குடும்பத்தேர் (மூன்றாம் அலை இரண்டாம் பாகம்) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)
குடும்பத்தேர் (மூன்றாம் அலை: இரண்டாம் பாகம்) - ரித்விக் கட்டக்
(தமிழில் -தீனன்)
(அதே காலனி வீடு. கதவு திறந்திருந்தது. ஹாரு படுக்கையில் படுத்திருக்கிறான். பத்மா, ஒருவித அதிர்ச்சியுடன், அவனருகே அமர்ந்திருக்கிறாள். பத்மாவும், தேபுவும் வெளியில் இருந்து வருகின்றனர். அவளது சேலை தொப்பலாக நனைந்தும் கிழிந்தும் உள்ளது. அந்தச் சேலையை தன்னைச் சுற்றி இறுக்கமாக பத்மா சுற்றிக் கொள்கிறாள்.)
தேபு: ஓ! வெளியில ஒரே மழையும் சேறுமா இருக்கு! குளிர்க்காலத்துல இந்த காத்து வேற!
பத்மா: பாபு, மண்டல் உடைய மனைவி கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரலை, நான் அதைஅ கவனிச்சேன்.
தேபு: நீ மறுபடியும் அதைப் பத்தி தான் யோசிச்சுகிட்டு இருக்கியா?
பத்மா: என்னால அதை மறக்க முடியல, பாபு. அவங்க கண்ணு முன்னாடியே அவங்க மகன் செத்துப் போனான். ஆனா அடக்கம் செய்ய பணம் இல்லைங்குற காரணத்துக்காக, உடம்பைக் காட்டுல வீசிடுங்கன்னு அவ்வளவு சுலபமா அவங்களால எப்படி சொல்ல முடிஞ்சது? அந்தக் காட்டுல என்ன நடக்கும்னு உங்களுக்குத் தெரியுமா?
தேபு: என்ன நடக்கும்?
பத்மா: குள்ளநரிகள் ராத்திரியில அங்க வரும். நேத்து, ஜனார்தன் மாலியோட மகன் தலையை அதுங்க துண்டாக்கிடுச்சுங்க.
தேபு: என்ன சொல்ற நீ?
பத்மா: அவரோட மகன் இறந்துட்டான். ஒவ்வொரு நாளும் டஜன் கணக்குல குழந்தைங்க சாகுறாங்க இங்க. இது ஒரு கொள்ளை நோய். இந்த இடமே ஒரு நரகம் மாதிரி இருக்கு.
தேபு: அப்படி எல்லாம் பேசாத. நோய்த்தடுப்பு குழு இங்க வந்து சேர்ந்துட்டாங்க. முகாம்ல மத்த வீடுகளை சோதனையிட்டதுக்கு அப்புறம் அவங்க இங்க வருவாங்க. நீ தான் அவங்களை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போய் காமிக்கணும். மறுபக்கத்துல இருக்குறவங்களையும் மைதானத்துக்கு நடுவுல வந்து கூட சொல்லு. இந்தக் காலனிக்குன்னு இருக்குற ஒரே ஒரு தண்ணித் தொட்டியை நாம காப்பாத்தியே ஆகணும்.
பத்மா: என்னோட வாழ்க்கையே, மழைக்காலத்துல பத்மா நதியில இருக்குற பாசி மாதிரி மாறிடுச்சு.
தேபு: ஏன் இப்போ இதெல்லாம் பேசுற?
பத்மா: என்னால மறக்கவே முடியல, பாபு. ஒரு அம்மாவா இருந்தும் மண்டல்-ஓட மனைவி எப்படி தன்னோட குழந்தை இறந்ததை பார்த்து அழாம இருந்தாங்களோ? நம்ம மனசு எல்லாம் அவ்வளவு சிதைஞ்சு போயிடுச்சா என்ன?
தேபு: நீ உட்காரு. ராத்திரி முழுக்க நீதானே அவங்களை கவனிச்சிக்கிட்டு இருந்திருப்ப?
பத்மா: ஆமா.
தேபு: தண்ணித் தொட்டியைப் பற்றி எல்லாருகிட்டேயும் போய் சொல்லிட்டு வந்து, கொஞ்ச நேரம் தூங்கு. சாயங்காலத்துக்குள்ள தொட்டியை எப்படியும் பழைய இடத்துக்குக் கொண்டுவந்துடனும். நீ தயாரா இரு.
பத்மா: நான் தயார்!
தேபு: சரி, வேற வழியும் இல்ல நமக்கு. சூழ்நிலை அந்த மாதிரி இருக்கு. ஒரு வேலை நோய் தடுப்புக் குழு அந்தத் தொட்டியை எடுத்துட்டு போய்ட்டாங்கன்னா, இந்த காலனியே மூணு நாட்கள்ல காணாம போயிடும்.
பத்மா: உங்களுக்கு அப்படி நடக்கும்னு தோணுதா?
தேபு: ஆமா. எனக்கு ராத்திரி நேரங்கள்ல ரொம்ப பயமா இருக்கு. யாரும் அழுகுற சத்தமே கேட்கல. எல்லாரும் அடுத்து யார் சாகப்போறாங்களோன்னு தான் மனசு மரத்துப்போய் காத்துகிட்டு இருக்காங்க. என்னால இதை சகிச்சுக்கவே முடியல. இதுக்கு முன்னாடி இதே மாதிரி நிலைமையை நான் கல்கத்தாவுல வெடிச்ச மிகப்பெரிய கலவரத்துல பார்த்திருக்கேன். இங்க மரணம்ங்குறது வாழக்கையோட ஒரு அங்கம் மாதிரி சாதாரணமா மாறிடுச்சு. பிறப்பும், உயிர்வாழ்தலுமே இப்போ ரொம்ப விசித்திரமான விஷயமா மாறிடுச்சு.
பத்மா: பிறப்பு!
(கோபால் வருகிறான்)
கோபால்: பாபு, நீங்களா?
தேபு: ஆமா.
கோபால்: பாபு, முஸ்லிம்கள் நிச்சயமா ரொம்ப கெட்டவங்கன்னு இப்போல்லாம் எனக்கு தோணிக்கிட்டே இருக்கு.
தேபு: எதை வச்சு சொல்றீங்க?
கோபால்: ரூப்பாய்கண்டில காலிம் எங்களோட பக்கத்துவீட்டுக்காரன். நான் அவனோட பாதுகாப்புல தான் என்னோட வீட்டை விட்டுட்டு வந்தேன். நான் அவனுக்கு பல முறை கடிதம் எழுதிட்டேன். ஆனா இதுவரைக்கும் எந்த பதிலும் வரல. அவன் மாறிட்டான்னு நினைக்குறேன். எல்லாமே பக்கத்துல இருக்குற வரைதான், தூராம போயிட்டா எல்லாம் மறந்துடும் போல. வேற என்ன சொல்ல முடியும், முஸ்லிம்களே அப்படித்தான் போன.
தேபு: உங்களோட கடிதத்துக்கு மட்டும் தான் வங்கதேசத்துல இருந்து பதில் வரலையா என்ன?
கோபால்: நான் ரூப்பாய்கண்டிக்கே போய்ட்டு வரலாம்னு கூட நினைச்சேன். ஆனா வங்காள மொழியை பேசுற விஷயத்துல அங்க பதற்றம் ஏற்பட்டிருக்கு. அவங்களுக்கு அது தேவைதான். அவங்களுக்குள்ளேயே பிரச்சனை ஏற்பட்டிருக்கு. நான் சொல்றதை குறிச்சி வச்சிக்கோங்க, இதுக்கும் இந்துக்கள் மேல தான் அவங்க பழி போடுவாங்க.
தேபு: இந்தக் குழப்பத்துல எத்தனை முஸ்லிம் இளைஞர்கள் தங்களோட உயிரை விட்டிருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியாது. பல நகரங்கள்ல நிறைய போராட்டங்கள் நடந்துகிட்டு இருக்கு அங்க.
கோபால்: எனக்குத் தெரியாது, பாபு. இங்க என்னோட சொந்த மண்ணுலயே ஒரு வீட்டை உருவாக்க முடியாம இருக்கேன், அப்படியிருக்கும்போது தூர தேசத்துல நடக்குற விஷயங்களை பத்தி தெரிஞ்சிக்கிட்டு எனக்கு என்ன ஆகப் போகுது?
தேபு: பத்மா, காலனியோட அந்த வரிசையில இருக்குற வீடுகள்ல இருக்குறவங்களை வந்து என்னைப் பார்க்கச் சொல்லு. நாம மட்டும் தண்ணி தொட்டியை இழந்துட்டோம்னு வை...
கோபால்: இந்த தண்ணி தொட்டி பிரச்சனைக்கு ஒரு முடிவு காட்டியே ஆகணும் தான்.
பத்மா: (தேபுவிடம்) சரி, பாபு, நான் போய் எல்லாருகிட்டேயும் சொல்லிட்டு வரேன்.
(பத்மா வெளியேறுகிறாள்)
தேபு: (கோபாலிடம்) ஆமா. நாம இந்த விஷயத்தை விடக் கூடாது. எப்படியாவது முயற்சி பண்ணி தீர்வை எட்டியே ஆகணும்.
கோபால்: ஆனா நான் இந்த விஷயத்துல தலையிட விரும்பல.
தேபு: ஏன்?
கோபால்: அதுனால என்ன பிரயோஜனம். என் நிம்மதி தான் கெடும்.
தேபு: நான் இந்தப் பிரச்னையை பத்தி காலனில யார் கிட்ட பேசுனாலும் அவங்க முன்வந்து போராடத் தயாரா இருக்காங்க.
தேபு: எனக்கும் நம்பிக்கை இல்ல. நான் எங்கேயும் வரல. நான் ஏன் வரணும்? பெரிய அரவை இயந்திரத்தை எதிர்த்து நாம ஒரு சில மனுஷங்க உயிரைக் காபபாத்திக்க போராடிட்டு இருக்கோம்.
தேபு: உங்களுக்கு என்ன ஆச்சு?
கோபால்: நாம எதைச் சாப்பிட, பாபு, எதைச் சாப்பிட? யார்கிட்டயும் பணம் சுத்தமா இல்ல. நமக்கு ரேஷன் பொருட்களும் கிடைக்குறது இல்ல. இனி விக்குறதுக்கும் எதுவும் இல்ல. வீட்டுல ஒரு பொருளும் இல்ல.
(இடதுபுறம் இருந்து வரும் கேட்டு, இருவரும் கவனிக்காததுபோல மறுபுறம் செல்ல முயற்சிக்கிறார். கோபால் அவரைக் கவனிக்கிறான்)
கோபால்: எங்க கிளம்பிட்டீங்க?
கேட்டு: நான் மண்டலோட வீட்டுக்குப் போறேன். இன்னைக்கு வானிலையே சரியில்ல.
கோபால்: இல்ல, நீங்க எங்கேயும் போக வேண்டாம்.
கேட்டு: ஏன்?
கோபால்: நீங்க எங்க போவீங்கன்னு எனக்குத் தெரியும்.
கேட்டு: என்ன தெரியும் உனக்கு?
கோபால்: நேத்து சாயந்தரம் நீங்க நதிக்கு பக்கத்துல இருக்கறதை கங்காலிச்சரண் பாத்திருக்காரு.
கேட்டு: யார் சொன்னா?
கோபால்: சாயந்தரம் இருட்டுற நேரம் யாரும் உங்களை பார்க்க மாட்டாங்கன்னு நினைச்சுடீங்களா.
கேட்டு: அப்போ நீ எனக்கு சாப்பாடு கொடு. நேத்துல இருந்து நான் எதுவும் சாப்பிட்டல. எனக்கு ஒரு அனாவாவது உன்னால கொடுக்க முடியுமா?
கோபால்: நீங்க இருக்கீங்களே----
கேட்டு: சூரியன் தினம் உதிக்குது, மறையுது. ஒரு வருஷம் முடிஞ்சு அடுத்த வருஷம், அதுக்கடுத்த வருஷம்னு போய்கிட்டு தான் இருக்கு. ஆனா நாம எதுவும் செய்ய முடியாம முடங்கிப் போயிருக்கோம். அதனால நான் பிச்சை எடுப்பேன். திருடவும் செய்வேன்.
கோபால்: சும்மா கத்தாதீங்க. உங்க சுயமரியாதையை கூட இழந்துட்டீங்க நீங்க.
கேட்டு: வாயை மூடு. நதிக்கு அந்தப் பக்கம் இருக்குறது முஸ்லிம்களோடு நாடும் இல்ல, இந்தப் பக்கம் இருக்குறது நம்மளோட நாடும் இல்ல. வீடு இல்லாதவங்களுக்கு கௌரவமும் இருக்காது.
கோபால்: நீங்க பைத்தியம் ஆகிட்டீங்க.
கேட்டு: ஆமா, நான் பைத்தியம் தான். நாம எல்லாரும் பிளவுபட்ட வங்களத்தோட தேவையில்லாத களைகள். ஒரு வட்டத்துகுள்ள சுத்திகிட்டு இருக்கோம். ஹாரு இன்னைக்கு வாந்தி எடுத்தான். அதுவாவது தெரியுமா.
கோபால்: ஹாரு!
கேட்டு: அவன் வயித்துப்போக்குனால உடம்பு சரியில்லாம கிடக்கான். நாம இங்க, ஒரு வீட்டைத் தேடி வந்தோம். நாம இரண்டு பக்கங்களா பிரிக்கப்பட்டோம். ஆனா ரெண்டு பக்கத்துலயும் நமக்கு வீடுன்னு ஒன்னு இல்ல.
(கேட்டு கத்துகிறார்)
கோபால்: நீங்க இப்போ வெளிய போக கூடாது.
கேட்டு: என்னைத் தடுக்காத.
(அவர் செல்கிறார். கோபால் அவர் செல்வதையே பார்த்துக்கொண்டிருக்கிறான். தேபு அவனின் தோளில் கை வைக்கிறான். கோபால் நகர்ந்துச் செல்கிறான்.)
கோபால்: பாபு, நாம எல்லாரும் அவ்ளோதான், செத்துட்டோம். நாம் செத்துட்டோம்!
தேபு: ஹாருவுக்கு உடம்பு சரியில்லையா?
(இருவரும் சுவர்ணோ இருக்கும் இடத்துக்குச் செல்கிறார்கள். சுவர்ணோ, முழங்கால்களில் முகம் புதைத்து அமர்ந்திருக்கிறாள். அவள் அவர்களை நிமிர்ந்து பார்க்கிறாள். தேபு அருகில் செல்கிறான்)
கோபால்: ஹாருவுக்கு உடம்பு சரி இல்லேன்னு ஏன் நீங்க சொல்லல?
(சுவர்ணோ பதில் சொல்லாமல் இருக்கிறாள்.)
தேபு: இவனோட படுக்கை கெட்டுடுச்சு. நாம அதை எரிக்கனும்.
கோபால்: வாங்க, போயி மருத்துவரைக் கூட்டிட்டு வரலாம்.
தேபு: சரி, வாங்க போகலாம்.
(அவர்கள் செல்கிறார்கள். சுவர்ணோ எதையோ கவனிக்க முயற்சிக்கிறாள். பின் எழுந்து சென்று ஒரு குவளையில் தண்ணீர் பிடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறாள். போதையில் இருக்கும் மகிந்தர், முற்றாக நனைந்த ஹரேன் பண்டிட்-ஐ உள்ளே தள்ளிவிட்டு, அவனும் வருகிறான்)
மகிந்தர்: 'என் பத்மா நதியே..' ஏய் பண்டிட்!
ஹரேன்: என்ன? மகிந்தர்.
மகிந்தர்: நான் சிவனோட பாடலைப் பாடப் போறேன். 'ஒரு மன்னன் கைகளில்....' கொஞ்சம் பொறு நான் என்னோட உடுக்கையை எடுத்துக்குறேன். காலிம் மட்டும் இங்க இருந்திருந்தான் அப்படின்னா அவனை அடிச்சி துவைச்சிருக்கலாம். நான் இன்னைக்கு உணர்ச்சி வெள்ளத்துல மிதக்குறேன்.
ஹரேன்: இல்லை.
(மகிந்தர் அறையை நோக்கி செல்கிறான். ஆனால் திரும்பி மீண்டும் ஹரேன் அருகிலேயே வருகிறான்.)
மகிந்தர்: என்ன ஹரேன் ஆரம்பிக்கலாமா?
ஹரேன்: இல்ல. இப்போ ஏன் சிவனை இழுக்குற?. எனக்கு வேலை இருக்கு.
மகிந்தர்: உக்காரு. (இருவரும் அமர்கின்றனர்). ஏன் வெளியில இவ்ளோ ஜனம் கூடிகிட்டு இருக்கு.?
ஹரேன்: இன்னைக்கு நடக்கப் போற பேரணியைப் பற்றி நீ கேள்விப்படலயா? இன்னைக்கு நடக்கபோறது தான் உண்மையான மாற்றத்தை கொண்டுவரப்போற பேரணி.
மகிந்தர்: இல்ல. நான் கேள்விப்படல. இன்னைக்கு நான் கள்ளு குடிச்சிருக்கேன். ரெண்டு நாளா எதுவும் சாப்பிடவே இல்ல. இன்னைக்கு தான் சுமை தூக்குற வேலை கெடச்சது. வேலை முடிஞ்சதும் போய் நான் கள்ளு குடிச்சேன்.
ஹரேன்: நீ கள் குடிக்குறதுல எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆனா என்னை ஆளை விடு.
மகிந்தர்: ஏன் அப்படி சொல்லுற?
ஹரேன்: நாங்க சாப்பாடு இல்லாம கிடக்கோம். நான் வச்சிருந்த சின்ன பள்ளிக்கூடத்தையும் மூடியாச்சு. எல்லாத்தையும் சரிக்கட்டிட்டு, நான் இந்த இடத்தைவிட்டு கிளம்பப்போறேன்.
மகிந்தர்: அப்போ மறுபடியும் வீட்டுக்குத் திரும்பி வரமாட்டியா?
ஹரேன்: வீடா? அப்படி ஒன்னு இல்லவே இல்ல. அப்புறம் இன்னைக்கு பேரணியில நிச்சயம் பிரச்சனை வெடிக்கத் தான் போகுது.
(அவன் அழத் தொடங்குகிறான்)
மகிந்தர்: நான் ரொம்ப கவனமா உருவாக்குன என்னோட வீடு, குடும்பம் இன்னைக்கு நிலைகுலைஞ்சு கிடக்கு. நான் எவ்ளோ பெரிய கேவலமா ஆளு பாத்தியா! கொஞ்சம் பணம் சம்பாதிச்சதும் நான் கள்ளு குடிக்கப் போயிட்டேன்! சுவர்ணோ....
(சுவர்ணோ அவன் அழைப்பதை கேட்டும், பதிலளிக்காமல் இருக்கிறாள்.)
ஹரேன்: இன்னைக்கு ஏதோ ஒன்னு நடக்கப்போகுதுன்னு மட்டும் எனக்கு உறுதியா தெரியுது. என்னைப் போகவிடு.
மகிந்தர்: பத்மா என்னை சிந்திக்க சொல்லுறா. நாம சிந்திக்கனுமா என்ன? வாழ்க்கையே சிந்தனை தான். மொத்த உலகமும் ஒரு சிந்தனை தான்.
ஹரேன்: சரி, நான் இப்போ கிளம்பியாகணும்? (எழுந்து கிளம்பியவாறு) நாம அப்புறமா பேசுவோம். நான் திரும்ப வரேன், சரியா?
(கதவின் அருகில் சென்ற ஹரேன் அச்சத்தில் அப்படியே நிற்கிறான். மகிந்தர் அவன் முன்னாள் வந்து நின்றுகொண்டிருக்கிறான்)
மகிந்தர்: கொஞ்சம் பொறு! உனக்கு பாட்டுன்னா பிடிக்காதா என்ன?
ஹரேன்: நான் சொல்ல வர்றது என்னன்னா-----
(ஹரேன் திரும்பிக் கொள்கிறான்)
மகிந்தர்: நீ இப்போ போகலாம். இந்த மாதிரி ஒரு மழை நாள்ல, நான் தனியா பாட விரும்புறேன்.
(ஹரேன் விரைந்து வெளியேறுகிறான்)
சுவர்ணோ: ஹாரு!
சுவர்ணோ: ஏன் இவன் தண்ணி குடிக்க மாட்டேங்குறான்? ஏன் எந்த சத்தமும் இல்லாம இருக்கான்? சுயநினைவில்லாமையா இருக்கான்! ஹாரு! ஹாரு!
(அவள் கையில் இருந்த குவளை கீழே விழுகிறது)
மகிந்தர்: என்ன இதெல்லாம்? அழாத. அழுகுறது கெட்ட சகுனம். அழாம இரு.
(கோபால் வருகிறான்)
கோபால்: வாங்க, பாபு, இந்த அறை தான்.
(சுவர்ணோ, வேகமாக மேடையின் இடதுபக்கம் நோக்கிச் செல்கிறாள். தேபுவை பின்பற்றி மருத்துவர் வருகிறார். மருத்துவர் தனது மழைக் கோட்டை கழற்றி தேபுவிடம் கொடுக்கிறார். கையில் செதஸ்கோப்புடன் ஹாரு இருக்கும் அறைக்குள் செல்கிறாள். சற்று நேரம் கழித்து வெளியே வருகிறார்.)
மருத்துவர்: ஹ்ம்ம்.
தேபு: (பதற்றத்துடன்) என்ன ஆச்சு?
மருத்துவர்: இன்னொரு இறப்பு! அவன் இப்போ நம்ம கூட இல்ல. படுக்கையை எரிச்சுடுங்க.
கோபால்: நீங்க சொல்றதுக்கு அர்த்தம் என்ன....?
மகிந்தர்: டாக்டர்! டாக்டர், அவனுக்குள்ள இன்னும் உயிர் இருக்கு, என்னால அதை உறுதியா சொல்ல முடியும். தயவுசெஞ்சு நல்லா பரிசோதிச்சு பாருங்க.
(சுவர்ணோ பின்னகர்கிறாள். மகிந்தர், மருத்துவரின் கால்களை பிடிக்கிறான்.)
மருத்துவர்: அட, என்னை விடுங்க.
மகிந்தர்: அவன் இப்போ தூக்கத்துல தான் இருக்கான். ஆனா அவனுக்குள்ள இன்னும் உயிர் இருக்கு.
தேபு: டாக்டர், அவங்க தான் அவ்ளோ கேக்குறாங்களே, நீங்க ஏன் இன்னொரு முறை பரிசோதிச்சு பார்க்கக்கூடாது?
மருத்துவர்: ஒன்னும் பண்றதுக்கு இல்ல. எனக்கு இதெல்லாம் பழகிடுச்சு, இப்போல்லாம் எதுவும் என்னைப் பெருசா பாதிக்குறதே இல்ல. நான் இப்போ வீட்டுக்குப் போகணும். என்னைப் போக விடுங்க.
(மருத்துவர் மகிந்தரிடம் இருந்து ஒரு பக்கமாக விலகுறார்.)
மருத்துவர்: அறை முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் போடுங்க. படுக்கையை எரிச்சிடுங்க.
மகிந்தர்: அப்போ ஹாரு இனிமே திரும்பி வரவே மாட்டான்னு சொல்றீங்களா?
(மகிந்தர் அறையை நோக்கி நடக்கிறான். கோபால் அவனை வழிமறிக்கிறான்)
கோபால்: அண்ணா, மனசை தளர விடாதீங்க, நிதானமா இருங்க.
தேபு: ஹாரு உடலுக்குப் பக்கத்துல போனீங்கன்னா நீங்களும் சாக வேண்டியது தான்! கோபால், நாம படுக்கையை முதல்ல அப்புறப்படுத்தனும்.
மகிந்தர்: நீங்க அதை எடுத்துட்டுப் போறீங்களா?
தேபு: அதை எரிச்சாகனும்.
மகிந்தர்: படுக்கை மொத்தத்தையுமா?
தேபு: அந்த படுக்கையை மறுபடியும் பயன்படுத்துனா, அப்புறம் நோய் பரவிடும்.
மகிந்தர்: நான் அதைத் துவைச்சுடுறேனே. நான் நிறைய காசு செலவு பண்ணி அதை வாங்குனேன்.
தேபு: அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல.
மகிந்தர்: நான் அதை மறுபடியும் விற்க முடியும்.
தேபு: முட்டாள்தனமா பேசாதீங்க.
கோபால்: அண்ணா!
மகிந்தர்: இல்ல. எனக்குள்ள என்னமோ நடக்குது.
(அவன் விலகிச் செல்கிறான். தேபு அவனை விலக்கிக்கொண்டு படுக்கையை எடுக்க உள்ளே செல்கிறான்.)
மருத்துவர்: இந்தப் பையனை யார் கவனிச்சிக்கிட்டு இருந்தா? அவங்க உடுத்தியிருந்த ஆடையையும் சேர்த்து எரிச்சாகணும்.
(கோபால் திடுக்கிட்டவனாய் சுற்றும் முற்றும் பார்க்கிறான். சுவர்ணோ ஒரு மூலையில் நின்றுகொண்டிருப்பதை கவனிக்கிறான். அவளருகில் செல்கிறான். சுவர்ணோ மூக்கை சீந்துகிறாள். தேபு அறையை விட்டு வெளியே வருகிறான். வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் அவன் சற்று நின்று திரும்பி மகிந்தரிடம் வருகிறான்.)
தேபு: மகிந்தர், வாங்க வெளியே போவோம். நமக்கு கொஞ்சம் வேலை இருக்கு. வாங்க டாக்டர், நீங்க வீட்டுக்குத் தானே போறீங்க. நான் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணியாகணும்.
(மருத்துவர், மகிந்தர், தேபு மூவரும் செல்கின்றனர். சுவர்ணோ மேடையின் நடுப்பகுதியை நோக்கி வருகிறாள். கோபால் அவளை நிறுத்துகிறான்.)
கோபால்: அண்ணி, நீங்க எப்படி-----
சுவர்ணோ: அவங்க திருடிக்கிட்டாங்க, ஆனா ஏன் திருப்பி தரமாட்டிக்காங்க?
கோபால்: அண்ணி, சுயநினைவோட தான் இருக்கீங்களா?
சுவர்ணோ: அவன் இனியும் இல்ல. குளிர்காலம் அவனை எடுத்துக்கிச்சு. அவனை திருடிக்கிச்சு. (அவள் நிலைகுலைந்து விழுகிறாள். கோபால் அவளை தாங்கிக் கொள்கிறான்) அவங்க என்கிட்ட இருந்த எல்லாத்தையும் எடுத்துகிட்டாங்க, ஆனா பதிலுக்கு எனக்கு எதையுமே கொடுக்கல. ஏன்?
கோபால்: அண்ணி!
(சுவர்ணோ நிலைகுலைந்து தரையில் விழுகிறாள். கோபால் அவளைத் தூக்கிக்கொண்டு மேடைக்கு இடதுபுறமாக வெளியேறுகிறான். பின் அவன் மட்டும் திரும்பி வருகிறான். தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழத் தொடங்குகிறான். அவன் திண்ணையில் சென்று அமர்ந்துகொள்ள, அந்நேரம் கேட்டு வருகிறார். தன் ஈரமான தலைமுடியை துடைத்துக்கொண்டு, பீடியை புகைக்கிறார். கோபால், அவரை நோக்கி எழுந்து செல்கிறான்)
கோபால்: அப்பா! உங்களுக்கு ஏதாவது காசு கிடைச்சதா?
கேட்டு: ஆமா. இந்த வயசானவனைப் பார்த்து இரக்கப்பட்டு அவங்க கொஞ்சம் சில்லறை போட்டாங்க. எனக்கு மூன்றரை அனா கிடைச்சது. இரண்டு பைசாவுக்கு பீடி வாங்குவேன். நாலு பைசாவுக்கு அரிசி சோறு சாப்பிட்டேன். ரெண்டு அனா மிச்சம் இருக்கு. அதனால தான் கோபால், நான் என்ன சொல்றேன்னா, மருமகளும், ஹாருவும் ரோடுகள்ல பாத்திரத்தை ஏந்தி நின்னாங்கன்னா நமக்கு இன்னும் அதிகமா கிடைக்கும்.
கோபால்: எனக்கு அந்த ரெண்டனாவைக் கொடுங்க. நான் மருந்து வாங்கணும்.
கேட்டு: முடியாது. நான் ஏன் உனக்கு காசு கொடுக்கணும்? இது நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு. அது இருக்கட்டும், வெளிய நிறைய ஜனங்க கூடியிருக்காங்க. ஆனா நான் அவங்களோட சேரப்போறது இல்ல. அதுல அர்த்தமே இல்ல.
(மகிந்தர் வருகிறான். ஹரேனும் வருகிறான்)
மகிந்தர்: அவங்க என்னோட ஹாருவை எடுத்துட்டுப் போயிட்டாங்க.
(கோபால் உட்காருகிறான்)
(கேட்டு ஒருவித அச்சத்துடன் அறையைத் துழாவிப் பார்க்கிறார்.)
கேட்டு: மகிந்தர், என்ன முட்டாள்தனமா பேசிக்கிட்டு இருக்க? எனக்கு நீ பேசுறது ஒன்னும் பிடிக்கல!
(மகிந்தர் மேடையின் முன்னே வருகிறான்.)
மகிந்தர்: இந்தக் குடும்பத்துல கொஞ்ச நஞ்சம் மிச்சம் இருந்ததும் சுக்குநூறா உடைஞ்சு சிதறிடிச்சு.
(அவன் மலைத்துப்போய் உட்காருகிறான்.)
(வெளியே காலனியில் குழப்பம் ஏற்படுகிறது. பலர் கத்தும் குரல்கள் கேட்கின்றன. இடிமுழக்கமும் எழுகிறது. எல்லோரும் கண்களில் அச்சத்துடன் வெளியே என்ன நடக்கிறது என்று பார்க்கின்றனர். பத்மா உள்ளே ஓடி வருகிறாள்.)
பத்மா: அண்ணா. அண்ணா, கடிதம்!
(அவள் கையை மேலே உயர்த்தி கடிதத்தைக் காட்டுகிறாள்)
கோபால்: கடிதம்!
பத்மா: ஆமா கடிதம்! பாகிஸ்தான்ல இருந்து கடிதம்!
(அவள் கடிதத்தின் உரையைக் கிழிக்கிறாள்)
பத்மா: ரொம்ப பெரிய கடிதம்! வாசிங்க, அண்ணா.
(கோபால் அதை வாங்கிக்கொள்கிறான்)
கோபால்: கடிதம்!
பத்மா: ஜனங்க வெளியே வந்து கூட்டமா கூடிக்கிட்டு இருக்காங்க. நிறைய நேரம் இல்ல. வேகமா படிங்க.
(கோபால் எழுந்து நின்று படிக்கத் தொடங்குகிறான்.)
மகிந்தர்: யாரு எழுதியிருக்கா?
கோபால்: காலிமுதீன். காலிமுதீன் ஷேக்!...
'கேட்டு மாமா,
உங்கள் கடிதத்திற்கு நீண்ட நாள் கழித்து நான் பதிலளிக்கிறேன். இறைவனின் அருளால், எங்கள் வாழ்க்கை இன்னும் சென்றுகொண்டிருக்கிறது. இதுவரையிலும் உங்கள் வீட்டை என்னால் விற்க முடியவில்லை. இங்கே நாங்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். வங்காள மொழியை கைவிடும் முடிவை மக்கள் எதிர்க்கின்றனர். பெரோசா பாட்டியும் பிற பெண்களும் தங்கள் புர்காக்களை துறந்துவிட்டு சாலையில் இறங்கிப் போராடுகின்றனர். பேரணியில் பெண்களும் பங்கேற்பதில் எந்த பாவமும் இல்லை என அவர்கள் ஆண்களிடம் சொல்கிறன்றனர். டாக்காவில் உள்ள புதிய கர்பாலாவில் இருக்கும் மர்ஹும்களுக்கு அவர்கள் மனு செய்துள்ளனர். காஜ்லாவில் உள்ள மதரசாவும் மூன்று மக்தப்களும் மூடப்பட்டுவிட்டன. போராட்டமும், வேலைநிறுத்தமும் நகரத்தில் அன்றாடம் காணப்பெரும் காட்சியாகிவிட்டது. நாங்கள் துன்புறுத்தப்படுகிறோம். எதிர்ப்பு காட்டுபவர்களைப் பிடிக்க அவர்களின் புகைப்படங்களுடன் நோட்டீஸ்கள் அனுப்பப்படுகின்றன. கிரு ஷேக் லாம்-இல் இருக்கிறார். மாமா, வாழ்க்கைக்காக, மொழிக்காக, நிலத்துக்காக நடக்கும் இந்த சண்டை வங்காளத்தின் தர்மயுத்தமாக மாறிவிட்டது. இங்கு இருக்கும் நிலைமையைப் பற்றிய செய்திகள் இவைதான்----'
(வெளியில் இருந்து கூச்சல் குழப்பமான ஒலிகள் கேட்கின்றன. மகிந்தர், கோபால் ஒருபுறமும், பத்மா மறுபுறமும் நின்றபடி வெளியே பார்க்கின்றனர். கேட்டு மட்டும் இன்னும் அமர்ந்தபடி இருக்கிறார். கோபால் கடிதத்தை வாசிப்பதைத் தொடர்கிறான். கேட்டு எழுந்துகொள்கிறார்.)
கேட்டு: என்ன?
கோபால்: (கடிதத்தில்) '--- வங்காளத்தை நீங்க பிரித்துவிட்டீர்கள். ஆனால் எங்கள் இதயங்களை ஒருநாளும் பிரிக்க முடியாது' பேரனுக்கு கல்யாணம் செய்து வைக்க பாட்டி ஆசைப்படுகிறார்கள்' பேரனா?---
பத்மா: காலிம் அண்ணாவுக்கு கல்யாணம்!
கோபால்: 'பேரனுக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார். பெண்ணின் பெயர் லாச்சிமன். காஜ்லாவை சேர்ந்த சுலைமான் காலிபா உடைய பெண். இந்த போராட்டத்தில் இருந்து நமக்கு புது சக்தி கிடைக்கும். நான் உங்கள் எல்லோருக்காகவும் அல்லாவை வேண்டுகிறேன். வங்காள மொழிக்கான போராட்டத்தில் நாம் நிச்சயம் ஜெயிப்போம்.'
(கடிதம் கோபாலின் கைகளில் இருந்து நழுவி விழுகிறது. கேட்டு மெதுவாக குனிந்து அதை எடுக்கிறார். ஹரேன் வீட்டின் வெளியே எட்டிப் பார்க்கிறான்)
ஹரேன்: பேரணி இன்னைக்கு ராத்திரி தொடங்குது. எல்லாரும்... (ஹரேன் திரும்பி உள்ளே இருப்பவர்களை ஒருவித அச்சத்துடன் பார்க்கிறான். வெளியில் இருந்து சத்தங்கள் வருகின்றன) ஏன் உங்க கண்கள் நெருப்பு பிழம்பா இருக்குது?
கேட்டு: (கடிதத்தைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறார்). 'நீங்கள் வங்காளத்தை பிரித்துவிட்டீர்கள், ஆனால் எங்கள் இதயங்களை ஒருபோதும் பிரிக்க முடியாது'
(வெளியிலிருந்து கேட்கும் சத்தங்கள் படிப்படியாக அதிகரித்து உச்சத்தை எட்டி மேடையெங்கும் எதிரொலிக்கிறது.)

கருத்துகள்
கருத்துரையிடுக