பைரப்பாவின் நேர்காணல் வாசிப்பு

பைரப்பாவின் நேர்காணல் வாசிப்பு 

 எஸ். எல். பைரப்பாவின் இரண்டு நேர்காணல்களைத் தமிழினி தளத்தில் வாசித்தேன். அவரது படைப்புகளை வாசிக்காததனால் சிலவற்றை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும்கூட வாசிப்புக்கு மிக எளிமையாகவே இந்நேர்காணல் இருக்கிறது. அதே வேளையில் எழுத்துப்பிழைகளும் ஆங்காங்கே தென்படுகின்றன.  

     பைரப்பாவின் படைப்புகளைப் பற்றிய உரையாடலைத் தாண்டி இலக்கியம் குறித்த சில பொதுவான பார்வையும் இதில் வெளிப்பட்டுள்ளது. இந்திய இலக்கியம் பற்றிய அவரது கருத்தில் முக்கியமான ஒன்று மொழி மற்றும் மொழியினருக்கு இடையிலான உறவு. அனைத்தும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரும் சூழலே மிகுந்துள்ளது. மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளைத் தவிர்த்து பிற இந்திய மொழிகளிலிருந்து நேரடியாக தமிழுக்கு வரும் நூல்கள் மிகக்குறைவு. வங்காளத்திலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்க்கப்படுகிறதா எனத் தெரியவில்லை. இந்தி, மராத்தி என மொழிபெயர்க்கப்படுபவை கூட பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வருவதாகவே தெரிகிறது. பைரப்பா இந்நிலையை மென்மையாகச் சுட்டிக்காட்டுகிறார். 

     அதே சமயம் ஒரு இந்தியப் புனைவை இந்தியாவிற்குள்ளேயே மொழிபெயர்ப்பதற்கும் இந்தியாவைத் தாண்டிய வேறு மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படுவதற்கும் இடையிலான வேறுபாட்டினை வாசிப்பு மற்றும் விளங்கிக் கொள்ளுதல் என்ற இரண்டு நிலைகளிலிருந்து சொல்கிறார். இந்த நேர்காணலைப் படிக்கும்போது பிற இந்திய மொழிகளிலிருந்து நேரடியாக தமிழுக்கு எத்தனை நேர்காணல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்ற கேள்வி என்னுள் எழுந்தது. தேடிப்பார்க்க வேண்டும்.

     இன்று தடால்புடாலென எழுதுவதும் வெளியிடுவதுமான நிலை உருவாகி வளர்கிறது. சில வருடங்களுக்கு முன் இரவு நேரங்களில் படுக்கைக்குச் சென்றபின் கவித்துவமான பல கற்பனைகள் எனக்குத் தோன்றியிருக்கிறது. அந்த நேரத்தில் தூக்கத்திற்கும் தோன்றும் கற்பனையைப் பதிவு செய்வதற்கும் இடையில் ஒரு போராட்டம் நிகழும். கையருகே பெரும்பாலும் போன் இருக்காது. இருந்தாலும் அதை எடுத்து தட்டச்சு செய்ய மனம் வராது. பேனாவோ, பென்சிலோ, தாளோ எதுவும் அருகில் இருக்காது. பெரும்பாலான நேரங்களில் அதை ஏன் பதிவு செய்ய வேண்டுமென நினைத்து அந்தக் கற்பனையை இயலுமளவு வளர்ப்பதோடு தூங்கிவிடுவேன். மறுநாள் அது என்னவென்று யோசித்துப் பார்த்தாலும் நினைவிற்கு வராது. அதிலிருந்து மாறாக சில விஷயங்கள் பல வாரங்களாக நம்மைத் துரத்தும். பைரப்பா அப்படித் துரத்துவதையே தன் எழுத்தாக்கியுள்ளார். பெரும்பாலான எழுத்தாளர்கள் இதே கருத்தையே வெளிப்படுத்துகின்றனர். 

      பைரப்பா தன்னுடைய படைப்பாக்க முறையை விளக்கியுள்ளார். நான் எழுதி வெளியாகும் கவிதைகள், கட்டுரைகளெல்லாம் உரையாடலுக்குப் பின்பே வெளியாகின்றது. பெரும்பாலானவை தினேஷ் உடனான உரையாடலுக்குப் பின்பே வெளியீட்டுக்காக அனுப்பப்படுகிறது. ஒரு சில நேரங்களில் நெருக்கமான வேறு சிலரும் வாசித்து கருத்துகளைக் கூறியுள்ளனர். திருத்தங்களை மேற்கொள்ளவும் வெளியீட்டிற்கான தகுதியுள்ளதா என்பதை அறியவும் இது அவசியமாக உள்ளது. பைரப்பா இலக்கியத்தைத் தனிநபரின் படைப்பாக்க வெளிப்பாடு என்று சொல்வதையும், தான் ஒரு நூலை வெளியிடுவதற்கு முன் அதனை நண்பர்கள் இருவரிடம் கொடுத்து கருத்து கேட்பேன் என்பதையும் தொடர்புபடுத்தி சில விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம். 

      இயக்கங்கள் குழுக்களால் உருவாகிறது. இலக்கியத்திற்கு இயக்கத்தின் கொள்கைகளுக்கு நியாயம் சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை என்றபோதிலும் அவை குழுக்களால் அல்லது தகுதியான நபர்களால் வாசிக்கப்படுவதும் அதன் தரம் சார்ந்த உரையாடல் எழுவதும் வெளியீட்டிற்கு முன்பே அவசியமாகிறது. எழுதும்போது சில வரிகள் வாசிக்கும் போது நன்றாக இருக்கும். ஆனால் அதற்கான தேவை இருக்காது. அப்படியான நேரங்களில் அந்த வரிகளை நீக்கித்தான் ஆக வேண்டும். அதைச் சேர்ப்பதா நீக்குவதா என்ற குழப்பம் நீடிக்கும் வரை எழுதியவை கிடப்பில் தான் போடப்படும். 

      பைரப்பா முதல் வரைவில் இருந்து திருத்தப்பட்ட இரண்டாம் வரைவு உருவான பின் முதல் வரைவைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பது இந்நேர்காணல் வழியே தெரிகிறது. இது ஒரு நல்ல கற்பிதமாகவே எனக்குப் படுகிறது. தேவையற்ற குழப்பங்களை அதன் மூலம் தவிர்க்கலாம். ஒரு எழுத்தாளரின் நேர்காணலை வாசிப்பதன் வழி இலக்கியம் சார்ந்த மொழி சார்ந்த பயணத்தை மேற்கொள்பவர்கள் புதிதாக சில விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை. அதனடிப்படையில் இந்த நேர்காணல் அவசியம் வாசிக்கப்பட வேண்டியது. வாய்ப்புள்ளோர் வாசியுங்கள்.

https://tamizhini.in/?p=12892

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருப்பு நதி (இரண்டாம் அலை - நான்காம் காட்சி) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

அணங்கு (பகுதி -4) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)