பரிவுணர்ச்சியால் வரும் பதவி -அழகுராஜ் ராமமூர்த்தி

பரிவுணர்ச்சியால் வரும் பதவி -அழகுராஜ் ராமமூர்த்தி 

      ஆளுநர் ப்ரோ வாட் ப்ரோ எனக் கேட்க விஜய்க்கு வாய் வரவில்லையா..  அவரது ஊதுகுழலான காங்கிரஸ் கேட்கிறது. காங்கிரஸ்க்கு இடுப்பில் மாட்டியிருக்கும் உள்ளாடை கீழே விழுவது போல அவசரம் அதனால் கேட்கத் தான் செய்யும். ஆனால், அதேபோல ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளுக்கு காங்கிரஸ் பல மாநிலங்களில் தொந்தரவு கொடுத்த பழைய வரலாற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும். திமுக.வின் உதவியால் மாநிலங்களவைக்கு ஒருவரை அனுப்பி இரண்டு மாதம் முடிவதற்குள் கூட்டணியை முறிப்பது எப்படிப்பட்ட துரோகம், சுயநலம். காங்கிரஸை நம்பி ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றால், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்கிற வகையில் இதே நிலை தவெக.வுக்கும் வரும். த.வெ.க ஆட்சி அமைக்க இருப்பதை நினைத்தால் பா.ஜ.க ஆட்சி அமைக்க இருப்பதைப் போன்ற வெறுப்பு உள்ளூர இருந்தாலும் மக்கள் வாக்களித்து விட்டார்கள். தனிப்பெரும்பான்மை இருக்கும் கட்சி ஆட்சியளிக்க உரிமை கோரும் போது அதனை ஆளுநர் மதித்தாக வேண்டும். மக்கள் என்றவுடன் தான் நினைவுக்கு வருகிறது. முந்தைய கட்டுரையில் நான் குறிப்பிட்ட இரண்டு விடயங்கள் குறித்த மாற்றுக் கருத்துகள் எனக்கு வரப்பெற்றுள்ளது. முதலாவது zoombies புரட்சி. இரண்டாவது தமிழ்நாடு தோற்றது. மூன்றாவது விஜய் கோமாளியா?  இப்போதும் இம்மூன்று கருத்துகளில் நான் உறுதியாக இருக்கிறேன். எவ்வித மாற்றமும் இல்லை. Zoombies எனச் சொல்லிவிட்டு இப்போது மக்கள் எனச் சொல்வது மோலோட்டமாகப் பார்க்கும்போது ஒருவேளை மாறுபட்டதாக தெரியலாம். 

     ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட சில விடயங்களை பரிவுணர்வோடு இணைத்து கொண்டு போய் சேர்த்ததால் பாமர மக்கள் சற்று மனம் மாறி வாக்களித்து இருக்கின்றனர் என்பது உண்மை. Zoombies shooter விளையாட்டை சிறுவயதில் கூட்டமாக உட்கார்ந்து ஒருவர் தோற்க மற்றொருவர் என மாறி மாறி விளையாண்டு இருக்கிறோம். அப்போது பைத்தியக்கார தோரணையில் zoombies படையெடுத்து வந்துகொண்டே இருக்கும். அதைப் போன்றவர்கள் விஜய் ஆதரவாளர்கள். நான் பா.ஜ.க.வை எதிர்த்து நண்பர்களிடம் வாதம் புரிந்திருக்கிறேன். நாம் தமிழர் கட்சியின் சில கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளில் உள்ள நிலையற்ற தன்மையை விளக்கி நண்பர்களிடம் இருந்து முரண்பட்டிருக்கிறேன். ஆனால், அத்தகைய விவாதங்களிலும் உரையாடல்களிலும் முன்வைக்கப்பட்டவை அவர்கள் தரப்பு கருத்துகள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவை கருத்துகள் என்ற வரம்புக்குள் வருபவை. மேலும் ஆரோக்கியமான உரையாடல் என்ற வரம்பிற்குள்ளும் வருபவை. விஜய் ஆதரவாளர்களிடம் பேசுவதே வீண் என சொல்லுமளவில் தான் அவர்களுடனான பேச்சு இதுவரை இருந்திருக்கிறது. முந்தைய கட்டுரையிலேயே சுட்டிக் காட்டப்பட்ட பல விடயங்களை வாசித்தவர்கள் முறையாக உள் வாங்காததன் விளைவாகவே இப்படியான கருத்துகளை முன்வைத்துள்ளனர். 

     விஜய் வெற்றிக்கு காரணமானவர்கள் முதலாவது zoombies, இரண்டாவது தனிப்பட்ட மனிதர்களின் அத்துமீறலில் அரசுக்கு இருக்கும் பங்கு என்ன? என்று தெளிவாக சிந்திப்பதற்கு நேரமின்றி வெகுஜன ஊடகங்களை மட்டுமே நம்பி தங்கள் பிழைப்புக்காக ஓடிக் கொண்டிருக்கும் மக்கள். இன்று தவெக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளின் மது களியாட்டமும் பாலியல் அத்துமீறலும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதை வைத்து ஒட்டுமொத்தமாக அந்தக் கட்சியை அளவிட முடியுமா? எனக் கேட்டால் கட்டாயம் முடியாது. அவை அனைத்தும் தனிப்பட்ட விருப்பம் சார்ந்து நிகழும் பிழைகள். அதற்கு ஒட்டுமொத்தமாக கட்சி பொறுப்பாக முடியாது. இந்த விவரம் தெரியாமல் திமுவை மையமிட்டு மிக அதிகமாக தவெக பரப்பிய தகவல்களை மக்கள் ஏற்று மக்களில் சிலர் அவர்களை மாற்றாக நம்பினர். இது ஒரு மூடநம்பிக்கை. ஏனென்றால் திமுகவு வேட்பாளர்களுக்கு நிகராக குற்ற வழக்குகள் தவெக வேட்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டிருப்பதை தேர்தலுக்கு முன்பே பலரிடம் எடுத்துக் கூறினேன். ஏற்கத் தவறினர். மூன்றாவது Child Lineல் புகார் கொடுக்கத்தக்க வகையிலான என்று. குழந்தைகளைத் தூண்டி ஓட்டுப் போடச் சொல்லுமாறு கூறியது. குழந்தைகளை இந்த விஷயத்தில் ஏமாற்றத் தவறிய தாத்தா, பாட்டிகள் மற்றும் பெற்றோர்கள். இவர்களும் ஒருவகையில் zoombies பரிணாமம் பெற்று வருபவர்கள் தான்.

     விஜயைக் கோமாளியென நான் கூறியதற்கு பின்னுள்ள காரணத்தை குறியீட்டு முறையில் வாசிக்க வேண்டும். நேரத்திற்கேற்ற வேடம், முகமூடி விஜயிடம் உண்டு. மக்களாட்சி மீது நம்பிக்கையுள்ள பல கட்சிகள் ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்காதது குறித்து விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் தவெக எதுவும் கூறவில்லை. மத்திய அரசிடம் இணக்கமாக இருக்க நினைப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர். பொச்சாப்புடைய காங்கிரஸின் இந்த முடிவு அவர்களின் நம்பத்தன்மையை இந்திய அளவில் கேள்விக்குட்படுத்தும் காலமாக 2029 இருக்கும். முன்னர் பல்வேறு மாநிலக் கட்சிகள் இணைந்து காங்கிரஸும் பாஜகவும் இடம்பெறாத கூட்டணியை அமைப்பதில் காட்டிய ஆர்வத்திற்கு ஒத்துழைப்பு தராத ஸ்டாலினே அத்தகைய கூட்டணி ஒன்று அமைவதற்கு முன்மொழிவதற்கான வாய்ப்புகள் அதிகம். அது காலத்தின் தேவையும். வாய் கிளிய தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்து பேசும் காங்கிரஸுக்கு தகுந்த முடிவை 2026ல் மக்கள் தர வேண்டும். பாஜக எதிர்ப்பு என்பதைச் சப்பைக்கட்டும் காரணமாக வைத்துக்கொண்டு இந்த முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது. காங்கிரஸ் அற்ற இந்தியா என்ற பாஜகவின் செயல்திட்டம் நிறைவேறுவதற்குரிய வழியை காங்கிரஸே ஏற்படுத்தியிருக்கிறது. பாண்டிச்சேரியில் அமைந்த  கூட்டணியில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியிருப்பது திமுக. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டும் தான் வெற்றியடைந்துள்ளது. பாண்டிச்சேரியில் விசிகவின் வெற்றி வாய்ப்பும் காங்கிரஸாலேயே பறிபோய் இருக்கிறது. இதையும் கவனத்தில் வைத்து விசிக தனது எதிர்கால திட்டங்களை வடிவமைக்க வேண்டும். 

      தமிழ்நாடு தோற்றது என்பதே என் தரப்பு முடிவு. என்னுடைய இந்தக் கருத்தில் நான் தமிழ்நாடு என எதைக் குறிக்கிறேன் என்பதை தொடர்ச்சியாக என்னுடன் உரையாடலில் இருப்போர் அறிவர். ஆளுநர் எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் முடிவாக அண்ணாவின் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது. தேவைப்படும் நேரங்களில் எல்லாம் அது கூர்மையாக வெளிப்பட்டிருக்கிறது. சமீபத்திய உதாரணமாக மேனாள் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர். என். ரவியின் செயல்பாட்டையொட்டி நடந்தவற்றை உதாரணமாகக் கூறலாம். அடுத்ததாக இந்தித் திணிப்பு எதிர்ப்பு பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பான கடிதம் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்க மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க விரும்புவதாக தவெக கூறுகிறது. ஆட்சியமைக்கும் பட்சத்தில் இதற்கு தவெக கொடுக்கும் பதில் கடிதம் என்னவாக இருக்கும். மதுரையிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்ளில் ஒருவரும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினரும் இந்திக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் மொழி குறித்தான தேர்வு தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (இந்தி தெரிந்தாலும்) பதிலளிப்பதாகவே இதுவரை இருந்து வந்துள்ளது. இந்தியில் பேசுவதைக் கூட விட்டு விடலாம்.  சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் இந்தியின் மூலம் உலக நாடுகளிடமும் இந்தியாவிலும் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்கிறார். இந்தியாவில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் தொடர்பு வசதிக்கு இந்தி பயன்பெறும் என்பது உண்மை. உலக நாடுகள் என்ற சொற் பயன்பாட்டைத் தெரிவு செய்வதற்கு முன் கொஞ்சமேனும் யோசிக்க வேண்டாமா? உலகம் முழுவதும் தமிழ் இருக்கிறது. தமிழ் அமைப்புகள் இருக்கின்றன. உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் தமிழை நேரடியான வகுப்பு மூலமாகவும் இணைய வழியிலும் இன்றும் தமிழைக் கற்று வருகின்றனர். பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்தியர்களில் தமிழர்கள் மற்றும் மலையாளிகளின் விகிதம் அதிகம். மோடியே டாடி என சொன்ன சிவகாசி தொகுதியின் மற்றொரு வேட்பாளருக்கும் தற்போது தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையில் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப் போகிறது. இதுதான் இவர்களுடைய கொள்கை எதிரி என்கிற லட்சணம். பாஜக எப்படி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தர்ப்ப வாத அரசியலைச் செய்ததோ அதைத்தான் இப்போது காங்கிரஸ் செய்துள்ளது. அதுவும் முன்னர் கூறியபடி அவசரம் அவசரமாக. தாங்கள் அங்கம் வகித்த கூட்டணியினரைக் கலந்தாலோசிக்காமல், கூட்டணியில் அங்கம் வகித்தவர்களின் வாக்கைப் பெற்றதற்கு அவர்களிடம் மரியாதைக்காகக் கூட சந்தித்து நன்றி தெரிவிக்காமல் அவலட்சணமாக கட்டிலில் இருந்து இறங்கி ஓடும் கள்ளக்காதலன் போல ஓடியிருக்கிறது. காங்கிரஸ். இதில் ஏதோ அவர்களின் வாக்குவங்கி தான் கூட்டணியைத் தூக்கி நிறுத்தியது போன்ற வாதங்கள் வேறு.

      சி. டி. ஆர். நிர்மல்குமார், செங்கோட்டையன் ஆகியோர் வரிசையில் இன்னும் எத்தனையோ பேர் இப்படி இருக்கின்றனர். ஒருபுறம் அரசியல் தெரியாதவர்கள், மறுபுறம் கள்ளத்தனமாக தன்னுடைய உண்மையான கொள்கைகளை அக்குளுக்குள் மறைத்து வைத்திருப்பவர்கள். மற்றொரு புறம் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், உண்மையிலேயே களத்தில் மக்களுக்காக நிற்க வேண்டும் எண்ணத்தில் இருப்பவர்கள் என நான்கு வகைக்குள் தவெக சட்டமன்ற உறுப்பினர்களை அடக்க முடியும். அடுத்ததாக தமிழ்நாடு தோற்றது என்பதற்கான முக்கியமான காரணம் இதுவரை செயல்பாட்டில் இருந்த திட்டங்களும் தற்போது பெரும்பான்மை பெற்றுள்ள தவெகவின் வாக்குறுதிகளும். அதில் பாதியளவு வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற முடியாது என்பது ஒருபுறம் இருப்பினும், வாக்குறுதிகள் எப்படிப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் செயல்பாட்டில் இருந்த காலை உணவுத் திட்டம் திமுகவின் தேர்தல் வாக்குறுதியல்ல. ஆனால் அது பயனுள்ள திட்டம். காலை உணவுத் திட்டம் மூலம் பயனடைந்த மாணவர்களை நான் பணிபுரியும் பள்ளி வளாகத்திலேயே சந்தித்துப் பேசியுள்ளேன்‌. என்னுடைய அக்கா மகன்கள் அத்திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். இத்திட்டத்தின் மூலம் மாணவர்களிடையிலான இணக்கமும் சமூக மனப்பான்மையும் படிப்படியாக மேலும் அதிகரித்து வருகிறது. புதுமைப்பெண் திட்டம் மூலமாகவும் பல மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். நான் முதல்வன் திட்டம் அரசுப் பணிக்கு ஆயத்தமாகும் இளைஞர்களுக்கு ஆதரவான திட்டம். அரசுப்பணிக்கு ஆயத்தமாகும் முறைமைகள் குறித்த என்னுடைய விமர்சனங்களை முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறேன். அத்தகைய விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் இத்தகைய திட்டங்களால் பயன்பெறும் எளிய பின்னணியில் இருந்து வருவோரையும் அவர்களது சூழலையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதாகிறது. இப்போது இத்தகைய திட்டங்கள் எல்லாம் புஷ்வானமாகி விடும் அபாயம் எழுந்துள்ளது. திருமணத்திற்கு தங்கம், பட்டுச்சேலை, குழந்தைகளுக்குத் தங்கம் என கல்வி மற்றும் உழைப்பு என மாறிவந்த சமூகத்தைப் பின்னிருந்து  இழுப்பது போல கல்யாணம் செய்து மனிதர்களை உற்பத்தி செய்யுங்கள் என மடைமாற்றம் செய்யும் போக்கு தவெக.விடம் இருந்து வெளிப்படுகிறது. தற்போதைய நிதிச்சுமையில் இதையெல்லாம் செய்ய முடியாது என்பது ஒருபுறம் இருக்க செய்தால் என்னவாகும் என்பதையும் யோசித்துப் பார்த்தால் இப்படியொரு பிற்போக்கு சிந்தையே வெளிப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அடுத்த நிலை வளர்ச்சியை நோக்கிய திட்டங்களை அமைத்து மாற்றத்தை உருவாக்க வேண்டுமேயன்றி பின்னோக்கி இழுக்கும் மாற்றம் நாட்டிற்கு ஆபத்தாகவே முடியும். திமுக, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் இருந்த எட்டாயிரம் டோக்கன், சலவை இயந்திரம் போன்றவற்றை எல்லாம் கட்சிகளின் வாக்குறுதிகள் குறித்து பேசும்போது கடுமையாக எதிர்த்திருக்கிறேன்‌. இருந்தாலும் தவெக.வின் அறிக்கையோடு ஒப்பிடும்போது திமுக, அதிமுகவின் இத்திட்டங்கள் மக்களையும் அவர்களது வளர்ச்சியையும் பின்னோக்கி இழுக்கும் போக்கை முன்னிறுத்தவில்லை. இப்படியான பல காரணங்களே தமிழ்நாடு தோற்றது என்பதற்கான பின்னணி.

      எப்படி கரூரில் நிகழ்ந்த உயிரிழப்பில் திமுகவை வைத்து அரசியல் செய்து பரிவுணர்ச்சியைத் தேடிக் கொள்ள விஜய் நினைத்ததை, திமுக மிகக் கண்ணியமாக கையாண்டது. கலைஞரோ, ஜெயலலிதாவோ ஆட்சியில் இருந்திருந்தால் அப்போதைய நிலை வேறொன்றாக இருந்திருக்கும். இதேதான் படம் வெளிவரும் பிரச்சனையிலும் நடந்தது. 98 சட்டமன்ற உறுப்பினர்களை உடைய வலிமையான எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது அதிமுகவில் ஏகப்பட்ட குழப்பங்கள் நீடித்தது. நினைத்திருந்தால் ஸ்டாலின் அதைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக, அவர் இந்த ஆட்சி நீடிக்காது என்ன அவதானிப்பையும் நீடிக்கக்கூடாது என்ற ஒரு முதன்மையான எதிர்க்கட்சியின் மனப்போக்கையும் மாத்திரமே வெளிப்படுத்தினார். இப்போதும் கூட அண்ணா முதலமைச்சராக பயன்படுத்திய போது காமராசர் பயன்படுத்திய சொற்களையை கிட்டத்தட்ட ஸ்டாலினும் காமராசரைப் போல முக்கிய அரசியல் தலைவராக இருந்து தோல்வி ஏற்பட்டதற்குப் பின் கூறுகிறார். இடையூறு செய்ய மாட்டோம் எனும் திமுக ஒருபுறமமும் ஆட்சி அமைக்க அழைக்க விடாமல் தடுக்கும் பாஜக மறுபுறமும் இருக்கிறது. திமுகவை எதிர்த்த விஜய் பாஜகவை ஏன் தடவிக் கொடுக்கிறார்.

        தேர்தல் முடிவில் விஜயும் தவெகவும் தோற்றிருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். அது ரசிக மனப்பான்மையின் மூலம் தன்னெழுச்சியாக நிகழ்ந்திருக்க வேண்டியது. நல்லவேளை நடக்கவில்லை. இப்போது அதற்குப் பதிலாக ஆட்சியமைக்க அழைக்காததற்கு எதிராக தன்னெழுச்சியாக போராட்டம் ஒன்று தொடங்கப்பட வேண்டும் என்கிற பரிவைத் தன் ரசிகர்களிடமிருந்து (இன்னும் தொண்டர்களாகவில்லை. தொண்டர்கள் என குறிப்பிடும் காலம் விரைவில் வர வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.) பெறுவதற்கான முயற்சி நடந்து வருகிறது. அப்படியொரு போராட்டம் நிகழ்ந்தால் அது கட்டாயம் பெருஞ்சேதத்தை பங்கேற்பவர்களுக்கு ஏற்படுத்தும். இந்தப் பரிவைப் பெறுவதற்கு காத்திருக்காமல், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றக் குழுத் தலைவர் என்ற முறையிலும் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் என்ற முறையிலும் ஒரு அறிக்கை வெளியிட என்ன தயக்கம். எத்தனை பேரைக் காவு கொடுத்தேனும்  தான் எதையும் வலியில்லாமல் பெற வேண்டும் என்ற மனப்போக்கின் வெளிப்பாடே இன்றுவரை விஜயிடமிருந்து வெளிப்படுகிறது. இப்படியான நாடகம் ஒன்று நடப்பது விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவைப் பெறுவதற்கேயன்றி வேறெதற்குமில்லை. இப்படியான இக்கட்டான சூழ்நிலையிலும்  தவெக பாஜகவை எதிர்க்க முன்வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டு அவர்கள் முடிவெடுக்க வேண்டும்.

      போதாக்குறைக்கு திமுக, அதிமுக ஒரே கூட்டணிக்கு வருகிறது என்கிற பொய்ச் செய்தியால் லாபம் பெற நினைத்திருக்கும் முட்டாள்தனம் வேறு. இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள மாநில கட்சிகளை பலவீனப்படுத்தும் உள்நோக்கமும் ஒளிந்துள்ளது. இப்படியான தொடர்ச் செயல்பாடுகள் நடந்த வண்ணம் இருக்கிறது. இவை தமிழ்நாடு என்ற மாநிலத்தின் குரலாக ஒலிக்கும் திமுக மற்றும் அதிமுகவை பலவீனப்படுத்தும் செயல். சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களை மட்டுமே வென்றிருந்த திமுக அடுத்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த வரலாறு உண்டு. மக்கள் நலத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த மாநில உரிமையைக் காக்க என பல நேரங்களில் இதுவரௌ இரண்டு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை ஒன்றாக எடுத்திருக்கின்றன. அவையனைத்தும் மாநில உரிமை என்கிற ஒற்றைப் புள்ளியில் மட்டுமே. மற்றபடி இரண்டு கட்சிகளும் இப்போதும் மாநிலத்தின் முதன்மை கட்சிகளே. தொங்கு சட்டசபை வந்ததே அக்கட்சிகளின் இருப்பு இன்னும் தமிழ்நாட்டு அரசியலில் தொடர்கிறது என்பதற்கான சமிக்ஞைகளே. இதையெல்லாம் மறந்து இப்படியான செய்திகளை உலவவிடும் கீழ்த்தரமான அரசியல் செயல்பாட்டை பாஜக செய்வதற்கு தவெக ஒத்துழைக்கிறது என்பதை நுணுக்கமாகப் பார்க்க முடிகிறது.

      "Zoombies புரட்சி" கட்டுரையை மையமிட்டு எழுந்த மூன்று கேள்விகளும் என்னுடைய கருத்தைச் சரியாக உள்வாங்காமல் அல்லது நான் கூற வரும் பொருளைப் புரிந்துகொள்ள முடியாததன் விளைவாகவே எழுந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

அணங்கு (பகுதி -4) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)