காய்ந்தது துளிர்த்தது - அழகுராஜ்

 எடுத்த புத்தகத்தை வைக்காமல் வாசித்து முடித்து பல நாட்கள் ஆகிவிட்டன. உடலால் அல்லாது மூளைக்கு வேலை வைக்கும் எந்தவொரு  செயலையும் இடையூறுகளின்றி செய்து பல நாட்கள் ஆகின்றன. அந்தக் குறையை இன்றைய நாளின் தொடர்ச்சியான ஒன்றரை மணி நேரம் போக்கியது.  

       வாசித்த நாவல் "அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்" சின்ன நூல் தான். ஆனால், பைத்தியம் கொள்ள வைத்துவிட்டது. இனி ஒருகாலும் ஆகாதென ஒதுக்கி வைத்திருந்த நினைவுகளைக் கிளறுகிறது. கன்னி நாவலை மீண்டும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தீவிரமாகத் தூண்டுகிறது. ராதிகாவைப் போல மறக்க நினைத்த மரத்தை கிறிஸ்டியைப் போல் எழுதிக் கிழித்து எரியூட்டிய பக்கங்களின் வெப்பம் எனக்குள் தகிக்கிறது. காமம் ஒருவருடைய வாழ்க்கையை என்னவாக மாற்றும் என்பதையும் காதல் எத்தகைய பைத்தியகக்காரத்தனத்தையும் பரிவின் பேரில் நிகழ்த்தும் என்பதையும் எழுத்தாக்கியுள்ளார் மீரா. இந்நாவலில் வரும் கிறிஸ்டியை என்னவென்று சொல்வது. ஒருவேளை பணம் படைத்த செல்வந்தனாக இல்லாமல் போயிருந்தால் கிறிஸ்டி எப்படி இருந்திருப்பான் என யோசித்தால்  இமையத்தின் 'எங்கதெ' , சி. மோகனின் 'கமலி' போன்ற படைப்புக்களின் வகையில் இதுவும் ஒன்று என வைக்கத் தோன்றும், ஆனால் அவற்றை வாசித்தபோது நான் வாழ்க்கையில் சந்திக்காத சில அனுபவங்களை 'அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான் ' நாவலை வாசிக்கும்போது சந்தித்து ஓய்ந்திருக்கிறேன்.

         தொடுதலுற்ற காமம் இந்நாவல்களின் ஊடு இழைகள் என்றால் என்னிடமிருப்பவை தொடுதலற்ற உரையாடல்கள். அவை வாழ்க்கை முழுவதற்குமான பொருள் பொதிந்தவை. பொருளற்ற சூன்யமானவை. தகதகவென உள்ளத்தை எரிய வைப்பவை. எரிந்து சாம்பலாய் பறந்து கரைந்து போனவை. இன்று மீண்டுமாக வேர்விடத் தொடங்கியிருப்பவை. என்றோ ஒருநாள் பட்டுப்போனவை. நிற்க....

       எதையோ தேடிப் பேய்  ஆகஸ்ட் 32 என்ற நைஜீரிய படம் ஒன்றையும் இன்று பார்க்க நேர்ந்தது. இந்த நாவலாக இருந்தாலும் அந்தப் படமாக இருந்தாலும் சிறுவயதில் புணர்ச்சிக்கு உட்படுத்தப்படும் சிறுமியின் வாழ்க்கையே மையம். இன்று தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் வன்கொடுமைகளுள் தலையெடுத்து ஆடும் பிரச்சினையாக இதுவே உள்ளது. இதில் சிலர் உடலளவில் கொலை செய்யப்படுகின்றனர். வேறு சிலர் மனதளவில் கொலைக்குள்ளாகி தன் வாழ்வின் முக்கியமான பகுதிகளில் கொலையின் வேதனையைத் திரும்பத் திரும்ப அனுபவிக்கின்றனர்‌. கலைக்கும் இலக்கியத்திற்குமான பணி இந்த இடத்திலேயே தேவைப்படுவதாகிறது. நினைவூட்டலுக்கான கருவியாக இச்சமூகத்தைத் தொடர்ந்து அறிவுறுத்தும் கடமைக்கு உரியனவாக கலையும் இலக்கியமும் செயல்படுவதற்கான தேவை எழுகிறது.

 -அழகுராஜ்


ஆகஸ்ட் 32 

https://youtu.be/1Jx8U6qkcHI?si=CLPgc6_95ZVhz58X


"யாருக்கும் யாரிடத்திலும் அன்பு இல்லை. என்ன கிடைக்கும் என்று யோசனை செய்து கொண்டு தான் மனிதர்கள் ஒருவருக்கொருவர் புன்சிரிப்பு செய்வதும் கூட" - கே. ஆர். மீரா (தமிழில் - சிற்பி பாலசுப்பிரமணியம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"கவிப்பேரரசர்களின் கவியமுதம்" நூலறிமுகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

கரப்பான் அரசியலில் எச்சரிக்கை தேவை -அழகுராஜ் ராமமூர்த்தி

தேடல் பறவை