சடங்குகளும் உணவுகளும் நூலாக்க அறிவிப்புப் பகிர்வு
இத்தலைப்பின் மீது ஆர்வமும் எழுதும் வாய்ப்புமுள்ளோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
வழக்கமாக கல்வித்துறையில் தொடர்ச்சியாக நடத்தப்படும் கருத்தரங்க கட்டுரைத் தொகுப்பில் இருந்து இந்நூல் வேறுபட்டதாகவே அமையும் என்பது என் எதிர்பார்ப்பு. ஏற்கனவே பேராசிரியர் பக்தவத்சல பாரதி தொகுத்த தமிழர் உணவு நூலை வாசித்தோர் இதனை அறிவர்.
கல்விப் புலத்தில் ஆய்வுக்கட்டுரைகள் என்ற பெயரில் வலம் வரும் கருத்தரங்க கட்டுரைத் தொகுப்புகள் மீது எனக்கு விமர்சனம் உண்டு. பல சமயங்களில் கருத்தரங்கத்தின் மையத்திற்கு உடபடாத வேறொரு பெருண்மையைப் பேசும் ஆயத்த நிலை கட்டுரைகள் ஆய்வுக் கட்டுரை என வெளிவந்துள்ள மோசமான சூழல் இதுவரை நடப்பில் இருக்கிறது. அதேசமயம் சில நல்ல கட்டுரைகளும் அத்தகைய தொகுப்புகளில் ஆங்காங்கே இருப்பதை எவரும் மறுக்க முடியாது. ஏதேனும் ஒரு ஆய்வு கருத்தரங்க கட்டுரைத் தொகுப்பை எடுத்து அதிலுள்ள ஆய்வுக்கட்டுரைகளை மட்டும் தனித்து சுட்டிக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நெடுநாளாக உண்டு. இப்படியான கட்டுரைகள் எழுதப்படுவதன் நோக்கம் தன்விபரக்குறிப்பின் மதிப்பை ஏற்றுவதற்கு என்பதாலும் பல்வேறு சட்ட திட்டங்களுக்குள் கட்டுரை அடங்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாலும் இச்சிதைவு வழக்கமாகிவிட்டது. வழக்கமாகிவிட்டது என்பதால் அதனை அப்படியே விட்டு விட முடியுமா? அதை ஏன் ஒரு விவாதப் புள்ளியாக மாற்றக் கூடாது.
கருத்தரங்கில் வழங்கப்படும் கட்டுரைகளின் தரம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படும் விதம் ஆகிய இரண்டும் பல இடங்களில் எடுத்துக்கொண்ட பொருண்மையைப் பற்றிய விதந்து ஓதுவதாகவோ அல்லது அந்நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மீதான புகழுரைகளாகவோ நின்று விடுகிறது. முன்பு கூறியபடி தன்விபரக்குறிப்பின் மதிப்பை ஏற்றுவதற்காக மட்டுமே கருத்தரங்க கட்டுரைகளை எழுத வேண்டும் என்கிற முடிவை எடுக்க வைத்த பெருமை நான் புரட்டிப் பார்த்த பல்வேறு கருத்தரங்க தொகுப்புகளையே சாரும். நான் அப்படியாக எழுதிய முதல் கட்டுரை பல்வேறு விதிகளின் அடிப்படையில் ஆங்காங்கே துண்டாடப்பட்டு கட்டுரையின் மையப்பொருளை இழந்து பிழிந்தெறியப்பட்ட கரும்புச் சக்கையாகவே வெளியிடப்பட்டது. திருக்குறள் கருத்தரங்கம் ஒன்றிற்காக உரை வேறுபாடை மையமாக வைத்து கட்டுரை ஒன்றை அனுப்பியிருந்தேன். தேர்வுக்குழுவில் இருந்த சமூகப் புரட்சியாளர்கள் திருக்குறளில் சமூகக் கருத்துகளைப் பேசும் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கூறியது கூறல் கட்டுரைகளையே அத்தொகுப்பில் இடம்பெற வைத்து உரை வேறுபாடு கட்டுரையை விலக்கி வைத்தனர். திருக்குறளில் உரை வேறுபாடு என்கிற உட்தலைப்பு இடம்பெற்றதாலேயே அத்தலைப்பை மையமாகக் கொண்டு ஐந்து நபர்களின் உரைகளைப் படித்து அக்கட்டுரையை வடிவமைத்தேன். பெங்ஜன் புயல் வீசிய மின்சாரத் தொடர்பும் முறையான இணைய வசதியும் இல்லாத சூழலில் எழுதிய அக்கட்டுரை நிராகரிப்புக்கு உள்ளானது. மேலும் உரை வேறுபாடு குறித்த ஒரு கட்டுரை கூட அத்தொகுப்பில் இடம்பெறவில்லை. இதற்கெல்லாம் காரணம் அதிமேதாவித்தனம் பொருந்திய கட்டுரைத் தேர்வுக்குழுவே. இந்தக் கருத்து என்னுடைய கட்டுரை விலக்கப்பட்டதால் மட்டும் சொல்லவில்லை. அவர்களுடைய குழு மைய வாத செயல்பாட்டால் இலக்கியத்திற்கென ஒதுக்கப்படும் கொஞ்ச நிதியும் முடக்கப்படுவதற்கும் முறையான பயன்பாட்டிற்கு உள்ளாகாமல் போனதற்குமான ஒட்டுமொத்த மதிப்பீடு.
நூற்றாண்டு காணும் தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் நிகழ்ந்த கருத்தரங்குக்கு கு. அழகிரிசாமியின் கதைகளை மையமிட்டு ஒரு கட்டுரை அனுப்பியிருந்தேன். கட்டுரையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கருத்தரங்கும் நடந்தது. தொகுப்பாக வெளியிடப்படும் எனக் கூறப்பட்ட அக்கருத்தரங்க கட்டுரைகள் ஆண்டுகள் கழித்தும் இதுவரை தொகுப்பாக வெளியிடப்படவில்லை. அதுகுறித்த கேள்விகளுக்கும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்களிடம் இருந்து முறையான பதில் அளிக்கப்படவும் இல்லை. சமீபத்தில் தமிழ்வழிக் கல்வியைப் பற்றிய கட்டுரை ஒன்றை இதுபோன்ற மற்றொரு கருத்தரங்குக்கு அனுப்பியிருந்தேன். கருத்தரங்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத வகையிலேயே கருத்தரங்கம் நடைபெற்றதை அறிந்தேன். அப்போது தான் நல்லவேளை நேரில் சென்று கலந்து கொள்ளவில்லை என மனம் ஓரளவு அமைதியடைந்தது. தன்னை எழுத்தாளர் என தம்பட்டம் அடித்துக்கொள்வதற்கெனவும் கருத்தரங்க நிகழ்வு என்ற பெயரில் ஒருவருக்கொருவர் சொரிந்து சுகம் காண்பதற்குமான நிகழ்வுகளாக பல்வேறு பன்னாட்டு கருத்தரங்கங்கள் மாறிவிட்டன. அதில் நல்ல கட்டுரை எழுதியவர்களில் உரிய கவனிப்பைப் பெறாத ஐந்து நபர்கள் கூட அவர்கள் உழைப்புக்கேற்ற கட்டுரைகளின் உள்ளடக்கத் தகுதிக்கேற்ப கண்டுகொள்ளப்படும் நிலை இல்லாமல் ஆகி வருகிறது. இதில் மற்றொரு கொடுமை பன்னாடு என்ற சொல்லின் மேல் உள்ள கவர்ச்சி காரணமாக அதைப் பயன்படுத்த வேண்டுமென வெளிநாட்டில் இருக்கும் ஒருவரிடம் கட்டுரை என்ற பெயரில் ஒன்றை வாங்கியோ அல்லது அவர்கள் பெயரில் தாங்களே எழுதியோ ஏதாவது ஒன்றைச் சேர்த்துக்கொள்ளும் மரபும் தற்போது உருவாகி வருகிறது. மற்றொரு இடத்தில் கருத்தரங்க தலைப்பே தெரியாதவர்கள் தலைமையுரை வழங்கிய அவலமும் கண்கூடாக நடந்திருக்கிறது. எந்தத் தைரியத்தில் இதெல்லாம் செய்யப்படுகிறது. வெற்றுப்புகழ்ச்சியெனினும் கூட பொருந்துமளவு கொஞ்சமேனும் அடிப்படை அறிவுடையோர்(துணைவேந்தராகவே இருப்பினும், அதுவும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவே இருப்பினும்) இத்தகைய கருத்தரங்குகளில் உரையாற்ற அழைக்கப்படுதல் வேண்டும். இவ்வாறு பலர் பல அனுபவங்களை அடைந்திருக்கலாம். இவையெல்லாம் விவாதத்திற்குரியது. மாற்றப்பட வேண்டியது. கல்விப் புலத்தில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்களும் பேராசிரியர்களும் கல்வி நிறுவனங்களும் இதுகுறித்த உரையாடலைத் தொடங்க முன்வர வேண்டும். இத்தகைய அவலத்தை மாற்றுவதற்கு தன்னால் இயன்ற ஒரு அடியை முன்னெடுத்து வைக்க வேண்டும் . தன்விபரக்குறிப்பில் மதிப்பை ஏற்றுதல் எனும் சந்தை நோக்கில் ஏராளமான இதுபோன்ற செயல்பாடுகள் கல்விப்புல ஆய்வின் மதிப்பைக் கெடுக்கக்கூடியதாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்த விமர்சனங்கள் இருந்தாலும் நானும் கல்விப்புலத்தில் பணி வாய்ப்பு பெற வேண்டும் (அத்தகைய மதிப்புகள் தன்விபரக்குறிப்பில் இடம்பெற்றிருந்தும் இதுவரை வேலை கிடைக்கவில்லை) என்கிற வகையில் இப்படியான கருத்தரங்குகளுக்கு கட்டுரைகளை இதுவரை அனுப்பியிருக்கிறேன் என்பதையும் இங்கு ஒப்புக்கொண்டாக வேண்டும். நிற்க. என்னால் சொல்லப்பட்ட கருத்துகள் எவருடைய மனதையேனும் புண்படுத்தியிருந்தால் ஏன் புண்படுகிறது என சிந்தியுங்கள்.
ஒரு தகவலைப் பகிர வந்து ஏதேதோ சொல்ல வேண்டியதாகிவிட்டது. முன்னர் சொன்னபடி இந்த அறிவிப்பை தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கட்டுரையை வடிவமைப்பதற்கான உழைப்பையும் முயற்சியையும் செலுத்துங்கள். இரண்டு மாத கால அளவு நேரம் உள்ளது. ஏற்கனவே தொகுக்கப்பட்டு வெளியான தமிழர் உணவு நூலை ஒருமுறை கட்டாயம் வாசித்துப் பாருங்கள். இந்த நூலுக்கும் பக்க வரையறை உள்ளிட்ட விதிகள் இருப்பினும் காலச்சுவடு தொகுப்பு மற்றும் பதிப்பில் கவனம் செலுத்தும் ஒரு நிறுவனம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதுவரை காலச்சுவடு பதிப்பகம் வழி தொகுக்கப்பட்ட சிறுகதை நூல்கள், கட்டுரை நூல்கள் ஆகியன அதற்கு சான்று. கல்விப்புலத்திற்கு வெளியிலிருந்து மனப்பூர்வமான ஈடுபாட்டால் ஆய்வு நோக்கில் செய்யப்படும் இதுபோன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியன.
-அழகுராஜ்

கருத்துகள்
கருத்துரையிடுக