நரகவாசிகளின் வியர்வை -தீனன்

நரகவாசிகளின் வியர்வை -தீனன்


மாந்தர்கள்: இளைஞன், கண் தெரியாதவர், பூக்கடைக்காரன், பிச்சைக்காரி, போலீஸ், மனிதன் 1,2,3 இடங்கள்: வீட்டின் அறை, வீட்டு வளாகம், சாலை, சிறுவர் பூங்கா

காட்சி-1
வீட்டின் இருண்ட அறையில் அதிகாலைப் பொழுதில் பழைய சுவர்கள் தூசடைந்த இருண்ட அறையில் ஜன்னலில் கட்டப்பட்ட துணித் துளைகள் வழியே சூரிய ஒளி கற்றைகளாக மேசையின் மீது விழுகிறது. மேடையின் நடுவே மிகவும் முன்னே வைக்கப்பட்ட மேசையின் மீது பாதி நிரம்பிய Syringe, பிளாஸ்டிக் கவரில் இருக்கும் Needle, காலியான மருந்துக் குப்பி, ஊசி போடுவதற்கான கயிறு உள்ளது. கருப்பு வார் பனியன், டிராக் பேண்ட் அணிந்த 20 வயதுடைய ஒரு இளைஞன் மேசைக்கு இடதுபுறம் தள்ளி மேடையின் நடுப்பகுதிக்கு சற்று ஓரமாக போடப்பட்ட சோபாவில் அமர்ந்தபடி, நேரே வைக்கப்பட்டிருக்கும் தொலைக்க்காட்சியின் சேனல்களை தொடர்ந்து மாற்றுகிறான் (சோபா பார்வையாளர்களை நோக்கி உள்ளது). தொலைக்காட்சியில் பக்தி நிகழ்ச்சிகள், கார்ட்டூன்கள் மாறுகின்றன (இளைஞனின் முகத்தில் படும் தொலைக்காட்சி வண்ண ஒளிகள் மாறுவதை மட்டுமே பார்வையாளர்கள் காண்கின்றனர்). பின்னணியில் சேனல்கள் மாறும் இரைச்சல் ஒலி அதிகரிக்கிறது. சலிப்படைந்த அவன் ரிமோட்டை மேடையின் நடுவே மேசையை நோக்கி தூக்கி எறிகிறான். பின்னணியில் ரிமோட் உடையும் சத்தத்துடன் மற்ற சத்தம் சட்டென்று நின்று, கல்லறையின் அமைதி நிலவுகிறது. இளைஞன் கண்களை மூடியபடி, தலையை மெதுவாக அசைக்கவும் சுழற்றவும் செய்கிறான். அசைவின் வேகம் குறைய, அவன் முகத்தில் ஒரு ஆழ்ந்த சிந்தனை வெளிப்படுகிறது. திரைக்கு வெளியே இருந்து ஒரு BEEP சத்தம் ஒலித்து மறைகிறது. ஒலி நின்றதும், அவன் தலையை அசைப்பதை நிறுத்தி, ஆனால் இன்னும் கண்கள் மூடிய நிலையிலேயே அசையாமல் அமர்ந்திருக்கிறான். மீண்டும் திரைக்கு வெளியே இருந்து இரண்டாவது BEEP ஒலி கேட்கிறது. உடனடியாக இளைஞன் சோபாவில் இருந்து சட்டென எழுந்து மேடையைச் சுற்றிலும் குழப்பத்துடன் பார்க்கிறான். ஊசி உள்ள மேசையை நோக்கி (மேடைக்கு நடுவில்) நடந்து வருகிறான். மேசை மீதுள்ள பொருட்களை மிருகப் பசியுடன் பார்க்கிறான். தன் வலது கையை உயர்த்தவும் கைகள் நடுங்குவதைக் காண்கிறான். இரண்டு கைகளையும் மேசை மீது வைத்து, தன் எடையைத் தாங்கிக்கொள்கிறான். தலை மேசையை நோக்கித் தொங்குகிறது. திரைக்கு வெளியே இருந்து மூன்றாவது BEEP ஒலி கேட்கிறது. அவன் கைகளை மேசையில் இருந்து எடுத்து சற்று நிமிர்ந்து பிளாஸ்டிக் கவரை கையில் எடுத்து கிழித்து அதில் உள்ள needleஐ எடுக்கிறான். கவரைக் கிழித்து, ஊசியின் பிளாஸ்டிக் பகுதியில் இணைக்கிறான். ஏற்கனவே பாதி மஞ்சள் திரவம் நிரம்பிய ஊசியை நிமிர்த்தி பார்த்து, மேஜையில் இருக்கும் கயிற்றை எடுக்க முற்படுகிறான். அவனது கை நடுங்க அதை உயர்த்தி அருவருப்பாக பார்க்கிறான். மீண்டும் கையை நீட்டிக் கயிறை எடுத்து தன் கையில் ஊசியைச் செலுத்தும் வகையில் காட்டுகிறான். கட்டிய பின் பார்வையாளர்களை நோக்கியும் பார்வையை அலைபாய விட்டு, அவர்களுக்கு முதுகைக் காட்டுமாறு பின்புறமாகத் திரும்பி ஊசியை ஒரு முறை மேலே உயர்த்தி அதை கைக்கு கொண்டுவந்து செலுத்துகிறான். மெல்லிய முனகல் கேட்கிறது. மருந்து காலியான ஊசியைக் கீழே போட்டுவிட்டு தலையை மேல் கூரையை நோக்கி உயர்த்துகிறான். பின்னர், தலை இயல்பான நிலைக்குத் திரும்புகிறது. கையில் உள்ள கயிறைக் கழற்றி தன் காதுகளின் மீது தன்னியல்பாக இரு முறை அடித்துவிட்டு பார்வையாளர்கள் பக்கம் திரும்பி முன்னே தூக்கி வீசுகிறான். அவன் பார்வையாளர்களைப் பார்த்திருக்க அவனின் உடல் மெல்ல குளிரில் உள்ளது போல் நடுங்கத் தொடங்குகிறது. தோள்களை குழுக்குகிறான். அவன் கண்களைத் திறக்கச் சிரமப்படுகிறான், மயக்கத்தில் இருப்பதுபோல நிலைகுலைவுடன் குறுகி நிற்கிறான். அந்தப் பாவத்துடன் மேஜையின் பின் இருந்து முன் (மேடையின் விளிம்பில் வந்து) தரையில் குறுக்காகக் கைகளை மார்போடு அணைத்தபடி குளிரால் நடுங்குவதுபோல பார்வையாளர்களை நோக்கி பக்கவாட்டில் படுத்துக்கொள்கிறான்.


காட்சி – 2
மதியப் பொழுதில் வீட்டின் வெளிச்சம் புகும் அறையில் அதே நிலையில் இளைஞன் மேடையின் விளிம்பில் படுத்திருக்க, வெளிச்சம் மெல்ல மெல்ல மேடையின் பின் இருந்து முன் நோக்கி வருகிறது. வெளிச்சம் கூடக்கூட, அவன் அதே நிலையில், சற்றும் அசையாமல் படுத்திருக்கிறான். அறை முழுவதும் பிரகாசமாக ஒளிர்ந்து மதியத்தை குறிக்கிறது. முற்றிலும் வெளிச்சமான மேடையில் இளைஞன் மெதுவாகத் தன் உடலை அசைத்து, கண்களைத் திறக்கிறான். ஒளியைத் தடுக்கத் தன் கைகளைக் கண்களின் மீது குறுக்காக வைக்கிறான். பின்னர், உடலை முழுவதுமாகத் தளர்த்தி, தரையில் மல்லாக்கப் படுத்துக்கொள்கிறான். கூரையைப் பார்த்தபடி சிந்திக்கிறான். திரைக்கு வெளியே இருந்து நான்காவது BEEP ஒலி கேட்கிறது. சட்டென துள்ளி எழுந்து உட்காரும் இளைஞன், நிதானத்துக்கு வந்து தரையில் கைகளை ஊன்றி மெதுவாக எழுகிறான். அவன் முகத்திலிருந்த பதற்றம் இப்போது எதையும் கண்டுகொள்ளாத சோம்பலாக மாறுகிறது. மேஜைக்குப் பின் சென்று எதையோ தேடுவதுபோல் பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் கீழே வீசிய கயிறு மற்றும் ஊசியை எடுத்து மீண்டும் மேஜைக்கு அருகே வருகிறான். ஊசியில் மஞ்சள் திரவத்தை நிரப்பி மேடைக்குப் பின் செல்கிறான் (கழிப்பறைக்குள் செல்கிறான்). மேடை யாருமின்றி உள்ளது. பின்னணியில் (அவன் கழிப்பறைக்குள் இருப்பதுபோல்) அவன். முணுமுணுக்கும் சத்தமும், பின்னர் சில வரிகளைப் பாட முயற்சிக்கும் சத்தமும் கேட்கிறது. சிறிது அமைதிக்குப் பிறகு, அவன் விம்மி அழும் ஒலி கேட்கிறது. பின்னர் அவன் மீண்டும் மேடைக்குள்(அறைக்குள்) நுழைகிறான். அவன் வெளியே செல்லத் தயாரான உடையில் இருக்கிறான். கண்கள் சிவந்திருக்கின்றன. கயிற்றை மேஜையில் வைத்துவிட்டு காலியான மஞ்சள் மருந்து பாட்டிலையும், காலியான ஊசியையும் மேஜைக்கு அருகில் உள்ள குப்பைத் தொட்டியில்(ஏற்கனவே ஊசிகள், காலி மருந்து பாட்டில்கள் நிரம்பியுள்ளது) போட்டுவிட்டு அறையை சுற்றுமுற்றும் பார்க்கிறான்.
காட்சி - 3
வீட்டின் வாசலில், வெளியுலகத்தின் பிரகாசத்தை உணர்த்தும் அதிக வெளிச்சமான மேடையில் முன் நின்று கண் கூச சூரியனைப் பார்ப்பது போல் மேலே பார்க்கிறான். பின்னர் கூலிங் கிளாஸ் அணிகிறான். அவன் முன்னோக்கி நடக்க மேடையின் முன் ஓரம் (தெருவின் ஓரத்தில்) அமர்ந்திருக்கும் (மூதாட்டி) கந்தலாடை பிச்சைக்காரியைப் பார்க்கிறான். அவளைத் தவிர்க்க, அவன் மறுபக்கத்திற்குச் செல்கிறான். பிச்சைக்காரி எழுந்து, அவன் இருக்கும் பக்கத்திற்குச் செல்கிறாள். இளைஞனும் மீண்டும் மேடைக்கு மறுபுறம் சென்று நடக்கிறான். அவன் மீண்டும் அவனை தொடர்ந்து வந்து கையை நீட்டிப் பணம் கேட்கிறாள். இளைஞன் எரிச்சலுடன் பணம் இல்லை என்பதுபோல் பைகளைத் தடவி தலையசைத்து காட்டுகிறான். அவர் ஏமாற்றத்துடன் நிற்க அவளைக் கடந்து வேகமாக முன்னோக்கி நடக்கத் தொடங்குகிறான். பின் பஸ்ஸில் ஏறுகிறான் (பின்னணியில் பேருந்து ஒளியடன் மேடையின் ஓரம் கதவுக்குள் செல்கிறான்)

காட்சி - 4

நகரில் பழைய வீட்டின் வெளி வளாகத்தில் பிற்பகல் பொழுதில், மீண்டும் பஸ் சத்தம் ஒலிக்க, கதவுக்குள் இருந்து மேடைக்குள் நுழைகிறான் (பஸ்ஸில் இருந்து இறங்குவதை குறிக்கிறது). மேடையின் நடுவே (சுவர் அருகே) பேசிக்கொண்டிருக்கும் மூவரை நோக்கி இளைஞன் நடந்து வருகிறான், அங்கு நிற்கும் மனிதன் 1 ஐ நோக்கி இளைஞன் வருகிறான். லுங்கி மற்றும் பனியன் அணிந்திருக்கும் மனிதன் 1க்கு பின்னால் 2 பேர் சேரில் அமர்ந்துள்ளனர். மனிதன் 1: தம்பி அதான் போன்லயே சொல்லிட்டேன் ல. இளைஞன் : இல்ல-ணா, அது?.. மனிதன் 1: அதெல்லாம் அவ்ளோ தான் தம்பி இனிமே இப்பத்தான் (கடுமையாக) இளைஞன்: கண்டிப்பா வேணும் ண்ணா.. ரெகுலரா இங்க தான வரேன் மனிதன் 1: தம்பி இங்க என்ன மளிகை கடையா நடத்துறோம், ரெகுலர் கஸ்டமர் பாக்க (எரிச்சலுடன்) இளைஞன்: எப்படியாவது ரெடி பண்ணி தாங்கண்ணா ப்ளீஸ் மனிதன் 1: புரிஞ்சிக்கோ தம்பி, அண்ணணுக்கு அரசியல் ஆசை வந்துருச்சு, இனிமே பவுடர், பொட்டலம்ல ஓட்டுனா இமேஜ் ஸ்பாயில் ஆயிடும்னு பீல் பன்றாரு.. புரியுதுல இளைஞன்: அப்போ உங்ககிட்ட ஏற்கனவே இருக்குறத மொத்தமா நான் வாங்கிக்கிறேன் மனிதன் 1 சற்று அதிர்ந்துபோய், அவனுக்குப் பின்னால் இருக்கும் இரண்டு பேரைத் திரும்பிப் பார்த்து மனிதன் 1: என்ன தில்லா கேக்குறான் பாத்தியா, அப்படி ஆயிடிச்சு எல்லாம்.. டைம் ரொம்ப மாறிடிச்சி பா.. இனிமே இவனுகளே நம்மல விட சோக்கா தொழில் பண்ணுவானுக போல பின்னர், மனிதன் 1 இளைஞனை நோக்கித் திரும்பி, ஞானி போலப் பேசத் தொடங்குகிறான். மனிதன் 1: நான் சொல்றத கேளுப்பா, இது பெரிய விஷயம், பொருள் எல்லாம் ஏற்கனவே டிஸ்போஸ் பண்ணியாச்சு, இனிமே அரசியல் மட்டும் தான், அத தவிர வேற எந்த சரக்கும் ஓட்டல (சிரிப்பு).. நான் சொல்றத கேளு.. பாக்க நல்ல புள்ள மாறி இருக்க, என்ன வயசாயிடுச்சு, இதெல்லாம் எதுக்கு, விட்டுட்டு உருப்படர வேலைய பாரு.. தெரிஞ்சோ தெரியாமலோ உன் பழக்கத்துக்கு நானும் காரணமாயிட்டேன்.. பரவலா இல்ல.. எல்லாத்தையும் விட்டுடு, எங்கள மாதிரியே (சிரிப்பு) இளைஞன்: நீங்க விட்டீங்களா?.. (சற்று கர்வம் கலந்த தொனியுடன், அவன் பழக்கத்தை விடவில்லை என்ற உணர்வுடன்) மனிதன் 1: தம்பி கெளம்பு மொதல்ல.. அவ்ளோதான்... இனி இங்க.. மொதல்ல.. அவ்ளோதான்.. இங்க இனி வராத.. இளைஞன் ஏமாற்றத்துடன் மேடையின் முன் நோக்கி நடக்கிறான் பின்னால் சேரில் அமர்ந்திருந்த இருவரில் ஒருவன் எழுந்து வந்து இளைஞனை அழைத்தபடி அவனைப் பின்தொடர்ந்து முன்னே வருகிறான். மேடையின் முன் நிற்கும் இளைஞனை நெருங்கி, தோளில் கைவைத்து மனிதன் 2 பேசத் தொடங்குகிறான் மனிதன் 2: கண்டிப்பா வேணுமாப்பா? நாயகன்: ஆமா ண்ணா.. ப்ளீஸ்.. இருக்கா மனிதன் 2: என்ன பண்றது தம்பி.. எல்லாருக்கும் ஏதோ ஒன்னு தேவையா இருக்கு நாயகன்: தெரியுமா ண்ணா? மனிதன் 2: எல்லாம் இன்பர்மேஷன் தான் பா.. இன்பர்மேஷன் இஸ் வெல்த் ன்னு வெள்ளைக்காரன் சும்மாவா சொன்னான்.. நாயகன் குழப்பத்துடன் தரையில் கண் பதிந்து, புரியாமல் பார்க்கிறான். மனிதன் 2: இன்பர்மேஷன் இஸ் வெல்த்.. இன்னுமா புரியல (பணம் கேட்பது போல கையால் குறிக்கிறான்) நாயகன் புரிதலுடன், தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து சட்டென்று பணத்தை எடுத்து அவனிடம் கொடுக்கிறான். மனிதன் 2 பணம் கிடைத்த மகிழ்ச்சியில், அதைப் பார்த்தபடி, நாயகனின் முகத்தைப் பார்க்காமல் பேசத் தொடங்குகிறான். மனிதன் 2: இங்க இருந்து ரெண்டு தெரு தள்ளி ஒரு சில்ட்ரன்ஸ் பார்க் இருக்கு.. சாயந்தரம் ஆச்சுன்னா நல்லா தளதளனு நாய்க்குட்டியோட இல்ல இல்ல தப்பு, நாய்க்குட்டியோட தளதளனு சூப்பர் பிகருங்களாம் வரும்.. பவுடர், பொட்டலம் லாம் தோத்துரும். உனக்கே தெரியும் மனிதன் 2 திரும்பி, சேரில் அமர்ந்திருக்கும் நண்பனைப் பார்த்து சத்தமாகச் சிரிக்கிறான். இளைஞன்: அங்க எங்க.. யாரு கிட்ட?.. மனிதன் 2: [திரும்பி சேரை நோக்கி நடந்தபடி] போ டா மயிறு.. அங்க தெரியும்னு சொல்றேன்ல.. டோப்புக்கு அலையுது பார் நாயாட்டம்! இளைஞன் மேலும் மேடையின் முன்னோக்கி தரையைப் பார்த்தபடி மெதுவாக நகர பின்னணியில், மனிதன் 1, மனிதன் 2-விடம் பேசுகிறான். மனிதன் 1: யாரையும் உருப்பட விடுறது இல்ல.. இப்போ தான் நிம்மதியா இருக்கு ல உனக்கு மனிதன் 2: அதெல்லாம் பாத்தா நமக்கு வரும்படி வருமா தலைவா.. காசு இருந்தா தான் உருப்படி ஏத்துகிறாங்க இப்போல்லாம்.. அதனால் உருப்படுறத விட உருப்படியா இருக்குறது தான் முக்கியம் தல.. அவர்கள் பேசுவதைக் கேட்ட இளைஞனின் முகத்தில் குற்ற உணர்வு தெரிகிறது. திரைக்கு வெளியே ஒரு 'BEEP' ஒலி கேட்கிறது. இளைஞன் மேடையின் முன்னிருந்து வேகமாக பக்கவாட்டு கதவு நோக்கி நடந்து மறைகிறான்.

காட்சி - 5

பரபரப்பான சாலையில், இளைஞன் மேடையின் பின் கொடியிலிருந்து மெல்ல முன்னோக்கி நடந்து வருகிறான் (வாகனங்கள் ஹாரன் ஒலிகள் கேட்கிறது), மனிதர்கள் நடக்கிறார்கள்) குறுக்கும் நெடுக்கும் நடக்கும் அவர்களை அச்சத்துடன் கடந்த மேடையின் முன் பகுதிக்கு வந்து சேர்கிறான். மேடையின் முன் நின்று அங்கிருந்து எந்தப் பாதைக்குச் செல்வது என்று குழப்பத்தில் நின்ற இடத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் திரும்புகிறான். இறுதியில் சோர்ந்து பார்வையாளர்களை நோக்கி நேரே நின்று லேசாக பெருமூச்சு விட்டு, மேடைக்கு இன்னும் முன்னே சில அடிகள் எடுத்து வைக்கிறான். திரைக்கு வெளியே BEEP ஒலி கேட்கிறது. அவன் திடீரென மயங்கி விழுகிறான். அங்கு யாரும் இல்லை. கொளுத்தும் வெயிலில்(அதிக வெளிச்சத்தில்) பாதையில்(மேடை முன்) படுத்துள்ள அவனது உடலை நாம் பார்க்கிறோம். அவன் உடல் சலனத்துடன் அசைந்து, பின்னர், குறுக்காகக் கைகளை மார்பில் கட்டியபடி (அவன் போதை மருந்தை உட்கொண்ட பிறகு அறையில் படுத்தது போலவே) பக்கவாட்டில் படுத்துக்கொள்கிறான். அந்தத் தருணத்தையும், மணல் பரவிய பாதையையும் அவன் தன் வசதியான அறையாக மாற்ற விரும்புவதுபோல் உணர்கிறான். ஒரு நிமிடம் மேடை இருளடைந்து மீண்டும் வெளிச்சம் கொள்கிறது. அவன் படுத்த நிலையிலிருந்து எழுந்து அமர்கிறான் (பக்கவாட்டாக அமர்கிறான்). இன்னும் யாரும் இல்லாததால், அவன் அழ விரும்புகிறான். அவன் முகத்தில் அது வெளிப்படுகிறது. வியர்த்து கொட்டி முகத்தின் ஒரு கன்னத்தில் மண் ஒட்டி(பார்வையாளர்களுக்கு தெரியும் ஒரு புற கன்னத்தில்) காணப்படுகிறான். கன்னத்தில் இருந்து தட்டிவிட முயற்சிக்கிறான். கைகளை ஊன்றி எழுந்து நிற்கிறான். படுத்துக் கிடந்ததால், ஒரு கணம் நடுங்கியபடி, தள்ளாடியபடி திரும்பி ஒரு முறையும், 2 பக்கவாட்டுகளில் ஒரு முறையும், பின் பார்வையாளர் முன் திரும்பியும் சில அடிகள் நடந்து பார்வையாளர்களை நோக்கிய திசையில் நிற்கிறான். அவன் நோயினை போல நாக்கை வெளிநீட்டி அவனது பேன்ட் மற்றும் சட்டையில் இன்னும் மணல் அழுக்குடன் இருக்கிறது.
கண் தெரியாதவர்: தம்பி என்னோட உலகத்துல காட்சிகள் கிடையாது, காட்சிகள் இல்லாத உலகத்துல சத்தம் தான் காட்சி, வாசனை தான் வண்ணம். ரொம்ப சின்ன உலகம் என்னோடது, சாயந்தரம் இங்க உக்காந்திருக்குற நேரம் தான் நான் வாழ்றதுக்கான காரணத்தை கொடுக்குது, இப்போ என்னோட தேவை அந்த காரணம் மட்டும் தான். காரணமில்லாம யாராலயும் வாழ முடியாது. கெட்டியா பிடிச்சிக்க ஒரு காரணத்தைத் தான் எல்லாரும் தேடிகிட்டு இருக்காங்க. அது அன்போ, வெறுப்போ ஏதுவாவும் இருக்கலாம்.


காட்சி - 6

சிறுவர் பூங்காவில், மேடை பின்புறம் இருந்து வெளிப்படும் இளைஞன் மேடை நடுவே அமைந்துள்ள சிறுவன் பூங்கா நுழைவு வளைவு முன் வந்து நிற்க அவனது முகம் பிரகாசமாக ஒளிர்கிறது. முன்பு இருந்த மயக்கம் மறைந்துவிட்டது. ஏற்கெனவே போதை மருந்து கிடைத்தது போன்ற உணர்வு அவனிடம் தெரிகிறது. அவன் நுழைவு வளைவுக்குள் நுழைகிறான். உள்ளே வண்ணமயமான பொருட்களைக் கண்டு பூங்காவின் உள்ளே, (மேடை முன்) மாலை நேரத்திற்கு முன்பு என்பதால் யாரும் இல்லை. சில விளையாட்டுக் கருவிகள் உள்ளன. சற்று தொலைவில் இரண்டு குழந்தைகள் பந்து விளையாடுகிறார்கள். மேடை முன்புறம் நீளமான பென்ச் இருக்கை உள்ளது. அதன் முன்புறம் வரிசையாக பூந்தொட்டிகள் உள்ளன. இளைஞன் பென்ச் இருக்கையை நோக்கி நடக்கிறான். அருகில் உள்ள இரண்டு ஊஞ்சல்களைக் கண்டு தன் எண்ணத்தை மாற்றுகிறான். அவன் ஊஞ்சலை நோக்கிச் சென்று, காலியாக உள்ள ஊஞ்சலைத் தன் கைகளால் ஆட்டிவிடுகிறான். அது காற்றில் ஆடுகிறது (உலோகம் கிரீச்சிடும் சத்தம் ஒலிக்கிறது). அவன் முகத்தில் ஒரு சிறு சிரிப்பு தோன்றுகிறது. ஆனால், அந்தச் சிரிப்பு திடீரென சோகமாக மாறுகிறது, ஏதோ ஒரு நினைவு அவனைத் தாக்கியது போல .பின்னர், ஊஞ்சலருகே நின்று, போதை மருந்து எங்கு கிடைக்கும் என்று பூங்காவைச் சுற்றிப் பார்க்கிறான். மேலும், பார்த்து களைத்து, பெஞ்ச் இருக்கையை நோக்கிச் சென்று, அதில் பக்கவாட்டில் குறுகிப் படுத்து உறங்குகிறான். (திரை இருளடைகிறது) இருண்மையான மேடையில் பச்சையும் வெவ்வேறு நிற லேசர் புள்ளிகளும் தொடர்ச்சியான சிறு BEEP ஒலிகளுடன் தோன்றுகின்றன (அவன் கனவில் அனுபவிப்பது போல). மக்கள் சத்தம் திரைக்கு வெளியே கேட்கிறது, அது தொடர்ச்சியான BEEP ஒலிகள் மற்றும் பச்சை நிறப் புள்ளிகளுடன் கலக்கிறது. பின்னர், எல்லாம் நின்று, ஒரு நீண்ட BEEP ஒலி கேட்கிறது. மேடை மொத்தமும் இருள் சூழ்ந்து ஒரு கணம் நிசப்தமாக உள்ளது. பின் மேடை வெளிச்சம் அடைகிறது (அவன் தூக்கத்தில் இருந்து விழிப்பது போல) அவன் அதே பெஞ்ச் இல் அதேபோல் படுத்திருக்கிறான். அவன் திடீரென விழித்தெழுந்து இருக்கையில் அமர்கிறான். கைகள் கால்களுக்கிடையே கோர்க்கப்பட்டிருக்கின்றன. வெயில் காலத்திலும் குளிர்ச்சியால் நடுங்குவது போல உணர்கிறான். சுற்றுப்புறத்திலிருந்து அவன் பிரிந்திருப்பது போலத் தெரிகிறான். பின்னர், அவன் சுற்றுப்புறத்தையும் பூங்காவின் அமைப்பையும் பார்க்கிறான். தான் ஏன் இங்கு இருக்கிறான் என்று குழப்பமடைகிறான். அவன் முகத்தில் ஏதோ நினைவுக்கு வந்தது தெரிகிறது. போதைப்பொருள் விற்கும் இடத்தை கண்களால் தேடத் தொடங்குகிறான். அவன் குழப்பத்தில் இருக்கும்போது, ஒரு பந்து அவனது காலடியில் வந்து விழுகிறது. அவன் அதைப் பார்க்க குனிந்தபோது, சிறு கால்கள் தெரிகின்றன. மெதுவாக மேலே பார்க்க, அவன் பார்வைக் கோணத்தில் ஒரு குழந்தையைப் பார்க்கிறான். காலடியில் இருக்கும் அந்தப் பந்தை எடுக்கவா வேண்டாமா என்று குழப்பத்தில் அமர்ந்திருக்கிறான். அந்தக் குழந்தை அவனை ஒரு ராட்சசனைப் போல பயத்துடன் பார்க்கிறது. இளைஞன் அதைப் புரிந்துகொண்டு, சமாளிப்புச் சிரிப்புடன் சிரிக்க முயற்சிக்கிறான், ஆனால் அது வெளிவரவில்லை. அவன் குனிந்து, பந்தை எடுத்து, சிரிப்புடன் குழந்தையிடம் நீட்டுகிறான். குழந்தை இன்னும் குழப்பத்துடனேயே இருக்கிறது, ஒரு நிமிடம் தயங்கி, பின்னர் கையை நீட்டி, பந்தை வாங்கி வேகமாக ஓடிவிடுகிறது. இளைஞன், பந்தை வைத்திருந்த வெறுங்கைகளைப் பார்க்கிறான். அவனது பார்வைக் கோணத்தில், அவனது கை மீண்டும் நடுங்குவதைக் காண்கிறோம். திடீரென பின்னணியில் ஒரு குரல் தோன்றுகிறது. குரல்: டோப் வேணுமா?. இந்தச் சொற்கள் இளைஞனை நடுங்கச் செய்கின்றன. அவன் கையைத் தாழ்த்தி, தனக்கு மேடையின் பக்கவாட்டில் இருந்து வெளிப்படும் பூக்கடைக்காரனைப் பார்க்கிறான். அவன் அருகே நெருங்கி இளைஞனைப் பார்க்க, இளைஞன் குழப்பத்துடன், 'என்ன கேட்டீங்க' என கேட்கிறான். பூக்கடைக்காரன் மேடையின் பக்கவாட்டு விளிம்பில்(பூங்காவுக்கு வெளியே) தான் கொண்டுவந்து நிறுத்திய பூக்கடைத் தள்ளுவண்டியை நோக்கி கை காட்டி, பூக்கடைக்காரன்: அதோ அந்த கடை தான்.. பணம் வச்சு இருக்கியா.. வா தரேன்.. இளைஞன்: எப்படி தெரியும்? (முகத்தில் சந்தேகம், குற்ற உணர்வுடன் கேட்கிறான்) பூக்கடைக்காரன்: என்ன எப்படி தெரியும்? இளைஞன்: நான் அதுக்காகத்தான் வந்தேன்னு. பூக்கடைக்காரன்: (சிரித்தபடி) அதான் எழுதி ஒட்டியிருக்கே!. உன் வயசு பசங்க இங்க வந்தா ஒன்னு லவ்ஸ் காக இருக்கும் இல்ல.. இல்லேன்னா டோப். அதான்பா வெள்ளைக்காரன் பவுடர்காக இருக்கும். உன்ன பாத்தா லவ்ஸ் மாதிரி தெரியல, அதான் கை நடுங்குச்சே. இளைஞன்: என்ன இருக்கு அந்த கடைல? பூக்கடைக்காரன்: சொர்க்கமே இருக்குப்பா.. சொர்க்கம்.. பவுடரா வேணுமா, ஊசியா வேணுமா, இல்ல பால்லானது எதிர்பாக்குறியா? எல்லாம் இருக்கு இளைஞன்: சரி போ நான் வரேன் பூக்கடைக்காரன்: இதுவரைக்கும் வந்துட்டு இப்போ யோசிக்கலாமா.. இளைஞன்: நான் தான் வரேன் சொல்றேன்ல போ பூக்கடைக்காரன்: சீக்கிரம் வா, அப்றம் சாயந்தரம் பீப்புள்ஸ் ஒண்ணும் முடியாது, மாமன்காரன் ரவுண்ஸ் வந்துருவான் பூக்கடைக்காரன் திரும்பி பூக்கடையை நோக்கி நடக்க தொடங்குகிறான். இளைஞன் அவன் செல்லும் திசையை பார்த்துக்கொண்டிருக்கிறான். திரைக்கு வெளியே ஒரு BEEP ஒலி கேட்கிறது. இளைஞன் தலையைப் பிடித்துக்கொண்டு, பெஞ்சில் உட்கார்ந்தபடி தன் தொடையின் மீது குனிந்து தலையை புதைத்துக்கொள்கிறான். மேடை வெளிச்சம் இருளடைகிறது. பின்னணியில் ஒரு கரகரப்பான குரல் கேட்கிறது. குரல்: என்னப்பா என்ன கத?.. மேடை வெளிச்சம் அடைகிறது. நாயகன் குனிந்த நிலையில் விடுபட்டு இருந்து தலையை உயர்த்தி நிமிர்கிறான். ஒரு கண்ணாடி அணிந்த, ஊன்றுகோல் கொண்ட மனிதன் பக்கவாட்டில் நிற்பதைப் பார்க்கிறான் கண் தெரியாதவர் தன் ஊன்றுகோலால் இளைஞனின் கைகளைத் தொட்டுப் பார்த்து, அது ஒரு பெஞ்ச் என்பதை உறுதிப்படுத்த அருகில் தட்டுகிறார். பின்னர் இருக்கையை நோக்கிச் சுட்டி இளைஞனிடம் கேட்கிறார். கண் தெரியாதவர்: இங்க உட்காரலாமா? கொஞ்சம்.. இளைஞன்: ஹ்ம்ம் இளைஞன் இருக்கையில் அந்த மனிதனுக்கு இடம் கொடுத்து நகர்கிறான். ஊன்றுகோலின் ஒரு முனையைப் பிடித்து, காலியான இடத்திற்கு அவரை வழிநடத்துகிறான். கண் தெரியாதவர் ஊன்றுகோலின் இழுக்கும் திசையைப் பின்பற்றி பெஞ்ச் இருக்கையில் அமர்கிறார். கண் தெரியாதவர்: தம்பி, யாருக்காக காத்துகிட்டு இருக்க?.. இளைஞன்: இல்ல.. சும்மா தான் வந்தேன் கண் தெரியாதவர்: சும்மா இங்க வர்ரவங்கனு யாரும் இல்ல.. இது ஒரு விசித்திரமான... விசித்திரமான இடம்.. இங்க வர எல்லாருக்கும் ஒரு தேவை இருக்கும். குழந்தைங்க உட்பட. இளைஞன்: எனக்கு எதும் தேவை இல்ல. கண் தெரியாதவர்: சில நேரத்துல தேவையில்லாதது தான் ஒருத்தரோட தேவையா இருக்கும் இளைஞன்: உங்களுக்கு கண்ணு தெரியாதா? கண் தெரியாதவர்: (புன்னகையுடன்) அப்படியும் சொல்லலாம் இளைஞன்: இங்க நீங்க எதுக்கு வந்தீங்க.. உங்களோட தேவை என்ன? கண் தெரியாதவர்: எனக்கு தேவை சத்தம், வாசனை, அந்த போதை! இளைஞன்: எந்த போதை? கண் தெரியாதவர்: அதான் சத்தம், வாசனை, இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க விளையாட வர குழந்தைகளோட சத்தம், அவங்களோட சிரிப்பு, கூச்சல், இங்க இருக்க மண்ணோட, செடிகளோட வாசனை, பூங்காவோட ரிதம் இளைஞன் உதவியுடன் கண் தெரியாதவர் தடுமாறி எழுந்து இளைஞன் அமர்ந்திருக்கும் பெஞ்ச்-ஐ சுற்றி மெதுவாக ஊன்றுகோலுடன் நடந்தபடி மேலும் பேசுகிறார்.

இளைஞன்: அப்போ போதை? கண் தெரியாதவர்: போதைனு எதுவும் இல்ல, உனக்கு எது பிடிக்குதோ, உன்ன தோலும், எலும்புமா எது இழுக்குதோ, எது உன்ன உன் கிட்ட இருந்தே தப்பிக்க வைக்குதோ அதுதான் போதை

இளைஞன்: தப்பிக்க முடியலைனா

கண் தெரியாதவர்: முடியாதுதான், ஆனா முயற்சி பண்றத தவிர வேற வேலை இல்ல, எனக்கு என்னோட இருட்டு ல இருந்து தப்பிக்க சத்தமும், வாசனையும் தேவைப்படுது, அத சேகரிக்க நான் அலையுறேன். இங்க நான் கேக்குற சத்தத்த எனக்குள்ள பத்திரமாக சேமிச்சு திரும்ப திரும்ப 1000 வாட்டி கேட்டுகிட்டே இருப்பேன். அது சத்தம் இல்ல என்னோட கற்பனைக்கு நீ சொல்லலாம், ஆன கற்பனையும் ஒரு சத்தம் தான் இளைஞன்: சத்தம் தீந்துருச்சினா? கண் தெரியாதவர்: உலகத்துல சத்தத்துக்கு பஞ்சம் இல்ல, அமைதிக்கு தான் பஞ்சம் இளைஞன்: எனக்கு சத்தம் தேவை இல்ல, அமைதி தான் தேவை கண் தெரியாதவர்: அதாவது, என் பாஷைல உனக்கு வெளிச்சம் தேவை இல்ல, இருட்டு தான் தேவை அப்படித்தான! இளைஞன்: ஆமாம் என்ன யாரும் பின்தொடர முடியாத, நான் எங்க போறேன்னு யாருக்கும் தெரியாம என்னோட காலடி தடத்த மறைக்குற இருட்டு, நிம்மதியா தூங்க ஒரு இருட்டு தேவ. கண் தெரியாதவர்: உனக்கு தேவையான தேவைக்காக, தேவை இல்லாத தேவைய தேடி வந்துருக்க சரிதானா? (இந்த வார்த்தைகளை கேட்டு இளைஞன் பெஞ்ச்சில் இருந்து சட்டென எழுந்து நிற்கிறான். அவன் பெஞ்ச் முன் நிற்க் கண் தெரியாதவர் பெஞ்ச் பின் அவன் பின்புறமாக நின்று தனது முகத்தை அவனருகில் நீட்டுகிறார். இருவரின் முகங்களும் பார்வையாளர்களை நோக்கிய திசையில் நிலைத்துள்ளது) (இளைஞன் கண்களை மட்டும் பக்கவாட்டில் குறுக்கி அவரின் முகத்தை பார்த்த பார்க்க முயற்சிக்கும் பாவனையில் நடுக்கத்துடன் முதல் வார்த்தைகளை திக்கிய வண்ணம், பின் மீண்டும் தெளிவாய் பேச தொடங்குகிறான்) இளைஞன்: உங்களுக்கு ஏன் சத்தம் தேவை?, அமைதியும் சத்தம் தான, அப்போ சத்தம் உங்களுக்கு தேவை இல்லாம போயிடுமே கண் தெரியாதவர்: இல்லாதது தான் எல்லாருக்கும் தேவை படுது, உனக்கு அமைதி தேவை, எனக்கு சத்தம் தேவை, எதிரும் புதிருமா இருந்தாலும் நாம ரெண்டு பேரும் ஒன்னு தான். நாம ரெண்டு பேரும் தேடுறது ஒன்னு தான், அந்த ஒரே விஷயம் தான், உனக்கு அமைதியாவும் எனக்கு சத்தமாவும் தெரியுது அவ்ளோ தான். (இளைஞன் சலிப்புடனும் மலைப்புடனும் மீண்டும் பெஞ்ச்-சில் அமர்கிறான். கண் தெரியாதவர் பெஞ்ச்- பக்கவாட்டில் நிற்கிறார்) இளைஞன்: (அவரை பார்த்து) உங்களோட தேவை சத்தம் அதாவது உருவம், ஏன் முக்கியம் உங்களுக்கு? கண் தெரியாதவர்: (மேடையில் நடந்தவராய்) ஏன்னா என்னால உருவத்த பாக்க முடியாது, சத்தத்த மட்டும் தான் பாக்க முடியும், அதனால.. இளைஞன்: அப்போ சத்தம் உங்களோட தேவை இல்லாத தேவை, அப்படித்தான! கண் தெரியாதவர்: (புன்னகையுடன்) என்னோட தேவையான தேவை உருவம், அதுக்கு சத்தம் மட்டும் தான் என்னோட வழி, அத மட்டும் தான் நான் பாக்க முடியும், ஆனா உன்னோட தேவை அமைதி, அதுக்கு ஆயிரம் வழி இருக்கு இளைஞன்: (தீவிரத்துடன் வேகமாய்) ஆயிரம் வழி இருக்கலாம், ஆனா என்னால் நுழைய முடியுற வழி இது மட்டும்தான் கண் தெரியாதவர்: எது?.... இளைஞன்: அது உங்களுக்கு தெரியும், தெரிஞ்சிதான் இங்க வந்து நின்னீங்க, என் பக்கத்துல உக்காந்தீங்க, என் கூட பேசுறீங்கனு எனக்கு தெரியும், உங்களுக்கு நா ஒரு விளையாட்டு அப்படிதான! (கண் தெரியாதவர் சத்தமாய் சிரிக்கிறார். இளைஞன் பேச்சை தொடர்கிறான்) இளைஞன்: சிரிக்க வேண்டாம், எனக்கு தேவையான இருட்டு உங்களுக்கு தேவை இல்லாத இருட்ட விட ஆயிரம் மடங்கு ஆழமானது. அந்த இருட்டுக்காக என்னையே கூட விலையா குடுக்குற அளவுக்கு, என்னையே அழிக்கிற அளவுக்கு!.. கண் தெரியாதவர்: உன்னோட வெளிச்சம் அவ்ளோ பயங்கரமானதா? இளைஞன்: அருவருப்பானது!.. (வேகமாய்) கண் தெரியாதவர்: இந்த பாதைய விடவா? இளைஞன்: என்ன குருடனா ஆக்குற இந்த வெளிச்சத்துல இருந்து தப்பிக்க, அத விட அருவருப்பான பாதையில் நடக்கனும்னா.. அதுக்கும் நான் தயார் தான். கண் தெரியாதவர்: ஆனா எல்லா வெளிச்சதுல இருந்து தப்பிச்ச பெறகும், நீ குருடனா தான் இருப்ப என்ன மாதிரி! இளைஞன்: நான் அதுக்கு பயப்படல. (தீர்க்கமாக) கண் தெரியாதவர்: இப்போ பயப்பட மாட்ட.. ஆனா நீயும் என்ன மாதிரி வெளிச்சத்த தேடுவ ஒருநாள், அப்போ நீ தேடி வந்த இருட்டு நீ விட்டு ஓடி வந்த வெளிச்சத்த விட ரொம்ப அருவருப்பானதா இருக்கும். (இளைஞன் தாள முடியாத துக்கத்துடன், நொய்மையுடன் தனது தலையைக் குனிந்து தொடையை நோக்கி முகத்தை வைத்து கைகளால் முகத்தை மூடிக்கொண்டு ஒருமுறை ஆவென்று கத்தி அமைதி அடைகிறான். சில கணம் மேடையில் நிசப்தம் நீடிக்கிறது. கண் தெரியாதவர் நின்றவராய் சற்று அமைதி காத்துவிட்டு பூமியை நோக்கி பார்த்திருந்த தலையை வானத்தை நோக்கியபடி நிமிர்த்தி கேட்கிறார்) கண் தெரியாதவர்: உனக்கு இருட்டு தெரியுதா இப்போ? இளைஞன்: (குனிந்த நிலையிலேயே) தெரியுது, ஆனா எனக்கு அது வேணும், நான் போய் வாங்க போறேன், இங்க நான் திரும்பி வர்ரதுக்குள்ள இங்க இருந்து போயிருங்க தயவு செஞ்சு.. ( பேசிவிட்டு தலையை நிமிர்த்தி அவரை பார்க்கிறான்) கண் தெரியாதவர்: உன்னால வாங்க மட்டும் தான் முடியும், ஆனா அத உன் கிட்ட இருந்து யாரும் வாங்க முடியாது, அது உன்னோட, உனக்குன்னே படைக்கப்பட்ட அருவருப்பு இளைஞன்: எனக்கு அதனால எந்த அருவருப்பும் இல்ல கண் தெரியாதவர்: அது உண்மையா இருந்தா இந்நேரம் நீ இங்க உக்காந்து என்கிட்ட இவ்ளோ நேரம் பேசியிருக்க மாட்ட. இளைஞன்: உங்களுக்கு புரிய மாட்டேங்குது, ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க? கண் தெரியாதவர்: எனக்கு கண்ணும் தெரியாது, உன்னையும் தெரியாது. ஆனா எனக்கு இருட்டு புரியும், அதே மாதிரி உன்னையும் புரியும். இளைஞன்: உங்களுக்கு உருவமும் வண்ணமும் தேவை இல்ல, என்னோட உயிர் தான் தேவை. அதான் இங்க வந்து என்ன கொல்லாம கொல்லுறீங்க!.. (அவரை நோக்கி கோபத்துடன்) கண் தெரியாதவர்: நான் யாரையும் கொல்ல வரல, காப்பாத்த தான் வந்தேன். எனக்கு கண் இல்லனாலும் கை இருக்கு, அதான் கொடுக்க வந்தேன். இளைஞன்: உங்க கைக்கே ஒரு குச்சி தேவைப்படுது, இதுல எனக்கு கை கொடுக்க போறீங்களா!.. கண் தெரியாதவர்: இந்த குச்சி என்னோட கைக்கு இல்ல, என்னோட கண்ணுக்கு.. இல்லாத என்னோட கண்ணுக்கு இந்த குச்சி ஒரு கை, அவ்ளோ தான் இளைஞன்: அதே மாதிரி எனக்கும் பூமி மேல பிடிமானத்தோட நடக்க அது தேவ கண் தெரியாதவர்: ஆனா உனக்கு கை இருக்கே, அத விட முக்கியா உனக்கு கண் இருக்கு, உருவத்தையும், வண்ணத்தையும் பாக்கக் கூடிய அந்த கண் உன்னோடது. ஏன் பாக்க மாட்டேங்குற? இளைஞன்: எனக்கு எதையும் பாக்க வேண்டாம். நான் பாக்க விரும்பல (அழுவதுபோல்) கண் தெரியாதவர்: நீ விரும்பாட்டியும் அது உனக்கு தெரியும், நான் விரும்புனாலும் அது எனக்கு தெரியாது.. அப்போ.. இளைஞன்: அப்போ.. (அழுவதுபோல்) கண் தெரியாதவர்: அப்போ நா நீ விரும்ப கத்துக்கணும், நான் விரும்பாம இருக்க கத்துக்கணும் இளைஞன்: நான் அத விரும்பல, நான் விரும்பாதத நீங்க விரும்புனா அதுக்காக நானும் அத விரும்ப முடியுமா? (அழுவதுபோல்) கண் தெரியாதவர்: நீ விரும்புவ ஒரு நாள்.. உன்னால விரும்பாம இருக்க முடியாது, விரும்புறதும் விரும்பப் படுறதும் தான் மனுஷ வாழ்க்கை இளைஞன்: எனக்கு வாழ்க்கை தேவை இல்ல. நான் வாழ தேவை இல்ல (அழுகையில் இருந்து மீண்டு ஒருவித ஆவேசத்துடன்) கண் தெரியாதவர்: உனக்கு தேவை இல்லாட்டியும் நீ வாழ்றத உன்னால் தடுக்க முடியாது, உனக்குள்ள நீ இல்லேனு உன்னையே ஏமாத்தி ஒளிச்சு வச்சுருக்க விருப்பத்த உன்னாலயும், நீ தேடுற இருட்டாலயும் மறைக்க முடியுமே தவிர அழிக்க முடியாது. நீ விரும்பியே தீர்வ.. நிச்சயம்.. இளைஞன்: (மீண்டும் மனமுடைந்தவனாய் வலியுடன்) போதும்!... இளைஞன் தன் கைகளை உயர்த்தி அது நடுங்குவதை பார்க்கிறான். அந்த கையால் தனது தலையை தாங்கிக் கொள்கிறான். மீண்டும் தன் மடியில் முகம் புதைக்கிறான். மேடை இருளடைகிறது. பல வண்ணங்கள் தோன்றுகிறது. ஒரு BEEP ஒலியுடன் வண்ணங்கள், இருள் மறைந்து மீண்டும் வெளிச்சம் வருகிறது. இப்போது மேடையில் தெரியம் விதம் ஒரு பக்கத்தில் பூக்கடை தள்ளுவண்டியுடன் பூக்கடைக்காரன் பூ காட்டியபடி நிற்கிறான். இளைஞன் குனிந்த நிலையில் இருந்து தலையை உயர்த்தி எழுந்துகொள்கிறான். அந்த கண் தெரியாதவர் பெஞ்சின் ஓரத்தில் எதையோ சிந்தித்தபடி அமர்ந்துள்ளார். இளைஞன் அவரை பொருட்படுத்தாமல் எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தபடி பூக்கடை திசையில் நடக்க தொடங்கி அங்கு சென்றடைகிறான்)

பூக்கடைக்காரன்: தம்பி வருவனு தெரியும், எங்க இருந்தாலும் இழுக்கும் நூல் மாதிரி நம்ம சரக்கு (குமட்டுச் சிரிப்பு) இளைஞன் சிரிக்காததை கண்டு சிரிப்பு அகன்று சந்தேகத்துடன்

பூக்கடைக்காரன்: ஆமா அங்க யார் கூடப்பா ரொம்ப நேரமா பேசிட்டே திருப்பி திரும்பி பாத்துட்டு இருந்த, நான் வருவ வருவனு இங்க இருந்து பாத்துட்டே இருந்தேன், ஒரு காட்டி வியாபாரம் கோவிந்தானு மெர்சலாயிட்டேன் தெரியுமா

இளைஞன்: அங்க ஒருத்தர், பிளைண்ட், உட்கார்ந்திருக்கார்ல, அவர் இங்க ரெகுலரா வருவாரா? (அவரை நோக்கி கை காட்டியபடி) பூக்கடைக்காரன்: யாரு பா?.. இங்க பொடிப் பசங்க மட்டும் தான் டெய்லியும் சுத்துவானுங்க, அப்புறம் நம்ம!.. சரி அத விடு! இளைஞன்: அதோ அந்த பெஞ்ச் ல உட்கார்ந்திருக்கார்ல கண்ணாடி போட்டுகிட்டு, கைல குச்சியோட, வானத்த பாத்துகிட்டு.. பூக்கடைக்காரன்: யாருப்பா, அங்க யாரு இருக்கா, காலியா தான கெடக்கு (குழப்பத்துடன்) பூக்கடைக்காரன்: என்னப்பா இன்னும் சரக்கு வாங்கவே இல்ல, அதுக்குள்ள ஏறிடிச்சா, ரெகுலர் வரும்படி போல இருக்கு

இளைஞன்: ஒரு நிமிஷம் வந்துர்றேன் (பதற்றத்துடன், கண் தெரியாதவர் பக்கம் திருப்பிய வண்ணம்) இளைஞன்: பெஞ்ச் நோக்கி நடக்க, பூக்கடைக்காரன்: தம்பி, தம்பி இருப்பா. எங்க போற மறுபடியும் இளைஞன்: இரு பாத்துட்டு வந்துர்றேன் (என்று நடந்தபடி கூறுகிறான்) (மற்ற லைட்டுகள் அணைய, மேடையின் முன் நடுவில் இருக்கும் பெஞ்ச் மட்டும் வெளிச்சத்தில் இருக்கிறது. இளைஞன் இருளுக்குள் இருந்து வெளிச்சத்துக்குள் நுழைந்து மூச்சிரைத்தபடி இளைப்பாறும் தோரணையில் வந்து நிற்கிறான்) கண் தெரியாதவர்: (எந்த சலனமுமின்றி) என்னப்பா இருட்டு கெடைச்சதா?.. இளைஞன்: (சட்டென நிமிர்ந்தவனாய்) நீங்க யாரு? கண் தெரியாதவர்: நா வெளிச்சத்த தேடுற ஒரு இருட்டு.. இளைஞன்: இங்க எப்படி வந்தீங்க.. உண்மய சொல்லுங்க யார் நீங்க?.. கண் தெரியாதவர்: அதான் பா, நீ தேடுற இருட்டு நான் தான், நான் தேடுற வெளிச்சம் நீ தான், இன்னும் புரியலையா!.. இளைஞன்: அது எப்படி?.. கண் தெரியாதவர்: நீ இருட்டுக்கு போற தேவைப்படதா பாதைய தேடி இங்க வந்த, நான் வெளிச்சத்துக்கு போற பாதைய தேடி இங்க வந்தேன். உன்னோட பாத அதோ இருக்கு (பூக்கடை இருந்த திசையை நோக்கி கை நீட்டி) (பின் தனது ஊன்றுகோலை நிலத்தில் தட்டி) என்னோட பாதை இங்க முடியுது.. இந்த சத்தமும் வாசனையும்.. இந்த உருவமும் வண்ணமும் என்னோட பாதை.. இப்போ என்னோட பாதைய மறைக்காம தள்ளி நில்லு.. உன்னோட பாத காத்திட்டு இருக்கு.. போ.. போய் நட.. இளைஞன் குழப்பத்துடன் பூக்கடை இருக்கும் திசை நோக்கி நடக்க, பூக்கடை பகுதி வட்டமான வெளிச்சம் பெறுகிறது. கண் தெரியாதவர் உள்ள பெஞ்ச்-உம், பூக்கடை வண்டியும் உள்ள இடம் வெளிச்சதில் இருக்க அனைத்து ஒளியும் மறைந்து மேடையில் முழு இருள் சூழ்கிறது. மீண்டும் மேடை முழுவதும் வெளிச்சம் பெற பூக்கடைக்காரன் தனது வண்டியை மேடையின் ஒருபுறம் இருந்து நடுப்பகுதிக்கு தள்ளிக்கொண்டு வருகிறான். இப்போது அங்கு பெஞ்ச் இல்லை. மேடையின் முன் இருக்கும் பூக்கடை வண்டியை நோக்கி மேடையின் பின் கோடியில் இருந்து இளைஞன் மெல்ல மெல்ல நடந்து வந்து தள்ளுவண்டி முன் நிற்கிறான். அது அவனின் வீட்டின் மேஜையை ஒத்திருக்கிறது. பூக்கடைக்காரன் வண்டியின் பக்கவாட்டில் இருந்தபடி, பூக்கடைக்காரன்: என்ன தம்பி எல்லா சந்தேகமும் தீந்துடுச்சா.வேமா சொல்லு, என்ன மாறி சரக்கு வேணும், மாமன்காரன் வர நேரம் ஆகுது இளைஞன் பதில் சொல்லாமல் மேடையின் சுற்றுமுற்றும் எதையோ தேடுவதுபோல் நடந்து பார்த்துவிட்டு, வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு, ஒரு வித தெளிவுடன் மீண்டும் பூக்கடை தள்ளுவண்டிக்கு தான் நின்ற அதே இடத்துக்கு வந்து நிற்கிறான். வண்டியில் இருக்கும் பூக்களைத் தொட்டுப் பார்த்து சிலவற்றை முகர்கிறான். இளைஞன்: (தெளிவான பாவனையுடன்) இந்த ரோஜா பூ ஒரு கட்டு எவ்ளோ?.. பூக்கடைக்காரன்: ரோஜா பூவா?.. (தலையை சோர்ந்தபடி, இழுத்து சொல்கிறான்) இளைஞன்: ஆமா, ஒரு கட்டு ரோஜா பூ என்னோட தேவை என்றபடி பணத்தை எடுத்து நீட்டி கொடுத்துவிட்டு, ஒரு ரோஜா பூக்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மெல்ல பக்கவாட்டு கதவு நோக்கி நடந்து மறைகிறான். பூக்கடைக்காரன் அவன் செல்வதைக் குழப்பத்துடன் பார்த்தபடி, அவன் மறைந்தவுடன், அக்கறை இல்லாதவனாய் கடை பக்கம் திரும்பி பூவை எடுத்து கட்டியபடி, பூக்கடைக்காரன்: சாவுகிராக்கி.. நமக்குன்னே வருது பாரு, எதோ திருந்தன மாறி சீன் அ போடுது, எப்படியும் நாளைக்கு நாயாட்டம் தொங்க போட்டுட்டு திரும்பி வரத்தான் போகுது, இதே மாதிரி எத்தன பேர பாத்திருப்போம். இந்த எடமே சரியில்ல.. மேடையின் பின் இருந்து ஒரு போலீஸ் லத்தியுடன் நடந்து வர பூக்கடைக்காரன் பதற்றத்துடன் வண்டியை நகர்த்திக்கொண்டு பக்கவாட்டுக்கு செல்கிறான்.

காட்சி - 7
இளைஞனின் வீட்டிற்குள் வெளிச்சத்துடன் அறையில் (சோபா, டிவி, மேஜை அந்தந்த இடத்தில்)

பனியன் டிராக் பேண்ட் உடன், இளைஞன் மேடையின் பின் இருந்து மேஜை இருக்கும் முன்பகுதி நோக்கி வந்து மேஜையில் உள்ள பாட்டிலில், ஜக்கில் கொண்டு வந்த தண்ணீரை நிரப்புகிறான். ஜக்கை நடந்து சென்று சோபாவில் வைத்துவிட்டு, டிவி மீதிருந்த ரோஜா பூங்கொத்தை எடுத்து முகர்ந்து பார்த்து, மேஜைக்கு கொண்டு வந்து தண்ணீர் நிரம்பிய பாட்டிலில் ரோஜாக்களை வைக்கிறான். மேஜைக்கு மேல் ஓரம் இருந்த சிரிஞ்ச், ஊசிகள், மருந்து பாட்டில்கள், கயிறு ஆகியவற்றை எடுத்து மேஜைக்கு கீழ் குப்பைத் தொட்டியில் போடுகிறான். அதை எடுத்துச் சென்று பக்கவாட்டு கதவு வரை நடந்து அங்கே வைத்துவிட்டு திரும்பி மேஜையை நோக்கி நடக்கிறான். பாதி வழியில் ஒரு முறை மெதுவாக குப்பைத் தொட்டியை வைத்த திசையை திரும்பிப் பார்த்துவிட்டு, திரும்பி பார்வையாளர்கள் திசையை மெல்லிய புன்னகையுடன் பார்த்துவிட்டு மேஜையை நோக்கி நடந்து வர, அவனது காலில் உடைந்த ரிமோட் தட்டப்படுகிறது.

அதை எடுத்துக்கொண்டு இரு கணம் கையில் வைத்து பார்த்தபடி நின்று, மீண்டும் குப்பைத் தொட்டி இருக்கும் திசையை பார்த்துவிட்டு, இறுதியில் மேஜையை வந்தடைகிறான். ரிமோட்டை கையில் வைத்தபடி, மேஜை மீது இருக்கும் கண்ணாடியை எடுத்து நிமிர்த்தி பார்க்கிறான். அப்போதுதான் மேஜையருகில் தரையில் இருக்கும் நடக்கும் கைத்தடி குச்சியை குனிந்து எடுத்து, ஒரு அசைவின்மைக்கு பின் மூன்றுடனும் மேடைக்கு முன்னிருந்து பின் கோடிக்கு செல்கிறான்.

மேடையின் முன்னிலையில் சில கணங்கள் யாரும் அற்று இருப்பதுபோல் உள்ளது. சில கணங்களுக்கு பின் இளைஞன் மேடையின் பின் கோடியில் இருந்து நடந்து வந்து மேஜையை அடைந்து ஒட்டப்பட்ட ரிமோட்டை மேஜை மீது வைத்துவிட்டு, கைகளை கட்டிக்கொண்டு, சற்று பின் தள்ளி நின்று மேஜையைப் பார்க்கிறான். அதில் இருக்கும் ரோஜாக்களை ரசிப்பதுபோல். அதன்பின் பார்வையாளர் திசையில் ஒரு கணம் பார்த்துவிட்டு ரிமோட்டை எடுத்துக்கொண்டு, சோபாவை நோக்கி நடந்து சென்று அமர்கிறான். டிவியை ஆன் செய்கிறான். ஒவ்வொரு சேனலாக மாற்ற, அந்த நிகழ்ச்சிகள் வேகமாக மாறும் சத்தம் மட்டும் பார்வையாளர்களுக்கு கேட்கிறது(டிவி அவனை நோக்கி உள்ளதால், அவன் பார்வையாளர்களை நோக்கி உள்ளதால்). சட்டென ரிமோட்டை இயக்குவதை நிறுத்தி சோபாவின் ஒருபுறம் அதை வைத்துவிட்டு ஆர்வத்துடன் டிவி திரையை பார்த்த வண்ணம் அமர்ந்திருக்க, டிவியில் கார்டூனில் பொம்மை படம் ஓடுவதை குறிக்கும் வாய்ஸ் ஓவர் கேட்கிறது. அவன் முகத்தில் குழந்தைத்தனமான புன்னகை மலர்கிறது. என்னோட பாதை என அவன் அவனுடனே பேசிக்கொள்ள ஒரு BEEP சத்தம் ஒலிக்கிறது. மேடை இருளில் மூழ்குகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்