கருப்பு நதி (இரண்டாம் அலை - நான்காம் காட்சி) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)
கருப்பு நதி (இரண்டாம் அலை - நான்காம் காட்சி) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)
இரண்டாம் அலை: நான்காம் காட்சி
(சிங்ஹாசன், நீல வண்ணம் தீட்டிய சுவர்களைக் கொண்ட ஒரு பழைய கான்கிரீட் வீடு. மேடையின் இடதுபுறம், குறுக்காக, வாராண்டா நீளமாகச் செல்கிறது. மூடப்பட்ட இரண்டு கதவுகள் உள்ளன. நதியின் உயரமான மேட்டின் பக்கத்தில் அமைந்துள்ள வீட்டுகுள் சென்று அந்த வராண்டா முடிகிறது. மேட்டின் அந்தப்பக்கம் நதி உள்ளது. ஒரு வளைந்த பனை மரம் நதியை பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. அது அவ்வப்போது காற்றில் அசைந்தவண்ணம் உள்ளது. வலதுபுறம் ஒரு ஓலைக் குடிசை உள்ளது. வீடும் அதன் சுற்றுப்புறமும் ஒரு சிறிய வங்காள கிராமத்தின் தன்மையை கொண்டுள்ளது. வராண்டாவின் இடத்துகோடியில் ஒரு தேய்ந்த சாய்வு நாற்காலி உள்ளது. சிறிது தள்ளி ஒரு சிறிய அரிக்கன் விளக்கு எரிந்துகொண்டுள்ளது. விளக்கின் அருகே வராண்டா தரையில் ஒரு முதிய, முஸ்லிம் வேலைக்காரன் உட்கார்ந்திருக்கிறான். வங்கதேசத்தில் நிலமற்ற முஸ்லிம் வேலைக்காரரை மகினாதார் என்று அழைப்பர். அவன் தூங்கி வழிந்துகொண்டிருக்கிறான். நதியின் மறுமுனையில் சூரியன் மறைந்துகொண்டிருக்க, நிலம் கருஞ்சிவப்பாக காட்சியளிக்கிறது. அந்தியின் நிழல்கள் வீட்டின் மீது நீளுகின்றன. அந்தக் காட்சி, அந்தி; இரவின் வருகையோடு ஒன்றுகலக்கும் பாங்கில் அமைந்துள்ளது. தன்னை சால்வையால் போர்த்தியிருக்கும் மகினாதார் சத்தமாக கொட்டாவி விட்டவாறு, பக்கவாட்டில் புரண்டு படுக்கிறான். இடதுபுறம் இருக்கும் கதவு வழியாக குழப்பமான முகபாவத்துடன் கிழிந்த லுங்கியணிந்த உயரமான முதிய மனிதர் ஒருவர் வருகிறார். மகினாதார் அருகில் நின்றுகொண்டு அவர் கத்துகிறார்:)
முதியவர்: என்ன இதெல்லாம்? ஏய் பக்ரா, பக்கிருதி ராஸ்கல்!
பக்கிரி: (காதைச் சொறிந்தவாறு) என்ன?
முதியவர்: (துணுக்குற்றவராய்) நீ தான் அதையெல்லாம் எடுத்தியா?
பக்கிரி: ஆமா. (மறுபுறம் புரண்டு புரண்டுகொள்கிறான்)
முதியவர்: ஏன்?
பக்கிரி: எதை நான் எடுத்தேன்?
முதியவர்: புத்தகங்களை. அதை நான் அலமாரில வச்சிருந்தேன்.
பக்கிரி: இல்ல. நான் எடுக்கல.
முதியவர்: எப்போ பாத்தாலும் தூங்குறது தான் வேலை. புத்தகங்கள் எங்க போச்சுன்னு தெரியாம அல்லாடிக்கிட்டு இருக்கேன் நான்.
பக்கிரி: கத்தாதீங்க.
முதியவர்: என்ன சொன்ன நீ?
பக்கிரி: கத்தாதீங்கன்னு சொன்னேன். சாயந்தர நேரத்துல இப்படி கத்துறது சரியல்ல. (கொட்டாவி விடுகிறான்)
முதியவர்: இங்க குடும்ப தலைவர் யாரு? நீயா, இல்லை நானா?
பக்கிரி: எனக்கு நிஜமா தெரியாது.
முதியவர்: இவனை பாரேன்! ஏய், எந்த உலகத்துல இருக்குற நீ? ஏய்?
('என்ன, என்ன இங்க சத்தம்' எனக் கூறியவாறு வலதுபுறம் இருந்து சிறிய தேகமுடைய ஒல்லியான பெண்மணி ஒருத்தி மெதுவாக நடந்து வருகிறாள். வாயில் வெற்றிலையை மென்றவண்ணம் இருக்கிறாள் அவள். அந்த மாலை நேர மங்கலான ஒளியில், சுற்றிலும் ஒரு மெலிய இன்பமயமான உணர்வை பரப்பியவண்ணம் வரும் அவளை பார்க்கும்போது சாதாரண மனுஷி போலவன்றி பிரபஞ்சத்தின் தாய்மையை அவள் பிரதிபலிப்பதை ஒருவரால் உணரமுடியும். ஆனால் அவள் பேசும்போது ஒருவித கண்டிப்புடன் பேசுவாள். அவள் தான் மோஷினின் தாய். அந்த முதியவர், மோஷினின் தந்தை.)
தாய்: என்னை ஏன் கூப்பிட்டுட்டு இருக்கீங்க?
தந்தை: பக்ரா, அலமாரில இருந்த என்னோட புத்தகங்களை எடுத்து எங்கயோ வச்சுட்டான்.
பக்கிரி: யாரு சொன்னா நான் அதை எடுத்தேன்னு? (அவன் எழுந்து நின்று) இங்க பாருங்க பௌஜான் (அண்ணி), படே மியான் (பெரிய ஐயா) நேத்துல இருந்து என்னைப் புடுச்சு கத்திக்கிட்டே இருக்காரு.
தந்தை: இவன் தான் உறுதியா என்னோட புத்தகங்களை எடுத்து எங்கயோ வச்சிருக்கணும். ரொம்ப மோசம்!
பக்கிரி: இதை ஒன்னும் பெரிய விஷயமா ஆக்காதீங்க.
தாய்: (கணவனைப் பார்த்து) உங்க அதட்டலை நிறுத்துங்க. நீங்க தான அந்த புத்தகங்கள எல்லாம் ரொம்ப முக்கியமானதுனு சொல்லி நேத்து அதை டிரங்கு பெட்டியில எடுத்து வச்சீங்க?
தந்தை: ஓ! (எனக் கூறி, அவர் சங்கடமாக உணர்கிறார்)
பக்கிரி: இப்போல்லாம், தான் என்ன செய்யுறோம்னு இவருக்கே தெரிய மாட்டேங்குது.
தந்தை: போதும்! இது பிக்ராபூர் வரலாறோட மூன்றாம் பாகம்.
பக்கிரி: அதுக்கு குங்குமம் வச்சு கொண்டு போய் அலமாரில வைங்க.
தந்தை: போதும் நிறுத்துன்னு சொன்னேன்!
தாய்: போய் உடை மாத்திட்டு வாங்க. ஜாபா உங்களை கிழிஞ்ச லுங்கியில பாத்தா அப்புறம் கத்தப் போறா.
தந்தை: நான் மறந்தே போயிட்டேன். ஜாபா இன்னைக்கு வீட்டுக்கு வரா இல்ல. நீராவிப் படகுல வந்துகிட்டு இருப்பா.
தாய்: உங்களுக்கு இப்பவாவது ஞாபகம் வந்துச்சே. இந்த அளவுக்காச்சும் கடவுள் உதவுராறே. நன்றி சொல்லுங்க அதுக்கு.
பக்கிரி: அண்ணி, இவரை விவாகரத்து பண்ணிடுங்க.
தாய்: (இருவரையும் பார்த்து) என்னை ஆளை விடுங்க. (கணவனைப் பார்த்து) நீங்க எங்க போறீங்க?
தந்தை: நான் போறேன், சரியா?. இந்த குடும்பத்த கட்டி மாரடிக்குறதுக்கு, எதுக்கும் தளராத உறுதி இருந்தாதான் முடியும்.
(அவர் செல்கிறார்)
தாய்: பக்ரா?
பக்கிரி: என்ன, சொல்லுங்க?
தாய்: படகு வந்துடுச்சு. விசில் சத்தம் கேட்கலயா உனக்கு?
பக்கிரி: என்னோட காதுல விழல.
தாய்: முன்ன எல்லாம், சமரேஷ்பூர் கலங்கரை விளக்கம் கிட்ட வரும்போதே விசில் அடிச்சுடுவாங்க. (நதிக்கரை மேட்டில் ஏறுகிறார்). நதி ரொம்பவே அழகா இருக்கு. நான் இதை தினம் தினம் பாக்குறேன். இருந்தாலும் ஒவ்வொரு முறை பார்க்கும்போது எனக்குப் புதுசா தெரியுது.
பக்கிரி: என்ன இருந்தாலும், இது உங்க மாமனார் இடம் இல்லையா. நீங்க இந்த வீட்டுக்கு மருமகளா வந்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கு. உங்க தலையை காவி நிற துணையால மூடியிருந்தீங்க.
தாய்: நீ உணர்ச்சி வெள்ளத்துல மூழ்கி கிடக்க. போ இப்போ.
பக்கிரி: எங்க?
தாய்: படகுத்துறைக்கு போ. அங்க உன்னை மட்டும் காணலேனா ஜாபா அப்புறம் கோவக்காரி ஆயிடுவா.
பக்கிரி: நீங்க அவளைப் பார்க்க ஆசையா காத்துக்கிட்டு இருக்கீங்க. ஆனா அவ நாட்டை விழித்தெழச் செய்யுறேன்னு தன்னோட கூச்சத்தையும், புர்காவையும் துறந்துட்டு டாக்கா தெருக்கள்ல பேரணிகள்ல பங்கெடுத்துகிட்டு இருக்கா.
தாய்: அவ என்ன செய்யணுமோ செய்யட்டும். நீ இப்போ போ.
பக்கிரி: சரி, நான் இப்பவே கிளம்புறேன்.
(அவன் கீழே உட்காருகிறான். தந்தை, உடை மாற்றிக்கொண்டு உள்ளே வருகிறார்.)
தாய்: ம்ம், எழுந்திரு.
பக்கிரி: நான் போறேன். நான் போறேன். படகுத்துறைக்கு ரொம்ப தூரம் போகணும். நடக்கவே தோண மாட்டேங்குறது.
தந்தை: தினமும் நீ அப்படி எவ்வளவு வேலை தான் செய்யுற சொல்லு?
தாய்: (பக்கிரியிடம்) நீ இப்போ கிளம்பு. படகு வந்து சேர்ந்திடுச்சு.
(போக மனமில்லாமல் இருக்கும் பக்கிரியை அவள் பிடித்து வீட்டின் வெளியே தள்ளி, கதவை சடாரென சாத்துகிறாள். பின் மீண்டும் வராண்டாவுக்கு நடந்துவருகிறாள். அவளது கணவன் (தந்தை) சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.)
தந்தை: இப்தாருக்கு எல்லாம் தயார். நாம எப்போ வேணாலும் தொடங்கலாம் தானே?
தாய்: ரொம்ப பேராசைபடாதீங்க. முதல்ல நம்ம பொண்ணு வந்துடட்டும்.
(அவள் நதிக்கரையை நோக்கி நடக்கிறாள்)
தந்தை: அந்த பக்ரா சரியான முட்டாள். இன்னைக்கு பள்ளிக்கூடத்துல நான் ஒரு நல்ல புத்தகத்தை வாசிச்சுகிட்டு இருந்தேன். அந்தப் புத்தகத்தோட பேரு 'மாயுக்'. ரக்ஹால்தாஸ் பாபு எழுதுனது. உனக்குத் தெரியுமா, சுமார் முன்னூறு வருஷம் முன்னாடி, போர்த்துகீசிய காலனியாதிக்கவாதிங்க, வங்காளத்துல இருக்குற கிராமங்கள் மேல தாக்குதல் நடத்த சிட்டகாங் பக்கத்துல இருந்த சின்ன தீவுகளை பயன்படுத்துனாங்க.
தாய்: உங்க வெட்டிப் பேச்சை நிறுத்துங்க.
தந்தை: வெட்டிப் பேச்சா?
தாய்: பின்ன, வேற என்ன?
தந்தை: சரி, நீ அப்படி என்னத்தைப் பாத்துகிட்டு இருக்க?
தாய்: நதியோட பாதையை இருள் முழுசா மறைச்சிடுச்சு. ஆனா கொஞ்ச நேரம் முன்னாடி ரொம்ப அழகா இருந்துச்சு.
தந்தை: பாதை எப்படி இருந்தாலும், நம்ம பொண்ணு வந்து சேர்ந்துடுவா.
தாய்: எனக்குப் பாதையே வேண்டாம். நான் அந்த அழகை மட்டும் தான் பார்க்குறேன்.
தந்தை: இந்த இருட்டுலயுமா?
தாய்: அந்த அழகு, இருள் உட்பட எதையும் தாண்டி தெரியக்கூடியதுன்னு உங்களுக்கு தோணலையா?
தந்தை: உண்மைதான்.
தாய்: அந்த சைத்தான் பக்ரா கொஞ்சம் நேரம் முன்னாடி என்ன சொன்னான்னு தெரியுமா?, அவன் அந்த நாளை நினைவுபடுத்திட்டு இருந்தான்!
தந்தை: நீ முழு அலங்காரத்தோட அழகா இங்க வந்து சேர்ந்த அந்த நாளை நான் எப்படி மறக்க முடியும்?
தாய்: அது பொழுது சாஞ்சத்துக்கு அப்புறம். அப்போ நதி முழுமையா இருளால சூழப்பட்டிருந்துச்சு.
தந்தை: பாத்தியா, உனக்கும் அந்த நாள் இன்னும் ஞாபகம் இருக்கு.
(அவர் மெதுவாகத் தனது மனைவி அருகில் செல்கிறார். இருவரும் சில கணம் நதியை பார்த்தவண்ணம் அசையாது நிற்கின்றனர். தூரத்தில் இருந்து ஒரு பெண்ணின் பாடல் காற்றில் மிதந்து வருகிறது. பாட்டின் வரிகள் தெளிவாக கேட்கவில்லை. தாய் தனது கணவன் மீது கை வைக்கிறாள்)
தாய்: இன்னைக்கு நான் ஏன் இவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு எனக்கே தெரியல.
தந்தை: உன்னை எப்பவும் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சதே இல்ல. அது என்ன மெட்டு?
தாய்: சான்பலாவுல இருக்குற பெண்கள், தங்களுக்கு நெருக்கமானவங்களுக்காக வேண்டிக்கிட்டு வாழை மட்டைல செஞ்ச சின்ன சின்ன படகுகள்ல மண்விளக்கை வச்சு நதியில மிதக்க விடுறாங்க. அவங்க நதியோட ஒப்பந்தம் செஞ்சுக்கிறாங்க.
தந்தை: மோஷின்....
தாய்: என்ன?
தந்தை: மோஷின் எப்பவும் பாடுற அந்த பாட்டு உனக்கு ஞாபகம் இருக்கா? பைரவ்பஜார் போற வழியில அவன் கேட்டானே அந்த பாட்டு 'நதியில் என்னால் கரையைக் காண முடியவில்லை?' ரொம்ப இருட்டான நேரத்துல அவன் அதைக் கேட்டான். உண்மைதான், அந்த இருட்டுல யாராலயும் கரையைப் பார்க்க முடியாது.
தாய்: என்னோட மகனும் அந்த இருட்டுல காணாம போயிட்டான்.
தந்தை: ஏம்மா (அன்பாக) .. உனக்கு இன்னும் அந்தக் கனவு வருதா?
தாய்: எந்தக் கனவு?
தந்தை: வீட்டை வெளிச்சமாக்க நம்ம மகன் திரும்பி வர அந்த கனவு?
தாய்: இல்லைங்க, அவன் திரும்பி வரபோறது இல்ல. எனக்கு இப்போ எல்லாம் வேற மாதிரியான கனவுகள் வருது.
தந்தை: எந்த மாதிரி?
தாய்: மோஷின் ஒரு பையனை பற்றி பேசிக்கிட்டே இருப்பானே, அவனை பற்றி ன கனவு.
தந்தை: அந்த, கொல்கத்தாவைச் சேர்ந்த பையனா?
தாய்: ஆமா. அவன்தான். எனக்கு என்னமோ ஒருநாள் இல்ல ஒருநாள் அந்த பையன் நம்ம வீட்டுக்கு வருவான்னு தோணுது. அவன் தோட்டத்துல நின்னுகிட்டு, 'அம்மா, நான் வந்துட்டேன்!'ன்னு என்னைக் கூப்பிடுவான்னு தோணுது.
தந்தை: நீ கண் கலங்குறியா?
தாய்: அவன் ஏன் வரமாட்டேங்குறான்?
தந்தை: ஒருவேளை, அவன்கிட்ட நம்ம விலாசம் இல்லாம இருக்கலாம்.
தாய்: அவன் கிட்ட நம்ம விலாசம் இருக்குன்னு மோஷின் சொன்னானே. நம்மளால தான் அவனைக் கண்டுபிடிக்க முடியல.
தந்தை: நீ எங்க போற?
தாய்: நான் மோஷினோட அறையைச் சுத்தம் செய்யப் போறேன். ஜாபா வந்த உடனே, அவள் அண்ணன் அறைக்குள்ள தான் முதல்ல போவா.
(தாய், வலதுபுறம் உள்ள ஓலைக் குடிசைக்கு செல்ல எத்தனிக்கிறாள்.)
தந்தை: இப்பவே போகாத. நாளைல இருந்து தைக்குறது, அலங்காரம் பண்ணுறதுனு அவளோட நீ, வேலைல மும்முரமாகிடுவ.
தாய்: அந்தப் பொண்ணு வீட்டு வேலை செய்வான்னு நீங்க நினைக்குறீங்களா? தேர்தலுக்கு முன்னாடி அவ தன்னோட கல்லூரி தோழர்களோட வந்தப்போ, எல்லாரும் சேர்ந்து 'ஐக்கிய முன்னணி' முழக்கங்களைத் தொண்டை கிழிய கத்திட்டு இருந்தது ஞாபகம் இருக்கா?. அவ இந்த வீட்டுப் பொண்ணு, எல்லை மீறியிருக்க கூடாது.
தந்தை: சரி, வா போவோம்.
தாய்: ஏன்?
தந்தை: நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.
தாய்: இப்பவே சொல்லியாக வேண்டிய அளவு அவ்வளவு முக்கியமான விஷயமா?
தந்தை: ஜாபா வர்றதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட இதை பேசணும்னு நினைக்கேன்.
தாய்: சரி, வாங்க போவோம்.
(அவர்கள் நதிமேட்டில் இருந்து வராண்டாவுக்கு வருகின்றனர். தந்தை சேரில் உட்கார, தாய் கீழே உட்காருகிறாள்)
தந்தை: நம்ம பொண்ணு ஒருத்தி தான் நமக்கு இருக்குற ஒரே நம்பிக்கை.
தாய்: ஏன் இப்படி பேசுறீங்க?
தந்தை: ஜாபா, புரட்சி தொடங்குறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு விஷயம் சொன்னா.
தாய்: அப்படி என்ன சொன்னா அவ?
தந்தை: அவ இந்த நாட்டுக்கு உழைக்கப் போறேன்னும், அரசியல்ல நுழையப் போறதாவும் சொன்னா. அவ கட்சில சேர்ந்துட்டா.
தாய்: ஓ கடவுளே!
தந்தை: ஒருவேளை தேவை ஏற்பட்டா, அவ இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.
தாய்: நான் என்னோட மகனை இழந்துட்டேன். இப்போ என்னோட மகளையும் இழந்துடுவேன் போல இருக்கு.
தந்தை: மனசை விட்றாத ம்மா!
தாய்: ஆனா நம்மளும் இப்படியெல்லாம் செஞ்சவங்க தானே? டாக்கால அந்த மாணவர்கள் கொலை செய்யப்பட்டப்போ நாங்க புர்காவை துறந்து தெருக்கள் இறங்கி போராடுனோமே? சந்தையில இருந்து எண்ணெய்யும், உப்பும் காணாம போனப்போ, கண்டனப் பேரணிகள் நடத்தினோம் தானே? மௌலானாவுக்கு பாஸ்ஹானி வந்தப்போ, கூட்டத்தை திரட்டுனோம் தானே?
தந்தை: எனக்கு தெரியும் ம்மா.
தாய்: அப்புறம் ஏன் இன்னைக்கு புதுசா இதையெல்லாம் சொல்றீங்க?
தந்தை: எதை?
தாய்: எல்லாம் எதிர்பார்த்து காத்திருக்குற பிப்ரவரி 21 அன்னைக்கு ஹக், அதிகாரத்துக்கு வர இந்த சமயத்துல அவ கட்சில சேருறதை பற்றி ஏன் என்கிட்ட சொல்றீங்க?
தந்தை: இந்த விஷயத்துல எல்லாரும் கவனிக்கவேண்டிய இன்னொரு பிரச்சனையும் இருக்கு. ஹக் சாஹிபை கராச்சிக்கு அழைச்சுட்டு போற முயற்சிகள் நடந்துகிட்டு இருக்கு. ரேடியோவுல ஆதாம்ஜி மில்-லோட பேச்சுக்களை நீ கேட்கலையா?
தாய்: என்னங்க.. நீங்க இந்த நாட்டைப் புரிஞ்சு வச்சிருக்கீங்க. ஆனா அதோட தாயைப் புரிஞ்சிக்கல. என் வார்த்தையை குறிச்சி வச்சுக்கோங்க.
தந்தை: சரி போதும். இதுக்கு மேல பேசுனா நீ அழுதுருவ போல இருக்கு.
தாய்: நான் தனியா போய் அழுகுறேன். நீங்களும் என்கிட்ட இருந்து அழுகையை மறைக்குறீங்க தான. ஆனா ஒரு விஷயம், நான் என்னோட மகள் போற பாதையில என்னைக்கும் குறுக்க நிக்க மாட்டேன்.
(புறக்கதவு லேசாக தட்டப்படும் சத்தம் கேட்கிறது. இருவரும் அதை கவனிக்கின்றனர். தாயின் முகத்தில் பெரியதொரு புன்னகை மலர்கிறது. கதவை நோக்கி அவள் ஓடுகிறாள்)
தாய்: நீ எனக்கு தலைநகரத்துல இருந்து என்ன வாங்கிகிட்டு வந்தன்னு சொல்லுற வரைக்கும் நான் கதவை திறக்க மாட்டேன். (இன்னொரு முறை கதவு தட்டப்படுகிறது) சரி சரி..
(எனக் கூறியவாறு, அவள் கதவைத் திறக்க, சாகரும், சங்கரும் அங்கு நிற்கின்றனர். அவர்கள் இருவரும் கையில் தலா ஒரு பையை வைத்துள்ளனர். உணர்ச்சிபொங்க நிற்கும் இருவரும் அமைதியின்றியும் சற்று தயக்கத்துடனும் காணப்படுகின்றனர். சங்கர், சாகரை ஒருவித நடுக்கத்துடன் பார்க்கிறான். தன் முன்னே இருக்கும் பெண்மணியைப் பார்த்து சாகர் என்ன செய்வதென தெரியாது அப்படியே நிற்கிறான். சங்கர் முன்னே அடியெடுத்து வைக்கிறான். தாயும் துணுக்குற்று பின்னே அடியெடுத்து வைக்கிறாள்.)
சங்கர்: இது ஜனப் தஸ்லிம் மியானோட வீடு தான?
தாய்: (தன் சேலையின் முந்தியை எடுத்து தன் தலையில் போர்த்த முயன்றவாறு) ஆமா, இதுதான்.
சங்கர்: நாங்க கொல்கத்தாவுல இருந்து வந்திருக்கோம்.
தாய்: ஓ!
சாகர்: (முன்னே அடியெடுத்து வைத்தவாறு) தஸ்லிம் மியான் சாஹிப் வீட்டுல இருக்காரா?
தந்தை: இதோ இங்க தான் இருக்கேன்.
சங்கர்: அப்போ நீங்க தான் அம்மாவா இருக்கனும்.
(அவளின் காலைத் தொட்டு வணங்குகிறான்)
தாய்: நான்? அம்மா!
தந்தை: நீங்க என்ன விஷயமா வந்திருக்கீங்க?
சங்கர்: நாங்க கொல்கத்தாவுல இருந்து ரயில்ல வந்தோம். சாயந்தரம் நாலு மணிக்கு சோனாய்கண்டி ஸ்டேஷன்ல இறங்குனோம். அதுக்கப்புறம் நதியோரமாவே நடந்து இங்க வந்தோம். நாங்க வரப்பவே இருட்டாயிடுச்சு.
தந்தை: சரி, உள்ள வாங்க.
(அவர்கள் வீட்டினுள் நுழைகின்றனர். இருவரும் சோர்வுடன் இருக்கின்றனர். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த நேரம், தாயும் தன் உடையை சீர்படுத்திக்கொண்டாள். அவள், இவர்கள் இருவரையும் பார்த்த வண்ணம் இருந்தாள். சாகர், பேசுவதற்கு துடித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவனால் ஏனோ பேசமுடியவில்லை. சங்கர், மெதுவாக தனக்கே உரிய உற்சாகத்தை மீட்டெடுத்துக்கொண்டான்)
சங்கர்: அப்போ நீங்க தான் அப்பா.
(சங்கர், அவரின் கால்களைத் தொட்டு வணங்குகிறான்)
தந்தை: (சற்று அசௌகர்யத்துடன்) நல்லா இரு மகனே. உன் வாழ்க்கை சந்தோஷத்தால நிறையட்டும். மன்னிச்சுடு, உன்னை உன் வயசுக்கு ஏத்தமாதிரி நான் கூப்பிடல.
சங்கர்: நீங்க அப்படி கூப்பிட வேண்டியது இல்ல. நாங்களும் மோஷினும் ஒரே வயசுக்காரங்க தான்.
தாய்: மோஷின்!
தந்தை: மோஷின்!
சங்கர்: ஆமா, மோஷின். உங்க மகன்.
தாய்: (ஆர்வத்துடன் முன்னே வந்து) யாரு ப்பா நீங்க? யாரு நீங்க?
சாகர்: என் பேரு சாகர். இவன் பேரு...
தாய்: சாகர்? (தன் கணவனைப் பார்த்து) நம்ம வீட்டுக்கு இன்னைக்கு யார் வந்திருக்காங்கன்னு பார்த்தீங்களா?
தந்தை: ஒருவழியா, நம்ம விருப்பம் நிறைவேறிடுச்சு. சாகர்....
தாய்: சாகர்! உனக்காகத் தான் நான் ரொம்ப காலமா காத்துகிட்டு இருந்தேன்.
(அவள் தன் கைகளைக் கனிவுடன் குவிக்கிறாள்)
சாகர்: என்ன நடக்குதுன்னு என்னால புரிஞ்சிக்க முடியல.
சங்கர்: எங்களைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?
தந்தை: 1946ல மோஷின் கொல்கத்தாவுல இருந்து திரும்பி வந்தப்போ, சாகரை பற்றி யும், ஒரு பிரச்சனைல இருந்து அவன் தன்னை எப்படி காப்பாத்துனான்-ங்குறத பற்றி யும் மோஷின் சொல்லிகிட்டே இருந்தான்.
சங்கர்: சரிதான்.
சாகர்: ஆனா மோஷின் எப்படி என்னைப் பற்றி பேச முடியும்? நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நினைக்குறேன்.
தாய்: நான் எப்பவும் தப்பு பண்றதே இல்ல. உன்னோட அம்மா இப்போ இல்லைனு கேள்விப்பட்டேன். உனக்கு என்னைப் பார்த்தா எதுவும் நினைக்க தோணுதா?
சாகர்: சங்கர்!
சங்கர்: விஷயம் கொஞ்சம் சிக்கலான மாதிரி தெரியுது.
தாய்: (சங்கரைக் கனிவுடன் பிடித்தவாறு) நான் ஒரு மகனை இழந்தேன். ஆனா இப்போ எனக்கு ரெண்டு மகன்கள் கிடைசிருக்காங்க. உன் பேரு என்ன?
சங்கர்: சங்கர்.
சாகர்: ஆனா....
தாய்: ரொம்ப சந்தோஷம்! எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல (தன் கைகளைத் தட்டுகிறாள்). இன்னைக்கு என் வீடு நிறைஞ்சு இருக்கு.
தந்தை: என்ன வேணா பண்ணு, ஆனா அழ மட்டும் செஞ்சுடாத. தரையில உட்கார்ந்து அழ மட்டும் ஆரம்பிச்சுடாத. சரி, நீ போயி, இவங்க குளிச்சு தயாராக ஏற்பாடுகளைப் பண்ணு. பக்ரா இப்போ இங்க இல்ல.
தாய்: சரி, நான் இப்ப போயாகணும்.
(அவள் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு திரும்பி, அவர்களின் கன்னங்களில் முத்தமிடுகிறாள். பின்னர் வீட்டின் உட்புறத்துக்கு செல்கிறாள். சங்கர்; சாகர் மறுத்தபோதும், அவர்களின் பைகளை வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டு ஒரு புன்னகையுடன் அவள் செல்கிறாள்)
சாகர்: ஆனா...
தந்தை: உட்டாருங்க முதல்ல. ஓ! இருக்கைகள் எல்லாம் வேற அறையில இருக்கு. நான் போய் எடுத்துட்டு வரேன்.
(அவர், எழுந்து செல்ல முற்பட, சங்கர்...)
சங்கர்: நான் எடுத்துட்டு வரேன். (எனக் கூறி உள்ளே செல்கிறான்)
சாகர்: எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. என்னோட பேரை தெளிவா கேட்டீங்க தானே நீங்க.
தந்தை: ஆமா, சாகர்.
சாகர்: மோஷினும் நானும் கொல்கத்தாவுல என்ன சூழ்நிலைல சந்திச்சுக்கிட்டோம்னு உங்களுக்கு தெரியுமா?
தந்தை: எனக்குத் தெரியும். மோஷின் சொல்லியிருக்கான்.
சாகர்: என்ன மாதிரியான சூழ்நிலை அது, அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு - எல்லாமே சொன்னானா?
தந்தை: மகனே, மோஷின் என்கிட்ட எல்லாத்தையும் விவரமா சொல்லியிருக்கான்.
சாகர்: எனக்கு இன்னும் அதிக குழப்பமா இருக்கு.
(சாகர், இன்னதென இல்லாமல் வெற்றிடமொன்றை வெறித்துப்பார்த்தபடி உணர்ச்சியற்றுள்ளான். சங்கர், கையில் இரண்டு முக்காலிகள் மற்றும் ஒரு புத்தகத்துடன் வருகிறான்)
சங்கர்: அறை முழுக்க புத்தகங்களா சிதறிக் கிடந்துச்சு. அதுல ஒரு புத்தகத்தைத் தேடி எடுத்தேன்.
தந்தை: நல்லது. இப்போ உக்காருங்க. (இருவரும் முக்காலியில் உட்காருகின்றனர்) நீ அந்த அறையில இருந்து என்ன புத்தகத்தை எடுத்திருக்க?
சங்கர்: இது இந்திய தொல்லியல் ஆய்வகத்தோட சஞ்சிகை.
தந்தை: இந்த சஞ்சிகைல ஹரப்பா நாகரிகத்தோட ஆய்வறிக்கை இருக்கு. இந்தியாவோட பழங்கால நாகரிகத்தோட கதை அது. உனக்கு தொல்பொருளியல்ல ஆர்வம் இருக்கா?
சங்கர்: ஆமா, நான் கார்டன் சைல்டு எழுதுன சில புத்தகங்களை வாசிச்சிருக்கேன்.
தந்தை: அப்போ சரி, அந்த சஞ்சிகையை இப்படிக் கொடு. இது வெறும் அறிமுகம் தான். நான் உனக்கு இதை பற்றி ன சுருக்கமான பார்வையை தர்றேன். உனக்கு அதைப் படிக்க நல்லா இருக்கும்.
(அவர் சஞ்சிகையுடன் உள்ளே செல்கிறார். சாகர் சட்டென எழுந்துகொண்டு, தோட்டத்தை நோக்கி விரைந்து நடக்கிறான். சங்கரும் சடாரென எழுந்து அவனுடன் நடக்கிறான்.)
சாகர்: எனக்கு அப்படியே மூச்சடைக்குற மாதிரி இருக்கு!
சங்கர்: தவறுகள்னால ஏற்பட்ட நகைச்சுவை இது.
சாகர்: நகைச்சுவையா?
சங்கர்: ஆமா, நகைச்சுவை. நீ பெரிய நாடகத்தை உருவாக்க விரும்புன. இப்போ உன் வாழ்க்கை முழுக்கவும் அது நிறைச்சிருக்கு. இதைப் பார்த்து எனக்கு சிரிக்கத் தான் தோணுது.
சாகர்: எனக்கு சிரிக்கத் தோணல. என்னால நடக்குற எதையுமே புரிஞ்சிக்க முடியல.
சங்கர்: கொஞ்சம் வேடிக்கையான விஷயம் தான் இது. ஆனா ஒன்னும் பிரச்சனை இல்ல.
சாகர்: இங்க என்ன நடந்துகிட்டு இருக்கு?
சங்கர்: ஒன்னும் தப்பா நடக்கல. உனக்கு மோஷின் சொன்னது நினைவிருக்கா?, 1946ல கொல்கத்தாவுல இன்னொரு சாகரைப் பார்த்ததா சொன்னானே?
சாகர்: ஆமா, என்கிட்டயும் அவன் சொல்லியிருக்கான்.
சங்கர்: உங்க மூணு பேருக்கு நடுவுல ஒரு வினோத தொடர்பு இருக்கு. அந்த சாகர், மோஷினை சாவுல இருந்து காப்பாத்துனான்.
சாகர்: அடக் கடவுளே! அவங்க என்னை அந்த சாகர்னு நினைச்சு பேசிகிட்டு இருக்காங்களா?
சங்கர்: விளையாடாத, உனக்கு இன்னுமா அது புரியல.
(தந்தை, கையில் புத்தகத்துடன் வருகிறார்.)
தந்தை: இதோ இருக்கு. இந்தப் புத்தகம் சின்னது தான். வேதகால இந்தியா வரைக்கும் இந்த புத்தகத்துல இருக்கும். அதோட முடிஞ்சிடும்.
சங்கர்: இது எல்லாத்தை பற்றி யும் தெரிஞ்சிக்க நான் விரும்புறேன்.
தந்தை: ஆனா அறிவைச் சேகரிக்குறதுல உனக்கு இதே ஈடுபாடு எப்பவும் இருக்காது.
சங்கர்: (கவனிக்காதவனாய்) ஏதாவது சொன்னீங்களா?
தந்தை: இதைப் பற்றி எல்லாம் தெரிஞ்சிக்க, நீ இதே ஆர்வத்தோட எப்பவும் இருக்க மாட்டேன்னு சொன்னேன். இப்போ எல்லாம் என்னை யாரு பார்த்தாலும், எப்படியாவது தப்பிச்சு போறதுக்கு தான் வழி தேடுறாங்க. அதையும் மீறி என் கிட்ட பிடிபடுறவங்களுக்கு அறிவூட்ட முயற்சி பண்ணுறேன்.
சங்கர்: அப்போ, நீங்களும் நானும் ஒரே வேலையை தான் பாக்குறோம்.
தந்தை: நீயும் என்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடப் போறியா?
சங்கர்: ஆமா. அதுவும் இன்னைக்கு ராத்திரியே. ராத்திரி 10 மணிக்கு இங்க இருந்து ரயில் இருக்குதுன்னு சொன்னாங்க.
தந்தை: என் அன்பு பையா, உன்னால கடவுளோட விருப்பத்தை கணிக்கவே முடியாது. ஏற்கனவே அவனோட நாம இரண்டற கலந்திருக்கோம். இது ரம்ஜான் மாதம். பெருநாள் நெருங்கிடுச்சு. அப்படியிருக்கும்போது இன்னைக்கு ராத்திரியே கிளம்பிட முடியும்னு நினைக்குறியா?
சாகர்: நாங்க இன்னைக்கு கிளம்பியாகனும். அது இருக்கட்டும். 1946ல மோஷின் என்னைப் பற்றி சொல்லியிருக்கானா?
தந்தை: ஆமா.
சகார்: இங்க பாருங்க.....
சங்கர்: (சாகரை இடைமறித்து) உங்க சேகரிப்புல நிறைய புத்தகங்கள் இருக்கு. ஒரு கிராமத்துல இவ்வளவு புத்தகங்களை நான் பார்ப்பேன்னு நினைச்சு கூட பார்த்தது இல்ல.
தந்தை: இந்தப் புத்தகங்கள் தான் எனக்கிருக்குற ஒரே சொத்து.
(தாய் வருகிறாள்)
தாய்: சாகர்; சங்கர், துண்டு தயாரா இருக்கு. போய், குளிச்சிட்டு வாங்க.
சங்கர்: வழி எங்க இருக்கு?, வா, சாகர்.
(வர விருப்பமில்லாமல் இருக்கும் சாகரை இழுத்துக்கொண்டு அவன் செல்கிறான்)
தாய்: என்னோட மனசு சந்தோஷத்துல நிறைஞ்சிருக்கு.
தாய்: என் அன்பு பொண்டாட்டி, இந்த உலகத்துல எந்த வலியும் வீணா போறது இல்ல. அது என்னைக்காவது ஒரு நாள் ஏதாவது ஒரு வகையில சந்தோஷமா திரும்பி வரும்.
தாய்: உண்மை தான். ரொம்ப வினோதமான பாதைகள்ல பயணிச்சு அது திரும்பி வந்திருக்கு. நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேன்ல, இன்னைக்கு மகிழ்ச்சிகரமான நாளா இருக்கும்னு? ஆனா அவங்க வந்த வேகத்துல சீக்கிரம் திரும்பி போயிடுவாங்களோன்னு இருக்கு.
தந்தை: அவங்க இன்னைக்கு ராத்திரி டாக்காவுக்கு ரயில் ஏறுற திட்டத்தோட இருக்காங்க.
தாய்: நான் அதை ஞாபகம் வச்சுக்குறேன்.
(சாகரும், சங்கரும் வருகின்றனர்)
தந்தை: இப்போ சாப்பாடு எதுவும் தயாரா இல்ல. நீங்க ரம்ஜான் மாதத்துல ஒரு முஸ்லிமோட வீட்டுக்கு வந்திருக்கீங்க. நாம சேர்ந்து இப்தார் சாப்பிடலாம்.
சங்கர்: ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க கவலைப்பட வேண்டாம். நாங்க வர வழியிலேயே டீக் கடையில சாப்பிட்டு தான் வந்தோம்.
தாய்: இன்னைக்கு என்னோட பொண்ணு ஊருக்கு வரா. நீங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சாப்பிடணும் சரியா? நான் போய் சாப்பாடு எடுத்து வைக்குறேன்.
(அவள் செல்கிறாள்)
தந்தை: அப்போ இன்னைக்கு ராத்திரி நீங்க கிளம்பப் போறீங்க!
சாகர்: ஆமா, ஐயா.
தந்தை: சரி, அப்படினா, உங்க கிட்ட கொஞ்சம் பேசியாகணும்.
சங்கர்: நாம இப்பவே பேசலாமே.
தந்தை: நீங்க எங்க போகப் போறீங்க?
சங்கர்: டாக்கா.
தந்தை: உங்களுக்கு அங்க யாராவது இருக்காங்களா?
சங்கர்: ஆமா. எங்க சகோதரியும், மச்சானும் இருக்காங்க.
தந்தை: உங்க மச்சான் பேரு என்ன?
சங்கர்: கிதீஷ் சன்யால். அவர் வக்கீலா இருக்காரு. ஜென்டாரியாவுல வசிக்குறாரு.
தந்தை: இரும்பு பாலத்துக்கு பக்கத்துலயா?
சங்கர்: ஆமா. சர்பத்குஞ்ச்-ல.
தந்தை: சரி.
சங்கர்: உங்களுக்கு அவரைத் தெரியுமா?
தந்தை: எனக்கு தனிப்பட்ட முறையில தெரியாது. ஆனா, அவரோட சகோதரன் என்னோட மகள் படிக்குற கல்லூரியில தான் படிக்குறான். தேர்தல் சமயத்துல அவன் இங்க வந்தான்.
சங்கர்: உங்க மகள் இன்னைக்கு வரா தானே?
தந்தை: ஆமா. இப்போ வந்துடுவா.
சாகர்: (நிற்குமிடத்திலிருந்து நகர்ந்து சென்று) அந்தப் பக்கம் நதி இருக்குதா?
தந்தை: ஆமா. பத்மா நதி.
சாகர்: இந்த வீடு ரொம்ப ரொம்ப வினோதமான இடத்துல அமைஞ்சிருக்கு. நதிக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு. அந்த நதி ரொம்ப அகலமானது, சரியா?
தந்தை: ஆமா.
சாகர்: மறுபக்கத்தைப் பார்க்க முடியாத அளவுக்கு ரொம்ப அகலமான நதி.
தந்தை: ஆமா, கிட்டத்தட்ட அப்படித் தான்.
சாகர்: இந்த வீடும் உண்மையிலேயே வித்யாசமான இடத்துல தான் இருக்கு. அங்க தண்ணீருல மிதந்துகிட்டு இருக்குற விளக்குகள்லாம் என்னது?
தந்தை: இந்து பெண்கள் தங்கள் விருப்பம் நிறைவேற வேண்டி வாழைமர பட்டையில செஞ்ச சின்ன படகுகள்ல அதை மிதக்க விட்டிருக்காங்க.
சாகர்: தூரத்துல இருந்து பாட்டும் கேட்குது.
தந்தை: அந்தப் பெண்கள் தான், தங்களோட விருப்பத்தை சொல்லி பாட்டு பாடிகிட்டு இருக்காங்க.
சாகர்: சங்கர், நான் வர வழியில உன்கிட்ட சொன்னேனே, அவங்க குரலை ஏத்தி இறக்கி பாடுற மெட்டு, ஐரோப்பிய பாரம்பரிய இசையில வர யோடலிங் மாதிரியே இருக்குதுன்னு.
தந்தை: நீ பாடுவியா?
சாகர்: ரொம்ப கொஞ்சம்.
தந்தை: நீ எப்படி, சங்கர்?
சங்கர்: என்னை விட்டுடுங்க. நான் பாடுறது இல்ல. ஆனா நீங்க புகழ்பெற்ற பக்வாஜ் (தவில்) வித்வான் ஆச்சே.
தந்தை: அது ஒரு காலத்துல. நான் தவில் கலைஞர் மட்டும் தான், புகழ்பெற்ற வித்வான் எல்லாம் இல்ல.
சங்கர்: இப்போ ஏன் நீங்க வாசிக்குறது இல்ல?
தந்தை: எனக்கு அதை வாசிக்குற மனநிலை வரல இப்போ. அதுமட்டுமில்லாம எனக்கு இப்போ எந்த வாய்ப்பும் கிடைக்குறது இல்ல, அது தேவையும் இல்ல.
சாகர்: அந்தப் பக்கம் என்ன இருக்கு, ஐயா?
தந்தை: நெல் வயல்கள்.
சாகர்: அந்த அறையில தான் நீங்க நெல் சேமிச்சு வைப்பீங்களா?
தந்தை: இல்ல, இல்ல. அந்த அறையை மோஷின் பயன்படுத்திட்டு இருந்தான். என்னைக்காவது உதவும்னு, அவங்க அம்மா இன்னமும் அந்த அறையை தினம் தினம் சுத்தப்படுத்தி வச்சிக்கிட்டு இருக்கா.
சாகர்: (திடீரென முன்னே வருகிறான்) ஐயா, நான் உங்கட்ட ஒன்னு சொல்லணும்....
சங்கர்: (சாகரை இடைமறித்து), நீங்க ஏதோ பேசணும்னு சொன்னீங்களே, அதை ஆரம்பிப்போமா?
தந்தை: ஓ, கண்டிப்பா. உள்ள போய் பேசுவோம். வா, சாகர்.
சங்கர்: இல்லை. அவன் இங்கேயே சுத்தி பாத்துகிட்டு இருக்கட்டும். அவனுக்கு அறிவை அடையுறதுக்கான தாகம் அவ்ளோ ஒன்னும் கிடையாது. (சாகரிடம்) சாகர், நீ கேக்காமயே உனக்கு கிடைச்சிருக்குற சொர்க்கத்தை அழிச்சுக்கிறதுல ஒரு லாபமும் இல்ல. நல்லா யோசிச்சு பார்த்த பிறகு நான் ஒரு விஷயத்தைக் கண்டுபிடிச்சேன். எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம், 'பரவாயில்ல'ன்னு நினைக்குறதுதான். 'எல்லாம் பரவாயில்ல' சரியா.
(சங்கரும் தந்தையும் செல்கின்றனர். சாகர் சிறிது நேரம் அமைதியாக நிற்கிறான். பின்னர் மெதுவாக அந்த ஓலைக் குடிசையை நோக்கி சென்று, அதன் சிறிய ஜன்னலை திறக்கிறான். பின்னர் லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டு குடிசையுனுள் நுழைகிறான். கையை பின்னே கட்டிக்கொண்டு, தாய் வலதுபுறம் இருந்து மெதுவாக வருகிறார். சாகரை தேடுகிறாள். அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவன் அருகே செல்கிறாள்.)
தாய்: பையா!
சாகர்: (திடுக்கிட்டவனாய்) யாரு அங்க? ஓ!
தாய்: (சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, தன் சேலை முந்தானையில் சுற்றி மறைத்து வைத்திருந்த கிண்ணத்தை வெளியே எடுக்கிறாள்) இந்தா சாப்பிடு.
சாகர்: என்னது இது?
சாகர்: கெட்டியான பாலாடை.
சாகர்: என்னைப் பாலாடையை சாப்பிட சொல்றீங்களா?
தாய்: ஏன் சாப்பிடணும்?.. சரிதான்.. உன்னை நீயே பாரு. அன்றாட நகரத்து வாழ்க்கை உன்னை கத்தாழை மாதிரி மாத்திடுச்சு. இதை சாப்பிடு.
(அவள் பாதங்களைத் தூக்கி சற்று எக்கி நின்று, சாகருக்கு அந்தச் சிறிய கிண்ணத்தில் இருந்து பாலாடைகளை எடுத்து ஊட்டுகிறாள். சாகர் ஒவ்வொன்றாக விழுங்கியவண்ணம் இருக்கிறான். அவன் முகத்தை தன் சேலை முந்தானையால் அவள் துடைத்துவிடுகிறாள்.)
தாய்: நல்லா இருக்குல? எங்க பசுமாடு கருப்பா இருக்கும். கருப்பு பசுக்கள் தர பால் ரொம்ப தித்திப்பா இருக்கும். போன மாசம் தான் அந்த பசு ஒரு குட்டி போட்டுச்சு. ஆனா அது உடம்பு சரியில்லாம இருக்கு. அதுக்கு மஞ்சகாமாலையா இல்ல வேற எதுவுமானு என்னால கண்டுபிடிக்க முடியல.
சாகர்: ஓ!
தாய்: வா, ரெண்டு பேரும், நதிக்கரை மேட்டுல போய் உட்காரலாம். நீ வரியா?
சாகர்: உங்க பொண்ணு வருவா தானே இப்போ?
தாய்: அட, ஆமா! அப்போ இங்கேயே உட்காரலாம். (அவர்கள் அமர்கின்றனர். தாய், சாகரின் தலைமுடியை தனது விரல்களால் கோதிவிடுகிறாள்) இங்க தென்றல் ரொம்ப இதமா வீசுது.
சாகர்: ஆமா. தூக்கம் வர வைக்குது அது. ஆனா, தூங்கவும் முடியல.
தாய்: ஆமா.
சாகர்: அம்மா!
தாய்: என்னப்பா?
சாகர்: நான் ஒன்னு சொல்லட்டுமா?
தாய்: சொல்லு.
சாகர்: நீங்க மனசு நோக மாட்டீங்கன்னு எனக்கு சத்தியம் பண்ணும்.
தாய்: நான் ஏற்கனவே நிறைய வலியை அனுபவிச்சுட்டேன். இந்த நாடு அமைதியோட தேவையை உணர்ந்து இப்போ தான் அதை நோக்கி வர மாதிரி இருக்கு. அப்படி நடந்துச்சுனா, என்னோட வாழ்க்கை முழுமை அடைஞ்சிடும். உனக்கு தெரியுமா, என்னோட நாட்டு மக்கள் பல தடைகளை ஒவ்வொன்னா தாண்டி வந்துகிட்டு இருக்காங்க. இப்போ எங்களுக்கு அமைதியும், நிம்மதியும் தான் வேணும்.
சாகர்: உங்க நாட்டு மேல உங்களுக்கு அவ்ளோ ஆழமான அக்கறை இருக்கா?
தாய்: ஆமா. எனக்கு இருக்கு.
சாகர்: ஆனா, நீங்க கடந்த 10 வருசத்துல சிங்ஹாசனை விட்டு வெளிய போனதே இல்லை தான.
தாய்: 10 வருஷத்துக்கு மேலேயே இருக்கும். என்னோட மொத்த வாழ்க்கையிலயும் நான் மொத்தமே 3 தடைவை தான் சிங்ஹாசனை விட்டு வெளிய போயிருக்கேன்.
சாகர்: இருந்தும்…
தாய்: என் பைத்தியக்காரப் பையா, உலகத்தைப் பார்க்க ஒருத்தர் தொலை தூரங்களுக்குப் பயணிக்கனும்னு அவசியம் இல்ல. உன் ஆன்மாவோட ஆழத்துக்கு போய் பார்த்தீன்னா, அங்க நீ உலகத்தைக் கண்டுபிடிப்ப. நீ ஒரு கவிதையைக் கேட்க விரும்புறயா?
சாகர்: கண்டிப்பா.
தாய்: 'பசுக்களின் நிறம் எதுவாகினும் அதன் பாலின் நிறம் வெண்மை தான். நான் இந்த உலகைக் காண்கிறேன், நாம் ஒரு தாய் மக்கள் என உணர்கிறேன்.'
சாகர்: அம்மா! உங்க கிட்ட ஒரு விஷயத்தை என்னால சொல்லாம இருக்க முடியல.
தாய்: அப்போ சொல்லிடு.
சாகர்: அம்மா, மோஷின் சொன்ன சாகர்....
(திடீரென எங்கிருந்தோ அங்கு தோன்றிய சங்கர்,)
சங்கர்: அம்மா! பிரமாதம்! அதுக்குள்ள தொடங்கியாச்சா?
தாய்: என்ன?
சங்கர்: உங்க அன்பை அவன் மேல மட்டும் தனியா பொழிய ஆரம்பிச்சுடீங்க. நான் மட்டும் மூணாவது மனுஷன் ஆகிட்டேனா?
தாய்: இல்ல. இல்ல. நீயும் என்னோட முத்தான மகன் தான் பா.
சங்கர்: நீங்க என்னத்தை மறைச்சு வச்சிருக்கீங்க? அந்தக் கிண்ணம் எதுக்காக?
தாய்: கிண்ணமா, அது எங்க இருக்கு?
சங்கர்:(அவள் அருகில் சென்று) எடுங்க அதை வெளிய. நான் பார்த்துட்டேன். வெளிய எடுங்க. ஓ அப்படியா விஷயம். பால்ல செய்யுற ஏதோ இனிப்பு பலகாரம் மாதிரி இருக்கு.
தாய்: பெருசா ஒன்னும் இல்ல. கொஞ்சம் கெட்டியான பாலாடை கட்டிகள் அவ்ளோதான்.
சங்கர்: நம்பவே முடியல. இதை ஏத்துக்கவே முடியாது. நான் இந்த வீட்டை விட்டு கிளம்புறேன்.
தாய்: இதோ, என்னோட இன்னொரு பைத்தியக்கார பையன் இவன். கத்தாத ப்பா. அவரு மட்டும் வந்தாருன்னா, அப்புறம் பிரச்சனைதான். அப்புறம் அவரும் கேட்பாரு. பால், அவரு வயித்துக்கு ஒத்துக்காதுன்னு தெரிஞ்சும் கேட்பாரு.
சங்கர்: அப்போ போங்க வேகமா, எனக்கும் கொஞ்சம் எடுத்துட்டு வாங்க.
தாய்: சரி, நான் கொண்டு வரேன்.
(கணவன் வந்துவிடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் அவள் அங்கிருந்து செல்கிறாள். சாகர் நதியின் பக்கம் திரும்புகிறான். சங்கர் அவனருகே செல்கிறான்.)
சங்கர்: அப்போ உன்னால இன்னும் அந்த விஷயத்தை சொல்ல முடியல. உன்னைத் தனியா விட்டுட்டு போற ஒவ்வொரு முறையும் எனக்கு ரொம்ப பதற்றமா இருக்கு.
சாகர்: இது எல்லாம் கனவு மாதிரி இருக்கு. ஒரு நாள் முன்னாடி நாம எங்க இருந்தோம், இப்போ எங்க இருக்கோம்.
சங்கர்: நீ ஏதோ மந்திரத்தால கட்டுண்டவன் மாதிரி ஓடிக்கிட்டு இருக்க. இந்த மனநிலையோட உன்னால எப்படி எல்லாத்தையும் தெளிவா பார்க்க முடியும்.
சாகர்: அப்புறம் அந்த சூரிய அஸ்தமனம்? நதிக்கரையோரங்கள்ல நீண்ட நெடிய பரப்புகளும், அதோட முடிச்சுகள் போல அங்கங்க இருக்குற தொலைதூர கிராமங்களும் எனக்கு ஞாபகம் வருது. அந்த பரப்புல, துருத்தி நின்ன ஒன்னு ரெண்டு பனை மரம், அப்புறம் ரயில் புகைபோக்கில இருந்து வந்த புகை, வானத்துல ஏற்படுத்துன கரும்புகை மேகங்கள் எல்லாம் என் ஞாபகத்துக்கு வருது. என்னோட மனசு இப்போ அமைதியாவே இல்ல.
சங்கர்: நடந்த எல்லாத்துக்கு அப்புறம், நாம இப்படி ஒரு வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கோம். இது மாதிரி ஒரு வீடு, இவங்கள மாதிரி ஒரு அம்மா, அப்பா.. இவங்க மகளும் இவங்கள மாதிரி தான் இருப்பான்னு என்னால நிச்சயமா சொல்ல முடியும்.
சாகர்: (திடீரென) சங்கர்! நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். நான் வெடிச்சு செத்துடுவேன் போல இருக்கு இப்போ எனக்கு.
சங்கர்: உன் புத்தியை பேதலிக்க விட்டுடாத.
சாகர்: எனக்கு புத்தி இருக்கோ இல்லையோ, அவங்க என் மேல இப்போ வச்சிருக்க அபிப்ராயம் நல்லதுனாலும் அது தப்பானது, அவங்ககிட்ட நான் தெளிவுபடுத்தியே ஆகணும்.
சங்கர்: இங்க பாரு. சில பிரச்சனைகள் நம்ம மூளையை முழுமையா ஆக்கிரமிச்சிடும். சாதராண உணர்வுகளை கூட நிறைவேத்தியே ஆக வேண்டிய கடைமைகளா அது மாத்திடும். ஆனா அந்த கடமைகள் போலியானதுனு அப்புறம் தான் தெரியும், மனுஷங்க இப்போ....
சாகர்: அவங்க கிட்ட நான் உண்மையைச் சொல்ல நினைக்குறதுக்கும் அது தான் காரணம். எனக்கும், அவங்க அன்புலயும், அக்கறைலயும் மூழ்கிப்போகணும்னு தான் ஆசை. ஒரு வேலை நான் அவங்க கிட்ட உண்மையை சொல்லலேனா, நடந்த எல்லா விஷயமும் ஏத்துக்க முடியாத ஒரு அபத்த நகைச்சுவையா தான் மிஞ்சும்.
சங்கர்: சாகர், நீ ஆபத்தை விலைக்கு வாங்குற!
சாகர்: என்ன நடந்தாலும் சரி. நான் அதுல இருந்து தூய்மையானவனா மீண்டெழுவேன். உன்னால என்னைத் தடுக்க முடியாது.
(தாய் வருகிறாள்)
தாய்: இந்தா என்னோட பைத்தியக்கார பையா, இதை சாப்பிடு. நிறைய மிச்சம் இல்ல.
சங்கர்: கொடுங்க இப்படி. (கிண்ணத்தை வாங்கிக்கொண்டு) அம்மா, நாங்க இன்னைக்கு புறப்பட்டாகணும்.
தாய்: என்ன சொல்ற நீ?
சாகர்: ஆமா. அம்மா. நீங்க அனுமதிச்சீங்கன்னா, நாங்க போய்ட்டு இன்னொரு முறை வரோம். ஆனா இன்னைக்கு நாங்க கிளம்பியே ஆகணும்.
தாய்: நான் உங்களைப் போக விடமாட்டேன்.
சாகர்: அம்மா, ஐயாவையும் இங்க கூப்பிடுறீங்களா. நான் அவர் கிட்ட கொஞ்சம் பேசணும்.
சங்கர்: அம்மா, சாகருக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு. அவன் அர்த்தமில்லாம பேசுறான்.
சாகர்: என்னால இதுக்கு மேலயும் அடக்கி வச்சிருக்க முடியாது.
(தந்தை வருகிறார்)
சங்கர்: ஐயா; அம்மா, சாகர் நிறைய விஷயங்கள் சொல்லப் போறான். ஆனா அது எல்லாமே பொய்!
(சாகர், தன் தோளில் இருந்த சங்கரின் கையைத் தட்டிவிட்டு முன்னே வருகிறான். அந்நேரம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. தந்தையும் தாயும், ஒருவித அவசரகதியில் கதவருகே செல்கின்றனர். ஜாபாவின் குரல் பின்னணியில் கேட்கிறது.)
ஜாபா: (பின்னணியில்) அப்பா... அம்மா, கதவைத் திறங்க.
(தாயின் முகத்தில் பெரியதொரு புன்னகை மலர்கிறது. அவள் கதவருகே ஓடிச் சென்று அதைத் திறக்கிறாள். ஜாபா சடாரென உள்ளே வருகிறாள். தன் தந்தையை கட்டியணைக்க முற்பட்ட அவள் திடீரென நிற்கிறாள். ஜாபாவைத் தொடர்ந்து தலையில் டிரங்கு பெட்டியை சுமந்தவாறு பக்கிரி உள்ளே வருகிறான். அவனும், புதியவர்களைப் பார்த்தவுடன் அப்படியே நிற்கிறான். ஜாபா வியப்புடன் சாகரையும், சங்கரையும் பார்க்கிறாள். அவள் பார்க்க சாதாரணமான அடக்கமான பெண்ணாகத் தோன்றுகிறாள். விவரமான பெண்ணாகவும் தெரிகிறாள். சாகரும், சங்கரும் பேச்சின்றி நிற்கின்றனர்)
பக்கிரி: என்ன விஷயம்?
தாய்: (தணிந்த குரலில்) ஜாபா, இவங்க யாருன்னு உன்னால கணிக்க முடியுதா?
தந்தை: சங்கர், இது எங்க மகள். பேரு, குல்ஷான் பானு. இப்போ டாக்கால தங்கி இருக்கா. போன வருஷம் தான் பிஏ முடிச்சா. உன்னை மாதிரி இடதுசாரி அரசியல்ல ஈடுபட்டுட்டு இருக்கா, ஐக்கிய முன்னணி கட்சியில பிரதான உறுப்பினரா இருக்கா.
சங்கர்: பெகும்குல்... (என அவள் பெயரை உசரிக்க முயல, அவனைத் திருத்தி,)
ஜாபா: ....ஷான். குல்ஷான் பானு.
தந்தை: உனக்கு இவங்களைத் தெரியுதா? இவன் சங்கர், அவன் சாகர்.
ஜாபா: யாரு?
தந்தை: சாகர்.
ஜாபா: எந்த சாகர்? கொல்கத்தாவைச் சேர்ந்தவரா?
தந்தை: ஆமா, இவன் தான். சங்கர் இவனோட சகோதரன்.
ஜாபா: (அவர்களருகில் சென்று) என்னை ஜாபான்னு கூப்பிடலாம். அம்மா, அப்பா அப்படித் தான் கூப்பிடுவாங்க. என்னோட அண்ணனும் அதே பேர்ல தான் என்னைக் கூப்பிடுவான்.
சங்கர்: ஜாபா?
ஜாபா: சொல்லுங்க, அண்ணா.
(சங்கர் திடீரென அமைதியடைகிறான். பக்கிரி அவன் தலையில் இருந்த பெட்டியைத் தரையில் இறக்கி வைத்துவிட்டு, அதன் மேல் அமர்கிறான்)
தந்தை: இவங்க இன்னைக்கு ராத்திரி கிளம்ப திட்டமிட்டிருக்காங்க.
சங்கர்: ஆமா, நாங்க கிளம்பியே ஆகணும்.
தாய்: அதை மறந்துடுங்க.
சங்கர்: இல்லை. நாங்க இன்னைக்கு ராத்திரி கிளம்புறதுனால என்ன வந்துட போகுது.
ஜாபா: சங்கர், கிளம்புறதுக்கு நீ தான் ரொம்ப ஆர்வமா இருக்குற மாதிரி இருக்கு.
சங்கர்: நான் இல்ல. சாகர் தான்.
தாய்: மறந்துடுங்க!. ஜாபா, தயார் ஆகிட்டு வா இப்தாருக்கு.
(தாய் செல்கிறாள்)
தந்தை: எல்லாரும், சீக்கிரம் தயார் ஆகுங்க!
(தந்தையும் செல்கிறார்)
ஜாபா: சங்கர் அண்ணா, நான் இப்போ போறேன்.
சங்கர்: சரி, குல்.... ஜாபா.
(ஜாபா செல்கிறாள்)
சங்கர்: உனக்கு என்ன தோணுது, சாகர்?
சாகர்: ஜமாய் பாபு என்ன நினைப்பாரு?
சங்கர்: ஜமாய் பாபுவுக்கு கடிதம் போட்டு இங்க வர சொல்லலாமானு யோசிச்சிட்டு இருக்கேன். இல்ல. வேணாம். இன்னைக்கு ராத்திரியே சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிடலாம். அதுதான் சரியா இருக்கும்.
சாகர்: ஓடிப் போகுறதா?
சங்கர்: நீ நடந்துக்குறத பாத்தா, பின்ன வேற என்ன பண்ண முடியும்?
சாகர்: நாம கிளம்புறப்போ, நான் அவங்ககிட்ட அதை சொல்றேன்.
சங்கர்: எப்போ?
சாகர்: நாம கிளம்புற அன்னைக்கு.
சங்கர்: இப்போ தான் கொஞ்சம் வழிக்கு வந்த மாதிரி தெரியுது....
பக்கிரி: (அமர்ந்திருந்தபடி) என் பேரு பக்கிருதி. பக்கிருதி ஷேக். பெரிய ஐயா விலை கொடுத்து வாங்குன விஸ்வாசமான அடிமை நான்.
சாகர்: உண்மையாவா?
பக்கிரி: ஆமா. நான் மோஷினை சின்ன ஐயான்னு கூப்பிடுவேன். உங்களையும் இனி அப்படியே கூப்பிடுறேன்.
சங்கர்: என்னை எப்படிக் கூப்பிடுவ?
பக்கிரி: உங்களை குட்டி ஐயான்னு கூப்பிடுறேன்.
(அவன் எழுந்து, டிரங்கு பெட்டியை எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்குச் செல்கிறான்)
சாகர்: (நதிக்கரை மேட்டில் ஏறிக்கொண்டு, பேச்சை தொடர்கிறான்) இந்த வீடு ரொம்ப வினோதமான இடத்துல அமைஞ்சிருக்கு. நதிக்கு மேலேயே இருக்கு. நான் மோஷினை ரொம்ப காலம் முன்னாடி சந்திச்சேன். இன்னைக்கு அவன் சகோதரியை சந்திச்சிருக்கேன். (சங்கர், சாகர் அருகில் வந்து நிற்கிறான்) இந்து பெண்கள் பாடுற அந்த பாட்டோட சத்தம் அதிகமாகிட்டே வருது. வினோதமான நாட்டுப்புற பாட்டுக்கு மெட்டு அமைச்சு பல பெண்கள் ஒன்னு சேர்ந்து பாடுறாங்க.
(துரித கதியில் அடியெடுத்து வைத்து வராண்டாவை கடந்து சென்ற ஜாபா, இவர்களை பார்த்து நடையை தளர்த்துகிறாள். அவளின் தந்தையும், அவ்வண்ணமே வராண்டாவை கடக்கும்போது அவளுக்கு பின்னால் நின்றுவிட்டதை அவள் கவனிக்கவில்லை)
சங்கர்: நாட்டுப்புறப் பாடல்களோட மெட்டு...
தாய்: (பின்னணியில்) மகனே, மகனே. என் அன்பு இரண்டாவது மகனே, சீக்கிரம் இங்க வா.
சாகர்: 'எனது நாடு மிகவும் வலியது.. மிகவும் அமைதியானது!'
(பின்னே ஜாபாவும், தந்தையும் நின்றிருப்பதை சாகர் திரும்பிப் பார்க்கிறான். அவன் கூச்சப்பட்டு நிற்க, சங்கர் மேட்டில் இருந்து இறங்கி வருகிறான்.)
தந்தை: ஜாபா!
ஜாபா: திடீர்னு நான் படகுல படுத்துகிட்டு விநோத கனவுகளை காணுற மாதிரி உணர்ந்தேன். அதனால தான்...
தந்தை: உன் அண்ணன் அறைக்கு இப்போ போகாத.
(தந்தை மெதுவாக அங்கிருந்து நடந்து வெளியேறுகிறார்.)
ஜாபா: இல்ல!
(ஜாபா நதிக்கரை மேட்டில் ஏறி நிற்கிறாள். பத்மா நதியின் ஓட்டம் அதிகரிக்கிறது. தூரத்தில் இருந்து பாடிக்கொண்டிருக்கும் பெண்களின் குரல்கள் கேட்
கின்றன. அவள் முகம் மனநிறைவுடன் பிரகாசிக்கிறது.)
சங்கர்: 'எனது நாடு. எத்தனை சக்தி வாய்ந்தது! எத்தனை சக்தி வாய்ந்தது!'
(அவன் திரும்பி ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் செல்கிறான். பத்மா நதி நீர் கட்டுக்கடங்காமல் பாய்ந்துகொண்டிருக்கிறது.)
—--------------------------------------------- திரை —-----------------------------------------


கருத்துகள்
கருத்துரையிடுக