குடும்பத்தேர் (மூன்றாம் அலை, முதல் பாகம்) - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)
குடும்பத்தேர் (மூன்றாம் அலை, முதல் பாகம்) -ரித்விக் கட்டக்
(தமிழில் -தீனன்)
(கல்கத்தாவின் அருகில் உள்ள ஒரு அகதிகள் முகாம். அங்கு ஒரு சிதிலமடைந்த தற்காலிகக் கட்டிடம். அதன் வலப்புறமாக கதவும் மறுபுறம் ஜன்னலும் உள்ளது. தேபேந்திர், கட்டிடத்தின் உயரமான ஒரு பகுதியில் அமர்ந்திருக்கிறான். தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து கதவருகே செல்ல முற்படுகிறான். ஆனால் மீண்டும் தான் அமர்த்திருந்த இடத்திற்கே திரும்புகிறான். அவன் அமைதியற்றவனாய் காணப்படுகிறான். பத்மா மேடையின் ஒரு புறம் இருந்து, கையில் ஒரு பூந்தொட்டியுடனும், காகிதத்தில் சுற்றப்பட்ட விதைகளுடனும் வருகிறாள். அவற்றை கவனமாக கீழே வைத்துவிட்டு, பூந்தொட்டியில் இருக்கும் உரம் கலந்த மண்ணை பரிசோதனை செய்வதுபோல் தோண்டுகிறாள். தேபேந்திர் எழுந்து அவளருகில் நடந்து வருகிறான்.)
தேபேந்திர்: பத்மா?
பத்மா: என்ன தேபேந்திர் அண்ணா? இங்க என்ன பண்றீங்க?
தேபேந்திர்: வீட்டுல சித்தப்பாவைத் தவிர வேற யாரும் இல்ல. அவரும் தூங்கிகிட்டு இருக்காரு.
பத்மா: ஆமா, எல்லாரும் வெளிய போயிருக்காங்க.
தேபேந்திர்: நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க? என்னது இது?
பத்மா: நான் பூந்தொட்டி வாங்கிட்டு வந்தேன். என்கிட்ட பாரிஜாத மல்லிகைச் செடி விதைகள் இருக்கு.
தேபேந்திர்: நல்லது. நான் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன்?
பத்மா: என்ன?
தேபேந்திர்: ஒரிசால நிலங்களைப் பகிர்ந்து கொடுத்துட்டு இருக்குறதா நேத்து ராத்திரி கேள்விப்பட்டேன். ஒரிசா எங்க இருக்குன்னு உனக்குத் தெரியுமா?
பத்மா: அது தெற்குப் பக்கம் இருக்கு.
தேபேந்திர்: அப்போ, நான் ஒரிசாவுக்குப் போகப் போறேன். எனக்கு இங்க இருக்கவே மூச்சுமுட்டுது.
பத்மா: நிலத்தைப் பகிர்ந்து கொடுக்குறதா யார் சொன்னா?
தேபேந்திர்: யாருக்குத் தெரியும்! எப்படியிருந்தாலும் நான் போகத்தான் போறேன். நான் நிலத்தை உழுது ரொம்ப காலம் ஆகிடுச்சு.
பத்மா: எப்போ கிளம்பப் போறீங்க?
தேபேந்திர்: இன்னைக்குச் சாயங்காலம் கிளம்புவேன். எனக்கு கொஞ்ச ஏக்கர் வளமான விளைநிலம் மட்டும் கிடைச்சா-- ஆஹ், எவ்வளவு அருமையா இருக்கும்! நான் ஒரிசாவுக்குப் போகத்தான் போறேன்.
பத்மா: நீங்க போயிட்டு எப்படியும் திரும்பி வரத்தான் போறீங்க.
தேபேந்திர்: ஏன்?
பத்மா: யாரும் உங்களுக்கு வளமான நிலத்தைத் தட்டுல வச்சு இந்தாங்கன்னு கொடுக்கப் போறது இல்ல. அந்த மாதிரி நிலம் உங்களுக்கு எங்கேயும் கிடைக்கப் போறது இல்ல.
தேபேந்திர்: எனக்கு எப்படியும் நிலம் கிடைச்சுடும். சொந்தமா நிலமே இல்லாம, செத்துப் போன மாதிரி உள்ளுக்குள்ள இருக்கு எனக்கு. நான் உங்க எல்லாரையும் ரெண்டு மாசம் கழிச்சு வந்து கூட்டிட்டு போவேன்னு கோபால் கிட்ட சொல்லிடு. நீங்க எல்லாம் இன்னும் கொஞ்ச காலம் காத்திருந்தா போதும். எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்கும்.
பத்மா: (சிரிக்கிறாள்) சரி.
தேபேந்திர்: சிரிக்காத சரியா. நாம கஷ்டப்பட்ட காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு. எல்லாரும் சொல்றத வச்சு பாத்தா, ஒரிசால இருக்குற நிலங்கள் எல்லாம் வளமானதாதான் இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. நல்ல வெள்ளாமையைப் பார்க்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியது இல்ல.
(தேபேந்திர் வெளியே செல்கிறான்.)
பத்மா: (பாடுகிறாள்) 'ஓ என் பத்மா நதியே, என் தங்க நதியே, என் இதயத்தின் நதியல்லவா நீ'
(ஹாரு பத்மாவைக் கூப்பிட்டவாறு உள்ளே நுழைந்து அவளருகில் வருகிறான்.)
ஹாரு: சித்தி, சித்தி, நான் சொல்றதைக் கவனிங்க, அம்மா எங்க?
பத்மா: அவங்க வேலை தேடி வெளிய போயிருக்காங்க. டாலிகுஞ்ச்-ல இருக்குற பாபுக்கள் வேலைக்காரி வேணும்னு கேட்டிருந்தாங்க. அண்ணி அங்க தான் போயிருக்காங்க.
ஹாரு: எனக்காக ஒரு விஷயம் செய்வீங்களா, சித்தி?
பத்மா: என்ன, சொல்லு.
ஹாரு: நீங்க ரொம்ப நல்லவங்க. அம்மா படுக்கைக்கு கீழ இருந்து எனக்காக பத்து அனா காசு எடுத்துத் தருவீங்களா?
பத்மா: பத்து அனாவா? அந்த பணத்தை வச்சு என்ன பண்ண போற நீ?.
ஹாரு: நான், ரெஹானா எல்லாரும் போறோம்.
பத்மா: படத்துக்கா?
ஹாரு: கடந்த ரெண்டு வருஷத்துல நான் எத்தனை முறை சினிமா தியேட்டருக்கு போனேன் அப்படினு நீங்களே சொல்லுங்க? தயவு செஞ்சு எனக்கு அந்த பணத்தை தாங்க. அந்த படத்துல நல்ல பாட்டு ஒன்னு இருக்கு - ஹோ லா லா! ஹோ லா! லா!.
பத்மா: நீ வீட்டுக்குத் திரும்பி வர தாமதம் ஆச்சுன்னா என்ன பண்றது?
ஹாரு: நான் ஹரேன் பண்டிட் கூட இருந்தேன்னு சொல்வேன், இல்ல வேற ஏதாவது சொல்லி சமாளிச்சிடுவேன். எனக்கு நேரம் ஆகுது இப்போ.
(கேட்டு, அறையில் இருந்து வெளியே வருகிறார். கண்களை மூடிய வண்ணம், தூக்கத்தில் எழுந்து நடப்பவர் போல அவர் வருகிறார்)
கேட்டு: பத்மா!
(ஹாருவின் முதுகுப்புறமாகக் கேட்டு நிற்கிறார்.)
ஹாரு: யாரு?
கேட்டு: இது யாரு ஹாருவா? இங்க வா.
(ஹாரு வேண்டாவெறுப்பாக கேட்டு அருகில் செல்கிறான். கேட்டு அமர்ந்துகொண்டு, அவனைத் தனது மடியில் இருத்திக்கொள்கிறார். பத்மா அவர்களுக்கு பின்னே வந்து நிற்கிறாள். பத்மா, கேட்டுவின் முதுகின் மேல் சாய்ந்து கொள்கிறாள்.)
கேட்டு: நீ ஏன் பாடுறதை நிறுத்திட்ட?
பத்மா: ஹாரு என்னைக் கூப்பிட்டுக்கிட்டு வந்தான்.
கேட்டு: ஹாரு நல்லா வளர்ந்துட்டான். அவனுக்கு ஒரு வேலையைத் தேட வேண்டிய நேரம் வந்துடுச்சு.
ஹாரு: பஞ்சு மாமா, அவரோட டீக்கடையில என்னை வேலைக்கு வச்சுக்குறதா சொன்னாரு. நான் டீ போட்டு, பரிமாறணும்.
கேட்டு: நாம தூங்குனாலும், முழிச்சிருந்தாலும், பூமி அதுபாட்டுக்கு நிக்காம சுத்திக்கிட்டே தான் இருக்கு. ஆனா, நீ பாடுன பாட்டை ஒருமுறை கோபால் பாடி நான் கேட்டிருக்கேன்னு நினைக்குறேன்.
பத்மா: ஆமா, நாம ரூப்பாய்கண்டில இருக்கும்போது அவர் இதைப் பாடுவாரு. ஆனா இப்போ அவரு பாடுறதையே சுத்தமா நிறுத்திட்டாரு. இந்தப் பாட்டு முழுக்க இனிமையான ராகம் நிறைஞ்சிருக்கும்.
கேட்டு: நீ அந்தப் பாட்டைப் பாடுனபோது எனக்குள்ள என்னமோ நடந்துச்சு.
பத்மா: என்ன?
கேட்டு: அந்தப் பாட்டு என்னைத் தூக்கத்துல இருந்து எழுப்பிடிச்சு. நான் விழிப்பு நிலையில கனவு காணுற மாதிரி இருந்துச்சு.
பத்மா: கனவா?
கேட்டு: ரொம்ப வினோதமான கனவு. நான் ரொம்ப காலம் கழிச்சு மறுபடியும் ரூப்பாய்கண்டியில இருந்தேன். நான், புரோ சித்போலா படகுத்துறை பாலத்துல என் படகைக் கட்டிக்கிட்டு இருந்தேன். நான் மேட்டுக்கு மேல ஏறி சாலையை கடந்தேன். அந்தச் சாலை ரொம்ப சின்னதா இருந்துச்சு. பத்மா நதிக்கரையோரமா இருந்து வந்த வாடைக் காத்து வீட்டோட அறைகளுக்குள்ள வீசிகிட்டு இருந்துச்சு. தரை, அலமாரி மேல மணல் படர்ந்து மூடியிருந்துச்சு. இது நடந்துகிட்டு இருந்தப்போ, நதியோரத்துல இருந்து ஒரு பாடல் அப்படியே மெதுவா காத்துல மிதந்து வந்துச்சு. எப்பவும் நதியில மீன் பிடிக்க போறதுக்கு முன்னாடி தோணில இருக்குற பாய்களைச் சரி செய்வோம். எங்க அம்மா அந்த பாய்களைச் சரி செய்யுறதை பார்த்தேன். அந்தப் பாடல் ரொம்ப ஆற்றலோட ஒலிச்சிகிட்டு இருந்துச்சு. அதோட, நதியில பயணிக்குற படகுகளோட துடுப்புகள் தண்ணீரோட மோதுற ஓசை ஆழமாவும் உறுதியாவும் இருந்துச்சு. இந்த நாடு ரெண்டா பிரிக்கப்பட்டுடுச்சுன்னு என் மனசு இன்னும் ஏத்துக்க மாட்டேங்குது.
(ஹாரு, கேட்டுவின் மடியில் இருந்தபடி பத்மாவை அழுத்தி மெதுவாகக் கூப்பிடுகிறான். எரிச்சலடைந்தவளாய், பத்மா அவனைத் தள்ளுகிறாள்)
பத்மா: போ, நீயே போய் எடுத்துக்கோ. அறைல யாரும் இல்ல.
கேட்டு: என்ன?
பத்மா: ஒன்னும் இல்ல, நீங்க சொல்லுங்க.
(ஹாரு எழுந்து, அறைக்குள் செல்கிறான்.)
கேட்டு: கனவு அந்த இடத்துல முடிஞ்சிடுச்சு.
கேட்டு: இந்த நாட்டுல இருக்குற சூழ்நிலை எதுவும் சரியில்ல. நாம எல்லாம் அகதிகள்னு அவங்க சொல்றாங்க. ஒரு மனுஷனை அகதினு கூப்பிட முடியுமா, சொல்லு? நான் என்னோட சுயமரியாதைக்காக மட்டும்தான் இவ்ளோ காலம் வாழ்ந்திருக்கேன். ஆனா இப்போ அதுவும் என்னை விட்டுப்போன மாதிரி இருக்கு. இந்தச் சமூகத்துல இருந்து மறைஞ்சு வாழுற திருடனை மாதிரி இப்போ நான் உணர்றேன். ஏன்?, எதுக்காக? நமக்கு இந்த விதி வந்து விடிய நாம அப்படி என்ன செஞ்சோம்?
(ஹாரு அறைக்குள் இருந்து ஓடி வருகிறான்.)
ஹாரு: சித்தி, அங்க எந்தப் பணமும் இல்ல. நீங்களாவது எனக்கு கொஞ்சம் கொடுங்க.
பத்மா: என்கிட்ட எதுவும் இல்ல. உங்க அம்மா வரட்டும் பொறு.
ஹாரு: அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு நேரம் ஆகுது. நீங்க எனக்கு இப்போ பணம் கொடுக்கபோறீங்களா இல்லையா?
கேட்டு: என்ன பணம்?
ஹாரு: உங்ககிட்ட எந்த பணமும் இல்லையா என்ன! எனக்குக் கொடுங்க, சித்தி.
பத்மா: நான் உண்மையைத் தான் சொல்றேன். என் கிட்ட இல்ல. நீ ஏன் இப்போ இப்படி நடந்துகுற?
ஹாரு: எல்லாருமே தியேட்டருக்கு கிளம்பி போயிட்டாங்க. எனக்கு இப்போ பணம் கொடுங்க, இல்லைனா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.
கேட்டு: ஹாரு-----
ஹாரு: தாங்க, சித்தி, இல்லைனா உங்க பூந்தொட்டியை நான் உடைச்சுடுவேன்.
(ஹாரு பூந்தொட்டியை நோக்கிச் சென்று அதைக் கையில் எடுக்கிறான்.)
பத்மா: ஹாரு, இன்னைக்கு காலையில தான் அதை நான் வாங்கிட்டு வந்தேன். ஏய்! ஏய்! என்ன பண்ற நீ?
(ஹாரு பூந்தொட்டியைத் தரையில் போட, அது துண்டு துண்டாக உடைகிறது. பத்மா அமைதியாகிறாள். விதைகள் சிதறிக்கிடக்கின்றன. அனைவரையும் ஒரு கணம் பார்த்துவிட்டு, அங்கிருந்து வெளியே ஓடிச் செல்கிறான் ஹாரு. கேட்டு எழுந்துகொள்கிறார்.)
கேட்டு: சாவு, சாவு! அழிஞ்சு போ! எல்லாம் பேய்ங்க, எல்லாம் பேய்க் கூட்டம்!
(சோகமடைவதற்குப் பதில், பத்மா வாய்விட்டுச் சிரிக்கிறாள்)
பத்மா: (சிரிப்பை நிறுத்தி, ஒருவித சோகத்துடன்) அந்தப் பூந்தொட்டியை வாங்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு எனக்குத்தான் தெரியும்.
(கேட்டு, பத்மாவின் அருகில் வந்து, அவளது தலையில் கை வைக்கிறார்.)
கேட்டு: வா. இங்க இருந்து எங்கேயாவது போயிடுவோம்.
பத்மா: எங்க?
கேட்டு: மறுபக்கத்துக்கு, நம்ம நாட்டுக்கு.
(பத்மா அவரை ஒரு கணம் பார்த்து, பின் புன்னகைக்கிறாள். பாதி கிழிந்த சேலையில் சுவர்ணோ வருகிறாள்)
சுவர்ணோ: பத்மா!
பத்மா: அண்ணி!
சுவர்ணோ: ஹாரு வெளிய கதவு கிட்ட நின்னு அழுதுகிட்டு இருந்ததைப் பார்த்தேன். நான் கூப்பிட்டதும் அவன் ஓடிப் போயிட்டான். என்ன நடந்துச்சு?
பத்மா: அவன் என் புது பூந்தொட்டியை உடைச்சுட்டான்.
சுவர்ணோ: இதுக்காகவா நீ அந்த சின்னப் பையனை போட்டு அடிச்ச?
பத்மா: இல்ல, நான் அடிக்கல.
சுவர்ணோ: நீ அடிக்கல அப்படினா, பின்ன ஏன் அவன் அழுதுகிட்டு இருக்கான்? அவன் என்ன, விருப்பப்பட்டா அழுதுகிட்டு இருக்கான்?
கேட்டு: மருமகளே, பத்மா உண்மையைத் தான் சொல்றா.
சுவர்ணோ: பத்மா, உங்க அப்பாவை இந்த மாதிரி விஷயத்துல தலையிட வேண்டாம்னு சொல்லு.
கேட்டு: ஏன் மருமகளே? நான் தலையிட்டா என்ன ஆயிடப்போகுது.
சுவர்ணோ: பத்மா, உங்க அப்பாவோட நாக்கைக் கட்டுப்படுத்த சொல்லு, குறிப்பா குடும்பத்தைத் காப்பாத்த அவரோட மருமகளோட நகைகளை எல்லாம் வித்ததுக்கு அப்பறம் இப்படி எல்லாம் பேச வேண்டாம்னு சொல்லு.
கேட்டு: சரி. நான் இப்போ போறேன், போதுமா.
(கேட்டு அறைக்குள் செல்கிறார். பத்மா அவர் செல்ல உதவுகிறாள்.)
பத்மா: நீங்க போன வேலை என்ன ஆச்சு?
சுவர்ணோ: அது இனி நடக்காது. நான் என்னோட மானத்தையும், மரியாதையையும் இழக்க முடியாது.
பத்மா: என்ன நடந்துச்சு, சொல்லுங்க?
சுவர்ணோ: ரொம்ப ஆச்சர்யப்படாத. நான் எல்லாத்துக்கும் பணிஞ்சு போக நினைச்சிருந்தேன்னா, எனக்கு அந்த வேலை சுலபமா கிடைச்சிருக்கும்.
பத்மா: ஓ! அண்ணி!
சுவர்ணோ: உனக்குப் புரியாது. நீ உன்னோட மானத்தையும், கௌரவத்தையும் இழக்குற நிலைமை வரும், எல்லா கோடி-களும் (மேற்கு வங்க வங்காளிகள்) பாங்ளா-களும் (வங்கதேசம் மற்றும் கிழக்கு வங்கத்தை சேர்ந்த வங்காளிகள்) எல்லாத்தையும் இழந்துட்டாங்க. கௌரவத்தை இங்க காசுக்கு விக்கிற நிலைமை வந்துடுச்சு. இது உனக்கும்தான் பிரச்சனை.
பத்மா: அண்ணி, இப்போ எல்லாம், நீங்க ரொம்ப வினோதமா மாறிட்டு வர்றீங்க.
சுவர்ணோ: நீ இப்போ இப்படி தான் சொல்லுவ? பெரிய ஆபத்து நம்மளை நோக்கி வந்துகிட்டு இருக்குன்னு உனக்கு எதுவும் தெரியல.
பத்மா: அண்ணி, உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சுடுச்சு. நீங்க பைத்தியக்காரத்தனமா பேசுறீங்க.
(சுவர்ணோ உடைந்து அழத் தொடங்குகிறாள்)
சுவர்ணோ: பத்மா, நீயே சொல்லு, நான் என்ன பண்ணட்டும், எங்க போகட்டும்? இனி விக்குறதுக்கு எந்த நகையும் மிச்சம் இல்ல. அப்புறம், நேத்து-----
பத்மா: நேத்து..., நேத்து என்ன ஆச்சு?
சுவர்ணோ: நேத்து, ஒரு ஆழமான பள்ளத்துல----
பத்மா: அமைதியா இருங்க! ரொம்ப பதற்றப்படாதீங்க. எல்லாத்தையும் சரி செய்ய நிச்சயம் ஒரு வழி இருக்கும்.
(ஹரேனும், கோபாலும் வருகிறார்கள்)
ஹரேன்: அந்த வார்த்தையை நீ உன்னோட அகராதில இருந்தே துடைச்சு எறிஞ்சிடு.
கோபால்: முடியாது.
ஹரேன்: அந்த காலிமும் அவனை மாதிரி ஆட்களும் தான் இப்போ முக்கிய பிரமுகர்களா மாறிட்டாங்க. எல்லாரும் இப்போ அரபு நாட்டோட அதி முக்கிய விருதாளிகள். கலாச்சாரம், உணர்வு, சிந்தனைமுறை கூட வலுக்கட்டாயமா பிரிக்கப்பட்டிருக்கு. அதனால, எனக்காகவாவது, இந்த 'சும்மா' அப்பிடிங்குற வார்த்தையை நீ அழிச்சே ஆகணும்.
கோபால்: இல்ல. இல்ல. நான் அதை ஏத்துக்க மாட்டேன்.
ஹரேன்: ஏன் ஏத்துக்க மாட்ட?
கோபால்: மனிதர்கள் இன்னும் மாறல. பாகிஸ்தான்ல, காலிம் இன்னும் காலிம்-ஆ தான் இருக்கான்.
பத்மா: நீங்க எதைப் பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்க?
கோபால்: இங்க பாரு பத்மா, நான் பாகிஸ்தான்ல நாம விட்டுட்டு வந்த வீட்டைப் பற்றி கேட்டு காலிம்-க்கு அனுப்ப கடிதம் எழுதியிருக்கேன். கடிதத்துல, இங்க இருக்குற விஷயங்களைப் பற்றி என்ன எழுதலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். பண்டிட்டை பத்தி எழுதலாமானு நினைச்சேன். ஆனா அதுக்கு பதிலா-----
ஹரேன்: நீயே சொல்லு பத்மா, நாம நம்மளோட சொந்த ஆட்கள்கிட்ட மனம் திறந்து பேசலாம், ஆனா நம்ம வட்டத்துக்குள்ள இல்லாதவங்க கிட்ட-----
கோபால்: காலிம்-ஐ நீ அப்படி சொல்றியா?
ஹரேன்: ஆமா.
கோபால்: நான் இதை ஒத்துக்கமாட்டேன்.
பத்மா: நீங்க கடிதத்துல என்ன எழுதியிருக்கீங்க?
கோபால்: நீ கேட்க விரும்புறியா?
ஹரேன்: சரி, சரி. அண்ணி இங்க இருக்காங்க. அதையெல்லாம் அப்புறமாக கேட்கலாம். நான் உன்கிட்ட பல தடவைச் சொல்லிட்டேன் கோபால், நீ பாடல்கள் எழுதி புத்தகங்கள் வெளியிட்டேன்னா, ஒவ்வொன்னையும் ரெண்டு அனாவுக்கு விக்கலாம். ஓரளவு நல்லா சம்பாதிக்கலாம். ஆனா நீ, நான் சொல்றதைக் காது கொடுத்து கேட்கவே மாட்டேங்குற.
கோபால்: அதையெல்லாம் கேட்கணும்னு தேவை இல்ல.
ஹரேன்: ஏன்?
கோபால்: பாடல்களை வித்து பணம் சம்பாதிக்க முடியாது. இது என்னமோ நான் இந்த நகரத்துல பிச்சை எடுக்குற மாதிரி இருக்கு.
ஹரேன்: பத்மா, நீயே பாரு, இந்த விவசாயி சலிச்சுக்கிறதை.
பத்மா: ஆமா, நானும் பாக்குறேனே. ஆனா அந்தக் கடிதம்?
கோபால்: சரி, கவனி.
ஹரேன்; அண்ணி, நாம பேசுன அந்த வேலை----
பத்மா: அவங்களை தனியா இருக்க விடுங்க.
கோபால்: இது தான் விஷயம் - இங்க இருக்குற நிலைமையைப் பற்றி நான் கடிதத்துல என்ன சொல்ல! அளவுக்கு அதிகமான போராட்டமும், வலியும் மக்களை கொன்னுக்கிட்டு இருக்கு. இப்படிப்பட்ட சோதனையான காலகட்டத்துலயும் கூட, ஹரேன் பண்டிட் உடைய தொப்பை கொஞ்சமும் குறையல. இன்னைக்கு தேதி வரைக்கும், 'எனக்கு நேரம் இல்ல' அப்படினு பிகு பண்ணுறதை விடல.
ஹரேன்: இதெல்லாம் ரொம்ப மோசம், கொஞ்சம் கூட அர்த்தமில்லாம இருக்கு, கோபால்.
கோபால்: ஹா!.. பண்டிட்---- (பேச்சை இடைநிறுத்தி) இங்க பாரு, யாரு வந்திருக்காங்கன்னு! (தேபு போஸ் வருகிறான்). அண்ணி, அந்த சின்ன முக்காலியை எடுத்துட்டு வாங்க. செய்தித்தாள்ல வேலை செய்யுற பாபு வந்திருக்காரு.
தேபு: செய்தித்தாளைச் சேர்ந்த பாபு இல்ல. தேபு போஸ்.
ஹரேன்: உக்காருங்க, உக்காருங்க.
கோபால்: சரி பாபு, அன்னைக்கு ஏன் என்கிட்ட அப்படி சொன்னீங்க?
தேபு: என்ன சொன்னேன்?
கோபால்: நீங்க செய்தித்தாளைச் சேர்ந்த பத்திரிகையாளர்னு.
தேபு: ஆமா, நான் சொன்னேன்.
கோபால்: ஆனா கொஞ்ச நாளா உங்க செய்தித்தாள்ல தேடிப் பார்த்தேன். எங்க பிரச்சினையைப் பற்றி ஏன் எதுவும் எழுதல.
தேபு: நான் தகவல்களைச் சேகரிச்சுட்டு இருக்கேன். அதுக்கப்புறம் நான் அந்த தகவல்களை ஆய்வு செஞ்சு செய்தியா எழுதுவேன். இல்லேனா, நான் ஏன் இப்படிப்பட்ட இடங்களுக்கு வந்து மக்கள் படுற கஷ்டங்களைப் பார்த்துகிட்டு இருக்கப் போறேன். நான் வேற என்ன செய்வேன்? நானும் சம்பாதிக்கணும் தான.
ஹரேன்: உங்க நாவை அடக்குற வரைக்கும், உங்களால பணம் சம்பாதிக்க முடியாது.
தேபு: என்னால பொய் சொல்ல முடியாது. எனக்கும் இந்தத் துயரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல.
கோபால்: புரிஞ்சது. சரி இன்னைக்கு நீங்க இங்க வர காரணம் என்ன?
தேபு: அதே காரணம் தான். நான் அனுபவங்களைச் சேகரிச்சுட்டு இருக்கேன். அப்புறம் பின்னாடி, இந்த தகவல்களை பயன்படுத்தி ஒரு பெரிய கட்டுரை எழுதுவேன்.
சுவர்ணோ: பாபு---
தேபு: சொல்லுங்க?
சுவர்ணோ: எழுதுறது மூலமா நீங்க பணம் சம்பாதிக்குறீங்களா?
தேபு: அதுக்குத் தான் நான் முயற்சி பண்றேன்.
சுவர்ணோ: நான் உங்களுக்கு நிறைய கதைகள் சொல்ல முடியும்.
தேபு: நல்லது.
சுவர்ணோ: அப்போ நீங்க எனக்கும் கொஞ்சம் பணம் தரணும்.
கோபால்: அண்ணி!
பத்மா: அண்ணி, மறுபடியுமா?
சுவர்ணோ: ஏன்?, அவரு அனுபவங்களைச் சேகரிக்க விரும்புறாரு. நாளைக்கு சாப்பாடு வாங்க கூட நம்ம கிட்ட காசு இல்லைனு அவருக்கு தெரியாது. இன்னைக்கு இந்த வீட்டுல ஒரு பருக்கைக்கான அரிசி கூட இல்ல. எல்லா நகைகளையும், பாத்திரங்களையும் ஏற்கனவே வித்தாச்சு. மிச்சம் இருக்குறது கிழிஞ்ச துணிங்கதான்.
கோபால்: அண்ணி, அமைதியா இருங்க, அமைதியா இருங்க!
சுவர்ணோ: மொத்த உலகமும் ஒன்னுமே இல்லாம தான் இருக்கு. இந்த அறையும் மரண அமைதியோட தான் இருக்கு.
பத்மா: அதிகமாக கவலைப்பட்டு; கவலைப்பட்டு எதுவும் ஆகப் போறது இல்ல. வாங்க உள்ள போவோம்.
(பத்மா, சுவர்ணோவின் கையைப் பிடித்து இழுத்து அறைக்குள் அழைத்துச் செல்கிறாள். கேட்டு வருகிறார். அவர் சுவர்ணோ உள்ளே செல்வதற்காக வழிவிட்டு நிற்கிறார்)
ஹரேன்: சரி, இருக்கட்டும், எனக்கு நிறைய நேரம் இல்ல. கூட்டம் போடுறதைப் பற்றி என்ன சொல்றீங்க?
தேபு: நான் யோசிச்சு சொல்றேன். (கோபாலிடம்) அது சரி, உங்க அண்ணன் எங்க?
ஹரேன்: அவன் இப்போ முழு மனுஷப் பிறவியாவே இல்ல.
கோபால்: அண்ணன் வெளிய போயிருக்கார்.
தேபு: எங்க?
கோபால்: எங்கேயோ.
கேட்டு: ஏன், கோபால், அவர் கிட்ட சொல்ல வேண்டியது தான? டம் டம்-ல இருக்குற மில் தொழிற்சாலையில தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யுறதா காலையில அவனுக்கு தகவல் கிடைச்சது. ஆலை முதலாளி, இங்க இருந்து லாரி நிறைய ஆட்களை வேலைக்கு கூட்டிட்டு போயிருக்காரு. ஒவ்வொருத்தருக்கும் தினமும் ஒன்றரை ரூபாய் கிடைக்கும்.
ஹரேன்: நான் இங்க வந்த புதுசுல இப்படி இல்ல. ஆனா வீடில்லாதவர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையில மோதல் ஏற்பட்டதுல இருந்து எல்லாமே மாறிடுச்சு. விவசாய கூலிகளோட விஷயத்துலயும் இது தான் நடந்துகிட்டு இருக்கு. அவங்களுக்கு மாற்றா நில உரிமையாளர்கள், வீடு இல்லாதவங்களை வெறும் கருவி மாதிரி பயன்படுத்துறது ரொம்ப கீழ்த்தரமான விஷயம். அந்த விவசாய கூலிகள் நம்மளை மாதிரி ஆட்களை ஒரு விதமா பார்க்குற அந்தப் பார்வை இருக்கே----
தேபு: எல்லாம் கஷ்டப்படுற குடும்பங்கள்----
ஹரேன்: ஆனா இந்தத் தற்காலிக வேலைகள் எல்லாம் நம்ம கஷ்டங்களை போக்கிருமா என்ன?. எல்லாம் வெறும் மூணு நாளைக்கு தான். அப்புறம் அந்த தொழிலாளர்கள், மகிந்தர் மாதிரி ஆட்களை உதைச்சு வெளிய தள்ளிடுவாங்க.
கோபால்: என்னால இனியும் இதையெல்லாம் பொறுத்துக்க முடியாது. காலிம், பெரோசா பாட்டி எல்லாரும் இருந்த அந்த நாட்கள், ரூப்பாய்கண்டி கிராமத்துல நாம வாழ்ந்த நாட்கள் தான் எனக்கு மறுபடியும் மறுபடியும் ஞாபகத்துக்கு வருகிறது.
ஹரேன்: கோபால், உன் சொற்பொழிவை நிறுத்து. (தேபுவைப் பார்த்து) சரி இப்போ கூட்டத்தைப் பற்றி சொல்லுங்க எனக்கு.
தேபு: இந்த இடத்தைக் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் வந்ததைப் பற்றி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இதுக்கு எதிராகக் கிளர்ச்சி உருவாக----
ஹரேன்: என்ன நடக்குதுன்னு கடைசிவரை பொறுமையா இருந்து பார்க்கணும். அந்த அரசியல் தலைவர்களோட தூண்டுதலால தான் நாம எல்லாரும் இந்த நாட்டோட விருந்தாளிகளா வந்து சேர்ந்தோம். ஆனா நமக்கு இங்க இருக்க அவங்க இடம் கொடுக்கல. எப்படியோ நாமளே நமக்கான ஒரு சமூகத்தை இங்க கட்டமைச்சுக்கிட்டோம். கைவிடப்பட்ட தரிசுநிலத்தை நம்ம உழைப்புனால வாழறதுக்கான இடமா மாத்திக்கிட்டோம். ஆனா இப்போ இந்த இடத்தையும் அவங்க பங்குபோட்டுக்க பார்க்குறாங்க. இது துரோகத்துக்கு மேல துரோகம். இந்த நயவஞ்சகத்துக்கு எதிராக நாம எல்லாம் கிளர்ந்து எழத்தான் வேணும்.
கோபால்: அப்போ இன்னும் ஏன் அதைச் செய்யாம இருக்க?
ஹரேன்: என்னைப் போல நிறைய பேர் இருக்காங்க, கிட்டத்தட்ட எல்லாருமே நான் நினைக்குறதை தான் நினைக்குறாங்க. ஆனா அதை வெளிப்படுத்தாம அவங்க உள்ளுக்குள்ளேயே மனசு வெந்துகிட்டு இருக்காங்க.
தேபு: எது எப்படியோ, மைதானத்துல கூட்டம் நடக்கப்போகுது. அங்க இருந்து பேரணி தொடங்கும்----
கேட்டு: பேரணியா?
தேபு: ஆமா. கோபால், நீ மட்டும் எல்லாரையும் பேரணில பங்கேற்க சம்மதிக்க வச்சுட்டேனா போதும்-----
கேட்டு: இல்ல, பாபு. எங்களுக்கு பேரணிகள் மேல எல்லாம் ஆர்வம் இல்ல.
ஹரேன்: பாருங்க, இந்த வீட்டுக்குள்ளயே கிளர்ச்சிங்குற எண்ணம் செத்துப்போச்சு. இத தான் நான் சொன்னேன்.
கேட்டு: நிறுத்து! எனக்குப் பேரணிகளோட அர்த்தம் என்னனு தெரியும். நம்மளை வீட்டை விட்டு வெளியே வந்து பேரணில பங்கேற்க வைக்க அவங்க வழிய வந்து என்னென்னமோ சொல்லுவாங்க. ஆனா கூட்டம் முடிஞ்சதும் இந்த தலைவர்களை எங்கேயும் நம்மளால பார்க்க முடியாது. அன்னைக்கு ஒரு நாள் அப்படித்தான் ஏதோ ஒரு பூங்கா முன்னாடி நம்மளை அம்போன்னு விட்டுட்டு போயிட்டாங்க. அந்த இடத்தைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருந்தும் அவங்க அப்படி விட்டுட்டு போயிட்டாங்க. அப்போ இருட்டா வேற இருந்துச்சு. அது பெரிய குழப்பத்துல போய் முடிஞ்சது. இந்த பேரணிகள்-னால எந்த பிரயோஜனமும் இல்ல. இல்லவே இல்ல.
கோபால்: ஆனா, நாம தொடர்ந்து முயற்சி செஞ்சுக்கிட்டே இருந்தா தான் பயன்தரக்கூடிய பேரணிகள நம்மால நடத்த முடியும். நம்ம ரொம்ப கடினமா முயற்சி செஞ்சாதான் ஏதாவது நடக்கும்.
கேட்டு: என்ன வழியில நமக்கு பயன்கிடைக்கும்னு எனக்கு தெரியல. ஆனா அந்த மாதிரி பயன் தரக்கூடிய பேரணிகளுக்குக் காத்திருந்தே நம்ம நாட்கள் கழியுது. அந்த மாதிரி ஒரு பேரணி ரொம்ப அபூர்வம். அது ரொம்ப வித்தியாசமானதா இருக்கும். அது நடக்குறப்போ நமக்கு நாம இழந்த நம்மளோட கௌரவம் திரும்பக் கிடைக்கும். அந்த நாள் வரும்போது ஏதாவது செய்யலாம். அர்ஜுன் மலாக்கரை நான் இன்னும் மறக்கல.
(மகிந்தர் மூச்சிரைத்தபடி வருகிறான்)
கேட்டு: மகிந்தர்!
ஹரேன்: ஹே!
தேபு: வணக்கம்!
ஹரேன்: ஏன் வாயடைச்சு போயிருக்க.
மகிந்தர்: உன்னை யாராவது அவமானப்படுத்தி இருந்தாங்கன்னா, நீயும் வாயடச்சு தான் போயிருப்ப.
கோபால்: நீ என்ன சொல்ற?
மகிந்தர்: என்ன நடந்திருக்கும்னு நீயே கண்டுபிடியேன்.
ஹரேன்: என்ன நடந்துச்சு, மகிந்தர்?
மகிந்தர்: நான் சியால்டாவுல இருந்து நடந்தே வந்துருக்கேன். என் கிட்ட பணமே இல்ல. அதுமட்டும் இல்லாம நான் நடுவுல வழி தவறி வேற போயிட்டேன். மதியம் முழுக்க வெயில்-ல நான் நடந்து வந்திருக்கேன்.
ஹரேன்: உன் வேலை என்ன ஆச்சு?
மகிந்தர்: வேலையா?
ஹரேன்: மில் வேலை.
(சுவர்ணோ வருகிறாள்)
மகிந்தர்: இன்னைக்கு வேலை நிறுத்தத்தோட இருபத்து நான்காவது நாள். தொழிலாளிங்க தங்கியிருந்த குடிசைகள் எல்லாம் வெறுமையா கிடந்துச்சு. அவங்க குழந்தைங்க எல்லாம் கொடும் பசியல வாடிக் கிடந்தாங்க. தொழிலாளிகள் எல்லாம் விரக்தில இருந்தாங்க. நான் போன லாரி அவங்க குடிசைப்பகுதி வழியா போகும்போது இதையெல்லாம் பார்த்தேன்.
கோபால்: அப்புறம்?
மகிந்தர்: அப்புறம், நான் அவங்க கண்களைக் கவனிச்சேன். அதுல ஒரு தீ எரிஞ்சிக்கிட்டு இருந்துச்சு. அவங்க கண்கள்ல இருந்து பிரகாசமான ஒளி பாயுற மாதிரி உணர்ந்தேன். சண்டையில உயிரையே பறிக்குற ஒரு கத்திக் குத்து வாங்குனதுக்கு அப்புறம், தேர்ந்த கத்திச்சண்டை வீரனோட முகம் எப்படி இருக்கும்னு நீங்க பார்த்திருக்கீங்களா? குறிப்பா அவன் கடைசியா ஒரு முறை தாக்குதல் நடத்த வாளை உயர்த்தும்போது அவன்கிட்ட இருந்து வெளிப்படுற அந்த உணர்ச்சியை கவனிச்சிருக்கீங்களா?
ஹரேன்: உன் வேலை என்ன ஆச்சு?
மகிந்தர்: நான் மில் வாசலிலேயே லாரியில இருந்து இறங்கித் திரும்பி வந்துட்டேன். எனக்கு பணம் கண்டிப்பா தேவைதான், ஆனா அவங்களோட போராட்டத்துக்கு நடுவுல ஒரு அற்பத்தனமான வெளியாள் மாதிரி என்னால நுழைய முடியாது. நான் இன்னும் அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போயிடல.
ஹரேன்: இதைத்தான் நான் சொல்லிகிட்டு----
மகிந்தர்: சுவர்ணோ, எனக்காக படுக்கையைத் தயார் பண்ணு. நான் போய் குளிச்சிட்டு வந்து தூங்கப் போறேன்.
சுவர்ணோ: நாளைக்கு நாம சாப்பிடனும்னா அந்தப் படுக்கையைத் தான் வித்தாகணும்.
மகிந்தர்: நாளையைப் பற்றி நாம நாளைக்கு யோசிக்கலாம். இன்னைக்கு என்னைத் தூங்க விடு.
(மகிந்தரும், சுவர்ணோவும் வெளியேறுகிறார்கள்)
ஹரேன்: இதை எல்லாம் நான் பார்க்க பார்க்க, இன்னும் ஆழமான யோசனைகள் தான் என்னை ஆட்டிப்படைச்சுக்கிட்டு இருக்கு.
கோபால்: என்ன?
ஹரேன்: எனக்கு நேரம் கம்மியா இருக்கு. நான் போய், பேரணியை பத்தி எடுத்து சொல்லி அதுல கலந்துக்க மாணவர்களைச் சம்மதிக்க வைக்கணும்.
கோபால்: போறதுக்கு முன்னாடி, நீ என்ன சொல்ல வந்தேன்னு சொல்லிட்டுப் போ.
ஹரேன்: எப்பவும் மாறிக்கிட்டே இருக்குற இந்த இயற்கையை எதிர்த்துப் போராடி புதுப் புது வழிகளைக் கண்டுபிடிச்சு தான் இந்தப் பூமியில உயிர்கள் வாழ்ந்துகிட்டு இருக்கு. பூமியில இருக்குற இனங்கள் அழிவுல இருந்து தப்பிக்க பற்களையும், நகங்களையும் கூர்மையா மாற்ற வேண்டியிருக்கு. இயற்கையோட மாற்றங்களுக்கு ஏற்ப உடல்களையும் பழக்கப்படுத்த வேண்டியது இருக்கு. மனுஷங்களும் அதையே தான் செய்யுறாங்க. ஆனா மனிதர்கள் சபிக்கப்பட்டவங்க. அதனால, நாம உடல்களுக்குப் பதிலா நம்மளோட மனசுக்கு கவசத்தை ஏற்படுத்த வேண்டியது இருக்கு. அப்படி செய்யலேனா, நாம இந்தச் சோதனையான காலகட்டத்துல பூமியில இருந்தே துடைத்தெறியப்பட்டிடுவோம்.
கோபால்: நீ எப்பவுமே புதிர் போட்டு தான் பேசுவ.
ஹரேன்: அதுல ஒன்னும் தப்பில்ல சகோதரா. எனக்கு இப்போ நேரமே இல்ல.
(அவன் செல்லத் தயாராகிறான்)
கோபால்: கொஞ்சம் பொறு. (அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு) என்கிட்ட எந்தப் புதிரும் இல்ல. நான் நேராவே பேசுறேன். நான் என் குடும்பத்துக்குச் சாப்பாடு போடணும். நான் பாட்டு புத்தகங்கள் எழுதி வெளியிட உதவி பண்றேன்னு சொல்லியுருந்தேல. அதுக்கு ஏற்பாடு பண்ணு. நான் என்னோட பாடல்களை விற்குறேன்.
ஹரேன்: அப்போ சரி, என் கூட வா. (தேபுவை நோக்கி) உங்களை அப்புறமா பார்க்குறேன் தேபு பாபு. (கோபாலை பார்த்து) நீ, வா, நாம கிளம்புவோம். ஆனா நீ ஒரு விஷயம் மட்டும் பண்ணனும்.
கோபால்: என்ன?
ஹரேன்: நீ உன்னோட அகராதில இருந்து அந்த வார்த்தையை மட்டும் அழிக்கணும்.
கோபால்: அடக் கடவுளே!
கேட்டு: என்ன விஷயம்?
கோபால்: நான் நம்ம வீட்டையும், நிலத்தையும் விற்குறதுக்கு காலிம்க்கு கடிதம் அனுப்பப்போறேன். நம்மளோட விலாசத்தையும் சேர்த்து அனுப்புறேன்.
கேட்டு: விற்கவா?
கோபால்: அண்ணனும் நானும் பேசி தான் ஒரு முடிவுக்கு வந்துருக்கோம்.
கேட்டு: நீங்க முடிவெடுத்துட்டீங்க சரி, ஆனா என்னோட முடிவை யாரும் கேக்க மாட்டிங்களா?
கோபால்: மறுபடியும் ஆரம்பிக்காதீங்க! எல்லைக்கு அந்தப் பக்கம் வீடு, நிலம் வச்சிருக்குறதுனால என்ன பிரயோஜனம்? நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அங்க நமக்கு சொத்துபத்து இருக்கு, ஆனா இங்க நாம பட்டினியில செத்துக்கிட்டு இருக்கோம். இதுல ஏதாவது அர்த்தம் இருக்கா சொல்லுங்க? அதுக்குப் பதிலா அந்தச் சொத்துக்களை வித்து அதுல வர காசுல இங்க ஏதாவது செய்யலாம். காலிம்ட்ட இருந்து பதில் கிடைச்சதும், நான், இல்லைனா அண்ணன், யாராவது ஒருத்தர், பத்திரங்களை எடுத்துட்டு போயி வேலையை முடிசிட்டு வந்துருவோம்.
கேட்டு: உனக்குத் தெரியுமா, உனக்குன்னு இன்னும் ஒரு விலாசம் அங்க இருக்கு? அதை நீ இழந்தேன்னா, அப்புறம் துண்டாடப்பட்ட வங்காளத்துல நீ ஒண்ணுமில்லாத இலைதழை மாதிரி ஆக வேண்டியது தான். இந்த உலகத்துல உனக்குன்னு ஒரு விலாசமே இருக்காது.
கோபால்: நாம நம்ம விலாசத்தை இங்க உருவாக்குவோம். பத்மா, நான் காலிம்க்கு இன்னைக்கு கடிதம் அனுப்பப் போறேன்னு அண்ணன் கிட்ட சொல்லிடு. இன்னும் கொஞ்ச நாட்கள்ல எப்படியும் அவன் பதில் போட்டுடுவான்னு நினைக்கேன்.
கேட்டு: அந்த வீடும் நிலமும் என்னோடது.
கோபால்: இங்க பாருங்க அப்பா, நீங்க இந்த விஷயத்துல எதுவும் பிரச்சனை பண்ணீங்க அப்படினா நான் இனியும் பொறுமையா இருக்க மாட்டேன்.
பத்மா: அண்ணா, நீ கடிதத்தை அனுப்பு. அப்பாவை நான் சமாதானப்படுத்திக்குறேன்.
கேட்டு: என்னால ஏத்துக்க முடியாது. எனக்கு அந்த வீட்டைத் தவிர வேற எதுவும் இல்ல.
கோபால்: நூற்றுக்கணக்கான மைல்கள் தள்ளியிருக்க உங்க வீடு எந்த பயனும் இல்லாம புழுத்துப்போயிட்டு இருக்குறப்போ, நீங்க இங்க பசியில சாகணும்னு விரும்புறீங்களா!
கேட்டு: இங்க யாராவது உயிர் வாழ முடியும்னு நீ நினக்குறியா? எல்லாரும் அழிஞ்சு மண்ணோட மண்ணா போயிடுவாங்க.
ஹரேன்: நீங்க இப்ப சொன்னது தான் ரொம்ப சரியான விஷயம்.
கோபால்: நிறுத்து. அப்பாவுக்குப் புத்தி பேதலிச்சு போயிடுச்சு. இங்க இருக்குற யாரும் நிதானமான மனநிலையில சிந்திக்குறது இல்ல. நான் இந்தக் கடிதத்தை அனுப்பத்தான் போறேன்.
கேட்டு: வேண்டாம்.
கோபால்: என்ன நடந்தாலும் சரி, நான் கடிதத்தை அனுப்பத்தான் போறேன்.
கேட்டு: வேணாம், கோபால்.
கோபால்: பண்டிட், வா போகலாம்.
கேட்டு: நான் என்னோட வாழ்க்கையை எவ்வளவு மனநிறைவோட ஆரம்பிச்சேன், அது இப்போ இப்படித் தான் முடிவுக்கு வரணுமா?
கோபால்: வா போகலாம், பண்டிட், வா போகலாம்.
(அவர்கள் செல்கின்றனர்)
கேட்டு: இது நியாயமா, நீயே சொல்லு பத்மா?
(பத்மா கேட்டுவை அறைக்கு அழைத்துச் செல்கிறாள். அவள் திரும்பி வரும்போது, தேபு கீழே ஒரு ரூபாய்த்தாளை வைக்கிறான்)
பத்மா: பாபு----
(தேபு திடுக்கிட்டுப் பார்க்கிறான்)
தேபு: சொல்லுங்க, அதாவது---
பத்மா: நீங்க என்ன பண்றீங்க?
தேபு: நான் ரொம்ப ஏழை தான், இருந்தாலும்----
பத்மா: என்ன?
தேபு: அனுபவங்களைச் சேகரிக்கவும் விலை கொடுக்கணும்னு உங்க அண்ணி சொன்னாங்க. அதான் இந்தக் காசை இங்க வச்சுட்டுப் போறேன்.
(அவன் வெளியேற முற்படுகிறான், பத்மா அவனை அழைக்கிறாள்)
பத்மா: பாபு----
தேபு: இங்க பாருங்க, உங்க துயரத்துல பங்கெடுத்துகிறதுக்குறதுக்காக இந்தக் காசை கொடுக்கல. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்ல. எனக்கு அது பிடிக்கவும் பிடிக்காது. அதனால தப்பா எடுத்துக்காதீங்க.
(தேபு போஸ் வெளியேறுகிறான். பத்மா, உடைந்த பூந்தொட்டியைப் பார்க்கிறாள். ஹாரு திரும்பி வருகிறான். பத்மா அவன் மீது கைகளைச் சுற்றி அணைத்துக் கொள்கிறாள். ஹாரு, 'சித்தி' என கூறி அழத் தொடங்குறான். பத்மா அவனைக் கட்டியணைத்து தேற்றுகிறாள்)
------------------------------------------திரை
வீழ்கிறது-----------------------------------------

கருத்துகள்
கருத்துரையிடுக