மாணவர்களின் செய்தித்தாள் வாசிப்பு -அழகுராஜ் ராமமூர்த்தி
மாணவர்களின் செய்தித்தாள் வாசிப்பு -அழகுராஜ் ராமமூர்த்தி
கர்நாடக அரசுப் பள்ளிகளில் காலை 15நிமிடங்கள் செய்தித்தாள் வாசிப்பதைக் கட்டாயமாக்கி உள்ளது. இது ஒரு நல்ல முன்னெடுப்பு. சில விடயங்களைக் கட்டாயப்படுத்த வேண்டியுள்ளது. நான் பள்ளியில் படிக்கும்போது (இப்போதும் நடைமுறையில் உண்டு) நூலகம் என்ற பாடவேளை வாரத்திற்கு இரண்டு முறை இருக்கும். அப்போது பழைய வெகுமக்கள் இதழ்கள் செய்தித்தாள் முதலியன அனைவருக்கும் கொடுக்கப்படும். பாடவேளை முடியவும் அதனைத் திரும்ப ஒப்படைத்து விடுவோம். அந்தப் பாடவேளையில் சேட்டை செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் பலர் கொடுக்கப்படும் புத்தகங்களில் உள்ள படங்களையும் பெட்டி செய்திகளையும் பக்கத்தில் இருப்பவரிடம் காட்டி அது குறித்து கிண்டலாகவோ அல்லது ஆச்சரியமாகவோ பேசுவதுண்டு. சில இதழ்களிலோ செய்தித்தாள்களிலோ எதுவுமே இருக்காது என்றாலும் அதையும் சும்மா புரட்டிக் கொண்டிருப்பது உண்டு. ஓவிய ஆசிரியர் தான் நூலக பொறுப்பாளர். சில சமயங்களில் அவர் என்ன படித்தீர்கள் என கேட்பதும் உண்டு. அதில் ஒரு பாடவேளையில் அனைவரையும் கண்ணை மூடி நிமிர்ந்து உட்கார சொல்லி அவர் கதை போல சொல்வதை எல்லாம் மனக்கண்ணில் கொண்டுவரச் சொன்னார். ஒரு தாமரைப்பூ குளத்தில் இருந்து நெற்றிப் பொட்டுக்கு வருவதும் கை, கால் விரல் நுனிகளைக் கண்களை மூடி உணர்வதும் என ஒருவித புது அனுபவமாக அந்தப் பாடவேளை அமைந்தது. என்னைப்போல பலரும் அந்தப் பாடவேளையை மனதில் வைத்திருப்பார்கள் என்றே நான் நம்புகிறேன். இப்படியாக நூலகப் பாடவேளை அமையும். மேலும் பள்ளியில் இருந்தே கிளை நூலகத்தில் விருப்பப்படும் மாணவர்களிடம் முகவரி வாங்கி இணைக்கும் பணியும் நடந்திருக்கிறது. இப்படியாக வாசிப்பை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நாட்களாகவே பள்ளி நாட்கள் இருந்தன. ஆனாலும் நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகே நூலக அட்டை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.
இளங்கலைத் தமிழ் படித்த போதுதான் நூலகப் பயன்பாட்டை வாடிக்கையாகக் கொண்டேன். கிராம கிளை நூலகத்தில் இருந்து ஒரு புத்தகம், நகர கிளை நூலகத்தில் இருந்து மூன்று புத்தகம் என எப்போதும் நான்கு புத்தகம் வைத்திருப்பேன். போதாக்குறைக்கு கல்லூரி நூலகத்தில் இருந்தும் அவ்வப்போது புத்தகம் எடுப்பதுண்டு. ஆனால் கல்லூரி நூலகப் பயன்பாட்டை நான் அதிகம் விரும்புவதில்லை. அரசு கிளை நூலகங்களில் புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்து எடுக்கும் வாய்ப்பு உண்டு. கல்லூரி நூலகத்தில் பெயர், வகுப்பு, தேவைப்படும் புத்தகத்தின் பெயர், எழுதியவர் பெயர் போன்ற விபரங்களை எல்லாம் எழுதித் தர வேண்டும். அப்படியும் நாம் ஒன்று கேட்டால் கொடுக்கும் புத்தகம் வேறொன்றாக இருக்கும். சில சமயங்களில் அப்படியான வேளைகளில் நல்ல புத்தகங்களும் கிடைப்பதுண்டு. அப்துல் ரகுமானின் பூக்காலம் கட்டுரைத் தொகுப்பு அப்படியான விபத்தின் வழியாகவே கிடைத்தது. பதிப்பகம் பெயர், புத்தகத்தின் விலை போன்றவற்றையும் சேர்த்து எழுதி கொடுத்தாலாவது சரியான புத்தகத்தைத் தருவார்களா எனத் தெரியவில்லை. இப்போதைய நிலை என்னவோ? ஆனால், மதிய உணவு இடைவேளைக்குப் பின்னும் சில சமயம் சாயங்கால வேளையிலும் நூலகத்திற்கு சென்று படிப்பதுண்டு. பேராசிரியர்கள் எப்போதாவது ஒட்டுமொத்த வகுப்பையும் நூலகத்திற்கு அழைத்துச் செல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்கள். கந்தாமிபாண்டியன் ஐயாவின் முயற்சியில் துறைக்கென தனி நூலகம் ஒன்றை அமைக்கும் முயற்சி நடந்தது. அதிலிருந்து நூல்கள் அனைத்தும் அவருடையவை. ஒவ்வொருவரும் பிறந்தநாளின் போது ஒரு புத்தகத்தை துறை நூலகத்திற்கு வழங்குவதன் மூலம் நூலகத்தை விரிவுபடுத்தலாம் என்ற திட்டத்துடன் அதைத் தொடங்கினார். ஆனால் அது நடந்தபாடில்லை. நான் மட்டும் என்னுடைய பிறந்தநாளின் போது ஒரு புத்தகத்தைத் துறை நூலகத்திற்கு அளித்தேன். சாகித்திய அகாதமி விருதாளர்கள் கூடுகையில் யுவ புரஸ்கார் விருது பெற்ற தூப்புக்காரி நாவலை அதை எழுதிய மலர்வதி அவர்களிடம் கையெழுத்து வாங்கி வைத்திருந்தேன். அந்த நூலை அனைவரும் வாசிக்க வேண்டியது அவசியம் என உணர்ந்து துறை நூலகத்திற்கு கொடுத்தேன். யாரேனும் அதை எடுத்து வாசித்திருப்பார்களா எனத் தெரியவில்லை. பதிவேட்டைப் பார்த்தால் தெரியும்.
கல்வியியல் கல்லூரியில் படிக்கும்போதும் நூலகம் பக்கம் போவதுண்டு. அதிகபட்சம் இரண்டு பாட வேளைகள் மட்டுமே நூலகத்தில் படித்ததாக நினைவு. அது தவிர ஏனைய நாட்களில் பாடம் சார்ந்த புத்தகங்களைத் தேடுவதற்காக மட்டுமே போயுள்ளேன். இரண்டாம் ஆண்டில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் நூலகத்தில் தான் இருந்தோம். படிப்பதற்காக அல்ல. செய்முறைப் பதிவேடுகளை எழுதுவதற்காக. இருப்பினும் அங்கு மு.வரதராசனாரின் தமிழ் இலக்கிய வரலாறு, மாக்சிம் கார்க்கி வாழ்க்கை வரலாறு நூல்களை எல்லாம் சில பக்கங்கள் வாசிக்க வாய்த்தது. இப்போது நூலகம் பக்கம் போவது அரிதாகிவிட்டது. வாங்கிய புத்தகங்களிலேயே வாசிக்காமல் இருப்பதால் அந்தப் பக்கம் போவதில்லை.
முதுகலைத் தமிழ் படித்தபோது நினைத்த அளவுக்கு நூலகத்தைப் பயன்படுத்தவில்லை என்ற வருத்தம் இன்றும் உண்டு. பாண்டிச்சேரி பல்கலைக்கழக நூலகத்தை இன்னும் அதிகமாக பயன்படுத்தி இருக்க வேண்டும். பைரப்பாவின் பருவம் நாவலை அத்தனை முறை எடுத்துப் பார்த்தும் படிக்க வாய்க்கவில்லை. சில நல்ல நூல்களை எடுத்து வாசித்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். சேது எழுதிய பாண்டவபுரம் நாவல் அதில் எனக்குப் பிடித்த ஒன்று. குறிஞ்சி வேலன் மொழிபெயர்த்த நூல். பாண்டிச்சேரி நூலகத்திலும் நான்கு நூல்கள் வரை எடுத்து வருவேன். ஆனால் நான்கு நூல்களையும் படித்துத் திருப்பி அளித்த வரலாறு இல்லை. பெரும்பாலும் இரண்டு நூல்களைப் படித்து விடுவோன். அரிதாக சில சமயம் மூன்று நூல்கள். நகுலனின் கவிதைப் புத்தகத்தை எடுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்துவிட்டு திருப்பிக் கொடுப்பேன். ஒருமாதம் கழித்து அதையே திருப்பி எடுத்துவிட்டு மீண்டும் அப்படியே செய்வேன். மைய நூலகத்தில் இப்படியென்றால் துறை நூலகத்தில் நிலை வேறு. நான் படிக்கச் சேர்ந்து அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்கள் மட்டுமே துறை நூலகம் திறந்திருந்தது. அங்கு முதலில் எடுத்த புத்தகம் பஞ்சும் பசியும். ரகுநாதனின் அந்த நூலை வாசிக்க வேண்டும் என நினைத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அந்த நூலகத்தில் தான் வாசிக்கத் தொடங்கினேன். ஒருவாறாக நூலகத்தை மூடுவதற்குள் அவ்வப்போது சென்று வாசித்து முடித்தாயிற்று. துறை நூலகத்தில் உள்ள நூல்களை எடுத்துச் செல்ல முடியாது. அவற்றைப் பார்வை நூல்களாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி. அதற்குப் பின் பலவாறான முயற்சிகள் எடுத்தும் நான் படிப்பை முடித்துத் திரும்பும்வரை அந்த நூலகத்தைத் திறந்தபாடில்லை. பல்வேறு கோரிக்கைகளை நண்பர்களோடு இணைந்து தொடர்ந்து வைத்ததன் விளைவாக இப்போது செயல்பாட்டில் உள்ளது.
நூலகத்தைத் திறப்பது தொடர்பாக பல்கலைக்கழக நூலகரை மைய நூலகத்தில் சந்தித்து பேசியது நல்ல அனுபவம். அவர் கர்நாடகாவைச் சார்ந்தவர். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம். அவரும் பொறுமையாக ஒவ்வொன்றையும் விளக்கி அவற்றை நிறைவேற்றுவதற்குரிய சாத்தியங்கள், சாத்தியமின்மை குறித்துப் பேசினார். பேச்சு நீண்டு செல்வதை உணர்ந்து எங்களுக்கு செம்பருத்தி தேனீரை வரவழைத்தார். அதற்குப் பின்பும் பேச்சு தொடரந்தது. நீங்கள் கல்வியை முடித்துவிட்டு செல்லக்கூடிய நேரத்தில் எனக்கு அறிமுகமாகின்றீர்கள். முன்னரே அறிமுகமாகி இருந்தால் சில திட்டங்களை நாம் இணைந்து முன்னெடுத்திருக்கலாம் என்றார். அதனை எங்களுக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரமாகக் கருதி விடைபெற்றோம். இப்படியாக பல்கலைக்கழகத்தையும் பல்கலைக்கழக நூலகத்தையும் முறையாக முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்ற எண்ணம் இப்போதும் அடிக்கடி எழுவதுண்டு. இவ்வாறு நூலகங்களை மையமிட்டு அது தொடர்பாக பேசுவதற்கு ஏராளமான சுய அனுபவங்கள் உண்டு. நூலகத்தில் படிப்பது, நூலகத்தில் எடுத்தப் புத்தகத்தைப் படிப்பது மட்டுமல்லாது புத்தகத்தை எடுப்பது, புத்தகத்தைத் தேடுவது என சில சம்பவங்கள் என்றும் மறக்க முடியாதவையாக நினைவில் நிலைத்திருக்கின்றன.
செய்தித்தாள் வாசிப்புக்கும் நூலகத்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டிலும் டீக்கடை, சலூன் கடை போன்ற இடங்களில் செய்தித்தாள் வாசிப்பு மற்றும் நாட்டு நடப்பு பற்றிய கருத்துகள் விரிவாக விவாதிக்கப்படுவதுண்டு. நூலகம் அமைதியாக வாசிப்பதற்குரிய இடம். செய்தித்தாள் வாசிப்போடு உரையாடலுக்கும் ஏற்ற வடிவம். ஆனால் நூலகத்தில் செய்தித்தாள் வாசிப்பதற்கென வருபவர்களின் எண்ணிக்கையை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. சமீப காலங்களில் நூலகத்தில் மறைமுகமான சில முரண்பாடுகள் வாசகர்களிடையே வளர்ந்து வருகிறது. செய்தித்தாள் வாசிக்க வரும் வாசகர்களுக்கும் அரசுப் பணித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்குமிடையே மனதளவில் ஒரு புகைச்சல் பாதிக்குப் பாதி நூலகங்களில் உண்டு. தேர்வுக்கு தயாராவோரில் பலர் நடப்பு நிகழ்வுகளை அறிய வேண்டும் என்ற காரணத்தையன்றி வேறெதற்கும் செய்தித்தாளைத் தொடுவதில்லை. கல்வி நிலையங்களின் பொதுவான பகுதியாக உள்ள தாழ்வாரம் மற்றும் விடுதி முதலான இடங்களிலும் சில நூலகங்களிலும் மரத்தாலான முக்கோண வடிவ தாங்கியில் செய்தித்தாள்களை நூலைக் கோர்த்து வைத்து வருகின்றனர். இது கையில் எடுத்து லாவகமாக படிக்கத் தெரியாதவர்களுக்காகவே உருவாக்கப்பட்டதாகவும் பொதுவாக பலர் கூடி நின்று பார்ப்பதற்கு வசதியாகவும் இருக்கிறது. ஆனால் அதிலும் கூட்டாக நின்று காணொளிகளைப் பார்த்து வரும் நடைமுறை ஒன்று உருவாகி வருகிறது.
செய்தித்தாளுக்கான மதிப்பு நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது. இளங்கலை படிக்கும் காலத்தில் செய்தித்தாளில் ஒருமுறை என்னுடைய படம் வந்ததையொட்டி அதனைத் தேடி எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்தேன். இப்படி பலரும் முன்னர் செய்தனர். உணர்வுப்பூர்வமாகவும் உயர்வாகவும் செய்தித்தாளை அணுகியநிலை தற்போது படிப்படியாக மாற்றம் கண்டு வருகிறது. மாணவர்கள் அல்லது இளைஞர்களின் ஓட்டம் எதை நோக்கியதாக உள்ளது என்பதையும் பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம் என்ற அறிவிப்பையும் இணைத்து நோக்க வேண்டியுள்ளது. போட்டித் தேர்வுக்குத் தயாராவோர் மூலம் நூலகங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கென தனியான பகுதி ஒதுக்கப்படாத நூலகங்களில் நிலமை மோசம். இதெல்லாம் ஒருபுறம் இருக்க செய்திகளை செய்தித்தாளின் வழியே அடைவதைக் காட்டிலும் இணையம் வாயிலாக வாசிப்பது அதிகரித்து வருகிறது. எல்லா செய்தித்தாள் நிறுவனங்களும் இணையத்திலும் செய்தியைத் தந்து கொண்டிருக்கின்றன. வாட்ஸ்அப் சேனல் வரை செய்தியைப் பரிமாற்றி அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெற வேண்டும் என்ற போட்டி உருவாகி விட்டது. முன்னர் செய்தித்தாள் விற்பனையில் அளவிடப்பட்டு வந்த வாசகர் அளவு இன்று இணையப் பார்வையாளர்கள் எண்ணிக்கை என்ற நிலையை வந்தடைந்து விட்டது. இப்போது கூட இதனை எழுதுவதற்கு செய்தி நிறுவனத்தின் இணைய இணைப்பைத் தான் பயன்படுத்துகிறேன். இவையெல்லாம் காலப்போக்கில் நிகழும் மாற்றங்கள். எப்படி இன்றும் மாட்டுவண்டியில் போன அனுபவங்களைப் பெருமையாகச் சொல்பவர்கள் இருக்கிறார்களோ அதுபோல செய்தித்தாளைக் கையில் ஏந்தி லாவகமாகப் பிடித்து வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் நாட்களை நோக்கி நகர்கிறோமோ என எண்ணத் தோன்றுகிறது.
திரைப்படங்களில் செய்தித்தாளை வெட்டி ஒட்டி ஆராய்வதை எல்லாம் பார்த்திருப்போம். இன்று எளிதாக செயற்கை நுண்ணறிவு மூலம் தேவைப்படும் தகவல்களைத் தொகுத்துப் பெற்று விடுகிறோம். இந்தச் செய்திப் பதிவில் செய்யுமா தமிழ்நாடு அரசு? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே பல அரசுப் பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு ஊக்குவிக்கப்பட்டே வருகிறது. நான் என்னுடைய பள்ளி கல்லூரி அனுபவங்களைப் பகிர்ந்திருந்தேன். நான் படித்தது அரசுப் பள்ளி தான். மேலும் இன்று பள்ளிகளில் கேட்கும் மாணவர்களுக்கு மாணவர்களுக்கான செய்தித்தாள் இணைப்புப் பகுதியைத் தனியாக வாங்கி வழங்கும் நடைமுறையும் வழக்கில் இருக்கிறது. இணையம் வளரந்து இக்காலகட்டத்தில் அதையும் சில மாணவர்கள் வாங்கி வருகின்றனர். மற்றொரு புறம் ஒரு நாளின் தொடக்கத்தில் இருந்து நாளின் முடிவு வரை செய்தித்தாளைத் தொடாத ஏன் பார்த்திராத வகையில் இருக்கக்கூடிய மாணவர்களும் இருக்கின்றனர். தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் காலை வழிபாட்டு கூட்டத்தில் செய்திகளை இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள் என்ற வகைமையில் பொருளாதாரம், விளையாட்டு, வர்த்தகம் போன்ற உட்பிரிவுகளைப் பிரித்து வாசித்து வரும் நடைமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் செய்திகளைத் தேர்வு செய்து சொல்லி வருகின்றனர். இதை அறியாது தமிழ்நாடு செயல்படுத்துமா என்ற அறிவிலித்தனமான கேள்வியும் தமிழ்நாடு கல்வித்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்ற உண்மைக்கு எதிரான கேலியும் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளது. செய்தி எழுதக்கூடியவர்கள் கொஞ்சம் நடைமுறை செயல்பாடு என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து எழுத வேண்டும். மேலும், காலை வழிபாட்டு கூட்டத்தில் பள்ளி நூலகத்தில் படித்த நூல் ஒன்றைக் குறித்து அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உத்தரவு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பிறப்பிக்கப்பட்டு அதுவும் தற்போது நடைமுறையில் உள்ளது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல புதிய திட்டங்கள் எங்கேனும் செயல்படுத்தப்பட்டால் அது தமிழாநாட்டில் இருக்கிறாதா? என்ற கேள்வியை வெட்கமின்றித் தூக்கிக் கொண்டு வந்து விடுகின்றனர். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களுக்கு புதிய பெயரை வைத்து அதன்மீது புதிய ஸ்டிக்கரை ஒட்டுவது போன்ற வாக்குறுதிகள் எல்லாம் இந்தச் சட்டமன்றத் தேர்தலின்போது சொல்லப்பட்டது. அதனால் பயன்பெற்றோரும் கூட அது ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கிற திட்டம் என்பதை மறந்து வாய் பிளந்து பார்க்கின்றனர். இதனால் தான் செய்தித்தாளை வாசிப்பது அவசியமானதாகிறது.
இந்த அறிவிப்பில் கூட போட்டித் தேர்வுக்கு செய்தித்தாள் வாசிப்பு உதவும் என்று இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. செய்தித்தாள் வெறுமனே போட்டித் தேர்வுக்கானது என்ற எண்ணத்தைத் தற்போது விதைக்க்த் தொடங்கியிருக்கின்றனர். இது என்னளவில் ஒரு தவறான முன்னுதாரணம். வாசிக்கத் தெரிந்த ஒருவர் செய்தித்தாளில் வந்த செய்தியை வாசிக்க அது குறித்த தனது கருத்தை சுற்றியுள்ளவர்கள் சொல்லுதல், வந்திருக்கும் செய்தி குறித்து விவாதித்தல் என்ற பார்ப்பதற்கு அழகான ஒரு அமைப்பு இருந்தது. அது தற்போது ஆட்டம் கண்டு வருகிறது. வாசிக்கத் தெரியாது என்றாலும் உலக அரசியலை நாள்தோறும் மற்றவர் வாசிக்கக் கேட்டு கருத்து சொல்லுமளவு இருந்த முறை தற்போது மாறி வருகிறது. இன்று சமூக வலைதளங்கள் வாயிலாகப் பகிரப்படும் கருத்துகளில் எதிர்மறை மனநிலையில் ஆபாசமாகச் சொல்லப்படும் கருத்துகளும் தனிமனித தாக்குதலுமே அதிகம். இதன் மத்தியில் ஆக்கப்பூர்வமாக எவரோ ஒருவர் அளித்துள்ள கருத்தும் காணாமல் போய்விடுகிறது. ஒருபக்கம் அனைவரும் கருத்து சொல்லும் உரிமை வந்துள்ளது. கருத்துரிமை பரவலாக்கம் பெற்றுள்ளது என்பதாக இருந்தாலும், அத்துடன் பொறுப்புணர்வற்ற தன்மையும் பெருவளர்ச்சி கொண்டுள்ளது. பத்திரிகைகளில் வரும் செய்திகளில் கருத்துகளும் எழுத்துகளும் பலமுறை சரிபார்க்கப்பட்டு வரும் என்கிற நம்பிக்கை இன்னும் மக்களிடையே உண்டு. செய்தித் தொலைக்காட்சிகள் கூட தங்களுக்கிடையிலான போட்டியில் ஆதாரமற்ற செய்திகளை அவசரகதியில் போட்டுவிட்டு பின்னர் மாற்றிக் கொள்கின்றனர். செய்தித்தாள் அப்படியானதல்ல என்கிற பார்வை இன்றும் வலுவாக உள்ளது. ஆகவே செய்தித்தாள் அல்லது அச்சு முறையில் செய்தி வெளியிடும் நிறுவனங்கள் பொறுப்புணர்வுடன் செய்தியை எழுத முன்வர வேண்டும். கேள்வி கேட்கத் தெரியும் என எதையாவது உளரக்கூடாது. அது பற்றிய குறைந்தபட்ச அறிவை வளர்த்துக் கொண்டு எழுத வேண்டும்.
செய்தித்தாள் வாசிப்பை மாணவர்கள் மத்தியில் இன்னும் வலுவாக ஊக்கப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. சுயமாக மூளை சிந்திக்கும் தன்மை வாசிப்பின்போதும் வாசித்ததைத் தாளில் எழுதும்போதும் மட்டுமே கிடைக்கிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர்தர தட்டச்சு செயலி போன்றவை இயந்திரகதியில் ஏற்கனவே அதற்குள் பதிவான சொற்களைக் கொடுக்க கொடுக்க அதனைப் பயன்படுத்தி வருகின்ற சூழலில் உலகியல் பொது அறிவுடன் மொழியறிவைச் செறிவுபடுத்தவும் செய்தித்தாள் மற்றும் புத்தகங்களை தாள் அச்சில் வாசிப்பதும் நேரம் கிடைக்கும்போது தாளில் எழுதிப் பார்ப்பதும் நல்லது. முன்னர் எழுத்துத் தேர்வில் பற்பல கருத்துகளை சுயசிந்தனை மூலம் எழுதுவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தது. இன்று பெரும்பாலான கேள்வித்தாள் வடிவமைப்பு கணினி முறையில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் முறையில் அல்லது தாளில் சரியான விடையைக் குறிக்கும் வகையில் அமைந்துவிடுகிறது. இப்படியான தேர்வுகளை எதிர்கொள்ள நூலகத்தில் பல்லாயிரம் பேர் தயாராகி வருகின்றனர்.
செய்தி இணைப்பு:

கருத்துகள்
கருத்துரையிடுக