா, பைத்தியக்காரத்தனத்தோட சுவை அவ்ளோ மோசம் ஒன்னும் இல்ல. கடலைப்பருப்பையும், வேர்க்கடலையையும் கலந்து காரசாரமா வறுத்த மாதிரி இருக்கும் அது.
(பைத்தியக்காரன் மீண்டும் போக்குவரத்தைச் சீர் செய்வதுபோல் பாவனை செய்யத் தொடங்குகிறான்)
முதியவர்: சுத்தப் பைத்தியக்காரத்தனம். தற்கொலை செஞ்ச பிறகும் ஒருத்தன் பைத்தியக்காரனா இருக்கணும்னு, இல்ல, ஆகணும்னு அவசியமா என்ன?
(முதியவர் தலையை உழுக்குகிறார்)
முதியவர்: ஒருவேளை எனக்கு அந்த 'ஹிரண்யவர்ணம் புருஷம் ஆதித்யம்' புலப்பட்டிருந்தா, நான் உயிரோட இருந்திருப்பேன்.
{ஹிரண்யவர்ணம் புருஷம் ஆதித்யம் - சூரியனுக்குள் வசிக்கும் தங்க நிறமுடைய பரம்பொருள் (கடவுள்)}
பியூன்: காலத்தால் அழியாத ஒரு கவிஞனோட வரிகள இப்போ நான் சொல்ல விரும்புறேன். 'நாளை, நாளை, நாளை என... காலம், வரலாற்றின் இறுதி எழுத்து வரை, ஊழிக்காலம் வரை மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கிறது. நமது கடந்த காலங்கள் அனைத்தும், அறிவிலிகள் தமது புழுதி மண்டிய மரணத்தை நோக்கி செல்வதற்கான பாதையையே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன."
பைத்தியக்காரன்: (பெண்ணைப் பார்த்து), உனக்கு தெரியுமா, எனக்கும் அப்பப்போ சில விஷயங்கள் ஞாபகத்துக்கு வரும். கருப்புத் திரையோட இரண்டு முனைகள், நடைபாதைல ஒன்னு ரெண்டு தப்படிகள் எல்லாம். ஆனா இதெல்லாம் ரொம்ப அற்பமான விஷயம், அந்த எண்ணங்கள விரட்ட நினைக்கிறேன், ஆனா அது என்ன விட்டுப் போக மாட்டேங்குது. அந்த மாதிரி நேரங்கள்ல தான் நான் தேம்பி அழுவேன். ஆமா, அப்போ தான் நான் அழுவேன்.
பெண்: அதுக்கு அப்புறம்?
(பெண்ணின் பின்னால் அவளது கையைப் பிடித்தவாறு சிறுவன் நிற்க, பைத்தியக்காரன் படபடப்பு அடைந்தவனாய் பெண்ணை நோக்கிப் பேசுகிறான்)
பைத்தியக்காரன்: உனக்குத் தெரியுமா, இதுல என்ன நல்ல விஷயம்னா, இந்த எண்ணங்கள் என்ன ரொம்ப நேரம் தொந்தரவு செய்யுறது இல்ல. எனக்கு அடிக்கடி அது மறந்துபோயிடும். அத பத்தி நான் யோசிக்க விரும்பமாட்டேன். இந்த எண்ணங்கள் எனக்குள்ள ரொம்ப நேரம் இருந்துச்சுனா என் தலை ரொம்ப வலிக்க ஆரம்பிச்சிடும். அந்த வலியை தாங்கவே முடியாது! அப்போ எல்லாம், அட கடவுளே, என்ன இதுனு கத்த தோணும்.
(போலா(தொழிலாளி), "உங்கள் கவசங்களைப் பூட்டுங்கள், தயாராகுங்கள் சகோதரர்களே" என்று பாடத் தொடங்குகிறான். பைத்தியக்காரன் ஓடிச் செல்கிறான். ஆனால் சிறுவன் போலாவை சுற்றி கைகளால் அணைத்தான்.)
(பைத்தியக்காரன் போக்குவரத்தைச் சரி செய்பவன் போல)
பைத்தியக்காரன்: ஏய், இடது பக்கமா, இடது பக்கமா போ, முட்டாளே. யாரு வர்றதுனு தெரியலையா?
சிறுவன்: யாரு வரா?
பைத்தியக்காரன்: அவங்க தான் இந்த மாதிரி பாட்டுகள நம்பிகிட்டு இருப்பாங்க. அவங்க வந்த உடனே நம்மள வேலை செய்யச் சொல்வாங்க, கஷ்டபடச் சொல்வாங்க, சண்டை போடச் சொல்வாங்க.
முதியவர்: சரி, பயப்படாத. சொல்லப்போனா போலாவுக்கு அந்தப் பாட்டோட உள்ளர்த்தமே புரியாது.
(போலா முன்னகர்ந்து, ஓரத்திற்குச் செல்கிறான்)


கருத்துகள்
கருத்துரையிடுக