பொதுப் போக்குவரத்தின் நடுவில் - அழகுராஜ் ராமமூர்த்தி

பொதுப் போக்குவரத்தின் நடுவில் - அழகுராஜ் ராமமூர்த்தி 

     கூதிர் இணைய இதழ் மற்றும் யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய ஐந்து ஆளுமைகள் (தென்தமிழகம் - புதுவை) கருத்தரங்கிற்காக பாண்டிச்சேரிக்கு செல்ல நண்பர்களுடன் இணைந்து திட்டமிட்டிருந்தேன். ஆனால், போய்ச் சேர்வதற்குள் அடுக்கடுக்கான தடைகள். மாணவப் பருவத்தில் இருந்த சுதந்திரத்தையெல்லாம் இழந்த உணர்வு. தான் நினைத்த ஒரு இடத்திற்கு செல்வதற்கும் சென்று திரும்புவதற்கும் இடையில்  கலவையான அனுபவங்கள் கிடைக்கின்றன. எது எப்படியிருப்பினும் இப்பயணம் லேசாக புத்துணர்ச்சியைத் தூண்டிவிட்டுள்ளது. இரண்டு மாதத்திற்குள் தற்போது கிடப்பில் உள்ள வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் இலக்கியம் சார்ந்த பணிகளைத் தொடர வேண்டும் என்ற உத்வேகம் கிடைத்திருக்கிறது. 

     இந்தப் பயணத்தின்போது வீடு திரும்பி வரும்போது பேருந்தில் கண்ட ஒரு நிகழ்ச்சி இருபத்து நான்கு மணிநேரத்தைக் கடந்தும் என்னைத் தொந்தரவு செய்கிறது. பேருந்தில் பயணிக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற முறையியல் பொதுமக்களுக்கு கற்றுத் தர வேண்டும். குறிப்பாக, மாணவர்களுக்கு கற்றுத்தரும் பட்சத்தில் அது வரக்கூடிய பத்து ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டின் நாகரிகத்தை வளர்க்கும் வகையில் அமையும். முன்னர் நான் தூக்கமின்மைக்கு ஆட்பட்டிருந்தை சிலர் அறிவர். அப்போதைய பயணங்களின்போது இரவு நேரத்தில் ஒரு பேருந்திலிருந்து மற்றொரு பேருந்துக்கு மாறி மாறி செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது பல்வேறு நபர்களின் செயல்பாடு எனக்கு வித்தியாசமாக தெரிந்திருக்கிறது. 

     குறிப்பாக, குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்று திரும்புபவர்கள் அதிகமாக கவனத்தை ஈர்ப்பர். அவர்களில் பலர் அரை போதையிலேயே பேசிக்கொண்டு வருவர். ஒரு நாடகத்தின் காட்சியைப் பார்ப்பது போல அவர்களைப் பார்த்து கொண்டிருந்திருக்கிறேன். விடுபடுதலுக்கு ஆட்பட்டவர்களாக அவர்களது செய்கைகள் இருக்கும். உறவுப் பெயர்களுடன் உடனிருப்பவர்களை அழைத்துக்கொண்டு சின்ன சின்ன கலாட்டாவில் வேறு எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாதவாறு தங்களுக்குள் பேசிக்கொண்டு இருப்பர். அவர்களைப் பார்க்கும் போது தெருவோரத்தில் நின்றுகொண்டு தன் கலையை‌ உலகிற்கு வெளிக்காட்ட முனையும் கலைஞனின் தோற்றத்தில் எனக்குத் தெரிவார்கள். 

     ஆனால், இவர்களிலிருந்து வேறுபட்ட சிலர் தங்களுடன் ஆட்கள் இருக்கிறார்கள் என்கிற வெட்டிப் பந்தாவினால் சுற்றியிருப்பவர்களை எரிச்சலுக்கு உள்ளாக்குவர். அப்படியொரு குழுவை குற்றாலத்தில் பார்த்தேன். சாலையினுள் இருந்து பழைய குற்றாலத்திற்குள் செல்வதற்கு அரசு பொதுப் போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி. ஆட்டோ குறிப்பிட்ட தூரம் வரை செல்லலாம். பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பான சர்ச்சையும் சில மாதங்களுக்கு முன் பேசுபொருளானது. கட்டணம் வசூலிப்பு, பராமரிப்பு போன்றவை குறித்து எனக்கு சில கருத்துகள் உண்டு. அதனைத் தனியே பார்ப்போம். பழைய குற்றாலத்தின் விதிப்படி குளிப்பதற்கு கட்டணம் இல்லை. செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி குளிப்பதற்கு தடை. மது அருந்த தடை. பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடை. மேலும் பேருந்திற்குள்ளும் அருவிக்குள் செல்வதற்கு முன்பும் வனச்சரக காவலர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என்பதை நன்றாக சோதித்தே உள்ளே அனுப்புவர். சாலையினுள் இருந்து அருவிக்கு அருகில் வரை சென்று இறங்க வேண்டுமானால் அரசுப் பேருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மலைப்பகுதி என்பதால் டவர் கிடைப்பதில் சில பிரச்சினைகள் உண்டு. அதனால் ஜிபே பயன்பாடு இல்லை. அது தெரிந்திருத்தும் ஒரு குழுவினர் மது அருந்தியதோடு பேருந்தில் ஏறி பயணச்சீட்டுக்குரிய பணத்தை ஜிபே மூலம் தான் கொடுப்பேன். இல்லையென்றால் கொடுக்க மாட்டேன் என வம்பு வளர்த்துக்கொண்டிருந்தனர். உடனிருப்பவர் தருவதற்கு முன்வந்தாலும் அவர்களில் ஒருவன் மனப்பிறழ்வு ஏற்பட்டவனாக அவர் கொடுப்பதைத் தடுத்து கத்திக் கொண்டிருந்தான். குளிக்கும்போது உற்சாக மிகுதியால் கத்துவது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வாடிக்கையான செயல். அங்கு வந்து குதித்துக் கொண்டு மற்றவர்கள் மீது விழும் அநாகரிக செயலும் அரங்கேறியது. இதெல்லாம் உடன் ஆட்கள் இருக்கிறார்கள் எதையும் செய்யலாம். நமக்காக அவர்கள் உடனிருப்பர் என்ற மெத்தனத்தின் வெளிப்பாடு. 

     நேற்று ஒருவர் எதற்காகவோ உறுமிக்கொண்டும் கத்திக்கொண்டும் உட்கார்ந்துள்ளார்‌. அந்தச் சத்தம் முன்னிருக்கையில் தூங்கிக்கொண்டிருந்தவரின் உறக்கத்தைக் கெடுத்துவிட அவர் பின்னால் இருப்பவரை நோக்கி குடிகாரன் எனச் சொல்ல வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை சென்றது. பேருந்திற்குள் அது ஊர் பிரச்சினையாகி பேருந்து நிலையத்தில் அடிதடியாக மாறியது. இதில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் தன்னுடன் வந்த இளம்பெண்ணின் சொற்களுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து சண்டையை வளர்த்தான். அந்தப் பெண்ணின் மனநிலை இச்சம்பவத்தின்போது எப்படி இருந்திருக்கும் என்பதைக் கூட யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவரோடு வந்த பெண் மறுபுறம் சண்டையை வளர்ப்பதில் மும்முரமாக இருந்தார். பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றவுடன் இந்தச் சண்டையை சுற்றி நின்று பார்த்தவர்களுடன் எழுந்த ஊர்ப்பிரச்சனையைத் தொட்டு அவர்களின் அடிதடி வேட்கைக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் ஆட்பட்டான்‌. நான் ஏற்கனவே குறித்த நேரத்தில் கிளம்பவில்லை என்பதால் அடுத்த ஊருக்குச் செல்வதற்கு தயாராக இருந்த பேருந்தை நோக்கி விரைந்தேன். ஆனால் மனம் நடந்த சம்பவத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.

      நள்ளிரவிலும் பெண்கள் (குறிப்பாக வெளியூரில் படிக்கும் மாணவிகள்) தனியாகப் பயணம் செய்யும் அளவிற்கான வசதியும் சூழலும் தமிழ்நாட்டில் வளர்ந்திருக்கிறது. அதே சமயம் இப்படியான விரும்பத்தகாத சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஒரு ஜனநாயக சமூகம் அனைத்திற்கும் இடமளிக்கும் வகையிலானது என்றாலும்கூட அது பிறரைத் தொந்தரவுக்கு உள்ளாக்கக்கூடாது. தன்னுடைய தூக்கத்தைக் கெடுத்ததாக குற்றஞ்சாட்டி கோதாவில் இறங்கி மொத்து வாங்கியவனுக்குத் தன்னுணர்வு என்பதே இல்லை.  அவனுடைய செயலால் பேருந்தில் பயணிக்கும் பலரின் தூக்கம் களைக்கப்படுகிறது என்ற உணர்வற்றவனாகவே அந்த இடத்தில் வெளிப்பட்டான். தற்போது இப்படியான சம்பவங்கள் என்ன காரணத்திற்காகவோ அதிகம் என்னுடைய மனதிற்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முன்னரும் பல சண்டைகளைப் பார்த்துள்ளேன். அவையெல்லாம் சாதாரண நிகழ்வாகவே நகர்ந்துள்ளது.  அப்போதெல்லாம் அது ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாகத் தென்பட்டதில்லை. இப்போது அந்த நிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

      யாருக்கும் தொந்தரவற்று வேடிக்கையாக வலம் வரும் நபர்களைப் பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அதேபோல  பசிக் களைப்பில் மது அருந்தியவர்களின் சாயலிலில் பயணிக்கும் ஒற்றை நபர்களை நாம் பயணத்தில் சந்திக்க நேரிடும். ரித்விக் கட்டக் நாடகங்களை வாசித்த பின் அவர்களில் நான் நாடகத்தின் கதாபாத்திரங்களாக அவர்களைக் காண்கிறேன். பார்ப்பதற்கு பரிதாபமான தோற்றத்தில் இருந்தாலும் அவர்கள் எப்படி நடந்துகொள்ளக்கூடியவர்களாக இருப்பார்கள் என்ற ஒரு தீர்மானமான அனுமானத்திற்குள் அடங்காதவர்களாகவே அவர்கள் இன்னும் நினைவில் தங்குகின்றனர்‌. 

      பொதுப் போக்குவரத்தை அதிகம் ஊக்குவிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். அதிகரிக்கும் வாகனங்கள் அதற்காக போடப்படும் சாலைகள் என நாட்டின் வருவாய் வளர்ச்சி சார்ந்த கூறுகள் ஒருபுறம் இருப்பினும் தற்போது மாறி வரும் பருவநிலை மாற்றங்களுக்கும் போக்குவரத்துப் பெருக்கத்திற்கும் இடையில் பல்வேறு வகையில் தொடர்புண்டு. ஆகவே, பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். பொதுப் போக்குவரத்தின்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பள்ளியில் மாணவர்கள் கவனமாகப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஏறிச் செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும் பணி எனக்கு ஒதுக்கப்படுவதுண்டு. அச்சமயத்தில் சிலவற்றைக் கவனித்திருக்கிறேன். அதனடிப்படையில் நடத்துநர் நடந்துகொள்ளும் விதம், மாணவர்களின் செயல்பாடு, அவர்கள் தூக்கிச் சுமக்கும் புத்தகப்பை, பேருந்தில் இருக்கும் மாணவரல்லாத பிற பயணிகள் என ஒவ்வொன்றாக நாம் யோசித்தால் பொதுப் போக்குவரத்தில் முறையாக மக்கள் செயல்படுவதற்கு பல பத்தாண்டுகளை நாம் செலவிட நேரிடுமென தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"கவிப்பேரரசர்களின் கவியமுதம்" நூலறிமுகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

கரப்பான் அரசியலில் எச்சரிக்கை தேவை -அழகுராஜ் ராமமூர்த்தி

தேடல் பறவை