தீக்குரவை -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்) இரண்டாம் அலை

 

தீக்குரவை -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

இரண்டாம் அலை

    (திரை மேலே செல்ல, ரயிலின் விசில் சத்தம் கேட்கிறது. மேடையின் நடுவே ராணா, ராஜா இருவரும் அமர்ந்துள்ளனர். கையில் குழல் துப்பாக்கியுடன் இருக்கும் பிகு, எதோ ஒரு மெட்டை விசில் அடித்தபடி இருக்கிறான். அதன்பின் ரயில் மிக அருகில் நெருங்குவது போல் அதன் சத்தம் சீராக அதிகரிக்கிறது. பிகு உடலை வளைத்து நெளித்து பரதநாட்டியத்தின் சில அசைவுகளைச் செய்கிறான்.)

ராஜா: ஏன் பிகு, இப்போது நீ தவளையைப் போல குதித்துக் கொண்டிருக்கிறாய்?

பிகு: நான் என்ன செய்கிறேன் என்று உனக்குப் புரியாததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இதன் பெயர் கால்சூர், சரியா?, இது கெம்தா (வங்காள நாட்டுப்புற கலை) கிடையாது. இதுதான் உண்மையான சரக்கு.

ராணா: ஏன் இப்போது நீ இவ்வளவு உற்சாகமாக இருக்கிறாய்?   

பிகு: எனது நேசத்திற்குரியது வந்து கொண்டிருக்கிறது. 

ராஜா: யார் வருகிறார்?

பிகு: உங்கள் இந்து மதத்தில் சாந்திதாஸ் என்று யாரோ எழுதிய நாட்டுப்புறக் கதை ஒன்று இருக்கிறது தானே?

நீல நிறப் புடவையை ஈரம் பிழிந்துச் செல்கின்றாள்,

என் உயிரை அதனுடன் இயைந்துப் பிழிகின்றாள்  பாடல் வரிகளைக் கூறுகிறான்

பிகு: இல்லை வேறெதுவாகவும் கூட இருக்கலாம். சரி அதை விடு, இதோ பொருட்களுடன் சரக்கு ரயில் வந்துவிட்டது பார்.

    (பின்னணியில் சிக்னலில் நிற்பதை உணர்த்தும் வகையில் ஓடும் ரயிலின் சக்கரங்கள் நிற்கும் கிரீச்சிடல் கேட்கிறது. ரயில் நின்று விட்ட நிலையில் இந்த இளைஞர்கள் அதில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மேடையின் வலதுபுறம் இருந்து ஓடி வருகிறார்கள். அவர்களில் படைத்தலைவரும் உள்ளார்.)

படைத் தலைவர்: ஏய், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

ராஜா: நாங்கள் நாட்டுக்குச் சேவை செய்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?

பிகு: (அவனுக்குள்ளேயே முணுமுணுக்கிறான்.) கிழவா, நாங்கள் உனது தந்தையின் ஆன்மாவை உறுவிக் கொண்டிருக்கிறோம்.

படைத் தலைவர்: எல்லோரும் இங்கிருந்து உடனே ஓடிவிடுங்கள்! எல்லாப் பொருட்களையும் நான் பறிமுதல் செய்யப்போகிறேன்.

ராணா: எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள நீ யார்? நாங்கள் என்ன வெறும் உதிரிகளா? இதற்காக முழு இரவும் இங்கு நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம்.

படைத் தலைவர்: இன்னும் ஒரு வார்த்தைப் பேசாதே. நான் உன்னைக் கைது செய்ய வேண்டியிருக்கும்.

பிகு: நான் பிகு முகமது. நீங்கள் எங்களை எந்த பிருந்தாவனத்துக்கு அழைத்துச் செல்வீர்கள். நாங்கள் தான் இங்கே எல்லாமே. நாங்கள் கையில் வில்லுடனும் முதுகில் அம்புடனும் மயிலின் மேல் நடனமாடுபவர்கள். எங்களை ஏமாற்ற நினைக்காதீர்கள். நீங்களும் எங்களைப் போல தான்.

ராஜா: உங்கள் உரை வாளை இங்கு உறுவித் தவறு செய்யாதீர்கள்.

படைத் தலைவர்: ஏதோ குதிரை மீது அமர்ந்திருக்கும் பெரிய ஆட்கள் போல பேசுவதை நிறுத்துங்கள். கான்ஸ்டபிள்ஸ், அவர்கள் கைகளில் விலங்கு பூட்டுங்கள். நான் எப்போதும் உண்மையின் பக்கமே நிற்பேன்.

     (மேடையின் இடதுபுறம் இருந்து ராய்சரண் வருகிறார். நிலைமையை புரிந்துகொண்ட ராய்சரண் தனது சர்வீஸ் அடையாள அட்டையைச் சடாரென வெளியே எடுக்கிறார்.)

ராய்சரண்: என்ன நடக்கிறது இங்கே? ஏன் தேவையில்லாத பிரச்சனையை உருவாக்குகிறீர்கள்?

ராஜா: நீயே பாரு சகோதரா ராய்சரண்.. மன்னிக்கவும் ராய்சரண் சாஹிப். நாங்கள்  இந்த நாட்டுக்கு சேவை செய்ய முயல்கிறோம், ஆனால் சட்டத்தின் பாதுகாவலர்கள் என கூறிக்கொண்டு இவர்கள் அதைக் கெடுக்கப் பார்க்கிறார்கள்.

ராய்சரண்: ஆனால் ஏன்?

ராஜா: பாருங்கள், நாங்கள் சரக்குப் பொருட்கள் அடங்கிய சில மூட்டைகளை எடுத்தோம். இங்கிருக்கும் மக்களுக்கு சாப்பிடக்கூட எதுவும் கிடைப்பதில்லை. எல்லா கிராமங்களும் பட்டினியில் கிடக்கின்றன. மக்களின் நிலைமையை எங்களால் இன்னும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. வாடிய முகங்களில் மீண்டும் சிரிப்பைப் பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களின் குறிக்கோள்.

ராய்சரண்: பாருங்கள் படைத்தலைவரே, இந்த பொருட்கள் எனது பகுதியில் இறங்கியுள்ளன.  இந்த இளைஞர்கள் எனது உதவியாட்கள். அவர்களைப்‌ பொருட்களுடன் போக விடுங்கள்.

படைத் தலைவர்: இது சரியில்லை. நீங்கள் செய்வது நியாயம் கிடையாது.

ராய்சரண்: யாருக்கு வேண்டும் நியாயம்.. நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள்.

படைத் தலைவர்: (சல்யூட் அடித்து) சரி ஐயா.

ராய்சரண்: (இளைஞர்களிடம்) அப்புறம் இன்னொரு விஷயம்.  ஒரு வகையில் பார்த்தால் நான் உங்களுக்காக எல்லை மீறுகிறேன் சரி தானே? சரி எல்லாவற்றுக்கும் நான் விரைவில் ஒரு தீர்வு காண்கிறேன். இப்போது அனைவரும் உடனே இங்கிருந்து கலைந்துச் செல்லுங்கள்.

    (மூன்று இளைஞர்களும் பொருட்கள் அடங்கிய மூட்டைகளை எடுத்துக்கொண்டு மேடையின் வலதுபுறம் வெளியேறுகிறார்கள்.)

ராய்சரண்: (படைத் தலைவரைப் பார்த்து) ஏய், நீ இங்கே வா?

படைத் தலைவர்: என்ன ஆச்சு?

ராய்சரண்: எவ்வளவு?

படைத் தலைவர்: என்னது?

ராய்சரண்: இதற்காக உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்?

படைத் தலைவர்: ஐயா!!

ராய்சரண்: முடிவாகச் சொல்லு. எவ்வளவு பணம் வேண்டும்?

படைத் தலைவர்: (சிரித்துக்கொண்டே) ஐயா..

ராய்சரண்: என்னை எப்போதும் ஐயா என்று கூப்பிடுவதை நிறுத்து!. உங்கள் எல்லோரையும் தொலைத்து விடுவேன். படையில் எல்லோரையும் சரிகட்டு, சரியா?

படைத் தலைவர்: எனக்கு இப்போது புரிந்துவிட்டது ஐயா.. நான் எப்போதும் உண்மையின் பக்கமே நிற்பேன்.

ராய்சரண்: ஆனால் நான் முழு பொய்யன். இது எனது தொழில்.

    (ராய்சரண் முன்னே செல்ல, படையினர் அனைவரும் அவரை பின்தொடர்ந்து மேடையின் இடதுபுறமாக வெளியேறுகின்றனர். வெளியேறுவதற்கு முன் ராய்சரண் மூன்று முறை கைதட்டினான். மூன்று இளைஞர்களும் சிரித்தபடி மேடையில் நுழைந்தனர்.)

ராணா: அவர் நம்ம ராய்சரண், நமது வழிகாட்டி.

பிகு: நமது மீட்பர்

ராஜா: நமது குரு.‌

ராணா: என்ன கொடுமை இது 

ராஜா: போலீஸ் நமது பின்னாலயே எப்போதும் வந்துகொண்டிருந்தால் இந்த நாட்டுக்கு எப்படி நாம் சேவை செய்வது?

பிகு: சரி, இரவுக்கான திட்டம் முடிந்துவிட்டது. இனி விடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும். இனி பெட்ராபோல், பெனாபோல், போங்கான் ஆகிய இடங்களில் இருந்து சரக்கு வர வேண்டியுள்ளது. உசைன் அண்ணன் சரக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பதாக வாக்கு கொடுத்துள்ளார்.

ராஜா: நான் மறந்தே விட்டேன். பெரிய சரக்கு ஒன்று வர வேண்டியுள்ளது. நடன நிகழ்ச்சியில் ஆட பம்பாயில் இருந்து பெரிய நடிகை ஒருத்தி வருகிறாள். இந்தச் சிறிய சரக்குகளின் பிரச்சனைக்கு மத்தியில் பாம்பாய் நடிகையை  நான் மறந்தே விட்டேன். நல்ல வேலை சரியான நேரத்தில் ஞாபகம் வந்தது. நமக்கு நிறைய நேரம் இல்லை. அந்தச் சரக்கைக் கையாளும் அளவுக்கு நம்மைத் தவிர இங்கு யாரும் இல்லை. புலிலியா கிராமத்தைச் சேர்ந்த  நோபோகேஷ்டோ-வின் ஆட்களிடம் நாம் அவளை விட்டு விட முடியாது. சரிதானே?

ராணா: நாம் அதைச் செய்தால் பாம்பே பார்சல் முற்றிலும் நம் கையை விட்டு நழுவிவிடும். மாறாக அவள் நமக்கு கிடைத்தால் கொண்டாட்டம் தான். அது என்ன சொல்வார்கள், பரத்நாட்யா வா இல்லை வேறெதுவுமா?

ராஜா: பரதநாட்டியம்

ராணா: எதுவோ இருந்துவிட்டுப் போகட்டும்.

பிகு: அதுமட்டுமல்ல, இந்தி சினிமாவில் அவள் பெரிய நட்சத்திரம். அவள் வந்தால் இந்தப் பகுதியே பரபரக்கும். நாம் அவளைப் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் இந்தக் குடிகார நாய்கள் அவளை மேய்ந்து விடுவார்கள்.

ராஜா: முன்பு செய்தது போல நிகழ்ச்சி நடைபெறும்போது  டிக்கெடுகளை அதிக விலைக்கு விற்க வேண்டும். ஏழு டிக்கெட்டுகளை எழுபது ரூபாய் வரை விற்கவில்லை என்றால் என்னை என்னவென்று கேளுங்கள். என் வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், மார்க்கெட்டில் நிகழ்ச்சிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். சரியான உருப்படி கிடைத்தால் ஒரு டிக்கெட்டை நூறு ரூபாய்க்கு கூட விற்கலாம்.

     (மேடையின் இடதுபுறம் இருந்து ரகுதேவ், அவரின் மகள் சுஸ்மா மற்றும் ராய்சரண் ஆகியோர் நுழைகின்றனர். ராய்சரண் சிறிய இரும்புப் பெட்டியில் இருந்து பாக்கு வைத்து தயாரிக்கப்பட்ட வெற்றிலையை எடுத்து தனது வாய்க்குள் போடுகிறார்.)

ராய்சரண்: எனது மனைவி இந்த வெற்றிலைகளை நிஜமாகவே நன்கு தயாரித்திருக்கிறாள்.

     (ராய்சரண் உடன் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று ராஜா நோட்டம் விடுகிறான்.)

ராஜா: இவள் புதிதாவும் அருமையாகவும் இருக்கிறாள்

ராணா: நான் இந்த வழக்கைப் பார்த்துக் கொள்கிறேன்.

பிகு: முதலில் இந்த வழக்கைப் பதிவு செய்வோம்

ராணா: ஏய் பண்டிட் ஐயா, 'அம்மா'வுடன் எங்கே போகிறாய்?

ரகுதேவ்: எங்கேயும் இல்லை

ராஜா: இவளைப் பற்றிய செய்தி ஏற்கனவே உலவ ஆரம்பித்துவிட்டது.

ரகுதேவ்: அப்படி என்றால்?

ராஜா: அப்படி என்றால் நீ அவளை விட்டுவிட்டு இங்கிருந்து தனியே செல்லப்போகிறாய் என்று அர்த்தம். நாங்கள் இங்கு இருக்கும் வரை நீ இங்கு இருக்க முடியாது. எங்களுக்கும் பொறுப்புகள் இருக்கிறது, இல்லையா?

ராணா: (சுஸ்மாவை நோக்கி சைகை செய்து) குறிப்பாக பொதுச் சொத்தை பார்த்துக்கொள்வது எங்கள் பொறுப்பு.

ரகுதேவ்: எனக்கு ஒன்றும் புரியவில்லை, மகனே.

ராஜா: பொது மக்களுக்கு மட்டும் தான் பொதுச் சொத்தின் மேல் உரிமை உள்ளது.

ரகுதேவ்: சரிதான், ஆனால் அதுபோல எப்போதும் நடப்பதில்லை.

ராணா: அதனால் தான் நாங்கள் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம்.  எங்களுக்கென்று சில சொத்துக்களை நாங்கள் அடைய விரும்புகிறோம். ஏனெனில் நாங்கள் இந்த நாட்டின் இளைஞர் பட்டாளம்.

பிகு: சரி அப்போது இந்தச் சொத்தை எடுத்துக்கொள்வோம், அல்லது நீங்கள் உங்கள் அலங்கார வார்த்தைகளில் கூறுவது போல 'இதைப் பாதுகாப்போம்'

ராஜா: சரி, வா 'தாயே', வந்து எங்கள் வீட்டில் விளக்கேற்று.

     (ரகுதேவ் பயத்தில் நடுங்க, சுஸ்மா அசௌகர்யமான அமைதியுடன் கல்லாய் சமைந்து நிற்கிறாள். மூவரும் அவளைச் சூழ்ந்துகொள்ள, ரகுதேவ் நிர்க்கதியாக ராய்சரணை நோக்கிச் செல்கிறார்.)

ரகுதேவ்: நீ போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் மருமகன் தானே. உன் கண் முன்னேயே என் பெண்ணைக் களங்கப்படுத்த இவர்கள் எப்படி துணிந்தனர்?

ராய்சரண்: ரகுதேவ், நீ பெரிய தவறு செய்கிறாய். இந்த நாடு சட்டமற்றது. இந்த நாட்டில் ஒரே ஒரு சட்டம் தான் ஆட்சி செய்கிறது. அது காட்டுராஜ்யம். இங்கு வாழ்வின் விழுமியங்கள் ஏதோ சமஸ்கிருத பாடங்கள், கீதை, வேதங்கள், உபநிஷதங்களில்  இருந்து உருவானவை அல்ல. இங்கு வாழ்க்கையின் பிரதான மந்திரம் என்பது "எல்லாவற்றையும் நாசமாக்கு, அந்தக் குழப்பத்தில் இருந்து பிறந்தவற்றை ருசி" என்பதுதான். தற்போது இந்த நாட்டில் உள்ள எல்லோராலும் பின்பற்றப்படும் ஒரே விழுமியம் அதுதான்.

    (ரகுதேவை ராஜா இழுத்துச் செல்ல, ராணா தனது குழல் துப்பாக்கியை எடுக்கிறான். ராஜா நாட்டு வெடிகுண்டை தனது பையில் இருந்து எடுக்கிறான்.)

ராஜா: இங்க பாரு பண்டிட் ஐயா, நான் கூறுவதைக் கேட்டால் உனக்கு நல்லது.

ராணா: ஆங்கிலத்தில் சொல்வார்களே, "good for your health" என்று

பிகு: அவருக்குப் புரிய வை.

ராஜா: பண்டிட் ஐயா, முதலில் நீ இந்த கிராமத்தை விட்டுப் போகக்கூடாது, போக முயற்சித்தால் உனக்குப் பிரச்சனை தான். இரண்டாவதாக, உன் மகளை பதினைந்து இரவுகள் கழித்து நாங்கள் திருப்பி அனுப்பி வைக்கிறோம். அதை எங்களால் உறுதி அளிக்க முடியும். நீ போலீசுக்கு சென்றால் பிறகு உனக்கு பெரிய பிரச்சனை தான். உன்னை நாங்கள் ஏமாற்றவும் போவதில்லை. அவள் எங்களுடன் இருக்கும் வரையில் உனக்கு சிறு தொகையை நாங்கள் கொடுக்கிறோம்.

ரகுதேவ்: நீங்கள் எல்லாம் என்ன பேசுகிறீர்கள்!

பிகு: நாங்கள் சொல்லவருவது என்னவென்றால், அவளின் கருக்கலைப்புக்கு உனக்குப் பணம் தேவைப்படலாம் தானே. நீ மருத்துவருக்குப் பணம் கொடுத்துதான் ஆக வேண்டும் அல்லவா.

ரகுதேவ்:  இது சாத்தியமே இல்லை.

ராணா: நீ ஏதாவது சத்தம் போட்டால் உன்னை நிரந்தரமாக அமைதியாக்க வேண்டியிருக்கும். அது இன்னும் சுலபம்.

    (ராணா, சுஸ்மாவின் கையைப் பிடித்து இழுத்து மேடையின் வலதுபுறமாக வெளியேற எத்தனிக்கிறான். சுஸ்மா ராணாவின் பிடியில் இருந்து தனது கையைச் சடாரென்று உருவிக்கொண்டு மேடையின் நடுவே முதுகுப் புறமாய் பார்வையாளர்களுக்குத் தெரியும் வண்ணம் வந்து நிற்கிறாள். மூன்று இளைஞர்களும் அவளை நோக்கி ஓடி வந்து ஆளுக்கொரு திசையாய் அவளைப் பிடிக்கிறார்கள், அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்----)

வா, தாயே சுஸ்மா, நீ தேவி பகவதியின் மறுபிறவி! தேவிடியா முண்டை!

     (சுஸ்மா கூச்சலிடத் தொடங்க, ராணா தனது கையால் அவளது வாயைப் பொத்துகிறான். மூவரும் அவளைத் தூக்கிக்கொண்டு அல்லது இழுத்துக் கொண்டு மேடையின் வலதுபுறமாகச் செல்கின்றனர். ராய்சரண் எதுவுமே நடக்காதது போல அவன் மென்று கொண்டிருந்த வெற்றிலையைச் சாவதானமாகத் துப்புகிறான்}

ராய்சரண்: ஆஹா! எனது மனைவி உண்மையிலேயே வெற்றிலையை நன்றாகத் தயாரிக்கிறாள்.

ரகுதேவ்: ஐயோ, இது என்ன கெட்ட கனவா? இந்த நாட்டில் உண்மையில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறதா? அட கடவுளே!

    (ராய்சரண், ரகுதேவ் இருவரும் மேடையின் இடதுபுறமாக வெளியேறுகிறார்கள். விடியல் பொழுது மெதுவாகத் தொடங்க, பறவைகள் கீச்சிடும் ஒலிகள் கேட்கின்றன. அது ஒரு பனிமூட்டமான அதிகாலை. காலியாக இருக்கும் மேடையில் சில நொடிகள் கழித்து பிஷ்ணுப்ரியாவும் கனிகாவும் கைகளைக் கோர்த்து ஆடியபடி இடதுபுறம் இருந்து மேடையில் தோன்றுகின்றனர். அவர்களின் கூந்தல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒரு பண்டைய காதல் பாடலைப் பாடுகின்றனர்.)

வானம் ஏன் இவ்வளவு நீலமாய் உள்ளது?

மேகம் ஏன் இவ்வளவு அழகாய் உள்ளது?

உலகம் ஏன் இவ்வளவு ரம்யமாய் உள்ளது?

எனக்கு ஈதேதும் பிடிக்கவில்லை.

இவ்வளவு நல்லது, நல்லதல்ல.

வாழ்க்கை இவ்வளவு அழகானதல்ல.

குழப்பம் செய்யும் மனிதர்கள் வாழும் உலகினிலே

ஈதேதும் சரியாகப் பொருந்தவில்லை.

இது அந்த காலத்து நாட்கள் இல்லை. 

இந்த ரம்யமும் அழகும் பொருந்தவில்லை.

அன்பிற்குரியவனே,

நீ உண்மையானால்,

என்னைப் புரிந்து கொள்வாய்

அன்றி உனக்கேதும் புரியாது.”

     (ரயிலின் சத்தம் கேட்கிறது. சுஷோவன் கையில் சூட்கேஸ் பெட்டியுடன் நுழைகிறான், கனிகா அவனை நோக்கி ஓடிச் சென்று அவனது சட்டையைப் பிடித்து இழுக்கிறாள்.)

கனிகா: அப்போ, நீ மீண்டும் கல்கத்தாவுக்கு ஓடிப்போகிறாயா? உன்னை நான் விடமாட்டேன்.

சுஷோவன்: நீ என்னைப் போக விடவில்லை என்றால் நான் எப்படி சம்பாதிப்பது, எனது தேவைகளை யார் பூர்த்தி செய்வார்கள். நீ கண்டிப்பாக மாட்டாய்.

கனிகா: எனக்கு அதைப் பற்றி அக்கறை இல்லை. நீ இங்கு இல்லாத போது... (என வாக்கியத்தை இழுக்க)

சுஷோவன்: ... இந்தக் கிராமத்தில் ஏதோ இல்லாதது போல் உள்ளதா? (என்று அந்த வாக்கியத்தை முடிக்கிறான்)

கனிகா: அப்படி உணரும் ஒருவர் அங்கே நின்று கொண்டிருக்கிறார்.

    (அவள் பிஸ்ணுப்பிரியாவை நோக்கி கை காட்டுகிறாள், அல்லது கண் காட்டுகிறாள். பிஸ்ணுப்ரியா தடுமாற்றத்துடன் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவள் கனிகாவை கடிந்துகொள்வது போல கண் காட்டுகிறாள். சுஷோவன் தடுமாற்றத்துடன் வார்த்தைகளை உச்சரிக்கத் தொடங்குகிறான்.)

சுஷோவன்: நான் கிளம்புகிறேன், பிஸ்ணுப்ரியா.

பிஷ்ணுப்ரியா: சரி

சுஷோவன்: நீ என்னிடம் சொல்வதற்கு அவ்வளவுதான் இருக்கிறதா?

பிஷ்ணுப்ரியா: ஏதோ, நான் உன்னைப் போக வேண்டாம் என்று சொன்னால் போகாமல் இங்கேயே இருந்து விடுபவன் போல பேசுகிறாய்?

சுஷோவன்: எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. நிறைய விஷயங்களை முடிக்க வேண்டியுள்ளது.

பிஷ்ணுப்ரியா: எனக்குத் தெரியும்.

சுஷோவன்: பிஷ்ணுப்ரியா..

பிஷ்ணுப்ரியா: சொல்லு?

சுஷோவன்: உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

பிஷ்ணுப்ரியா: என்ன?

சுஷோவன்:  நீண்ட காலம் முன் நாம் பகிர்ந்து கொண்ட அந்த இனிமையான தருணங்கள் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

பிஷ்ணுப்ரியா: அப்படி ஒன்றும் இல்லை.

சுஷோவன்: நீ அந்தத் தருணங்களை நினைக்கும்போது நான் உன் ஞாபகத்திற்கு வர மாட்டேனா?

பிஷ்ணுப்ரியா: அப்படியும் இருக்கலாம்.

சுஷோவன்: நாம் இருவரும் குழந்தைகளாக இருந்தபோது கொய்யா மரத்தில் ஒன்றாக ஏறினோம். நான் மரத்தில் இருந்து விழுந்து என்னைக் காயப்படுத்திக் கொண்டது எனக்கு ஞாபகம் உள்ளது. பார், எனக்கு இன்னும் அந்த காயத்தின் தழும்பு உள்ளது. இந்த தழும்பு என்னிடம் இருந்து அழிக்க முடியாதது, உன்னைப் போலவே.

பிஷ்ணுப்ரியா: சரி நிறுத்து! (வெட்கத்துடன்)

சுஷோவன்: சரி மேன்மையுடைய மகாராணி, உனது அடியேன் உன் கட்டளைக்குத் தலை வணங்குகிறேன். நீ விரும்பும்வரை நான் காத்திருப்பேன். நான் ரபீந்திரநாத் தாகூரை மேற்கோள் காட்டி இன்னும் நிறைய பேசியிருக்க முடியும், ஆனால் அதனால் இப்போது அதில் பயன் இல்லை, இதுவே போதும் என்று நினைக்கிறேன். எனது ரயில் வந்துகொண்டிருக்கிறது, நான் சென்றாக வேண்டும். ஆனால் நான் நிச்சயம் ஒரு நாள் திரும்பி வருவேன். எனக்காக காத்திரு. பிஸ்ணு, நீ என்னை ஞாபகம் வைத்திருப்பாய் என்று நம்புகிறேன்.

பிஷ்ணுப்ரியா: அட!

    (மேடையில் அவர்கள் ஒரு கணம் அசைவின்றி அப்படியே நிற்கின்றனர். பின்னர் சுஷோவன் மேடையின் இடதுபுறமாக (ரயில் ஏறுவதுபோல) வெளியேறுகிறான். கனிகா மேடையின் நடுவே வந்து பிஸ்ணுப்ரியாவின் தோள்களை சுற்றி தனது கைகளை வளைக்கிறாள். பிஷ்ணுப்ரியா முதலில் அவளை ஒரு கணம் பார்த்துவிட்டு, பின்னர் மேல் நோக்கி (வானத்தை) பார்க்கிறாள்.)

கனிகா: என்ன?

பிஷ்ணுப்ரியா: என்ன?

கனிகா: என்ன? என்ன ஆனது?

பிஷ்ணுப்ரியா: ஏதோ நடந்தது. நிச்சயம் ஏதோ நடந்துவிட்டது.

கனிகா: என்ன நடத்திருக்கும்?

பிஷ்ணுப்ரியா: ஏதோ தொலைந்து போனது போல உள்ளது. விசித்திரமான வெறுமையை உணர்கிறேன், ஆனால் அது என்ன என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

கனிகா: நான் சொல்லட்டுமா?

    (பிஷ்ணுப்ரியா அவளைப் பார்க்கிறாள். கனிகா நடனமாடியபடி அவளை மேடையின் பின்கோடிக்கு இழுத்துச் செல்கிறாள். இப்போது முழுமையான பகல் வந்துவிட்டது}

கனிகா: நான் உன் உணர்வுகளின் அர்த்தத்திற்கு என்ன பெயர் என்று சொல்லவா?

பிஷ்ணுப்ரியா: அது என்ன பெயராக இருக்கும்?

கனிகா: காதல் (கனிகா பாடுகிறாள்)

என் இதயத்தின் ரகசியத்தைச் சொல்ல நான் துடிக்கிறேன்

     (திரையின் மேல் இருந்து ஒரு பதாகை கீழே விரிகிறது. அதில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "இது ஒருவேளை, காதல் ஆக இருக்கலாம்". இருவரும் சிரிக்கத் தொடங்க, திரை இறங்குகிறது.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

அணங்கு (பகுதி -4) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)