கடல் கடலாளிக்கே ஆவணப்படம்

   

     காம்ரேட் டாக்கீஸ் வெளியிட்டுள்ள கடல் கடலாளிக்கே ஆவணப்படம் அனைவரும் பார்க்க வேண்டியது. மிகச்சிறிய ஆவணப்படம். 15 நிமிடங்களுக்குள் பலவித செய்திகளையும் உணர்வுகளையும் அழகுற காட்சிப்படுத்தியுள்ளனர் காம்ரேட் டாக்கீஸ் குழுவினர். மிகக் குறுகிய கால அளவுக்குள் சொல்ல வந்த செய்தியைச் செறிவாக கடத்தும் வகையில் படத்தொகுப்பு செய்துள்ளனர். இந்த ஆவணப்படம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவ மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களையும், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) அறிவிப்பாணைகள் எவ்வாறு அவர்களது வாழ்வுரிமையைப் பாதிக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

      நாம் பொழுதுபோக்குக்காக கடலைத் தேடிச் செல்கிறோம். ஆனால், கடலும் கடற்கரையும் பாரம்பரிய மீனவ சமுதாயத்தின் பொதுச்சொத்து (படகு நிறுத்துமிடம், வலை பின்னும் இடம், மீன் உலர்த்தும் இடம்). பொழுதுபோக்கு சுற்றுலாவின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாவுக்காக கட்டப்படும் ரிசார்ட்கள் கடலின் இயற்கை தகவமைப்பை எப்படி சீர்குலைக்கின்றன என்பதை மீனவ மக்கள் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளனர். தொழிமயமாக்கல் என்ற பெயரில் அங்கு வாழும் மக்களின் வாழ்விடங்களும், தொழில் செய்யும் இடங்களான கடற்கரையை ஒட்டிய பகுதிகளும் பறிக்கப்படுகின்றன. 1991, 2011 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட இந்த கடற்கரை ஒழுங்குமுறை சட்டங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகக் கூறினாலும், நடைமுறையில் பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக்கும், சுற்றுலாத் திட்டங்களுக்கும் வழிவகுத்துள்ளன. அரசு ஆக்கிரமித்து தனியாருக்கு விற்கும்போது முழு உரிமையும் தனியாருக்குச் செல்வதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். வடசென்னை முதலான பல படங்களில் மீனவர் உரிமை மக்களால் பேசப்பட்டு இருக்கிறது. இன்றும் மீனவர் உரிமை பேசும் மக்களை கடத்தல்காரர்களாக சித்தரிக்கும் மனப்போக்கை அரசு சித்தரித்து வருகிறது. இப்படி செய்வதற்கு அரசை தனியார் முதலாளிகள் இயக்குகின்றனர்‌.


       இந்த ஆவணப்படத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களாக கீரப்பாளையம் மற்றும் சின்னவீராம்பட்டினம் போன்ற கிராமங்கள் சுட்டப்படுகின்றன. அரிக்கமேடு பகுதிக்கு நண்பர்களோடு இரண்டு முறை சென்றுள்ளேன். படகுச் சுற்றுலா என்ற பெயரில் அங்கும் தனியார் ஆக்கிரமிப்பு படிப்படியாக நடந்தேறி வருகிறது. இப்படி பல்வேறு சுற்றுலாத் திட்டங்களால் (பாண்டி மெரினா, ஈடன் பீச்) மீனவர்கள் தங்கள் அன்றாடப் பாதையையும், தொழில் செய்யும் இடங்களையும் ஒருபுறம் இழந்து தவிக்கின்றனர். மறுபுறம் வரலாற்று நினைவுச் சின்னங்களை ஒட்டிய பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இனிவரும் காலங்களில் தனியார் நிறுவனங்களே வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கும் நிலை பாண்டிச்சேரியில் உருவாகிவிடுமோ என்கிற ஐயமும் உடன் எழுகிறது. இதுமட்டுமின்றி, கடற்கரையை 'வெற்று நிலமாக'க் (Fellow land) கருதி, அங்கு மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளையும் நிறுவி வருகின்றனர் என்பது பதிவாகியுள்ளன.


      துறைமுக விரிவாக்கத் திட்டங்களால் கடல் அரிப்பு அதிகரித்து, மீனவ மக்கள் தங்கள் குடியிருப்பு மற்றும் தொழில் செய்யும் இடங்களை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. பாரம்பரியமாக மீன்களைக் காயவைக்கும் இடங்களை இழப்பதாலும், கடலரிப்பு காரணமாக கடற்கரை சுருங்கி வருவதாலும் மீனவப் பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அரசின் நீலப் பொருளாதாரம் (Blue Economy) வளர்ச்சித் திட்டங்கள் மீனவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், இதில் முதலாளித்துவ நிறுவனங்களின் தலையீடு இருப்பதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கூர்ந்து பார்த்தால் மீனவர்களின் கருத்திலும் உண்மை புலப்படுகிறது. வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றும், மீனவர்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றும் இக்காணொளியில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு இயற்கை வளம் கொழிக்கும் பகுதியையும் அங்கு வாழும் மக்களுக்கு இடையூறின்றி அரசு சுற்றுலா தளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும். கடல், மலை போன்ற இயற்கைப் பகுதிகள் சுற்றுலா தலங்களாக மாற்றப்படும் போது அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் அவர்களுக்கு முன்னுரிமை தரும் திட்டங்களை வடிவமைத்திடுதல் வேண்டும். அதுவே சிறந்த தீர்வாக அமையும்.


-அழகுராஜ் ராமமூர்த்தி


ஆவணப்படத்திற்கான இணைப்பு:

https://youtu.be/jeF26nPkizQ?si=KFbaxpVngZHmFoU9

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"கவிப்பேரரசர்களின் கவியமுதம்" நூலறிமுகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

கரப்பான் அரசியலில் எச்சரிக்கை தேவை -அழகுராஜ் ராமமூர்த்தி

தேடல் பறவை