ரித்விக் கட்டக் நேர்காணல் (தமிழில் -தீனன்)
ரித்விக் கட்டக் நேர்காணல் (தமிழில் -தீனன்)
கேள்வி: உங்கள் பார்வையில் கலைஞன், குறிப்பாக திரைப்படக் கலைஞனின் நோக்கம் என்ன?
ரித்விக் கட்டக்: நான் கலைஞனும் கிடையாது, திரைப்படக் கலைஞனும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது ஒரு கலை வடிவம் கிடையாது. இது நான் மக்களுக்காக பணியாற்ற பயன்படும் ஒரு ஊடகம் மட்டுமே. நான் சமூகவியலாளன் அல்ல, எனவே சினிமா மக்களை மாற்றும் என்ற கற்பனைகளுக்கு நான் இடம் கொடுப்பதில்லை. மக்கள் மிகச்சிறந்தவர்கள் அல்ல. அவர்கள் அவர்களாகவே மாற்றத்துக்கு உள்ளாகிறார்கள். நான் எதையும் மாற்றவில்லை. நான் நிகழ்ந்துகொண்டிருக்கும் அந்த மாற்றங்களைப் பதிவு செய்கிறேன். என்னளவில் சினிமா என்பது ஒரு வெளிப்பாடு மட்டுமே. மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் அவர்களின் துயரங்களையும் கண்டு எனக்குள் எழும் சினத்தை வெளிப்படுத்தும் ஓர் வழி மட்டுமே சினிமா. நாளை மனிதனின் அறிவு, மக்களின் இன்பங்களையும், துன்பங்களையும், ஆசைகளையும், கனவுகளையும், லட்சியங்களையும் சினிமாவை விட இன்னும் அழுத்தமாக துரிதமாக வெளிப்படுத்த சினிமாவைத் தாண்டிய ஒன்றை வளர்த்தெடுக்கும். பின் அதுவே சிறந்த ஊடகமாக இருக்கும்.
கேள்வி: உங்கள் படங்கள் அரசியல் விழிப்புணர்வை கொண்டுள்ளதாகையால் நீங்களே இந்தியாவின் முதல் அரசியல் திரைப்பட இயக்குநர் என்று கூறுவது சரியாக இருக்குமா?
ரித்விக் கட்டக்: எனக்குத் தெரியவில்லை. ஏன் நீங்கள் இந்த மாதிரியான கேள்விகளைக் கேட்கிறீர்கள்? அந்த ஸ்தானத்துக்கு நான் தகுதியானவனா என என்னை நானே எப்படி சோதித்துக்கொள்ள முடியும்? நான், முதல் அரசியல் திரைப்பட இயக்குநரா, முதலில் நான் ஒரு அரசியல் திரைப்பட இயக்குநரா, இல்லை திரைப்பட இயக்குநர் மட்டுமா என எல்லாமே மக்கள் தான் முடிவு செய்வார்கள். எல்லா முடிவும் அவர்களிடம் தான் உள்ளது. ஒன்று இது, இல்லை அதுவாக இருக்கும். திரைப்பட இயக்குநர், அதற்கு அரசியல் என்று பெயர் வைக்கலாம், வைக்காமலும் இருக்கலாம், ஆனால் இறுதியில் எல்லாம் ஒரே நோக்கத்திற்குத் தான் பயன்படுகின்றன. சினிமா அதன் அளவிலான பல்வேறு வடிவங்கள் மற்றும் வகைகள் மூலம் அரசியலுக்குப் பயன்படவே செய்கின்றன.
கேள்வி: சினிமாவில் நவீனப் போக்குகள் குறித்து உங்கள் கருத்து என்ன? குறிப்பாக திரைப்பட கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்குள் மூழ்கிப்போவது ஒரு ஆடம்பர பொழுதுபோக்கு, எனவே இயக்குநர் அந்த யதார்த்தத்தின் மாயையை உடைத்து வெளியேறி பார்வையாளர்களிடம் பேச வேண்டும் என்று நினைப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
ரித்விக் கட்டக்: இதில் நவீனமானது எதுவுமில்லை. இது காலங்காலமாக இருந்து வருகிறது. நீங்கள் அரிஸ்டாபனீஸை (கிரேக்க நாடக ஆசிரியர்) வாசித்திருக்கிறீர்களா? அவர் ஏதன்ஸ் என்ற நகரத்தில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்தவர். அவர் இதைச் செய்தார். எனவே இதில் நவீனம் என்று எதுவுமில்லை. பல வடிவங்கள் இருக்கின்றன. அதில் இது ஒரு வடிவம். ஜீன் லூக் கோடார்ட் போன்ற சிலர் இதைப் பயன்படுத்துகின்றனர். எனவே இதில் நவீனமாக எதுவும் இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள். நமது புராணங்கள் பலவற்றில் கூட அதன் எழுத்தாளர்கள் பிரதியை மீறி வந்து மக்களிடம் பேசுவது நிறைய காணப்படுகிறது. நமது 'ஜாத்ரா'களின் பிரதான நோக்கமே இதுதான். கலையில் எதுவும் நவீனமில்லை, அதே நேரம் எல்லாமே நவீனம் தான். யாராவது தாங்கள் 'நவீனமான' ஒன்றைச் செய்துவிட்டோம்எ என்று பெருமையடைந்தால் அவர் ஒரு முட்டாள், அவர் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். கலை முடிவின்றி தனது வடிவங்களை மாற்றிக் கொண்டே இருக்கும். எல்லா வகையான வடிவங்களும் பயன்படுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, தீர்ந்து போகும். நாம் அதை மறு ஆக்கம் மட்டுமே செய்கிறோம் அவ்வளவுதான்.
கேள்வி: நமது தொன்மம் மற்றும் நாடக மரபுகள் பொதுவாக இந்திய சினிமாவிலும், குறிப்பாக உங்களிடத்திலும் எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளன?
ரித்விக் கட்டக்: இந்திய மனப்பான்மையில் ஆதிக்கம் செலுத்தும் காவிய மரபு ஒன்று உள்ளது. அது இந்திய ஆழ்மனத்தில் ஊடுருவியுள்ளது. எனவே இந்தியர்கள் தொன்மங்களால் ஈர்க்கப்படுவதில் வியப்பேதுமில்லை. நானும் அதில் ஒரு பகுதி தான். இந்த காவிய மரபு இன்றி என்னை நானே சிந்திக்க முடியாது. நான் முழுதும் அவற்றால் ஆனவன். அது நமது நாகரீகத்தில் ஆதியிலிருந்து உள்ளது. எனது திரைப்படங்களில் நான் நாட்டார் வடிவத்தை அதிகம் சார்ந்துள்ளேன். "மகா அன்னை"(கிரேட் மதர்)யின் உருவம் அதன் இருமை வடிவில் நமது இருப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் குடிகொண்டிருக்கிறது. நான் இதை என் 'மேகே டாக்கா தாரா'விலும் ‘ஜூக்தி, டாக்கோ, ஆர்கப்போ’ (காரணம், விவாதம் மற்றும் கதை)யிலும் வரித்துள்ளேன்.
கேள்வி: எந்தத் திரைப்பட இயக்குநர் உங்கள் மீது அதிக தாக்கம் செலுத்தியவர்?
ரித்விக் கட்டக்: செர்ஜி ஐசென்ஸ்டீன். அவர் என் மீது மட்டுமல்ல இயக்குநர்கள் என்று சொல்லும் அளவுக்கு தகுதியுடைய இயக்குநர்கள் எல்லோர் மீதும் தாக்கம் செலுத்தியவர். அவரே சினிமாவின் தந்தை. கிரிஃபித் (D.W. கிரிஃபித் ) இருக்கிறார். ஆனால் அவர் பெரிய அளவில் இல்லை. செர்ஜி ஐசென்ஸ்டீன் தான் எல்லா கோட்பாடுகளையும் உருவாக்கியவர். அவரே நமக்கு இந்த மொழியை வழங்கினார். அவருக்கு முன் எட்வின் போர்ட்டர் - 'தி கிரேட் ட்ரெயின் ராபரி' மற்றும் கிரிஃபித் ஆகிய இருவரும் குருட்டு இயக்குநர்கள். செர்ஜி ஐசென்ஸ்டீன் எல்லாவற்றையும் நிலைநிறுத்தி திரைப்பட இயக்கத்தின் அடிப்படைக் கூறுகளை நமக்கு கற்பிக்க முயற்சித்தார். பிலிம் என்றால் என்ன என்றும் இந்தக் கேமராவால் என்னென்ன செய்ய முடியும் என்றும் அவரே கண்டுபிடித்தார். அவர் சினிமாவின் காளிதாசர், கோட்பாட்டாளர், படைப்பு கர்த்தா.
இன்னும் ஏராளமான திரைப்பட இயக்குநர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் சிறந்த மற்றும் ஆகச்சிறந்த எத்தனையோ இயக்குநர்கள் இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் செர்ஜி ஐசென்ஸ்டீனின் வார்ப்புகளே. எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் மேலான இடத்தி் ல்ஐசென்ஸ்டீன் நிற்கிறார். எங்கே ஒரு படம் இயக்கப்பட்டாலும் அந்த படத்தின் இயக்குநர் ஐசென்ஸ்டீனின் குழந்தையே. அந்த இயக்குநருக்கு தந்தை, இரட்சகன், ஆதாம் அவரே. சினிமாவின் ஆதாமும், முதல் மனிதரும் அவரே.
கேள்வி: ரபீந்திர சங்கீத் (ரபீந்திரநாத் தாகூர் பாடல்கள்) உங்களின் பெரும்பாலான படங்களில் செயல்முறை ரீதியாக முக்கிய பங்கு வகிக்கிறது. ரபீந்திரநாத் தாகூர் மீது நீங்கள் கொண்டுள்ள ஈர்ப்பு பற்றி விளக்க முடியுமா?
ரித்விக் கட்டக்: அவரில்லாமல் நான் பேசவே முடியாது. அந்த மனிதர் நான் பிறப்பதற்கு முன்னரே எனது உணர்வுகள் அனைத்தையும் ஆட்கொண்டுவிட்டார். என்னைப் பற்றி முழுதாக புரிந்துகொண்டவரைப் போல அதுவனைத்தையும் அவர் வார்த்தைளில் வரித்துள்ளார். நான் வாசித்தபோது, அதில் அனைத்தும் சொல்லப்பட்டுவிட்டதை கண்டுகொண்டேன். புதிதாக சொல்ல என்னிடத்தில் எதுவுமில்லை. எல்லாக் கலைஞர்களும் (குறைந்தபட்சம் வங்காளத்தில் உள்ள கலைஞர்கள்) என்போல இதே சிக்கலைத் தான் எதிர்கொள்கிறார்கள். வேறு எந்த வழியும் இல்லை. நீங்கள் அவர் மீது கோபப்படலாம், அவரை விமர்சிக்கலாம், அவரை வெறுக்கவும் செய்யலாம். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இறுதியில், இறுதி வார்த்தையும் அவரிடமே உள்ளது தெரியும்.
கேள்வி: ரபீந்திரநாத் தாகூர் உங்கள் மீது கணிசமான அளவு தாக்கம் செலுத்தியுள்ளபோதும், தாகூரின் படைப்புகளுக்கும் உங்கள் படங்களுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர் அதிக காதல் ரசம் கொண்டவர் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
ரித்விக் கட்டக்: காதல் ரசம்! உங்களுக்கு அவரைப் பற்றி என்ன தெரியும்? ரபீந்திரநாத் காதல் ரசம் கொண்டவரல்ல, அவர் முற்றிலும் வேறுபட்ட ஆள். அவர் வங்காள இலக்கியத்தின் வித்தை காட்டும் குரங்கு. நீங்கள் அவரை காதல் ரசம் கொண்டவர் என்று அழைக்கிறீர்கள். நீங்கள் 'சதுரங்கா' வாசித்திருக்கிறீர்களா? அவர் மறைஞானி, அஞ்ஞானி என அனைத்துமானவர். அவர் இழிவான மொழி வழக்கைப் பயன்படுத்துவதில் சிறந்தவராகவும் பெரிய முரடராகவும் இருப்பார். தெருவோர சிறுவர்களால் பயன்படுத்தப்படும் பேச்சுவழக்கு மொழியிலும் அவர் எழுதியிருக்கிறார். எனவே அவரைக் காதல் ரசம் கொண்டவர் என ஓரம் கட்ட முயற்சிக்காதீர்கள். அந்த மனிதரின் அனைத்து வகையான எழுத்தையும் வாசித்துப் பாருங்கள். அவரின் எழுத்துக் கட்டமைப்பு மிகவும் இறுக்கமானதாக இருக்கும். அவர், நான் முன்பு சொன்னதுபோல வங்காள இலக்கியத்தின் வித்தைக் குரங்கு. நீங்கள் ஏணியைக் கொண்ட ஒரு பொம்மையைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஏணியின் உச்சியில் ஒரு சிறிய குரங்கு இருக்கும். நீங்கள் அந்தப் பொம்மையை நேராக தூக்கிப் பிடிக்கும்போது அந்த குரங்கு கீழே உருண்டு வரும். அதே பொம்மையை தலைகீழாகப் பிடித்தால் அந்த குரங்கு மீண்டும் கீழ் நோக்கி உருளும். ரபீந்திரநாத் அந்தப் பொம்மைக் குரங்கைப் போன்றவர். அவர் உச்சிக்குச் செல்வார். அதேபோல் படிப்படியாக, மீண்டும் தலைகீழாக கீழேயும் இறங்குவார். எனவே அவரைக் காதல் ரசமானவர் என்று முத்திரை குத்துவது பெரிய தவறு. ரபீந்திரநாத்தை விற்பனை செய்வதற்கென்றே சிலர் இருக்கின்றனர். அதனால் தான் உங்கள் மனங்களில் அவரைப் பற்றிய இதுபோன்ற பிம்பம் உள்ளது. நீங்கள் அவரின் கோபத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமே. சமூகத்தின் அடிமட்டம் முதல் உச்சி வரை யாரையும் அவர் விட்டுவைக்கவில்லை. நீங்கள் என்னை முரடன் என்றும் போக்கிரி என்றும் அழைக்கலாம், ஆனால் அதில் அவரே தலைசிறந்தவர். என்னை விட நான்கெழுத்து வார்த்தைகள் அவருக்கு அதிகம் தெரிந்திருக்கலாம். அவரைப் பற்றிய முழுமையற்ற பார்வையுடன் இருக்காதீர்கள்.
கேள்வி: அகதிகள் பிரச்சனை உங்கள் திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் வரும் கருப்பொருளாக உள்ளது. நீங்கள் வங்கதேசத்தில் எடுத்த 'திதாஸ் ஏக்தி நதிர் நாம்' படத்திலும் இந்தப் பிரச்சனை குறித்த நேரடி தொடர்பு உள்ளதா?
ரித்விக் கட்டக்: அது என்னை நேரடியாகப் பாதிக்கவில்லை. பரந்த பார்வையுடன் அணுகினால் மறைமுகமாக, ஆழ்மனதளவில் என்னைப் பாதித்திருக்கிறது எனலாம். திரைப்பட இயக்கம் என்பது உங்கள் ஆழ்மன அளவில் யதார்த்தம் குறித்து நீங்கள் உணர்வதன் மீதான கேள்வியே ஆகும். நான் அகதிகள் 'பிரச்சனை'யை எதிர்கொண்டேன், ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அகதிகள் பிரச்சனை என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக எனக்கு இது கலாச்சாரத்தின் பிரிவினை ஆகும். நான் அதிர்ச்சிக்கு உள்ளானேன். பிரிவினை காலகட்டத்தில் நமது விடுதலை மற்றும் சுதந்திரம் குறித்து பாசாங்கு கூச்சலிட்ட மனிதர்களை நான் வெறுத்தேன். இப்போதைய தலைமுறையினர் தப்பித்தீர்கள், நான் பார்த்த எனது வங்காளத்தை நீங்கள் பார்த்ததில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நான் பார்த்தவாறு இருந்தேன். தேச விடுதலை என்ற இந்த மிகப்பெரிய துரோகத்தால் மனித நடத்தையே எவ்வாறு மாறுகிறது என்பதைக் கவனித்தேன். இன்றும் நான் சந்தோஷமாக இல்லை, நான் தன்னுணர்வோடும், இல்லாமலும் பார்த்த அனைத்தும் எனது படங்களில் வெளிப்படுகின்றன. எனது படங்கள் உணர்ச்சிமிக்க கோஷங்கங்களை முழங்குவதாக இருக்கலாம், அல்லது அதிலிருந்து விலகியும் இருக்கலாம். ஆனால் அதன் உயிர்நாடி என்பது: என்னை சுற்றிலும் நான் பார்த்தவற்றினால் விரக்தியும், சோர்வும் அடைந்துள்ளேன் என்பது தான்.
கேள்வி: நமது நாட்டில் இளம் இயக்குநர்களிடையே திறமையானவர்கள் யாரேனும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா, அல்லது இந்திய புதிய அலை என்பது வெறும் கூச்சல் நிறைந்தது தான் என்று நினைக்கிறீர்களா?
ரித்விக் கட்டக்: நிச்சயம், சில திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்று நினைக்கிறன். நான் கல்கத்தாவை பற்றி பேசவில்லை. என்னைப் பொறுத்தவரை கல்கத்தா பயனற்றதாக மாறிவிட்டது. கல்கத்தாவில் ஒரு பையனைக் கூட சுட்டிக்காட்டி இவன் நிச்சயம் ஏதோ செய்கிறான் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் பம்பாயில், கேரளாவில், காஷ்மீரில், ஏன் அசாமில் கூட இளைஞர்கள் ஏதோ ஒன்றைச் செய்கின்றனர். சத்யதேவ் துபேவிடம் திறமை உள்ளது, ஆனால் அவன் மிகவும் முட்டாள்தனமான ஒன்றைச் செய்தான். அவன் ஒரு நல்லக் கதையைத் தேர்ந்தெடுத்தான், ஆனால் மிகவும் பலவீனமான கட்டமைப்பில் அதை அமைத்தான். ஏன் இவ்வளவு சக்தியையும் பணத்தையும் இந்த பயனற்ற விஷயத்தில் வீணடிக்கிறாய் என்று நான் அவனிடம் சொன்னேன். ஏன் "சாந்ததா கோர்ட் சாலு ஆஹே"?(படம்), ஏன் மக்களின் வாழ்வின் அடிப்படை விஷயங்களில் ஒன்றை பற்றி படம் எடுக்கக்கூடாது என்றேன். பிறகு மணி கவுல் இருக்கிறான். ஆனால் அவனது மூளையில் சிறிய சாய்வு இருக்கிறது, சிறிய பார்வைச் சிதறல், வார்த்தைகள் மேல் காதல் வயப்படும் உன்னைப்போன்ற பையன்களைப் போல. குமார் சஹானி சிறந்த மாணவன். அவன் தனது படங்களுடன் வெளிவரும்போது அது திகைப்பூட்டக்கூடியதாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக