குடும்பத்தேர் (முதல் அலை, இரண்டாம் பாகம்) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)
குடும்பத்தேர் (முதல் அலை, இரண்டாம் பாகம்) -ரித்விக் கட்டக்
(தமிழில் -தீனன்)
(அதே காட்சி. மதியம் முடிந்து சூரியன் கீழிறங்கும் அந்தியில் இருக்கிறது வானம். வீட்டின் ஒரு ஓரத்தில் மூங்கில் தூணில் தலைசாய்த்து அமர்ந்து வானில் நிகழும் அந்தியின் அதிசயத்தில் கேட்டு லயித்திருக்கிறார். மற்றொரு மூலையில் சேலையின் முனையால் தலையை மூடியவாறு அமர்ந்திருக்கும் சுவர்ணோ, காய்கறிகளை வெட்டி பித்தளை தட்டில் வைத்த வண்ணம் இருக்கிறாள். வீட்டின் வெளியே, மகிந்தர் சத்தமாக எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் ஹாருவிடம் "அதை எடு, இங்க வா, நீ எதுக்கும் லாயக்கில்ல" என்று கூறியவண்ணம் இருக்கிறான். சிறிது நேரம் கழித்து ஒரு உடைந்த இரும்புப் பெட்டியை கொண்டு வந்து வைக்கிறான் மகிந்தர். துண்டால் தனக்கு தானே காற்று வீசியவாறு அவன் சுவர்ணோவிடம் பேசுகிறான்)
மகிந்தர்: பெட்டியோட சாவியை கொண்டு வரச் சொல்லி அரை மணி நேரத்துக்கு முன்னாடியே சொன்னேன்ல உன்கிட்ட?
(கேட்டுத் திடுக்கிட்டவராய்)
கேட்டு: நான் ஏன் இந்த இடத்தை விட்டுப் போகணும். எனக்குக் காரணத்தைச் சொல்லு, நான் ஏன் போகணும்?
மகிந்தர்: ஏன் போகணுமா? நான் கேள்விப்பட்டது எல்லாம் ரொம்ப பயங்கரமான விஷயங்கள்.
கேட்டு: இதைத்தான் நேத்துல இருந்து நீ சொல்லிக்கிட்டு இருக்க. அப்படி என்னதான் கேள்விப்பட்ட?
மகிந்தர்: நந்தாலால் ஜுர் (கிருஷ்ணர்) கோவில்-ல வெட்டப்பட்ட பசுவின் தலை இருந்திருக்கு. சாமி சிலை மேல இருந்த நகைகளை எல்லாம் காணோம். நகரத்துல இருக்குறவங்க எல்லாம் கிளம்பிப் போய்கிட்டு இருக்காங்க.
கேட்டு: நகரத்துல இருக்குறவங்களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?
(ஹாரு கயிற்றை எடுத்து வருகிறான்)
ஹாரு: அப்பா, இந்த அளவு கயிறு தான் கிடைச்சது.
மகிந்தர்: சரி பரவாயில்ல.
(மகிந்தர் கேட்டுவிடம் பேச்சைத் தொடர்கிறான்)
மகிந்தர்: உங்க கூட பேசி ஜெயிக்க, என்னால முடியாது.
(மகிந்தர் வீட்டை நோக்கி நடக்கிறான்)
கேட்டு: ஐயோ, கடவுளே! இந்த நாட்டுல இருக்குற மக்களுக்கு என்னதான் ஆச்சு. எல்லாரும் இந்த அமைதியான நாட்டை விட்டு போறாங்களே.
(மகிந்தர் வீட்டுக்குள் இருந்து வெளியே வருகிறான்)
மகிந்தர்: அதனால தான் நான் சொல்றேன், ரூப்பாய்கண்டி (கிராமம்) கடந்த நாலு மாசத்துல ஒன்னும் இல்லாம ஆகிடுச்சு. இந்த முறை துர்கா பூஜைக்குப் போக முடியும்னு நீங்க நினைக்குறீங்களா? சாமி சிலைகளுக்கு தேசிய படை காவல் இருக்கு.
கேட்டு: இந்த நாட்டோட அமைதி எங்க போச்சு? ஒரு பெரிய குடும்பம் எப்படி திடீர்னு ரெண்டா பிரிஞ்சு போச்சு. இந்த அமைதியின்மைக்கு அப்படி என்னதான் காரணம்னு என்னால புரிஞ்சிக்கவே முடியல.
மகிந்தர்: கூடிய சீக்கிரம் உங்களுக்குப் புரியும். ஒரு பெரிய இனப்படுகொலை ஆபத்து நம்மை நோக்கி வந்துகிட்டு இருக்குறது உங்களுக்குத் தெரியலையா? பீகார், பஞ்சாப்பை பாருங்க. அங்க மக்களுக்கு சாப்பிட எதுவும் இல்ல. நாம பாதுகாப்பா இருக்கணும்னா நகரத்து பணக்காரங்களோட நாமும் போய் தான் ஆகணும்.
கேட்டு: அப்போ இங்க நமக்குன்னு இருக்கறதை என்ன பண்ண? இப்போ நம்ம கிட்ட இருக்குறதையெல்லாம் என்ன பண்றது?
(ஹாரு அழைக்கிறான்)
ஹாரு: இன்னும் நான் எவ்வளவு நேரம் இந்த கயிற்றைப் பிடிச்சுகிட்டே இருக்குறது?
(கேட்டுவிடம் பேசுவதை நிறுத்தி மகிந்தர் அங்கிருந்து நகர்கிறான்)
கேட்டு: மருமகளே (பௌமா)!
சுவர்ணோ: சொல்லுங்க மாமா?
கேட்டு: ஜனங்களை இப்படி பயம் பிடிச்சு ஆட்டுனா என்ன ஆகும்? அவங்க மூளை வேலை செய்யாம போயிடுமா.
(பத்மா, பாரிஜாத மல்லிகைச் செடியின் (கேப் ஜாஸ்மின்) கன்றுடன் வருகிறாள். அவள் பின்னால் பெரோசா வருகிறாள்)
பத்மா: அப்பா, பாருங்க என்ன கொண்டு வந்துருக்கேன்னு!
கேட்டு: அடடே! பாரிஜாத மல்லிகை! எங்க இருந்து உனக்கு இது கெடச்சது.
பத்மா: இதை நான் அம்மம்மாவோட (பெரோசா பாட்டி) வீட்டுக்கு பின்னாடி இருக்குற காட்டுல இருந்து எடுத்துட்டு வந்தேன். அங்க நிலவேம்புவை தேடிகிட்டு இருந்தப்போ இது கெடச்சது. எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு. நான் இதை நம்ம தோட்டத்துல நட்டு வைக்கப் போறேன். தோட்டத்துல இதுக்கு நல்ல இடத்தைக் கண்டுபிடிக்கணும் முதல்ல.
(பத்மா செல்கிறாள்)
கேட்டு: பாத்து கவனம். தோட்டத்துல கிழக்கு மூலையை உருளைக்கிழங்கு பயிர் செய்ய தயார் பண்ணி வச்சிருக்கேன்.
(மகிந்தர் வருகிறான்)
மகிந்தர்: பாகிஸ்தான்ல நமக்கு நாய்ப்பட்ட வாழ்க்கை தான். இங்க நாம் முஸ்லிம்களுக்கு அடிமைகள் மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்கோம்.
பெரோசா: நீ மொத்த முஸ்லிம் இனத்துக்கும் சேவகனா என்ன?
மகிந்தர்: (கவனிக்காதவனாய்) என்ன?... சுவர்ணோ, சாவி எங்க இருக்கு?
சுவர்ணோ: கொஞ்சம் பொறுங்க. முதல்ல கோபால் வந்துரட்டும்.
மகிந்தர்: கோபாலுக்கும் சாவிக்கும் என்ன சம்மந்தம்?
சுவர்ணோ: எல்லாரும் உட்கார்ந்து கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.
மகிந்தர்: அதையெல்லாம் மறந்துடு. கோபால் கிட்ட ஆலோசிக்கணும்னு சொல்றியா? அவன் ஒரு முட்டாள்.
பெரோசா: மகிந்தரும் அதே மாதிரி தான் நடத்துகிறான். (முட்டாளாக)
சுவர்ணோ: பாட்டி!
பெரோசா: என்ன?
சுவர்ணோ: இயல்பு வாழ்கைங்குறது சுத்தமா சீர்குலைஞ்சு போச்சு. எல்லாரும் பயத்துல நாட்டை விட்டு வெளியேறத் தான் முயற்சிக்குறாங்க.
பெரோசா: அதைத்தான் நானும் பாக்குறேன். நம்ம சொந்த பிரச்சனைகளுக்கே ஒரு முடிவில்லாம இருக்கு, இப்போ திடீர்னு எங்க இருந்தோ புதுசா ஒரு பிரச்சனை வந்திருக்கு. உனக்குத் தெரியுமா, கேட்டு, எல்லையில இருந்து சில பேர் தங்களோட சொந்த லாபத்துக்காக இந்த நாட்டை பிரிச்சு மக்களை இடம்பெயர தூண்டுறாங்கனு என்னோட மனசுக்கு படுது.
(மகிந்தர் மூட்டையுடன் திரும்புகிறான்)
மகிந்தர்: நாம பத்து பாத்திரங்களை இங்கேயே விட்டுட்டுதான் போகணும். அதையும் எடுத்துட்டுப் போக முடியாது.
பெரோசா: என்ன மகிந்தர், உன்னோட நாட்டு மேல நீ வச்சிருந்த அன்பு எல்லாம் ஒரே நொடியில மறைஞ்சிடுச்சா?
மகிந்தர்: அமைதியா இருங்க. நான் இரக்கப்பட்டதெல்லாம் போதும்.
கேட்டு: மகிந்தர், பெரியம்மா (சாச்சி) கிட்ட இப்படியா பேசுவ?
மகிந்தர்: உங்க கருணையை நீங்களே வச்சிக்கோங்க. சார்ச்சில்மாரியைச் சேர்ந்த எசாக் ஐயா, நேத்து எல்லாரையும் பயமுறுத்த பாத்தாரு. கொல்கத்தாவுல மறுபடியும் போராட்டங்கள் தொடங்கிடுச்சாம். அவரு சொல்றாரு, 'உங்க தலைவர்களுக்கு நீங்க அழுத்தம் கொடுத்து அங்க போராட்டங்களை நிறுத்தலேனா, இங்க உங்களை நான் காப்பாத்துறது கஷ்டம்'னு சொல்றாரு. அவர் கன்னத்துல அப்படியே ஓங்கி அறையனும் போல இருந்துச்சு எனக்கு. அந்த எசாக், இந்த லத்தி நிபுணன் மகிந்தரைக் காப்பாத்த போறாராம்.
கேட்டு: இதுமாதிரி விஷயங்களை பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சமாவது யோசி.
மகிந்தர்: நான் ஏற்கனவே யோசிச்சிட்டேன். ஒரு பக்கம் அவங்க நம்ம வீட்டையும் நிலத்தையும் எடுத்துக்கிட்டு, நம்மளுக்கு உயிர் பயத்தைக் காட்டி மிரட்டியே அடக்கி வைப்பாங்க; மறுபக்கம், நம்ம மேல இரக்கப்படுற மாதிரி காட்டிகிட்டு நமக்காக அழுவாங்க. பாட்டி, உங்க ஆளுங்களோட புத்தி என்னன்னு எனக்குத் தெரியும். என்னை ஆளை விட்ருங்க. புரிஞ்சதா?
(மகிந்தர் பெரோசாவுக்கு எதிராக நின்றுகொண்டு கோபமாக சைகை செய்துகொண்டிருக்கிறான். சுவர்ணோ பக்கத்தில் வரவும் அவன் சைகைகளை நிறுத்துகிறான்)
சுவர்ணோ: என்ன சொல்றீங்க நீங்க? நீங்க என்ன ஜென்மமோ?
மகிந்தர்: நீ ஏன் இங்க நின்னுகிட்டு இருக்க? போ, போய் துணிகளை எல்லாம் எடுத்து வை.
(மகிந்தர் அங்கிருந்து செல்கிறான்)
சுவர்ணோ: பாட்டி, எங்களை மன்னிச்சிடுங்க.
பெரோசா: (கதவின் அருகில் இருந்துகொண்டு), இல்ல, பரவாயில்ல விடு. அவன் சொன்னது எதுவும் தப்பு கிடையாது. அவன் உண்மையைத் தான் பேசியிருக்கான்.
சுவர்ணோ: அவர் நேத்துல இருந்து இப்படித் தான் ரொம்ப பயத்துல இருக்காரு!
பெரோசா: அவன் மனசுல என்ன ஓடிக்கிட்டு இருக்குனு என்னால புரிஞ்சிக்க முடியாதுனு நீ நினைக்குறியா? அது சரி, இன்னைக்கே நீங்க படகுல கிளம்புறீங்களா?
சுவர்ணோ: எங்க போக? முதல்ல கோபால் திரும்பி வரட்டும். அவன் என்ன சொல்றான்னு பாக்கணும். அதுமட்டுமில்லாம, இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. என்னோட புருஷன் தினமும் இப்படிதான் எல்லாத்தையும் எடுத்து மூட்டை கட்டிக்கிட்டு இருப்பாரு.
பெரோசா: சரி, நான் கிளம்புறேன். நீங்க போறதுக்கு முன்னாடி கோபாலை ஒருமுறை வந்து என்னைப் பார்க்க சொல்லு. நீயும் தான்.
சுவர்ணோ: உங்களுக்கு எங்க மேல கோவமா?
பெரோசா: இல்ல மா, அப்படி எல்லாம் இல்ல. என்னோட வாழ்க்கையில முதல் முறையா இது மாதிரி விஷயங்களை எல்லாம் கேக்குறேன். அதான் கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கு. ஆனா, அதுக்காக மகிந்தரை நான் குற்றம் சொல்ல மாட்டேன். இது ஒரு பொறி மாதிரி. ஒரு தடவை சிக்கிக்கிட்டா தப்பிக்கவே முடியாது! ஆனா, பத்மாவையும், ஹாருவையும் நான் மறுபடியும் எப்ப பார்க்க போறேனோ தெரியல? அவங்க எப்பவும் என் மனசுலேயே இருக்காங்க.
(பெரோசா செல்கிறாள். சுவர்ணோவும், வெட்டப்பட்ட காய்கறிகளுடன் செல்கிறாள். மகிந்தர் கதவின் அண்டை நின்றுகொண்டு கேட்டுவைப் பார்க்கிறான்.)
கேட்டு: என்ன ஒரு அழகான நாடு! என்ன அழகான அமைதியான நாடு இது!
பத்மா: அப்பா, என்ன இதெல்லாம்?
மகிந்தர்: என்ன ஆச்சு?
பத்மா: தோட்டத்துல இருந்து யாரோ பீர்க்கங்காய்களை எடுத்துட்டுப் போயிருக்காங்க. ஒன்னு கூட மிச்சம் இல்ல.
கேட்டு: ஏதாவது ஆட்டோட வேலையா இருக்கலாம்.
கேட்டு: ஆமா ஆடு தான் வந்து உங்க தலை முடியை மேஞ்சு மொட்டையாக்கிட்டுப் போயிடுச்சுன்னு கூட சொல்லுவீங்க, அப்படித்தான!
பத்மா: நான் போயி வேலி கட்டப்போறேன்.
மகிந்தர்: எங்க போற?
பத்மா: தோட்டத்துக்கு.
மகிந்தர்: உள்ள போ, எல்லாத்தையும் எடுத்து வை.
பத்மா: ஏன்?
மகிந்தர்: இன்னைக்கு நாம நதியைக் கடந்து அந்தப் பக்கம் போக போறோம்.
பத்மா: அந்தப் பக்கமா?
மகிந்தர்: ஆமா, மறுபக்கத்துக்கு போகப் போறோம். எப்ப பார்த்தாலும் காடு மேடுனு சுத்திக்கிட்டு இருந்தேன்னா, நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு உனக்கு எப்படித் தெரியும்? போ இப்போ.
(பத்மா திண்ணைக்குச் செல்கிறாள்)
மகிந்தர்: அப்பா, நதிக்கரையோரத்துல இருக்குற முழு குடியிருப்புப் பகுதியும் காலியாகிடிச்சு தெரியுமா?
கேட்டு: ராய்-களும், மண்டல்-களும் எங்க போனாங்க?
மகிந்தர்: ஹரேன் பண்டிட்-ஐ பார்க்கலையா நீங்க? பாகிஸ்தான் உருவான உடனே அவன் இடத்தைக் காலி பண்ணிட்டுப் போயிட்டான். இப்போ டவுன்லயும் என்ன நடக்குதுன்னு பாருங்க.
கேட்டு: நான் ஏன் டவுன்ல நடக்குறதைப் பார்க்கணும்? டவுன்ல இருக்குற பணக்காரங்களோட நாம ஏன் போட்டி போடணும்?
மகிந்தர்: நீங்க சாப்பாடு கிடைக்காம பட்டினி கிடக்க விரும்பலேனா, நீங்க அவங்களைப் பார்த்து தான் ஆகணும். யாரு உங்களுக்கு சாப்பாடு போடுவா? அந்தப் பணக்காரங்கதான் நம்ம பலம். நம்மளை விட்டுட்டு மட்டும் அவங்க போனாங்கன்னு வச்சிக்கோங்க, நமக்குதான் பெரிய ஆபத்து.
(கேட்டு தலையைக் குனிந்தபடி அமர்ந்திருக்கிறார்)
மகிந்தர்: நம்மைப் போல வர்றவங்களுக்கு இந்துஸ்தான் அரசாங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செஞ்சிருக்கு. அங்க போனா ஏதாவது பண்ணி பிழைச்சுகலாம். இது மாதிரி வாய்ப்பு நமக்கு மறுபடியும் கிடைக்காது. நான் மண்டல்-ஓட இடத்துக்கு போயிட்டு சீக்கிரம் வந்துடுறேன். நேரம் ரொம்ப குறைவா இருக்கு. படகு இன்னைக்கு சாயந்தரம் கிளம்புது.
(மகிந்தர் செல்கிறான். சுவர்ணோ வந்து அமர்கிறாள்)
பத்மா: அப்பா.
கேட்டு: என்ன?
பத்மா: கல்கத்தா ரொம்ப பெரிய நகரம்தான?
கேட்டு: இருக்கலாம்.
பத்மா: அந்த நகரம் எப்படி இருக்கும்?
சுவர்ணோ: பத்மா!
பத்மா: அண்ணி!
சுவர்ணோ: இப்போ போ, இங்க இருந்து.
பத்மா: கல்கத்தா பெரிய நகரம், ஆனா அங்க மக்கள் ரொம்ப அதிகமா இருப்பாங்கன்னு ஹாரு சொல்றான். அங்க ரொம்ப கூட்டமா இருக்குமாமே.
சுவர்ணோ: ஆமா. போ உள்ள.
கேட்டு: நதிக்கரை நெடுகவும் யாரும் இல்ல. எல்லாம் வெறிச்சோடி கிடக்குது. வயல்களும், தோட்டங்களும் வெறிச்சோடிப் போச்சு.
(கேட்டு எழுந்து நிற்கிறார்)
சுவர்ணோ: எங்க போறீங்க?
கேட்டு: நான் போய் தோட்டத்துல கொஞ்ச நேரம் உட்கார விரும்புறேன். இதுக்கு அப்புறம் என்னால அதைப் பார்க்க முடியுமோ என்னவோ.
(கேட்டு செல்கிறார்)
சுவர்ணோ: கொஞ்சம் பொறுங்க, மாமா. நான் பலகையை எடுத்துட்டு வரேன் நீங்க உட்கார.
(அமர்வதற்கான மரப்பலகையை எடுத்துக்கொண்டு சுவர்ணோ திண்ணைக்கு வருகிறாள். கோபாலும் அந்நேரம் வந்து சேர்கிறான்)
கோபால்: (பாடுகிறான்)
“இந்த தேசத்தை விட்டு போவோம் என்றாய்
அது பாரத பூமியைத் துண்டாடியதே" பத்மா, இந்தப் பாடலை நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் எழுதினேன். சந்தம் சரியா வந்திருக்கு. சரிதானே?
பத்மா: நான் இப்ப தான் உள்ள வந்தேன்.
(கோபால் புத்தகங்களைச் சுட்டிக்காட்டுகிறான்)
கோபால்: நான் உனக்கான ரெண்டு புத்தகங்கள் வாங்கிட்டு வந்துருக்கேன். நீ படிக்காம மட்டும் இருந்து பாரு... அப்புறம் இருக்கு உனக்கு.
பத்மா: என்னால எப்படி படிக்க முடியும். இன்னைக்கு சாயங்காலம் நாம படகுல கிளம்புறோம்.
கோபால்: எதிர்பாராத விதமா ஏதாவது கெட்டது ஒன்னு நடந்துட்டா போதும், மக்கள் உடனே தங்களோட புத்தியை இழந்துடுறாங்க. அங்க எல்லையில ராணுவ கேப்டன், ஹாரன் மண்டல்-ஐ பிடிச்சிட்டான். என்னன்னு சொல்ல?..
(கோபால் ஆச்சர்யத்துடன் இவ்வாறு கூற, சுவர்ணோ தோட்டத்தில் இருந்து திரும்பி வருகிறாள்)
கோபால்: அண்ணி, என்ன இதெல்லாம்? என்ன நடக்குது இங்க?
சுவர்ணோ: எல்லாம் உங்க அண்ணன் தான். இன்னைக்குப் படகுல கிளம்புறோம்.
கோபால்: அட என்ன அண்ணி!, அவரு இப்ப ஒன்னு அப்ப ஒன்னுன்னு அடிக்கொருமுறை மனச மாத்திக்குவாரு. இப்போ எங்க அவரு?
சுவர்ணோ: அவரு டவுனுக்குப் போயிருக்காரு.
(காலிம் வருகிறான்)
காலிம்: கோபால், மகிந்தரைக் கூப்பிடு.
கோபால்: ஹே, மதியம் நீ எங்க போன? ஆளையே காணோம்.
காலிம்: மகிந்தரைக் கூப்பிடு.
கோபால்: அண்ணன், வீட்டுல இல்லை.
காலிம்; வீட்டுல இல்லையா?
கோபால்: ஏன், என்ன ஆச்சு?
காலிம்: பாட்டி இங்க வந்திருந்தாங்க. இங்க இருந்து வீட்டுக்குத் திரும்பி வந்ததும் அறைக் கதவை பூட்டிக்கிட்டு உள்ளேயே இருந்தாங்க. அப்புறம் அறைக் கதவை திறந்து வெளியே வந்து எங்கேயோ கிளம்புனாங்க. எங்க போறீங்கன்னு நான் கேட்டேன். ஆள் பார்க்க ரொம்ப வருத்தமா இருந்தாங்க. எந்த பதிலும் சொல்லாம போயிட்டாங்க. அதனால தான் அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு கேட்க வந்தேன் இங்க.
கோபால்: அண்ணி, அண்ணி.
(கேட்டு வருகிறார்)
கேட்டு: இவன்ட்ட சொல்லு மருமகளே, மகிந்தர் முஸ்லிம்கள் நம்ம எதிரினு சொல்லிட்டான்னு.
(காலிம் புன்னகைக்கிறான்)
காலிம்: அவனுக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சு. பாட்டிக்கும் தான். மகிந்தரோட சண்டை போட்டதுனால தான் அவங்களும் இப்படி இருக்காங்களா?
கோபால்: எல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம்!
கேட்டு: நதிக்கு அந்தப் பக்கம் எங்களுக்காக சந்தோஷமான வாழ்க்கை காத்துக்கிட்டு இருக்குன்னு மகிந்தர் சொல்றான். அங்க வீடு கட்டிக்க நிலம் கிடைக்கும்னு சொல்றான்.
கோபால்: அது வெறும் அடிப்படைப் பிரச்சனை தான். மக்களோட ஆசையை தூண்ட செய்தித்தாள்கள் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கு. ஏதோ அது பூலோக சொர்க்கம் மாதிரி.
கேட்டு: அது (பூலோக சொர்க்கம்) மாதிரியான நிம்மதி இந்தத் தோட்டத்துலதான் எனக்குக் கிடைக்குது. ரொம்ப அமைதியா இருக்கு இங்க! ஆஹ்!
(கேட்டு செல்கிறார்)
(கோபால் காலிமிடம் பேசுகிறான்)
கோபால்: (இயல்பாக) என்ன காலிமுதீன் பாய், இப்ப எல்லாம் ஆளையே பாக்க முடியுறது இல்ல, எப்படி இருக்கீங்க?
(பத்மா உள்ளே செல்கிறாள்)
காலிம்: என்னைப் பற்றி நானே என்ன சொல்ல? நீ தான் சொல்லணும், நான் எப்படி இருக்கேன்னு.
கோபால்: நான் சொல்லனுமா? நீங்க தான் இப்போ இங்க எஜமானர்கள். இது உங்க காலம். இந்த நாள் உங்களோடது.
காலிம்: அப்போ இரவு உங்களோடதா? நீங்க இரவோட விருந்தாளிகள்.
(ஹாரு வருகிறான்)
ஹாரு: (காலிமிடம்) நாங்க இன்னைக்கு இந்துஸ்தானுக்கு போகப் போறோம்னு அப்பா சொல்றாரு.
காலிம்: இங்க இருந்து இந்துஸ்தான் வரைக்கும் போகப் போறீங்களா?
ஹாரு: ஆமா. நாங்க நதியைக் கடக்க போறோம்.
காலிம்: நீ என்னோட தோள்கள் மேல ஏறிகிட்டா நேரா கல்கத்தாவுக்கே போகலாம்.
(காலிம் ஹாருவை அன்புடன் அணைத்துக்கொண்டு அவனைத் திண்ணை மேல் தூக்கி அமர வைக்கிறான்)
கோபால்: பேரரசர் விருப்பப்பட்டுட்டீங்க. வாங்க போகலாம்.
காலிம்: அது சரி, நீங்க என்னை இங்க விட்டுட்டுப் போயிட்டீங்கனா, யார் என்னைக் கவனிப்பாங்க?
(காலிம் - கோபால் விளையாட்டாகப் பேசுகிறார்கள்)
கோபால்: பஞ்சாப், பீகார்ல இருந்து நிறைய விருந்தாளிங்க அங்க வருவாங்களே, அப்படி இருக்கும்போது இந்தப் பழைய பக்கத்துவீட்டுக்காரங்களை எப்படி நினைக்க முடியும்.
காலிம்: உன் மனசுல எங்க ஞாபகம் ரொம்ப நாள் இருக்குமான்னு உன் மேல் அங்கியைத் தூக்கி உள்ளே தலையை விட்டுப் பார்த்தா தெரிஞ்சிடும்.
(காலிம் விளையாட்டாக கோபாலின் மேல் அங்கியை தூக்கிப் பார்க்கிறான். கோபால் மெட்டு ஒன்றை முணுமுணுக்கிறான்)
காலிம்: ஒன்னும் இல்ல, காலியா இருக்கு.
(அந்நேரம் அங்கு வந்த மகிந்தர் அவர்கள் இருவரையும் கண்களை அகல விரித்து ஆச்சர்யத்துடன் பார்க்கிறான். அதன்பன் ஹாருவின் கைகளைப் பிடித்துக் கொள்கிறான்)
மகிந்தர்: ஹாரு, வா உள்ள.
காலிம்: அவன் (ஹாரு) இங்க இருந்தான்னா, அவன் மதம் பறிபோயிடுமா என்ன?
கோபால்: அண்ணா, நாம இங்க இருந்து கிளம்புறோமா?
மகிந்தர்: இல்ல, இன்னைக்கு இல்ல.
கோபால்: தினமும் இதைத்தான் நீ சொல்ற. பாட்டி கிட்ட என்ன சொன்ன நீ?
மகிந்தர்: நான் ஒன்னும் குற்றம் பண்ணிடல. அவங்க கிட்ட உண்மையைத் தான் சொன்னேன்.
கோபால்: நீ குற்றம் பண்ணாம இருந்திருக்கலாம், ஆனா நீ அவங்களை அவமதிச்சிட்ட!
மகிந்தர்: என்ன? என்கிட்ட நீ இப்படித்தான் பேசுவியா? பாரு----
காலிம்: கோபால், வேணாம் நிறுத்து! (மகிந்தரிடம்) நாங்க இப்போ உனக்கு எதிரிங்க, இல்ல?
மகிந்தர்: அதை சொல்ற தைரியம் எனக்கு இல்ல. ஏன்னா நாம இப்போ இருக்குறது பாகிஸ்தான்ல.
காலிம்: அப்போ இது இந்துஸ்தானா இருந்திருந்தா, முஸ்லிம்கள் உன் எதிரின்னு சொல்லிருப்ப, அப்படித்தான?
மகிந்தர்: அதை பத்தி பேசுறதுல எந்த அர்த்தமும் இல்ல.
காலிம்: நீ ஒரு சரியான அயோக்கியன்! (குத்தலாக) உன் அக்கறையைப் பார்த்து நான் அப்படியே நெகிழ்ந்து போயிட்டேன்!
கோபால்: நாம இங்க இருந்து போக போறோமாங்குறதே இன்னும் தெளிவா தெரியல. அதுக்குள்ள ஏன் நாம எல்லாத்தையும் எடுத்து வைக்குறோம்னு தான் எனக்குப் புரியல.
மகிந்தர்: என்ன பேசுற நீ?. நான் போகத்தான் போறேன். நீ வேணா இங்கேயே இருந்துக்கோ.
கோபால்: என்ன சொன்ன?
மகிந்தர்: பிரமாதம்!
காலிம்: சுத்தப் பைத்தியக்காரத்தனம்! கோபால், நான் போயிட்டு அப்புறமா வந்து உன்னை ஜைனுதீன் இடத்துக்கு அழைச்சுட்டுப் போறேன்.
(காலிம் கிளம்புகிறான்)
கோபால்: இன்னொரு தடவை யோசி, அண்ணா.
மகிந்தர்: யோசிக்க இனி எதுவும் இல்ல. நடக்குறதைப் பாரு. அதைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. வீட்டுல இருந்து வெளிய போனாதான் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கு. ஆனா இனி எங்கேயும் நிம்மதியை கிடைக்கும்னு எதிர்பார்க்க முடியாது.
(கேட்டு வருகிறார்)
கோபால்: அப்பா, ஹாரன் மண்டல்-ஐ எல்லையில வச்சு ராணுவ கேப்டன் பிடிச்சிட்டாரு.
கேட்டு: என்ன?
கோபால்: எனக்குத் தெரியும். சில கலந்துரையாடல் கூட்டங்கள்ல, நாம ரெண்டு நாடா பிரிஞ்சு இருக்கக்கூடாது, ஒரே நாடாகத் தான் இருக்கணும்னு பேசுனார். அது தான் அவரைப் பிரச்சனையில சிக்க வைச்சிருக்கு.
மகிந்தர்: அது குற்றம் இல்லை. அது வெறும் ஒரு கிழவரோட பேச்சுதான்.
கேட்டு: எப்போ அவரைக் கைது செஞ்சாங்க.
மகிந்தர்: மதியத்துல. நாம சின்ன சத்தம் கூட எழுப்ப முடியாது. அந்த அளவுக்கு நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. இது எதிரிகளோட நாடு, புரியுதா, இது எதிரிகளோட நாடு!
(சுவர்ணோ வருகிறாள்)
மகிந்தர்: சுவர்ணோ, எல்லையில உன்னோட நகைகளை அவங்க பறிச்சிக்குவாங்க. கல்யாணத்தப்போ உனக்குத் தந்த நகைகளையும், பத்மாவோட நகைகளையும் ஆடைகளுக்கு உள்ள மறைச்சு வை.
கேட்டு: ஆனா மகிந்தர்....
மகிந்தர்: என்ன?
கேட்டு: நான் இந்த இடத்தை விட்டு வரமாட்டேன். நான் சாகுறதுக்கு பயப்படல.
மகிந்தர்: ஓ! உங்களுக்கு பயம் இல்லாம இருக்கலாம். ஆனா எங்களைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சமும் அக்கறை இல்லை.
கோபால்: அண்ணா!
மகிந்தர்: உங்களுக்கு நல்லா தெரியும், உங்களை இங்க விட்டுட்டு நாங்க போக மாட்டோம்னு, அதான் இப்படி சொல்றீங்க. உங்களுக்கு வயசாகிடுச்சு, அப்போ இருந்து இப்போ வரைக்கும் உங்க வாழ்க்கை மொத்தமும் சுயநலமாகத் தான் இருக்குறீங்க.
கேட்டு: என்னால உன்னைப் புரிஞ்சிக்கவே முடியல.
மகிந்தர்: எங்களைப் பற்றியும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. பத்மா, ஹாருவை நினைச்சுப் பாருங்க. உங்களைப் பற்றி மட்டுமே நினைக்குறத நிறுத்துங்க.
கேட்டு: என்ன பார்த்தா நீ அப்படி சொல்ற?
(பத்மா வருகிறாள்)
மகிந்தர்: ஆமா, உங்களைப் பார்த்து தான் சொல்றேன்.
கோபால்: அண்ணா!
சுவர்ணோ: மாமா! (கேட்டுவை நோக்கி)
கேட்டு: கொஞ்சம் பொறு மருமகளே. அவன் இன்னும் என்னென்ன சொல்லப்போறான்னு தான் கேக்குறேனே.
மகிந்தர்: கிட்டத்தட்ட மொத்த கிராமமும் காலியா கிடக்கு. இப்போ இருக்குற நிலைமையைப் பற்றி இதுவரைக்கும் சொன்னதை விட இன்னும் அதிகமா சொல்லி இந்தக் கிழவரை கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு நினைச்சா, ஒரே அடியா போறீங்களே..
கேட்டு: சரி. என்னை நீ உன்னோட எங்க வேணாலும் கூட்டிட்டுப் போ. கூட்டிட்டுப் போ.
கோபால்: அப்பா, சரி விடுங்க!
கேட்டு: அது நரகமா இருந்தாலும் சரி, நான் உன் கூட வரத் தயார். வா போவோம்.
(உணர்ச்சிவசப்பட்டிருக்கும் கேட்டுவை, கோபால் அறைக்குள் அழைத்துச் செல்கிறான்)
கோபால்: அப்பா, நிதானத்தை இழக்காதீங்க. அமைதியா இருங்க.
மகிந்தர்: இந்த விஷயத்தை இன்னைக்கே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு முடிச்சிட்டுதான் மறுவேலை.
(சுவர்ணோ, மேடையின் மறுபுறம் இருந்து வெடுக்கென கூறுகிறாள்)
சுவர்ணோ: யாருக்கும் கொஞ்சமும் விருப்பமே இல்லாத வாழ்க்கையை தான் வாழனும்னு ஆசைப்படுறீங்களா?
மகிந்தர்: அது நம்ம சாபம்! அப்படிதான் வாழ்ந்தாகணும்!
சுவர்ணோ: எங்க போவீங்க நீங்க?
மகிந்தர்: டவுன் ஆட்களோட சேர்ந்து நதிக்கு அந்த பக்கம் போகணும்.
சுவர்ணோ: அதுக்கு அப்புறம்?
மகிந்தர்: அதுக்கு அப்புறம் ஒன்னு முர்ஷிதாபாத், இல்லை கல்கத்தாவுக்கு போகணும்.
சுவர்ணோ: அங்க போய் எங்க தங்குவீங்க?
மகிந்தர்: அரசாங்கம் அதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கு. அதுமட்டுமில்லாம, அங்க இருக்குற இந்து சகோதரர்களும் உதவுவாங்க. பெருசா ஒன்னும் கவலைப்பட வேண்டாம்.
சுவர்ணோ: அப்புறம் பிழைப்புக்கு என்ன பண்ணுவீங்க?
மகிந்தர்: ஏன் இப்படி தோண்டித் தோண்டி கேள்வி கேட்டுகிட்டு இருக்க? ஏன்?
சுவர்ணோ: அமைதியா இருங்க. அப்போ எல்லாத்துக்கும் நீங்க உத்தரவாதம் தரீங்க அப்படித்தானே?
மகிந்தர்: இதை விட குறைஞ்ச உத்தரவாதம் இருந்தும் நிறைய பேர் கிராமத்தை விட்டு கிளம்பிட்டாங்க.
சுவர்ணோ: உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? பேசாம என்னைக் கொன்னுடுங்க. உங்க காலால் என் கழுத்தை நெறிச்சு கொன்னுடுங்க.
மகிந்தர்: ஏய், ஹாரு அம்மா! உனக்கு என்ன புத்தி பேதலிச்சிருச்சா?
பத்மா: அண்ணி, நீங்க இப்படி வாங்க.
சுவர்ணோ: தன்னோட தகப்பன் கிட்ட ஒரு மகன் இவ்ளோ கொடூரமா நடந்துக்குவாங்கனு என்னால நம்பவே முடியல!
பத்மா: அண்ணா!
மகிந்தர்: என்ன சொல்லு?
பத்மா: நீங்க இங்க இருந்து போனதுக்கு அப்புறம், திரும்பி வர்றதுக்கான கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டிருக்கும். அது உங்களை உறுத்தலையா? நீங்க சொந்தம்னு சொல்லிக்க அந்தப் பக்கம் யாரும் இருக்க மாட்டாங்க.
மகிந்தர்: நீ? நீ இதைச் சொல்றியா?
கோபால்: அண்ணா, இன்னொரு முறை யோசிச்சு பாரு. நீ தான் எங்களோட பெரியண்ணன்.
மகிந்தர்: யாரும் போக விரும்பாததுனால நானும் இங்கயே இருக்கனும்னு சொல்றியா? அப்புறம் ஏதாவது ஒன்னு நடக்கணும், அப்போ நான் சொன்னது சரின்னு உங்களுக்கு உணர்த்தனும்னு எதிர்பார்க்குறியா----
கோபால்: ஏதாவது நடந்தா நாங்க இங்க இருப்போம்னு நீ நினைக்குறியா?
மகிந்தர்: அப்படி ஏதாச்சும் நடந்துச்சுன்னா அப்புறம் யாரும் என்னைக் குற்றம் சொல்லக்கூடாது. யாரும் என்னைங கடிச்சி குதறாம பாத்துக்கோ. அவங்களுக்கு நீயாவது சொல்லிப் புரியவை.
கோபால்: இப்போ எங்க போற நீ?
மகிந்தர்: நம்ம திட்டத்துல மாற்றம் இருக்குன்னு டவுன்காரங்ககிட்ட போய் சொல்லிட்டு வரேன். பாட்டி இன்னைக்கு ரொம்ப கோபமா இருக்காங்க, இல்லையா?
கோபால்: அவங்க ரொம்ப நொந்துபோயிருக்காங்க.
மகிந்தர்: சரி நான் இப்போ கிளம்புறேன்.
(ஹேய்! என யாரையோ அழைத்தவாறு மகிந்தர் கிளம்ப, தேபேந்திர் வருகிறான்)
தேபேந்திர்: பிர்குட்சாவை சேர்ந்த பெரிய மனுஷன் ஒருத்தர் நம்ம பெட்டி படுக்கைகளை படகுத்துறை வரைக்கும் எடுத்துட்டுப் போக முன்வந்திருக்காரு. படகு இன்னைக்கு சாயங்காலம் கிளம்புது.
மகிந்தர்: ஏன் சாயங்காலம்?
தேபேந்திர்: அவரு பஞ்சாங்கத்தைப் பார்த்துட்டு, கிளம்புறதுக்கு மாலை நேரம் தான் பாதுகாப்பானதுன்னு சொன்னாரு. உனக்கு ஹரன் மண்டலைப் பற்றி ஏதாச்சும் விஷயம் தெரிஞ்சதா?
மகிந்தர்: ஆமா, ஆனா---
தேபேந்திர்: ஹரனுக்கு நடந்ததைப் பற்றி கேள்விப்பட்டதுக்கு அப்புறம், அக்கம்பக்கத்துல இருக்குற எல்லாருமே இங்க இருந்து போயிடனும்னு விரும்புறாங்க. எல்லாரையும் படகுல ஏத்துறது சிரமம் தான்.
மகிந்தர்: நாங்க இங்க இருந்து போக வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.
தேபேந்திர்: என்ன சொல்ற நீ?
மகிந்தர்: ஆமா. என்னோட அப்பா நாங்க இங்க இருந்து போக வேண்டாம்னு நினைக்குறாரு.
(கேட்டு கதவின் அண்டை தோன்றுகிறார்)
கேட்டு: நான் ஒன்னும் கிளம்புறதுக்கு எதிரா இல்ல. தேபேந்திர், நீ போ. நான் பெட்டி படுகைகளை அனுப்பி வைக்குறேன்.
(தேபேந்திர் செல்கிறான்)
மகிந்தர்: இப்ப என்ன ஆச்சு, அப்பா?
கேட்டு: நீ கொஞ்சமாவது புரிஞ்சிக்கணும்னு நான் விரும்புறேன்!
கோபால்: நீங்க நிஜமாவே போக விரும்புறீங்களா?
கேட்டு: ஆமா, நான் வரேன். கோபால், போ போய் நம்ம பெட்டிப் படுக்கைகளைத் தயார்பண்ணு.
மகிந்தர்: எல்லாம் தயாரா இருக்கு. கோபால், நான் பெட்டியை எடுத்துக்குறேன். நீ மிச்சத்தை எடுத்துட்டு வா.
(மகிந்தர் உற்சாகத்துடன் செல்கிறான். கோபால் மூட்டை முடிச்சுகளை எடுக்கிறான்)
கோபால்: அப்பா, நீங்க கோபமா இருக்குறதால தான் இப்படி பேசுறீங்க.
கேட்டு: இல்லை, கோபால். நாம் போவோம். ஒரு புது நாட்டைப் போய் பார்க்குறதுல என்ன ஆகிடப்போகுது?
(காலிம் வருகிறான்)
காலிம்: என்ன நாடு, மாமா? கோபால், வா ஜைனுதீனோட இடத்துக்குப் போவோம்.
(கோபால் கையில் இருக்கும் மூட்டையை மறைத்தவாறு, வெளிறிய சிரிப்புடன் பேசுகிறான்)
கோபால்: காலிம், நாங்க போறோம்.
காலிம்: நாம எவ்ளவோ காலம் ஒண்ணா வாழ்ந்திருக்கோம். ஒண்ணா சந்தோஷமா எவ்ளவோ நேரம் சொலவழிச்சிருக்கோம். எல்லாம் முடிவுக்கு வரப்போகுது இல்ல?
கோபால்: இது போறதுக்கான நேரம், காலிம். (பத்மாவை நோக்கி) பத்மா, ஹாருவை கூட்டிகிட்டு, நாம எதையெல்லாம் இங்கேயே விட்டுட்டு போறோம்னு காலிம்க்கு காட்டு. அது அவன் பொறுப்புல இருக்கட்டும். அண்ணி, நீங்க பூட்டுகளை எடுத்துட்டு வாங்க. நாம எல்லாக் கதவுகளையும், பெட்டிகளையும் பூட்டனும்.
காலிம்: இது எல்லாத்தையும் வெறும் ஞாபகமா மட்டும் விட்டுட்டு இங்க இருந்து நீ போகப் போறியா?
(கோபால் மூட்டையைக் கீழே போடுகிறான்)
கோபால்: அண்ணி, நான் கொஞ்சம் நேரம் நதியோரமா இருக்கப் போறேன்.
(கோபால் நடக்கத் தொடங்குகிறான்)
காலிம்: (கேட்டுவிடம்) மாமா, நீங்க கவலைப்படாதீங்க. உங்க வீட்டை நான் பாத்துக்குறேன். நீங்க படகுல போகும்போது என்னோட தோணில கொஞ்சம் தூரம் நான் கூடவே வரேன். உங்களை எல்லாம் மறுபடியும் எப்போ பார்க்கப் போறேன்னு தெரியல. (சுவர்ணோவிடம்) அண்ணி, நீங்க என்னை மறந்துட மாட்டீங்கன்னு நம்புறேன். தயவு செஞ்சு என்னை ஞாபகம் வச்சிக்கோங்க. என் அன்பு பத்மா, எங்க வீட்டு குளக்கரை ஓரமா மழைக்காலத்துல கூட வல்லாரை கீரை வளரும். ஆனா இந்த முறை அதைப் பறிக்க நீ இங்க இருக்க மாட்ட. ஆனா மாமா, எனக்குத் தெரியும், நாம எல்லாரும் ஒருநாள் சந்திப்போம். அது மட்டும் நிச்சயம். நீங்க அந்த நாட்டுக்குப் போய் சேர்ந்ததும் நீங்க தங்கப் போற முகவரியை எழுதி எனக்குக் கடிதம் போடுங்க. மாமா, அண்ணி, பத்மா--- நான் வரேன்.
(காலிம் வேகமாக நடந்து வெளியேறுகிறான். கோபால், நதியைப் பார்த்தவாறு மேட்டின் மேல் நின்றுகொண்டிருக்கிறான். மேடையின் முன் பகுதியில் நிற்கும் கேட்டுவை நோக்கி சுவர்ணோ வருகிறாள்.)
சுவர்ணோ: நாம எங்க போறோம்!
கேட்டு: மருமகளே, மருமகளே.. நான் இந்த வீட்டுல என்னோட அம்மாவுக்காக கடவுள் ஹரியோட நாமத்தைப் பலமுறை பாராயணம் பண்ணியிருக்கேன். எங்க அம்மா ரொம்ப காலம் முன்னாடியே இறந்து போயிட்டாங்க. ஆனாலும் அவங்க இன்னும் இங்க தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. இறந்து போன என்னோட முன்னோர்கள் எத்தனை பேரோட காலடித் தடங்கள் இந்த இடத்துல நிறைஞ்சிருக்கும்! ஓ! அம்மா!
(கேட்டு முணுமுணுத்தபடி அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். மேடை இருளடைகிறது. சூரியனின் கடைசி கதிர்கள் வானைச் சிவப்பாக்குகிறது. கோபால் அவன் நின்றுகொண்டிருந்த இடத்தில் இருந்து நகர்கிறான். மேட்டில் இருந்து, "ஓ என் தங்க நதியே" என பாடியபடி அவன் கீழிறங்குகிறான். பாடல் வரிகள் ஒன்றொரொன்று குழம்பி, அதன் ராகம் மட்டும் கேட்கிறது. சுவர்ணோ மேடையின் இடதுபுறத்திற்கு நகர்கிறாள். பத்மா மேடையின் பின்புறத்திற்கு நகர்கிறாள். ஹாரு சத்தம் எழுப்பாமல் மெல்ல நடந்து வந்து பத்மாவின் பின்னால் நிற்கிறான். பெரோசா மேட்டின் மேலிருந்து ஓடி வருகிறார். பத்மா திரும்பிப்பார்த்து, அங்கு ஹாரு நிற்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைகிறாள். ஹாருவின் கன்னத்தில் அறைவதுபோல் வந்து, பின்னர் அவனைத் தன் இரு கைகளால் அணைத்துக்கொண்டு கதறி அழத் தொடங்குகிறாள். பெரோசாவும் சுவர்ணோவும் ஒருவரையொருவர் பார்த்தவர்களாக அசையாமல் அப்படியே நிற்கின்றனர். பின்னர், பத்மாவின் அழுகையைக் கேட்டவர்களாக, இருவரும் கட்டியணைத்துக் கொள்கின்றனர்.
சுவர்ணோ: ஓ! அம்மா!
பெரோசா: ஆமா, ம்மா! எல்லாமே வெறும் கல்லு மாதிரி ஆயிடுச்சு. எல்லாருமே வரும் கல்லுதான்.
(பெரோசா, சுவர்ணோவின் தலையைக் கைகளால் வருடுகிறாள். பத்மாவும், ஹாருவும் ஒருவரை ஒருவர் பிடித்தவாறு இருக்கின்றனர். பின்னணியில் இசை ஒலிப்பது நின்றுவிட்டது. மேடை முழுவதும் இருள் கவிகிறது. ஒரு தனித்த பாய்மரப் படகு மேட்டுப் பகுதியின் இடம் இருந்து வலமாக நதியை மெதுவாகக் கடந்துச் செல்வது தெரிகிறது. எங்கோ வெகுதூரத்தில் இருந்து கேட்பதுபோல், பத்ர்-பத்ர்... பத்ர்-பத்ர் என படகு நீரில் மிதக்கும் சத்தம் மட்டும் கேட்கிறது.)
-----------------------------------------------திரை
வீழ்கிறது---------------------------------

கருத்துகள்
கருத்துரையிடுக