கருப்பு நதி (இரண்டாம் அலை - ஆறாம் காட்சி) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

கருப்பு நதி (இரண்டாம் அலை - ஆறாம் காட்சி) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)       

ஆறாம் காட்சி


        (அதே காட்சி. 2 நாட்கள் கழித்து, மாலை நேரம். காட்சியில் ஒருவித அமைதியான சோர்வுணர்வு கவிந்துள்ளது. பக்கிரி வராண்டாவில் முன்பிருந்த அதே இடத்தில் தூங்கி வழிந்துகொண்டிருக்கிறான். அரிக்கன் விளக்கின் அருகே அமர்ந்திருக்கும் தாய், துணி ஒன்றில் நூலைக் கொண்டு ஏதோ வடிவத்தை நெய்துகொண்டிருக்கிறாள். கொஞ்சம் தள்ளி, கட்டிலின் மேல் அமர்ந்துகொண்டு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறாள் ஜாபா )


தாய்: (முகத்தை உயர்த்தி) சங்கரும் உன் அப்பாவும் இன்னும் டாக்காவுல இருந்து அந்த பாபுவோட திரும்பி வரக் காணோம். 


ஜாபா: ஒருவேளை படகு எதுவும் இல்லையோ என்னவோ.


தாய்: சாகர் எங்க போனான்? 


ஜாபா: அவரு நதியோரமா உட்கார்ந்திருக்காரு. 


தாய்: ரெண்டு நாளா அவன் அவனாவே இல்ல, ஏதோ மாதிரி இருக்கான். என்ன விஷயம்னு உனக்கு ஏதாவது தெரியுமா?


ஜாபா: இல்ல.


தாய்: அவன் மனசு போகுற தினுச என்னால புரிஞ்சிக்கவே முடியல. நீ இன்னைக்கு கிளம்புறேன்னு சாகருக்குத் தெரியுமா?


ஜாபா: நான் மதியம் அவர் கிட்ட சொன்னேன். என் கூடயே வர விரும்புறேன்னு சொன்னாரு.


தாய்: எங்க?


ஜாபா: என்னோடயேதான். 


தாய்: அது எப்படி சாத்தியம்?


ஜாபா: நீங்க எங்களை ஒன்னாப் போக அனுமதிக்க மாட்டீங்களா?, இல்ல, என் மகளைக் கடத்திட்டு போறாங்கன்னு ஊரைக் கூட்டிச் சொல்லப் போறீங்களா?


தாய்: ஜாபா!


ஜாபா: அம்மா, நீங்க ஒரு பாட்டை பாடுறீங்க, ஞாபகம் இருக்கா 'பசுக்களின் நிறம் எதுவாகினும் அதன் பாலின் நிறம் வெண்மை தான்.'


தாய்: உண்மை தான். நான் அந்த வார்த்தைகளை நம்புறேன். 


ஜாபா: அப்புறம்?


தாய்: எனக்குத் தெரியல. இந்தப் பேச்சை நிறுத்து இப்போ. சாகர் ரொம்ப விநோதமா இருக்கான். 


ஜாபா: ஏன்?


தாய்: அவன் இன்னும் அந்தப் பாட்டை பாடல. 


ஜாபா: நான் அவரைக் கூப்பிடவா?


தாய்: ஏன்?


ஜாபா: அவர் பாடலாம் இல்லையா. இன்னைக்கு நாங்க கிளம்பி போயிட்டா அப்புறம் அந்தப் பாட்டை கேட்க முடியாமலேயே போயிரும்ல. 


தாய்: பெருநாள் நெருங்கிடுச்சு. அதுவரைக்குமாவது அவன் பொறுத்திருக்கக் கூடாதா?


ஜாபா: இல்ல.


தாய்: சரி நீ போ.


ஜாபா:  அம்மா.


தாய்: என்ன?


ஜாபா: நீங்க வருத்தப்பட்ட மாதிரியே தெரியல. 


தாய்: எப்போ?


ஜாபா: கராச்சில இருந்து ஹாக் சாஹிப் வராரு, நான் வீட்டை விட்டு கிளம்பனும்னு சொன்னப்போ?


தாய்: இல்லை, அதுல எனக்கு வருத்தம் இல்ல.


ஜாபா: ஏன் ம்மா?


தாய்: ஏன்னா, உன்னை எப்படித் தடுத்து நிறுத்தறதுன்னு எனக்கு தெரியல. 


ஜாபா: ஒரு வேலை என்னைத் தடுத்து நிறுத்த ஏதாவது வழி கிடைச்சா, நீங்க அப்படி செஞ்சிருப்பீங்களா?


தாய்: நீதான் சொல்லணும். 


ஜாபா: டாக்காவுல இருந்து ஜமாய் பாபு வந்ததும், நமக்கு தெளிவான தகவல் கிடைக்கும். அதுக்கப்புறம் உடனே நான் கிளம்பிடுவேன். எப்போ வேணா ராணுவ ஆட்சி அமலுக்கு வரலாம். அப்படி வந்துச்சுன்னா, கைதுகள், சித்ரவதைகள், அராஜகங்களுக்கு அது வழிவகுக்கும். 


பக்கிரி: அதைப் பற்றி  கவலையே இல்ல.


தாய்: என்ன சொன்ன நீ?


பக்கிரி: ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது அரசு வரும்போதும் அவங்களை தூக்கிவச்சு கொண்டாட முடியாது. இந்த முறை, நாம அவங்களை சும்மா விடக் கூடாது.


தாய்: ஆனா நீ சரியான சோம்பேறி ஆச்சே!


பக்கிரி: எனக்குள்ளயும் ஒரு தீ எரிஞ்சிக்கிட்டு தான் இருக்கு.


ஜாபா: நீங்க தான் என்னோட ராணுவத்தோட முதல் வீரர். நீங்க படகுல என்னை நதியை கடந்து கூட்டிட்டு போவீங்களா?  


பக்கிரி: கண்டிப்பா!


தாய்: ஆனா, அவங்க ஏன் இன்னும் வந்து சேரல?


ஜாபா: இன்னைக்கு எந்த நீராவி படகும் இயங்கல.


தாய்: பக்ராவைக் கூட கூட்டிட்டுப் போங்கன்னு நான் அவர் கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன். என் வார்த்தையை கேட்டா தானே.


ஜாபா: அம்மா! நாம இன்னைக்கு அந்தப் பாட்டைக் கேட்டா நல்லா இருக்கும்!


தாய்: பக்ரா, சாகரைக் கூப்பிடு.


பக்கிரி: சரி.


தாய்: போ, இப்பவே போயி கூட்டிட்டு வா.


பக்கிரி: சரி, சரி, நான் இப்பவே போறேன். (அலட்டிக்கொண்டவாறு எழுந்து சென்று) சின்ன ஐயா!


சாகர்: (பின்னணியில்) என்ன, பக்கிருதி?


பக்கிரி: அம்மா, உங்களைக் கூப்பிடுறாங்க. 


சாகர்: (பின்னணியில்) நான் வரேன். 


பக்கிரி: (திரும்பி வந்தவாறு) வராரு அவரு. 


தாய்: ஜாபா, சாகர் உன் கிட்ட வேற ஏதாவது சொன்னானா?


ஜாபா: (முகத்தை உயர்த்தி) என்ன?


தாய்: அவன் நல்ல பையன் தான். ஆனா சில நேரங்கள்ல எதையோ தொலைச்ச மாதிரியே இருக்கான். 


ஜாபா: ரொம்ப இறுக்கமா!


தாய்: (கவனிக்காதவளாய்) நீ என்ன சொன்ன?

    

      (சாகர் வருகிறான்)


சாகர்: அம்மா, ஜமாய் பாபுவோட சங்கர் இன்னும் வந்து சேரலையா?


தாய்: இல்ல.


சாகர்: ஜாபா, ராத்திரில நீ நதியைக் கடக்க போறியா?


ஜாபா: ஆமா.


சாகர்: ஆனா, மழை மேகங்கள் சூழ்ந்துகிட்டு இருக்குதே, கவனிச்சியா?


ஜாபா: அப்போ, இன்னைக்கு நான் போகாம இருக்க வேண்டியதுதான்.


சாகர்: இல்லை, நீ இன்னைக்குப் போய் தான் ஆகணும்.


ஜாபா: ஜமாய் பாபு கிட்ட டாக்காவுல நிலைமை எப்படி இருக்குன்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டுதான், நான் கிளம்புறதா, இல்லை இருக்கறதா, எது பாதுகாப்புன்னு முடிவு பண்ணனும். என்ன இருந்தாலும், நான் குறிவைக்கப்படுற ஆள்! 


தாய்: சாகர், நீயும் ஜாபா கூட போக விரும்புறியா?


சாகர்: அதைப் பற்றி த்தான் நான் யோசிச்சிகிட்டு இருக்கேன். அம்மா, நதியோராமா உட்கார்திருந்தப்போ, அந்த காத்துல என்னால ஆபத்தை உணர முடிஞ்சது. காத்து வீசுறது சுத்தமா நின்னுடுச்சு. படகுகளோட பாய்கள் தாழ்வா பறக்குது.


தாய்: அவங்க ஏன் இன்னும் இங்க வந்த சேரல? என்னால காத்துல சில சலசலசப்புகளை மட்டும் தான் கேட்க முடியுது.  சரியா என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரிஞ்சா நல்லா இருக்கும்.


சாகர்: ஜாபா, நீ என்ன முடிவு பண்ணியிருக்க?


தாய்: அந்தப் பாட்டைப் பாடு சாகர்.


சாகர்: பாட்டா?


தாய்: வா, நதிக்கரையோரமா போவோம்.


சாகர்: அந்தப் பாட்டை இப்போ நான் பாட விரும்பல.


தாய்: இல்ல, நீ என்னோட வா முதல்ல.


சாகர்: நான் கண்டிப்பா வரணுமா? 


      (தந்தை அங்கு வந்து சேர்கிறார்)


தந்தை: சங்கர் வழி தவறிப் போயிட்டான்.


சாகர்: நீங்க என்ன சொல்றீங்க?


தந்தை: படகுத்துறைக்கு வந்து சேர்ந்ததும் அவன் ஒரு முறை பள்ளிக்கூட கட்டிடத்தைப் பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு போனான்.


தாய்: அவன் போனானா, இல்லை நீங்க சொல்லி அனுப்பி வச்சீங்களா?


தந்தை: நாங்க ரெண்டு பேருமே தான் போனோம். இதுமாதிரியான எதிர்பாராத தடைகளை எப்படிக் கணிக்க முடியும் சொல்லு?


சாகர்: என்ன தடைகள்?


தந்தை: நாட்டோட வளர்ச்சிக்கு குறுக்க நிறைய தடைகள் வந்துகிட்டு இருக்கு. ஆனா, இந்தத் தடை தற்காலிகமானது தான். எதிர்பார்த்தது தான். இதுமாதிரி நேரங்கள்ல சரியான பாதையைக் கண்டுபிடிக்குறது ரொம்ப கஷ்டம். அதுலயும், அந்தப் பாதையில அடியெடுத்து வைக்குறது அதை விட ரொம்ப கஷ்டம்.


சாகர்: நீங்க என்ன சொல்லிக்கிட்டு இருக்கீங்க?....


தந்தை: ஆமா, இது தான் உண்மை. காலங்காலமாகவே வங்கதேசம் அதோட, பரந்து கிடக்குற மக்களோட தொடர்ந்து இயங்கிட்டு வருது. ஆனாலும், வர்க்க, மத வேறுபாடுகள் போன்ற சமூக நோய்கள்ல இருந்து நம்மால விடுபட முடியல. நம்மை நாமே தூரத்துல இருந்து பார்த்தோம்னா, இறுதியில அந்த வேற்றுமைகள் ஒழிக்கப்பட்ட மாதிரி உணர முடியும். ஆனா, நாம அமைச்சுக்கிட்ட சொந்த வாழ்க்கை முறைப்படி, அப்படி ஒழிக்கப்பட்டதா நம்பிகிட்டு மட்டும் தான் இருக்கோம்... உதாரணமா...


தாய்: அந்தப் பையனை எங்க விட்டுட்டு வந்தீங்க நீங்க?


தந்தை: என்ன?


தாய்: சங்கர் எங்க?


தந்தை: சங்கர்?


தாய்: நான் கேக்குற கேள்வி உங்க மண்டைக்கு உரைக்குதா இல்லையா?


தந்தை: ஆ, ஆமா! சங்கர், திரும்பி வர வழியை கண்டுபிடிச்சு வந்து சேர்ந்துடுவேன்னு சொன்னான். நாங்க வர வழியில ஒரு சுவாரஸ்யமான விவாதத்துல ஈடுபட்டோம். அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி நான் மட்டும் திரும்பி வரப்போ, படகோட்டியோட மகன் தாஹரைச் சந்திச்சேன். சங்கர், டாக்காவுல இருந்து வந்த அவனோட  உறவினரை அழைக்க படகுத்துறைக்கு திரும்பி வந்தானா-ன்னு கேட்டேன். ஆனா, கொஞ்ச பயணிகள் வந்ததாவும்,  சங்கர் அங்க இல்லைன்னும் அவன் சொன்னான். சங்கர் அங்க இல்லைன்னு அவன் உறுதியா சொன்னான். அவன் வழி தான் தவறி இருக்கனும்.


தாய்: அவனை வழிதவற விட்டுட்டு, நீங்க வீட்டுக்குத் திரும்பி வந்து உங்க சொற்பொழிவுகளை பொழிஞ்சுக்கிட்டு இருக்கீங்க!


தந்தை: இல்ல. நான் திரும்பி போயி அவனை தேடலாம்னு தான் இருந்தேன். ஆனா. வானத்துல வடக்கு திசையில கருமேகங்கள் சூழந்ததைப் பார்த்ததும், மழை வந்துடுனும்  நினைச்சு வந்துட்டேன். 


தாய்: நீங்க என்ன மாதிரியான ஜென்மமோ..  


தந்தை: போதும் போதும். ஜாபா, போயி குடையை எடுத்துட்டு வந்து கொடுக்குறியா? நான் வெளிய போயிட்டு வரேன். 


         (ஜாபா அங்கிருந்து செல்கிறாள்)


தாய்: நீங்க மறுபடியும் வெளிய போறீங்களா?


தந்தை: நான் போயி அவனைத் தேடிட்டு வரேன். 


தாய்: ஏன் பக்ராவை அனுப்பி வைக்கக்கூடாது?


தந்தை: இல்ல, இல்ல, அவனால இதை செய்ய முடியாது.


தாய்: அப்புறம், உங்களைத் தேடுறதுக்கு ஒரு ஆளை நான் அனுப்பி வைக்கணும். எல்லாரும் ராத்திரி முழுக்க ஒருத்தரை ஒருத்தர் தேடிகிட்டு இருக்க வேண்டியதுதான்.


      (ஜாபா குடையுடன் வருகிறாள்)


தந்தை: நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன். இந்த சங்கருக்கும் ஒரு நிதானம்ங்குறதே இல்ல.


தாய்: உங்க பேச்சை நிறுத்துங்க முதல்ல. 


தாய்: சரி, சரி. 


      (குடையை வாங்கிக்கொண்டு அவர் செல்கிறார்) 


தாய்: எல்லாம் என் தலைவிதி! இவரோட சேர்ந்து வாழ்ந்து என் வாழ்க்கையே வீணா போச்சு. என் அப்பாரு இப்படி ஒரு மனுஷனுக்கு எப்படி என்னை கட்டிக் கொடுத்தாருன்னு ஆச்சர்யமா இருக்கு!


பக்கிரி: இந்த வயசுல அதைப் பற்றி  அழுது என்ன பிரயோஜனம். 


தாய்: போ இங்க இருந்து!


ஜாபா: (சாகரிடம்) நீங்க அந்தப் பாட்டையாவது பாடுங்களேன். 


தாய்: ஆமா, பாடு.


சாகர்: பாடணுமா?


தாய்: மோஷின் அதை எப்படிப் பாடுவானோ அது மாதிரி பாடு.


சாகர்: மோஷின்?


தாய்: ஆமா, மோஷின்.


சாகர்: அந்தப் பாட்டோட இணைஞ்ச பல நினைவுகள், சம்பவங்கள், கதைகளை உங்க கிட்ட சொல்ல மறுபடியும் மறுபடியும் முயற்சி பண்ணிகிட்டே இருக்கேன் நான். 


தாய்: நானும் காரணமா தான், உன்னை அந்தப் பாட்டைப் பாடச் சொல்லி சொல்லிக்கிட்டு இருக்கேன். 


சாகர்: நான் அதைப் பாடுனா மனசு ரொம்ப வலிக்கும். 


தாய்: அந்தப் பாட்டைக் கேட்டா எனக்கும் வலிக்கத் தான் செய்யும். (அவனை இழுத்தபடி) வா போவோம்.  


சாகர்: (மேட்டின் மேல்) அம்மா, இந்தப் பாட்டு எல்லா ஞாபகங்களையும் திரும்ப கொண்டு வந்துடும். 


ஜாபா: என்ன சொன்னீங்க?


சாகர்: ஒன்னும் இல்ல. அங்க பாரு மேகங்கள் ஒன்னு சேர்ந்துக்கிட்டு இருக்கு.


ஜாபா: ஆமா, மழை பெய்யப் போகுது.


சாகர்: நீ மழையில தனியா இருக்க விரும்புறியா?


ஜாபா: நீங்க பாடப் போறது இல்லையா?


சாகர்: பாடவா நான்?


தாய்: சாகர், தயவுசெஞ்சு பாடு. 


      (அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர். பக்கிரியும் உடன் இருக்கிறான். சாகர் அவர்களுக்குப் பின்புறமாகத் திரும்பி, தன் முகத்தை மறைத்தவாறு, பாடலை தொடங்க முற்படுகிறான். தாயும், ஜாபாவும் சற்று தள்ளி கீழே அமர்ந்துகொள்கின்றனர். இருவரும் அவனையே பார்த்தவண்ணம் உள்ளனர். சாகர் இருமுறை அவர்களைத் தயக்கத்துடன் பார்த்துவிட்டு, கண்களை மூடி, பாடத் தொடங்குகிறான்: 'படகுக்கார சகோதரா நல்ல படகோட்டியே'. முழு குரலில் அவன் முழு பாட்டையும் பாடுகிறான். பக்கிரி மெதுவாக எழுந்து அருகில் வந்து சாகரை ஆச்சர்யத்துடன் பார்க்கிறான். தாய் கண்களை மூடியவண்ணம் அமர்ந்திருக்கிறாள். ஜாபா எழுந்து சென்று, தன் தாய் தைத்துக்கொண்டிருந்த துணியையும், புத்தகங்களையும் எடுத்து வராண்டாவில் வைக்கச் செல்கிறாள். பின்னர் திரும்பி வந்து தாய்க்கு அருகே அதே இடத்தில் அமர்ந்துகொள்கிறாள். பல ஆண்டுகள் முன், மோஷின் எங்கு நிறுத்தினானோ அந்த இடம் வரை உச்சக்குரலில் பாடி நிறுத்துகிறான் சாகர். அவன் கண்களைத் திறக்க, அவை எதையோ தொலைத்தது போன்ற பாவனையை வெளிப்படுத்தியது. ஜாபாவையும், தாயையும் அந்தக் கண்களால் கூர்ந்து பார்க்கிறான்.)


ஜாபா: பாட்டைப் பாடி முடிங்க!


சாகர்: இந்த பாட்டுக்கு முடிவே கிடையாது! (அவன் தன் நெஞ்சைப் பிடித்தவாறு அலறுகிறான்) எனக்குள்ள இருக்கிற கொந்தளிப்பை என்னால தாங்கிக்க முடியல!


       (அவன் மேட்டின் நெடுக ஓடி, மறைகிறான்)


தாய்: (கண்களைத் திறந்து) எங்க போற மகனே, என்னை விட்டுட்டுப் போறியா?


ஜாபா: (தாயைப் பிடித்தவாறு) அம்மா!


பக்கிரி: (குதித்து ஓடியவாறு) சின்ன ஐயா! (என சாகர் பின்னால் ஓடுகிறான்)


ஜாபா: அவரைத் தனியா விடுங்க. அவருக்குள்ள அளவுக்கு அதிகமான வலி வெளிவர முடியாம அடைபட்டிருக்கு. உங்களுக்கு அந்த வலி தெரியலையா?


தாய்: அப்படி என்ன வலி அவனை இப்படி வாட்டி வதைச்சுகிட்டு இருக்கு?


ஜாபா: எனக்குத் தெரியல. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. 


தாய்: (வெட்ட வெளியைப் பார்த்தவண்ணம்) சீக்கிரம் மழை பெய்யப் போகுது. 


ஜாபா: வானத்தோட முனை, மை இருட்டா  இருக்கு. 


தாய்: இந்த உலகத்தை என்னால இன்னும் புரிஞ்சிக்க முடியல. விளக்கை போட்டு அமத்துற மாதிரி, வர சந்தோஷம் அப்படியே மறைஞ்சும் போயிடுது. இந்த உலகத்தோட இயக்கத்தைப் புரிஞ்சிக்க எந்த வழியும் இல்ல என்கிட்ட.


ஜாபா: வாங்க போவோம். 


      (இருவரும் அமைதியாக அங்கிருந்து செல்கின்றனர். பக்கிரியும் சாகரும் மீண்டும் மேட்டின் மேல் தோன்றுகின்றனர்)


பக்கிரி: உங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்கு ஒன்னு மட்டும் புரியுது.  நீங்க என்ன கொல்ல விரும்புறீங்க அப்படித்தான.


சாகர்: 'நான் இந்த உலகைக் காண்கிறேன், நாம் ஒரு தாய் மக்கள் என உணர்கிறேன்.'


பக்கிரி: இப்போ இருக்குற காலத்துக்கு நமக்கு உண்மையான ஆம்பளைங்க தேவை. உங்களால உயிர்களை எடுக்க முடியுமா?


சாகர்: அந்த துர்க்கனவோட இருட்டுல இருந்து என்னால விடுபட முடிஞ்சா...


பக்கிரி: நீங்க வழியைக் காண்பிச்சீங்க, அதனால நான் மாறினேன். 


சாகர்: எல்லாமே எனக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருங்குன்னு கடைசியா நான் புரிஞ்சுக்கிட்டேன்.


பக்கிரி: உங்களுக்குள்ள மறைஞ்சிருக்குற அந்தப் புதையலை மனித இனம் மொத்தத்துக்கும் பகிர்ந்துக்கோங்க.


சாகர்: மோஷினுக்கு என்ன நடந்ததோ அதுக்கு நான் தான் காரணம். கடந்த நாலு வருஷமா நான் உள்ளுக்குள்ளேயே எரிஞ்சிக்கிட்டு இருக்குறதுக்கும் நானே தான் காரணம். ஜாபாவை ஏத்துகிறதுக்கு பின்னாடி இருக்குற பிரச்சனையும் நான் தான். உங்களுக்கு தெரியுமா பக்கிரி, யாரை உண்மையானவங்கன்னு என் மனசு சொல்லுச்சோ, அவங்களைத் தான் என் மனசு ஏத்துக்கவும் மறுக்குது. அது தான் என்னோட துயரம்: இந்து, முஸ்லிம். 


பக்கிரி: இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லைனு நீங்க தான் எங்களுக்கு காண்பிச்சீங்க. 


சாகர்: ஓ கடவுளே! என் மேல கருணை காட்டு!


      (அவன் தன் காதுகளைக் கைகளால் பொத்துக்கொண்டு அங்கிருந்து ஓடுகிறான். பக்கிரி முன்னே அடியெடுத்து வைத்து)


பக்கிரி: போங்க, நீங்க இப்போ நீங்களா, உங்களோட மட்டுமே இருக்க வேண்டிய தருணம். போயி, அந்த இருட்டுல உட்காருங்க.


     (ஜாபா வருகிறாள்)


ஜாபா: பக்கிரி மாமா!


பக்கிரி: அவரு தனியா இருக்க விரும்புறாரு. அவரை இப்போ தொந்தரவு பண்ணாதீங்க. 


ஜாபா: யாரு?


பக்கிரி: என் அருமை ஜாபா, மோஷின் திரும்ப வந்துட்டாரு!


ஜாபா: அவர் பாடுனதைக் கேட்டதுக்கு அப்புறம், அம்மாவும் நீங்க சொன்னதைத் தான் சொல்லுறாங்க.


பக்கிரி: அம்மா என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க?


ஜாபா: அவங்க அழுதுகிட்டு இருக்காங்க. சொல்லப்போனா, தேம்பி அழுதுகிட்டு இருக்காங்க.. ஆனா...


பக்கிரி: என்ன, சொல்லுங்க?


ஜாபா: நாம சோனாவுல்லாவுக்கு போவோம்.


பக்கிரி: மழை வர்றதுக்கு முன்னாடி நான் போயி படகை எடுத்துட்டு மேட்டுக்கு கொண்டுவரேன். நதியை கடக்கும்போது நீங்களும் சேர்ந்து துடுப்பு போட முடியுமா?


ஜாபா: என்னால முடியும். (சங்கர் வருகிறான். அவன் உடைகள் மண்படிந்து அழுக்காக உள்ளது) சங்கர் அண்ணா!


சங்கர்: எதுவும் பேசாத!


ஜாபா: என்ன ஆச்சு?


சங்கர்: படகுத்துறை சரியா எங்க இருக்குன்னு எனக்குத் தெரியல. எனக்கு எந்தத் திசையில நடக்கணும்னு மட்டும்தான் தெரிஞ்சது. அப்படி நான் நடந்து வந்துகிட்டு இருந்தப்போ ஒரு பெரிய வயல்வெளி தான் தெரிஞ்சது. வயலுக்கு அந்த பக்கம் விளக்கு வெளிச்சங்கள் தெரிஞ்சதால, நான் அந்த வயல் வழியா குறுக்கு வழியில நடந்து வந்துடலாம்னு நினைச்சேன். அது சரி சாகர் எங்க?


பக்கிரி: இப்போ அவரைத் தேடாதீங்க. அவரு தனியா இருக்கனும்னு நினைக்குறாரு.


ஜாபா: பக்கிரி மாமா!


பக்கிரி: நான் இதோ போயிட்டு வந்துடறேன். நீ தயாரா இரு, என் செல்ல ஜாபா.


      (பக்கிரி செல்கிறான்)


சங்கர்: பக்கிருதிக்கு உள்ளேயும் உயிர் இருக்குறதுக்கான அறிகுறிகள் தென்படுதே எனக்கு!


ஜாபா: ஆமா, தூங்கும் ராட்சசன் எழும்ப ஆரம்பிச்சிடுச்சு!


சங்கர்:  இந்தப் புரட்சி எப்போ நடந்துச்சு?


ஜாபா: சாகர் பாடிக்கிட்டு இருந்தப்போ.


சங்கர்: உண்மையாவா! அந்தப் பாட்டா 'என் படகுக்கார சகோதரா'?


ஜாபா: ஆமா. 


சங்கர்: அப்புறம் என்ன ஆச்சு?


ஜாபா: சங்கர் அண்ணா, எனக்கு ஒன்னு சொல்லுங்க?


சங்கர்: என்ன?


ஜாபா: சாகருக்குள்ள அப்படி என்ன தான் இருக்கு?


சங்கர்: ரொம்ப பரிவான மனசு.


ஜாபா: இல்ல அது இல்ல, வேற ஏதோ...


சங்கர்: என்ன?


ஜாபா: ஏன் பாடுறதை திடீர்ன்னு நிறுத்திட்டு அப்படி ஓடுனாரு அவரு?


சங்கர்: அவன் ஓடுனானா? எங்க?


ஜாபா: நதிக்கரைக்கு. அவர் மனசை அப்படி என்ன அரிச்சிகிட்டு இருக்கு? நீங்களாவது என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?


சங்கர்: அவன் எதுக்கு அப்படி ஓடுனான்னு எனக்கு தெரியும். ஆனா நான் எதுவும் சொல்ல மாட்டேன். 


ஜாபா: ஆனா, என்னோட எதிர்காலம் அதைப் பொறுத்து தான் இருக்கு...


சங்கர்: எனக்கும் அது தெரியும். ஆனாலும், நான் எதுவும் சொல்ல மாட்டேன். சாகரால மட்டும் தான் உனக்கு அதைச் சொல்ல முடியும். 


ஜாபா: ஆனா, அவரு எப்போ அதை சொல்லப் போறாரு?


சங்கர்: எனக்குத் தெரியல. அவன் உன்கூட புறப்பட விரும்புறானா இப்பவும்? 


ஜாபா: அப்படித்தான் சொல்லுறாரு. 


சங்கர்: மனசோட இரு முனைகளுக்கும் இருக்குற முரண்பாடு தான் நம்மளோட ஒரே தடை. 


ஜாபா: அது உண்மையா இருந்தாலும், அந்த தடையை தள்ளிவிட்டு முன்னேற நான் தயார். 


சங்கர்: தடைகளை உதறித்தள்ளுறது எல்லா சமயத்துலயும் சாத்தியம் இல்ல. அதுக்காக ஒருத்தர் காத்திருக்கனும். 


ஜாபா: குறிப்பா, நான் மட்டும் தான் அதுக்குத் தயாரா இருக்கும்போது, அப்படித்தான? 


சங்கர்: யாரு, எங்க? எப்படி தயார் ஆகிக்கிட்டு இருக்காங்கன்னு உனக்கும் சரி, எனக்கும் சரி, எதுவும் தெரியாது. நீ எனக்கு ஒரு வாக்கு கொடுப்பியா?


ஜாபா: என்னது சொல்லுங்க.


சங்கர்: நீ எந்த மாதிரியான வலியையோ, இல்ல தடைகளை எதிர்கொண்டாலும்,  உன்னோட வாழ்க்கையில இருந்து பகுத்தறியுற, தர்க்க ரீதியா சிந்திக்குற தன்மையை மட்டும் கைவிட்டுடாத. 


ஜாபா: ஏன் நீங்க அப்படி சொல்லுறீங்க?


       (சாகர் திரும்பி வருகிறான். அவன் சாந்தமாக காணப்படுகிறான்.)


சாகர்: சங்கர்!


சங்கர்: (திடுக்கிட்டவனாய்) யாரு, ஓ, நீயா! நான் இப்போ புறப்படுறேன்.


சாகர்: ஜமாய் பாபு இன்னும் வந்து சேரலையா?


சங்கர்: நீ ஜாபாவோட போறதுல உறுதியா இருக்கியா?


சாகர்: ஆமா! கொல்கத்தாவுக்கு திரும்புனதுக்கு அப்புறம் நீ வேலையிலயும், அரசியல்லயும் மறுபடியும் சேர்ந்துக்குவ. ஆனா எனக்குப் போக எந்த இடமும் இல்லாம, பாட்டு மட்டுமே பாடிக்கிட்டு தேங்கிடுவேன். அதுக்கு பதிலா...


சங்கர்: நீ நதி பக்கத்துல உட்கார்ந்துகிட்டு இருந்தியா?


சாகர்: ஆமா. நட்சத்திரங்களோட மங்கிய ஒளி வெள்ளம் சூழந்த நதிக்கரையோரமா நான் உட்கார்ந்திருந்தேன். மறுபக்கத்துல மேகங்கள் திரண்டுகிட்டு இருந்துச்சு. நான் என்ன பார்த்தேன்னு உனக்குத் தெரியுமா?


சங்கர்: என்ன?


சாகர்: ஒரு கனவு. வங்கதேசத்துல மனிதகுலத்தோட ஓட்டத்தைப் பற்றி ஐயா பேசிகிட்டு இருந்தாரு. நான் அந்த ஓட்டத்தைப் பார்த்தேன். ஒரு வினோதமான உணர்வால நான் ஆட்கொள்ளப்பட்டேன். 


சங்கர்: அந்தக் கனவுனாலயா?


சாகர்: ஆமா, அந்தக் கனவுனால தான். வரலாறு ஒரு கனவு தான். எதார்த்தமும் அப்படித் தான். 


ஜாபா: சங்கர் அண்ணா நீங்க போயி குளிக்கலையா?


சங்கர்: என்னைத் துரத்தாத. நானே போகத் தான் போறேன்.   

  

      (அவன் செல்கிறான்.)


சாகர்: ஜாபா!


ஜாபா: என்ன?


சாகர்: நான் உன்கூட வர்றதுல உனக்கு சந்தோஷம் இல்லையா?


ஜாபா: நதிக்கரையோரமா உட்கார்ந்திருந்தப்போ, நீங்க பாடிகிட்டு இருந்தீர்களா?


சாகர்: ஆமா. நான் மெட்டை முணுமுணுத்துட்டு இருந்தேன். கொஞ்ச வரிகளையும் நான் அதுல போட்டேன். 


ஜாபா: நீங்க ஏதோ சொல்ல விரும்புனீங்க தானே. 


சாகர்: உனக்கு தெரியுமா ஜாபா, நான் அங்க உட்கார்ந்திருந்தப்போ, நான் எனக்குள்ள இருந்த வேறுபாடுகளை எல்லாம் அப்படியே கழுவுன மாதிரி உணர்ந்தேன்....


ஜாபா: நீங்க இந்து முஸ்லிம்கள் இடையில இருக்குற மத வேறுபாடுகளைப் பேசுறீங்களா?


சாகர்: ஆமா. 


ஜாபா: இந்த ரெண்டு வார்த்தைகளை பற்றி எனக்கு கவலையே இல்ல.


சாகர்: என்ன?


ஜாபா: இந்த ரெண்டு வார்த்தைகள் முடியுற இடத்துல இருந்துதான் நான் தொடங்குறேன். 



சாகர்: நானும் கூட, வெகு தூரத்தைக் கடந்து, அந்தத் தொடக்கத்துக்கு வந்து சேர்ந்திருக்கேன். அந்த மாற்றம், உள்ள இருந்து முழுமையான ஒன்னா இருக்குறது. நான் என்னோட நாட்டோட பண்பாடுகளையும், மரபுகளையும் நேசிக்க தொடங்கி, இப்போ இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கேன். 


ஜாபா: இவ்வளவு தான் நீங்க என்கிட்ட சொல்ல நினைச்சதா?


சாகர்: இதுவும் தான். நான் சொல்ல நிறைய இருக்கு. ஆனா அதை சரியா வெளிப்படுத்த என்னோட எண்ணங்களை ஒழுங்குபடுத்த முடியல. 


ஜாபா: உங்ககிட்ட இருந்து எனக்கு ஒன்னு தெரிஞ்சுக்கணும்


சாகர்: என்னது அது?


ஜாபா: நீங்க ஏன் திடீர்ன்னு பாட்டை நிறுத்திட்டு அப்படி ஓடுனீங்க?


சாகர்: ஜாபா!


ஜாபா: எனக்குப் பயமா இருக்கு.


சாகர்: உனக்கு என்னைப் பார்த்து பயமா இருக்கா? 


ஜாபா: எனக்கு உங்களை நினைச்சு பயமா இருக்கு. நீங்க எந்த வலியினால இப்படி வேதனைப்பட்டுக்கிட்டு இருக்கீங்க?


சாகர்: அதை உன் கிட்ட என்னால சொல்ல முடியல. 


ஜாபா: நான் அதைக் கேட்க விரும்புறேன்.


சாகர்: எனக்கு ரொம்ப பயமா இருக்கு.


ஜாபா: எதைப் பார்த்து, இல்ல யாரைப் பார்த்து நீங்க பயப்படுறீங்க?


சாகர்: நான் உன்கிட்ட அதை சொன்னேன்-னா  நீ அதுக்கப்புறம் எப்பவும் என்னைப் பார்க்க விரும்ப மாட்ட.


ஜாபா: நீங்க சொல்ல முடியாத அளவுக்கு இருக்குற அந்தக் கதை தான் என்ன?


சாகர்: ஜாபா, நீ என்னை ஏத்துக்கிட்டு, உன்கூட கூட்டிட்டு போவியா?


ஜாபா: அதைச் சொல்லுங்க முதல்ல!


சாகர்: நீ என்னை உன்னோட வழித்துணையா ஏத்துக்குவியா?

 

ஜாபா: நீங்க என்ன சொல்லிக்கிட்டு இருக்கீங்க!


சாகர்: என்னால இதுக்கு மேலயும் பொறுத்துக்க முடியல.


ஜாபா: என் கண்களைப் பாருங்க. உங்களால இப்பவும் முடியலையா?


சாகர்: (அவள் கண்களைப் பார்த்து, சாந்தமாக) நான் மோஷினோட உயிரைக் காப்பாத்தல.


ஜாபா: நீங்க காப்பாத்தலயா!


சாகர்: 1946ல மோஷின் சந்திச்ச சாகர், என் பேரை கொண்ட இன்னொரு ஆள். அது நான் இல்ல.


ஜாபா: நீங்க இல்லையா!


சாகர்: எனக்கு மோஷினை அவன் உயிரிழந்த 1950ல தான் தெரியும்.


ஜாபா: நிறுத்துங்க போதும்!


       (அவள் மறுபக்கத்துக்கு நகர்கிறாள்)


சாகர்: நான் உன் கிட்ட இன்னைக்கு எல்லாத்தையும் சொல்லப் போறேன்.


ஜாபா: சொல்லுங்க.


சாகர்: மோஷின் என் வீட்டுல இருந்து இழுத்துச் செல்லப்பட்டான். ஒரு சாகர் அவனை காப்பாத்துனான், இன்னொரு சாகர் அவனை காட்டிக் கொடுத்தான். நான் தான் அந்த சாகர்.


ஜாபா: சாகர்!


சாகர்: அந்த நேரத்துல, நான் ஒரு இந்து, அதனால முஸ்லிமை பழிவாங்கணும்னு மட்டும் தான் என்னால யோசிக்க முடிஞ்சது. அதுக்கப்புறம் தான், அதுல ஒருத்தர் வங்காளி, இன்னொருத்தர் ஒரு மனுஷன்னு நான் உணர்ந்தேன். ஒரு வங்காளி சக  மனுஷனை எந்தக் காரணமும் இல்லாம சாவை நோக்கித் தள்ளியிருக்கான். நான் ஒரு மிருகம்!


ஜாபா: சாகர்!


சாகர்: நாலு வருஷமா மனசாட்சியோட குத்தலும், ஆழமான குற்றஉணர்ச்சியும் என்னை உள்ள இருந்து எரிச்சிகிட்டு இருக்கு. அதுக்கப்பறம் தான் இங்க வந்தேன். இந்த நதியோட கறைகள்ல இருக்கும்போதுதான், நான் செஞ்சது தப்புன்னு உணர்ந்தேன். தவறான புரிதல்கள் என்னோட வாழ்க்கையை எப்படி பாழாகிடுச்சுன்னு உணர்ந்தேன்.


ஜாபா: சாகர்! (தன் அகல விரிந்த கண்களால் அவனைப் பார்க்கிறாள்)


சாகர்: நான் வெடிக்குறதுக்கு முன்னாடியே வானத்துல தேய்ஞ்சு மறைஞ்ச ஒரு பட்டாசு. 


ஜாபா: நாலு வருஷம் முன்னாடி, நீங்க தான்...


சாகர்: கடைசியா, நான் இங்க வந்து சேர்ந்தேன்.


ஜாபா: ஆனா, ஏன்?


சாகர்: பிராயச்சித்தம் செய்ய.


ஜாபா: என் அம்மா; அப்பா கிட்டேயும் நான் இதைச் சொல்லணும்னு நினைக்குறீங்களா?


சாகர்: நானே எல்லாருகிட்டேயும் சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனா என்னால முடியல.


ஜாபா: சொல்லாம இருந்து, அந்த ரெண்டு வயசானவங்களை உயிரோட விட்டுவச்சதுக்கு நன்றி.


சாகர்: ஜாபா!


ஜாபா: நீங்க இங்க பிராயச்சித்தம் தேடி வந்தீங்களா? இல்லை மறுபடியும் கொலை செய்யுறதுக்கு ஏதும் திட்டம் வச்சிருக்கீங்களா? ஒரு மனுஷ உயிரை எடுத்ததுக்கு அப்புறமும் உங்களுக்குத் திருப்தி ஆகலையா?


சாகர்: ஜாபா!


ஜாபா: நீங்க ஒரு இந்து, அதனால ஒரு முஸ்லிமை கொன்னுருக்கீங்க.


சாகர்: எனக்கு அப்போ அதுமாதிரியான எண்ணம் தான் இருந்துச்சு.


ஜாபா: இப்போ உங்களுக்கு என்ன வேணும்?


சாகர்: மன்னிப்பு.


ஜாபா: உங்க முன்னாடி நின்னுகிட்டு இருக்குறது ஒரு முஸ்லிம்.


சாகர்: என்ன?


ஜாபா: உங்க முன்னாடி நின்னுகிட்டு இருக்குறது ஒரு முஸ்லிம். நீங்க அவளோட மன்னிப்பை கேட்கலாம். இந்த முஸ்லிம்க்கும் அவளோட இனத்தின் சார்பா மன்னிப்பு கேட்கனும்னு தெரியும். 


சாகர்: ஜாபா!


ஜாபா: என்னை மன்னிச்சிடுங்க. என்னோட மனசு திடீர்னு பலவீனம் ஆகிடுச்சு. மனமாற்றமும், பிராயச்சித்தமும் அவசரகதில நடக்க முடியாது. வாழ்க்கைங்குறது பாய்ந்தோடுற நதி மாதிரி, பல வருஷங்களா தொடரும் அந்த ஓட்டித்தின் மண் படிவங்கள்ல இருந்து தான் சின்ன சின்ன தீவுகள் உருவாகும்.


சாகர்: நீ பேசும்போது இப்படியான வலுவான தர்க்கப்பூர்வமான விஷயங்களை எப்படி பயன்படுத்துறன்னு எனக்கு வியப்பா இருக்கு. 


ஜாபா: ஏதோ ஒன்னு என்னை அப்படிச் செய்ய வைக்குறது. வாழ்க்கை, கொஞ்சமும் இரக்கம் இல்லாம எனக்கு நெருக்கமான ஒருத்தரை என்கிட்ட இருந்து பறிச்சிடுச்சு. ஆனா நீங்க உயிரோட இருக்கீங்க. இந்த உலகத்துல இருக்குற எல்லாமே இன்னும் உயிரோட வாழ்ந்துகிட்டு இருக்குறவங்களுக்காக மட்டும் தான். 


சாகர்: மக்கள் எத்தனையோ விதத்துல சாகுறாங்க. நான் மோஷினைக் கொன்ன விதம்ங்குறது இன்னைக்கு அவளோட தங்கை என்னைஅ கொன்ன விதத்துல இருந்து வித்தியாசமானது. 


ஜாபா: சாகர்!


சாகிர்: ஜாபா, நீ என்னைக் கொடூரமான முறையில பழிவாங்கிட்ட!


      (கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது)


கிதீஷ்: (பின்னணியில்) இது தஸ்லிம் ஐயா வீடா?


சாகர்: ஜமாய் பாபு!


     (சாகர் கதவைத் திறக்கிறான். சோர்வுற்றவராய் கையில் ஒரு பையுடன் கிதீஷ் உள்ளே வருகிறார்)


கிதீஷ்: வணக்கம், என் அருமை மச்சான்! (ஜாபாவைப் பார்த்து) நான் உன்னை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேன் தானே?


ஜாபா: டாக்காவுல உங்க வீட்டுல வச்சு. 


கிதீஷ்: ஆமா, பரேஷோட வந்திருந்த. சாகர், உனக்கு பரேஷைத் தெரியும் தான, என்னோட அப்பா வழி ஒன்னுவிட்ட சகோதரன். 


ஜாபா: முதல்ல வாங்க, உட்காருங்க. 


     (கிதீஷ் அமர, சங்கர் உடைமாற்றிக்கொண்டு உள்ளே வருகிறான்)


சங்கர்: அட, கிதீஷ் பாபு! 


கிதீஷ்: குரங்குப் பய மாதிரி நடந்துக்காத! நீயும் பரேஷை போல தானே? உன்னோட நாட்களும் முடிஞ்சிடுச்சு.


      (தாய் வருகிறாள்)


தாய்: இந்தப் பெரிய மனுஷன் யாரு?


சங்கர்: என்னோட ஜமாய் பாபு. டாக்காவுல இருந்து வந்திருக்காரு. 


தாய்: ஜாபா, அவரு குளிக்க கொஞ்சம் சுடு தண்ணி தயார் பண்ணு.


கிதீஷ்: (கவனிக்கத்தவராய்) நீங்க என்ன சொன்னீங்க?


தாய்: ஹாக் சாஹிப் கராச்சில இருந்து வந்துட்டாரா?


கிதீஷ்: (எழுந்துகொண்டு) சங்கர், சாகர், இன்னைக்கு ராத்திரியே நீங்க கொல்கத்தாவுக்கு ரயில் ஏறி ஆகனும். ராணுவ ஆட்சியை அறிவிச்சுட்டாங்க. 


ஜாபா: என்ன?


தாய்: ராணுவ ஆட்சியா?


ஜாபா: நான் பக்கிருதி மாமாவை படகு எடுத்துட்டு வர அனுப்பிச்சிருக்கேன்.


தாய்: ஏற்கனவே அனுப்பிச்சிட்டியா?


ஜாபா: நான் போய் தயாராகுறேன். (சங்கரைப் பார்த்து) உங்க அறிவுரைப்படி  நான் தர்க்கத்தோட சிந்திச்சு என்னோட மனசைப் பலப்படுத்திக்கிட்டேன்.


      (அவள் செல்கிறாள்)


தாய்: ஓ! அல்லா! ஜாபா போயாகணும்.


சாகர்: கிதீஷ் பாபு!


கிதீஷ்: என்ன?


சாகர்: ராணுவ ஆட்சி ன்னா....


கிதீஷ்: கொடுங்கோன்மை, சித்ரவதை, அநீதின்னு அர்த்தம். அமைச்சரவை கலைக்கபட்டுடுச்சு. நாளையில இருந்து டாக்காவுல நடவடிக்கைகள் தொடங்கிடும். ஐக்கிய முன்னணி தொண்டர்கள் ஒளிஞ்சிக்க கிராமங்களை நோக்கி ஓடிக்கிட்டு இருக்காங்க இப்போ.


தாய்: நினச்சுப் பார்க்காத இருட்டு சூழ்ந்திடுச்சு! வாங்க, நீங்க சுத்தமாக, தண்ணி கொண்டு வந்து தரேன்.


கிதீஷ்: சரி, போவோம்.


சங்கர்: அம்மா, அதுக்குள்ள, நான் இன்னொரு அறையில இருக்குற பெட்டிகளை எடுத்துட்டு வரேன். நாம எல்லாத்தையும் எடுத்து வைக்கணும்.  


(தாயும், கிதீஷும் செல்கின்றனர்)


சங்கர்: ஹே!


சாகர்: என்ன?


சங்கர்: அவ கிட்ட சொல்லிட்டியா?


சாகர்: நான் எல்லாத்தையும் கொட்டித் தீர்த்துட்டேன்.


சங்கர்: அவ என்ன சொன்னா?


சாகர்: என்ன சொல்லுவா?


சங்கர்: அவ ஏத்துக்கிட்டாளா?


சாகர்: சங்கர், தன் சகோதரனுக்காக சகோதரி பழிதீர்த்துக்கிட்டா.


சங்கர்: அவ கூட உன்னை கூட்டிட்டு போறத பற்றி என்ன சொன்னா? அப்புறம்...


சாகர்: அப்புறம்?


சங்கர்: ஆமா, நீ சொன்னதுக்கு என்ன சொன்னா அவ?


சாகர்: நான் அவ கிட்ட கேட்கல.


சங்கர்: அவ கிட்ட கேட்கலயா நீ?


சாகர்: இல்ல, நான் சுத்தமா மறந்துட்டேன். மன்னிச்சுடு, நான் அவ கிட்ட ஒரு முறை தான் கேட்டேன், ஆனா அவ பதில் சொல்லல. சங்கர்!


சங்கர்: என்ன?


சாகர்: அவ எனக்கு, என் மீதான அலட்சியத்தைத் தான் மன்னிப்பா கொடுப்பாளா?


சங்கர்: உங்க ரெண்டு பேருக்குள்ள சரியா என்ன பேசிக்கிட்டீங்கன்னு நீ எனக்கு சொல்லவே இல்ல. அப்படி இருக்கும்போது நான் எப்படி சொல்ல முடியும்?


சாகர்: சங்கர், அவ இன்னைக்குப் போகப் போறா. இன்னும் சொல்லப்போனா, இப்பவே போயிடுவா.


சங்கர்: அவ போறதுக்கு முன்னாடி....


        (நான்காம் காட்சியில் அவள் உடுத்தியிருந்த சிகப்பு சேலையை உடுத்திக்கொண்டு ஜாபா வருகிறாள்)


ஜாபா: சங்கர் அண்ணா, இந்து முறைப்படி உங்க காலைத் தொட்டுக் கும்பிட என்னை அனுமதிப்பீங்களா?


சங்கர்: ஏன் அப்படி கேக்குற, குரங்கே?


சாகர்: ஜாபா!


ஜாபா: சாகர், நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும். ஆனா என்னால அதைச் சரியா சொல்ல முடியல.


சாகர்: என் கிட்டயா?


சங்கர்: நான் இங்க இருந்து உத்தரவு வாங்கிக்குறேன். 


ஜாபா: இல்ல, நீங்க இருங்க. சாகர், உங்களுக்கு என்னால என்னோட மரியாதையைச் செலுத்த முடியல.


சாகர்: நீ என்ன சொல்ற?


ஜாபா: தப்பு நடக்குறது சகஜம் தான். ஆனா எல்லாரும் ஒரு காலத்துல அவங்க செஞ்சை தப்பை சரிசெய்ய அவங்க வாழ்க்கையையே அர்ப்பணிக்குறது இல்ல. நீங்க அதை செஞ்சிருக்கீங்க. 


சங்கர்: அது ஏன்னா, சூழ்நிலைகளை நாடகத்தன்மையோட பெருசு பண்ணி பார்க்குற அவனோட இயல்புனால.


சாகர்: ஜாபா? ஜாபா, எனக்கும் உன் கிட்ட கேட்க ஒரு கேள்வி இருக்கு.


ஜாபா: என்ன?


சாகர்: நான் உனக்குத் தந்த வலியை அடக்குற வலிமை உனக்கு எங்க இருந்து வந்துச்சு?


ஜாபா: அதுக்கு என்னோட அன்புக்கு தான் நன்றி சொல்லணும். இன்னும் உயிரோட இருக்குறவங்க மேல எனக்கிருக்குற அன்பு.


சாகர்: அன்புனால மட்டுமே அது சாத்தியமா? ஜாபா!


        (தந்தை, நடுங்கியவாறு உள்ளே வருகிறார்)


தந்தை: என்னால சங்கரைக் கண்டுபிடிக்க முடியல. ஓ! நீ இங்க தான் இருக்கியா! புயல் உருவாகிட்டு இருக்கு.


சங்கர்: புயலா?


தந்தை: ஆமா, மேகங்கள் ரொம்ப தாழ்வா இறங்கிடுச்சு இப்போ! ஜாபா புறப்படும்போது அதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


சங்கர்: அவ தனியா போகல. 


தந்தை: ஆமா, பக்கிருதி அவ கூட இருப்பான்.


      (பக்கிரி வருகிறான்)


பக்கிரி: சின்ன ஐயா, நான் படகைக் கொண்டு வந்துட்டேன். வானிலை ரொம்ப மோசமா தெரியுது. நீங்க வேகமா வந்தாகணும்.


சங்கர்: ஐயா, இது கிதீஷ் பாபு 


தந்தை: வணக்கம், ஐயா! தப்பா எடுத்துக்காதீங்க, உங்களை இந்த நிலைமையில வரவேற்குறது சங்கடமா இருக்கு.


தாய்: பக்ரா, பெட்டி படுக்கைகளை எடுத்து படகுல வை.


      (பக்கிரி உள்ளே செல்கிறான்)


சங்கர்: எங்க பெட்டிகள் எங்க இருக்கு?


தாய்: கிழக்கு அறையில.


சங்கர்: சாகர், வா, போயி எல்லாத்தையும் எடுத்து வைப்போம்.


      (இருவரும் செல்கின்றனர்)


தாய்: ஜாபா, இந்த வீட்டுக்கு மறுபடியும் ஒளிமயமா திருப்பி வர்றதுக்காக நீ இருட்டுல இங்க இருந்து போற! 


தந்தை: மேகங்கள் திரள ஆரம்பிச்சிடுச்சு. 


தாய்: என் கண்ணுல கண்ணீரைப் பார்க்க முடியுதா உங்களால? நான் அதைத் துடைச்சுக்கிறேன். அவங்க போகட்டும். போயிட்டு அமைதியோட திரும்பி வரட்டும். என்னோட நாட்டு மக்கள் எல்லாரும் சந்தோஷமா இருக்கட்டும். மழை மாதிரி நம்ம எல்லாரு மேலயும் நாலா பக்கமும் இருந்து அமைதி பொழியட்டும். 


      (சாகர் திரும்ப வருகிறான்)


தாய்: மகனே சாகர், நீ ஏன் அப்போ, அப்படி ஓடிப் போன? (தந்தையிடம்) உங்களுக்கு தெரியுமா, சாகர் இன்னைக்கு எங்களுக்காக பாட்டு பாடுனான்.


தந்தை: சாகர்.. 'கரையை என்னால் காணமுடியவில்லை'? பாட்டா?


கிதிஷ்: அந்தப் பாட்டா?


தாய்: உங்களுக்கு அந்தப் பாட்டு தெரியுமா, அந்தப் பாட்டைத்ண தான் மோஷின் பாடிகிட்டு இருப்பான்?


கிதிஷ்: ஆமா. 


தாய்: நீங்க எல்லாரும் என் மனசுக்கு நெருக்கமானவங்களா இருக்கீங்க!


தந்தை: ஆனா சாகர் எனக்காக பாடலையே.


தாய்: இவருக்காகவும் பாடு சாகர். இந்த வயசானவருக்கு மட்டும் ஏன் அந்த பாக்கியம் கிடைக்காம இருப்பானேன். (கணவனிடம்) உங்களுக்குத் தெரியுமா, என்னோட கண்களை மூடி சாகர் பாடுறதை கேட்டுகிட்டு இருந்தப்போ, எனக்கு நம்ம பையன் தென்பட்டான்.


       (பக்கிரி கையில் பெட்டி படுக்கைகளுடன் வந்து மேட்டின் மேல் ஏறுகிறான்)


பக்கிரி: காஸியோட பேரைச் சொல்லி, புறப்பட தயாராகு, அன்பு ஜாபா.


சாகர்: ஜாபா!


ஜாபா: என்ன?


சாகர்: நீ இப்போ கிளம்புறியா, ஆனா நீ என் கேள்விக்கு இன்னும் பதிலே சொல்லலையே?


தாய்: சாகர், ஜாபாவோட போக விரும்புறானா?


சாகர்: ஆமா. ஜமாய் பாபு, நான் ஜபாவோட போகனும்னு முடிவு பண்ணியிருக்கேன்.


கிதீஷ்: என்ன?


      (சங்கர், கையில் பெட்டியுடன் வந்து சேர்கிறான்)


சாகர்: இந்த முறை, நான் ஜாபாவோட போகவே விரும்புறேன்.


தந்தை: இவன் என்ன சொல்றான் (தன் மனைவியை பார்த்து) நீ ஏன் எதுவும் சொல்லாம இருக்க?


கிதீஷ்: சாகர், உனக்கு புத்தி கெட்டுப் போச்சா, ஏன் இப்படி உளறிக்கிட்டு இருக்க?


சாகர்: (சங்கரிடம் இருந்து பெட்டியை வாங்கிக்கொண்டு) கிதீஷ் பாபு, வங்காளம் வங்காளிகளுக்கே சொந்தம்னு நீங்க சொல்லுவீங்க. (தந்தையிடம்) அப்புறம், ஐயா, நீங்க சொன்ன அந்த வங்காளிகளோட வாழ்க்கை ஓட்டம் என்ன ஆச்சு?


தந்தை: இங்க பாரு, சாகர். நான் குழம்பிப்போயிருக்கேன். உனக்கு மறுப்பு சொல்ல நான் நினைக்கலேனாலும், என்னோட மனசு ஏத்துக்க மறுக்குது. நான் என்ன செல்ல வரேன்னா, நீயும், ஜாபாவும் சேர்ந்து கிளம்புனீங்கன்னா, அக்கம் பக்கத்துல இருக்குறவங்க இல்லாதது பொல்லாததை கற்பனை பண்ணுவாங்க. என்னோட சமூகத்தை என்னால தாண்டி வர முடியாது. ஆனா, நீ கண்டிப்பா போய் ஆகணும்னா, நீ போகலாம். 


ஜாபா: அப்பா!


தந்தை: பாரு-ம்மா, எனக்கு வயசாகிடுச்சு. என்னை அவசரப்படுத்தாத, என்னால அதைத் தாங்கிக்க முடியாது.


சாகர்: ஜமாய் பாபு!


கிதிஷ்: நான் இப்படி ஒரு சூழ்நிலைக்கு இன்னும் தயாராகல. நீ எவ்ளோ யோசிக்குறியோ, அதைப் போலவே நானும் யோசிக்க வேண்டியிருக்கு.


சாகர்: ஏன்?


கிதீஷ்: மன்னிச்சுடு சகோதரா. உன்கிட்ட சொல்ல எனக்குத் தைரியம் இல்ல. ஆனா ஒரு வித்தியாசம் இருக்கு. என்ன இருக்குன்னே தெரியாம,  இருட்டுக்குள்ள பாயுற யோசனையை என்னால ஆதரிக்க முடியாது. 


சாகர்: அம்மா, நீங்க என்ன சொல்றீங்க?


தாய்: ஒத்திசைவும், முரண்பாடுகளும் எப்படி ஒன்னுக்கு ஒன்னு பக்கத்துல இருக்குங்குறதை பார்த்து புரிஞ்சுக்க நான் விருப்பப்படுறேன். 


சாகர்: ஏன் எல்லாரும் இப்படி மனசில்லாமையே பேசுறீங்க? ஜாபா, இது தான் உன்னோட யதார்த்தம். தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஆபத்து வரும்போது நிறங்கள் மாறிடும். எனக்கு  கத்திகிட்டே எல்லாத்துகிட்டேயும் இருந்து ஓடிப்போயிடனும்போல இருக்கு. சங்கர், ஜாபா, நீங்க உங்க யதார்த்தத்தோட எங்க போகணும்னாலும் போங்க. நான் என்னோட கனவுகளோடயே வாழறேன். 


சங்கர்: விருப்பப்படி யதார்த்தத்துல இருந்து யாரும் விலக முடியாது! சாகர், பெட்டியை என்கிட்ட கொடு.  


     (பெட்டியை அவன் வாங்கிக்கொள்கிறான்)


ஜாபா: சங்கர் அண்ணா!


சங்கர்: இது காத்திருக்க வேண்டிய தருணம். அவங்க ஒருத்தரோட ஒருத்தர் வாழ தயாரா இருக்காங்க ஆனா ஒன்னு சேர தயாரா இல்ல. அவங்க அவங்களோட இந்த புரிதல்களோடயே வாழட்டும். அவங்களோட புனிதங்கள் ஒவ்வொரு நாளும் காக்கப்படட்டும். அதுக்கு அப்பறம் தான் இவங்க ஒன்றுபடுவாங்க. நீ வா, சாகர். 


     (அவன் சாகரின் கையைப் பிடித்து, கீழே இறங்க எத்தனிக்கிறான்)


ஜாபா: சங்கர் அண்ணா!


தாய்: (மேட்டின் மேல் நின்று ஆசீர்வதிப்பதுபோல தன் கையை உயர்த்தி, கிளம்பச் சொல்வதற்காக) பக்ரா, கவியை வாழ்த்து!


பக்கிரி: (இஸ்லாமிய மந்திரத்தை ஓதுகிறான்) காஸி, காஸி, பத்ர், பத்ர்!


    (ஜாபா புறப்படுவதற்கு முன் சில கணங்கள் அசையாது இருந்துவிட்டு, பின்னர்)


ஜாபா: எந்தக் காரணமும், தர்க்கமும் இல்லேனா கூட நாம வெறுமனே காத்துகிட்டு தான் இருக்கனும்னு நீங்க சொல்றீங்களா?


சங்கர்: ஆமா. அதுதான் எல்லா முற்போக்கு சீர்திருத்தவாதிகளோட தலைவிதி. 


       (ஜாபா தன் முகத்தை இரு கைகளாலாலும் மறைத்துக்கொண்டு, படகில் ஏற கீழே இறங்குகிறாள்)


சாகர்: சங்கர், இன்னும் ஜாபா கிட்ட இருந்து நான் தெளிவான பதிலைக கேட்கல. 


சங்கர்: எவ்வளவு சீக்கிரம் பதில் வரும்ங்குறது உன்னோட முதுகெலும்பு எவ்வளவு வலுவா இருக்குங்குறத பொறுத்து தான் இருக்கு. ஒவ்வொருத்தரும் அவங்களோட மதிமயக்கத்துல இருந்து உலுக்கி எழுப்பட்டாகணும். உன் பற்களுக்கு இடையில ஆன்மாவை கொண்டு வந்து, நீ வாய்விட்டு கத்தனும்: "இது அநீதி, இது பொய்மை. உங்களுக்கு இது தெரியும், ஆனாலும் நீங்கள் எழ மாட்டீர்கள். நீங்கள் வீழ்ந்துவிட்டீர்கள், மூழ்கிவிட்டீர்கள்!"


சாகர்: அம்மா? "பசுக்களின் நிறம் எதுவாகினும் அதன் பாலின் நிறம் வெண்மை தான். நான் இந்த உலகை காண்கிறேன், நாம் ஒரு தாய் மக்கள் என உணர்கிறேன்." இதை விட பெரிய பொய் எதுவும் இல்ல! மனிதர்கள் பாசாங்கு நிறைஞ்சவங்க!


தாய்: இல்ல! (அவள் ஓடி வருகிறாள்) பக்கிருதி, படகைத் திருப்பு, இங்க வா திரும்பி 


தந்தை: நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?


கிதிஷ்: ஏன் நீங்க படகைத் திருப்பி கூப்பிடுறீங்க?


தாய்: நான் என்னோட இதயத்துல இருக்குற ரத்தம் அசுத்தம் ஆகுறத விரும்பல. மனிதர்கள் பொய்யானவங்க இல்ல. நாம பரிசுத்தமானவங்க.


ஜாபா: அம்மா! (தாயின் தோள்களை தன் கைகளால் சுற்றி அனைத்துக்கொள்கிறாள்) எனக்குத் தெரியும், அம்மா. எனக்குத் தெரியும். 


சாகர்: சங்கர், பெட்டி எங்க?


சங்கர்: இதோ இங்க இருக்கு. அப்போ, இது உன்னோட தேடலோட முடிவைக் குறிக்குதா?


சாகர்: இது பாதைகளை நடந்து கடக்க வேண்டிய நேரம்.


கிதீஷ்: ஆனா தாயே, நீங்க அவசரப்படுறீங்களோன்னு தோணுது?


தந்தை: அவளைத் தடுக்காதீங்க. 


சங்கர்: நீ இப்போ கிளம்புறியா? சரி, நான் என்னோட நிலத்தோட, என்னோட மனிதத் தாயோட இருக்குறேன்!


ஜாபா: நீங்க கொல்கத்தாவுக்கு போவீங்களா, சங்கர் அண்ணா?


சங்கர்: ஆமா, என்னோட வேலையிடத்துக்கு திரும்பப் போவேன்.


தாய்: சாகர், நீ பாடுறதை என்னால மறுபடியும் கேட்கவே முடியாது!


சாகர்: நீங்க இப்போ கேட்க விரும்புறீங்களா?


ஜாபா: வானம் ரொம்ப மோசமாகிட்டே வருது.


சாகர்: நான் படகுல இருந்தே உச்ச குரல்ல பாடுறேன். 


தந்தை: கிளம்புங்க இப்பவே! போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு.


சாகர்: ஆமா, வா போவோம். நாம முழுமையான இருளைக் கடந்து போகணும். நான் என்னோட முழு குரல்லையும் பாடணும், அப்போ தான் அந்த பாட்டு வீட்டோட முற்றம் வரைக்கும் கேட்கும்.


ஜாபா: பாத்து நடங்க.


      (அவர்கள் புறப்படுகின்றனர்)


தாய்: காத்து ரொம்ப ஈரமா இருக்கு. மழை பெய்யப் போகுது இப்போ.


கிதீஷ்: சங்கர்!


சங்கர்: (மேட்டில் இருந்து இறங்கியவனாய்) என்ன?


கிதிஷ்: அப்போ இந்தக் கதையோட நாயகன் நீ தான் போல. 


சங்கர்: இல்ல அது உண்மை இல்ல. சரி, வாங்க போவோம்


கிதீஷ்: எங்க?


சங்கர்: சாகர், பாட ஆராம்பிச்சுட்டானான்னு போய் பாப்போம். அதுக்கப்புறம் நாம இரவு உணவுக்கு உட்காரலாம். அதுக்கப்புறம், என்ன? ஆ! ஆமா, இரவு ரயில்! கிதீஷ் பாபு, அடுத்த திருப்பத்துல நமக்கு என்ன காத்துகிட்டு இருக்குன்னு ஏதாவது கணிக்க முடியுதா?


கிதிஷ்: அடுத்த திருப்பமா?


சங்கர்: ஆமா.


தாய்: என் அன்பு... நான்.. நான்...


     (சங்கர் அவளது தலையைத் தாங்கிப் பிடிக்கிறான்)


தந்தை: (மேட்டில் இருந்தவாறு) அவன் பாட ஆரம்பிச்சுட்டான்.


தாய்: ஆரம்பிச்சுட்டானா?


      (அவள் மேட்டின் மேல் ஓடிச் சென்று ஏறுகிறாள். சாகர் தனது உணர்ச்சிப்பூர்வமான குரலில் பாடுவது கேட்கிறது)


"படகுக்கார சகோதரா,

சுழற் பாதையில் சுழன்று சோர்ந்தது என் மனம் 

ஆயினும், வீசும் காற்றில் மறைமுகமாய் புதிய விடியலின் நறுமணம் 

வேதனையால் உடைந்தாலும் நெஞ்சம்,  

உடைவதில்லை நம்பிக்கை என்றும் 

என்னோடிருக்கும் மனிதர்கள் ஆயிரமாயிரம் 

நான் புயலுக்கு அஞ்சுவதில்லை என்றும்" 


     (திடீரென வானத்தின் ஊடாக மின்னல் வெட்டுகிறது. மேகங்கள் மோதி  முழங்கத் தொடங்குகின்றன. எல்லோரும் வானத்தைப் பார்க்கின்றனர். பாட்டுடன் நூறு குரல்கள் பின்னணி சேர்க்கின்றன. பாட்டின் கடைசி வரி, மேடையில் உயரமான அலைகளைப் போல எழுகிறது. மேடையில் நால்வரும் அசையாது நிற்கின்றனர். பேரீச்சை மரத்தை உலுக்கியவாறு, புயல் மழை வருகிறது)


-------------- முற்றும்------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"கவிப்பேரரசர்களின் கவியமுதம்" நூலறிமுகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

கரப்பான் அரசியலில் எச்சரிக்கை தேவை -அழகுராஜ் ராமமூர்த்தி

தேடல் பறவை