ஒரு நாள் சுதந்திரம்: ரோமன் ஹாலிடே -அழகுராஜ் ராமமூர்த்தி

 ஒரு நாள் சுதந்திரம்: ரோமன் ஹாலிடே -அழகுராஜ் ராமமூர்த்தி 


      பல நாட்கள் கழித்து முழுமையாக பார்த்த திரைப்படம் ரோமன் ஹாலிடே. 1953-ல் வெளியான 'ரோமன் ஹாலிடே' (Roman Holiday) இன்றும் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கிறது. தமிழில் வெளியான திரைப்படங்கள் மேடை நாடகங்களின் தொடர்ச்சியால் ஆனவை. தமிழில் பேசும் படங்கள் வரத் தொடங்கிய காலம் முதலே எக்கச்சக்க வசனங்களும் பாடல்களும் பிரம்மாண்ட கட்டிடங்களும் திரைப்படங்களை நிறைத்து வைத்திருந்தன. அவற்றை இன்று பார்க்கும்போது பல நேரங்களில் ஆர்வக்குறைவே ஏற்படுகிறது. இப்படத்தில் நடித்துள்ள ஆட்ரி ஹெப்பர்னும் (Audrey Hepburn) நாடக நடிகையே. நாடகத்தின் வழியாகவே அவர் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். எனினும் ஹாலிவுட்டில் ரோமன் ஹாலிடே மூலம் அறிமுகமான அவரது நடிப்பு, நாம் நாடகங்களில் வாசிக்கும் இளவரசிக்குரிய விவரணைகளோடு பொருந்தும் தன்மையிலேயே பொருந்தும் வகையில் அமைகிறது. 

      அன்றாட நடவடிக்கைகளால் ஏற்படும் சலிப்பிலிருந்து மீளும் ஒரு முயற்சியை இளவரசி எனும் நாட்டின் உயர் பதவியில் நீடிக்கும் ஒருவர் மேற்கொள்வது அசாதாரணமான செயல்பாடு. அதனை இப்படத்தில் வரும் ரோம் நாட்டு இளவரசி ஆன் மேற்கொள்கிறார். அவர் மேற்கொள்ளும் முயற்சியானது சுதந்திரத்தை விரும்பும் ஒரு இளம்பெண்ணின் துடிப்பாக வெளிப்படுத்துகிறது. இளவயதில் சுமத்தப்படும் அதீதமான பொறுப்பு அனைவருக்கும் உவப்பானதாக இல்லை. கரிகாலன் ஐந்து வயதில் அரியணை ஏறிய தகவல் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் இன்றுவரை சொல்லப்பட்டு வருகிறது. கரிகாலன் மட்டுமன்றி உலகளவில் இளவயதில் அரசப் பொறுப்புக்கு வருபவர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. இப்படத்தில் குழந்தைமையைத் தொலைத்து வலுக்கட்டாயமாக இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்கிற நடைமுறைக்குரியதாக இருக்கும் அரச பாரம்பரியத்தின் மீது வெறுப்படைந்த இளவரசியின் கண்முன் ரோம் நாட்டு மக்களின் இரவு நேரக் கொண்டாட்டங்கள் விரிகிறது. அதன்மேல் ஆவல் கொண்ட இளவரசி தன்னுடைய சிறைபட்ட வாழ்வை நினைத்துப் புலம்புகிறாள். 

    ஒரு சிலரின் புலம்பலுக்குக் கூட மதிப்பு அதிகம். இன்று வரிசைகட்டி பலர் வலையொளி நேர்காணல் என்ற பெயரில் ஒருபுறம் கோமாளித்தனங்களையும் மறுபுறம் புலம்பல்களையும் வலையொளியில் பதிவு செய்து வருகின்றனர். முன்னர் அரச குடும்பத்தினரின் ஒவ்வொரு நடவடிக்கையும் அதிக முக்கியத்துவம் உடையதாக இருந்தது‌. நல விசாரிப்பு, பரிசுப் பொருட்களைப் பகிர்தல் போன்றவை கவனிக்கத்தகுந்ததாக அரண்மனை வட்டாரத்தில் இருந்துள்ளது. இத்திரைப்படத்தில் இளவரசி ஆன் தனக்கு விருப்பமான வாழ்வை வாழ முடியாதபடி தன்னைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள நிம்மதியற்ற அரண்மனை வாழ்க்கையை எண்ணிப் புலம்புகிறாள். அப்போது மருத்துவர் தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என தூக்க மருந்து ஊசியைச் செலுத்துகிறார். மருத்துவரின் இச்செயல்பாடு இந்தப் படத்தின் திருப்புமுனையாக மாறுகிறது. சிந்தை இதழில் தொடர்ச்சியாக தூக்கம் குறித்த பயனுள்ள கட்டுரைகளை டாக்டர் கு. கணேசன் எழுதி வருகிறார். என்னுடைய தனிப்பட்ட வாழ்வனுபவத்திலும் தூக்கமற்ற வருடங்களுக்கும் சீராகத் தூங்கக்கூடிய மாதங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்திருக்கிறேன். மருத்துவரால் இளவரசிக்கு செலுத்தப்பட்ட ஊசி வினையாற்றுவதற்கு முன்பே அரசி அரண்மனையை விட்டு வெளியேறி விடுகிறார்.
   
     உண்மையில் இங்கிலாந்து இளவரசி எலிசபெத் மற்றும் அவரது சகோதரி மார்க்கரெட் ஆகியோர் இரண்டாம் உலகப்போர் வெற்றிக்குப் பிறகு ரகசியமாக அரண்மனையிலிருந்து வெளியேறி மக்களுடன் மக்களாக எவரும் அறியாதவாறு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இந்தப் படத்திற்கு உந்துதலாக அமைந்திருப்பதாக திரை விமர்சகர்கள் கூறுகின்றனர். இப்படியான நடைமுறை உலகின் பல நாடுகளில் வழக்கில் உண்டு. அரசர்கள் மாறுவேடத்தில் நாட்டுநிலையை அறிய செல்லும் காட்சிகள் பல்வேறு படங்களில் பதிவாகியுள்ளன. அவற்றையெல்லாம் முழுமையான புனைவென நாம் ஒதுக்கிட முடியாது. இத்திரைப்படத்திலும் யதார்த்தத்தை மீறிய சில காட்சிகள் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. நாட்டின் இளவரசி காணாமல் போய்விட்டார் என்ற அறிவிப்பு செய்தியாக வெளியான பின்னும் கூட இளவரசி ஆன் நகர வீதிகளில் சுற்றுகிறார். எவரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. நகரத்தில் இருந்த மனிதர்கள் தங்களுடைய வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டதால் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் என வைத்துக் கொண்டாலும் கூட சிகையலங்காரம் செய்தவர் கூட அடையாளம் அறியவில்லை. பத்திரிகைத் துறையில் இருப்பவர்கள் ஆட்சியாளர்கள் மற்றும் அரசகுடும்பத்தினரை தெரிந்து வைத்திருப்பது இயல்பு. ஆனால் பத்திரிகையாளர் ஜோ பிராட்லிக்கு இளவரசியைப் பார்த்த மாத்திரத்தில் அடையாளம் தெரியவில்லை. யதார்த்த நிலையில் நடக்க சாத்தியமற்ற இப்படியான சில காட்சிகள் படத்தில் உண்டு. 

     ஊசி செலுத்தப்பட்ட பிறகு நகரத்தில் குதூகலிக்கும் மக்களை அரண்மனையிலிருந்து பார்க்கும் இளவரசியின் எண்ணவோட்டத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையிலான காட்சி அமைப்பு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அக்காட்சியே சுதந்திரத்திற்கான முன்னோட்ட எண்ணமாக மாறி நிற்கிறது. தப்பித்துச் சென்ற இளவரசி நகரை அடைந்தவுடன் ஊசியின் மூலம் செலுத்தப்பட்ட மருந்து தன் வினையைச் செயலாற்றத் தொடங்குகிறது. ரோம் நகரில் ஒரு பெண் இரவுப் பொழுதில் தன்னந்தனியாகப் படுத்திருப்பதைப் பார்த்த நபர் ஒருவர் அவருக்கு உதவ முன்வருகிறார். அப்போது உதவ வந்த நபருக்கு டாக்சி ஓட்டுநருக்கும் இடையில் இளவரசி என அறியப்படாத இளம்பெண் குறித்த உரையாடல் நீள்கிறது. பின் உதவி செய்ய நினைத்த நபரான பத்திரிகையாளர் ஜோ பிராட்லி வாடகையை முறையாக கட்டாத தன்னுடைய வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று மாற்று உடை கொடுத்து ஒரு படுக்கையையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார். ஆனால் இளவரசி தூக்க மயக்கத்தில் பிராட்லியின் படுக்கையில் படுத்து மறுநாள் பிற்பகல் வரை உறங்குகிறார். 

     மறுநாள் பத்திரிகை அலுவலகத்திற்கு செல்லும் ப்ராட்லிக்கு இளவரசி காணாமல் போன செய்தி தெரிய வருகிறது. அப்போது தான் ஒரு கட்டுரையை அதைக் குறித்து தயாரித்து தருவதாக கூறி தனக்கு தெரிந்த புகைப்படக் கலைஞரைத் தொடர்பு கொண்டு அதற்கான ஆயததப்பணிகளைத் துரிதப்படுத்துகிறார். வீட்டிற்கும் காவல் ஏற்பாடு செய்துவிட்டு பின் வீட்டை நோக்கி அடைவதற்குப் பின் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. இறுதியாக வீட்டை விட்டு வெளியேறும்போது தான் பணத்தைத் திருப்பி அனுப்பி விடுவதாக கூறி முகவரியைப் பெற்றுக் கொண்டு விடைபெறும் இளவரசி காலணி ஒன்றை வாங்குகிறார். முதல் காட்சியில் தனக்கு சௌகர்யமில்லாத ஒரு காலணியை அவர் அணிந்திருக்கும் காட்சி காட்டப்பட்டிருக்கும். இவ்விரண்டு காட்சிகளையும் ஒப்பிட்டால் இளவரசி தன்னுடைய சிறைபட்ட வாழ்விலிருந்து வெளியேறத் தொடங்குவது உணர்த்தப்படுகிறது. அதன் அடுத்தபடியாக சிகையலங்காரத்தை மாற்றிக் கொள்கிறார். தன்னுடைய முடியைக் கத்தரித்துக் கொள்கிறார். முடையைக் கத்தரிப்பது தான் சுதந்திரம் என்கிற கற்பிதம் இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

       அதன்பின் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. அவையெல்லாம் முடிந்த அளவு பிராட்லி மற்றும் புகைப்படக் கலைஞர் மூலம் பதிவு செய்யப்படுகிறது. ஒரு இளவரசி நகரவீதியில் நின்று அங்கு விற்கப்படும் உணவை வாங்கிச் சாப்பிடுவது, விருப்பமான பொருட்களை வாங்க முற்படுவது, கலாட்டா செய்வது என வரிசையாக பல காட்சிகள் இடம்பெறுகின்றன. இறுதியாக இனம்புரியாத காதலைப் போன்றதொரு உணர்வை வெளிப்படுத்திக் கொள்ளும் அளவு பிராட்லியும் இளவரசியும் நெருங்குகின்றனர். ஆனால் அப்படியொரு சம்பவம் நிகழவில்லை. பிராட்லி இளவரசியை அரண்மனை வாயிலில் விட்டு விட்டு திரும்புகிறார். மறுநாள் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கிறது. தனிப்பட்ட மற்றும் அரசியல் தொடர்பான கேள்விகள் இளவரசியிடம் கேட்கப்படுகிறது. அந்தச் சந்திப்பில் பிராட்லி மற்றும் புகைப்படக் கலைஞரும் கலந்து கொள்கின்றனர். ஒருநாள் நகரத்தில் சுற்றித் திரிந்த இளவரசியின் அனுபவங்களைக் காட்டும் வாழ்வின் சாட்சியான புகைப்படங்கள் இளவரசியிடம் கொடுக்கப்படுகின்றன. பிராட்லி இறுதிக் காட்சியில் அனைவரும் கலைந்து சென்ற பின் நிற்கும் காட்சி பார்வையாளர்கள் தங்கள் பார்வைக்கேற்ப மனக்கண்ணில் விரிவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

      இத்திரைப்படத்தின் உண்மையான திரைக்கதை ஆசிரியர் டால்டன் ட்ரம்போ ஆவார். கம்யூனிச ஆதரவாளர் என்ற தடையால் முதலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. பின்னர் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது. இயக்குனர் வில்லியம் வைலர் இத்திரைப்படத்தில் காட்டியிருக்கும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் தேர்வு முதலான காரணங்களால் இன்றுவரை முக்கியமான இயக்குநராக நினைவுகூரப்படுகிறார். ரோமன் ஹாலிடே மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்ற காலத்தால் அழியாத திரைப்படமாக இன்றுவரை பலரால் பாராட்டப்பட்டும் பார்க்கப்பட்டும் வருகிறது.

       இந்தப் படத்தில் ரோம் நகரத்தை மிக அழகான முறையில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார். ரோம் நகரத்தின் அழகிய பகுதிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு படத்திலும் அந்தப் படத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் வகிக்கும் பங்கு தனிக்கவனம் செலுத்தப்பட உரியதாக மாறுவது வாடிக்கை. அந்த அடிப்படையில் இப்படத்தில் குதிரை வண்டி, இயந்திர வாகனங்கள் முதலானவை காட்சிப்படுத்தலுக்கு உள்ளாகி இருப்பினும் இளவரசியும் ஜோ பிராட்லியும் வெஸ்பா ஸ்கூட்டரில் செல்லும் காட்சி என்னைக் கவரும் வகையில் அமைந்தது. பிரெஞ்சு நாட்டவர்கள் பயன்படுத்தும் மிதிவண்டி எனக்குப் பிடித்தமானது. அதற்கு அடுத்த இடத்தை இத்தாலியின் வெஸ்பா ஸ்கூட்டர் இந்தப் படத்தின் மூலம் பெறுகிறது. 

      காதலும் கடந்து போகும் திரைப்படத்தைப் பார்த்தபோது கிடைத்த அனுபவத்தையொத்தது ரோமன் ஹாலிடே படத்தைப் பார்த்த அனுபவம். இரு படங்களும் பல்வேறு வகைகளில் வேறுபட்டிருப்பினும் அதன் கதைக்களத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பானது கவனத்தை ஈர்க்கும் வகையிலானது. இத்திரைப்படத்தில் வரலாற்று ரீதியாக ரோம நகர கட்டமைப்பு மட்டுமன்றி ரோமர்களுக்கும் இந்தியர்களுக்குமான தொடர்பும் பதிவாகியுள்ளது. ரோமர்கள் மற்றும் கிரேக்கர்களை தமிழ் வரலாறு யவனர்கள் என்று குறிப்பிடுகிறது. யவனர்களுடன் தமிழர்களுக்கு வாணிகத் தொடர்பு இருந்ததைக் குறித்த சான்றுகள் பல வரலாற்றில் காணக்கிடைக்கின்றன. இப்படத்தில் இளவரசியைச் சந்திக்கும் பல நாட்டினவர்களில் இந்திய அரசர்களும் அடக்கம். உடைபாணியும் சிகை மற்றும் முக அலங்காரமும் அவர்களை இந்திய அரசர்கள் என செல்லத்தகும் வகையில் இருக்கிறது. ஜாக்கி சான் நடித்த பட்டு வழித்தடம் பற்றிய டிராகன் ப்ளேடு என்ற படத்திலும் பல்வேறு ஆசிய நாடுகளைச் சார்ந்தவர்கள் இடம்பெறுவர். இப்படியாகச் சில படங்களில் பல்வேறு நாட்டுக் கலாச்சாரத்திற்கு இடையிலான தொடர்புகள், மோதல்கள் முதலானவை பதிவாகியுள்ளன. அந்த வகையில் ரோமன் ஹாலிடே உள்நாட்டின் நகர் அமைப்பு, அரச முறைகள் உள்ளிட்டவற்றோடு ஆட்சியாளர்களின் அகத்தினுள் ஏற்படும் முடக்கம் முதலானவற்றை எல்லாம் ஒருமித்து காட்டும் வகையில் அமைகிறது.

      மனதளவில் முடங்கும் மனிதருக்குப் பயணமும் சக மனிதர்களின் கருணையும் மீண்டும் வாழ்வுப் பயணத்தை நோக்கி முடுக்கி விடுகிறது என்பதற்கு ரோமன் ஹாலிடே ஒரு உதாரணமாக கண்முன் நிற்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பத்தேர் (இரண்டாம் அலை) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

கரப்பான் அரசியலில் எச்சரிக்கை தேவை -அழகுராஜ் ராமமூர்த்தி