கடலும் மனிதனும்- நாரயணி சுப்பிரமணியன் (வாசிகசாலை இணைய தள தொடர் கட்டுரை)
கடலும் மனிதனும்- நாரயணி சுப்பிரமணியன் (வாசகசாலை இணைய தள தொடர் கட்டுரை)
கடலும் மனிதனும் என்கிற தலைப்பில் வாசகசாலை தளத்தில் வெளியான இந்த கட்டுரை கடல் குறித்த வேறுபட்ட பார்வையாக உள்ளது. கடலை குறித்து தமிழில் கவிதைகள் ஏராளம். அதேபோல், தமிழில் கடலைக் குறித்த கதைகள் என்றாலே கடலோரத்தில் வாழ்பவர்களையும் கடலில் பயணம் செய்பவர்களையும் மட்டுமே எனக்குத் தெரிந்து மையப்படுத்தியே இருக்கிறது. இதுபோன்ற கடலைக் குறித்த கட்டுரைகள் மட்டுமல்லாது புனைவும் கடலின் மறு கோணத்தை பிரதிபலித்தால் அது இலக்கிய வளர்ச்சியின் ஒரு வகையாகவே இருக்கும். நாரயணி சுப்பிரமணியன் அவர்களின் பரந்து பட்ட கடல்சார் சூழலியல் பார்வை சற்று மாறுபட்டதாக தென்படுகிறது.
கடலைக் குறித்த ஒரு தொடர் கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தால் தான் வாசகரை சென்றடையும் என்கிற தொலைநொக்குப் பார்வை எழுத்தாளரிடம் இருந்திருப்பதை முதல் அத்தியாயத்திலேயே தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதற்கு பின் வந்த கட்டுரைகளில் சார்புத் தன்மையுடன் அடுத்த கட்டுரையை அணுகும் போக்கு குறைந்திருந்தது. சுறாக்கள் குறித்த தகவல்களோடு சேர்த்தே சுறா எண்ணெய் குறித்த தகவல்களை விளக்கமாக சொல்லியிருக்கலாமோ என்கிற எண்ணம் வந்தது. எது எப்படியாயினும் இந்த கட்டுரைத் தொடரை வெளியிட அவர் பலவாறு தகவல்களை திரட்டியுள்ளார். நம்முடைய சங்க இலக்கியமான நற்றிணை குறுந்தொகை அடுத்து திருவிளையாடல் புராணம் என்ற நூல்களையும் தமிழ் திரைப்பட பாடல்களையும், பிற நாட்டு நாவல்கள், திரைப்படங்கள், கொலம்பஸ் போன்றோரின் பழங்குறிப்புகள், பிற நாட்டு சிற்பங்கள், ஓவியங்கள், அங்கு சொல்லப்படும் வாய்வழிக் கதைகள், பழங்குடியினர் நம்பிக்கைகள், சடங்குகள், சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட மீன்களின் உறுப்புகள், பழங்குடியின பண்பாட்டில் மீன்களின் பங்கு, வங்காளம் போன்ற நாடுகளில் உள்ள மீன்களை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு வடிவம், கடல் உலக நாடுகளில் ஏற்படுத்திய புரட்சிகர மாற்றம், புதிய நாடுகளை கடல் உருவாக்கிய ஆற்றல், மீன்களும் மீன்கள் தவிர்த்து கடலில் கிடைக்கும் சங்கு போன்றவற்றின் பயன்பாடுகள், அது மட்டுமன்றி கடலைச் சுற்றி வந்த பல மர்மங்களுக்கான விளக்கம் தீர்வு முதலியனவும், கடல் கண்ணி, க்ரெக்கென் போன்றவை குறித்த தீர்வுகள், பல அறிஞர்களின் கருத்துக்களை மேற்கோளாக தாங்கிய விதம், அங்காங்கே கவிதைகள், கட்டுரையின் தன்மைக்கேற்ற படங்கள் போன்றவை கட்டுரையில் சிறப்பான இடம் வகிக்கிறது. அச்சு நூலாக வாசகசாலை இந்த கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டால், நூல் பெருத்த வரவேற்பை நிச்சயம் பெறும்.
கடலின் எல்லையை எவரால் வகுக்க முடியும், கடலில் நாட்டின் எல்லையை எவரால் குறிக்க முடியும், அவ்வாறு அதைச் செய்தாலும் கூட சிறிய மீன் கூட நாடை விட்டு நாடு கடந்து செல்வதோடு எல்லையவே மாற்றிவிடும் ஆற்றலை கடல் மீன்களுக்கு கொடுத்துள்ளது அழகாக சொல்லப்பட்டுள்ளது. நீலம் இல்லை என்றால் பச்சை இல்லை என்ற அறிவியலாளர் சில்வியா எர்ல் கருத்து கட்டுரையில் நன்கு பொருந்தி இருந்தது. மேல் கடலுக்கும் ஆழ்கடலுக்கும் இடையிலான வித்தியாசம், இதுவரை கடலைப் பார்த்து வந்த கோணத்தையே மாற்றும் வகையில் அமைந்தது. 1180ல் ஸ்வர்ரே குறித்த க்ரெக்கென் குறிப்பில் இருந்து தொடங்கி க்ரெக்கெனைக் குறித்து விளக்க ஆரம்பிக்கிறார். பைபிளில் வரம் லெவியதான் போன்றது க்ரெக்கென் எனும் எரிக் கருத்தைச் சொல்லி க்ரெக்கென சாயல் கொண்ட கடலில் காணப்படும் விநோத உருவங்கள் உலகளவில் உள்ள பல நாடுகளில் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைச் சொல்லி அரிஸ்டாட்டில் கருத்து மூலம் அதன் தொன்மையைசொல்லியதோடு 2004ல் படம் பிடிக்கப்பட்ட தகவலோடு கண்டுரை முடிகிறது.
வைக்கிங் இனத்தவர் குறித்த தகவல்களுக்கு பின் காட் மீனாலும் கருவாடாலும் ஏற்பட்ட உலக மாற்றம் பேசப்படுகிறது. அமெரிக்க தோற்றம், நியூ இங்கிலாந்து, ஐஸ்லாந்து, பிரான்ஸ் பிரிட்டன் என நாடுகளுக்கிடையே கடல் நடத்திய திருவிளையாடல் அழகாக சொல்லப்பட்டுள்ளது. பாஸ்டன் நகரில் உள்ள காட் மீன் சிற்பத்தோடு இக்கட்டுரை நிறைவடைகிறது.
பீட்டர் பெஞ்ச்லி எழுதிய ஜாஸ் நாவலும் அதைத் திரையில் காண்பித்து சுறாவை கவனத்திற்கு கொண்டு வந்த இயக்குனர் ஸ்டீவன்ஸ் புகழும் பலவாறு சொல்லப்பட்டு சுறாவை மையப்படுத்திய பல படங்களை குறித்த தகவல்களும் ரௌடி சுறாவாக கடலில் வலம் வந்த கடல் அரசன் பேசப்படுகிறான். இந்த கட்டுரையில் தமிழ் இலக்கியமும் திரைப்பட பாடலும் வசனும் பொருந்தி வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. டாகுவாகா எனும் பெயரில் உள்ள ஃபிஜி தீவு கடவுள், மாயன் பழங்குடியினத்தார் பயன்படுத்திய சுறாவின் அடையாளங்கள் விளக்கப்பட்டுள்ளது. உயர்ந்த அரச குடும்பத்தினர் மட்டுமே சீனாவில் இருந்து சுறாவை சாப்பிட்டதும், சீன துடுப்பும் சீன துடுப்பு சூப்பின் பரவலோடு சுறாவின் அழிவு ஒரு வருடத்திற்கு நூறு மில்லியன் என்கிற ஒரு தகவலோடு கட்டுரை நிறைவாகிறது.
கடற்கன்னி, கடலுக்கடியில் இருந்த நெசவு தொழில் பற்றிய சீனகதை, மனித தலையும் பறவை உடலும் கொண்ட சைரன் மனித தலையும் மீன் வாலும் பெற்ற வரலாறு, கொலம்பஸ் 1493ல் அவன் சந்தித்ததாக எழுதியுள்ள மூன்று கடல் கண்ணி பற்றிய குறிப்புகள், கடல் பசுவின் உடலை கடல் கண்ணியின் உடலாக ஆய்வு செய்தது. மனிதனுக்கும் மீனுக்கும் இடையிலான பரிணாம தூரம் பேசப்பட்டு கடல் கண்ணிகள் இல்லை என்ற தீர்வையே எழுத்தாளர் கூறியுள்ளார்.
பலூன் மீன் எனப்படும் டெப்போ மீனின் விஷம் அழகாக சொல்லப்பட்டுள்ளது. எகிப்தின் ஓவியத்தில் மீன் இடம்பெற்ற செய்தியும், மனிதன் கடித்து அவனே பாதிக்கப்படுவது பாய்சன்(poison) என்றும், மனிதனை ஏதாவது ஒன்று கடித்தால் அது வெனம்(venom) என்றும் அழைக்கப்படுகிறது எனக்கூறி டெப்போ மீனை உண்டு சமைத்து இறந்ததால் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், கதையிலும் கவிதையிலும் படைப்பாளர்கள் இந்த மீனை பயன்படுத்திய உருவகித்த விதம், ஆண் மீன் சுவைக்க தகுந்தது எனவும், பெண்மீன் நச்சு என்று தகவலும் சொல்லப்பட்டுள்ளது. பறவைகளில் பெண்ணும், விலங்குகளில் ஆணும் தான் உண்ண சுவை கொண்டவை என்பதைப் போல டெப்போ மீனும் பேசப்பட்டு இருக்கிறது.
கடல் மின்மினி, கடல் ஒளிர்வி என பலவற்றை கண்ணாடி குடுவையில் வைத்து ஒளியைப் பெற்றதையும், 1688ல் டாச்சர்ட் சூரியனிடம் பெற்ற ஒளியை பூதங்கள் கோபத்துடன் இரவில் ஓளிரச்செய்கின்றன என்ற கருத்தோடு கட்டுரை பரிணாமம் அடைந்து டைனோசர் காலத்தில் வாழ்ந்த மீன் வகை டைனோசர் அழிந்த பின்பும் வாழ்வதும் அதைத் தேடிய அனுபவமும் சொல்லப்பட்டுள்ளது.
மினாட்டமா கிராமத்தில் பாதரச உயர்வால் ஏற்பட்ட மிளாட்டமா நோய், இலித் மீன் உணவு வங்காள பண்பாட்டில் காலந்தொட்டு இருக்கும் வரலாறு, வேளா மீன் குறித்த தமிழ் இலக்கிய சான்று, சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட மீன்களின் உறுப்புகள், திமிங்கில சுறாவும் அதன் கல்லீரலில் கிடைக்கும் பல லிட்டர் எண்ணெயும் அதன் பயன்பாடும், இங்க்கி மீன் எனப்படும் பேய்க்கணவாய் தப்பிக்கும் வகைகளும் மனிதன் தன்மையை அறிந்து அது செயல்படும் தன்மையும் அழகாக பேசப்பட்டு இருக்கிறது. பெரு நாட்டில் நெத்திலி உரமாகவும், தீவனமாகவும் பயன்படுத்தப்பட்ட தன்மை. குவோனா எனும் வெள்ளைத்தங்கம் பற்றிய தகவல்கள். புறா எச்சம் ஐந்து வெள்ளிக்கு விற்கப்பட்ட விவிலிய செய்தியும் சொல்லப்பட்டுள்ளது. ஊதா நிறம் சங்கின் மூலம் தயாரிக்கப்படுதல் அரச குடும்பத்திற்கும் ஊதா நிறத்திற்குமான தொடர்பு கடலில் செல்லும் கப்பலோடு கடல் உயிரிகள் இடம் நகரும் விதம் என பலதரப்பட்ட கருத்துச் செறிவு மிக்க கட்டுரைத் தொடராக இது இருந்தது. வாசகசாலை இந்தக் கட்டுரைகளைத் தொகுப்பு நூலாக கொண்டு வந்தால் நல்ல வரவேற்பு பெறும்.
வாசகசாலை இணையதள பக்கத்தில் இந்த தொடரை வாசிப்பதற்கான இணைப்பு:
http://www.vasagasalai.com/kadalum-manithanum-su-narayani/

அருமை 👍
பதிலளிநீக்குநன்றி அம்மா..
நீக்கு