கருப்பு நதி (முதல் அலை -இரண்டாம் காட்சி) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

கருப்பு நதி (முதல் அலை - இரண்டாம் காட்சி) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

 இரண்டாம் காட்சி


       (அதே நாள், சில மணி நேரத்திற்குப் பின். சாகர் படுக்கையில் ஒரு புறமாக படுத்திருக்கிறான். சிறுவன் சுத்தமான வெள்ளை வேட்டியை (தோத்தி) அணித்திருக்கிறான். 

சாகர்: அந்த உடைகளை மேஜை மேல வை. 

சிறுவன்: (உடைகளை மேஜை மேல் வைத்துவிட்டு) நாம வேற அறைக்குள்ள போகப் போறது இல்லையா?

சாகர்: அந்த அறைக்குள்ள இருக்குறதை சவுத்ரி வீட்டுல இருந்து பார்க்க முடியும். அதுமட்டுமில்லாம அந்த அறையில இருக்குற ஜன்னலுக்கு கதவுகளே இல்ல..... உன் பேரு என்ன?

சிறுவன்: மோஷின். முகமது மோஷின். உங்க நண்பர் எப்போ திரும்பி வருவாரு?

சாகர்: நண்பரா?

மோஷின்: சங்கரைப் பற்றி நான் கேக்குறேன். 

சாகர்: சங்கர் எங்க அம்மா வழி சகோதரன். அது இருக்கட்டும், இந்தப் பகுதி இந்துகள் அதிகமா இருக்குற இடம்னு உனக்குத் தெரியாதா? இல்லைனா, கலவரம் தொடங்குன தகவல் உனக்குத் தெரியாதா?

மோஷின்: எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. இது இந்துகள் பகுதின்னும் தெரியாது, கலவரம் தொடங்குனதும் தெரியாது. நான் இன்னைக்கு காலையில தான் கொல்கத்தாவுக்கே வந்து இறங்குனேன். 

சாகர்: அந்த இன்னொரு பையன் யாரு?

மோஷின்: அவனா? அவன் என்னோட நண்பன். நாங்க ரெண்டு பேரும் டாக்கா பல்கலைக்கழகத்துல ஒன்னா படிச்சோம். 

சாகர்: கொல்கத்தாவுக்கு ஏன் வந்தீங்க?

மோஷின்: நான், அகில இந்திய இசை கருத்தரங்கத்தைத் தவறவிட்டுட்டேன். ஆனா எல்லா விற்பன்னர்களும் இப்போ கொல்கத்தாவுல இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அதனால இங்க ஏதாவது இசை கூட்டம் நடந்தா கலந்துக்கலாம்னு வந்தேன். 

சாகர்: இசையா?

மோஷின்: ஆமா, ரஷீதுக்கு (நண்பன்) அற்புதமான குரல். அவன் செத்துட்டான்னு அவங்க அம்மாவுக்கு தெரிஞ்சா அவங்க உடைஞ்சு போயிடுவாங்க. 

சாகர்: உங்க அம்மா இன்னும் உயிரோட இருக்காங்களா?

மோஷின்: இருக்காங்க. அப்பாவும், தங்கச்சியும் கூட இருக்காங்க. என்னோட அப்பா கிராம பள்ளிக்கூட தலைமை ஆசிரியரா இருக்காரு. நீங்களும் பாட்டு பாடுவீங்களா? (என சாகரிடம் கேட்டவாறு அவன் தம்புரா அருகே சென்று அதன் கம்பிகளைக் கையால் மீட்டுகிறான்). உங்களுக்கு எங்க அப்பாவைத் தெரிஞ்சிருக்கலாம். அவரு டாக்காவுல சித்தார் வாத்தியக்காரர் பகவான் கூட ஒண்ணா வாசிச்சுக்கிட்டு இருந்தாரு. எங்க அப்பா பேரு, தஸ்லிம் மியா பாக்வாஜி. 

சாகர்: ஆமா. நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். இன்னும் அவர் வாசிக்கிறாரா? 

மோஷின்: இல்ல. அவருக்கு இப்போ வயசாகிடுச்சு. இப்போலாம் அவர் கிராமத்துலயே இருக்காரு. வரலாற்று ஆய்வு பண்றதுல அதிக நேரம் செலவழிக்குறாரு. அவர் ஆய்வோட கருப்பொருள் வங்காளிகளும், வங்காள மொழியும். உங்க பேரு சாகர் தானே? ரொம்ப விசித்திரமா இருக்கு!

சாகர்: என் பேரா?

மோஷின்: இல்ல. நான் தற்செயலான ஒரு விஷயத்தை பற்றி சொல்றேன். நான் 1946ல இதே கொல்கத்தாவுல இன்னொரு சாகரை கிட்டத்தட்ட இதே மாதிரியான நிலைமையில சந்திச்சேன். சாகர்ங்குறது அதிகம் புழங்குற பேரு இல்லை தானே?

சாகர்: நீ பாடுவியா?

மோஷின்: ஏதோ கொஞ்சம். 

சாகர்: காயல் பாடுவியா?

மோஷின்: காயலும், துருபதும் பாடுவேன். பான்கே மகராஜோட பள்ளியில நான் துருதப் கத்துக்கிட்டேன். 

சாகர்: தசரதும் மத்த போக்கிரிங்களும் அக்கம்பக்கத்துல எப்ப வேணாலும் தேட ஆரம்பிச்சுடுவாங்க. நீ என்ன பண்ணப் போற?

மோஷின்: நீங்க இருக்கீங்களே. 

சாகர்: அதான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன். நீ கிராமத்துல வாழ்றவன், சரிதான?

மோஷின்: என்னோட அப்பா, அம்மா கிராமத்துல வாழ்றாங்க. அதைக் கிராமம்னு சொல்ல முடியாது. அதை சின்ன டவுன்-ன்னு வேணா சொல்லலாம். அது நகரத்துக்கு வெளியில இருக்குற ஒரு புறநகர் கிராமம். நாங்க எங்களோட விடுமுறைகளை அப்பா அம்மாவோட கழிப்போம். 

சாகர்: நாங்களா? 

மோஷின்: நானும் என்னோட சகோதரியும். அவ டாக்காவுல இருக்குற கல்லுரியில படிக்குறா. 

சாகர்: வங்கதேசம் ரொம்ப அழகான இடம், சரி தானே?

மோஷின்: ஆமா. அது ரொம்ப அழகானது. 

சாகர்: நீ கிராமத்துல இருந்திருக்க. ஆனா நான் ஒரு உண்மையான வங்கதேச கிராமத்தை நேர்ல பார்த்ததே இல்ல. 

மோஷின்: நீங்க அதைப் பார்த்திருந்தீங்கனா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பீங்க. 

சாகர்: நான் ஒவ்வொரு முறை வங்கதேசத்தை பற்றி நினைக்கும்போதும் அதோட பலவகை வண்ணங்களை பற்றி கற்பனை பண்ண ஆரம்பிச்சுடுறேன். ஆனா அது எல்லாமே கற்பனை மட்டும்தான். நான் கொல்கத்தாவை விட்டு வெளிய போனதே இல்ல. அதனால தான் வங்கதேசத்தை பற்றி நினைக்கும்போதெல்லாம் நான் ரொம்ப அமைதியில்லாதவனா ஆகிடுறேனோ என்னவோ.

மோஷின்: இருக்கலாம். 

சாகர்: கிராமங்கள்ல பாடப்படுற நாட்டுப்புறப் பாடல்கள் உனக்குத் தெரியுமா? இல்ல அதைப் பாட நீ முயற்சி செஞ்சதே இல்லையா?

மோஷின்: அதைப் பாடாம இருக்குறது சாத்தியமே இல்ல. வங்கதேசத்தோட அந்த இதமான பாடல்கள் பலவிதமா, வெவ்வேறு வகையில இருக்கும்! நம்ம நதிகள், விளைநிலங்கள், மரங்களோட வரிசைகள்ல எல்லாம் நிறைஞ்சிருக்குற அந்த வகை பாட்டுகளையும், மெட்டுகளையும் பற்றி யாரும் கற்பனையே பண்ணி பார்க்க முடியாது. அந்த அளவுக்கு இருக்கும். அது எல்லாத்தையும் என்னால பாட முடியாது தான்!

சாகர்: (எழுந்து சென்று தம்புராவை எடுத்து வந்து) ஒரு பாட்டு பாடேன். 

மோஷின்: இங்கயேவா? 

சாகர்: ஆமா, ஏன் கூடாது?

மோஷின்: எனக்கு ரொம்ப பண்பட்ட குரல் இல்ல, இன்னும் அது சாதாரணமான நிலையில தான் இருக்கு.

சாகர்: அதெல்லாம் ஒன்னும் யோசிக்காத. நான் உன் கூட இருக்கேன். 

மோஷின்: சரி. நீங்க என் கூட இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். இந்தப் பாட்டு உங்களுக்குப் பிடிக்குதா இல்லையான்னு பாப்போம். ஆனா இந்தப் பாட்டு எனக்கு அவ்வளவு முழுமையா தெரியாது. ஒரு நாள், நான் பைரவ் பஜாருக்கு போறதுக்காக மேக்னா நதியை படகுல கடந்து போய்க்கிட்டு இருந்தேன். அந்த ராத்திரி நேரத்துல மேக்னா அமைதியில்லாம அலைபாய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு. அந்த இருட்டுலயும், அலைகளோட வெண் நுரைகளை என்னால பார்க்க முடிஞ்சது. படகு அசைஞ்சு ஆடி போய்கிட்டு இருந்துச்சு. நாங்க இடைவெளி இல்லாம ரொம்ப நேரமா போய்கிட்டே இருந்ததுனால அந்த பயணம் ஒரு கட்டத்துல ஒரே மாதிரியா சலிப்பூட்டக்கூடியதா இருந்துச்சு. அப்போ, திடீர்ன்னு எங்கயோ தூரத்துல இருந்து ஒரு இதமான பாட்டு கேட்டுச்சு. அந்த குரல்ல இருந்த இனிமை நதிகளைக் கடந்து அந்த வெறுமையான வானத்தை நிரப்புற மாதிரி இருந்துச்சு. அந்தப் பாட்டு, முடிஞ்சுபோன ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த கவிஞனால எழுதப்பட்டது. அந்தப் பாட்டு முழுசையும் என்னால புரிஞ்சிக்க முடியாததுனால, எனக்கு புரியாத இடங்களை நானே இட்டு நிரப்பிக்கிட்டேன். பன்னெடுங்காலங்களா, இதுமாதியரான பாட்டுகள் என்னோட சக நாட்டவர்களோட ஆசாபாசங்களை பின்னி வந்திருக்கு. அடையாளம் தெரியாத ஒரு படகுக்காரன் பாடுன அந்தப் பாட்டு மேக்னா நதியில அந்த இரவோட தன்மையோட சேர்ந்து ரம்யமான முறையில கச்சிதமா பொருந்தியிருந்துச்சு. அங்க உட்கார்ந்துகிட்டு, என்னால என்னோட உணர்வுகளை என்னன்னு சரியா வெளிப்படுத்த கூட முடியல. சரி, இப்போ நீங்க ஒரு இசையை மீட்டுங்க, நான் பாடுறேன். 

     (பேசியபடி அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்த மோஷின், அறையின் நடுவே வந்து சாகருக்கு தன் முதுகைக் காட்டியவண்ணம் திரும்பி நிற்கிறான். அவன் இசையை எதிர்பார்த்து காத்திருக்கிறான். சாகர் தம்புராவின் கம்பிகளை மீட்டத் தொடங்குறான். அந்த இசையை இனம்கண்ட மோஷின் சாகர் பக்கம் திரும்பி, பாடத் தொடங்குகிறான்.)

மோஷின்: (பாடல்)

"என் படகுக்கார சகோதரா, நல்ல படகோட்டியே! 

என்னால் கரையைக் கண்டடைய முடியவில்லை 

கருப்பு மேகங்கள் என் பாதையை மறைக்கின்றன 

பின்தொடர எத்திசையும் எனக்கில்லை 

வழி தேடி அலைபாய்கிறேன்

இனியவளின் கருங் கூந்தல் மேகமாய் விரிய 

அவள் பால் ஆடை அழகு என் கண்களை சிறையெடுக்கிறது  

மனதின் பூட்டு உடைபட்டு பைத்தியமானேன் நான் 

உன்னை அடைய முடியாமல் தவிக்கின்றேன்  

மேகங்கள் சூழ்ந்த வானத்து இருளில் 

திசை தெரியாது அலைகின்றேன் 

நெஞ்சை நிறைக்கிறது துக்கம் 

மனதின் பாரம் தாங்காது சுழல்கின்றேன் 

என் கண்ணின் ஒளி அழிய

இருள் கவிய 

கரைசேரும் வழியின்றி 

சேருமிடம் தெரியாமல்

வட்டமிடுகின்றேன் இந்த நதிஇருளில்" 

     (சாகரும் மோஷினுடன் சேர்ந்து பாடத் தொடங்க, மோஷின் வெட்டகத்தில், பாடுவதை நிறுத்தி புன்னகைக்கிறான்)

மோஷின்: உங்களுக்கு நல்ல குரல். இந்தப் பாட்டை கத்துக்க ஆசையா?

சாகர்: ஆமா. 

மோஷின்: அப்போ என்னோட சேர்ந்து பாடுங்க. (சாகரை தனதருகில் அமரச் செய்து) 'என் படகுக்கார சகோதரா! நல்ல படகோட்டியே! என்னால் கரையைக் கண்டடைய முடியவில்லை!..' ஆமா, அப்படித் தான், அந்த இடத்துல தான் வளைக்கணும், ஆனா அது கிளாசிகலா மாறிடாம பாத்துக்கணும். பாட்டோடை தாளத்தை சரியா பிடிச்சுக்கோங்க. அப்படித் தான்! பிரமாதம்!

       (உற்சாகத்தில் மோஷின், சாகருக்கு இன்னும் அருகில் சென்று அமர்கிறான். இருவரும் சேர்ந்து பாடிக்கொண்டிருக்க, கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. மோஷின் திடுக்கிட்டு வேகமாக எழுந்து நிற்கிறான். சாகரும் திடுக்கிட்டவனாய் எழுகிறான். மோஷின், இதன்முன் அவன் ஒளிந்திருந்த பெட்டிகளுக்கு பின்னால் செல்கிறான். சாகர் மிக கவனமாக கதவை திறக்கிறான். சங்கரும் கிதீஷ் பாபுவும் உள்ளே நுழைகின்றனர். கிதீஷ் பாபு மிகவும் சுறுசுறுப்பான நபராக தென்படுகிறார். சங்கர் நேராக மேஜையை நோக்கி செல்கிறான்.  

கிதீஷ்: மைத்துனரே வணக்கம்! பாட்டுல மும்முரமா இருக்க போல?

சாகர்: ஆமா. 

கிதீஷ்: நீரோவுக்கு அப்புறம் நீ தான்.

      (சாகர், கதவைப் பூட்டச் செல்கிறான்) 

சங்கர்: கதவைப் பூட்டிடாத. தபால்பெட்டியில ஒரு கடிதம் இருக்கு. (கதவில் இணைக்கப்பட்ட தபால்பெட்டியில் இருக்கும் கடிதத்தை எடுக்கிறான் சங்கர். அதைப் பார்க்கும் அவன்) இது உனக்காக வந்தது தான். (அதை அவன் சாகரிடம் கொடுக்கிறான். சாகர் கடிதத்தைப் பிரித்துக்கொண்டிருக்க, சங்கர் சென்று கதவை அடைக்கிறான்) நீ இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். 

சாகர்: என்ன? 

சங்கர்: நீங்க ரெண்டு பேரும் பாடுறதை அக்கம் பக்கத்துல எல்லாரும் கேப்பாங்க. அதுமட்டுமில்ல, அந்தப் பையனோட உடைகள் வரவேற்பரை முழுக்க அங்கங்க சிதறி கிடக்கு. உனக்கு கூறே இல்லையா?

கிதீஷ்: என்ன விஷயம்? 

சங்கர்: ஏய், எங்க இருக்க நீ? பரவாயில்ல, நீ பயப்படாம வெளிய வரலாம். அந்த அறைக்குள்ள இருக்காத, அங்க இருக்குற ஜன்னல் திறந்திருக்கு. 

சாகர்: அவன் அந்த அறையில இல்ல. 

சங்கர்: அதுவரைக்கும் சந்தோஷம். 

கிதீஷ்: என்ன விஷயம் பசங்களா? சீக்கிரம் ரகசியத்தை உடைங்க. 

சங்கர்: கிதீஷ் பாபு, ஒரு முஸ்லிம் பையனை இன்னைக்கு காலையில நம்ம தெருவுல துரத்திக்கிட்டு இருந்தாங்க. கதவுகளை நான் உள்ள இருந்து தாழ்ப்பாள் போடலைனு எனக்குக் கண்டிப்பா தெரியும். அதை மறக்குற அளவுக்கு எனக்கு ஒன்னும் வயசாகிடல. 

சாகர்: மோஷின் 

கிதீஷ்: மோஷின்!

சங்கர்: ஆமா, மோஷின் தான்! எங்க இருக்க மோஷின்? பெட்டிகளுக்குப் பின்னாடி ஒளிஞ்சிருக்கியா? வெளிய வா சகோதரா. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா தெரிஞ்சுக்குவோம். 

       (மோஷின் வெளியே வருகிறான். சங்கர் அவன் வருவதைப் பார்க்கிறான்.)

சாகர்: ஜமாய் பாபு (மாமா கிதீஷைப் பார்த்து), மோஷின், நீங்க இருக்குற அதே டாக்காவைச் சேர்ந்தவன்.  

சங்கர்: உனக்கு இனிமையான குரல் இருக்கு. 

மோஷின்: நீங்க கேட்டுட்டு இருந்தீங்களா?

சங்கர்: உன் பாட்டை முழுசா கேக்குற வாய்ப்பு எனக்கு கிடைக்கல. நான் கதவைத் தட்டும்போது கொஞ்சம் மட்டும் கேட்டேன்.

கிதீஷ்: பாவம் இவன். எப்படி இந்தப் பகுதியை விட்டு வெளிய போகப் போறான்?

சங்கர்: கவலைப்படாதீங்க. சாயந்தரம் அதுக்கான ஏற்பாடுகளைச் செய்வோம். ஆனா (திடீரென மோஷின் கட்டியிருந்த வேட்டியின் முனையை இழுத்து பார்த்துவிட்டு, சாகரைப் பார்த்து) டேய் படவா, நான் சுத்தம் பண்ணி வைச்ச என்னோட தோத்தியை இவனுக்கு கொடுத்து ரொம்ப தாராளம் காட்டியிருக்க போல. இப்ப நான் எதை உடுத்துறதாம்?

சாகர்: அட, விடுப்பா. இதெல்லாம் ஒரு பிரச்சனையா. நீ வர ஏன் இவ்ளோ நேரம் ஆச்சு? அதச் சொல்லு. 

சங்கர்: நான் இந்த கிதீஷ் பாபுவைக் கட்டி மாறடிக்க வேண்டியதாகிடுச்சு. இவர் ஓட்டல் படுக்கையை விட்டு எழுந்திருப்பேனான்னு, அதுலயே கிடையா கிடந்து டஜன் கணக்குல கப்பு கப்பா டீ குடிசிட்டு இருந்தாரு. அப்புறம், குளிக்கப் போனாரு. நான் அறையிலேயே உட்கார்ந்துகிட்டு இருந்தேன். நாக்கைச் சுத்தம் செஞ்சு வாய்கொப்பளிக்கிற சத்தமும், அப்பப்போ பாட்டுச் சத்தமும் தான் உள்ள இருந்து கேட்டுட்டு இருந்துச்சு. ஒரு வழியா எல்லாம் முடிஞ்சு அறையை விட்டு கிளம்பி நடந்து வரப்போ, பார்க் சர்க்கஸ் மைதானத்துக்கு பக்கத்துல கொஞ்ச நேரம் நின்னுட்டாரு. 

கிதீஷ்: என்னோட இந்த மச்சான் பேச ஆரம்பிச்சான்னா ஏதோ உலகத்தைப் பற்றி முழுசா புரிஞ்ச அறிவுஜீவி மாதிரி தோணும். ஆனால் உண்மையில இவன் ஒரு அறுத பழைய தத்துவஞானியா மெல்ல மாறிக்கிட்டு வாரான். இவனுக்கும் எங்க டாக்கா நீதிமன்றத்துல இருக்குற நீதிபதிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு. 

சங்கர்: சரி, அந்த விஷயத்தை முடிங்க. 

கிதீஷ்: என்ன விஷயம்?

சங்கர்: இவர் மனசுல என்ன ஓடிக்கிட்டு இருக்குன்னு எனக்கு முதல்ல இருந்தே தெரியும். வர வழி பூராவும் இவரோட ஒன்னுவிட்ட தங்கச்சியோட குணத்தை பற்றி என்கிட்ட சொல்லிக்கிட்டு வரும்போதே நான் புரிஞ்சுக்கிட்டேன். ஒன்னும் பிரச்சனை இல்ல. அவளையே அந்த விஷயத்துல முடிவெடுக்க சொல்லுங்க. 

கிதீஷ்: என்ன விஷயம்?

சங்கர்: கொஞ்சம் பொறுங்க.. என்னைப் பேசவிடுங்க. நாள பின்ன ஏதும் என் மேல குறை சொல்லக் கூடாது, இப்பவே சொல்லிட்டேன். நான் தப்பா எதுவும் சொல்லல. அவளே முடிவு பண்ணட்டும். ஆனா குழந்தைங்க பிறந்ததுக்கு அப்புறம் அதுங்க அவளோட பொறுப்பு தான். 

கிதீஷ்: அடக் கடவுளே! நீ என்னப்பா சொல்லுற?

சங்கர்: சரி, வேணா அதுல ஒரு திருத்தம் பண்ணுறேன். குழந்தைகளை வளர்க்குற பொறுப்பு அவளோடது. அவளுக்கு புருஷனா இருக்குறதோட என்னோட மட்டும் கடமைகள் முடிஞ்சு போயிடும். நீங்க சுகுமார் ரே-யை வாசிச்சிருக்கீங்களா?

கிதீஷ்: ஏன்?

சங்கர்: அது, பாபுராம் அப்பிடிங்குற பாம்பாட்டியைப் பற்றி ன பழைய கதை. இப்போலாம் கொல்கத்தாவுல இருக்குற ஆயிரம் ஆயிரம் திருமணமாகாத இளைஞர்களுக்கு பாம்போட விளையாடுறது ஒரு கவர்ச்சியா மாறியிருக்கு. அதுவும் கடிக்காத பாம்புங்க, படம் எடுக்காத, ஹிஸ்ஸ்னு சத்தம் போடாத பாம்புங்க மேல அவங்களுக்கு விருப்பம் அதிகம். இதைச் செய்யுறத தவிர இப்ப இருக்குற கஷ்ட காலத்துல கல்யாணம்ங்குற ஆடம்பரத்தை எல்லாம் நம்மால நினைச்சுப் பாக்க முடியுமா என்ன? அப்புறம், கல்யாணப் பற்றி ரத்துல அந்தப் பொண்ணோட சரியான வயசை குறிப்பிடனும்னு சொல்ல மறந்துடாதீங்க. ஒருவேளை அவ மைனரா இருந்து ஏதாவது தந்திரம் பண்ணி அதை மறைச்சா, நாள பின்ன என்ன பிரச்சனை வரும்னு எனக்குத் தெரியும். 

கிதீஷ்: நீ பேசுறதை வச்சு என்னால என்ன புரிஞ்சிக்க முடியுதுனா, உன்னோட எலும்புகள் கூட இலகுவா மாறியிருக்கு. உனக்கு இப்போ தேவையானது எல்லாம் ஒரு அக்கறையான முகத்தோட கதகதப்பு தான். 

சங்கர்: மாமா, நீங்க இப்படியெல்லாம் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியதில்ல.  

சாகர்: சரி வாங்க சாப்பிடுவோம். எனக்கு ரொம்ப பசிக்குது. 

சங்கர்: கிதீஷ் பாபு, ஏன் எலும்புகள் மட்டும், என்னோட மஜ்ஜைகள் கூட இலகுவானதா மாறிடிச்சு. நீங்க செய்ய வேண்டியதெல்லாம் நிலைமை என்னனு தெரிஞ்சுக்க கொஞ்சம் தட்டி பாக்குறது மட்டும்தான். பெண்களை பற்றி கேக்குறபோதெல்லாம் என்னோட நெஞ்சாங்கூட்டுல இருந்து ஒரு சீரான பெருமூச்சு கிளம்புது. இரவு நீண்டுகிட்டே போனா, எனக்குள்ள இருக்குற கொந்தளிப்பை நான் எவ்வளவு நேரம் தான் எனக்குள்ளேயே அடக்கி வைக்க முடியும் சொல்லுங்க?

சாகர்: இதெல்லாம் என்ன பேச்சு, சங்கர்? மோஷின் இன்னும் எதுவுமே சாப்பிடல. 

சங்கர்: ஓ! சரி. ஹாஜி முகமது மோஷின், வாங்க போய் சாப்பிடலாம். நான் இவனைக் கூட்டிட்டுப் போறேன். நீங்க ரெண்டு பேரும் பின்னாடியே வந்து சேருங்க. சரி, மோஷின், நான் சொல்லுறதை உன் மண்டையில தெளிவா ஏத்திக்கோ. நீ மோஷின் கிடையாது. நீ என்னோட மாமாவோட சின்னத்தம்பி, சச்சின்.

மோஷின்: யாரோட? இவரோடயா?

கிதீஷ்: என் சின்னத்தம்பி சச்சினா? இங்க பாரு, சங்கர், இவன் உன்னோட ஒன்னுவிட்ட தம்பி, இல்ல ரெண்டு விட்ட தம்பினு ஏதாவதா இருக்க முடியாதா?   

சங்கர்: இல்ல. அது சாத்தியம் இல்ல. நீ வா, சச்சின். 

     (மேஜையில் குவிந்து கிடந்த உடைகளை எடுத்துச்சென்று அறையின் மூளையில் கொண்டுபோய் போட்ட சங்கர், மோஷினை அழைத்துக்கொண்டு அடுத்த அறைக்குச் செல்கிறான்.)

சாகர்: இவன் சரியான போக்கிரி. 

கிதீஷ்: ஆமா. எந்தக் கவலையும் இல்லாத சந்தோஷமான போக்கிரி. இவனோட நகைச்சுவை உணர்வு இன்னும் இவனை விட்டு போகல. இவன் உண்மையிலேயே ஒரு நல்ல இளைஞன். 

சாகர்: மிலி கிட்ட இருந்து ஏதும் செய்தி வந்துச்சா?

கிதீஷ்: காலை மெயில் எனக்கு இன்னும் வந்து சேரல. நான் கொஞ்சம் சீக்கிரமா போயிட்டேன். 

சாகர்: இவ்ளோ நேரமும் எங்க இருந்தீங்க?

கிதீஷ்: நான் பார்க் சர்க்கஸ் மைதானத்துல பல மணிநேரம் செலவிட்டேன். நான் அங்க என்ன பாத்தேன்னு உன்னால நினைச்சு கூட பாக்க முடியாது. 

சாகர்: அங்க நிறைய ஆளுங்க இருந்துப்பாங்க, அப்படித்தான. 

கிதீஷ்: ஆமா. வீடுகளை இழந்தவங்க, வெவ்வேறு இடங்கள்ல இருந்து நேத்து ராத்திரில இருந்து அங்க வந்து குவியத் தொடங்கியிருக்காங்க. 

சாகர்: நேத்து ராத்திரி ரொம்ப குளிரா இருந்திச்சு வேற. 

கிதீஷ்: ராத்திரி முழுக்க ஜனங்க அங்கு வந்துகிட்டே இருந்தாங்க. ஆயிரம் ஆயிரம் பெண்கள், குழந்தைகள் கிழிஞ்ச துணியுடுத்தி அந்தக் காலி மைதானத்துக்கு வந்து அங்க இருக்குற கொன்றை மரங்களுக்கு அடியில இடம்பிடிச்சு இருந்துகிட்டாங்க. நிறைய பெண்கள், பூங்காவோட கம்பி வேலி ஓரமா படுத்திருந்தாங்க. அவங்க புர்காக்ககள் கிழிஞ்சிருந்துச்சு. இந்தப் பெருங்குழப்பத்துல இருந்து அவங்களால எதைத் தான் காப்பாத்திக்க முடியும். அங்க அவங்க தூங்கல. குளிருல நடுங்கிகிட்டு இருந்தாங்க. அவங்க கண்கள் ஒளியிழந்து விரக்தியை வெளிப்படுத்துச்சு. இரவு விழுந்த பனியில அவங்க உதடுகள் நீல நிறமேறி இருந்துச்சு. இதெல்லாம் ஏன் நடக்குது, சாகர், ஏன்?  

சாகர்: ஏன்?

கிதீஷ்: இது நியாயமே இல்ல. நான் அவங்களை பார்க்க பூங்காவைச் சுத்தி சுத்தி வந்தேன். அக்கம்பக்கத்துல இருந்து அவங்களுக்கு கொடுக்குற உதவிகள் போதாது. எல்லாத்தையும் இழந்த அந்த மக்களுக்கு உதவிப்பொருட்களை விநியோகிச்சிட்டு இருந்த உள்ளூர் மக்களோட நானும் சேர்ந்து அந்தப் பணியில ஈடுபட்டேன். அந்த நிலைமை எனக்கு டாக்காவை தான் மறுபடியும் மறுபடியும் நினைவுபடுத்துச்சு. ஒரு வேலை அதே மாதிரி விதி, மிலிக்கும் எங்க குழந்தைக்கும் காத்திருந்தா என்ன செய்யுறது? அவங்களுக்கு உதவி கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஒரு வேலை அவங்க இன்னும்... சரி. நான் சாப்பிடப் போறேன். சாகர். 

      (கிதீஷ், அடுத்த அறைக்குச் செல்கிறார். சாகர் அவரைப் பின்தொடர எத்தனிக்கும்போது, அவனுக்கு வந்த கடிதம் நினைவுக்கு வருகிறது. அதை மேஜையில் இருந்து எடுக்கச் செல்லும்போது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. அவன் வீட்டின் உள் அறைக் கதவை பூட்டிவிட்டு, வெளிக்கதவை திறக்கிறான். அங்கே வாசற்படியில் லேசான மதுபோதையில் நிற்கும் தசரத் மற்றும் அவனுடன் நிற்கும் சவுத்ரியை அவன் காண்கிறான்.)

சவுத்ரி: மதியம் தாண்டிடுச்சு, நீ கிளம்ப நேரம் ஆகிடுச்சு தசரத். 

தசரத்: வாய்ப்பே இல்ல. தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியாகணும். 

சவுத்ரி: ஆனா ஏன் சாகரோட இடத்துல நின்னுகிட்டு இதை பேசிகிட்டு இருக்க? அவன் இங்க இல்லவும் இல்ல, சாகர் அவனை ஒளிச்சி வைக்கவும் இல்ல. 

தசரத்: நம்மால எதையும் உறுதியா சொல்ல முடியாது. சில நேரம் நம்ம மூளை நம்மை ஏமாத்திடும். அவனைக் கொலை செஞ்ச பிறகு நான் சந்தோஷமா உணர்ந்தேன்னா நீங்க நினைக்கிறீங்க. என்னை பொறுத்தவரைக்கும் அப்படி இல்ல, தாதா. நான் கொலை செய்ய ஓடோடிப் போவேன், ஆனா, என்னோட சொந்த சோகக் கதையை சொல்லத் திரும்ப வருவேன், அப்புறம் மறுபடியும் ஓடோடிப் போவேன். 

சவுத்ரி: நான் இப்போ கிளம்பியாகணும்.  

தசரத்: (தசரத் அவரைச் செல்ல விடாமல், அறைக்குள் இழுத்துச் செல்கிறான்.) கொஞ்ச நேரம் முன்னாடி சாகர் தா, அறைக்குள்ள இருந்து பாட்டு பாடுற சத்தம் எனக்கு கேட்டுச்சு. வெளிய ஊரடங்கு அமலுல இருக்கு. அதனால வீட்டுக்குள்ள இருந்து பாட்டு கேட்டுகிட்டு இருந்தா ரொம்ப நல்லா இருக்கும். 

சவுத்ரி: நீ இருந்து கேளு. எனக்கு அதுல விருப்பம் இல்ல. 

தசரத்: நம்ம இடத்துல ஒரு பதான் செத்து போயிருக்கான். அவனோட நண்பன், ஒருவேளை அவன் பதானா கூட இல்லாம இருக்கலாம். பொழுது சாஞ்சு இருட்டாகிட்டே வருது. இதுல நீங்க சந்தோஷமா வீட்டுக்கு கிளம்புறீங்க. உங்களுக்கு தைரியம் தான்! 

சவுத்ரி: அதனால தான் நானும் சொல்றேன், தசரத். கடவுள் தான் நம்மை காப்பாத்தணும்! நீ வேணும்னா உன்னோட தேடுதல் வேட்டையை தொடங்கலாம். 

      (சங்கர் அறைக்குள் வருகிறான்)

சங்கர்: சாகர், எல்லாரும் சாப்பாட்டுக்குத் தயாராகிட்டாங்க. (தசரத் அங்கிருப்பதைக் கவனித்து, அவனிடம்) ஓஹோ! நீ நாட்டுக்குச் சேவை செய்ய கிளம்பிட்ட போலிருக்கு. உனக்கு குவாரி கிடைச்சதா?

தசரத்: இல்லை சங்கர் தா. எனக்கு ஐம்பது சதவீதம் நஷ்டம் ஆகிடுச்சு. இன்னும் வேறு ஒன்னை தேடிக்கிட்டு இருக்கேன். 

சங்கர்: சரி. வா, சாகர், போயி சாப்பிடலாம். உங்களைச் சீக்கிரம் சந்திக்கிறேன், சவுத்ரி தா. 

       (சங்கர் மீண்டும் உள் அறைக்குள் செல்கிறான்)

சவுத்ரி: (தசரதிடம்) நீ கேட்டேல, அவங்க இன்னும் சாப்பிடல. இருட்டுறதுக்கு முன்னாடி நாம தெருவோட இன்னொரு முனையில போயி தேடலாம். 

தசரத்: முதல்ல பாட்டைக் கேட்போம். நீங்க என்ன மாதிரியான ஆள்? இசையைப் பிடிக்காதவனால தான் கொலை செய்ய முடியும்னு ரபீந்திரநாத் தாகூர் சொல்லியிருக்காரு. 

சவுத்ரி: ஓ அப்படியா? அப்போ, அந்த இன்னொரு பாதனைக் கண்டுபிடிக்குற வரைக்கும் நீ பாட்டு கேட்க வேண்டாம். உனக்கு நான் நிறைய செலவழிச்சிருக்கேன். 

தசரத்: சரி வாங்க போவோம். சாகர் தா, உங்க வீட்டுக்கு வேற யாரும் வந்திருக்காங்களா? 

சாகர்: ஏன்?

தசரத்: எனக்கு ரெண்டு குரல் கேட்ட மாதிரி இருந்துச்சு. என்ன ஒரு அற்புதமான பாட்டு... மனுஷ உடலையும், நதியையும் உவமைப்படுத்துற பாட்டு, இல்ல அது மாதிரி ஏதாவதோ. 

சவுத்ரி: உனக்கு விவஸ்தையே இல்லையா? கடவுள் தான் நம்மைக் காப்பாத்தணும். உனக்கு சாராயம் வாங்கிக்கொடுக்குற பணத்துல சாகரோட பங்கும் இருக்கு. நீ, அவன் ஒரு முஸ்லிம்க்கு அடைக்கலம் கொடுத்திருப்பான்னு நினைக்குறியா?

தசரத்: நீங்க சொல்றதும் சரியா இருக்கலாம். ஆனா சாகர் தா, இரக்கப்பட்டு அந்த முஸ்லிமுக்கு மாத்து துணி குடுத்து, யாருக்கும் தெரியாம அவனைத் தப்பிக்க வைக்கவும் நினைக்கலாம் இல்லையா?. மன்னிச்சுடுங்க சாகர் தா. தப்பா எடுத்துக்காதீங்க. உங்களை எனக்கு நல்லாத் தெரியும். நீங்க அப்படி செய்யுற ஆள் இல்ல. முஸ்லிகள் மேல உங்களுக்கு இருக்குற வெறுப்பு உண்மையானது. 

சவுத்ரி: அதுமட்டுமில்லாம, அவன் தங்கச்சி, அவளோட குழந்தை, பாகிஸ்தான்ல இருக்குறாங்க. கடவுள் காக்கட்டும், அவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது டாக்காவுல. கலவரத்துக்கு நடுவுல எதுவும் நடக்கலாம். உனக்கு உன் தங்கச்சி பற்றி இன்னும் எதுவும் செய்தி வந்து சேரலதானே? சரி, நான் வரேன் சாகர். 

தசரத்: நாங்க திரும்பி வந்ததும் உங்க பாட்டை கேட்குறோம். 

      (தசரத் தள்ளாடியபடி செல்ல முயல்கிறான். சவுத்ரி அவனை கைத்தாங்களாக பிடித்து வெளியே அழைத்துச் செல்கிறான். சாகர் கடிதத்தை எடுத்து பிரிகிறான். அதில் ஒரு வரியை படித்ததும் அவனின் முகம் வெளிறுகிறது. அவனின் கண்கள் இயலாமையைப் பிரதிபலிக்கிறது. கடிதத்தை அவன் மேஜை மீது போடுகிறான். அதன்பின் மேஜையின் முனையைப் பலத்துடன் இழுக்கிறான். சவுத்ரி, அவனை வெளியில் இருந்து கவனிக்கிறார். அவர் மட்டும் தனியே அறைக்குள் வருகிறார்.)

சவுத்ரி: என்ன ஆச்சு?

சாகர்: டாக்காவுல இருந்து என்னோட தங்கச்சி மிலி கிட்ட இருந்து கடிதம் வந்திருக்கு. 

     (சாகரை ஒரு கணம் பார்த்துவிட்டு, பின் வெளியில் நிற்கும் தசரதிடம் திரும்பிச் செல்கிறார்)

சவுத்ரி: தசரத், நீ போ. நான் சீக்கிரம் உன்னோட வந்து சேர்ந்துக்குறேன். 

தசரத்: ஏன்? நீங்க மட்டும் தனியா பாட்டு கேக்கலாம்னு திட்டம் போடுறீங்களா?

சவுத்ரி: இல்ல. எனக்கு அவன் கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு. 

தசரத்: ஓஹோ. நீங்க மட்டும் அவர் கிட்ட தனியா பேசப் போறீங்க. அப்போ ஏதாவது பண விஷயமா தான் இருக்கும். எனக்குத் தெரியும். சரி, நல்லது. உங்க வியாபாரத்துல நான் பங்கு கேட்க மாட்டேன். நான் பீமே வீட்டுக்கு முன்னாடி உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன். நான் இன்னைக்கு ராத்திரி இரையைப் பிடிச்சேன்னா, எனக்கு நீங்க சரக்கு வாங்கி தரணும். 

       (தசரத் செல்கிறான். சவுத்ரி கதவை அடைத்துவிட்டு, சாகர் அருகில் வருகிறார். சாகர் அந்தக் கடிதத்தை மீண்டும் படிக்கத் தொடங்கியிருந்தான்.)

சவுத்ரி: என்ன எழுதி இருக்கா? அவ பத்திரமா இருக்காளா? 

சாகர்: (சாகர் கடிதத்தை வாசிப்பதை நிறுத்தி) டாக்காவுல நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. மிலி அங்க தனியா இருக்குறா. ஒவ்வொரு நிமிஷமும் பயத்தோட இருக்குறா. என் மாமா கிட்ட, உடனே டாக்காவுக்கு திரும்பி வரச் சொல்லச் சொல்லி எழுதி இருக்கா. அவரு ஓட்டலுக்கு திரும்பிப் போனதும் அவருக்கு அவ எழுதுன கடிதம் கிடைக்கும்னு நினக்கேன். டாக்காவுல இருக்குற நிலைமை, மிலி மாதிரி ஒரு தைரியமான பொண்ணைக் கூட எப்பவும் பயத்தோடயே வாழ வச்சிருக்கு. கடந்த சில நாட்களாவே டாக்கா எரிஞ்சிக்கிட்டு இருக்கு. அவளும் வீட்டுல இருக்கறதை எல்லாம் விட்டுட்டு அவளை காப்பாத்திக்க ஓடுற நிலைமை வரலாம். இதுக்கெல்லாம் மேல, அவ குழந்தையை வேற வச்சுக்கிட்டு இருக்குறா. என்ன நடக்கும், சவுத்ரி தா?

சவுத்ரி: நீ முதல்ல போயி சாப்பிடு. ஏற்கனவே ரொம்ப தாமதம் ஆகிடுச்சு. நீ இப்போ சாப்பிடலேன்னா, அப்புறம் பித்தம் ஏறிடும். இதுக்கெல்லாம் மேல இந்தக் குழப்பம் வேற. நான் போயி தேடுதல் வேட்டையை ஒருங்கிணைக்குற வேலையைப் பார்க்குறேன். அது ரொம்ப முக்கியமான விஷயம். 

சாகர்: சவுத்ரி தா. டாக்காவுல இருக்குற நிலைமை என் மனசை ரொம்ப பாதிக்குது. மிலிக்கு என்ன ஆகும்?, ஒருவேளை, அவ ஏற்கனவே....

சவுத்ரி: இதைப் பற்றி நாம அப்புறமா உக்காந்து பேசலாம். நீ இப்போ கதவைப் பூட்டிட்டு போயி சாப்பிடு. 

       (சவுத்ரி செல்கிறார். சாகர் கதவைப் பூட்டிவிட்டு, மீண்டும் கடிதத்தைப் படிக்கிறான். அதைப் படிக்க படிக்க அவன் மேலும் அதிர்ச்சியுடன் காணப்படுகிறான். சங்கர் வருகிறான்.)

சங்கர்: தசரத் போயிட்டானா? கதவை அடைச்சாச்சா? வாங்க. (மோஷின், கிதீஷ் பாபு வருகின்றனர்). ஜன்னலை கடக்கும்போது குனிஞ்சு வர சொன்னேன் தான சச்சின் உன்ன? ஏன் நீ சொல்றதை கவனிக்க மாட்டேங்குற?

      (அவர்கள் வருவதைப் பார்த்த மாத்திரத்தில் சாகர், அந்தக் கடிதத்தை மறைக்கிறான். அவன் எந்தக் காரணமுமின்றி திசைமறந்து அறைக்குள் அங்குமிங்கும் நடக்கிறான்.)

கிதீஷ்: சங்கர், எனக்கு டாக்காவுல இருந்து கடிதம் வந்திருக்கும்னு என் அடி மனசுக்கு தோணுது. நான் ஓட்டலுக்கு திரும்பிப் போறேன். 

சங்கர்: நீங்க மட்டும் இல்ல, சச்சினும் உங்க கூட தான் கிளம்பணும். 

கிதீஷ்: என்னால இப்போ அமைதியாவே இருக்க முடியல. உயர் நீதிமன்றத்துல வேலை இன்னும் முடியாம இழுத்துகிட்டே இருக்கு. இது ரொம்ப வினோதமான நிலைமை. ஜமீன்தார் இங்க இருக்காரு. அவரு கிட்ட இங்க ஆவணங்களை கொடுத்தாகணும். ஆனா அவரோட சொத்து பாகிஸ்தான்ல இருக்கு.  

சாகர்: (இவர்கள் பேசுவதைக் கவனித்தவாறு) மிலிக்கு மட்டும் ஏதாவது நடந்துச்சுனா, நான் உயிரை விட்டுடுவேன். என்னோட அப்பா, அம்மாவும், அண்ணனும் இப்போ இல்ல. குடும்பம்னு சொல்லிக்க எனக்கு மிலி ஒருத்தி மட்டும் தான் இருக்குறா. 

சங்கர்: அவ ஆபத்துல இருந்தா அப்படினா, நமக்கு இந்நேரம் எப்படியாவது கண்டிப்பா கடிதம் அனுப்பிச்சிருப்பா. 

கிதீஷ்: இருந்தாலும், நிச்சயமில்லாத ஒரு சூழல் தான் நிலவுது. அங்க டாக்காவுல இப்போ வீட்டுல ஆண் துணை வேற யாரும் இல்ல. 

சங்கர்: இவ்வளவு பிரச்சனை இருந்தும், நீங்க டாக்காவை விட்டுட்டு வர மாட்டேன்னு சொல்றீங்க. 

கிதீஷ்: வங்காளம், வங்காளிகளுக்குச் சொந்தம். இந்த குறுக்கு மனப்பான்மை கொண்ட பிரிவினைகளை நான் ஏத்துக்க மாட்டேன். 

மோஷின்: என்னோட அப்பாவும் இதையே தான் சொல்லுவாரு. நாம முதல்ல வங்காளிகள். அப்புறம் தான் மத்தது எல்லாம். 

சாகர்: மிலிக்கு மட்டும் ஏதவாது நடந்துச்சுன்னா அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. 

சங்கர்: போ, போய் சாப்பிடு (சாகர் செல்கிறான்) நீங்க உட்காருங்க கிதீஷ் பாபு. 

கிதீஷ்: ஆனா, இன்னும் எவ்வளவு நேரதுக்கு? 

      (அவர் உட்காருகிறார்)

சங்கர்: சரி. ரொம்ப அவசரப்படாதீங்க. தசரத் நம்ம வீட்டைக் கடந்து தெருவோட அடுத்த கோடிக்கு போவான். அதுக்கு அப்புறம், நாம இந்த இடத்தை விட்டு சந்தைக்கு அடுத்து இருக்குற சாலை வழியாகப் போயிடுவோம். (அவன் தம்புரா கம்பிகளை மீட்டுகிறான்) இதுல இருந்து பரவுற மெல்லிசை, என்னைப் போல ஒரு கரடுமுரடான ஆளைக் கூட அமைதியடைய வைக்குது. 

மோஷின்: ஆமா (என குழப்பத்துடன் கூறுகிறான்)

சங்கர்: எனக்காக ஒரு பாட்டு பாடுவியா? என்னால பாட முடியாது. ஆனா இசையும், மெட்டுக்களும் என் இதயத்துல எதிரொலிச்சுக்கிட்டே இருக்கு. கிதீஷ் பாபு?

கிதீஷ்: என்ன? 

சங்கர்: நாம ஆரம்பிக்கலாமா? 

கிதீஷ்: சரி. 

சங்கர்: சச்சின், வா வந்து ஆரம்பி. சாகருக்கு நீ சொல்லிக்கொடுத்துட்டு இருந்தியே, அந்த பாட்டைப் பாடு. அந்த 'நதியில் என்னால் கரையைக் காண முடியவில்லை, அந்தோ, அதுவே என் மனதின் அவா' பாட்டு. நீ என்ன யோசிக்குற?

மோஷின்: இல்ல, ஒன்னும் இல்ல.

சங்கர்: எந்த உலகத்துல இருக்குற நீ? 

மோஷின்: (மெலிதாகப் புன்னகைக்கிறான்) நான் ஒரு வினோதமான ஒற்றுமையைப் பற்றி நினைச்சுகிட்டு இருந்தேன். நாலு அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நான் கொல்கத்தாவுக்கு முதல் முறையா வந்தேன். சித்பூர்ல கலவரம் நடந்துகிட்டு இருந்ததுனால, நான் ஊர் சுத்த முடியல. ஒரு நாள், கலவரம் கொஞ்சம் ஓஞ்ச மாதிரி இருந்துச்சு. நான் ஒரு நண்பனைப் பார்க்க டாலிகுஞ்சு-க்கு டிராம் ஏறுனேன். எனக்கு திடீர்னு இந்த நகரம் ரொம்ப பிடிச்சு போச்சு. வழியிலேயே நான் ஒரு இடத்துல இறங்கிட்டேன். ராஷ்பெஹாரி சந்திப்புல இறங்குனேன்னு நினைக்கேன். அப்போ ஒருத்தர் மட்டும் எனக்கு உதவலேனா, அன்னைக்கே நான் கொல்லப்பட்டிருப்பேன். இந்தப் பகுதில சாகர்-ங்குற பேறு, ரொம்ப சகஜமானது இல்ல தானே?

சங்கர்: இல்ல. 

மோஷின்: அந்த ஆளோட பேரு சாகர். என்னால அவரை மறக்கவே முடியாது. 

சங்கர்: நீ இப்போ பாடப் போறது இல்லையா?

மோஷின்: சரி, எனக்கு, தொடங்குறதுக்கு உதவி பண்ணுங்க. 

      (அமைதியாகவும், தன்னைச் சுற்றியிருப்பதை மறந்தவனாகவும், மோஷின் பாடத் தொடங்கிறான். 'நதியில் என்னால் கரையைக் காண முடியவில்லை'. அவன் பாடலை தொடரந்தபடி மேஜை அருகே வந்து அதன் மேல் அமர்கிறான். சாகர் கைகளை துண்டில் துடைத்தபடி அறைக்குள் வந்து பெட்டிகள் மேல் அமர்கிறான். சங்கர் தம்புராவை விட்டு எழுந்து சென்று அறையின் மூலைக்குச் செல்கிறான். அங்கு மோஷின் கழற்றி வைத்த துணிகளை எடுத்து, அதில் அவனின் ரத்தக் கரை படிந்த சட்டைப் பையில் இருந்து சில காகிதங்களையும், கொஞ்சம் பணத்தையும் வெளியே எடுக்கிறான். அவன் மோஷினை பார்த்துவிட்டு, பணத்தையும், காகிதங்களையும் அங்குள்ள படுக்கைமீது வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே செல்லும்போது, தம்புராவை வாசிக்க சொல்லி சங்கரிடம் சைகை காட்டுகிறான். சாகர் தம்புராவை எடுத்து வாசிக்க, கிதீஷ் பாபு படுக்கையில் படுக்கிறார். மோஷின் பாடலைத் தொடர்கிறான். சாகர், எந்த யோசனையுமற்று, இடதுபுறம் இருக்கும் ஜன்னலை திறக்கிறான். அவன் வைத்திருந்த கடிதத்தை வெளியே எடுத்து வாசிக்கத் தொடங்குகிறான். அவன் முகத்தில் வெறுப்பை உமிழும் ஒரு சுளிப்பு வெளிப்படுகிறது. ஒரு நச்சுப்பாம்பு அதன் இரையைப் பார்ப்பதுபோல மோஷினை வினோதமான முறையில் அவன் பார்க்கிறான். திடீரென வெளியே ஏதோ சத்தம் கேட்க, அவன் திரும்பிப் பார்க்கிறான். அவன் கண்கள் தகித்துக்கொண்டிருந்தன. மோஷனை மீண்டுமொருமுறை பார்த்துவிட்டு அவன் சத்தமாக பாடத் தொடங்குறான். இதனால் மோஷின் சற்று பின்வாங்குகிறான். சாகர் பாடுவதைத் தொடர, அதனால் உந்தப்பட்டு மோஷினும் மீண்டும் இணைந்து பாடுகிறான். இருவரின் குரலும் இணைந்து ஒரு துயரார்ந்த பாடல் பிரவாகிக்கிறது. திடீரென வீட்டின் ஜன்னல் வழியே எச்சரிக்கையடைந்த சவுத்ரியின் முகம் தென்படுகிறது. கதவு மும்முறை சத்தமாகத் தட்டப்படுகிறது. அந்த அறைக்குள் வந்துகொண்டிருந்த சங்கர், அசைவற்று அப்படியே நிற்கிறான். கிதீஷ் பாபு படுக்கையைவிட்டு துள்ளி எழுகிறார். உச்ச ஸ்தாயையில் பாடிக்கொண்டிருந்த மோஷின் திடீரென அமைதி அடைகிறான். மோஷின் சாகரை நோக்கி அடியெடுத்து வைக்க, அவனின் முகத்தில் மிகுதியான அச்சம் வெளிப்படுகிறது.

மோஷின்: நீங்க என் பக்கம் தான இருக்கீங்க!

     (சாகர் வெடுக்கென சென்று கதவைத் திறக்கிறான். தசரத் உள்ளே ஓடி வருகிறான். நடுங்கும் கைகளுடன் சாகர், மோஷினை நோக்கிச் சுட்டுகிறான். தசரத் ஒரு பசித்த பூனையைப் போல மோஷின் மேல் பாய்ந்து, அவனை வீட்டின் வெளியே இழுத்துச் செல்கிறான்)

மோஷின்: (தன்னுணர்வற்றவன் போல) நீங்க என் பக்கம் தான இருக்கீங்க? நீங்க என் பக்கம் இருக்கீங்க! (எனக் கூறய வண்ணம் இருக்கிறான்)  

கிதீஷ்: நீ என்ன செஞ்சிருக்க, மிருகமே? நீ என்ன செஞ்சிருக்க? 

      (சாகர், கையில் இருந்த கடிதத்தை மெதுவாக தரையில் போடுகிறான்) 

சாகர்: மிலி இன்னும் உயிரோட இல்லன்னு எனக்கு உறுதியா தெரியுது. சாகரால (அவனையே) மோஷினைக் கொல்ல முடியாது. முடியவே முடியாது. அப்படி யாராவது சொன்னா அவங்களை கொன்னுடுவேன். நான் ஒரு இந்து. ஆயிரம் ஆயிரம் இந்துக்களுக்கு முஸ்லிம்கள் செஞ்ச கொடுமைகளுக்கு நான் பழி தீத்துட்டேன். 

      (கிதீஷ், கீழே கிடந்த கடிதத்தை எடுத்துப் படிக்கிறார்)

கிதிஷ்: (கத்தியபடி) மிலிக்கு ஒன்னும் ஆகிடல. அவ கவலையா இருக்கா. இந்த நேரத்துல அவளோட நான் இருக்கனும்னு நினைக்குறா. சாகர், நீ இப்போ செஞ்ச பாவத்தை உன் வாழ்க்கை முழுக்க எப்படி சுமந்துக்கிட்டு வாழப் போற? இதுக்கு மேலேயும் உன்னை ஒரு மனுஷனா நான் நினைக்கணும்னு எப்படி நீ எதிர்பார்க்க முடியும்? படுபாவி. 

சாகர்: என்னைப் பற்றி ஒன்னும் நினைக்க வேண்டாம். என்னை என்னன்னு வேணுமானாலும் நீங்க வச்சுக்கோங்க. 

      (சாகர் மயங்கித் தரையில் விழுகிறான். சங்கர், படுக்கையில் வைக்கப்பட்டிருந்த காகிதக் குவியலில் இருந்து ஒரு காகிதத்தை எடுக்கிறான். வெளியே அந்தி முடிந்து இரவு பிறந்துகொண்டிருந்தது. சங்கர் அந்தக் காகிதத்தில் எழுதப்பட்டிருப்பதை தீர்க்கமான குரலில் படிக்கிறான்..)

சங்கர்: முகமது மோஷின், த/பெ தஸ்லிம் அலி மியான் எம்.ஏ. தலைமை ஆசிரியர்: சிங்ஹாசன் உயர்நிலைப் பள்ளி. கிராமம்: சிங்ஹாசன்... மோஷின்! சிங்ஹாசன்.

     (வெளியே, மோஷினின் தேய்ந்த குரல் கேட்டவண்ணம் காற்றில் இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. மென்மையான காற்று வீசிக்கொண்டிருக்க, அது மரங்களின் இலைகளை அமைதியற்றதாக்கிக்கொண்டிருந்தது.)

 ---------------------------------------மேடை இருளடைகிறது--------------------------------


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கரப்பான் அரசியலில் எச்சரிக்கை தேவை -அழகுராஜ் ராமமூர்த்தி

"கவிப்பேரரசர்களின் கவியமுதம்" நூலறிமுகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

தேடல் பறவை