Zoombies புரட்சி - அழகுராஜ் ராமமூர்த்தி

Zoombies புரட்சி - அழகுராஜ் ராமமூர்த்தி

     த.வெ.க வின் மூலம் அமையப்போகும் அரசின் கீழ் வாழ்வதைவிட குடியரசுத் தலைவர் ஆட்சியில் வாழ்வது பரவாயில்லை என்ற எண்ணமே நேற்றிரவில் இருந்து மேலோங்குகிறது. தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கொடுக்கும் அவமரியாதையாகக் கூட இதனை நீங்கள் கருதலாம். அதைப்பற்றி எனக்கு எவ்வித கவலையும் இல்லை. சமீப நாட்களில் செக்காவின் கருத்தாக ஒன்று நாட்டு நலனில் அக்கறையுடையவர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.

    "தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?” என புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்காவிடம் கேட்டபோது இப்படிக் கூறுகிறார்.

    தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்.

    சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.

    அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்.

     எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளை எல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்து இருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்." என்கிறார் செகாவ். இதன்படி தமிழ்நாடு தோற்றது என்பதே என் நிலைப்பாடு. பெருந்திரளால் ஏற்படும் தலைகீழ் மாற்றம் புரட்சி என அழைக்கப்படுவதால் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவைப் புரட்சி என நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது வளர்ச்சிக்குரிய புரட்சி அல்ல. Zoombies விளையாட்டில் வரும் எண்ணிக்கையில் அடங்காத zoombies மூலம் ஏற்பட்ட புரட்சி. இப்புரட்சியின் தலைமை சர்க்கஸில் மக்களைக் கவர வேடமிட்டு இருக்கும் ஒரு கோமாளி.

 இதனால் தான் குடியரசுத் தலைவர் ஆட்சி வரவேண்டும் அல்லது மறுதேர்தல் வர வேண்டும் என்கிற எண்ணத்தை வெளிப்படுத்துகிறேன். குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் யார் ஆள்வார்கள் என்பது தெரிந்தும் இப்படியொரு கருத்தை முன்வைப்பதற்கு பல்வேறு காரணங்கள் என்னிடம் உண்டு.

    தற்போது நூறு இடங்களுக்கும் மேலாக வென்று, தேர்வு செய்யப்பட்ட பெரும்பான்மை கட்சியும் அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் எனக்கு எப்போதும் கடுமையான ஒவ்வாமைக்கு உரியவர்களாகவே இப்போது வரை தென்படுகின்றனர். அந்தத் தலைமையின் கீழான ஆட்சியில் வாழ்வது உள்ளத்தினுள் அருவருப்பை ஏற்படுத்துகிறது. த.வெ.க. வில் இருக்கும் அருண் ராஜ் போன்ற சிலரைத் தவிர மீதியிருக்கும் அனைவரும் குறிப்பாக ஆதவ் அர்ஜூனா போன்றவர்களைப் பார்க்கும் போது இவர்களால் அழிவு ஏற்படப்போகிறது என்பதே எண்ணமாக இருந்தது. புதிய கட்சிக்கு வாக்களித்த பலர் இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி அதற்கான மாற்றத்திற்கு வாக்களித்தோம் என்கிறார்கள். இதைவிட பெரிய அபத்தம் வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நண்பர் தினேஷ் உடன் நிகழ்ந்த பேச்சில் நடந்த இரண்டு கருத்துகளை இந்த இடத்தில் மேற்கோள் காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும். பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருக்கிறது. தி.மு.க சில தவறுகளை இந்த ஐந்தாண்டு ஆட்சியில் செய்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் கொள்கை மற்றும் அதன் திட்டங்கள் மீது உள்ளபடியே நமக்கு மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன. இப்படியான சூழலில் குறிப்பாக அ.தி.மு.க அழிவுப் பாதையில் செல்லும் சூழலில் அதற்கு மாற்றாக திராவிட கருத்தியலை முன்வைக்கும் ஒரு புதிய கட்சிக்கு வாக்களிக்கலாம் தானே என்று கேட்டான். அவனுடைய கருத்தின் சில பகுதிகளில் நான் ஒத்துப்போனேன். அதில் இங்கு இருக்கும் இரண்டு திராவிடக் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி மீதான அதிருப்தி என்பதில் நான் ஒத்துப் போகிறேன். அதே சமயம் இந்தத் திராவிட கட்சிகள் நான் கல்வி கற்பதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களித்துள்ளன என்பதற்கான நன்றியுணர்வு எப்போதும் உண்டு. நன்றியுணர்வுக்கும் நாட்டு நலனின் அக்கறைக்கும் இடையிலான போராட்டம் தேர்தலுக்கு முந்தைய இரண்டு நாட்கள் வரை இருந்தது. மாற்றத்திற்காக வாக்களித்தேன் என்பவர்கள் என்ன மாற்றத்திற்காக வாக்களித்தார்கள் என்பதற்கு நான் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு காரணத்தை இதுவரை சொல்லவில்லை. பா.ஜ.க. வளராமல் தடுக்க முடியும் என்ற தினேஷ் சொன்ன ஒரு காரணம் என்னை மிகவும் கவர்ந்தது. ஆனாலும் மாற்று சக்தி என்பதற்கு தகுதியானவர்கள் த.வெ.கவினர் இல்லை என்பது என் வாதம். அவர்கள் மிகப்பெரிய ஏமாற்று சக்தி என்பதை தமிழ்நாடு உணர்ந்துகொள்ளக்கூடிய சம்பவங்கள் இனி நிகழும்.

      மாற்றம் என்பது வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வதாகவே இதுவரையிலான தமிழ்நாடு அரசியலில் இருந்திருக்கிறது. பெண்களை மணமுடித்து வைப்பதற்கு கீழ் நடுத்தர குடும்பங்கள் படும் பாடுகளை உணர்ந்து தாலிக்குத் தங்கம் போன்ற அறிவிப்பை ஜெயலலிதா அறிவித்தார். பின்னர் வந்த ஸ்டாலின் இளம்பெண்களைக் குறிவைத்து அத்திட்டத்தில் ஏற்படுத்திய மாற்றமே புதுமைப்பெண் திட்டம். கல்வி கற்கும் பெண்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம். இதன்மூலம் கல்வியின் பக்கம் பெண்கள் படைதிரண்டு வந்தார்கள் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். ஆனால் படிக்க விருப்பமிருந்தும் இயலாத சூழலில் இருக்கும் பெண்களும் தன்னுடைய பட்டப் படிப்பு முடிவடைவதற்கு முன்பே திருமணம் மூலம் கல்வியை இழந்தவர்களும் கல்வியைத் தொடர்வதற்கான சூழலை இத்திட்டம் ஏற்படுத்தித் தந்தது. இப்போது மறுபடியும் திருமணத்திற்கு பட்டுச்சேலை, தாலிக்குத் தங்கம் போன்ற அருமையான மாற்றத்திற்குத் தான் கண்ணை மூடிக்கொண்டு வாக்கு செலுத்தியுள்ளார்கள் என்பது எவ்வளவு கேவலம். வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு மாதமாதம் பணம் கொடுக்கும் திட்டத்தை தமிழ்நாட்டிலும் பிற இந்திய மாநிலங்களிலும் சில கட்சிகள் வாக்குறுதிகளாக தந்துள்ளனர். பணம் முக்கியமில்லை. வேலை வாய்ப்பு தான் முக்கியம் என்றெல்லாம் கொந்தளித்து பேசியவர்கள் எல்லாம் நான் முதல்வன் போன்ற திட்டங்கள் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் செயல்பாட்டில் இருந்ததை அறிந்திருப்பார்களா என்பது கேள்வியாக எழுகிறது. ஐந்தாண்டு ஆட்சியை இவர்களிடம் கொடுத்தால் அடுத்து ஐம்பதாண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு நேராகத் திருப்ப முடியாது என்பது என் அவதானிப்பு.


     வாக்குறுதிகளைப் பார்த்து வாக்களிக்க பலர் தவறிவிட்டார்கள். துளியும் அரசியல் அறிவில்லாமல் மேடையில் வசனம் பேசுபவர்களை நம்பி வாதத்திற்கு வரும் பலரைக் கடித்துக் குதற வேண்டியதாயிற்று. பின் ஒரு கட்டத்தில் சுய அறிவின்றி முரட்டு முட்டு கொடுப்பவர்களிடம் பேசுவது நேர விரயம் என்பது உணரப்பட்டது. இந்தத் திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழ்நாட்டில் கல்வி பரவலடைதற்கு காரணமாக இருந்திருப்பது உண்மை என்றாலும் அவர்கள் வெறுமனே புத்தகத்தைப் படித்து தேர்ச்சி பெறுபவர்களாக மட்டுமே மாற்றி வைத்திருக்கிறது என்பது அதே அளவு உண்மை. இட ஒதுக்கீடு பற்றிய புரிதலற்ற ஆசிரியர்களை ஆசிரியர்கள் என சொல்வதைவிட பெரிய அவலம் ஏதும் இருக்க முடியுமா? ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை இட ஒதுக்கீடு வாரியாக குறைத்ததை முன்வைத்ததன் மூலம் இந்தச் சாதியைச் சேர்ந்தவன் என்று தெரிகிறதே. அது எனக்குத் தேவையா என்று சிலர் வாதிட்டனர். அந்த காலாவாதியான வாதத்திற்கு விசிக தலைவர் திருமாவளவனும் ஏனைய பல பத்திரிகையாளர்களும் திராவிட கட்சியைச் சேர்ந்தவர்களுமென எத்தனையோ பேர் களச் சூழலை அடிப்படையாக வைத்து விரிவான விளக்கம் அளித்த பின்னும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தரும் ஒருவர் வாதிடுவது எதிரிலிருப்பவர் எவரென பாராமல் கடுமையாக நடந்துகொள்வதற்குரிய அத்தனை சாத்தியங்களையும் உண்டாக்குகிறது. அப்படிப்பட்டவர்கள் பொதுப்பிரிவுக்கு ஏற்ற மதிப்பெண்ணை அடைந்து தேர்ச்சி பெறுவதை எவர் தடுக்கப் போகிறார்கள். இன்னும் இந்தியாவில் சாதி அடிப்படையிலான பிரிவினை இருக்கிறது. அதற்கு தமிழ்நாடு விதிவிலக்கு அல்ல. அதேசமயம் தமிழ்நாடு பிற வட இந்திய மாநிலங்களில் இருந்து மாற்றம் கண்டிருக்கிறது என்பதும் உண்மை. 

     வாச்சாத்தி வன்கொடுமையில் தொடர்புடைய செங்கோட்டையனையும் கள்ள லாட்டரி சீட்டு விற்பனையால் அறியப்படும் ஆதவ் அர்ஜூனாவையும் உடன் வைத்துக் கொண்டு தூய சக்தி எனச் சொல்வது தற்குறித் தனம் இல்லாமல் வேறென்ன. தற்குறிகள் என அவர்களை அழைக்கக்கூடாது என நான் மதிக்கும் பல பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர். எனக்கென்னமோ தற்குறி என்பதை விட பொருத்தமான வேறு பெயர் வேறு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்தால் பரிந்துரை செய்யலாம். ஆனால் பரிந்துரைக்கும் பெயர் தற்குறி என்பதற்கான அர்த்தத்தை விட கீழானதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன். உடன்பிறப்பு என்பதை உபி என்று சொல்லும்போது வராத கோபம் வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் வாழ்வதற்காகப் போராடிய பொதுவுடைமை கட்சி தோழர்களை உண்டியல் என சொல்லும்போது வராத கோபம் சங் பரிவார்களை சங்கிகள் எனச் சொல்வதைப் போன்றதே தற்குறி என்பதும் அடிமைகள், உடன்பிறப்புகள், உண்டியல், சங்கி, தம்பிகள் எனச் சொல்வது எவ்வளவு தூரம் காரணப்பெயரோ அதைப் போல தற்குறியும் ஒரு காரணப் பெயர். தி.மு.க தீயசக்தி என வேடமிட்டுள்ள கோமாளி சொன்னால் சர்க்கஸ் பார்க்கும் பார்வையாளர்கள் அதைப் பார்த்து சிரித்துவிட்டு கடக்காமல் கிளிப்பிள்ளை போல மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாக அதைத் திரும்பச் சொல்வதற்கு முன் கொஞ்சமேனும் யோசித்துப் பார்க்க வேண்டாமா? தி.மு.க அரசின் மூலம் அடைந்த நற்பலன்களில் ஒன்று கூட அவர்கள் கண்முன் வரவில்லை என்றால் அது எவ்வளவு பெரிய அறிவு மோசடி.

     நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மீதும் அவர்களுடைய சர்வதேச சூழலைக் கருத்தில் கொள்ளாத பல திட்டங்கள் மீதும் எனக்கு முரண்பாடு உண்டு. ஆனால் அந்தக் கட்சினர் அயராது களத்தில் நிற்பதை மதிக்க வேண்டும். அதே தான் முன்னாள் பா.ஜ.க தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை போன்றவர்களுக்கும் பொருந்தும். பா.ஜ.க. சில நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தாலும் மறைமுகமாக அவர்கள் எதைச் செய்ய முன்வருகிறார்கள் என்ற நுண்ணுணர்வு அடிப்படையில் பா.ஜ.க எதிர்ப்பை வாழ்நாள் கடமையாக நான் கொண்டிருந்தாலும் அந்தத் தலைவர்களின் உழைப்பு என்பது தனிப்பட்ட முறையில் மதிக்கக்கூடியது. பிரச்சாரத்திற்கு ஒழுங்காக செல்லாத ஏற்கனவே இருக்கும் திட்டங்களை‌ப் புதிய திட்டங்களைப் போல அறிவிக்கும் ஒரு கோமாளித் தலைவனுக்கு இப்படிப்பட்ட ஆதரவு தமிழ்நாட்டில் வந்திருப்பது சகிக்க முடியாத குமட்டலை ஏற்படுத்துகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் களத்திற்கு செல்லாமல் வெற்றியடைந்திருப்பதன் மோசமான விளைவைத் தமிழ்நாடு சந்திக்கும். 

      தீய சக்தி என அவர்கள் சொல்லும் தி.மு.க தான் ஆட்சியில் இருந்தபோது செய்த கொள்ளைகளையும் அதனால் வழக்குகள் பல பதிவு செய்திருப்பதையும் நான் ஒத்துக்கொள்கிறேன். அதை நேரடியாக பார்த்தும் இருக்கிறேன். அப்படியிருந்தும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு காரணம் அவர்களை விட வலிமையான தேர்வு எனக்குக் கிடைக்கவில்லை என்பதே. அத்தனை வருடம் ஆட்சியிலிருந்த கட்சியின் வேட்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கும் புதிதாக தங்களைத் தூய சக்தி என அறிவித்து வலம் வந்த கட்சியின் வேட்பாளர்களுக்கும் கிட்டத்தட்ட சமமான அளவில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆக இருவரும் சமம். இருவருமே தீய சக்தி அல்லது தூய சக்தி என்கிற வாதத்திற்கு வரும் பதில் தவெகவிற்கு வரவும் திருந்திவிட்டார்களாம்‌. இது எவ்வளவு பழமையான சொல்லாட்சி. பலர் கட்சி மாறும் போதெல்லாம் சொல்லப்படும் வார்த்தைகள். இந்த லட்சணத்தில் இவர்கள் மாற்றத்தைக் கொண்டு வர போகிறார்களாம். தமிழ்நாடு கடனில் இருக்கிறது என சொல்லிய வாய் தங்கம் விற்கும் விலைக்கு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்கப் பொருட்களை அரசு வழங்கும் என்று அறிவிக்கிறது. இது தற்குறித்தனம் அல்லாமல் வேறு என்ன? இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் எனக்கு உண்டு. 

    தினேஷ் வைத்த மற்றொரு கருத்து திமுக தோல்விக்கு பாலியல் பிரச்சனை மற்றும் போதைப் பொருள் புழக்கம் ஆகியன முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆனால் இதில் அரசுக்கு மட்டும் பங்கில்லை. தனிமனிதர்களின் பங்கே அதிகம் எனும் கருத்து. இதில் எனக்கு உடன்பாடு உண்டு. இந்திய அளவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய முக்கிய ஆய்வுப் பொருளாகவே அந்தக் கருத்தை நான் பார்க்கிறேன்.... இப்படிப் பேசுவதற்கு என பல காரணங்கள் உண்டு. எம்ஜிஆர் × விஜய் என விவாதிப்பதற்கும் ஏகப்பட்ட விஷயங்கள் உண்டு...

     தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுத்திருப்பது அரசியலைப் புரிந்து கொண்டு பேசும் திறமையற்ற ஒருவரைத் தேர்வு செய்துள்ளது. எம்ஜிஆர், விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அவரவர் அளவில் அரசியல் புரிதலோடு செயல்பட்டவர்கள். இதில் விஜயகாந்த் திராவிட கருத்தியலை முழுமையாக உள்வாங்கி செயல்படவில்லை என்ற விமர்சனம் இருந்தாலும் கள அரசியலைப் புரிந்து நாட்டு நலனை மையப்படுத்திய ஆக்கப்பூர்வமான வாதத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். அரசியல் வரலாற்றை அறிந்தவர், அதனை அரசியலுக்கு வருவதற்கு முன்பே தனது தலைமைப்பண்பு மூலம் வெளிப்படுத்தியவர். அந்தத் தகுதி கூட விஜய்க்கு இருப்பதாகத் தெரியவில்லை. அரசியலில் எவ்வித தார்மீக ஈடுபாடுமின்றி வந்த வருகையாகவே விஜய் வருகை இருக்கிறது. ஊடகங்கள் மத்தியில் பேசாத ஒருவராக இதுவரை இருந்தவர், இனியும் அப்படியிருந்தால் அது கோமாளி என்பதோடு துணிவற்ற ஒருவராகவும் அவரைக் காட்டும். கொள்கையற்ற அரசியல் பாதையாக தேமுதிகவைப் போலவே தனிப்பட்ட செல்வாக்கை மட்டும் நம்பிய ஒன்றாகவே இவரது கட்சியும் கட்டாயம் மாறும். நல்லது செய்வது தான் கொள்கை என்பது அரசியல் அல்ல. அப்படியான அரசியல் விரைவில் வீழ்ந்து விடும். அதற்கு சிவசேனா மற்றும் ஆம் ஆத்மி சமீபத்திய எடுத்துக்காட்டு. 41 பேர் இறந்ததற்கு ஆளுங்கட்சி காரணம் என கைகாட்டி தன் மீதான பரிவை ஏற்படுத்தத் துணிந்தவர். அந்தச் சம்பவத்தை திமுக அரசியல் லாபத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஜெயலலிதா பாணியில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என கையாண்டிருக்க வேண்டும். பரிவுணர்வை ஏற்படுத்தக் காரணமாகி அதனால் நாம் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்ற ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் அரசியல் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல. அவருடைய முதிர்ந்த அரசியல் மனப்பான்மைக்குத் தகுதியற்றவர்கள் தற்போது எதிர்நிலையில் இருப்பதைப் புரிந்து கொண்டு அவர் செயல்பட வேண்டும். அதற்கான வாய்ப்பை இந்தத் தேர்தல் முடிவுகள் ஸ்டாலின் இடம்பெறாத சட்டமன்றம் என்ற வகையில் அடைய முடியும். 

     ஜோசப் விஜய் என தேவாலயத்தில் முட்டிப் போடுவதும், பெரியாரை, அண்ணாவை, காமராசரை, எம்ஜிஆரை, தனது தலைவர்களாக முன்னிறுத்துவதும் சோதிடர்களையும் சாமியார்களையும் நம்பிக் கொண்டு கோயில் கோயிலாகச் சுற்றுவதுமென போடப்பட்ட கோமாளி முகமூடிகள் என்பது வெட்ட வெளிச்சமாகும் காலம் விரைவில் வரும்..... ஒரே நல்லது வாக்காளர்களை விலைக்கு வாங்காமல் தேர்தலைச் சந்திக்கும் பழக்கம் இனி உருவாகலாம்..

    தற்போதைய சூழலில் விடுதலைச் சிறுத்தைகளும், இரண்டு பொதுவுடைமைக் கட்சிகளும் எதிர்க்கட்சியாக நின்று குரல் கொடுக்க வேண்டும். த.வெ.கவிற்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்பது என் எதிர்பார்ப்பு. காங்கிரஸ், தேமுதிக, பாமக இந்த விஷயத்தில் நம்பத்தகுந்தவை அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. தலித்துகள், பெண்கள் பலர் சட்டமன்ற உறுப்பினர்களாக தவெக மூலம் ஆகியிருக்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. அதில் முக்கால்வாசி பேர் இதுவரை எந்த ஆக்கப்பூர்வ செயல்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள். இனியும் செய்வார்களா இல்லை வெறுமனே அண்ணண் அண்ணன் என துதி பாடுவார்களா என்பதையும் இதனுடன் சேர்த்து யோசித்துப் பார்க்க வேண்டும். தலித்துகள் பொறுப்புக்கு வருவதற்கும் தலித்துகளுக்காக களப்பணியாற்றும் தலித்துகள் பொறுப்புக்கு வருவதற்கும் வித்தியாசம் உண்டு. வன்னி அரசு வெற்றி பெற்றுள்ளார். பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தோல்வி அடைந்துள்ளார் என ஏகப்பட்ட கணக்குகளையும் இதில் இணைத்துப் பார்க்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

அணங்கு (பகுதி -4) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)