அணங்கு (பகுதி -1) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

 

அணங்கு (பகுதி -1) -ரித்விக் கட்டக்

(தமிழில் -தீனன்)


ஆங்கில மொழிபெயர்ப்பாளர் உரை 

       ஷெய் மேயே (அந்தப் பெண்) என்ற இந்த நாடகம் எழுதப்பட்டபோது இந்திய சமூகம் மிகவும் சோதனையான காலகட்டம் ஒன்றில் இருந்தது என்பதை இங்கு நினைவுகூர வேண்டும். இன்று மிகவும் எளிதாக தோன்றுவன எல்லாம் அந்தக் கொந்தளிப்பான காலகட்டத்தில் அப்படி இல்லை. 50கள் முதல் 70கள் வரை முன்னேற்றம் என்பது அரசியலின் நோக்கமாக இல்லை. மக்களின் குரல் என்பது மாற்றத்தை ஏற்படுத்திவிடும் ஒன்றாக இல்லை. நம்பிக்கையுடன் ஒரு வர்க்கம் முன்னேற்றத்திற்கு பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருந்த அதேவேளை, நலிந்துகொண்டிருந்த சமூகப் பொருளாதார கட்டமைப்பானது மாற்றம், முன்னேற்றம் மற்றும் வாழ்க்கையின் தரம் என்பதன் அஸ்திவாரத்தையே பெயர்த்துக்கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் இந்த நாடகம் எழுதப்பட்டது. ஏற்றுக்கொள்ளுதலும், இரக்கமும் மனிதர்களுக்கு அந்நியப்பட்டதாய், வாழ்தலுக்குப் பிரதான தேவையாக இல்லாமல் போன காலகட்டம் அது. ஒருவேளை இந்த நாடகத்தின் நாயகி சாந்தி, இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பிறந்திருந்தால் இந்தக் குறிப்பிட்ட நாடகம் அதன் கசப்பான திருப்பங்களுடன் எழுதப்பட்டிருக்காது. மனதளவில் காயம்பட்டு பித்து பிடித்தவளாக அவள் இருந்தபோதிலும் அவளும் சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பாள். பரந்த பார்வையுடைய மனிதர்களிடமிருந்தும், நவீன மருத்துவ வளர்ச்சியினாலும் அவளுக்கு உதவி கிடைத்திருக்கும். ஆனால் காலத்திற்குப் புறம்பானதாக இருப்பினும் உலகின் துரதிஷ்டத்தால் ஆட்கொள்ளப்பட்ட குழந்தைகளின் சொல்லப்படாத கதைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் சமூகங்களை வெறுட்டிய நோய்மைகள் இன்னும் முற்றாக ஒழிந்துவிடவில்லை. அவை உறக்க நிலையில், இந்த கூட்டு சமூகத்தின் போலி நகர்வுகளால் மீண்டும் உயிர்த்தெழும் நேரம் பார்த்து காத்திருக்கிறது. 'அந்தப் பெண்'  உடைய மூலமான வங்கப் பிரதி நனவோடை உத்தியில் அமைக்கப்பட்டது. சில பகுதிகளில் வசனங்கள், அவை பயன்படுத்தப்பட்ட நோக்கத்தைத் தெள்ளிதின் வெளிப்படுத்த இந்த உத்தி கையாளப்பட்டுள்ளது. மேலும்  கோம்தா, சிந்தூர் உள்ளிட்ட சில வங்காள வார்த்தைகளுக்கு முழு நீள விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. திருமணமான இந்து பெண் மட்டுமே  கோம்தா அணிந்துகொள்வார். கோம்தா என்பது பெரியவர்களுக்கு மரியாதையளிக்கும் வகையில் புடவையின் முனையைக் கொண்டு தலையை மூடிக்கொள்ளும் பழக்கம் ஆகும். பாரம்பரிய இந்துக் குடும்பத்தில் திருமணமான பெண் தனது கணவன் முன் கூட மரியாதை நிமித்தம் கோம்தா அணிந்துகொள்வார். அதேபோல் செந்தூரம்(குங்குமம்) என்பது திருமணமானதைக் குறிக்கும் வகையில் இந்துப் பெண் தனது நெற்றியில் சூடிக்கொள்ளும் திலகம் ஆகும். இதை மனதில் வைத்தே கோம்தா, சிந்தூர் ஆகிய வார்த்தைகளை ஆங்கிலத்தில் பயன்படுத்தியுள்ளேன். அதேபோல், மாணிக், கோகோன் ஆகிய வார்த்தைகள் குழந்தையை அன்புடன் விழிக்கும் சொற்களாகும். அதுபோல் எழுத்தாளர் உணர்த்த விரும்பிய அர்த்தத்தில் வெளிப்படுத்த சில ஒரு வரி வசனங்களை பகுதிகளாக பிரித்து வழங்கியுள்ளேன். 

      (திரை மேல செல்ல, மேடை காலியாக உள்ளது. இசை தொடங்குகிறது. மேடையின் பின்கோடியில் கருப்புத் துணி ஒன்று  தொங்குகிறது. அதன் இரு பக்கவாட்டுகளில் கதவுகள் உள்ளன. இடதுபக்கம் இருக்கும் கதவு உள்ளே இருந்து வந்து செல்லவும் வலது புறம் இருக்கும் கதவு வெளியே இருந்து உள்ளே வருவதற்கும் பயன்படுகிறது. மேடையின் இடதுபுறம் படிகளை உடைய ஒரு பீடம் உள்ளது. முழு பீடமும் கீழே நீல நிற முனை கொண்ட வெண்துணியால் போர்த்தப்படுள்ளது. துணியின் நீல நிற முனை பீடத்தின் கீழ் பகுதியை மூடியுள்ளது. மேடையின் நடுவே பச்சை உரையுடன் மேசையும் அதன் இரு பக்கங்களில் எதிரெதிரே இரு  இருக்கைகள் உள்ளன. சில காகிதங்களும் கோப்புகளும் மேசையில் வைக்கப்பட்டுள்ளன. மேசைக்கு இடதுபுறம் ஒரு சட்டகத்தில் மன நல மருத்துவர் பயன்படுத்தும் வரைபடம் மாட்டப்பட்டுள்ளது. கருப்பு பின்னணியில் வெள்ளை நிறத்தில் அது வரையப்பட்டுள்ளது. மேடையின் இடதுபுறம் மனித உயரத்தில் மரத்தாலான  கைப்பிடி சட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. அது இன்னும் வண்ணம் தீட்டப்படமால் அதன் உண்மையான மரத்தின் நிறத்திலேயே உள்ளது. அந்தக் கைபிடி சட்டகத்தின் நடுவே போல்ட் மாட்டிய பூட்டுடன் ஒரு கதவு உள்ளது. மரச் சட்டகத்தை விட உயரமான அந்தக் கதவு மஞ்சள் நிறமாக ஆங்காங்கே திட்டுத் திட்டான தூசுடன் காணப்படுகிறது. இது அந்தக் கதவு ஒரு குறியீடு என்றும் குறியீடாக அதைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உணர்த்துகிறது. மரக் கைப்பிடி சட்டகத்தின் பின்னால் படுக்கை ஒன்று வெண் துணியால் போர்த்தப்பட்டுள்ளது. படுக்கைக்கு அருகே நான்கு கால் கொண்ட ஸ்டூல் இருக்கை உள்ளது. நாடகத்தின் சில குறிப்பிட்ட தருணங்களில் மரச் சட்டகத்தின் நிழல், மேடை முழுவதும் படர வேண்டும். மேடையின் பின்கோடியில் உள்ள கருந்துணிக்கு கீழ் பூந்தொட்டிகள் வரிசையாக உள்ளன. அவற்றில் வெண்மையான, வெண்மையற்ற மற்றும் சிவப்பு நிறப் பூக்கள் காணப்படுகின்றன. மேடை நடுவில் உள்ள மேஜை அருகே உள்ள வரைபட சட்டகத்தில் நீளமான குச்சி ஒன்று சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. அது பில்லியர்ட்ஸ் ஆட்டத்தில் பயன்படுத்தும் குச்சி போல உள்ளது. மேடை முழுவதும் நடக்கத்தன்மையிலான வெண் ஒளி மயமாக உள்ளது. நடிகர்கள் மேடையில் உள்ள படுக்கைகளுக்கு அருகே இருக்கும்போது மட்டும் பொன் மஞ்சள் மற்றும் உலோக நீல நிறம் மேடையில் ஒளிர வேண்டும். மாயத்தோற்றங்களின் காட்சிகளில் கலைடாஸ்கோப் விளக்குகள் போன்ற, வெட்டி வெட்டி பளிச்சிடும் ஒளி மேடையில் தோன்ற வேண்டும். நாடகத்தின் நாயகியின் கனவு நிலை காட்சிகளில், மேடையில் வான் நீல நிறம் தோன்ற வேண்டும். மேடையில் காட்சி அரங்கேறும் பகுதிகளில் மட்டுமே வெளிச்சம் பாய வேண்டும். நாடகம் முழுவதும் காட்சி நடக்கும் பகுதியைத் தவிர மேடையின் மற்ற இடங்கள் வெளிச்சமின்றி முழு இருளில் இருக்க வேண்டும். இந்த மேடை ஏற்பாடுகள் ஒருபுறமிருக்க, மறுபுறம், கோடிட்ட சீருடையணிந்த நான்கு மன நோயாளிகள் தேவைப்படும் காட்சிகளில் மேடையில் தோன்ற வேண்டும். மேடையின் பின்கோடியில் உள்ள கருத்துணியின் மேலே இடது புறமாக ஓரத்தில், மனநல கோளாறுக்கான சர்வதேச சின்னம் வரைந்த வெள்ளைத் தாள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். 

    வறுமையான கிராமத்துக் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி சாந்தி மேடையில் கூச்சத்துடன் தோன்றுகிறாள். அவள் சிகப்பு பார்டர் கொண்ட எளிமையான வெள்ளைச் சேலை அணிந்திருக்கிறாள். அவளது நெற்றியில் வட்டமான குங்குமம் உள்ளது. நெற்றியில் தலை வரை அவள் குங்குமத்தைக் கோடிட்டிருக்கிறாள். அவள் மூக்குத்தி அணிந்திருக்கிறாள். அப்பாவியான கிராமத்துப் பெண்ணாக காட்சியளிக்கிறாள். மேடையில் அங்கும் இங்கும் பார்வை செலுத்தும் அவள், பார்வையாளர்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்து நேரே மேடையின் இடதுபுறம் உள்ள பீடத்தின் மேல் ஏறி நிற்கிறாள். அங்கு நின்றபடி மெல்லிய புன்னகையை உதிர்க்கும் அவள், தனது சேலை முகப்பை எடுத்துத் தலையில் 'கோம்தா'வாக போர்த்திக்கொண்டு பார்வையாளர்களை நமஸ்கரிக்கிறாள்.)

சாந்தி: நீங்க எனக்காக இங்க காத்திருக்குறத என்னால பார்க்க முடியுது. நீங்கள் இனியும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாத்தையும் இன்னைக்கு உங்களுக்கு சொல்லப் போகிறேன். ஒரு வேளை நான் சொல்லப்போறதுல இருந்து யாராவது பயனடையலாம். என்னோட கதை என்னைக்காவது ஒருநாள் என்னை மாதிரியானவங்கள ஒதுக்கித் தள்ளுறத்துக்கு முன்னாடி இந்தச் சமூகத்த இன்னொருமுறை சிந்திக்க வைக்கலாம்.  ஓய்வற்றுத் துரத்தும் கண்கள் என்னை மாதிரி பெண்களைப் பார்த்தபடி இருக்கறதை நிறுத்திக்கொள்ளலாம். மனசுல இருக்குறதை அப்படியே வெளிப்படுத்தி விடுகின்ற எங்க அப்பாவித்தனத்தை மக்கள் இனியும் சந்தேகிக்காம இருக்கலாம். குறைந்தபட்சம் கட்டுக்கதைகளால  என்னைப் போன்ற பெண்கள் மீதான சந்தேகப் பார்வை அகலலாம். ஆனா நாங்க மீண்டு வரும்போது எங்களை ஏத்துக்கிட உண்மையில் யாராவது இருக்காங்களா என்ன?. எனக்கு சொல்ல நிறைய இருக்குது. ஆனால் காலத்தால் நான் கட்டுண்டிருக்கேன். எனக்குள்ளே அடியாழத்தில அமைதியா வளர்ந்துகிட்டிருக்குற இந்த நோயின் கிருமி எல்லாத்தையும் உடைத்தெறியும் தருணத்துக்காக காத்துக்கிட்டிருக்கு. உங்ககிட்ட இந்த நொடி அமைதியோட பேசுறதுக்காக  நான் போன தூரம் குறித்தும், நான் கடந்து வந்த தடைகள் குறித்தும் உங்களுக்கு எதுவும் தெரியாது. இது நிறைய நேரம் பிடிக்கும் என்பதால  நான் என்னோட நீண்ட கதையை சுருங்கச் சொல்லி முடிக்கிறேன். ஒரு காலத்தில சாந்தி-னு ஒரு பொண்ணு இருந்தா - (பீடத்தில் இருந்து கீழிறங்கி மேடையின் முனைக்கு வருகிறாள்). நான் வார்த்தைகளை கோர்த்து வாக்கியங்களை அமைத்து பேசுறதுல தேர்ந்தவள் அல்ல. நான் கிராமத்தவள். ஆமா, நான் வானத்தையும், நதிகளையும், நீரையும், மலர்களையும் நேசிச்சேன். உங்களுக்குத் தெரியுமா, வெள்ளைப் பூக்கள், வெண்மையான தாமரைகள், பவளமல்லிகள், மல்லிகைகள், சம்பங்கிகள்-னு அங்க நிறைய இருந்துச்சு. இப்போது அவை எல்லாத்தோட பேர்களயும் என்னால நினைவுகூர முடியல. நான் வான் நீலத்தை எவ்வளவு விரும்பினேனோ அவ்வளவுக்கு, வெண்மையாக இருந்த எல்லாத்தையும் விரும்பினேன். என்னோட விருப்பத்திற்குரிய பெயரில்லாத பலவகை பூக்கள் அங்க இருந்துச்சு. ஆனா அதுக்கு அப்புறம் ஏதோ நடந்துச்சு. நான் சொல்ல வந்ததே எனக்கு மறக்குது. எல்லாமே குழம்பிடுச்சு. நான் பெரும் குழப்பத்தில இருக்கேன். கொஞ்சம் பொறுங்க நான் டாக்டரைக் கூப்பிடுறேன். அவரால இந்தக் கதையை தெளிவா புரியும்படி சொல்ல முடியும். 

     (டாக்டர், டாக்டர் எங்க இருக்கீங்க?)

மருத்துவர்: (குரல் பின்னணியில் ஒலிக்கிறது) சாந்தி, நான் வேலையாய் இருக்கேன். 

சாந்தி: நிறைய பேர் காத்திருக்காங்க. நீங்க கொஞ்சம் இங்க வர முடியுமா?

     (மருத்துவர் உள்ளே வருகிறார்.)

சாந்தி: பாருங்க, நிறைய பேர் இருக்காங்க. 

மருத்துவர்: உண்மை தான். ஆனா, நீ என்னைத் தான் வேலை செய்யவிடாம தொந்தரவு செய்யுற. அதே பழைய கதைய எத்தனை தடவை தான் நான் சொல்லனும்னு எதிர்பாக்குற? தயவுசெஞ்சு அவங்கள கிளம்பச் சொல்லு. அதே நேரம் உன்னோட கதை சோகமானது ஒன்னும் இல்ல. அது கொடுமையான யதார்த்தத்த பத்தினது. இந்த ஜனங்க கொடுமை நிறைஞ்ச அப்பட்டமான உண்மையைத் தெரிஞ்சுக்க விரும்புவாங்கனு நீ நினைக்கிறியா?

சாந்தி: (உற்சாகத்துடன்) கண்டிப்பா, இந்தக் கதையை கேட்க அவங்க விரும்புவாங்க. நான் சொல்ல வர்றத  அவங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும். 

மருத்துவர்: இங்க ஜனங்க நாடகத்தை எதிர்பார்க்குறாங்க. ஆனால் வாழ்க்கை நாடகத்தன்மையே இல்லாத ஒன்னு... 

சாந்தி: இல்ல, அவங்களுக்கு நாடகம் தேவையில்ல. அவங்க, எனக்கு என்ன நடந்துச்சு, ஏன் நடந்துச்சு, அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிக்க விரும்புறாங்க. 

மருத்துவர்: ஓ சாந்தி! (தலையை உலுக்குகிறார்.) சரி, நானே விட்டுக் கொடுக்கேன். என்னால இதுக்கு மேல என்ன செய்ய முடியும், நான் அவங்களுக்கு இத பத்தின அறிமுகத்தை சொல்லி தயார்படுத்துறேன், நீ உள்ள போ. 

சாந்தி: அப்போ சரி, நான் போய்  முதல் தடவை மாதிரியே என்னோட கண்களைச் சுத்தி கருவளையம் இருக்குற மாதிரி ஒப்பனை செஞ்சுக்கட்டுமா?

மருத்துவர்: நீ என்னென்ன செய்யணுமோ செய், ஆனா இப்போ இங்கிருந்து போ.

சாந்தி: நீங்க என்ன ரொம்ப அவசரப்படுத்துறீங்க தெரியுமா டாக்டர். 

     (சாந்தி மேடையை விட்டு வெளியேறுகிறாள். மருத்துவர் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு பீடத்தின் மீது ஏறி நின்று பார்வையாளர்களின் கண்களை நேரே பார்த்தவாறு நிற்கிறார்.)

மருத்துவர்: சாந்தி இன்னைக்கு இங்கிருந்து போக போறா. மூணு மாசம், எட்டு நாளைக்குப் பிறகு அவ கிளம்புறா. சாந்தி  பராசத் பக்கத்துல வாழற அடக்கமான ஒரு பொண்ணு. நீங்க அவ கதையை கேட்க விரும்பாம இருக்கலாம், நீங்க சோர்வா கூட உணரலாம். ஆனா நீங்க கவனிச்சு கேட்டீங்கனா, இதுல இருந்து அர்த்தமுள்ள விஷயம் உங்களுக்குக் கிடைக்கும். இங்க நாங்க மனநல கோளாறுக்கு மருத்துவம் பாக்குறோம். நான் இங்க ஒரு மனநல மருத்துவர், சமூகநலப் பணியாளர். 

     நான் கொஞ்சம் நேரம் முன்னாடி நின்னுக்கிட்டிருந்த அந்த பீடம் மேல இருந்து தான் நான் தேவைப்படுற இடத்துல பேசுவேன். இப்போ இந்த இடத்துக்குப் பின்னாடி இருக்குற பகுதியும் இதுவும் தனியா பிரிஞ்சு இருக்கறதா ஒரு வரைபடத்த கற்பனை பண்ணிக்கலாம்.  உதாரணமா, பின்னாடி இருக்குற பகுதில நோயாளியோட அறை, படுக்கை, கதவு இருக்குனு வச்சுக்கலாம். இப்போ அந்த மேஜை, இருக்கைகள், படுக்கை முன்னாடி ஒரு நேர் கோடு போடுங்க. அந்த கோட்டுக்கு பின்னாடி என்னோட அறை. நான் அங்க தான் நோயாளிகளை பரிசோதிப்பேன். பின்னாடி இருக்குற பூந்தொட்டிகள், அங்க நோயாளிகள் உலாவுற தோட்டம் இருக்குறத குறிக்குது. சொல்லப் போனா, இது எல்லாத்தையும் நான் உங்க கற்பனைக்கும் அனுதாபத்துக்குமே விட்டுடுறேன். ஒன்ன மட்டும் ஞாபகம் வச்சிக்கோங்க, சாந்தி ரொம்ப நல்ல பொண்ணு. அவ சரியா மூணு மாசம் எட்டு நாட்கள் முன்னாடி ஒரு வியாழக்கிழமை இங்க வந்து சேர்ந்தா. அது 1969ஆம் வருஷம் மே ஒன்னாம் தேதி. எனக்கு இன்னும் அந்த நாள் நினைவிருக்கு. சாந்தி எந்த சிறப்பியல்புமின்றி சாதாரணமானவளா இருந்தாலும் அவளிடத்தில குடிகொண்டிருந்த  ஒருவித துக்கம் அவளை வித்தியாசமானவளா உங்களை எண்ண வைக்கும். இதோ அவள் வருகிறாள். 

சாந்தி: (கத்திக் கூச்சலிட்டவாறு) நீங்க என்னை எங்கே கொண்டு போறீங்க, எங்கே? என்னை விடுங்க, நீங்க என்னைக் கொல்ல திட்டம் தீட்டுறீங்க. உங்களால இன்னும் எவ்வளவு தான் இரக்கமில்லாதவங்களா மாற முடியும்?

    (மருத்துவர் உடனே மேஜையில் அமருகிறார். சாந்தியை அவளது கணவனும், செவிலியும், பெண் உதவியாளரும் என மூவருமாக  இழுத்து வருகிறார்கள். சாந்தியின் கூந்தல் தீப்பிளம்பாக பாயும் விண்கல்லின் வால் பகுதியைப் போல விரிந்திருக்க, அவளின் கண்கள் முற்றான பயத்திலும், உடுத்தியிருக்கும் சேலை உடலில் இருந்து தளர்வாகவும் தொங்கிக்கொண்டுள்ளது. மருத்துவரின் அறையை அடைந்ததும் சாந்தி முகம் தரையில் படுமாறு கீழே விழுகிறாள். தனது தலையை உயர்த்தி நெற்றியைத் தொட்டுப் பார்க்கையில் அவள் இட்டிருந்த செந்தூரம் (குங்குமம்) அவளது கைகளைச் சிவக்கச் செய்தது. அதைப் பார்த்த மாத்திரத்தில் சாந்தி அலறுகிறாள்.)

சாந்தி: ரத்தம்! ரத்தம்! ஐயோ, பாருங்க, அவங்க என்ன கொலை செய்யுறாங்க. என் தலையில இருந்து ரத்தம் கொட்டுது. 

கணவன்: இல்ல, சாந்தி. அது ரத்தம் கிடையாது. அது உன்னோட குங்குமம். 

சாந்தி: (குரலை உயர்த்தி) கல்யாணம் ஆன பெண்கள் தான் குங்குமம் வச்சுக்குவாங்க. எனக்கு எப்போ கல்யாணம் நடந்துச்சு?

கணவன்: ஆனா சாந்தி, உனக்கு... 

சாந்தி: என்னது இதெல்லாம்? நான் ஏன் வளையல் போட்டுருக்கேன்?

கணவன்: உன் கையில இருக்குறது இரும்பு வளையல். அது நீ கல்யாணமான பொண்ணுங்கிறதுக்கு அடையாளம். 

 சாந்தி: கல்யாணம்! குங்கமம்! இது எல்லாம் சதித்திட்டம். என்னை கொல்றதுக்காக எல்லாரும் என்னை ஏமாத்த பாக்குறாங்க.  யாருக்கு வேணும் உங்க இரும்பு வளையல்! இந்தாங்க நீங்களே எடுத்துக்கோங்க, எடுத்துக்கோங்க! 

       (இரும்பு வளையலை கழற்றித் தரையில் வீசுகிறாள். அதை தரையில் அடித்து அடித்து உடைக்கிறாள். அதன் பின் தனது நெற்றியிலுள்ள குங்குமத்தை அழிக்கிறாள்.)

     (மருத்துவர் மெதுவாக சாந்தியை நோக்கி நடந்து சென்று, அவள் தோள்கள் மேல் மென்மையாக கை வைக்கிறார். சாந்தி அவரைப் பார்க்கிறாள்)

மருத்துவர்: வா, இருக்கை-ல வந்து உக்காரு.

சாந்தி: யார் நீங்க?

மருத்துவர்: ஒரு நண்பன். 

 சாந்தி: நண்பனா? ஆனா நீங்க என் கிராமத்துக்கு புது ஆள் மாதிரி இருக்கு. சமீபத்துல தான் இங்க வந்தீங்களா? 

 மருத்துவர்: ஆமாம்.

 சாந்தி: அப்போ சரி. நான் எங்க உட்கார? இங்கயா?

 மருத்துவர்: ஆமா. 

      (உட்காருவதற்காகத் திரும்புகையில், சாந்தி தனது கணவனும், செவிலியும் அங்கிருப்பதைக் கவனிக்கிறாள்.) 

சாந்தி: (மருத்துவரைப் பார்த்து) தயவுசெஞ்சு இந்த ஆளையும் அந்தப் பொம்பளையையும் இங்க இருந்து அனுப்புங்க. அவங்க என்ன கொலை செய்ய திட்டம் போடுறாங்க. உங்க சதிய என்னால கண்டுபிடிக்க முடியாதுனு நினைச்சீங்களா? (கணவனிடம் கூறுகிறாள்.) எனக்குத் தெரியும், என்னை நீ ஒழிச்சுக்கட்ட பாக்குற, அப்போ தானே நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா சேர்ந்து வாழ முடியும். அதுதானே உண்மை? (மருத்துவரிடம்) அவங்கள வெளியேத்துங்க, இல்லைனா நான் இங்க இருந்து ஓடிப்போயிருவேன். 

மருத்துவர்: சிஸ்டர், இவர கூட்டிகிட்டு வெளிய போயி காத்திருங்க. 

     (செவிலி, கணவன், தாதி மூவரும் மேடையை விட்டு வெளியேறுகின்றனர். சாந்தி நிம்மதிப் பெருமூச்சுடன் இருக்கையில் அமர்கிறாள்.) 

சாந்தி: ஆ! இப்போ எவ்ளோ நிம்மதியா இருக்கு! நீங்க ரொம்ப நல்ல மனிதர். எனக்கு இப்போ உங்களைக் கொஞ்சம் கொஞ்சமா பிடிக்க ஆரம்பிக்குது. அவங்க என்னை அடிச்சுக்கிட்டே இருந்தாங்க, உங்களுக்குத் தெரியுமா. நீங்களும் அதே மாதிரி என்ன நடத்த மாட்டீங்கனு நம்புறேன். 

மருத்துவர்: நிச்சயமா இல்ல. நாம நண்பர்களாச்சே. 

சாந்தி: அப்படினா, நீங்க எப்போவும் என் பக்கம் இருப்பீங்களா?

மருத்துவர்: ஆமா. (துண்டுக் காகிதத்தை பார்த்தவாறு) நீ ஸ்ரீமதி சாந்திமோயீ தாஸி, சரியா? 

சாந்தி: ஆமா. 

மருத்துவர்: உன்ன இங்க கூட்டிட்டு வர்றதுக்கு என்ன காரணம்னு  தெரியுமா?

சாந்தி: ஏன் நான் இங்க வரணும். இது நம்ம வீடு தான, ஆனா----

மருத்துவர்: ஆனா?

சாந்தி: நீங்க இங்க கொண்டுவந்து வச்சுருக்குற இந்தப் பொருளெல்லாம் என்ன? இத எப்படி உங்களால மருத்துவமனைனு சொல்ல முடியும்?

மருத்துவர்: மருத்துவமனைல என்ன செய்வாங்னு ஏதாவது தெரியமா?

சாந்தி: இல்ல. 

மருத்துவர்: சரி. இன்னைக்கு என்ன நாள்?

சாந்தி: ஒரு வேலை, ஞாயிற்றுக்கிழமையா இருக்கலாம். 

மருத்துவர்: இன்னைக்கு வியாழக்கிழமை கிடையாதுனு உறுதியா தெரியுமா?

சாந்தி: இன்னைக்கு வியாழக்கிழமையா இருந்திருந்தா, லட்சுமி பூஜைக்கான ஏற்பாடெல்லாம் நடந்திருக்குமே. எனக்கு இங்க அந்த மாதிரி எந்த ஏற்பாடும் நடந்த மாதிரி சுத்தமா தெரியல.

மருத்துவர்: இன்னைக்கு என்ன தேதி?

சாந்தி: இது என்ன நீதிமன்றமா? ஏன் என்கிட்ட தொடர்ச்சியா கேள்வியா கேட்டுகிட்டு இருக்கீங்க? எனக்கு எதுவும் ஞாபகத்துல இல்ல. எல்லாத்தையும் நான் மறந்து போயிட்டேன், என்னையே கூட. அது சரி டாக்டர்-----

மருத்துவர்: நான் டாக்டர்னு உனக்கு எப்படி தெரியும்?

சாந்தி: அவன் என் காதுல சொன்னான்.

மருத்துவர்: யார் அவன்?

சாந்தி: என் தங்கம் (மாணிக்), டாக்டர். என்னோட என் குட்டித் தங்கம், என்னோட அழகான குட்டிக் குழந்தை. 

     (ரத்தினம் என பொருள்படும் 'மாணிக்' - குழந்தையை சுட்டும் பெயர்)

மருத்துவர்: ஓ! அப்படியா. அவன் வேற என்னலாம் சொல்றான்?

சாந்தி: அவன் எனக்கு நிறைய விஷயம் சொல்றான். அவன் சொல்றான்: அம்மா------

     (சாந்தி கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலையில் இருக்கிறாள்.)

மருத்துவர்: அவன் இப்போ எங்க இருக்கான்?

 சாந்தி: (கிளர்ச்சியுற்றவளாய்) அவன என்கிட்ட இருந்து பறிச்சுக்கிட்டாங்க.  

 மருத்துவர்: யார் அப்படி செஞ்சாங்க?

சாந்தி: வேற யாரு, அந்த  பீடை பிடிச்ச, கேடுகெட்ட, மனுஷன் தான்! 

மருத்துவர்: மாணிக்-அ எங்க எடுத்துட்டு போனாங்க?

சாந்தி: உம்ம்ம், இருங்க நான் ஞாபகப்படுத்தி பாக்கேன். அது ரொம்ப காலத்துக்கு முன்னாடி நடந்ததுனு நினைக்கேன். இல்ல, இல்ல. அது நடந்து அவ்ளோ காலம் ஒன்னும் ஆகல. அப்போ, மாணிக்-க்கு வெறும் ஒன்றரை வயசுதான். அவன் என் கையில இருந்தபோது பறிச்சிகிட்டு போனாங்க.

மருத்துவர்: மாணிக் உன் காதில வேற என்னலாம் சொன்னான்?

சாந்தி: அப்பா உன்னைக் கொல்றதுக்கு முன்னாடி நீ அவரைக் கொலை செய்யணும்னு, அவன் சொல்றான். 

மருத்துவர்: அவன் இத எல்லாத்தையும் உன் கிட்ட அவ்ளோ தெளிவா சொல்றானா?

சாந்தி: ஆமாம் ரொம்ப தெளிவா. கோகோன் (ஆண் குழந்தை) தான் என்னை சுத்தி இருக்குறது பத்தி எனக்கு எச்சரிக்கிறான். 

மருத்துவர்: கோகோன் உன்னோட இப்போ இல்ல. அப்புறம் எப்படி அவன் உன் கிட்ட பேச முடியும்?

சாந்தி: நீங்க எப்படி இவ்ளோ வெள்ளந்தியா இருக்கீங்க? அவன் என்கிட்ட ரேடியோ வழியா பேசுறான். என்கிட்ட மட்டும் தான் அவன் பேசுவான். 

மருத்துவர்: உன்கிட்ட இன்னும் வேற யாராவது பேசுறாங்களா?

சாந்தி: இல்லையா பின்ன! சுத்துவட்டாரம் முழுக்க, கியான்தாதி பேசுவா, (விரல் விட்டு எண்ணுகிறாள்.) அதே மாதிரி மாயா அத்தை, அப்புறம் அஞ்சலி. இன்னும் நிறைய பேரு இருக்காங்க. அவங்க எல்லாரும் நான் என் மனசோட சமநிலையை இழந்துட்டதா சொல்றாங்க. நான் சொல்ற ஒரு வார்த்தையையும் அவங்க நம்ப மாட்டாங்க. அவங்க என்ன விரட்ட மட்டும் தான் செய்வாங்க. இங்க வெள்ளை சேலை கட்டியிருந்த பொம்பளை மாதிரி, அவங்க எல்லாரும் கூட என் கணவரோட கூட்டு சேர்ந்துருக்காங்கனு எனக்குத் தெரியும். இதனால அவங்களுக்கு என் கணவர் கிடைப்பாருனு நினைக்காங்க. அவங்க ஒவ்வொருத்தரும் என்னோட எதிரி தான். உங்கள தவிர எனக்கு வேற நண்பர்களே இல்ல. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

அணங்கு (பகுதி -4) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)