கருப்பு நதி (முதல் அலை - முதல் காட்சி) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)
கருப்பு நதி
-ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
Sanko (இணைப்புப் பாலம்) என்ற இந்த நாடகம் ரித்விக் கட்டக்கின் மிக நீண்ட நாடகங்களில் ஒன்று. மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் (கிழக்கு பாகிஸ்தான்) என இரு வேறு வங்காளத்தில் ஒரே நேரத்தில் நடந்த நிகழ்வுகளைச் சுருங்க விவரிப்பது கடினமான பணியாக இருந்தது. இந்திய துணைக்கண்டத்தில் ஏற்பட்ட பிரிவினையின் பிறகான நிகழ்வுகள் இதில் விரிகின்றன. நாடகம் முழுமையும் கிழக்கு பாகிஸ்தானின் வங்காளப் பேச்சு மொழியின் வட்டார வழக்கில் அமைந்துள்ளது. இந்த நாடகம் எழுதப்பட்டபோது கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் என்ற நாடாக உருவாகாதபோதிலும், 'வங்கதேசம்' என்ற வார்த்தை நாடகத்தின் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாடகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'வங்கதேசம்' எனும் வார்த்தை மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என்ற இரண்டையும் சேர்த்தே குறிக்கிறது.
சில வங்காள வார்த்தைகளைப் பெயர்க்க முடியவில்லை. அவ்வாறு நேரடியாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் கீழ்வருமாறு,
துருபத் (இந்துஸ்தானி இசையில் மிகவும் பழைமையான ஆனால் இன்னும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய குரலிசை வடிவம்)
காயல் (வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் புழங்கும் பாரம்பரிய பாடுமுறை வகைமை)
ஜமாய் பாபு (ஜமாய் என்பது மாமா என்பதற்கும் பாபு என்பது மரியாதை நிமித்தமாகவும் பயன்படுத்தப்படும் சொல்.
படே மியான் & சோட்டே மியான் (மூத்த சகோதரர் & இளைய சகோதரர் எனப் பொருள்படும்)
லுங்கி (இந்தியாவிலும், வங்கதேசத்திலும் ஆண்கள் உடுத்தும் உடை)
குதா (அல்லா), இப்தார் (ரம்ஜான் கால நோன்பு உணவு)
கவிராஜ் ( சித்த மருத்துவர்),
தா - Da ( மூத்த சகோதர் ஸ்தானத்தில் வைத்து பிறரை விழிக்க அவர்களின் பெயர்களுக்கு பின்னடையாக வங்காளிகள் இச்சொல்லைப் பயன்படுத்துவர்)
தம்புரா ( நான்கு கம்பிகள் கொண்ட வீணை)
மகினாதார் (வங்கதேசத்தில் உள்ள வீடுகளில் உணவு மற்றும் தங்குமிடத்திற்காக மட்டும் வேலை செய்யும் ஏழை).
பிரதியில் உள்ள சில நாட்டுப்புறப் பாடல்களை அதன் முழுமையான சொற்சுவையில் பெயர்க்க முடியவில்லை. எனவே அவை அப்படியே வழங்கப்பட்டு, அதற்கான சுருக்கமான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

நாடகம் நடக்கும் காலகட்டத்தின் பின்னணி
இந்த நாடகம் இரு வேறு காலகட்டத்தில் இருவேறு இடத்தில் நடக்கிறது. முதல் காலகட்டம் 1954. கொல்கத்தாவில் இருக்கும் சங்கர், சாகர் என்ற இரு இளைஞர்களை மையமிட்டு நகர்கிறது.
1947 இல் வங்கப்பிரிவினை நிகழ்ந்து கொல்கத்தாவை உள்ளடக்கிய மேற்கு வங்கம் இந்தியாவுக்கும், டாக்காவை உள்ளடக்கிய கிழக்கு வங்கம், கிழக்கு பாகிஸ்தானாக, பாகிஸ்தான் வசமும் செல்கிறது. அதிகார மையம் மேற்கு பாகிஸ்தானில் இருக்க, வங்காளிகளை உள்ளடக்கிய கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்கதேசம்) அடக்குமுறையைச் சந்திக்கிறது. உறுதிமொழி திணிப்பு உள்ளிட்டவற்றால் வங்காளிகளின் அடையாளம் மறுக்கப்பட்டு வந்தது. முஸ்லிம் லீக் ஆட்சியே அங்கு நடந்து வந்த நிலையில் ஏ.கே. பஸ்லுல் ஹக் (நாடகத்தில் ஹக் சாஹிப் என அழைக்கப்படும்) கிழக்கு வங்க அரசியல் ஆளுமை, ஐக்கிய முன்னணி (யுனைட்டட் பிரண்ட்) என்ற கூட்டணியை உருவாக்கி 1954ல் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று கிழக்கு பாகிஸ்தான் முதலமைச்சராகிறார். ஆனால் முஸ்லீம் லீக் அல்லாத ஒரு ஆட்சி கிழக்கு பாகிஸ்தானில் தங்கள் ஆதிக்கத்தை குறைக்கும் என, அதிகார மையமாக இருந்த மேற்கு பாகிஸ்தான் கருதியது. எனவே புதிய அரசு அமைந்த வெறும் 57 நாட்களில் ஆட்சி கலைக்கப்பட்டது. ஹக் உடைய முதல்வர் பதவி பறிக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கிழக்கு பாகிஸ்தானின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முக்கிய அரசியல் ஆளுமையாக மேற்கு பாகிஸ்தானுடன் இணைப்பு புள்ளியாக ஹக் செயல்பட்டார். 1956, கிழக்கு பாகிஸ்தான் ஆளுநராகவும் அவர் நியமிக்கப்பட்டு 1958 வரை அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்படும் வரை இருந்தார்.
1956 முதல் 1958 வரையிலான காலகட்டம் பாகிஸ்தானில் நிலைத்தன்மை இல்லாத காலகட்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பொருளாதார அளவிலும் கிழக்கு பாகிஸ்தானில் அதிக பாதிப்பு இருந்தது.
இந்த நாடகத்தின் இரண்டாம் பாதி 1958 காலகட்டத்தில் கிழக்கு பாகிஸ்தானில் (நாடகத்தில் வங்கதேசம் என சுட்டப்படுகிறது) நடக்கிறது. மத்திய தலைமைக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தானில் செயல்பட்ட சட்டமன்றத்தைக் கலைக்க முயன்றதாக, ஹக் மார்ச் 1958இல் ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதன்பின் மார்ச் முதல் அக்டோபர் வரை கிழக்கு பாகிஸ்தானில் குழப்பங்கள் நிகழ்ந்தன. தற்காலிக சட்டமன்றத்தில் ஆளும் எதிர் கூட்டணிகள் மோதிக்கொண்டன. இந்த நிலைத்தன்மை அற்ற சூழலில் பாகிஸ்தான் அதிபர் இஸ்கந்தர் மிர்ஸா, கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அயூப் கான் தலைமையில் ராணுவ ஆட்சியை அக்டோபர் 7, 1958 அன்று அறிவித்தார். இந்த நாடகத்தின் இறுதிக்கட்டம் அந்த நாளைச் சுற்றி நடக்கிறது. அயூப் கானின் ராணுவ ஆட்சியில் ஐக்கிய முன்னணி (நாடகத்தில் வரும் நாயகி ஜாபா பங்குவகிக்கும் இயக்கத்தை) சேர்ந்தவர்கள் தேடித் தேடி வேட்டையாடப்பட்டனர்.
1970கள் வரை இந்த ராணுவ ஆட்சி கிழக்கு பாகிஸ்தானில் அமலில் இருந்தது. ராணுவ ஆட்சிக்கு இடையில் அங்கு 1970ல் தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் ஷேக் முஜபிர் ரகுமான் தலைமையில் அவாமி லீக் கட்சி 162 இடங்களில் 160 இடங்களை கைப்பற்றி பெரு வெற்றி பெற்றது. ஆனால் அவாமி லீக்கிடம் அதிகாரத்தை ஒப்படைக்க ராணுவ தளபதி அயூப் கானும் மேற்கு பாகிஸ்தானில் இருக்கும் மத்திய தலைமையும் விரும்பவில்லை. மாறாக 1971இல் ஆபரேஷன் சேர்ச்லைட் மூலம் வங்கதேசத்தில் இனப்படுகொலையை ஒத்த படுகொலைகள் நடைபெற்றன. இந்த அடக்குமுறையை எதிர்த்து கிழக்கு பாகிஸ்தான் வங்காளிகள் முக்தி பாஹினி (லிபரேஷன் ஆர்மி - விடுதலை ராணுவம்) என்ற ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கி பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டனர். இந்தியாவின் உதவியுடன் இந்த இயக்கம் போரிட்ட நிலையில் 1971 டிசம்பரில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது. இதன்மூலம் வங்கதேசம் பிறந்தது.
முதல் அலை: முதல் காட்சி
(அது, கொல்கத்தாவின் நடுத்தர வர்க்கத்தினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டினுள்ளே உள்ள ஓர் அறை. மேடையின் இடதுபுறம் ஒரு சாதாரண மரக் கட்டில் போடப்பட்டுள்ளது. அந்தக் கட்டிலின் பின்னே ஒரு ஜன்னலும், அறையின் நடுவே கதவும் உள்ளது. ஜன்னலும், கதவும் மூடியுள்ளன. மேடையின் இடதுபுறம் உடைகள் வைக்கும் மரச் சட்டகம். சில பெரிய டிரங்கு பெட்டிகள் அந்தச் சட்டகத்தின் அருகே ஒன்றன் மீதொன்று வைக்கப்பட்டுள்ளன. சுவரில் உள்ள கொக்கியில் தம்புரா நிலையாக தொங்கிக்கொண்டுள்ளது. மேஜையில் புத்தகங்கள் சிதறிக்கிடக்கின்றன. மரச் சட்டகத்தில் மடிக்கப்படாத துணிகள் சில கலைந்து கிடைக்கின்றன. 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் சால்வையால் தன்னைப் போர்த்திக்கொண்டு மேடையின் இடதுபுறம் இருந்து தோன்றி அந்த இருட்டான அறைக்குள் செல்கிறான். அவன் கொட்டாவி விட்டவாறு, பாடல் ஒன்றைப் பாடுகிறான்: 'எழுந்திரு, என் கண்ணான கண்ணே'. அந்த பாடலின் ஒலி அதிகரித்த அதே வேலை, திடீரென தூரத்தில் இருந்து யாரோ காயம்பட்டதுபோல கத்தும் சத்தம் கேட்கிறது. முதலில் அலறலாக வெளிப்பட்ட அந்த சத்தம் முனகலாகத் தேய்ந்து மறைகிறது. வெளியில் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்கிறது. இளைஞன் வியப்புடன், கதவைத் திறக்கிறான். அடர்ந்த சூரிய ஒளிக்கதிர் அவன் மேல் விழுகிறது. வீட்டின் வெளியில் உள்ள பாதையின் ஒரு பகுதி அந்த வெளிச்சத்தில் தெரிகிறது. கதவில், கடிதங்கள் சேர்க்கும் தபால் பெட்டி தொங்கிக்கொண்டிருக்கிறது. கோடாரி மற்றும் பிற ஆயுதங்களுடன் வீட்டின் முன் இருக்கும் அந்தப் பாதையின் குறுக்காக சிலர் ஓடுகின்றனர். இளைஞன் கதவிலிருந்து ஓரடி பின்னகர்ந்து அப்பாதை வழியாக ஓடியவர்களில் ஒருவனின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறான்.)
இளைஞன்: தசரத்!
தசரத்: என்ன விடு. நான் இன்னைக்கு தேவி காளியை ரத்தத்தால குளிப்பாட்ட போறேன்!
இளைஞன்: என்ன ஆச்சு?
தசரத்: கலவரம் தொடங்கிடுச்சு. ரெண்டு முஸ்லிம்கள் வசமா வந்து சிக்கியிருக்காங்க, அவங்கள பிடிக்கணும், என்னைப் போக விடு நண்பா.
(தசரத் அங்கிருந்து ஓடிச் செல்கிறான். தன்னைச் சுற்றி சால்வையால் போர்த்தியிருந்த பருமனான ஒரு முதியவர் மெதுவாக நடந்து வந்து அவ்விடத்தில் நிற்கிறார்.)
முதியவர்: கலவரம்! நேத்து ராத்திரியில இருந்து ஹவுராவுல கலவரம் ஆரம்பிச்சுடுச்சு. பார்க் சர்க்கஸ், அப்புறம் இந்தப் பகுதி, இன்னைக்கு காலையில இருந்து கலவரத்தால பாதிக்கப்பட்டிருக்கு. அப்புறம் டாக்கா முழுமையா சீர்குலைஞ்சு போயிருக்கு. நம்ம தெருவுல ரெண்டு பதான்கள் ஒளிஞ்சிருக்காங்க. அவங்க கிட்ட கூர்மையான கத்திகள் இருக்கறதா கேள்விப்பட்டேன். அதனால தான் நம்ம அக்கம்பக்கத்து இளவட்ட பசங்க அவங்களை தேடிகிட்டு இருக்காங்க.
இளைஞர்: அவங்க பிடிபட்டாங்களா?
முதியவர்: ஒருத்தன் பிடிபட்டான். இன்னொருத்தன் காயம்பட்டிருக்கிறான். அவன் இங்க தான் எங்கயோ ஒளிஞ்சிருக்கான்.
(லாரி ஒன்று செல்லும் சத்தம் கேட்கிறது. அதன் பின் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கிறது)
முதியவர்: கடவுள் தான் நம்மை காப்பாத்தணும்!
(அவர் அங்கிருந்து நடந்து செல்கிறார். இளைஞன், கதவைச் சத்தமாக அறைந்து சாத்துகிறான். அவன் திரும்பி, 'சாகர்' என அழைத்தவாறு வேகமாக வீட்டுக்குள் செல்கிறான். முழுமையாக மூடப்படாத கதவு வெளியில் இருந்து வீசும் காற்றால் லேசாக ஆடிக்கொண்டிருக்கிருக்கிறது. வெளியே துப்பாக்கி குண்டுகள் சுடப்படும் சத்தம் கேட்கிறது. அதன் பின் ஒரு பயங்கர அமைதி அங்கு நிலவுகிறது. திடீரென ஜன்னலை யாரோ பற்றிக்கொண்டு, கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்கிறது. ஜன்னல் திறக்கவில்லை. ஆனால் கதவு சத்தத்துடன் திறக்கிறது. பைஜாமா அணிந்த ஒரு சிறுவன் நிமிர்ந்து நிற்கமுடியாமல் தள்ளாட்டத்துடன் அந்த கதவின் முன் நிற்கிறான். அவனின் தலையின் ஒரு பக்கத்தில் இருந்து வழிந்துகொண்டிருந்த ரத்தம் அவனின் முகத்தை கோரமானதாக ஆக்கியிருந்தது. அவன் ஒரு பதான் அல்ல. சாதாரண வங்காளி இளைஞன் தான். அவன் வேகமாக அறைக்குள் நுழைந்து கதவை உள்ளிலிருந்து தாழிட்டுப் பூட்டுகிறான். சோர்வுற்றவனாகவும் மூச்சிறைத்துக்கொண்டும் அவன் அந்த இடத்தை ஆராய்வதுபோல் சுற்றுமுற்றும் பார்க்கிறான். ஒரு கணம், அவன் கிட்டத்தட்ட நிலைகுலைந்து கீழே விழப் போனான். கண்களில் பயத்துடன் அவன், வீட்டின் உள்ளே குரல்கள் கேட்கும் திசையில் இருப்பவற்றை அவதானிக்கிறான். உடனே, அவன் அந்த அறையின் இடதுபுறம் உடைகள் வைக்கும் சட்டகத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த பெட்டிகளுக்கு பின்னால் சென்று, அங்கிருந்து அருகில் சட்டகத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் உடைகளுக்குப் பின்னால் குனிந்து சென்று ஒளிந்துகொள்கிறான். முன்னர் கூறிய நமது இளைஞன் உள்சட்டையுடன் இருக்கும் மற்றொரு இளைஞனுடன் அந்த அறைக்குள் வருகிறான்)
இளைஞன்: ஆமா சாகர், ரெண்டு பதான்கள் நமக்கு பக்கத்துல இருக்குற குடிசைப்பகுதில ஒளிஞ்சிகிட்டு இருக்குறதா சவுத்ரி சொன்னாரு.
சாகர்: சங்கர், என் மண்டைக்குள்ள இப்போ என்ன ஓடிக்கிட்டு இருக்கு தெரியுமா?
சங்கர்: என்ன?
சாகர்: நான் டாக்காவை பற்றி தான் யோசிச்சுகிட்டு இருக்கேன். என் மாமா (சகோதரியின் கணவர்) இந்த வார தொடக்கதுல தான் டாக்காவுல இருந்து வந்தாரு. இன்னைக்கு டாக்காவுக்குத் திரும்பி போறதா நேத்து என்கிட்ட அவர் சொன்னாரு. அவரோட, கட்டாயம் நானும் வரணும்னும்னு சொல்றாரு.
சங்கர்: நீ என்னதான் வங்கதேசத்தைப் பற்றி பேசுனாலும், நீ இதுவரைக்கும் கிராமத்துக்கே போனது இல்ல. ஆனா நாட்டுப்புறப் பாடல்கள் மட்டும் உனக்குப் பிடிக்குது. நீ பேசமா, கிதீஷ் பாபு கூட டாக்காவுக்கு போ.
சாகர்: ஆனா அங்க நடக்குற கலவரங்களை வச்சு பாத்தா, என் மாமா டாக்காவுக்கு போய் சேர முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்ல. இவரு இங்க இருக்க, என் சகோதரி மிலி-யும் அவ குழந்தையும் அங்க டாக்காவுல தனியா இருக்குறது துரதிஷ்டவசமானது. என் சகோதரியை நினைச்சு எனக்கு கவலையா இருக்கு.
சங்கர்: கொல்கத்தாவுல, '1946 கலவரம்' ஏன் இப்போ 1950 ஜனவரியில நடந்துகிட்டு இருக்குன்னு தான் எனக்கு புரிய மாட்டேங்குது. அதுமட்டுமில்லாம கிதீஷ் பாபு விஷயத்துலயும், இப்படி நடக்குறது நியாயமே இல்ல. அந்த மனுஷன் பாகிஸ்தானை விட்டுட்டு வர இன்னும் தயாரா இல்ல.
(அவன் கதவை நோக்கி செல்கிறான்)
சாகர்: எங்க போற நீ?
சங்கர்: நான் கிதீஷ் பாபுவைப் பார்க்க ஹாரிசன் ரோட்டுக்கு போறேன்.
சாகர்: இந்த நேரத்துல நீ வீட்டை விட்டு வெளிய போய்த்தான் ஆகணுமா?
சங்கர்: நீ எவ்ளோ விரகத்தில இருக்கியோ, அதேபோல தான் அந்த மனுஷனும் இருப்பாரு இப்போ. அவரை இங்க கூட்டிட்டு வந்து கொஞ்சமாவது குதூகலப்படுத்தலாம்னு நினைச்சேன்.
சாகர்: நான் சொல்றத கேளு, கொஞ்ச நேரம் முன்னாடி தான் வெளிய துப்பாக்கிச்சூடு நடந்துச்சு.
சங்கர்: ஒன்னும் கவலைப்படாத சகோதரா. நீ சந்தோஷமா இரு. இந்த மாதிரியான நாட்கள்ல 'எல்லாம் பரவாயில்ல'ங்குறது மட்டும்தான் நமக்கான வேதவாக்கா இருக்கும்.
(அவன் கதவைத் திறக்க முயன்றபோது, அது உள்ளிருந்து தாழிடப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைகிறான்)
சங்கர்: இது எப்படி சாத்தியம்?
சாகர்: என்னது சாத்தியம்?
சங்கர்: இல்ல. ஒன்னும் இல்ல. 'எல்லாம் பரவாயில்ல' தான்.
சாகர்: நீ இப்போவே வேதவாக்கை சொல்ல ஆரம்பிச்சுட்டியா?
சங்கர்: (சிரித்தவாறு) இயல்பா அந்த வார்த்தை வந்துடுச்சு. அதுமட்டுமில்லாம எல்லாம் சரியா தான் இருக்கு. ஏதோ ஞாபக மறதி. ஆனா, கொஞ்ச நேரம் முன்னாடி நான் உள்ள வரும்போது இந்த கதவை நான் தாழ்பாள் போட்டு பூட்டவே இல்லன்னு எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு.
சாகர்: இப்போ அது எப்படி இருக்கு?
சங்கர்: (தாழ்ப்பாளை திறந்தவாறு) இப்போ பூட்டியிருக்கு. நான் தாழ்ப்பாளை பூட்டுற 'நட்'டை காணோம்னு நினைச்சேன். ஆனா இப்போ அது இங்க இருக்கு.
சாகர்: உனக்கு சரியா ஞாபகம் இருக்கா?
சங்கர்: இந்த நட்டு இங்க தான் இருக்கு. கொஞ்ச நேரம் முன்னாடி கதவு பக்கத்துல நான் மட்டும்தான் இருந்தேன். அப்போ நான் தான் பூட்டியிருக்கணும். தர்க்கப்பூர்வமா சிந்திச்சு பாத்தா அப்படி தான் நடந்திருக்கணும். எது எப்படியோ, நீ கவலைப்படாம இரு சகோதரா, நான் இப்போ கிளம்புறேன்.
(சங்கர் வீட்டை விட்டு வெளியில் அடியெடுத்துவைக்கிறான். சாகர் கதவைப் பூட்ட எத்தனிக்கும் சமயத்தில் தசரத் தனது கோடாரியை ஒரு துண்டால் துடைத்தபடி அறைக்குள் நுழைகிறான்)
தசரத்: சாகர் தா (மரியாதை விழிச் சொல்). இந்த கோடாரியை எங்கேயாவது வைங்க.
சாகர்: என்ன இதெல்லாம்?
தசரத்: போலீஸ் எங்களைத் தேடிகிட்டு இருக்கு. பிருந்தாவனோட கடை பக்கத்துல இருக்குற தெருக் குழாய் பக்கத்துல ஒரு முஸ்லிமை தீர்த்துகட்டிட்டு இருக்கும்போது, போலீஸ் கார் வர சத்தம் எனக்கு கேட்டுச்சு.
(சவுத்ரி, அந்த வீட்டின் வழியே கடந்து செல்லும்போது, இவர்கள் பேச்சை கேட்டு, சற்று நின்று இவர்களை திரும்பிப்பார்க்கிறார். பின் அறைக்குள் நுழைகிறார்)
சவுத்ரி: தசரத், உன்னை தான் நான் தேடிக்கிட்டு இருக்கேன். நிலைமை எப்படி இருக்கு?
தசரத்: என்ன?
சவுத்ரி: சிகப்பு டர்பன்காரங்க (போலீஸ்) போயிட்டாங்களா?
தசரத்: ஆமா, போயிட்டாங்க. ஆனா தேடுதல் வேட்டை நடத்த எப்போ வேணா அவங்க திரும்பி வரலாம். சடலம் அவங்க கிட்ட தான் இருக்கு.
சவுத்ரி: அப்போ வேலை முடிஞ்சிடுச்சுன்னு சொல்லு.
தசரத்: முடிக்காம விடுவோமா என்ன! (சாகரை பார்த்து) இந்த கோடாரியை உங்க வீட்டுக்குள்ள ஒளிச்சு வைங்க.
சவுத்ரி: ஏன் அப்படி செய்யணும்?
தசரத்: '46’(1946) கலவரத்துல இருந்தே என் மேல போலீசுக்கு ஒரு கண்ணு இருக்கு. நீங்க தான் இதை வாங்குனீங்க. அப்போ இந்தக் கோடாரி உங்களோடது தான்.
சவுத்ரி: கடவுள் தான் என்னைக் காப்பாத்தணும்! நீ கேட்டதுனால தான், உனக்கு நான் இதை வாங்கித் தந்தேன். என்னோட பங்கு இதுல அவ்ளோ தான். இப்போ இந்தக் கோடாரிக்கு நீ தான் சொந்தக்காரன். என்னை மாதிரி ஒரு கீழ் நிலை கிளர்க்குக்கு இந்தக் கோடாரியினால என்ன பயன்!
தசரத்: உங்க வாதம் ரொம்ப பொல்லாதது.
சவுத்ரி: சாகர், இவன் சொல்றதை நீயே கேளு. கடவுள் தான் நம்மை காப்பாத்தணும்!
தசரத்: நீங்க வாங்குன ஆயுதங்களால நாங்க கொலை செய்வோமாம், நீங்க மட்டும் எந்தக் கவலையும் இல்லாம நிம்மதியா வீட்டுக்கு போயி சந்தோஷமா இருப்பீங்களாம். இது நியாயமே இல்ல. உங்களுக்கு தெரியுமா சாகர் தா, இந்த மாதிரி பெருச்சாலிகளுக்கு அக்கம்பக்கத்துல இருக்குற ரவுடிகளோட ஆதரவு இருக்கு. இந்த மாதிரி ஆளுங்க ரொம்ப ஆபத்தானவங்க!
சவுத்ரி: வார்த்தையை அளந்து பேசு, தசரத்!, நான் உன்னோட அண்ணனோட நண்பன்-ங்குறது நினைவிருக்கட்டும்.
தசரத்: நீங்க வீண் பெருமை பேசுறீங்க. 1946ல இந்த கோடாரியை நீங்க என் கையில குடுக்கும்போது, 'உள்ளூர் இளவட்ட பசங்க இந்த இடத்தை பாதுகாக்கலேனா, வேற யாரு பாதுகாப்பங்கன்னு' சொன்னீங்க. கலவரங்கள் நின்னதுக்கு அப்புறம், அதுனால ஏற்பட்ட தொல்லைகள்னால, எனக்கு படிப்பைத் தொடரணும்னு தோணல. சாதாரணமான வாழ்க்கையை என்னால வாழவே முடியல. வறுமையில வாடுன நான் ஒரு நாள் உங்களை சந்திச்சப்போ சாராயத்துக்கு பணம் கேட்டேன். (சாகரிடம்) அப்போ இவர் என்ன சொன்னாரு தெரியுமா சாகர் தா, 'நீ ஒரு போக்கிரி'னு சொன்னாரு. இன்னைக்கு நான், வெறும் வாக்கு மட்டுமே கொடுத்து வேலை வாங்குறவங்களுக்காக ஓடிக்கிட்டு இருக்கேன். (சவுத்ரியிடம்) உங்களை மாதிரி ஆளுங்களை எனக்குத் தெரியும் சவுத்ரி தா, எனக்கு உங்களை மாதிரி ஆட்கள் எப்படின்னு தெரியும்.
சவுத்ரி: யாருடா இவன், இப்படியா ஒருத்தன் வாய்க்கு வந்ததை ஒளறிக்கிட்டு இருப்பான். என்னை நம்பு, நான் காலி சாகா-வை கடையை திறந்து வைக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன். யாருக்காக? எல்லாம் உனக்காக மட்டும் தான்.
தசரத்: இதை ஏன் நீங்க முன்னாடியே சொல்லல?
சவுத்ரி: நம்ம பசங்க, இன்னைக்கு அந்த ரெண்டு பதான்களை முடிஞ்சுட்டு தான் நாள்-ஐ தொடங்கியிருக்கீங்க.
தசரத்: சவுத்ரி தா, நான் ஒன்னு சொல்லட்டுமா?
சவுத்ரி: என்ன? சொல்லு.
தசரத்: ரெண்டு பேரு இல்லை. ஒருத்தன் தான். அவனும் பாக்க பதான் மாதிரி இல்ல, ரொம்ப சாதுவா, பயந்தாங்கொள்ளி வங்காளி மாதிரி தான் இருந்தான்.
சவுத்ரி: எப்படியும் இருந்துட்டு போகட்டும். அப்போ ரெண்டு பேரு இல்ல, ஒரு பதான் தான் இருந்தான்னு சொல்லுறியா?
தசரத்: ரெண்டு பேரு இருந்தாங்க. நாம ரெண்டு பேரும் அவங்களை தூரத்துல இருந்து பார்த்தோம் தானே. ஆனா அவங்களை துரத்தும்போது, அதுல ஒருத்தன், இந்த தெருக்களுக்குள்ள காத்து மாதிரி மறைஞ்சு போயிட்டான். போலீஸ் தேடுதல் வேட்டையை முடிச்சுட்டு கிளம்புனதும் நாம வெளிய போயி அவனை தேடிப் பிடிப்போம்.
சவுத்ரி: அப்போ இங்க இருக்குற தெருக்கள்ல ஏதோ ஒன்னுல அவன் மறைஞ்சிருக்கான்னு நீ சொல்லுறியா? கடவுள் தான் நம்மை காப்பாத்தணும்!
தசரத்: அது பரவாயில்ல. சரி வாங்க, இப்போ அந்த வெளிநாட்டு மதுவை சுவைக்கப் போவோம். அதுக்கப்புறம் அந்த இன்னொருத்தனுக்காக நாம நம்மளோட தேடுதல் வேட்டையை ஆரம்பிப்போம்.
சவுத்ரி: தசரத், உன் ஆடை மேல ரத்தம் படிஞ்சிருக்கு.
தசரத்: ஆமா. சோடா பாட்டிலை உடைச்ச மாதிரி அவனைக் கொல்லும்போது அவன் ரத்தம் பீய்ச்சிகிட்டு வெளிய வந்துச்சு. அப்படி மனுஷ உடம்புல எவ்ளோ ரத்தம் தான் இருக்கும் சாகர் தா?
சவுத்ரி: அதை பற்றி நாம அப்புறம் பேசுவோம். நீ போயி உன் உடைகளை மாத்திக்கிட்டு வா. அந்தக் கோடாரியை இங்கேயே விட்டுட்டு போ. சாகர், இந்தக் கோடாரியை ஒளிச்சு வைக்குற மாதிரி இங்க ஏதும் இடம் இருக்கா?
சாகர்: அதை என்கிட்ட கொடுங்க.
(அவன் கோடாரியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்கிறான்)
தசரத்: சாகர் தா இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்காரு. ஏதோ சிந்தனையில இருக்குற மாதிரி இருக்கு.
சவுத்ரி: உனக்கு எதுக்கு அதெல்லாம்? உனக்கோ, எனக்கோ சிந்தனையைப் பற்றி என்ன அக்கறை. அவன் இசையில மூழ்கியிருக்குறவன். அதேநேரம் நிறைய விதமான ரசனை உள்ளவன்.
தசரத்: அதுனால தான் அவரு இன்னைக்கு ஒரு மாதிரி இருக்காரா? நானும் கூட ஒரு காலத்துல புல்லாங்குழல் வாசிக்கிறது உண்டு. அந்தப் புல்லாங்குழல்ல அற்புதமான காம்பாஜ் ராகத்தை வாசிச்சது எனக்கு நினைவிருக்கு.
சவுத்ரி: நாம இப்போ கிளம்புனா நல்லது. எந்த நேரமும் போலீஸ் இங்க வரலாம்.
தசரத்: ஆமா. நானும் உடை மாத்தியாகணும்.
சவுத்ரி: போய் மாத்திட்டு வா, நான் இங்கேயே இருக்கேன்.
(தசரத் செல்கிறான். அவன் வெளியேறியதும் சவுத்ரி கதவைப் பூட்டச் செல்கிறார். மோட்டார் வாகனம் உறுமலுடன் செல்லும் சத்தம் கேட்கிறது. சவுத்ரி அதைக் கூர்ந்து கேட்கிறார். அந்தச் சத்தம் தேய்கிறது. அது சாலையில் செல்லும் ஏதோ லாரியின் சத்தம். சவுத்ரி, கதவு பக்கம் இருந்து திரும்பி வந்து அறையின் நடுவில் நிற்கிறார். மரச் சட்டகத்தில் இருக்கும் ஹேங்கர்களில் தொங்கும் உடைகள் சற்று முன்னோக்கி அசைந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அசைவற்றிருக்கிறது. சவுத்ரி ஏதோ சோகமான பாவனையுடன் அந்த அறையின் காலி சுவர்களைப் பார்க்கிறார். அப்படி அவர் பார்க்கும் தோரணை, அவர் தூரத்தில் எங்கோ பார்த்துக்கொண்டிருப்பது போல பட்டது. திடீரென அவர் தனது விரல்களை, சுவரில் தொங்கிக்கொண்டிருந்த தம்புராவின் கம்பிகளின் மேல் அலைகிறார். ஒரு ஆழமான தீர்க்கமான சத்தம் அறையில் எதிரொலிகிறது. சாகர் வருகிறான்.)
சாகர்: சவுத்ரி தா!
சவுத்ரி: (தனது சிந்தனையிலிருந்து விடுபட்டவராய்) அது சரி (திரும்பி) சாகர், நீ ஒன்னு தெரிஞ்சிக்கணும்? இந்தக் கலவரம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்குமோ அதுவரைக்கும் தசரத் தினம் தினம் குடிக்ச்சிட்டே இருப்பான். ஆனா, சகோதரா, அவன் ஒவ்வொரு முறை சாராயம் கேட்கும்போதும் வாங்கித் தர என்னால முடியாது. அக்கம்பக்கத்துகாரங்களும் தந்து உதவணும்.
சாகர்: காசா!
சவுத்ரி: சரியா சொன்ன. இது என்னோட கடமை மட்டும் கிடையாது. இந்தப் போக்கிரிகளை நாம சந்தோஷமா வச்சுக்கணும்.
சாகர்: ஏன்?
சவுத்ரி: நீ இப்படி கேக்குறது எனக்கு வியப்பா இருக்கு. முஸ்லிம்கள் தாக்கும்போது நம்மை யார் காப்பாத்துவா? நீயும் நானும் அதுமாதிரி அசுத்தமான வேலையை செய்ய முடியாது.
சாகர்: உங்களுக்கு ஒன்னு தெரியுமா, சவுத்ரி தா, அவன் உடை மேல ரத்தத்தைப் பார்த்ததுல இருந்து என்னோட மனசு உருத்திக்கிட்டே இருக்கு. அதுவும் ஒரு சக மனுஷனோட ரத்தம் தானே. மனித உடம்புல எவ்வளவு ரத்தம் ஓடும்னு அவன் என்கிட்ட கேட்டப்போ எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு. கொலை செய்யப்படும்போது ஒரு மனுஷனோட உடம்புல இருந்து கொப்பளித்த ரத்தம் அவனுக்குள்ள இந்தக் கேள்வியை உண்டு பண்ணியிருக்கணும். அப்படி நான் யாரையும் எப்பவும் கொல்ல வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நம்புறேன்.
சவுத்ரி: அதுனால தான் நாம அவங்களுக்கு காசு கொடுக்கணும். முஸ்லிம்கள் விஷப் பாம்புங்க மாதிரி. அவங்க மனுஷப் பிறவிங்களே கிடையாது. டாக்கா இப்போ என்ன நிலைமையில இருக்குன்னு உன்னால கற்பனை பண்ணியும் பார்க்க முடியுதா? உன்னோட தங்கச்சியும் இப்போ டாக்காவுல தான் இருக்குறா. அங்க படுகொலைகள் நடந்துகிட்டு இருக்கு. இங்க இருக்குற இந்தப் போக்கிரிகளை நாம கவனிச்சுக்களேனா, டாக்காவுல நடக்குறது போல நாமளும் வெட்டிக் கொல்லப்படுவோம். இதுக்கு நீ என்ன சொல்லப் போற?
சாகர்: எவ்வளவு?
சவுத்ரி: என்ன?
சாகர்: நான் எவ்ளோ காசு கொடுக்கணும்?
சவுத்ரி: (தயக்கத்துடன்) இப்போதைக்கு பத்து ரூபாய் கொடு போதும்.
(சாகர், துணிகள் தொங்கும் சட்டகத்தை நோக்கி நடந்து சென்று, அங்கு தொங்கும் சட்டையில் உள்ள பைக்குள் பார்க்கிறான். அதில் பணம் இல்லை. இன்னொரு சட்டையில் உள்ள பைகளை துழாவுகிறான். அதிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு திரும்பி வருகிறான்)
சாகர்: இதை வாங்கிக்கோங்க. (சவுத்ரி அதை வாங்கிக்கொண்டு செல்ல முற்படும்போது சாகர் அவரை அழைத்து) கொஞ்சம் பொறுங்க. நானும் உங்களோட வரேன். இந்த அறையில தனியாவே இருக்க எனக்கு பிடிக்கல.
சவுத்ரி: அந்தத் தப்பிச்சுப்போன முஸ்லிமை பற்றி கேட்டதும் உனக்குத் தனியா இருக்க பயமா இருக்கா?
சாகர்: இல்ல. அவ்வளவு ரத்தத்தை பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுக்கு எல்லாம் மேல, டாக்காவுல இருக்குற என் தங்கச்சி பற்றி தான் நினைச்சுகிட்டு இருக்கேன்.
சவுத்ரி: அப்படினா சரி, வா போவோம். வெளியே ஒரு நடை போய்ட்டு வர்றது உனக்கு உதவும்.
(சாகர் துணிச் சட்டகத்தை நோக்கி மீண்டும் வருகிறான். சற்றுமுன் பணத்தை எடுத்த சட்டையை எடுக்கிறான். அதை அவன் தன் கையில் பிடித்தவாறு அறையின் நடுவில் வந்து நிற்கிறான். அதேநேரம், சவுத்ரி கதவைக் கடந்து தெருவில் இறங்கி சாலையை பார்த்தவண்ணம் இருக்கிறார். அந்தங் சட்டையை சாகர் போட்டுக்கொள்ள முற்படும்போது அதில் ரத்தம் இருப்பதைப் பார்த்து அவன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை.
சவுத்ரி: (கதவின் வெளியே நின்றவாறு) நீ சட்டையை மாட்டியாச்சா?
சாகர்: (திடுக்கிட்டவனாய், சட்டையில் ரத்தக்கறை உள்ள இடத்தை மறைத்தவாறு) ஆமா, ஆமா (அவன் முன்னே அடியெடுத்து வைத்து) சவுத்ரி தா, நீங்க போங்க.
சவுத்ரி: அப்போ நீ?
சாகர்: நீங்க போங்க. இப்போ வெளிய போற மனநிலை இல்ல.
சவுத்ரி: கடவுள் தான் காப்பாத்தணும்! நான் சுத்துவட்டாரத்துல ஒரு நடை போயிட்டு வரேன்.
(சவுத்ரி செல்கிறார். சாகர் கதவின் வெளியே கழுத்தை நீட்டிச் சுற்றுமுற்றும் பார்க்கிறான். அதன்பின் கதவைச் சாத்துகிறான். அவன் முகம் இப்போது சாந்தமாக இருக்கிறது. அவன் மெதுவாக அறையைச் சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளறைக்குச் செல்கிறான். மேடை காலியாக உள்ளது. சட்டகத்தில் தொங்கும் ஆடைகள் கொஞ்சம் நகர்கின்றன. சாகர் கையில் கோடாரியுடன் மீண்டும் அந்த அறைக்குள் வருகிறான். அவன் மேடையின் நடுவே நின்றுகொண்டு, அங்கு வட்டமாக உள்ள மேஜை மீது அந்த கோடாரியை வைக்கிறான். பின்னர், நாற்காலியில் அமர்ந்து தன் கைகளை தொடையில் வைத்தவண்ணம் இருக்கிறான்)
சாகர்: (சாந்தமான தொனியில் பேசுகிறான்) துணி சட்டகத்துக்கு பின்னாடி இருந்து வெளிய வா!
(உடைகள் மீண்டும் அசைகின்றன. அதன்பின் அமைதி கவிகிறது)
நீ அங்க ஒளிஞ்சிருக்கேன்னு எனக்குத் தெரியும். நீ தான் அறைக்குள்ள வந்தப்போ கதவைத் தாழிட்டு பூட்டியிருக்கணும்….
(எந்தப் பதிலும் வரவில்லை. சாகர் நாற்காலியை விட்டு எழுந்து, கோடாரியைக் கையில் எடுத்துக்கொண்டு முன்னே அடியெடுத்து வைக்கிறான்)
நீ சரியா எந்த இடத்துல இருக்கேன்னு எனக்குத் தெரியும். உன் காலை என்னால பார்க்க முடியுது. நான் கையில வச்சிருக்க இந்தக் கோடாரி தான் உன் நண்பனோட உயிரை எடுத்தது. இதால உன்னை வெட்டுனா... செய்யவா?
(துணி சட்டகத்தின் பின்னால் இருந்து பயத்தில் நடுங்கியவாறு ஒரு குரல்,)
குரல்: வேண்டாம்
சாகர்: அப்போ உன்னோட ஆயுதங்களை எல்லாம் கீழ போடு.
குரல்: எந்த ஆயுதமும் இல்ல
சாகர்: எந்த ஆயுதமும் இல்லையா?
குரல்: இல்ல
சாகர்: ஹம்ம். (ஒரு கணம் யோசித்துவிட்டு, சட்டென கோடாரியை உயர்த்தி) நீ மட்டும் இப்போ வெளிய வரலேனா உன்னை இந்த கோடாரியால வெட்டிடுவேன்.
(சாகர், அந்தத் துணிச் சட்டகத்தை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைக்கையில், ஒரு சிறுவன் அங்கிருந்து வேகமாக வெளியே வருகிறான். அவனது முகம் முழுக்க ரத்தம் தோய்ந்து கோரமாக காட்சியளிக்கிறான். சாகர் கூச்சலிட்டவாறு பின்னோக்கி நகர்கிறான். அவன் கையில் இருந்த கோடாரி நழுவி கீழே விழுந்ததை அவன் கவனிக்கவில்லை. தூரத்தில் நின்ற வண்ணம் இருவரும் முற்றான அமைதியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். அதன்பின் இருவரும் கீழே கிடக்கும் அந்தக் கோடாரியை நோக்கி, புலிகளைப் போல ஒரே நேரத்தில் பாய்கின்றனர். சாகர் கோடாரியை எடுக்கிறான். முஸ்லிம் சிறுவன் கத்தியவாறு கதவை நோக்கி ஓடுகிறான். சாகர் திரும்பிப் பார்க்கிறான். கதவின் அண்டை முதுகுப்புறமாய் திரும்பி நின்றவாறு முஸ்லிம் சிறுவன் சாகரின் அச்சமூட்டும் கண்களை பார்க்கிறான். சாகரின் கைகளின் ஒவ்வொரு அசைவும் சிறுவனைப் பதற்றத்தில் திடுக்கிடச்செய்கிறது. அவன் ஏதோ மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவன் போல காணப்படுகிறான். சாகர் கோடாரியை உயர்த்த, சிறுவன் பின்வாங்குகிறான். அவனுக்கு அதிகப்படியாக வியர்க்க அவனது உதடுகள் நடுங்கியவண்ணம் உள்ளன. சாகர் கோடாரியை மெதுவாக கீழே இறக்கி பின் நிதானமாக அதைத் தன் கால் அருகே வைக்கிறான். சிறுவன், சாகரை அப்பாவித்தனமாக பார்த்த வண்ணம் இருக்கிறான். சாகர் தன் தலை முடியை ஒரு தரம் கோதிவிட்டு, நாற்காலியில் சென்று அமர்கிறான். முஸ்லிம் சிறுவனின் முகத்தில் உயிர் தப்பிவிடுவோம் என்ற சிறு நம்பிக்கை பிரகாசிக்கிறது. அவன் அந்த கோடாரியை எட்டிச் சென்று எடுக்கலாமா என்ற குழப்பத்துடன் பார்க்கிறான். ஆனால் அவனால் முன்னே அடியெடுத்து வைக்க முடியவில்லை. முற்றிலும் சோர்ந்தவனாக அவன் தன் பின்னால் இருக்கும் கதவை ஒருகணம் திரும்பிப்பார்த்துவிட்டு, பின் அப்படியே தரையில் குத்தவைத்து அமர்கிறான். சாகர் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை துளிர்க்கிறது. சிறுவன், தன் முகத்தை துடைத்தவாறு, சாகர் சிரிப்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கிறான். அவனும் லேசாக சாகரைப் பார்த்து சிரிக்கிறான்.)
கொஞ்சம் தண்ணி குடிக்கிறியா? நான் தண்ணி எடுத்துட்டு வரவா?
சிறுவன்: (அவன் கைகளைப் பார்த்தவாறு) இல்ல வேண்டாம்.
(இருவரும் ஒருவரை ஒருவர் கனிவுடன் பார்த்த வண்ணம் இருக்கின்றனர்)
--------------திரை--------------


கருத்துகள்
கருத்துரையிடுக