அரசதிகாரத்திற்கு எதிரான நீதி -அழகுராஜ்
அரசதிகாரத்திற்கு எதிரான நீதி -அழகுராஜ்
ஆர் ஜே பிரசாத் இயக்கத்தில் காம்ரேட் டாக்கிஸ் யூடியூப் சேனலில் வெளிவந்துள்ள ஆவணப்படம் வாச்சாத்தி. 1992ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் சந்தனமரக் கடத்தலை அடிப்படையாக வைத்து நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை சம்பவத்தின் சாட்சியங்களை வரலாற்று சான்றுகளோடு பதிவு செய்யும் மிகச்சிறந்த ஆவணமாக இப்படத்தைக் கருதலாம். சாப்பிடுவதற்கும் இருப்பதற்கும் இடமில்லாமல் தன்னுடைய சொந்த ஊரில் நிர்க்கதியாக நிற்பதை நினைத்துப் பார்ப்பதற்கே கொடுமையாக உள்ளது. அரசியல் ரீதியாக பார்த்தால் அதிமுக ஆட்சிக் காலத்தில் வனத்துறை, காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் பெண்கள் மீதும் பொதுமக்கள் மீதும் நிகழ்த்திய வன்கொடுமைக்கு சட்டப் போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க, தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளை திமுக அரசாங்கம் விடுதலை செய்திருக்கிறது.
அரசியல்வாதிகள் மட்டுமன்றி அரசு ஊழியர்களாலும் ஆளுங்கட்சி எப்போதும் ஆதாயம் அடையக்கூடியதாக இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் நிரூபிக்கப்பட்ட ஆதாரம். பொதுவுடைமை தோழர்களை உண்டியல் குலுக்குபவர்கள் என்று ஏளனமாகப் பேசுவது இன்றுவரை தொடர்கிறது. ஒவ்வொரு போராட்டத்திற்கும் நலப்பணிக்கும் பொருளாதார ஆதாரமாக இருந்து நாட்டின் ஏதோவொரு மூலையில் ஒடுக்கப்பட்டும் பாதிக்கப்பட்டும் நீதி கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டும் வாழக்கூடிய மக்களுக்கான வாழ்நாளை நீட்டித்துத் தரக்கூடியதாக உண்டியல் பணம் தான் இருந்திருக்கிறது என்பதை இந்த ஆவணப்படத்தைப் பார்ப்பவர்கள் உணர முடியும்.
பொதுவுடைமை இயக்கங்கள் இதுவரை சாதித்தன என்ன? என்ற அரசியல் ரீதியாக ஏகப்பட்ட கேள்விகள் காலந்தோறும் முன்வைக்கப்பட்டு வருகிறது. நாடெங்கும் பல போராட்டங்களை நடத்தி அரசதிகாரத்திற்கு இரையாகி அழிவின் விளிம்பில் துடித்துக் கொண்டிருக்கும் மக்களைப் பிழைக்க வைக்கும் பணி இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது என்பதே விடையாகும். எப்போதேனும் ஒரு பேரிடர் நிகழும்போது மட்டும் நேசக்கரத்தை விதைத்து தாங்கள் தான் மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டு என பெருமை பேசித் திரிவோர்க்கு மத்தியில் தர்மபுரி மாவட்டத்தின் மலையோர கிராமத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் அளித்த போக்குவரத்து ஊழியர்களைக் குறித்து இந்த ஆவணப்படத்தில் பார்க்க முடியும். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. பொதுவுடைமை இயக்கம் நிகழ்த்தும் பல்வேறு முற்போக்கான சீர்திருத்தப் பணிகளுக்கு எப்போதும் தங்கள் நேசக்கரத்தை நம்பிக்கையுடன் நீட்டுபவர்களாக பல்வேறு சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் இன்றுவரை இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட உதவிகள் தான் அந்த மக்களுக்கான நீதி கிடைப்பதற்குரிய வழக்கை வருடக்கணக்கில் உயிர்ப்புடன் வைத்திருந்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
அநீதியிலிருந்து தப்புவதற்கு மற்றொரு அநீதியை நிகழ்த்துவதற்கு தயாராக இருப்போரை எதிர்கொள்வதற்கு உண்மை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பொறுமை, விடா முயற்சி, துணிச்சல் போன்ற இதர அம்சங்களையும் உடன் கொண்டிருக்க வேண்டியுள்ளது. அதனை நிகழ்த்திக் காட்டியவர்களாக வாச்சாத்தி மக்களைக் கூற முடியும். நிகழ்கால வாழ்வில் நிகழும் சின்னச்சின்ன பிரச்சினைகளுக்குத் துவண்டு போகும் சமகாலத்தினர், பல்வேறு வகையிலான உணர்வுகளைப் பாடமாக கற்றறிவதற்குரிய ஏராளமான அம்சங்களை இந்த ஆவணப்படம் தன்னகத்தே கொண்டுள்ளது.
திருப்பரங்குன்றம், வாச்சாத்தி என ஆவணப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம், புதுவை பல்கலைக்கழகத்தில் நண்பர்களின் ஒத்துழைப்போடு நடைபெற்ற Watch the documentary. Participate the discussion. நிகழ்ச்சி தான் நினைவுக்கு வருகிறது. இப்படியான ஆவணப்படங்கள் குழுவாகப் பார்க்கப்பட்டு உரையாடலுக்குள் வர வேண்டியன என்கிற எண்ணம் தற்போது எழுகிறது. நீலம் சோசியல் மூலம் இப்படிப் பல ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவையெல்லாம் உரையாடலுக்கு வரவேண்டியதற்குரிய வலு கொண்டவை. அவசியம் அனைவரும் ஒருமுறை இதனைப் பாருங்கள். விவாதியுங்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக