கரப்பான் அரசியலில் எச்சரிக்கை தேவை -அழகுராஜ் ராமமூர்த்தி
கரப்பான் அரசியலில் எச்சரிக்கை தேவை -அழகுராஜ் ராமமூர்த்தி
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று இந்திய கல்வி அமைச்சருக்கு எதிரான போராட்டம் அமைதியான முறையில் தொடங்கப்பட்டுள்ளது. மும்மொழி கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ என தீவிரமாகப் பேசும் தர்மேந்திர பிரதான் நீட் குளறுபடி உள்ளிட்ட சமீபத்திய நாட்களில் நிகழும் கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகளில் முறையான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யுஜிசி நெட் தேர்வுக்கான முதல் தாள் கசிந்தது. இப்போது நீட் தேர்வுத்தாள் கசிவு. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் குளறுபடி என பல்வேறு பிரச்சனைகள் தொடர்ச்சியாக வருகின்றன. அரசு நடத்தும் தேர்வுக்கான வினாத்தாள்கள் தொடர்ச்சியாக தேர்வு நடைபெறும் முன்னரே வெளியாகிக் கொண்டிருக்க நாடு முழுக்க ஒரே கல்வி என்ற அறிவிப்பை வேறு செயல்படுத்த துடித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட அமைச்சகத்தின் கீழ் கல்வியை ஒருங்கிணைப்பது சீர்கேடாகத் தான் முடியும். தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் முந்தைய அரசின் நிலைப்பாடுகளை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்கிறார். அதன்படி தமிழகப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் இனி யார் என்ற கேள்வி எழுகிறது.
இந்தியக் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி போராடும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தோற்றம் மற்றும் அதன் நடவடிக்கைகள் மீது எனக்கு உவப்பில்லை என்றாலும் கூட இந்தப் போராட்ட அறிவிப்பை வரவேற்கிறேன். இந்தக் கட்சி உருவான விதம் மற்றும் இதனைத் தொடங்கியவரைச் சுற்றி உருவாக்கிப்படும் செய்திகள் முதலானவை விவாதிக்கத் தகுந்தவை. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் களமாக இணையதளம் மட்டுமே இருக்கிறது. இதனை அக்கட்சியின் வலைதளம் மூலமாகவே நாம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு முன் இணையத்தை மட்டுமே களமாகக் கொண்டிருந்தோர் ஒன்றுகூடி போராட்டம் நிகழ்த்தி உலகளவில் கவனம் பெற்று தங்கள் கோரிக்கையை 15நாளில் நிறைவேற்றியதற்கான வரலாறு இந்தியாவிற்குள்ளேயே உண்டு. 2017ல் தமிழ்நாட்டில் மெரினா கடற்கரையில் தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போராட்டமே அது. ஜல்லிக்கட்டுக்கான தடையைத் திரும்பப்பெற வேண்டும் என்பது குறிக்கோளாக இருப்பினும், அதனைக் கடந்த பல மாநில உரிமைகள் சார்ந்த கோரிக்கையும் போராட்டத்தில் ஈடுபட்ட பலரால் முன்வைக்கப்பட்டது. போராட்டத்தின் ஒரு பகுதியாக எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் தன்னுடைய கானகன் நாவலுக்காக வழங்கப்பட்ட விருதைத் திருப்பித் தருவதாக அறிவித்ததுடன் மாநில உரிமை சார்ந்த பல கோரிக்கைகளையும் முன்வைத்தார். அதற்கு அடுத்தபடியாக இணையதளத்தின் வழி இணைந்தவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டக்களமாக இன்று டெல்லியின் ஜந்தர்மந்தர் மாறியுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சார்பான போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கும் இடையில் இணையத்தால் இணைந்தவர்கள் என்ற ஒற்றுமை இருப்பினும் பல்வேறு வகை வேறுபாடுகள் உண்டு. ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தில் இருந்தவர்கள் பல்வேறு துறைகளில் பணியிலிருந்தவர்கள். தங்கள் இனத்திற்கான உரிமை என்கிற ஒற்றைப் புள்ளியில் இணைந்தனர். ஜல்லிக்கட்டு உண்மையிலேயே ஒட்டுமொத்த தமிழினத்திற்கான அடையாளமா? என்பது போன்ற சமூகவியல் ஆய்வுகள் ஒருபுறம் இருப்பினும் அவர்கள் இணைந்த புள்ளி என்பது இனத்திற்கான உரிமை என்பதேயாகும். கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு இந்திய அளவில் மற்றும் உலக அளவில் பல்வேறு ஆதரவாளர்கள் இன்று தோன்றியிருக்கின்றனர். அப்படியான ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையிலேயே ஆதரவு தெரிவிக்கின்றனர். இதுவொரு மேம்போக்கான ஆதரவு என்றே நான் பார்க்கிறேன். அதில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் அறிக்கைகளில் சிலவற்றில் நான் உடன்படுகிறேன். ஆனால் அவர்கள் தங்கள் கட்சியில் சேர்வதற்கான தகுதிகளாக கூறப்பட்டுள்ளவை உளவியல் ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியன.
"அறிக்கை
ஒருமுறை படியுங்கள். இருமுறை படியுங்கள். பிறகு, படிக்க வேண்டிய ஒருவருக்கு அனுப்புங்கள்.
01. தலைமை நீதிபதி ஆட்சிக்கு வந்தால், எந்தவொரு தலைமை நீதிபதிக்கும் ஓய்வுக்குப் பிந்தைய வெகுமதியாக மாநிலங்களவை இருக்கை வழங்கப்படாது .
02. சிஜேபி ஆளும் மாநிலத்திலோ அல்லது எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்திலோ, எந்தவொரு முறையான வாக்கும் நீக்கப்பட்டால், குடிமக்களின் வாக்குரிமையைப் பறிப்பது பயங்கரவாதத்திற்குச் சற்றும் குறைவானதல்ல என்பதால், தலைமைத் தேர்தல் ஆணையர் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் .
03. நாடாளுமன்றத்தின் பலத்தை அதிகரிக்காமல், பெண்களுக்கு 33% என்பதற்குப் பதிலாக 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் . மேலும், அனைத்து அமைச்சரவைப் பதவிகளிலும் 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
04. உண்மையான சுதந்திரமான ஊடகங்களுக்கு வழிவகுக்கும் வகையில், அம்பானி மற்றும் அதானிக்குச் சொந்தமான அனைத்து ஊடக நிறுவனங்களின் உரிமங்களும் ரத்து செய்யப்படும் . கோதி மீடியா தொகுப்பாளர்களின் வங்கிக் கணக்குகள் விசாரிக்கப்படும்.
05. ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவும் எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ, 20 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும், எந்தவொரு பொதுப் பதவியையும் வகிப்பதிலிருந்தும் தடை செய்யப்படுவார் .
தகுதியானவரா ?
நாங்கள் மதம், சாதி அல்லது பாலினத்தை சரிபார்ப்பதில்லை. இருப்பினும், எங்களிடம் நான்கு (4) தரநிலைகள் உள்ளன.
01. வேலையில்லாதவர்கள்
02. சோம்பேறி
03. கழிவறை இடைவேளைகள் உட்பட, ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 11 மணிநேரம் இணையத்தில் இருப்பவர்கள்
04. தொழில்முறையாகப் புலம்புபவர்கள்
தேர்தல் ஒழுங்கு, கட்சித் தாவல், பெண்கள் இட ஒதுக்கீடு போன்ற நல்ல அம்சங்கள் இருப்பினும் ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு மாநிலங்களவையில் இடம்பெற வாய்ப்பில்லை என்பது தனிப்பட்ட வகையிலான கருத்து ஒன்றுக்கான எதிர்ப்பு. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், சில வேலையில்லாத இளைஞர்களை 'கரப்பான்பூச்சிகள்' மற்றும் 'ஒட்டுண்ணிகள்' என விமர்சித்ததையொட்டி இதனை தங்கள் அறிக்கையில் முதலாவது அறிக்கையாக வைத்துள்ளார்கள். அடிப்படையில் இது வெறுப்புணர்வின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. முன்னர் வடிவமைத்து வைத்திருந்த திட்டத்தைச் செயல்படுத்த நீதிபதியின் கருத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறுப்புணர்வின் அடிப்படையில் ஒன்றிணைதல் என்பதே நிகழ்கால போக்காக இருப்பதால் அதனையே இவர்களும் கையிலெடுத்துள்ளனர். நீதிபதிகள் ஏகப்பட்ட வழக்குகள் மூலம் நாட்டில் உள்ள மக்களின் பிரச்சனைகள், பிரச்சனைக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் என நீண்ட நேடிய அனுபவமுடையவர்கள் அரச பொறுப்பில் இருப்பது நாட்டு நலனுக்கு உகந்தது என்ற அடிப்படை புரிதலற்ற கருத்து.
வேலையில்லாத இளைஞர்கள் என்பதற்கு பதிலாக வேலை தேடாத இளைஞர்கள் என அவர் கூறியிருந்திருக்கலாம். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பல்வேறு வகையிலான வேலைவாய்ப்பு குறித்து தெரிந்து கொள்ளாமல் வேலை தேடாமல் சோம்பேறியாக இருப்பவர்களை அவர் விமர்சித்திருப்பதை நான் வரவேற்கிறேன். அதேசமயம் கற்ற கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்பைப் பெறுவதில் இந்தியாவில் பெருத்த சிரமங்கள் இருக்கின்றன என்பதும் மறுப்பதற்கில்லை. அவை கட்டாயம் வருங்காலத்தில் முறைப்படுத்தப்பட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான கருத்துகளை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நாள்தோறும் எக்கச்சக்க மீம்ஸ்களும் விமர்சனங்களும் வலைதளங்களும் உருவாகிக் கொண்டிருக்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற வலைதளம் மட்டும் எப்படி இவ்வளவு கவனம் பெற்றது. இதுவும் ஒரு கார்ப்பரேட் திசைதிருப்பலாக இருக்கலாமோ என்ற பார்வை எனக்குண்டு.
இவர்கள் வரையறுத்துள்ள தகுதிகள் உளவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியன. இவர்கள் தகுதி என வரையறுக்கப்பட்டதற்கு தகுதியானவர்கள் அனைவரும் மனரீதியான பிரச்சனைக்குரியவர்கள். முன்னர் தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சியைப் பிடித்ததை Zoombies புரட்சி என விமர்சித்திருந்தேன். இப்போதும் அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேபோன்ற ஒரு சூழல் இந்திய அளவில் வந்துவிடக்கூடாது. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவின்போது வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலவகையில் எள்ளலுக்கு உள்ளாகினர். அதேபோன்ற ஒரு நிலை உலகளவில் வசிக்கும் இந்தியர்களுக்கு உருவாவதற்கான அபாயக்குறியீடாகவும் இதனைப் பார்க்கலாம். இளைஞர் சக்தியை நன்குணர்ந்து சில தொலைநோக்கு திட்டங்களை வகுத்தவர் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். அவரின் திட்டம் வெற்றிப்பாதையை நோக்கி நகரவில்லை. இன்று அண்ணாமலை போன்றவர்கள் அதைக் குறிவைத்து அப்துல்கலாமை கையில் எடுக்கத் தொடங்கியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எத்தனையோ இணையபக்கங்கள் இருக்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மட்டும் இவ்வளவு ஆதரவையும் கவனத்தையும் பெறுவது ஒற்றை நீதிபதியின் கருத்துக்கு எதிரான எதிர்வினை மட்டுமல்ல. அதுவொரு மூளையை மழுங்கடிக்கும் திட்டத்திற்கான முன்னோட்டத்தின் தொடக்கம். இந்திய கல்வித்துறை அமைச்சருக்கு எதிரான போராட்டத்தை உள்ளபடியே வரவேற்கிறேன். ஆனால், அந்த ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை விதந்தோதும் போக்கு முட்டாள்தனமாக படுகிறது. பா.ஜ.க எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் பலருக்கும் இப்போராட்டம் காலத்தின் தேவையான நிகழ்வு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்தப் போராட்டத்தின் மூலம் பல்வேறு மக்களிடம் ஆதரவைப் பெறும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வருங்காலத்தில் என்னவாகும் என்பது காலம் தான் உணர்த்தும். வெறும் நையாண்டி இயக்கம் என இருந்தது இன்று வீதியில் கூடி போராட தொடங்கியுள்ளது. இதுவொரு நல்ல சமிக்ஞை என்றாலும் கூட இதன் அடுத்தக்கட்டம் என்ன என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் தற்போது அரசியல் குறித்து விவாதிக்க தொடங்கியுள்ளனர். வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால் இங்கே அவர்களால் நிகழ்ந்துள்ள மாற்றம் என்பது வளர்ச்சிக்குரியதல்ல என்பது வருத்தமளிக்கக்கூடியது. இதேநிலை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் மூலம் வருங்காலத்தில் நிகழ இருப்பதற்கான அபாயம் அதிகமுண்டு.
இந்தியா வருவதற்கு முன்பே அபிஜித் திப்கே பற்றிய எதிர்பார்ப்பை வளர்த்தெடுக்க தொடங்கினர். அவரது குடும்பத்தினருக்கும் ஆளும் அரசுக்கும் இதில் அதிகளவு பங்குண்டு. எப்படி ஆளுநர் ஆட்சி அமையக்கூடாதென கொள்கை உறுதிப்பாடுடைய கட்சிகள் தமிழ்நாட்டில் புதிய அரசு அமைய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்களோ அதேபோன்ற பலதரப்பினரின் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் உத்தியை கரப்பான்பூச்சிகள் கையிலெடுக்கத் தொடங்கியுள்ளனர். அதன் ஒருபகுதியாக அம்பேத்கரையும் காட்டுகின்றனர். அதிகளவில் இளைஞர்களை குடிமக்களாகக் கொண்ட இந்தியாவில் வாழும் இளைஞர்கள் தற்போதைய அரசு அமைப்பின் மீது விரக்தியடைந்துள்ளனர். அதற்கு பல்வேறு காரணங்களுண்டு. அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் எத்தகைய மாற்றம் என்கிற தெளிவற்ற குழப்ப நிலையால் பீடிக்கப்பட்டுள்ளனர். அதனைப் பயன்படுத்தி அவர்களைக் கரப்பான்பூச்சியின் குணாதிசயங்கள் உடையவர்களாக மாற்றும் முயற்சி ஒன்று நிகழ்கிறது. இன்றைய சூழலில் இதனை வெற்று நையாண்டி என புறம்தள்ள முடியாது.
இலக்கியம் உருவகித்துள்ள கரப்பான்பூச்சி அதிகாரத்திற்கெதிரான குரலாக அருவருப்புக்கு எதிரான முனைப்பாக இருந்திருக்கிறது. தலையை வெட்டினாலும் தன்னம்பிக்கை தளராத உயிராகவும் காட்டப்பட்டுள்ளது. அதேசமயம் அது இருளில் ஒளிந்து நோயை கமுக்கமாகப் பரப்பும் திருட்டுத்தனத்துக்கும் பாத்தியப்பட்டது. இந்தக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வெளியரங்கத்தில் அதிகார எதிர்ப்பாக தற்போது தென்படுகிறது. நோயைப் பரப்பும் உள்நோக்கமுடையதாக அது வளருமோ என்ற சந்தேகம் எனக்கு ஆழமாக இருக்கிறது. பொறுமையாக சிந்திப்போம். விவாதிப்போம். சில இணைப்புகளைக் கீழே தந்துள்ளேன். அதனையும் வாசியுங்கள்..
இணைப்புகள்
"வேண்டாம்டா மகனே".. டிரெண்ட்டிங்கில் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி".. நிறுவனரின் பெற்றோருக்கு நேர்ந்த கதி | Cockroach Janta Party founder Abhijeet Dipke Parents fears and advices their son don't involve politics - Tamil Oneindia https://share.google/ct0zSpEh2NH0FR29r
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்பது என்ன? யார், எதற்காக தொடங்கினார்? முழு விவரம் - BBC News தமிழ் https://share.google/rt1blzqrvNLqFF379
தலைமை நீதிபதி விமர்சனத்தை தொடர்ந்து ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ பெயரில் புதிய கட்சி இணையத்தில் தொடக்கம்: 6 நாளில் 1.55 கோடி இளைஞர்கள் இணைந்தனர் - Dinakaran - Dinakaran https://share.google/CagGdZQiw94afRkGs
Cockroach Janta Party — Voice of the Lazy & Unemployed https://share.google/nUQjBZ1Vq5MyT2p7O



கருத்துகள்
கருத்துரையிடுக