கல்விக் கொள்கை வழியிலான மொழி ஒற்றைமயம் -அழகுராஜ் ராமமூர்த்தி
கல்விக் கொள்கை வழியிலான மொழி ஒற்றைமயம் -அழகுராஜ் ராமமூர்த்தி
புதிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கையை ஒட்டிய விவாதங்கள் அவ்வப்போது எழுந்து ஓய்வது வாடிக்கையாகவே உள்ளது. நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்திலும் மாணவர்களுக்கு மொழிப்பாடத்தின் தேவை அவசியம் என்பதற்கு உளவியல் நோக்கில் சில காரணங்கள் உண்டு. தொடக்கக் காலத்தில் மனிதன் மற்றொருவரிடம் தன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கு எத்தனித்ததன் விளைவுகவே மொழி உருவானது. கருத்துப் பகிர்தல் என்பது பல்வேறு பரிமாணங்களை அடைந்து பல்வேறு துணைக் கருவிகளின் துணையுடன் மாற்றம் அடைந்துள்ளது. அத்தகைய துணைக் கருவிகள் படிப்படியாக மொழியைத் தன்வயப்படுத்தி மனிதர்களின் மனப்பதிவுகளிலும் மூளைப்பதிவுகளிலும் உள்ள மொழியை மறக்கடிக்கக்கூடியதாக மாறி வருகிறது. ஒருபுறம் சமூக வலைதளங்களின் வரவால் உலகெங்கிலும் இருப்பவர்களோடு நட்பு பாராட்டும் வசதியாக குறுஞ்செய்தியிலிருந்து காணொளிக் காட்சி பரிமாற்றம் வரையில் வளரந்திருப்பது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசுவதற்கு தயங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. பல்வேறு வடிவங்களில் நாள்தோறும் திரைப் பயன்பாட்டு நேரத்தின் அதிகரிப்பு இதற்கொரு காரணமாக முன்வைக்கப்படுகிறது.
ஒருவருக்கொருவர் பேசுவதிலிருந்து பெருங்கூட்டமாக தனித்தனியே திரைப் பயன்பாட்டை நோக்கி மக்கள் அனைவரும் வயது வித்தியாசமின்றி செல்வதற்கும் மொழி உருவானதற்கும் இடையில் ஒரு இணைப்புப் புள்ளி இருக்கிறது . ஆரம்பத்திலேயே மொழி கருத்தைப் பகிர்வதற்கான முயற்சியினால் விளைந்ததைக் குறித்து கூறினேன். இன்று கருத்தைப் பகிர்வதற்கு முகத்துடன் முகம் நோக்க வேண்டிய அவசியமில்லை. திரையின் மூலமே அதனை சாதித்து விட முடியும் என்ற நிலை வந்துவிட்டது. மொழியின் மற்றொரு ஆதாயமாக இருந்தது தகவல்களை அறிந்துகொள்ளுதல். செயற்கை நுண்ணறிவின் வருகையால் தகவல்கள் தொகுக்கப்பட்டு சுருக்கமாக தேவையான வடிவில் கிடைப்பதற்கான சாத்தியங்கள் உருவாகிவிட்டன. இதன் விளைவாக மக்களின் கூர் சிந்தனை மற்றும் இயற்கை நுண்ணறிவு கேள்விக்குள்ளாகி வருகிறது. இதனாலேயே மொழிப்பாடத்தின் தேவை முக்கியத்துவம் உடையதாகிறது. மொழிப்பாடத்தில் உள்ள இலக்கியங்கள் சிந்தனை வளத்தை மேம்படுத்தும் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாலேயே அதன் தேவை இன்றைய காலத்தில் அவசியமாகியுள்ளது.
மொழியைப் பொருத்தவரை காலந்தோறும் சொற்கள் உற்பத்தியாவதும் பழக்கத்திற்கு வருவதும் காலாவதி அடைந்து மறைந்து போவதும் வாடிக்கையான செயல்பாடுகள். அதன் தன்மை ஒரு சீரான வளர்ச்சியையே முன்னர் அடைந்திருந்தது. ஆனால் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின் படிப்படியாகப் பரவிய காலணியாதிக்கத்தின் வரவு சீரற்ற நிலையை உருவாக்கியதெனலாம். இந்நிலை பதினெட்டாம் நூற்றாண்டில் வலு பெற்றது. காலணியாதிக்கத்தின் விளைவாக பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமன்றி பண்பாடு மற்றும் மொழியிலும் ஏகப்பட்ட புதிய முறைகளும் வெளிப்பாட்டு வடிவங்களும் உள்வாங்கப்பட்டன. அதன் விளைவாக ஐரோப்பியர்களின் காலணியாதிக்க நாடான இந்தியப் பகுதிகளில் அவர்களது பண்பாடு மற்றும் மொழியுடன் நிகழ்ந்த ஊடாடல் மூலமாக கலைச் சின்னங்களாக அவர்களுடைய பண்பாட்டைப் பறைசாற்றும் நகரங்கள் உருவாயின. அதில் புகழ்பெற்ற ஒன்றாக இன்றுவரை பெருமையுடன் விளங்கிக் கொண்டிருப்பது பாண்டிச்சேரியிலுள்ள வெள்ளை நகரம் (White town). பிரெஞ்சு பண்பாடு நிலைபெற்ற பகுதியாக இது விளங்குகிறது.
காலணியாதிக்கத்தின் மூலம் மொழி பண்பாட்டுக் கலப்போடு மனிதர்களிடையே உறவுக் கலப்பும் உருவானது. ஆங்கிலோ- இந்தியர்கள், பிரெஞ்சிந்தியர்கள் என தனிப்பிரிவும் காலப்போக்கில் உருவானது. இத்தகைய கலப்பு நிலை காலணியாதிக்கம் முடிவுற்ற பின்னரும் காலணியாதிக்கம் செலுத்திய நாட்டிற்கும் செலுத்தப்பட்ட நாட்டிற்கும் இடையிலான பாலமாக விளங்கி வருகிறது. இதில் முன்னோடி நகரமாக பாண்டிச்சேரி இருக்கிறது. பாண்டிச்சேரிக்கும் பிரான்சுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு இன்றுவரை பல முறைகளில் பேணப்பட்டு வருகிறது. அதன்மேல் இடியை இறக்கும் அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மும்மொழி கல்விக் கொள்கை அடிப்படையில் தாய்மொழி, ஒரு உள்நாட்டு மொழி மற்றும் ஒரு வெளிநாட்டு மொழியை கற்க வேண்டும் என்ற அறிவிப்பு பாண்டிச்சேரியில் உள்ள மத்திய கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் பிரெஞ்சை விருப்ப மொழியாகத் தேர்வு செய்த மாணவர்கள் தொடர்ச்சியாக பிரெஞ்சு மொழிப் பாடங்களைக் கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது பாண்டிச்சேரி அரசு பள்ளிகளிலும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான மாற்றங்கள் வெகு விரைவில் செயலாக்கத்திற்கு வருவதற்கான அறிகுறியாகவே தென்படுகிறது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைப் போல யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் உள்ள குடிமக்களுடைய பிரெஞ்சு நிறுவனங்கள் மற்றும் பிரான்ஸ் அரசுடன் உள்ள தொடர்பு நிலையிலும் சலுகையிலும் பாதிப்பு வெகு விரைவில் ஏற்படப் போவதாகவே உணர்கிறேன். தங்களுக்குரிய தனித்துவத்தை இழந்து அனைத்து இந்தியப் பகுதிகளும் ஒரே போல காட்சியளிக்க வேண்டும் என்ற செயல்திட்டத்தின் செயல்படுத்துதலாகவே இப்படியான மாற்றங்கள் அமைகின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாடு சிதைந்து ஒற்றைமயம் என்பதை நோக்கிய நகர்வு பரப்பில் நடந்தேறி வருகிறது. பிரெஞ்சு மொழியைக் கற்பதனால் அவர்கள் பெறக்கூடிய பலன்களில் தற்போது தடை ஏற்பட்டுள்ளது. இப்படியான சிக்கல்கள் அடுத்தடுத்து வரும் என்பதையும் வெளிநாட்டு மொழி என்ற இடத்தில் ஆங்கிலம் என்ற ஒற்றை மொழி இருப்பதுபோல உள்நாட்டு மொழியில் ஒற்றை மொழியாக இந்தி மாறும் நிலை உருவாகும் என்பதும் முன்னரே புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்கு எதிரான வாதமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதன்படியே இப்போது நடந்தும் வருகிறது. இவையெல்லாம் சமிக்ஞைகளாகவே தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன. மொழிப்பாட மாற்றம் மற்றும் அவசியம் குறித்து பேசும்போது மொழிப் பாடத்தை மாணவர்கள் எவ்வாறாக நினைக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் மேல்படிப்பிலும் தொழில் சார்ந்த கல்வியிலும் பயன்தரப் போகிறது. மொழிப்பாடத்தின் வழி எனக்கு என்ன கிடைக்கப் போகிறது. அதனைக் கற்பதால் என்ன பயன் என்ற கேள்வி மாணவர்களிடையே பரவலாக எழுந்து வருகிறது. மொழிப்பாடம் சமூகத்தில் நாம் என்னவாக இருக்கிறோம், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத் தரக்கூடிய பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது மேலும் ஆளுமைத்திறனை வெளிப்படுத்தக்கூடிய துணிச்சலை வளர்க்கும் வழிமுறையை மொழிப்பாட வகுப்பின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது என்பன போன்ற விளக்கங்களை அடிக்கடி மாணவர்களிடையே பகிர வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மொழிக்கல்வியில் இத்தனை பயன்தரும் அம்சங்கள் இருக்க இரண்டு மொழியோடு மூன்றாவது மொழியையும் சேர்த்து படிப்பதில் என்ன தவறிருக்கிறது என்ற கேள்வி வரலாம். அதில் அடிப்படையிலேயே சில சிக்கல் உண்டு. பயிற்று மொழியைத் தாண்டியிருக்கும் மற்றொரு மொழி தாய்மொழியாகவே இருந்தாலும் அதனை அனைத்து தரப்பு மாணவர்களும் ஆர்வத்துடன் புரிந்து கற்பதில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இந்நிலைக்கு சமூகச் சூழலும் ஒரு முக்கிய காரணம். அப்படியிருக்க மற்றொரு மொழியையும் அவர்கள் கற்க வேண்டும் என சொல்வது அப்பட்டமான திணிப்பு. முன்னர் வெறுமனே மொழி, சாஸ்திரங்கள் என இருந்த கல்வி அமைப்பில் மெக்காலே முறை அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை முறைப்படுத்தி அறிமுகப்படுத்தியது. மெக்காலே கல்வித் திட்டத்தில் குறைகள் இருப்பினும் அத்திட்டம் கல்வித்துறையில் கொண்டு வந்த மாறுதல்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். இரண்டு மொழிப்பாடங்களுடன் கூடிய பிற அறிவுத்துறை சார்ந்த மற்றும் தகவல் துறை சார்ந்த பாடங்கள் இருக்கும் முறையுடன் தனித்திறனை வளர்ப்பதற்குரிய வசதிகளையும் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்கள் கொண்டுள்ளன. இதில் சில மாற்றங்களை ஏற்படுத்துவது மட்டுமே தற்போதைய நிலையில் போதுமானது. மீளொருமுறை புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியதும் மாநிலக் கல்வித் திட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விவாதிப்பதும் அவசியமான செயல்பாடு. பாண்டிச்சேரியில் இப்படியான அறிவிப்பு எந்தவொரு உரையாடலையும் நிகழ்த்தாமல் கனத்த மௌனமாக மட்டுமே எஞ்சியிருப்பது ஆரோக்கியமானதல்ல.

கருத்துகள்
கருத்துரையிடுக