குடும்பத்தேர் (முதல் அலை, முதல் பாகம்) - ரித்விக் கட்டக் (தமிழில் - தீனன்)
குடும்பத்தேர் (முதல் அலை, முதல் பாகம்) - ரித்விக் கட்டக்
(தமிழில் - தீனன்)
ஆங்கில மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
இந்த நாடகம், வங்கப் பிரிவினை நடக்கும் முன்னும் நடந்தவுடனும் உருவான சூழ்நிலைகளைச் சித்தரிக்கிறது. பிளவுபடாத வங்கத்தில் வாழும் ஒரு இந்து குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையின் சித்தரிப்புடன் நாடகம் தொடங்குகிறது. ரித்விக் கட்டக், தலில் (Dalil) (சாசனம்) எனப் பெயரிட்ட இந்த நாடகத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வருகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் கதையில் சமபங்கு உண்டு. இந்த நாடகத்தில் தனியாக காதாநாயகன்/நாயகி என்று எவரும் இல்லை. நாடகத்தில் பயன்படுத்தப்பட்ட வட்டார வழக்கானது ஆழமான ஆய்வுக்குப் பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வசனங்களின் நடையைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக சில வங்காளி வார்த்தைகள் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன.
(தமிழிலும் அவ்வண்ணமே பயன்படுத்தப்பட்டுள்ளன)
[குடும்ப விவரம்: குடும்பப் பெரியவர் கேட்டு. கேட்டுவின் மூத்த மகன் - மகிந்தர், இளைய மகன் - கோபால், மகள் - பத்மா. கேட்டுவின் அண்ணன் மகன் தேபேந்திர். மகிந்தரின் மனைவி சுவர்ணோ, இருவரின் மகன் ஹாரு. பக்கத்துவீட்டுக்காரன் - காலிம். அவனது பாட்டி பெரோசா. பிற மாந்தர்கள் - ஹரேன் பண்டிட், கிரு ஷேக், அர்ஜுன் மலாக்கர், தேபு போஸ்]
முதல் அலை: முதல் பாகம்
(மேடையில் வெகு தொலையில் மேடான பகுதி அமைந்துள்ளது. அந்த மேட்டுக்குப் பின்னால் பத்மா நதி பாய்கிறது. பழுப்பு மற்றும் நீல நிற பாய்மரப் படகுகள் நதியைக் கடப்பதைக் காண முடிகிறது. துடுப்புகள் நதியைக் கிழித்துக் கொண்டு படகை நகர்த்தும் ஒலிகள் கேட்கின்றன. இரவு வானம் மங்கலான கருநீலமாக காட்சியளிக்கிறது. மேடையின் இடதுபுறம் அமைந்துள்ள கூரை வேய்ந்த மண் வீட்டின் ஒரு பகுதியைப் பார்க்க முடிகிறது. அந்த வீட்டின் முன்புறம் இருக்கும் கதவும், திண்ணையும் மேடைக்குள் துருத்தி நிற்கின்றன. மூங்கில் குச்சிகளால் ஆன வேலி வீட்டிலிருந்து அந்த மேட்டுப் பகுதி வரை செல்கிறது. அந்த வேலிக்குப் பின்னால் மீன்பிடி வலை உள்ளது. கையில் லாந்தர் விளக்குடன் 25 அல்லது 26 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் ஒருத்தி மேடையின் வலதுபுறம் இருந்து தோன்றுகிறாள். மேடையின் இடதுபுறம் இருக்கும் வீட்டை நோக்கி அவள் நடக்கிறாள். மேடையின் நடுவே வந்ததும் சற்று நிற்கிறாள். மேட்டின் மறுபுறம் இருந்து சோகமான மெட்டுடன் பாடல் ஒன்று இரவின் அமைதியைக் குலைப்பதுபோல் ஒலிக்கிறது. பெண் தனது தலையைக் குலுக்கிவிட்டு மீண்டும் தனது நடையைத் தொடர்கிறாள். வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைகிறாள். மேட்டின் மறுபுறம் அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருக்கும் மனிதனின் தலையின் பகுதியை மட்டும் பார்க்க முடிகிறது. அவன் பாடியபடி இருக்கிறான்)
கோபால்: 'இதயத்துக்கு சொந்தமான நதியே
என் தங்க நதியே பத்மாவே
என் மனதைத் திருடிய உனக்கே
என் ஆன்மா சொந்தமடி
காற்றால் என் படகை நீ நகர்த்தும் அழகில்
இந்த அல்லிருளில் உன் மனதை
எனக்காய் திறக்கும் பாங்கில்
என் மனதைத் திருடிவிட்டாய் ஏந்திழையே'
சுவர்ணோ: கொழுந்தனாரே, நீ பாடுகிற பாடல்கள் என் மனசை சோகமாக்குது.
(கொழுந்தனார் - மூலப்பிரதியில் 'தக்கூபோ' - திருமணமான பெண் தன் கணவனின் இளைய சகோதரனை விழிக்கும் சொல்)
(கோபால், அவன் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்தே சுவர்ணோவிடம் பேசுகிறான்)
கோபால்: எதாவது சொன்னீங்களா அண்ணி?
(அண்ணி - மூலப்பிரதியில் 'பௌதான்' - அண்ணனின் மனைவியை விழிக்கும் சொல்)
சுவர்ணோ: வருஷ கடைசி ஆகிடுச்சு. இப்போ வந்து உங்க மனச இவ்ளோ ஆட்டிப்படைக்குறது என்னவா இருக்கும்னு தெரிஞ்சிக்கனும்னு ஆர்வமா இருக்கு.
கோபால்: எனக்கு இன்னைக்கு எங்கேயும் போக பிடிக்கல. இந்த நதி முனை என் ஆர்வத்தைக் கவர்ந்திடுச்சு.
சுவர்ணோ: ஓ.. அதனாலதான் அங்க உக்கார்ந்துக்கிட்டு மனசு உருக பாட்டு எழுதிக்கிட்டு இருக்கீங்களோ.
கோபால்: என்ன சொன்னீங்க?
சுவர்ணோ: எங்கேயும் காணாம போயிடாதனு சொன்னேன். நீ தான் என்னை கோம்பிரா நிகழ்ச்சிக்கு அழைச்சிட்டு போகணும். எங்கேயும் போயிடாத சரியா.
(கோம்பிரா - கடவுள் சிவனைப் பற்றிய கதைகளை கூறும் வங்காள நாட்டுப்புறக் கூத்து)
(22 வயது இளைஞன் ஒருவன் (கோபால்) மீன் வலையுடன் தோன்றுகிறான்)
கோபால்: நான் எங்க போக? அந்த எடைத் தட்டுகளைக் கொடுங்க. இங்க உக்காந்து, அதை வலையோட கட்டுற வேலையைப் பாக்குறேன்.
(சுவர்ணோ, சிறிய பெட்டியில் இரும்பு எடை தட்டுகளைக் கொண்டுவந்து தருகிறாள். கோபால் வலையை விரித்து வைத்து இசை மெட்டு ஒன்றை முணுமுணுக்கிறான்)
கோபால்: இந்த வீடு இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்கு.
சுவர்ணோ: எல்லாரும் செப்டம்பர் மாத சந்தையில போட்டிருக்கிற பலகார கடைக்கு போயிருக்காங்க. அப்பாவும் அங்க தான் போயிருக்காரு. அவங்க எப்போ வேணா திரும்பி வந்துடுவாங்க.
கோபால்: சரி, ஹாருசந்திரா எங்க?
சுவர்ணோ: எனக்குத் தெரியல. அவன் கொஞ்ச நேரம் முன்னாடி தான் பத்மாமணி கூட எங்கேயோ போனான்.
கோபால்: பத்மா அவன கூட கூட்டிட்டுப் போயிருக்காளா.. அப்போ சரிதான், இப்போ எனக்குப் புரியுது. இந்த பத்மா இருக்காளே, சரியான பொண்ணுதான்!. ராத்திரியா இருந்தாலும் பகலா இருந்தாலும், கூட யார் இருந்தாலும் இல்லேன்னாலும் காட்டுக்குள்ள சுத்துறதுக்கு போயிடுறாள். எல்லாம் விளையாட்டுதான். நான் என்னதான் கஷ்டப்பட்டாலும் இப்ப எல்லாம் படிப்பிலேயே அவ மனசு நிக்க மாட்டேங்குது.
(சுவர்ணோ வீட்டிற்குள் செல்கிறாள். கோபால் தலையைக் குனிந்து முணுமுணுத்தபடி இருக்கிறான்)
கோபால்: உங்களுக்குத் தெரியுமா அண்ணி, அவ மட்டும் படிப்புல கவனம் செலுத்தியிருந்தா இந்நேரம் பெரிய ஆளா வந்திருப்பா. ரொம்ப புத்திசாலியான பொண்ணு அவ. ஆனா இப்ப எல்லாம் பொழுதுக்கும் அவ மனசுல அப்படி என்னதான் ஓடிக்கிட்டு இருக்குன்னு எனக்குத் தெரியவே மாட்டேங்குது. எனக்கு அது ரொம்ப விசித்திரமா இருக்கு.
(அவன் தன் தலையை நிமிர்த்திப் பார்க்கிறான். அங்கு யாரும் இல்லை. லேசாக புன்னகைத்துவிட்டு ஒரு இசை மெட்டை முணுமுணுக்கிறான். மேட்டுப் பகுதியின் மறு பக்கத்தில் இருந்து (மேடையின் பின்புறம் இருந்து) மஞ்சள் சேலையும் சிவப்பு கம்மல்களும் அணிந்த 14 வயதுடைய சிறுமி தோன்றுகிறாள். அவள் மூக்குத்தியும் அணிந்திருக்கிறாள். அவளின் கூந்தல் ஒழுங்கற்ற முறையில் உள்ளது. காம்புடன் கூடிய தாமரை மலரொன்று அவளின் குதிரைவால் பின்னல் கூந்தலில் தொங்கிக்கொண்டிருந்தது. அவளின் கைகளில் நீளமான கயிறு ஒன்று உள்ளது. அந்தக் கயிற்றின் மறுமுனை, 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனின் இரு கைகளை பிணைத்துக் கட்டியுள்ளது. சிறுவனின் முகம் திருப்திகரமான பாவனையில் எதையோ சாதிக்கப்போவது போல காட்சியளிக்கிறது. சிறுமி பிடித்து இழுப்பதால் சிறுவனின் கையில் கட்டப்பட்ட கயிறு அவ்வப்போது கையை இருக்குவது அசௌகரியமாக இருந்தபோதும் அவன் நடப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து முன்னகர்கிறான். உள்ளூரில் செய்யப்பட்ட ஒரு புல்லாங்குழலை அவன் தன் கைகளில் வைத்திருக்கிறான். சிறுமி தன் ஒளிரும் கண்களால் சுற்றுமுற்றும் இருப்பதை ஆராய்கிறாள். அதன்பின் அவள், கோபால் அங்கிருப்பதை சிறுவனுக்கு கண் ஜாடை காட்டி உணர்த்துகிறாள். சற்றும் கண் சிமிட்டாமல் சிறுவன், கோபாலை நோக்கி மெதுவாக நகர்ந்து சென்று அவனது காதில் புல்லாங்குழலை ஊதுகிறான். அதிர்ந்துபோன கோபால் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு அச்சத்தில் எழுந்து ஓடுகிறான். கால் இடறி அவன் கீழே விழ, மீன் வலையில் சிக்கிக் கொள்கிறான். சத்தம் கேட்டு " என்ன ஆச்சு" என சுவர்ணோ ஓடி வருகிறாள். பத்மா (சிறுமி) தனது முகத்தைக் கைகளால் மூடியபடி குதூகலத்துடன் மேடையின் நடுப்பகுதிக்கு ஓடி வருகிறாள். பத்மா வாய்விட்டுச் சிரிக்கிறாள். ஹாரு (சிறுவன்) கையில் கட்டப்பட்ட கயிற்றுடன் வீட்டை நோக்கிச் செல்கிறான்)
சுவர்ணோ: என்ன இதெல்லாம்?
கோபால்: (ஹாருவிடம்) ஏன் அவ்ளோ பலமா ஊதுன?
ஹாரு: சித்தி (பிஷி) தான் அப்படி செய்ய சொன்னாள்.
சுவர்ணோ: அவ சரியான ராட்சஷி!
கோபால்: இரு நான் என்ன பண்றேன் பாரு!
(அவன் தன்னைச் சுற்றிய வலையை விலக்கித் தள்ளுகிறான். வலையை விலக்கிக்கொண்டு அவன் எழுந்து சென்று அவளைத் துரத்த, பத்மா அங்கிருந்து ஓட முயற்சிக்கிறாள். ஆனால் சுவர்ணோ அவளின் காதைப் பிடித்து இழுத்து வருகிறாள்)
சுவர்ணோ: உன்னோட சேட்டைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு. இந்த உச்சி வெயில்ல அக்கம் பக்கத்துல சுத்தி ஆட்டம் போட்டுட்டு வந்தது போதாதா. ஓ, தாமரைப் பூ சூடி இருக்கீங்களா மகாராணி! உனக்கு பாடம் புகட்டலேனா சரிவராது.
(சுவர்ணோ, பத்மாவின் கன்னத்தில் அறைந்து அவளை உள்ளே போக கட்டளையிடுகிறாள்)
சுவர்ணோ: போ, போ உள்ள!
(சுவர்ணோ அவளைப் பிடித்துத் தள்ளுகிறாள். பத்மா மறுப்பு தெரிவிப்பதுபோல் தலையைக் குனிந்தபடி நின்றிருக்கிறாள். கோபாலைப் பார்த்த சுவர்ணோவும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிடுகிறாள்)
கோபால்: பத்மா, இங்க வா. (பத்மா முன்னே வர) இவ்ளோ நேரம் எங்க போன?
பத்மா: நான் பீம்சென் காட்டுக்குப் போயிருந்தேன்.
சுவர்ணோ: (பத்மாவிடம்) பிள்ளையைப் பலமா அடிச்சிட்டேன்.. வலிக்குதா மா?
(சுவர்ணோ, பத்மாவின் தோள்களில் கை வைக்க, பத்மா தலையை ஆட்டுகிறாள்)
சுவர்ணோ: ஏன் நீ இப்படி இருக்க? சரி இப்போ போ. நான் உன்னை இன்னைக்கு கோம்பிரா கூத்துக்கு கூட்டிட்டுப் போறேன்.
(பத்மாவின் முகம் மலர்கிறது)
பத்மா: இன்னைக்கு 'மந்த்ரி மிஷன்' நாடகம் நடக்குது. நாம எப்போ போகலாம் அண்ணி.
சுவர்ணோ: அவசரப்படாத. பொறுமையா இரு. நாம போவோம்.
கோபால்: ஏய் பத்மா குட்டி, என்கிட்ட வா.
(பத்மா அவனிடம் செல்கிறாள்)
கோபால்: இங்க உக்காரு. சொல்லு, எல்லாம் நலமா, நீ எப்படி இருக்க?
பத்மா: ஓஹோ.. கேலி பண்றீங்களா!
கோபால்: ச்சே, உன்னைப் போய் நான் கேலி பண்ணுவேனா!
ஹாரு: அம்மா, இந்தக் கயிறை அவுத்து விடுங்க. வலிக்குது.
சுவர்ணோ: இங்க வா. முட்டாள் பையா.
(அவள் ஹாருவிற்கு அருகில் அமர்ந்துகொண்டு அவன் கையில் இருக்கும் கயிறை அவிழ்க்கிறாள். பத்மா ஹாருவைப் பார்த்து சமிக்ஞை கொடுக்கிறாள். ஹாரு கயிறின் மற்றொரு முனையை சுவர்ணோவின் கணுக்காலில் அவளுக்குத் தெரியாமல் கட்டுகிறான்)
சுவர்ணோ: இப்போ வீட்டுக்குள்ள போ. சாப்பிட நேரம் ஆகிடுச்சு.
(ஹாரு எழுந்துகொண்டு அவிழ்க்கப்பட்ட கயிறு முனையைக் கையில் பிடித்துக்கொண்டு நடக்கிறான். மறுமுனை சுவர்ணோவின் கணுக்காலில் சுற்றப்பட்டதால் அவள் தடுமாறி கிட்டத்தட்ட விழுந்துவிடும் நிலைக்குச் செல்கிறாள்)
சுவர்ணோ: ஐயோ கடவுளே!
(புல்லாங்குழலை ஊதியபடி ஹாரு அங்கும் இங்கும் குதித்துக் கொண்டிருக்கிறான். பத்மா வாய்விட்டு சிரித்தபடி சுவர்ணோவின் மேல் சாய்ந்து கொள்கிறாள். சுவர்ணோ அவளது கன்னத்தில் அன்பாக அறைவதுபோல் தட்டுகிறாள்)
சுவர்ணோ: நீ சரியான குறும்புக்காரி!
கோபால்: அவ அப்படியே இருக்கட்டும், அண்ணி.
(பத்மா மெதுவாக நழுவி மீண்டும் மேட்டுப் பகுதியின் மேல் ஏறுகிறாள்)
சுவர்ணோ: மறுபடியும் பாரு. மேட்டுக்கு மேல ஏறுறா. பத்மா.. வீட்டுக்குள்ள வா. இப்போ எங்கேயும் போகக்கூடாது. என்னால் இனியும் பொறுத்துக்க முடியாது. என்னை அழ வைக்காதே.
(பத்மா மேட்டில் இருந்து மீண்டும் இறங்கி வருகிறாள். ஹரேன் பண்டிட் மறுபுறம் இருந்து உற்சாகத்துடன் நடந்து வருகிறான். அவன் எப்போதும் படபடப்பாகவும், அமைதியின்றி ஏதாவதொன்றைச் செய்துகொண்டிருக்கும் 30 வயது மதிக்கத்தக்க மனிதன். பத்மாவும், ஹரேனும் ஒருவரையொருவர் பாராமல் மோதிக்கொள்கின்றனர். பத்மா "ஓ" வென கூறி அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டு வீட்டுக்குள் ஓடிச் செல்கிறாள். சுவர்ணோ தனது சேலையின் முந்தானையை இழுத்துத் தலையில் போர்த்திக் கொள்கிறாள். ஹரேன் கீழே விழுந்த தனது புத்தகங்களைக் குனிந்து எடுக்கிறான்)
கோபால்: இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற, ஹரேன் பண்டிட்?
ஹரேன்: எனக்கு நிறைய நேரம் இல்ல. நான் டவுனுக்குப் போறேன். இன்னும் நிறைய தூரம் நடந்தாகணும்.
கோபால்: இந்த ராத்திரில நீ ஏன் டவுனுக்கு போற?
ஹரேன்: உன் கிட்ட இப்ப பேசிகிட்டு இருக்க முடியாது, உனக்குப் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா நான் போக ரொம்ப தாமதம் ஆயிடும்.
கோபால்: நிம்சந்த் கயான்-ஓட அலுவலகத்துக்கு போற, அப்படித்தானே!
ஹரேன்: உனக்குத் தெரியாதா? பிரிவினையைப் பற்றிய செய்தியை இன்னைக்கு ராத்திரி ரேடியோல ஒளிபரப்ப போறாங்கலாம்.
கோபால்: ரேடியோவுலயா?
ஹரேன்: நம்ம தலைவர்கள் சாணக்கியரின் வாக்குகள் ஞானம் நிறைஞ்சதுன்னு நினைக்குறாங்க. ஆனா அவங்களுக்கு அந்த ஞானத்துல பாதியாவது இருந்தா இப்படி நடந்திருக்காது.
கோபால்: நீ என்ன சொல்ல வர்ற?
ஹரேன்: இனி என்னோட தொடக்கப் பள்ளியை இழுத்து மூட வேண்டியது தான். நான் சொல்ல வர்றது அதுதான். கடுமையாக உழைச்சு ஆசிரியர் பட்டம் வாங்கி இந்தக் கிராமத்துல பள்ளிக்கூடத்தை உருவாக்குனேன். இப்போ அந்த எல்லா உழைப்பும் ஒன்னும் இல்லாம போகப் போகுது. நான் மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு இந்தியாவுக்கு போக வேண்டியதுதான் இனிமே.
கோபால்: நீ ஏன் போகணும்?
ஹரேன்: ஏன்னா பாகிஸ்தான்னு ஒன்னு உருவாகப் போகுது. பிரிவினைக்குப் பிறகு இந்த மாவட்டம் பாகிஸ்தான் உள்ள வருதாங்குறதைப் பொறுத்துதான் நான் முடிவெடுக்கணும். இந்த மாவட்டம் பாகிஸ்தான்ல சேராம இருக்க நிம்சந்த் நிறைய பணத்தை வாரி இறைக்குறதா நான் கேள்விப்பட்டேன். ஆனா பிரிட்டிஷ்காரனுக்கு லஞ்சம் கொடுக்குறதுங்குறது அவ்ளோ லேசுப்பட்ட காரியம் இல்ல. அவங்க எதிர்பார்க்குற கணக்கே வேற. அவங்க பணத்தை வாங்கிக்குவாங்க, ஆனா கடைசியில சொன்னதைச் செய்யாம கைவிட்டுடுவாங்க. ஆனா நிம்சந்த் அப்படி ஒன்னும் அவ்ளோ சுலபமா விட்டுக்கொடுக்குறவன் கிடையாது. போன வருஷம் தான் அவன் இங்க அரிசி மில்லும் சினிமா தியேட்டரும் கட்டினான். அவன் இந்த விஷயத்துல கடைசி வரைக்கும் விடாப்பிடியா போராடுவான்னு உனக்கே தெரியும் தானே?
கோபால்: ஒருவேளை பாகிஸ்தான் உண்மையிலேயே உருவாகிடிச்சுன்னா நாமளும் போராடணுமா?
ஹரேன்: ஆமா கண்டிப்பா! பாகிஸ்தான் முஸ்லிம்களோட தேசமா மாறிடும். பிறகு அவங்க ஏன் இந்துக்கள் இங்க இருக்குறத சகிச்சிக்க போறாங்க?
கோபால்: என்ன அப்படி சொல்லிட்ட? காலிம், முஸலிம் தான். பெரோசா பாட்டியும் முஸ்லிம் தான். இவ்வளவு ஏன், என்னோட பக்கத்து வீட்டுகள்ல இருக்குற மற்ற சிலரும் தானே.
ஹரேன்: அவங்க எல்லாம் முஸ்லிம்கள்லேயே சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவங்க. அவங்க இந்துக்களோட இணக்கமா வாழ்வதைத் தான் விரும்புவாங்க. ஆனா உனக்கு நவகாளி ஞாபகம் இருக்கா? இந்திய நிலப்பரப்புல மற்ற இடங்களில் இருக்குற முஸ்லிம்களும் இங்க வரும்போது தான் பிரச்சனையே. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இன்னைக்குப் பிரிவினையை அறிவிச்சிடுவாங்க. அய்யோ!
கோபால்: என்ன ஆச்சு?
ஹரேன்: எனக்கு ரொம்ப நேரம் ஆகிடுச்சு. நான் கிளம்புறேன்.
கோபால்: நீ சரியான ஆளுதான் போ. கொஞ்சம் பொறுமையா இரு.
ஹரேன்: இங்க பாரு, நான் சாதாரணமாவே ரொம்ப பொறுமைசாலி தான். இன்னைக்கு ராத்திரி எனக்கு நிறைய வேலை இருக்கு. ஒரு வேலை மோசமான செய்தி ஏதும் வந்துச்சுனா, நான் திரும்பி வரும்போது உன்கிட்ட சொல்றேன். அப்போ நான் வரேன்.
(ஹரேன் வெளியேறுகிறான்)
சுவர்ணோ: கோபால், எங்க இருக்க?
கோபால்: சொல்லுங்க அண்ணி?
(பத்மா வீட்டிலிருந்து வெளியே எட்டிப் பார்க்கிறாள். வெளியே வந்து வலது பக்கம் அமர்ந்து, அவள் கூந்தலில் சூடிய தாமரை மலரின் இதழ்களை ஒவ்வொன்றாக பறிக்கத் தொடங்குகிறாள்)
சுவர்ணோ: காலிமும் பாகிஸ்தானைப் பற்றி பேசிக்கிட்டிருந்தான். அப்போ எல்லாரும் இன்னொரு தேசத்துக்குப் புலம்பெயர்ந்து போகுற நிலைமை வருமா?
ஹாரு: சித்தப்பா, நானும் பாகிஸ்தானைப் பற்றி கேட்டிருக்கேன். அன்னைக்கு ஒரு நாள், கோம்பிரா கூத்துல இங்கிலீஸ்காரர் வேஷம் போட்டு நடிச்சவர் பாகிஸ்தானைப் பற்றி சொன்னார்.
கோபால்: அண்ணி, நாம வேற ஒரு நாட்டுக்கு போக வேண்டிய சூழ்நிலை வந்தா, அந்த நிலைமை எப்படி இருக்கும்?
சுவர்ணோ: இது எல்லாமே வெறும் வதந்திங்க தான்.
கோபால்: கண்டிப்பா! ஆனா அவ்ளோ நிச்சயமா சொல்ல முடியுமா? எனக்குத் தெரியல. இங்க இவ்ளோ காலமா நமக்கு நெருக்கமா இருந்த நம்ம நிலம், சூழல் எல்லாத்தையும் ஒரு நொடில கைவிட்டுட்டு வேற நாட்டுக்குப் போகப்போறோம் அப்படிங்குறது ரொம்பவே விசித்திரமா இருக்கு.
சுவர்ணோ: எல்லாமே வதந்தி தான். வேற ஒன்னும் இல்ல.
கோபால்: இல்ல அண்ணி, கல்கத்தாவுல நடக்குற போராட்டங்கள் ஒன்னும் வதந்தி இல்ல. நவகாளி-ல நடந்ததும் வெறும் வதந்தி இல்ல. என்ன நடக்கபோகுதுன்னு நினைக்கும்போதே எனக்கு பயமா இருக்கு.
சுவர்ணோ: இன்னும் யாரும் வீட்டுக்கு வந்து சேருற மாதிரி தெரியல. நீங்க எல்லாரும் வாங்க, வந்து உட்கார்ந்து சாப்பிடுங்க.
கோபால்: (புன்னகைத்தபடி) அதுதான் சரி. சாப்பிட்டு முடிச்சிட்டு எல்லாரும் கோம்பீரா கூத்துக்குப் போவோம்.
(பத்மா, ஹாரு இருவரையும் கோபால் கைகளால் அணைத்துக்கொள்கிறான். பத்மா அவனைக் கிள்ளுகிறாள். கோபால் விலகிச் செல்கிறான். ஹாரு இருமுறை புல்லாங்குழலை ஊதுகிறான். எரிச்சலடைந்தவளாய் சுவர்ணோ அவனிடம் இருந்து புல்லாங்குழலைப் பிடுங்குகிறாள். ஹாரு சற்று பின்நகர்ந்து சென்று முகபாவத்தால் அவளுக்கு பழிப்பு காட்டுகிறான். சுவர்ணோ அவனைத் துரத்துவது போல் முன் நகர, அவன் ஓடப் பார்க்கிறான். பின் ஹாருவும் பத்மாவும் வீட்டுக்குள் செல்ல, அவர்களுக்கு பின்னே சுவர்ணோவும் உள்ளே செல்கிறாள். கோபால் சற்று நின்றுவிட்டு பின் வீட்டுக்குள் நுழைகிறான். மேடை காலியாக உள்ளது. இடதுபுறம் இருந்து காலிம் மற்றும் கிரு ஷேக் நுழைகின்றனர். மண் பானைகள் தொங்கிக் கொண்டிருக்கும் கம்பம் ஒன்றை ஒரு முனையில் ஒருவரும் மறுமுனையில் ஒருவரும் தங்கள் தோளில் சுமந்தபடி அவர்கள் முன்னும் பின்னும் நடந்து வருகின்றனர். கிரு ஷேக் ஒரு வயதான முஸ்லிம்.)
காலிம்: (கம்பத்தைத் தரையில் வைத்துவிட்டு) ஷேக், என்னோட வீடு, இந்த வீட்டுக்கு அடுத்து இருக்கு.
கிரு: நல்லது, நீ போ. நான் நதி நீரில் சுத்தம் ஆகிட்டு வரேன். இப்தாருக்கு (நோன்பு உணவுக்கு) என்ன இருக்கு?
காலிம்: ஐயா (மியான் - இஸ்லாமிய பெரியவரை விழிக்கும் பொதுச் சொல்) நீங்க இந்த எளியவனோட விருந்தாளியா வந்திருக்கீங்க. என் வீட்டுல என்ன இருக்கோ அதை உங்களுக்குக் கொடுப்பேன் நான்.
கிரு: சரி போ, தாமதம் செய்யாத. நாம கட்சி ஆபீஸூக்கு போகணும், உனக்கு ஞாபகம் இருக்குதானே?
காலிம்: ஆமா, ஆமா, நாம பாகிஸ்தான் பற்றிய செய்தியைக் கேட்கப் போகணும்.
கிரு: நாம படை திரட்ட வேண்டிய நேரம் இது. லத்தியை எப்படி பயன்படுத்தனும்னு நீதான் அவங்களுக்கு கற்றுத் தரணும்.
காலிம்: அத என்னால நிச்சயம் செய்ய முடியும். நாம அவங்களுக்குப் பிச்சுவா கத்தி வீச கற்றுத் தந்தா எப்படி இருக்கும்? அதைப் பழகிக்கிட்டா, கண்களை இன்னும் கூர்மை ஆக்கிக்கலாம்.
கிரு: நீ என்னென்ன செய்ய விரும்புறியோ செய்யலாம். ஆனா இந்த முறை நீ தான் பொறுப்ப ஏத்துக்கணும்.
காலிம்: நீங்க ஏன் ஏதாவது செய்யக் கூடாது? உங்களுக்கு மகிந்தரை தெரியுமா?, கேட்டு கோஷ் உடைய மகன். அவனுக்கு லத்தியைப் பயன்படுத்தத் தெரியும்.
கிரு: எனக்கு அவனைத் தெரியும்.
காலிம்: இது அவங்களோட வீடு தான். அவன் என்னோட உயிர் நண்பன். எனக்கு ரொம்ப உதவியா இருப்பான். பிச்சுவா கத்தியைப் பயன்படுத்துறதுலயும் அவன் கெட்டிக்காரன். இந்தப் பொறுப்பை நீங்க ஏன் அவன்கிட்ட கொடுக்கக்கூடாது?
கிரு: நீ என்ன பேசிக்கிட்டு இருக்க? அவங்க இந்துக்கள். அதுமட்டுமில்லாம அவன் சரியான முரடன்!. பாகிஸ்தான் உருவானத்துக்கு அப்புறம் அவங்க இங்கேயேவா இருக்க போறாங்க?
காலிம்: வேற எங்க போவாங்க அவங்க? நாம உருவாக்கப் போறது முஸ்லிம் படை கிடையாது. அது பாகிஸ்தான் தேசியப் படையா தான் இருக்கப் போகுது.
கிரு: அவங்களுக்கு இந்துஸ்தான் இருக்கு. பாகிஸ்தான் உருவானதுக்கு அப்புறம் எல்லா இந்துக்களும் அங்க தான் போயாகணும். பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு மட்டும் தான்.
காலிம்: கொஞ்சம் பொறுங்க. இந்த பிரச்சனையைப் பற்றி புரிஞ்சிக்க எனக்கு அவகாசம் கொடுங்க. நாம பாகிஸ்தான் கேக்குறது என்னவோ சரிதான். ஏன்னா எல்லா பண்ணையார்களும், பதுக்கல்காரர்களும் இந்துக்களா தான் இருக்காங்க. ஆனா இன்னும் தங்களோட அடிப்படைத் தேவைக்கே ரொம்ப கஷ்டப்படுற நிறைய இந்துக்களும் இங்க இருக்காங்க.
கிரு: பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு மட்டும்தான். அவங்க எல்லாரும் இறை துரோகிங்க!
காலிம்: துரோகிககளா! மகிந்தரோட அம்மா இப்போ இல்ல, ஆனா சின்னவயசுல அவங்க தான் என்னை வளர்த்தாங்க. எனக்கு இன்னும் அது ஞாபகம் இருக்கு. பெரோசா பாட்டியும், மகிந்தரோட அம்மாவும் தான் என்னோட உலகமே. (கிருவை நோக்கி ஏளனப் புன்னைகையுடன்) துரோகிங்க!.. நீங்க சொல்றது நம்பவே முடியாத ஒன்னு. மகிந்தர் மாதிரி ஆட்கள் இங்க தான் இருப்பாங்க. ஆதிக்க இந்துக்கள் தான் இங்க இருந்து போவாங்க. அவங்க நிலங்கள் எல்லாம் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும். நாம் அதுல விவசாயம் செய்யலாம். நீங்க என்ன பாகிஸ்தானோட ஆட்சியாளரா?, எல்லா இந்துக்களும் இந்த நிலத்தை விட்டு போகனும்னு பெருசா உத்தரவு போடுறீங்களே. நீங்க பேசுற வார்த்தைகள்ல தலையும் புரியல வாலும் புரியல. ரொம்ப வினோதமா இருக்கு.
கிரு: நீ ஏன் அதை வினோதமா நினைக்குற? இந்துக்கள் பாகிஸ்தானை விட்டு போய்தான் ஆகணும்னு முகமது அலி ஜின்னாவே சொல்லியிருக்காரு.
காலிம்: அவர் எங்கேயும் அப்படிச் சொல்லவே இல்ல.
(பெரோசா பாட்டி வருகிறாள். அவள் 65 வயது மதிக்கத்தக்க பெண்மணி)
பெரோசா: ஏய் எருமை மாடு, உன்னைத் தான் ரொம்ப நேரமா கூப்பிட்டிட்டு இருக்கேன். இன்னும் வெளியே என்ன பண்ற?
காலிம்: பாட்டி, கிரு ஷேக் சொல்றாரு, பாகிஸ்தான் உருவானத்துக்கு அப்புறம் மகிந்தர் இங்க இருந்து போகணுமாம்.
பெரோசா: முதல்ல பாகிஸ்தான் உருவாகட்டும்! இந்த ஆனா, வந்து-ங்குற ஊகமெல்லாம் இப்பவே வேண்டாம்.
காலிம்: புதிய எல்லைகள் இன்னைக்கே வரையறுக்கபடுறதா நான் கேள்விப்பட்டேன்.
பெரோசா: ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் சொல்றத முதலில் கவனி, இன்னைக்கு நதிக்குத் தோணியை எடுத்துட்டுப் போனயா?
காலிம்: இல்ல நான் எடுத்துட்டுப் போகல. ஆனா யார் எடுத்துட்டுப் போனாங்கன்னு எனக்குத் தெரியும்.
பெரோசா: யாரு?
காலிம்: நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்.
பெரோசா: யார் எடுத்துட்டுப் போனா? உண்மையை சொல்லு? கோபால்? மகிந்தர்? இவங்கள்ள யாராவதா?
காலிம்: ஆமா.
பெரோசா: தோணியை ஏன் உடைஞ்ச நிலையில திரும்பக் கொண்டுவந்து வச்சிட்டுப் போயிருக்கான் அவன்.
காலிம்: யாருக்குத் தெரியும், யாரைப் பார்த்து கண்ணடிக்க அவன் டவுன் சந்தைக்குப் போயிருக்கானோ, யார் கண்டா!
பெரோசா: அந்தப் போக்கிரி வரட்டும் பாத்துக்குறேன்!
காலிம்: தயவுசெஞ்சு, அவன எதுவும் சொல்லாதீங்க.
பெரோசா: ஏன்? அவனை நான் அடிக்கப் போறேன்னு நினைச்சுகிட்டியா? (எள்ளலாக) நீ அவனுக்குக் கருணை காட்டுறத பாத்தா எனக்கே பொறாமையா இருக்கு! அம்மாடியோவ்!. ஒன்னு தெரிஞ்சிக்க, நீ அவனை நேசிக்கிறதை விட நான் அவனை அதிகமா நேசிக்கிறேன்.
காலிம்: எனக்கு அது தெரியும், ஒருவேளை, தெரியாமலும் இருக்கலாமோ என்னவோ. அந்தப் பையன் மேல உங்களுக்கு எப்பவுமோ ஒரு தனி அன்பு பிணைப்பு இருக்குறது எனக்குத் தெரியும்.. ஐயா, நீங்க எங்க கிளம்பிட்டீங்க?
கிரு: நான் முஸ்லிம் லீக் ஆபீசுக்கு போறேன். நீயும் சாப்பிட்டு முடிச்சிட்டு அங்க வந்து சேரு.
காலிம்: நான் எங்கேயும் போறதா இல்ல. எங்க கூட இப்தார் சாப்பிடுங்க வாங்க.
கிரு: நீ ஏன் என் கூடயே வரக் கூடாது?
காலிம்: நான் ஏன் வரணும்? என்னோட சக நாட்டு மக்களை இந்த நிலத்துல இருந்து துரத்தி விட திட்டம்போடுறவங்களோட நான் சேரப் போறது இல்ல.
கிரு: நானும் புனிதமில்லாத இப்தாரைச் சாப்பிடுறது இல்ல.
பெரோசா: அட!.. நாங்க இஸ்லாமிய முறைப்படிதான் ஆட்டை வெட்டுறோம். வந்து கொஞ்சமாவது சாப்பிடுங்க.
(காலிமும் கிருவும் ஒன்றாக நடக்கின்றனர். உடுக்கையை கழுத்தில் தொங்கவிட்டவாறு மகிந்தர் வருகிறான். அதை அவன் சத்தமாக வாசித்துக்கொண்டு அதன் லயத்திற்கு ஏற்ப வாயால் தாளம் இடுகிறான். அவனுக்குப் பின்னால் கேட்டு, தேபேந்திர் இருவரும் சில பொருட்களை சுமந்தவாறு வருகின்றனர்)
மகிந்தர்: குர்-குர்---குர்-குர்-குர்... டங் டங் டங்! ஹேய், காலிம்!
காலிம்: என்ன, என் அன்பு நண்பா?
கேட்டு: தேபேந்திர், சொல்லு அவன்கிட்ட.
தேபேந்திர்: என்ன சொல்ல?
கேட்டு: அந்த நம்ப முடியாத விஷயத்தைச் சொல்லு. நான் காலியான இடத்துலதான் கடை வச்சேன், ஆனா அதுக்கும் நான் இப்போ வரி கட்டணுமாம். ஊருல இல்லாத அதிசயமா, அதிகாரிங்க நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க.
பெரோசா: இது ரொம்ப வினோதமா இருக்கே! சந்தையில் திறந்த வெளியில கடை வைச்சா, வரி கட்டணுமா? இது மாதிரி நான் இதுக்கு முன்ன கேள்விப்பட்டதே இல்ல!
மகிந்தர்: ஆனா அதுதான் இப்போ நடந்துகிட்டு இருக்கு. தேபேந்திர், அவங்க கிட்ட போய் சொல்லு, 2 ரூபாய் வரி கட்டுறது எல்லாம் நமக்குச் சாத்தியமே கிடையாதுன்னு போய் சொல்லு.
தேபேந்திர்: இவ்ளோ பணிவா போய் சொன்னா அவங்க உடனே வரியை குறைச்சுடுவாங்கன்னு நீ நினைக்குறியா?
கேட்டு: இங்க பாரு. நான் என்னோட சுயமரியாதையை விட்டுட்டு அவங்கட்ட கெஞ்சிட்டு இருக்க முடியாது. என்கிட்ட வசதி இல்ல. இந்த உலகத்துல கடின உழைப்புக்கு யாரும் மரியாதையே கொடுக்குறது இல்ல. ஆனாலும் நான் இதுவரைக்கும் என்னோட சுயமரியாதையை விட்டுக்கொடுக்காம வாழ்ந்துட்டேன். அதை நான் இழக்கும்போது மனுஷனாவே இருக்கமாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க, நான் ஒருநாளும் கெஞ்சமாட்டேன்.
மகிந்தர்: சரியான கோபக்கார குடும்பம் வந்து வாச்சிருக்கு! அது இருக்கட்டும் தேபேந்திர், உன்னோட நிலத்தைப் பகிர்ந்து நாம ரெண்டு பேரும் பயிரிடுறது உறுதி தானே. அந்தக் கரும்புக் காடு வழிக்கு வருதான்னு பார்ப்போம். நான் கலெக்டர் கிட்ட போய் வரியைப் பற்றி பேசுறேன்.
(கேட்டு கிளம்புகிறார்)
காலிம்: மாமா, உங்க கையில என்னத்த வச்சிருக்கீங்க?
கேட்டு: அதை ஏன் கேக்குற! நான் என்னோட பயிர்களுக்காக உரம் வாங்கவும், மாடியில கத்திரிக்காய் வளர்க்கவும் கொஞ்சம் விதைகளை வாங்கவும் சந்தைக்குப் போனேன். ஆனா அங்க பொம்மைகளைப் பார்த்ததும், எனக்கு குழந்தைங்க ஞாபகம் வந்துடுச்சு, வாங்காம இருக்க முடியல.
(அவர் வீட்டை நோக்கிச் செல்கிறார்)
மகிந்தர்:(பாடல்) கத்திரிக்காயே என் அருமை கத்திரிக்காயே
நள்ளிரவில் நான் உண்ணும் சோற்றில் இருக்கும் வெங்காயமடி நீ,
என் கண்ணின் கருவிழியடி நீ.
தண்ணீர் தொட்டியை ஏனடி கீழே போட்டாய்,
உன் பெற்றோர் வீட்டுக்கு ஏனடி புறப்பட்டாய்?
காலிம்: அவள் பெற்றோர் வீட்டுக்கு போனதா யார் சொன்னா? அவள் மொத்த வீட்டுக்கும் வெளிச்சம் கொடுத்து இங்க தான் உட்கார்ந்திருக்கா.
பெரோசா: மகிந்தர் இன்னைக்கு ரொம்ப குஷியா இருக்குற மாதிரி தெரியுது.
மகிந்தர்: ஆமா, நான் இன்னைக்கு நல்ல மனநிலையில இருக்கேன். காலிம், சீக்கிரமா மழை வரப் போகுது. நான் மீன்பிடி வலையை எடுத்து வைக்குறேன். இன்னைக்கு ராத்திரி வெளியே போவோம்.
பெரோசா: இன்னைக்கு ராத்திரி நதிக்கு போறீங்களா?
மகிந்தர்: இதுல அலாதியான விஷயம் என்ன அப்படினா, இன்னும் கொஞ்ச நேரத்துல மழை வரப் போகுது. அப்புறம் ஹில்ஸா மீன் எல்லாம் மேலே வர ஆரம்பிச்சுடும். ராத்திரி மழை பெய்யும்போது பத்மா நதியில படகுல போயிருக்கீங்களா நீங்க? ஆஹ்! அந்த அனுபவமே தனி. நான் இன்னைக்கு மகாநந்தா வரைக்கும் போகப் போறேன்.
காலிம்: அப்புறம் இன்னைக்குக் கூத்து வேற இருக்கு!
மகிந்தர்: கூத்தா?
(மகிந்தர் பாடல் ஒன்றைப் பாடுகிறான்)
"துரைமார்கள் ஆட்சியில் தாய்நாடு சிதைந்தது,
சுயாட்சி பெற்றபோதும் நட்டாற்றில் நிற்கிறோம்.
தேசத் தலைவர்களின் வஞ்சக வார்த்தைகளால்...."
(கோபால், சுவர்ணோ இருவரும் வருகிறார்கள்)
சுவர்ணோ: கோபால், வீட்டுல சாப்பாடு ஆறிக்கிட்டு இருக்குனு உங்க அண்ணன்கிட்ட சொல்லு.
கோபால்: விடுங்க அண்ணி, அவரை ரொம்பவும் தாங்க வேண்டாம்.
சுவர்ணோ: கூத்துக்குப் போக நேரம் ஆகிடும் பின்ன.
மகிந்தர்: ஏன் என்னைத் தொந்தரவு செய்யுற? இவங்க கூட கொஞ்ச நேரம் சாவகாசமா இருக்க விடேன்.
காலிம்: நானும் இன்னைக்கு கூத்துக்கு போயாகணும்.
பெரோசா: மகிந்தர், நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.
மகிந்தர்: என்ன?
பெரோசா: நீ என்னோட சின்ன தோணியை சேதப்படுத்தியிருக்க!
மகிந்தர்: பாட்டி, அது எதிர்பாராத விதமா திடீர்னு நடந்துடுச்சு.
பெரோசா: அப்போ நீயும் திடீர்னு எனக்கு அதுக்கான பணத்தைத் தந்தா, நான் அதைச் சரி பண்ண வசதியா இருக்கும்.
மகிந்தர்: அட பாட்டி! பணம் ஒன்னும் மரத்துல காய்க்கல
பெரோசா: அப்போ தோணிகள் மட்டும் மரத்துல காய்க்குதுன்னு நீ நினைச்சிட்டு இருக்கியா?
மகிந்தர்: நீங்க என்ன செய்யணுமோ செய்யுங்க.
காலிம்: நான் உன்னை இந்தப் பூமியில இருந்தே காணாம ஆக்கிருவேன் பாத்துக்க.
மகிந்தர்: எங்க வா, வா பாக்கலாம்!
காலிம்: இன்னைக்கு ராத்திரி இங்க ரத்தக்களரி ஆக போகுது!
(இருவரும் சண்டை போடுவது போல விளையாட்டாக பாவனை செய்கின்றனர். பெரோசா நடுவில் நின்றுகொண்டு நடக்கும் கூத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதேநேரம், பத்மா மற்றும் ஹாருவிடம் வாக்குவாதம் செய்தபடி கேட்டு நுழைகிறார். காலிம் சண்டையைத் தொடங்குவதுபோல கத்துகிறான்)
கேட்டு: ஏய், மகிந்தர்!
மகிந்தர்: நான் ஒன்னும் செய்யல, இந்த காலிம் தான்...
காலிம்: மாமா, இங்க என்ன நடக்குதுன்னு நீங்களே உங்க கண்ணால பாத்தீங்க தானே. மகிந்தர் தான் ஆரம்பிச்சான்.
கேட்டு: வாயை மூடு!
மகிந்தர்: இந்தப் பிரச்சனைக்கெல்லாம் மூல காரணமே அங்க நிக்குற அந்தக் கிழவி தான். பாருங்க, எப்படி சிரிக்குதுன்னு.
சுவர்ணோ: இங்க எல்லாருக்கும் மற்ற எல்லாத்துலயும் இருக்குற அக்கறை சாப்பிடுறதுல மட்டும் இல்ல போல. கோபால், என்னால இன்னும் பொறுத்துக்க முடியாது, எல்லார்கிட்டேயும் சொல்லு.
(பத்மா உடுக்கையை நோக்கி ஹாருவுக்கு சைகை காட்டுகிறாள். ஹாரு மெதுவாக முன்னே வருகிறான்)
ஹாரு: அப்பா, யாருக்காக இந்த உடுக்கையை வாங்கிட்டு வந்தீங்க?
மகிந்தர்: நான் இனி தினமும் இதை வாசிக்க போறேன். அதான் வாங்கிட்டு வந்தேன். உங்க அம்மா தலைக்குப் பக்கத்துல கொண்டு போயி முதல் ராத்திரி மெட்டுக்களை வாசிப்பேன்.
ஹாரு: எனக்கு நீங்க அதைத் தர மாட்டிங்களா?
மகிந்தர்: உனக்கு ஏன் கொடுக்கணும் நான்? ரொம்ப கஷ்டப்பட்டு இந்த உடுக்கையை வாங்கியிருக்கேன். உடுக்கை வாசிக்குறத கேக்க ஆசைப்படுறயா? சிவனோட சேர்ந்து ஆடனுமா உனக்கு?
(அவன் ஒரு பாட்டைப் பாடியபடி உடுக்கையை வாசிக்கத் தொடங்குகிறான்)
"துரைமார்கள் ஆட்சியில் தாய்நாடு சிதைந்தது,
சுயாட்சி பெற்றபோதும் நட்டாற்றில் நிற்கிறோம்.
தேசத் தலைவர்களின் வஞ்சக வார்த்தைகளால்...."
(மகிந்தர் ஹாருவின் கையை பிடித்தபடி நடனமாடுகிறான். ஹாரு, கோபாலயும் முன்னுக்கு இழுக்கிறான். பத்மா கை தட்ட துவங்குகிறாள்)
காலிம்: ஓ, எம்பெருமானே ஈசனே!
(அவனும் ஆட துவங்குகிறான். பெரோசாவையும் உடன் இழுக்கிறான்)
காலிம்: வா, பாட்டி.
(கேட்டு எல்லோரையும் கண்டிக்க முயல்கிறார், ஆனால் அது முடியாமல், வாய்விட்டு சிரித்துவிடுகிறார். பெரோசாவும் ஆட்டத்தில் சேர்ந்துகொள்கிறார்)
சுவர்ணோ: அடக் கடவுளே, கடவுளே, இவங்க பண்றதைப் பாரேன்!
மகிந்தர்: நீயும் ஏன் எங்க கூட சேர்ந்துக்கக்கூடாது?
சுவர்ணோ: ஆஹ்!
(நடனம் ஜோராக நடந்துகொண்டிருக்கிறது. மேட்டுப் பகுதியில் இருந்து ஹரேன் வேக வேகமாக நடந்து வருகிறான்)
ஹரேன்: ஆடு, ஈசனே, ஆடு. முதல் தரமான ஆட்டம்! ரொம்ப புனிதமான, அசலான ஆட்டம்!
கோபால்: ஏய் பண்டிட், என்ன ஆச்சு?
(ஹரேன் திருப்புகிறான்)
ஹரேன்: எனக்கு நேரம் இல்ல, ஏற்கனவே ரொம்ப தாமதம் ஆயிடுச்சு.
மகிந்தர்: டேய் போக்கிரி, உனக்கும் நடனம் ஆட விருப்பமா?
ஹரேன்: இல்ல, இல்லவே இல்ல. நான் வர வழியில கயான்-ஓட கிளார்க்கைச் சந்திச்சேன்.
கோபால்: ஓ.
ஹரேன்: அவர் நிறைய விஷயங்கள் சொன்னாரு. நதிக்கு அக்கரை, இக்கரைன்னு எல்லா இடத்துலயும் செய்தி ஒலிக்கத் தொடங்கிடுச்சு. கயான் பாதுகாப்பாக பதுங்கிட்டான். நம்ம நாடு இப்போ பாகிஸ்தான் ஆகிடுச்சு.
காலிம்: பாகிஸ்தான்!
கிரு: பாகிஸ்தான்!
மகிந்தர்: பாகிஸ்தான்!
ஹரேன்: ஆமா, பாகிஸ்தான். இந்த மாவட்டம் பாகிஸ்தானுக்குப் போயிடுச்சு. அந்த மூலையில இருந்து இந்துஸ்தான் தொடங்குது. அது இந்திய தேசம்.
கோபால்: இந்தப் பிரிவு ஏற்கனவே அமலுக்கு வந்துடுச்சா?
கிரு: என்ன ஒரு அருமையான தருணம்! அல்லாவுக்கே எல்லாப் புகழும்!
காலிம்: அல்லாஹ் ஹோ அக்பர்!
கிரு: காலிம், சீக்கிரம் லீக் ஆபீசுக்கு வந்து சேரு.
(கிரு கம்பத்தைத் தொளில் சுமந்தவாறு அங்கிருந்து விரைந்து வெளியேறுகிறார்)
காலிம்: பாட்டி, எனக்குச் சாப்பாடு எடுத்து வைங்க. அல்லாஹ் ஹோ அக்பர்!
(கவலையுடன் நின்றுகொண்டிருக்கும் பேரோசாவைப் பிடித்து இழுக்கிறான் காலிம்)
காலிம்: தாமதிக்காதீங்க. வாங்க போகலாம்.
(பேரோசாவும், காலிமும் கிளம்ப, வெளியே, அல்லாஹ் ஹோ அக்பர் என பல குரல்கள் ஒலிக்கின்றன)
ஹரேன்: கதை நிஜமாகிடிச்சு. இன்னைக்கு இங்க பாகிஸ்தான் உருவாகிடுச்சு.
மகிந்தர்: தாளம் திடீர்னு லயத்தை இழந்துடுச்சு. சுவர்ணோ, எங்களுக்குச் சாப்பாடு எடுத்து வை.
(அவன் ஹாருவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு செல்கிறான்)
ஹரேன்: நான் இதை சொல்றது சரியான்னு தெரியல. ஆனா என்னோட மனசு இப்போ பாரமா இருக்கு. மாற்றம் தவிர்க்க முடியாதது.
கோபால்: மாற்றம்!
ஹரேன்: ஆமாம், ரொம்ப பெரிய மாற்றம். ஒரு கொள்ளை கூட்டம் மாதிரி மாற்றம் நம்மைத் துரத்தி வருது. நான் நாளைக்கு மேற்கு வங்கம் கிளம்புறேன். எனக்கு நிறைய நேரம் இல்ல.
(ஹரேன் வெளியேறுகிறான். பத்மா வீட்டுக்குள் நுழைகிறாள். கேட்டுவும் சுவர்ணோவும் மேடையின் இருபுறமும் ஓரமாய் நிற்கின்றனர். கோபால் மேட்டின் மேல் ஏறுகிறான். அவன் வாயிலிருந்து ஒரு மெல்லிய ஓசை வருகிறது. கோபால் அதிர்ச்சியுற்றவனாய் காட்சியளிக்கிறான். சுவர்ணோவும், கேட்டுவும் அவனைப் பார்த்தவாறு இருக்கின்றனர்)
கோபால்: ஓ! அந்த இருட்டுக்கு அப்பால் இந்துஸ்தான் மறைஞ்சிருக்கு!
சுவர்ணோ: இப்போ தான் நாம நிதானமா இருக்கனும்.
கேட்டு: எல்லாம் ரொம்ப குழப்பமா இருக்கு!
(கோபால் மேட்டில் இருந்து மீண்டும் கீழிறங்குகிறான்)
கோபால்: ஆனா நாம கவலைப்பட்டு நேரத்தை வீணடிக்கத் தேவையில்ல. அப்படிக் கவலைப்பட்டா அது எல்லாத்தையும் சீர்குலைய வச்சிடும்.
கேட்டு: சீர்குலைக்குமா?
கோபால்: ஆமா.
(கோபால் அவர்களைக் கூத்து பார்க்க கிளம்ப சொல்கிறான். பத்மா நதியின் மறுபக்கத்தில் இருந்து இடி சத்தம் கேட்கிறது. மேகத்தை ஊடறுத்து ஒரு மின்னல் கீற்று பாய்கிறது. அதன்பின், கோபால் தலை குனிந்தபடி வீட்டுக்குள் செல்கிறான். பத்மா நதியின் நீர் ஆரவாரமாகப் பாய்கிறது. மேடை இருளடர்ந்து காணப்படுகிறது. தூரத்திலிருந்து 'அல்லாஹ் ஹோ அக்பர்' எனும் சத்தத்தை மட்டும் கேட்க முடிகிறது. தூரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வரும் அந்த சத்தம் பின்னர் தேய்ந்து மறைகிறது. மேடையில் மீண்டும் ஒளி பரவுகிறது)

கருத்துகள்
கருத்துரையிடுக