குடும்பத்தேர் (இரண்டாம் அலை) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)
குடும்பத்தேர் (இரண்டாம் அலை) -ரித்விக் கட்டக்
(தமிழில் -தீனன்)
(காட்சி, வங்கதேசத்தில் இருந்து கல்கத்தாவின் சியால்டா ரயில் நிலையத்திற்கு மாறுகிறது. மேடையின் பின் புறம் ஒரு தடுப்புச் சுவர் அமைப்பும் இடதுபுறம் ஒரு தூணும் காணப்படுகிறது. ரயில்கள் வருவதும் கிளம்புவதுமான சத்தங்களும், அவற்றின் விசில் சத்தங்களும் பின்னணியில் ஒலிக்கின்றன. அங்கு ஜனக் கூட்டம் நிறைந்திருப்பதை உணர்த்தும் ஒலிகளும் இரைச்சல்களும் கேட்கின்றன. ரயில் நிலைய வளாகம் நெடுகிலும் நடைபாதைகளில் இடப்பட்ட படுக்கை விரிப்புகளில் மக்கள் பலர் படுத்திருக்கின்றனர். டிரங்கு பெட்டிகள், துணி மூட்டைகள் மற்றும் பிற உடைமைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. சால்வையைப் போர்த்தியவாறு கேட்டு ஒருபுறம் அமர்ந்திருக்கிறார். பின்புறம் சுவர்ணோ தூங்கிக்கொண்டிருக்கிறாள். கேட்டுவுக்கு எதிர்புறமாக தேபேந்திர் அமர்ந்திருக்கிறான். கேட்டு, பாடல் ஒன்றை முணுமுணுக்கிறார்.)
கேட்டு: "என் வீட்டுக்கு எந்த நிறத்தைத் தந்தாயோ, நான் இந்த உலகில் சிறைப்பட்டிருக்கிறேன்...."
தேபேந்திர்: சித்தப்பா (காக்கா - தந்தையின் இளைய சகோதரர்) இன்னும் எத்தனை நாள் இந்த நிலைமை நீடிக்கும்னு நினைக்குறீங்க?
கேட்டு: நான் செத்துச் சிதையில ஏறுற வரைக்கும்.
தேபேந்திர்: இன்னும் ரொம்ப மோசமான நாட்கள் வரும் போல தெரியுது. இன்னையில இருந்து தன்னார்வலர்கள் பால் விநியோகிக்கப்போறது இல்ல. இதுக்கப்புறம் நம்ம தலைவிதி என்னாகுமோ தெரியல.
கேட்டு: இந்தப் போலியான உலகத்துல நம்மால இனியும் ஒரு வீட்டை உருவாக்க முடியாது. நாம இங்க என்ன நிலைமையில இருக்குறோம்ங்குறத பார்த்து நான் ரொம்ப குழம்பிப்போயிருக்கேன். நான் எதுவும் பேச முடியாத ஊமையாகவே மாறிட்டேன்.
(கேட்டு மெதுவாக எழுகிறார்)
தேபேந்திர்: எங்க போறீங்க நீங்க?
கேட்டு: முகம்; கை; கால் கழுவுறதுக்கு. தண்ணி ஒன்னு தான் இன்னும் நமக்கு இங்க காசு கொடுக்காம கிடைக்குது. ஆனா இன்னும் கொஞ்ச நாட்கள்ல இந்த நாட்டுல அது நடந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல.
தேபேந்திர்: அண்ணி!
சுவர்ணோ: என்னப்பா?
தேபேந்திர்: பத்மா எங்க காணோம்?
சுவர்ணோ: அவ வெளிய உட்கார்ந்து புத்தகம் படிச்சுக்கிட்டு இருக்குறா.
தேபேந்திர்: இந்தப் பொண்ணு இங்க வந்ததுல இருந்து மொத்தமா மாறிக்கிட்டு வர்றா.
சுவர்ணோ: அவ மனசுல ஏதோ ஒரு விஷயம் ஓடிக்கிட்டே இருக்குற மாதிரி இருக்கு. எந்நேரமும் ஏதோ யோசனையாவே இருக்குறா, தொடர்ந்து புத்தகங்களை வாங்கிகிட்டு இருக்குறா.
தேபேந்திர்: கோபால் மேலதான் தப்பு. அவன் மட்டும் அவளுக்குப் புத்தகங்களை அறிமுகம் செய்யாம இருந்திருந்தான்-ன்னா...
சுவர்ணோ: இப்போ-லாம் எனக்கு எதுவுமே செய்ய பிடிக்கல. இங்க வந்ததுல இருந்து நான் என்னால ஆன மட்டும் மத்தவங்களோட சண்டை போட்டுட்டேன். இந்த சத்தமும், ஜன நெருக்கடியும் என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுகிட்டு இருக்கு.
தேபேந்திர்: மனச தளர விட்றாதீங்க. உங்களுக்குத் தைரியம் தர மாதிரி ஒரு விஷயம் சொல்றேன். நேத்து, பிர்குட்சாவுல கிளார்க் வேலை பார்க்குற ஆளை தற்செயலா சந்திச்சேன். அவர் கிட்ட ஒரு விஷயம் சொல்லி வச்சிருக்கேன்.
சுவர்ணோ: என்ன விஷயம்?
தேபேந்திர்: சொல்றேன். ஆனா கோபாலுக்கு மட்டும் இது தெரியாம பார்த்துக்கோங்க. அந்த கிளார்க் டவுன்ல இருக்குற வசதியான ஆட்களோட இங்க வந்தவரு. இப்போ அந்த வசதியான ஆட்கள் எல்லாம் கல்கத்தாவுல நல்ல வேலையைத் தேடிக்கிட்டாங்களாம். ஆனா நம்ம தவிப்பு இன்னும் தீர்ந்த பாடில்ல. சரி அது இருக்கட்டும். விஷயத்துக்கு வரேன். அந்த கிளார்க் இன்னைக்கு அவங்களை சந்திக்கப் போறாராம். எனக்கு கொஞ்சம் நிலம் கிடைக்க வாய்ப்பு இருக்குற மாதிரி தெரியுது. ஆனா அதுக்கு நான் ராணாகாட்-க்கு போகணும். அதனால நான் இப்போ கிளம்பியாகணும்.
சுவர்ணோ: இங்க பாரு பா, இன்னைக்கு நமக்குச் சாப்பிட எதுவும் இல்ல. இதைப் பைதக்கானா சந்தையில இருக்குற அந்த நகை வியாபாரிகிட்ட கொண்டு போறீயா?
(சுவர்ணோ, தனது தங்க வளையலைக் கழற்றுகிறாள்)
தேபேந்திர்: மறுபடியுமா? இப்படி எல்லாத்தையும் கொடுத்துடீங்கன்னா வேற என்ன மிச்சம் இருக்கும், அண்ணி?
சுவர்ணோ: ஒன்னும் பேசாத. இதை எடுத்துட்டுப் போ. நான் இப்படிச் செய்யுறதை அவங்க எல்லாரும் பார்த்தா ரொம்ப வேதனைப்படுவாங்க.
(தேபேந்திர் செல்கிறான். கேட்டு வருகிறார்)
கேட்டு: மகிந்தர், எந்திரி.
(படுக்கையில் படுத்திருந்த மகிந்தர் எழுத்துகொள்ளாமல் மறுபுறமாகத் திரும்பிப் படுக்கிறான்.)
சுவர்ணோ: பொழுது விடிஞ்சு ரொம்ப நேரம் ஆகிடிச்சு.
(சுவர்ணோ கிளம்ப முற்படுகிறாள்.)
கேட்டு: மருமகளே, ஹூக்காவைத் தயார் பண்றியா. மனசுக்கு ஆறுதலா கொஞ்சம் புகைக்க விரும்புறேன்.
சுவர்ணோ: எனக்கு ஏற்கனவே தாமதம் ஆகிடுச்சு. நான் இப்போ போகலேனா, துணி துவைக்க இடம் கிடைக்காம போயிடும்.
கேட்டு: சரி. போய் தண்ணி எடுத்துட்டு வா. ஜனங்க எல்லாரும் ரொம்ப வினோதமா மாறிக்கிட்டு இருக்காங்க. அப்புறம் இந்த வானம், இந்த வானத்தை தான் பார்க்கணுமே! இது எப்போவாவது சிரிக்குமா, இல்ல இப்போ இருக்குற மாதிரி இப்படித்தான் எப்பவும் சோகமாவே இருக்க போகுதா?
(நபர் ஒருவர் கால்தவறி மகிந்தரை மிதித்துவிடுகிறார்)
மகிந்தர்: ஏய்!
நபர்: மன்னிக்கணும். தெரியாம மிதிச்சிட்டேன்.
மகிந்தர்: இங்க ஆள் படுத்திருக்குறது உன் கண்ணுக்குத் தெரியலையா?
நபர்: நடக்குறதுக்கு போடப்பட்ட நடைபாதையில நீங்க எல்லாம் படுத்திருந்தா நான் என்ன பண்ண முடியும்?
மகிந்தர்: அப்போ, நாங்க தூங்குறதுக்கு இடம் கொடுங்க. கொடுக்க முடியுமா! நாங்க எல்லாரும் விருப்பப்பட்டு ஒன்னும் இங்க படுத்துத் தூங்கல.
கேட்டு: அவரைப் போக விடு. காலையிலேயே சண்டை போட்டு, அமைதியைக் கெடுக்காத.
(நபர் அங்கிருந்து நடந்து வெளியேறுகிறார். கோபால் எழுந்துகொள்கிறான்)
மகிந்தர்: சரி, ஹாரு எழுந்திரி, சோம்பேறித்தனமா இருக்காத. வா, முகம்; கை; கால் கழுவிட்டு வருவோம்.
ஹாரு: அப்பா, இன்னைக்கு பேரணி நடக்கப் போகுது தானே? நாமளும் அதுல கலந்துக்க வேண்டாமா?
மகிந்தர்: அதுக்கு இவ்வளவு காலையிலேயே என்ன பண்ணனும்னு சொல்லுற? வா. வா போவோம்.
(மகிந்தர் ஹாருவைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான்)
கேட்டு: கோபால், எனக்கு ஒரு பீடி கொடு.
கோபால்: சரி தரேன்.
கேட்டு: இன்னைக்கு வானம் ஒரே புகைமூட்டமா இருக்கு.
கோபால்: இது கல்கத்தா நகரம், அப்பா!
கேட்டு: கல்கத்தா!
கோபால்: ஏன், என்ன ஆச்சு?
கேட்டு: எனக்கு இந்த கல்கத்தாவே வேண்டாம். இதுவரைக்கும் நான் பார்த்ததே போதும். இந்துஸ்தான், இந்து சகோதரத்துவம்னு கேட்டது எல்லாமே போதும்.
கோபால்: கவனமாகப் பேசுங்க. சுற்றி நிறைய பேர் இருக்காங்க.
கேட்டு: சரி, நீ நேரத்தை வீணடிக்காத. போ, முகம்; கை; கால் கழுவிட்டு வா.
(கோபால் புன்னகைத்தவாறு எழுந்துச் செல்கிறான். பத்மா கையில் புத்தகத்துடன் வருகிறாள்)
கேட்டு: என்ன எஜமானி, காலை நடைப்பயணம் எல்லாம் முடிஞ்சதா?
பத்மா: அப்பா, வெளிய நிறைய பேர் கூடியிருக்குறதைப் பார்த்தேன். அவங்க எல்லாரும் அரசாங்கப் பிரதிநிதிகளை சந்திக்கப் போறாங்களா?
கேட்டு: ஆமா.
பத்மா: அரசாங்கத்துனால தான் நாம இங்க இந்த நிலைமையில இருக்கோம். பாகிஸ்தானும் அந்த அரசாங்கத்துனால தான் உருவாச்சு, அப்படித்தான அப்பா?
கேட்டு: ஆமா.
பத்மா: அப்படினா, நம்மளைக் கவனிச்சிக்கிறதும் அரசாங்கத்தோட பொறுப்பு தானே.
கேட்டு: உண்மைதான்.
பத்மா: அவங்க எல்லாரும் இதைத்தான் அரசாங்கத்துக்கிட்ட எடுத்துச் சொல்ல போறாங்க.
கேட்டு: ஆமா.. ம்மா.
பத்மா: சரி, வாங்க, என்ன நடக்குதுன்னு பார்க்கப் போவோம்.
(கேட்டு பத்மாவின் சேலை முந்தியை எடுத்து அவளின் தலையில் போர்த்துகிறார். பத்மா, அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கிறாள்.)
கேட்டு: எனக்கு இந்த நாட்டைக் கொஞ்சம் கூட பிடிக்கல.
(பத்மா புன்னகைக்கிறாள்)
பத்மா: உங்களுக்கு நாம விட்டுட்டு வந்த வீட்டு தோட்டம் ஞாபகம் வந்துடுச்சா?
கேட்டு: இல்ல. நான் சுவாசிக்க முயற்சி பண்ணா, அதுக்கு கூட இங்க இருக்குற காத்து ஒத்துழைக்க மாட்டேங்குது. உனக்கு, பத்மா நதி கிட்ட இருக்குற பீம்சென் காடு ஞாபகம் இருக்குதா? நதி பக்கத்துல இருக்குற மேட்டோட சரிவுப்பாதையும், அதுக்கு அடுத்து இருக்குற என்னோட கரும்புத் தோட்டமும் உனக்கு நினைவிருக்கா?
பத்மா: ஏன்?, ஏன் இதையெல்லாம் இப்போ கேட்குறீங்க?
கேட்டு: நான் அங்க இருக்குற சூழல்ல ரொம்ப சுதந்திரமா உணர்ந்தேன்.
பத்மா: ஆனா எனக்கு இப்போ கல்கத்தாவைப் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. இது ஒரு அருமையான நகரம். இங்க இருக்குற கார்களும், விளக்குகளும், இசையும் எல்லாம் நல்லா இருக்கு! இவ்வளவு மனுஷங்க எங்க இருந்து வந்திருப்பாங்க? எல்லாரும் நடக்கும்போது தோளும் தோளும் உரசுர அளவுளுக்கு அவ்வளவு ஜனங்க இருக்காங்க. இந்த நகரத்தைப் பார்க்கும்போது எனக்கு வாய்விட்டுச் சிரிக்கணும் போல தோணுது.
கேட்டு: ஏன் அப்படி?
பத்மா: எந்தக் காரணமும் இல்லாமலேயே எனக்கு ரொம்ப வியப்பா இருக்கு. இந்த ஜனங்க தினமும் அப்படி எங்கதான் இவ்வளவு வேகமாக போறாங்கன்னு என்னால புரிஞ்சிக்கவே முடியல. ஏதோ மிகப்பெரிய விளையாட்டு நடந்துகிட்டு இருக்குற மாதிரி இருக்கு. நான் என்ன சொல்ல வரேன்-னா, என்னால உங்களுக்கு அதை எப்படிச் சொல்லி விளக்குறதுனே தெரியல, அப்பா.
(சுவர்ணோ வருகிறாள்)
சுவர்ணோ: ஒரு வாளி தண்ணி எடுத்துட்டு வா.
பத்மா: வாளியைக் கொடுங்க. நீங்க தண்ணி பிடிக்காம வெறும் வாளியோட வந்திருக்கீங்களே ஏன்?
சுவர்ணோ: தினமும் இதே பாடு தான். எல்லாமே சலிப்பா இருக்கு. ஒன்னு இந்தச் சலிப்பூட்டுற சுழற்சியில இருந்து நான் வெளியே வரணும், இல்லைனா நான் தூக்கு மாட்டிகிட்டு சாகறதுதான் ஒரே வழி....
பத்மா: ஏன் அண்ணி, அப்படி என்ன ஆச்சு?
சுவர்ணோ: தண்ணி பிடிக்கிற இடத்துல நூற்றுக்கணக்கான ஜனங்க இருக்காங்க. என்னால துவைக்கவும் முடியல, தண்ணி பிடிக்கவும் முடியல. அந்த மோசமான ஆண்கள், உற்றுப் பார்த்துகிட்டே இருக்காங்க. அவங்க தலை முடியை பிடிச்சி இழுத்து அவங்க முகங்களை அப்படியே தரையில தேய்க்கலாமானு தோணுது.
பத்மா: சரி, வாளியைக் கொடுங்க, நான் போறேன்.
(பத்மா செல்கிறாள்)
(சுவர்ணோ, சமையல் செய்ய மண் அடுப்பைத் தயார் செய்துவிட்டு, ஒரு பெட்டியைத் திறந்து குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு தலை வாரத் தொடங்குகிறாள். கேட்டு அவளைக் கவனிக்கிறார்)
கேட்டு: அந்தப் பிச்சைகாரங்களோட பேரணிக்கு நீயும் போகப் போறியா என்ன?. போ, அவங்க கூட நடந்தது தான் மிச்சம். நம்மளை இங்க கூட்டிட்டு வந்தவங்க எல்லாம் நகரத்துல நல்லபடியா குடியேறிட்டாங்க. ஆனா பேரணி பேரணியா நடக்குறதே நம்ம தினசரி வேலையா போச்சு.
சுவர்ணோ: பரித்பூர்ல இருந்து வந்த அத்தையும் அவங்க குடும்பமும் இன்னைக்குப் பேரணிக்கு வருவாங்க.
கேட்டு: போம்-மா, போ. எல்லாரும் ஆட்டிக்கிட்டே போக வேண்டியது தான் பேரணியா!. போ.
(தேபேந்திர் அவசரகதியில் வருகிறான்)
தேபேந்திர்: அண்ணி! சித்தப்பா!
கேட்டு: என்ன, என்னாச்சு?
சுவர்ணோ: என்ன ஆச்சு?
தேபேந்திர்: நான் பைதக்கானா சந்தையில இருந்து திரும்பி வந்துகிட்டு இருந்தேன். வழியில ஜனங்க கூட்டமா நின்னுகிட்டு இருந்தாங்க. நான் அதை நின்னு பார்த்துட்டு இருந்தேன். நான் டவுன் ஆட்களை சந்திக்க போகலாம்னு நினைச்சுகிட்டு இருந்தப்போ, எதேச்சையா அந்தப் பைத்தியக்கார பயலைப் பார்த்தேன். கூட்டத்துல இன்னொருத்தனோட நின்னுகிட்டு இருந்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாப் போச்சு.
(ஹரேன் பண்டிட் வருகிறான். அவனை பின்தொடர்ந்து பரட்டைத் தலையுடன் ஒரு முதியவர் வருகிறார். அவரின் பெயர் அர்ஜுன் மலாக்கர். அவர் உள்ளங்கையில் எதையோ இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தார்.)
ஹரேன்: இது நம்ம கேட்டு தானே?
கேட்டு: யாருப்பா நீ?
ஹரேன்: நான் தான் உங்க ஹரேன் பண்டிட். பஞ்சபதியைச் சேர்ந்தவன்.
தேபேந்திர்: இந்தப் பயல் இங்க வந்தும் மாறல. எப்போவும் அங்கேயும் இங்கேயும் சுற்றிக்கிட்டே இருக்கான்.
சுவர்ணோ: தேபேந்திர், நான் சொன்ன வேலையை முடிச்சியா? இல்லேனா எனக்குப் பிரச்சனை ஆகிடும்.
தேபேந்திர்: வேலை எல்லாம் முடிஞ்சது அண்ணி. இந்தாங்க, வாங்கிக்கோங்க. அந்தப் பயல்கள் சரியான ஏமாற்றுக்காரங்க, இவ்ளோ தான் கிடைச்சது (பணத்தைக் கொடுக்கிறான்). சரி நான் டவுன் ஆட்களைச் சந்திக்கக் கிளம்புறேன். நான் திரும்பி வரதுக்குள்ள இருட்டிடும். பண்டிட், உன்னை அப்புறமா வந்து சந்திக்குறேன்.
(தேபேந்திர் செல்கிறான்)
ஹரேன்: நீங்க எல்லாரும் இங்கேயே இருக்கீங்க போல, எப்படி---
அர்ஜுன்: நான் என்னோட விலாசத்தை உனக்குக் கொடுத்திருக்கேன்-----
ஹரேன்: சரி, இப்போ நீங்க கிளம்புங்க, போங்க, போங்க. நேரம் நிறைய இல்ல.
(அர்ஜுன் அங்கிருந்துச் செல்ல, ஹாருவை அழைத்துக்கொண்டு மகிந்தர் வருகிறான்)
ஹரேன்: வணக்கம், மகிந்தர்! உன்னை இங்க பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். அப்போ, சியால்டா நிலையம் தான் இப்போ உங்க வீடா மாறிடுச்சு இல்ல, நல்லது.
கேட்டு: நீ ஊர்ல இருந்தப்ப பாடம் சொல்லிக் கொடுத்துட்டு தான இருந்த? இங்க என்ன பண்ற?
ஹரேன்: இங்க ஜாதவ்பூர்ல ஒரு காலனியை உருவாக்கியிருக்கோம். அங்க ஒரு சின்ன பள்ளிக்கூடத்தை நான் திறந்திருக்கேன். நம்ம பழைய நாட்டோட வடக்குப் பகுதியில இருந்து வந்த சில மக்கள் ஜாதவ்பூர்ல வீடுகள் அமைச்சு குடியேறிட்டாங்க. எனக்கு சில மாணவர்கள் கிடைச்சிருக்காங்க. இப்ப பள்ளிக்கூடத்துல ஆரம்பக்கட்ட வகுப்புகள் தான் போய்கிட்டு இருக்கு. ஆனா என்கிட்ட நிறைய திட்டங்களுக்கும் இருக்கு----
மகிந்தர்: சரி, இப்போ எங்க போய்கிட்டு இருக்க?
ஹரேன்: இன்னைக்கு நடக்க இருக்குற அகதிகளோட பேரணில கலந்துக்கப் போறேன். பண்டிட் நேரு, கல்கத்தா வந்திருக்காரு. ஆளுநர் மாளிகை முன்னாடி அவர்கிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுக்கப் போறோம். உண்மையான சூழலை அவங்களுக்குப் புரிய வைக்குற மாதிரி அவங்க கவனத்தை ஈர்க்க முடிவு பண்ணியிருக்கோம். பேரணில பங்கெடுக்க நான் என்னோட மாணவர்கள் குழுவைக் கூட்டிட்டு வந்திருக்கேன். சரி அது இருக்கட்டும், நான் என்னைப் பற்றி மட்டுமே பேசிகிட்டு இருக்கேன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?
மகிந்தர்: நாங்க ரொம்ப பரிதாபகரமான நிலையில தான் இருக்கோம். பல நாட்களா ராத்திரி பகலுமா இந்த நடைபாதையில தான் கிடக்கோம்.
ஹரேன்: நீ சொல்றதும் உண்மைதான். இது உன் மகன் தானே? ரொம்ப இளைச்சுட்டானே.
கேட்டு: நிலைமை தாங்க முடியாத அளவுக்கு இருக்கு. நீ எங்க கிராமத்தை சேர்ந்தவன் தானே. உன்கிட்ட சொல்றதுக்கு என்ன.. எங்க சேமிப்பு எல்லாம் கிட்டதட்ட முழுசா கரைஞ்சிடுச்சு. அடுத்த என்ன நடக்கும்னு எனக்குத் தெரியல.
ஹரேன்: அடுத்து நம்ம பண்ண வேண்டியது விடாமுயற்சி தான். அது தான் நம்மளோட அடுத்த படி. அதனால தான் இன்னைக்கு நம்ம கோரிக்கை மனு கொடுக்க போறோம்.
அர்ஜுன்: ஐயா.
ஹரேன்: இவர் வேற தொனத்தொனனு வந்துருவாரு. எல்லாப் பிரச்சனையையும் என்கிட்ட வந்தே தான் சொல்லணுமா? எனக்கு இப்போ நேரமே இல்ல.
மகிந்தர்: அந்த ஆள் யாரு.
ஹரேன்: யாருக்குத் தெரியும்? வாசல்ல இருந்து என் கூடவே ஒட்டிக்கிட்டு இருக்காரு. அது சரி, என்ன இதெல்லாம்? இந்த இடத்துல ரொம்ப கூட்டமா இருக்கு. போலீஸ் வேற வெளியில அணிவகுத்து நிக்குறாங்க.
மகிந்தர்: போலீஸ்காரங்க காலையில இருந்து அங்க தான் இருக்காங்க.
ஹரேன்: நீங்க பேரணில கலந்துக்குவீங்கன்னு நம்புறேன்.
மகிந்தர்: பேரணிக்கு வரலாம்னு தான் நினைச்சுகிட்டு இருக்கோம்.
ஹரேன்: நானும் பேரணிக்குப் போறேன். ஆனா, இந்த போலீஸ்காரங்க எதுக்கு கையில லத்தியோட இங்க வந்து நின்னுகிட்டு இருக்காங்களோ?
கேட்டு: அதனால தான், இந்தக் கிளர்ச்சியில பங்கெடுத்துக்கிறதுல எந்த அர்த்தமும் இருக்குற மாதிரி எனக்குத் தெரியல.
(கோபால் வருகிறான்)
கோபால்: பசிக்குச் சாப்பாடு கேட்டா அதுக்குப் பேர் கிளர்ச்சியா?
கேட்டு: வாயை மூடு! எப்போ பாத்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்க.
('நண்பர்களே, எல்லோரும் பேரணிக்கு வரிசையில் வந்து நில்லுங்கள்' என வெளியில் ஒலிபெருக்கிகள் அறிவிக்கின்றன.)
ஹரேன்: இனி அப்படி இல்ல, இல்ல - நான் சொல்றது என்னனா..
(ஹரேன் தனது பேச்சைப் பாதியில் நிறுத்துகிறான். கோபால் ஹாருவின் கையைப் பிடித்துக்கொண்டு செல்கிறான். சுவர்ணோ அவர்கள் பின்னால் செல்கிறாள்)
ஹரேன்: ஐயா, நீங்க ஏன் இன்னும் இங்கேயே இருக்கீங்க?
கேட்டு: ஏன்னா, எனக்குப் போறதுக்கு வேற போக்கிடம் இல்ல.
ஹரேன்: நீங்க எல்லாரும் ரொம்ப கஷ்டப்படுறீங்கன்னு தெரியுது. நீங்க ஏன் வேறு ஏதும் செய்ய கூடாது? ஏன் எல்லாரும் என் கூட வரக் கூடாது?
மகிந்தர்: எங்க?
ஹரேன்: நான் இருக்குற காலனி நிரம்பிடுச்சு. அங்க சுத்தமா இடம் இல்ல. ஆனா காலனியைத் தாண்டி கொஞ்ச முகாம்கள் இருக்கு. உங்களை அங்க கூட்டிட்டு போறேன். நீங்க அங்க தங்குன பிறகு, உங்களுக்கு ஏதாவது வேலையைத் தேடிக்கலாம். முகாம், தங்குறதுக்கு அவ்வளவு நல்ல இடம் ஒன்னும் இல்ல. ஆனா இந்த நடைபாதையை விட அங்க நிலைமை கொஞ்சம் பரவா இல்லாம இருக்கும்.
மகிந்தர்: நிஜமா தான் சொல்றியா?
ஹரேன்: எனக்கு நிறைய நேரம் இல்ல, நீங்க ஒரு தடவை நல்லா யோசிச்சு சொல்லுங்க. ஒருவேளை வரணும்னு முடிவெடுத்தீங்கன்னா, தாராளமாக எனகூட வரலாம்.
மகிந்தர்: பண்டிட், நீ எங்க எல்லாரையும் காப்பாத்த வந்த மீட்பன்.
(வெளியே பேரணியில் குழப்பம் ஏற்படுகிறது)
ஹரேன்: பேரணில ஏதோ பிரச்சனை! என்னன்னு போய் பார்ப்போம்.
மகிந்தர்: ஹே! நானும் உன்கூட வரேன்.
ஹரேன்: சரி, என்கூட வா. ஏதோ பிரச்சனை போல தெரியுது. நீ வரலேனாலும் பரவாயில்ல, மாணவர்கள் இருக்காங்க.
(ஹரேன், மகிந்தர் இருவரும் ஒன்றாக செல்கின்றனர். பத்மா வருகிறாள். 'வெளியில என்ன நடக்குதுன்னு வந்து பாருங்க' என்று பேச்சைத் தொடங்கிய அவள்---)
பத்மா: பேரணி நிறைய சாலைகள் வழியா போகுது. அப்பா, நானும் பேரணிக்கு போறேன்.
கேட்டு: போ, என்னை ஆளை விடு.
பத்மா: நீங்க ஏன் எரிச்சல் படுறீங்க. நிறைய மக்களை ஒண்ணா பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்தெரியுமா!
கேட்டு: பத்மா, கவனி.
(அர்ஜுன் வருகிறார், அவரை கவனிக்காமல் வந்த கோபாலும், ஹாருவும் அவர் மீது இடித்துக்கொள்கிறார்கள். அர்ஜுன் கையில் வைத்திருந்த காகிதம் கீழே விழுகிறது. அர்ஜுன் உடனே பாய்ந்து காகித்தை மீண்டும் எடுத்துக்கொள்கிறார்)
கோபால்: மன்னிக்கனும், அடி பட்டுடிச்சா?
அர்ஜுன்: இல்ல.
கேட்டு: நீங்க ஏன் திரும்பி வந்துட்டீங்க.
கேட்டு: வெளிய ஏதோ பெரிய குழப்பம் நடக்கும்னு தோணுது.
கேட்டு: அப்படியா?
கோபால்: நான் ஹாருவை உங்ககிட்ட விட்டுட்டுப் போறேன்.
ஹாரு: முடியாது-----
கோபால்: வாயை மூடு, அமைதியா இரு!
ஹாரு: சித்தப்பா, நானும் வரேன். தாத்தா, நீங்களாவது அவர் கிட்ட சொல்லுங்க.
கோபால்: அமைதியா இரு. உன்னை நான் நாளைக்கு அருங்காட்சியகத்துக்கு அழைச்சுட்டுப் போறேன்.
ஹாரு: எனக்கு அருங்காட்சியகத்துக்கு எல்லாம் போக வேண்டாம். என்ன மட்டும் எப்போவும் தனியா விட்டுட்டுப் போறீங்க. எந்நேரமும் தனியா இருக்க எனக்குப் பிடிக்கல.
கேட்டு: இவனை என்கிட்ட விட்டுட்டுப் போனேனா, என்னை நிம்மதியா இருக்க விடமாட்டான்.
கோபால்: நான் போய் அண்ணியை அனுப்பி வைக்குறேன். அண்ணியும், ஹாருவும் இந்தக் குழப்பமான சூழ்நிலையில வெளியில வர வேண்டாம்.
கேட்டு: இந்தக் குழப்பத்துல எல்லாமே அழிஞ்சு போச்சுன்னா எவ்வளவு நிம்மதியா இருக்கும்.
கோபால்: ஒருவேளை எல்லாரும் செத்து போயிட்டாங்கன்னா, பிறகு யாரை நம்பி வாழ முடியும்?
அர்ஜுன்: நம்பி வாழ்றதா!
கோபால்: என்ன?, என்ன சொன்னீங்க?
(அர்ஜுன் புன்னகைக்கிறார்)
அர்ஜுன்: நான் பாப்னா-வுல இருக்குற நாகால்யா பகுதியைச் சேர்ந்தவன். என் பேரு அர்ஜுன் மலாக்கர்.
கோபால்: அப்படியா?
அர்ஜுன்: உங்களுக்கு இதைத் தெரியப்படுத்தனும்னு நினைச்சேன்.
கோபால்: (ஏளனமாக) சொன்னதுக்கு ரொம்ப நன்றி. நான் இப்போ ஞானம் அடைஞ்சுட்டேன்.
(அர்ஜுன் புன்னகைக்கிறார்)
கேட்டு: சரி நீங்க இங்க என்ன பண்றீங்க?
அர்ஜுன்: அதைத்தான் நானும் உங்க கிட்ட கேக்குறேன், 'நான் ஏன் இங்க இருக்கேன்?'. நான் இன்னைக்குத் தான் இங்க வந்து சேர்ந்தேன்.
கோபால்: ஓ! உங்க கையில என்ன அது?. ஏதும் மாயாஜால புதையலை வச்சிருக்கீங்களா?
அர்ஜுன்: இதுவா? இது வந்து---- சரி, நீங்க எனக்கு அரசரின் அவைக்குப் போகுற வழியை காட்டுறீங்களா?
கேட்டு: இவரு என்ன பேசுறாரு?
கோபால்: அரசரா...
அர்ஜுன்: ஆமா, அரசர் தான். இந்துஸ்தானத்தோட அரசர்.
கோபால்: இந்துஸ்தான்க்கு அரசர்னு யாரும் இல்ல.
அர்ஜுன்: அரசர் இல்லைனா அப்போ வேற யாரு இருக்கா?
கேட்டு: நீங்க என்ன பைத்தியமா?
கோபால்: அரசரோட இடத்துல அரசாங்கம் இருக்கு. அரசாங்கத்துக்கு ஒரு பிரதம மந்திரி இருக்காரு.
அர்ஜுன்: அப்போ அவர்தான உச்சபட்ச தலைவர்?
கோபால்: நான் தான் சொன்னேனே, அவர் பிரதம மந்திரி.
அர்ஜுன்: அவர் யாரு?
கோபால்: பண்டிட் நேரு தான் பிரதம மந்திரி.
அர்ஜுன்: அப்போ நான் என்ன செய்யட்டும்? எனக்கு அரசர் கிட்ட கேட்க சில கேள்விகள் இருக்கு.
கேட்டு: கோபால், இவர் சொல்றது ஏதும் புரியுதா?. நீ போ, உன்னோட வேலையைப் பாரு. இவருக்குத் தலையில ஏதோ பிரச்சனை.
அர்ஜுன்: அவர் பேர் என்ன சொன்னீங்க? பண்டிட்-ஆ, இல்ல வேற என்னமுமா?
(ஒலிபெருக்கி அலறியது: 'நண்பர்களே, இன்னும் இங்கு வராதவர்கள், எங்களுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள். நாங்கள் பேரணியைத் தொடங்கப் போகிறோம்.' கோபால் பேரணிக்குச் செல்ல எத்தனிக்கிறான், ஆனால் அர்ஜுன் அவனை நிறுத்துகிறார்)
அர்ஜுன்: நீ போறதுக்கு முன்னாடி, அவரோட பெயரை மட்டும் சொல்லிட்டுப் போ .
கோபால்: பண்டிட் நேரு. அவர் தான் இந்த நாட்டின் உச்சபட்ச அதிகாரம் படைச்சவர்.
அர்ஜுன்: அவரை என்னால சந்திக்க முடியும்னு நீ நினைக்குறியா?
கோபால்: என்னைப் போட்டு தொந்தரவு செய்யறதுக்கு பதிலா நீங்க ஏன் அவரைப் போய் சந்திக்க முயற்சி பண்ணக்கூடாது? அதெல்லாம் சரி, நீங்க ஏன் அவரைச் சந்திக்க நினைக்குறீங்க?
அர்ஜுன்: அவர்கிட்ட நான் இந்தக் காகிதத்தைக் காட்டணும்.
கோபால்: அதுல என்ன இருக்கு?
(அர்ஜுன் புன்னகைக்கிறார்)
அர்ஜுன்: நீ இதைப் பார்க்க விரும்புறியா?, இது ஒரு அதிகாரப்பூர்வ ஆவணம். நான் என்னோட வீட்டை விட்டு இங்க வந்துருக்கேன். நான் அவங்களோட கிளம்பனும்னு சொல்றாங்க. அதோ அங்க ஒரு முதியவர் இருக்காரே அவர் சொல்றாரு, 'அப்புறமா வந்து இதை நேருட்ட கொடுத்துக்கலாம், அதுக்கப்புறம் எல்லாப் பிரச்சனையும் சரி ஆகிடும்'னு. இந்து அரசாங்கம் நமக்காக நிறைய ஏற்பாடுகளைச் செஞ்சிருக்குன்னு அவர் சொல்றாரு.
(கோபால் வாய்விட்டு சிரிக்கிறான். ஹாருவும் அவனுடன் சேர்ந்து சிரிக்கிறான். அர்ஜுனும் முட்டாள் போல இரு முறை சிரிக்க முயற்சிக்கிறார். ஆனால் சிரிக்க முடியாமல், அவ்வாறு முயற்சிப்பதை நிறுத்துகிறார்)
(கேட்டு வியப்புற்றவராய் இவ்வாறு கேட்கிறார்:)
கேட்டு: நீங்க உங்களோட வீட்டோட ஆவணத்தையா இப்படி கையில வச்சு சுத்திகிட்டு இருக்கீங்க.
கோபால்: இவருக்கு தலையில ஏதோ பிரச்சனை போல.
(அவர் பைத்தியம் என்பதுபோல கோபால் தனது தலையை விரலால் சுட்டிக்காட்டுகிறான்)
கோபால்: இவரை யாரோ நல்லா நம்ப வச்சு ஏமாத்தி இருக்காங்க. நீங்க எப்போ இது மாதிரி புரளிகளை நம்ப ஆரம்பிச்சீங்க-----
அர்ஜுன்: நான் அந்த பண்டிட்டை சந்திக்கத் தான் போறேன். அவரை சந்திச்சு நம்ம எல்லாரோட துயரங்களையும் சொல்லத்தான் போறேன். இந்தத் துன்பங்கள் எல்லாத்தையும் நான் என் கண்ணால பார்த்து அனுபவிச்சிருக்கேன். யாருக்கும் சாப்பிட சாப்பாடு இல்ல, படுக்க இடம் இல்ல. அவரை சந்திச்சு, இந்தத் துரதிஷ்டம் பிடிச்ச மக்களுக்கு நீங்க தான் இந்த ஏற்பாடுகளை எல்லாம் செஞ்சுதரணும்னு சொல்லப் போறேன். அவருக்கு இப்போ இங்க நிறைய விருந்தாளிகள் இருக்காங்க. எல்லாரையும் அவர் தான் கவனிக்கணும்.
(வெளியே ஒலிபெருக்கி அலறுகிறது: 'நண்பர்களே..' கோபால் அங்கிருந்து விரைந்து வெளியேறுகிறான். அர்ஜுன் ஒரு முட்டாளைப் போன்ற முகபாவத்துடன் நின்றுகொண்டிருக்கிறார்.)
அர்ஜுன்: ஹா!
(ஹாரு சிரிக்கத் தொடங்குகிறான். அர்ஜுன் அவனை நோக்கிச் செல்கிறார்.)
ஹாரு: ரொம்ப வேடிக்கையான பையனா இருக்கான்.
கேட்டு: நீங்க உண்மையான ஆவணத்தைத் தான் கொண்டு வந்திருக்கீங்களா?
(அர்ஜுன் கேட்டுவைப் பார்க்கிறார்)
அர்ஜுன்: எனக்கு ஒரு வீடு இருந்துச்சு. வீட்டுக்கு பக்கத்துல கொஞ்சம் நிலமும், நெல் வயலும் இருந்துச்சு. சரி, நமக்கு வயசாகிடுச்சு, இந்த இடத்துக்கு வந்து இங்க ஏற்பட்டிருக்குற வளர்ச்சிகளை பார்குறதுல என்ன ஆயிடப்போகுதுன்னு நினைச்சு கிளம்பி வந்தேன்.
கேட்டு: வீடு. எனக்கும் பத்மா நதியோரமா ஒரு வீடு இருந்துச்சு. அதுக்கு பக்கத்துல இருந்த நிலத்துல தோட்டம் அமைத்து காய்கறிகளை வளர்த்தேன். சரியா, நான் அந்த இடத்தை விட்டு வந்தப்போ தான் தோட்டத்துல காய்கறிகளும் முளைக்க ஆரம்பிச்சது. இந்நேரம் பூசணிக்காய்களும் பழுக்க ஆரம்பிச்சிருக்கும்னு நினைக்குறேன். இப்போ குளிர்காலம். மலர்கள் எல்லாம் கை அளவு பெருசா விரிஞ்சிருக்கும். நிறைய வகையான மலர்கள் அங்க இருந்துச்சு தெரியுமா!
(கேட்டு எழுந்து கொள்கிறார்)
கேட்டு: இங்க இருக்குற வானம் ரொம்ப சாம்பல் பூத்து இருக்கு.
அர்ஜுன்: நீங்க சொல்றது சரிதான்! நான் அதை இதுக்கு முன்னாடி கவனிக்கவே இல்ல.
(அர்ஜுன் வானத்தை நிமிர்ந்து பார்க்கிறார். வெளியே மோதல் வெடிக்கிறது. இரண்டு நபர்கள், கண்களை தேய்த்தவாறு மேடையின் நெடுகே ஓடி, மறுபக்கமாக வெளியேறுகின்றனர். ஒலிபெருக்கி முழங்குகிறது: 'நண்பர்களே, ரயில் நிலைய வளாகத்தில் வரிசைகட்டி நில்லுங்கள். நாம் மீண்டும் தொடங்குவோம்' சுவர்ணோ பதற்றத்துடன் உள்ளே விரைகிறாள்)
சுவர்ணோ: மாமா, என்னால ஹாருவை எங்க தேடியும் கண்டுபிடிக்க முடியல. ஹாரு-----
(அவள் ஹாரு அங்கிருப்பதைக் கவனிக்கிறாள். நடுக்கத்துடன் ஹாருவின் கைகளைப் பற்றி அவனைத் தனது மடியோடு அணைத்துக் கொள்கிறாள். வெளியே இரைச்சல் குறைகிறது. மகிந்தர் வருகிறான்.)
மகிந்தர்: கண்ணெல்லாம் ரொம்ப எரியுற மாதிரி ஏதோ புகையை அவங்க பயன்படுத்தியிருக்காங்க. நமக்கு இந்த நாட்டுல எந்த மாதிரியான வரவேற்பு இதுன்னு ஹரேன் பண்டிட் மலைச்சு போய் நின்னுட்டான். அப்பா, நான் பண்டிட்-ஓட நாம தங்க போற இடத்தை போய் பார்த்துட்டு வரேன். கடைசியில இந்த கேவலமான நிலைமையில இருந்து தப்பிக்க நமக்கு வழி கிடைச்ச மாதிரி தெரியுது.
(கோபால் வருகிறான். மேலும் சிலர் வருகின்றனர்.)
கோபால்: ஒரு பையனோட தலையை தடியாலையே அடிக்குறாங்க. அவங்க எல்லாம் மனுஷங்களா?
(மகிந்தர் கிளம்ப முற்படுகிறான். சுவர்ணோ அவனைத் தடுத்து நிறுத்துகிறாள்)
சுவர்ணோ: அவங்க துப்பாக்கிச்சூடு நடத்த வாய்ப்பு இருக்கு.
மகிந்தர்: ரொம்ப நல்லது. என்னை இப்போ போக விடு.
சுவர்ணோ: உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா?
மகிந்தர்: அப்படி எனக்கு ஏதாவது நடந்துச்சுன்னா, சாப்பாட்டுக்கு நீ உன்னோட நகைகளை விற்க வேண்டாம். இந்த சியால்டா ரயில் நிலையத்துல தஞ்சம் புகுந்திருக்குற ஐம்பதாயிரம் மக்கள் மத்தியில நீ இரவுகளை கழிக்க தேவை இல்லை. குளிருல இருந்து தப்பிக்க கிளிஞ்ச போர்வையை பயன்படுத்தி காலரா நோய் வந்து சாகவும் தேவை இல்ல.
சுவர்ணோ: ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?
மகிந்தர்: நான் கிளம்புறேன்.
(கோபால், வெளியில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறான். அர்ஜுன் அவனது தோள்பட்டைக்கு பின் நின்று எட்டிப் பார்க்கிறார். கோபால் திரும்பி, தன் பின்னால் அர்ஜுன் இருப்பதை உணர்கிறான்.)
கோபால்: என்ன ஐயா! வெளியே போக உங்களுக்கு துணிச்சல் இருக்கா?
அர்ஜுன்: ஆமா. அந்த பண்டிட்.
கோபால்: வாங்க, உங்களை என் கூட கூட்டிட்டு போறேன். அங்க துப்பாக்கிகள், சுடத் தயாரா இருக்கறதை கவனிச்சீங்களா?
அர்ஜுன்: ஆமா.
கோபால்: காயம்பட்ட ஆளை ஆம்புலன்சில் கொண்டுபோறதை கவனிச்சீங்ளா?
அர்ஜுன்: ஆமா.
கோபால்: அது தான் இங்க நடந்துகிட்டு இருக்கு.
அர்ஜுன்: ஏன்?, இங்க நம்ம வந்த உடனே நமக்கு எல்லா வசதியும் கிடைக்கும்னு சொன்னாங்களே. செய்தித்தாள்கள்ல கூட அப்படித் தானே போட்டிருந்துச்சு.
கோபால்: எல்லாரும் வெறும் பேச்சு மட்டும்தான்.
அர்ஜுன்: அப்போ என்னோட நிலம், தோட்டம், வீடு எல்லாம் இனி என்ன ஆகும்?
கோபால்: உங்களால திரும்பிப் போகவே முடியாது.
அர்ஜுன்: அப்புறம், எதுக்கு அவங்க நம்ம கிட்ட இதெல்லாம் சொன்னாங்க? ஏன்?
(அர்ஜுன் மலைத்துப்போய் உட்காருகிறார்)
கோபால்: நீங்க, நான், எல்லாரும் அவ்வளவுதான். நமக்கு இனி சாவு ஒன்னு தான் காத்துக்கிட்டு இருக்குதுன்னு தோணுது.
(வெளியே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கிறது.)
மகிந்தர்: சுடுறாங்க!
கோபால்: அண்ணா!
மகிந்தர்: கோபால்!
(இருவரும் வெளியில் விரைகின்றனர். சுவர்ணோ மலைப்புடன் உட்காருகிறாள். ஹாரு அவளது மடியில் உட்கார்ந்திருக்கிறான். நடப்பவற்றை கண்டு உணர்ச்சிவசப்பட்டவராய் அமர்ந்திருக்கும் அர்ஜுன் அருகே சென்று அமர்கிறார் கேட்டு)
கேட்டு: நம்ம பிச்சை எடுத்தா கூட, இனி நமக்கு எதுவும் கிடைக்காது. இந்த நாட்டை கூறுபோட்டவங்க கிட்ட நான் போய் அடைக்கலம் கேட்கப் போறது இல்ல. நாடுனா என்ன, அது எப்படி இருக்கும்னு நான் இப்போ புரிஞ்சுக்கிட்டேன்.
(அர்ஜுன் தன் முகத்தை உயர்த்துகிறார். அவர், "வீடு" என அலறுகிறார். கையில் வைத்திருந்த ஆவணத்தை துண்டு துண்டாகக் கிழிக்கிறார். பின் தன் முகத்தை மூடிக் கொள்கிறார். கேட்டு அங்கிருந்து எழுந்து கொள்கிறார்.)
கேட்டு: நடக்குற இந்தக் குழப்புதுல, ஒரு போர் வீரன் மாதிரி நேரா போய் நின்னு, அப்படியே....
(கடுமையாக இருமியவாறு, கேட்டு பின் நகர்கிறார். ஹரேன் அவரை நோக்கி ஓடி வருகிறான். கேட்டுவை ஒருமுறை பார்த்துவிட்டு, பின்னர் தரையைப் பார்த்தவாறு நிற்கிறான் ஹரேன்.)
ஹரேன்: கேட்டு, நான் தோத்துட்டேன், நான் தோத்துட்டேன். பயம் என்னை முடக்கி போட்டுடுச்சு. என்னால ஏன் பேரணில முன்னோக்கி போக முடியலைன்னு உங்களால சொல்ல முடியுமா? எனக்கு என்ன ஆச்சு?
அர்ஜுன்: (முற்றிலும் மாறுபட்ட மனிதராய் எழுந்து நிற்கிறார்) நம்ம எதிரி யாரு? யாரு?. அவனை நான் ஒரு நாள் பிடிப்பேன். நான் ஒருநாள் அவனை அடையாளம் கண்டே தீருவேன். அந்த நாள், நான் போர் முழக்கத்தோட, அவனோட குரல்வளையைக் கிழிப்பேன்.
(அர்ஜுன் பேய் பிடித்தவர் போல வெளியே ஓடுகிறார். ஒலிபெருக்கி இவ்வாறு கூறுகிறது: 'சகோதரர்களே, தியாகிகள் சிந்திய ரத்தம் நம் உறுதியை வலுவடையச் செய்யும். நாம் தொடர்ந்து முன்னோக்கி நடப்போம். எந்த சமரசத்திற்கும் இடமில்லை.' திடீரென, மிகவும் சத்தத்துடன் துப்பாக்கிச்சூடு தொடங்குகிறது. அதன்பின், அமைதி கவிகிறது. கேட்டு, தூணின் ஓரத்தில் இருந்து பார்க்கிறார். அவர் தடுமாற்றம் கொள்கிறார். அமைதியாக அமர்ந்திருத்த சுவர்ணோ, கேட்டு தடுமாற்றத்துடன் கீழே விழுவதுபோல் பின்னால் சாய்வதைப் பார்த்து திடுக்கிடுகிறாள்.)
சுவர்ணோ: உங்களுக்கு என்ன ஆச்சு? மாமா!, ஓ கடவுளே!
கேட்டு: அர்ஜுன் மலாக்கர்!
(அர்ஜுன் மலாக்கர் சுடப்பட்டு உயிரிழந்து கிடப்பதை பார்த்தே கேட்டு, தடுமாற்றம் கொண்டிருக்கிறார்.)
(கோபால் பத்மாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே வருகிறான். அவளின் உடை அலங்கோலமாக விலகி இருக்கிறது. வெளியே ஒலிபெருக்கி, தொடர்ந்து மக்களை தூண்டியவண்ணம் உள்ளது. பத்மா, கேட்டுவின் பின்னால் சென்று தன்னை மறைத்துக்கொண்டு, பயத்தில் அலறுகிறாள்-----)
பத்மா: அப்பா.
கேட்டு: யாரு?
(பத்மா அவரை அணைத்துக் கொள்கிறாள். அவள் நடுங்கிக்கொண்டிருக்கிறாள். கேட்டு, பத்மாவின் முகத்தை நிமிர்த்திப் பார்க்கிறார்.)
பத்மா: நான் பார்த்ததை என்னால நம்பவே முடியல. துப்பாக்கி குண்டு பாய்ஞ்ச உடனே அந்த ஆள் அப்படியே ஒரு பொம்மை மாதிரி கீழ சாய்ச்சிட்டாரு. அவரோட கைகால்கள் படபடத்து துடிச்சது. உடம்புல இருக்குற காயங்கள்ல இருந்து ரத்தம் பீய்ச்சி அடிச்சது. எல்லாமே முடிஞ்சிடுச்சு. அப்பா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நான் இப்போ பார்த்தது தான் கல்கத்தா!. இது தான் கல்கத்தா.
(கேட்டு அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். பத்மா, மேலும் பயந்தவளாய் கேட்டுவை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொள்கிறாள். மற்ற எல்லோரும் ரயில் நிலைய வளாகத்தின் வெளியே இருக்கும் நிலைமையை பார்த்தவாறு நின்றிருக்கின்றனர்)
---------------------------------------------------திரை வீழ்கிறது---------------------------------
காட்சி மாறுகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக