கண்ணியமும் கலவரமும்: திருப்பரங்குன்றம் ஆவணப்படம் -அழகுராஜ்

கண்ணியமும் கலவரமும்: திருப்பரங்குன்றம் ஆவணப்படம் -அழகுராஜ்

 கடந்த சில மாதங்களாக திருப்பரங்குன்றம் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. நேற்று (01/03/2026) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை வரை ஒவ்வொன்றும் அரசியல் நகர்வுகளாகவே வலதுசாரி அமைப்புகள் மூலம் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இவை குறித்து அறிவுத் தளத்தில் அங்குள்ள மக்களின் எண்ணவோட்டத்தை அறிந்து விவாதிப்பது அவசியமாகும். பாபர் மசூதி இடிப்பு, அயோத்தியில் இராமர் கோயில் கட்டுதல் என செயல்திட்டங்கள் அடிப்படையில் செயல்படும் பா.ஜ.க.வின் மற்றொரு செயல் திட்டத்தைத் தமிழ்நாட்டின் தொடங்குவதற்கான தொடக்கப் புள்ளியாக திருப்பரங்குன்றத்தைத் தேர்வு செய்திருக்கின்றனர். பாபர் மசூதி, அயோத்தி ராமர் கோயில் என்பதைப் போல திருப்பரங்குன்றம் முருகன் கோயில், சிவன் கோயில், சிக்கந்தர் தர்கா என களம் மாறியிருக்கிறது. இதனை இதுவரை நடந்த நிகழ்வுகள் வாயிலாக சேறல் வலையொளி (youtube) சேனலில் தவம் மற்றும் தமிழ்தாசன் இயக்கத்தில் அறக்கலகம் முலம் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ள திருப்பரங்குன்றம் ஆவணப்படம் தெளிவாக விளக்குகிறது. (படத்திற்கான இணைப்பை இறுதியில் வழங்கியுள்ளேன்.)

     இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்போது நாமும் இப்படியான ஒன்றை எடுக்க வேண்டும் என நினைக்கும் அளவிலான காட்சிகளும் உள்ளடக்கச் செய்திகளும் அமைந்திருப்பது சிறப்புக்குரியது. திருப்பரங்குன்றம் பற்றிய செய்திகளோடு நில்லாமல் நடைபெற்று வரும் பிரச்சனைகளினுடைய மையத்தைப் நோக்கி படம் சென்றுள்ளது. இவ்விவகாரம் பெரிதுபடுத்தப்படுவதன் நோக்கத்தை எச். ராஜா உள்ளிட்ட வலதுசாரிகள் நடந்துகொண்ட விதத்தின் வழியாக இந்த ஆவணப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கல்வெட்டு ஆவணங்கள் மற்றும் வரலாற்றுச் செய்திகள் எடுத்தாளப்பட்டுள்ள விதம் தனித்துக் காணத்தக்கது. சிக்கந்தர் என்ற பெயர் வழக்கு குறித்த நூற்றாண்டுக்கு முந்தைய வரலாறு மட்டுமல்லாது மக்களுக்குப் பழக்கப்பட்டுள்ள பண்பாட்டு வரலாற்றுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் பல உள்ளுர் மக்கள் பேசும் பகுதி இடம்பெற்றுள்ளது. நூற்றாண்டு வரலாற்றுத் தரவுகளோடு அங்குள்ள மக்களின் முந்தைய தலைமுறை வரலாற்றையும் நினைவுகூர்ந்து அவற்றை இணைக்கும் ஒரு போக்கினை இப்படம் தன்னுள் கொண்டுள்ளது. 

     படத்தின் தொடக்கத்தில் சமணச் சிற்பங்கள் பற்றிய செய்திகள் தொட்டுக் காட்டப்படும். இந்த ஆவணப்படத்தில் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம், மாங்குளம் மற்றும் கருங்காலக்குடி, அரிட்டாபட்டி, திருவாதவூர் பகுதிகளைச் சார்ந்த இசுலாமியர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருப்பர். இம்மூன்று ஊர்களும் சமணத்துடனும் தொடர்புடையது என்பது இங்கு நோக்கத்தக்கது. இவ்வாறு பலவித மத அடையாளச் சின்னங்களையும் வழிபாட்டு முறைகளையும் உள்ளடக்கியுள்ள மதுரை மற்றும் ஒட்டுமொத்த தமிழ்நாடும் மத நல்லிணக்கத்தை எப்படியாக பேணிப் பாதுகாக்கிறது என்பதற்கு இந்த ஆவணப்படம் ஒரு சாட்சியாகிறது. இசுலாமியர்கள் தொழுகை முடித்து வரும்போது கைக்குழந்தைகளைத் தூக்கிச் சென்று தண்ணீர் தெளிப்பதும் தாயத்து கட்டுவதும் என்ற நம்பிக்கையில் தொடங்கி சித்தப்பா, மாமா என உறவுமுறை கொண்டு அழைத்து ஒன்றாகப் புழங்கும் அளவுக்கான இணக்கம் இன்றுவரை தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருக்கிறது.

    தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் பல இஸ்லாமிய சூஃபிகளின் சமாதி சித்தர் மரபின் அடிப்படையால் வழிபாட்டுக்கு உரியதாக இருந்து வருகிறது. மேலும் மயில் ராவுத்தர் குறித்த இந்த ஆவணப்படத்தில் பேசப்பட்டிருந்தது‌. ஒரு தாயார் பேசியபோது குலதெய்வம் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருந்தார். அது கிட்டத்தட்ட உண்மையும் கூட. மகாபாரதக் கதையில் வரும் முத்தால் ராவுத்தரை குலதெய்வமாகக் கொண்டோர் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் இருக்கின்றனர். முத்தால் ராவுத்தர் திரௌபதியுடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது போல இந்த ஆவணப்படத்தில் பேசப்பட்டிருப்பதைப் போல முருகனுடன் தொடர்புடையவராக ராவுத்த குமாரசாமியை வழிபடுகின்றனர். இவ்வாறு வழிபாட்டு மரபிலும் இசுலாமிய குதிரை வீரர்கள் குல தெய்வமாக்கப்பட்டிருக்கின்றனர். உணவு தொடர்பான செய்திகளிலும் முருகனைத் திணையின் அடிப்படையில் இந்த ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறது. 

     வழிபாடு, பழக்க வழக்கங்கள், சடங்குகள் மட்டுமன்றி கட்டிடக்கலை மற்றும் இசையுடனும் எப்படியெல்லாம் பண்பாட்டுத் தொடர்பு நிகழ்ந்து வருகின்றது என்பதையெல்லாம் வழுவான மக்கள் சான்றுகள் மூலம் இந்த ஆவணப்படம் நிறுவுகிறது. Reclaim temples என்ற திட்டத்தின் கீழ் இந்திய அளவில் உரிமை கோருதல் என்பதை வைத்து பிற மதத்தவரை ஒதுக்கித் தள்ளும் போக்கைத் திட்டமாக வைத்து சங் பரிவார்கள் செயல்படுவதையும் இந்த ஆவணப்படம் வெளிக் கொணர்ந்துள்ளது. படத்தில் இடம்பெற்ற காட்சிகளிலேயே வலதுசாரிகள் நடந்துகொள்வதற்கும் அதற்கு எதிப்பு தெரிவிக்கும் முகமாக பிற அமைப்பினர் செலுத்திய கண்டனக் கூட்டங்களுமே கண்ணியத்திற்கும் கலவரத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் காட்டும் வகையில் அமைகிறது. 

     திருக்குறள் கூறும் அறத்தை வைத்து முடியும் இந்த ஆவணப்படத்தை அனைவரும் ஒருமுறை பாருங்கள்.


திருப்பரங்குன்றம் ஆவணப்படம் இணைப்பு -https://youtu.be/21tZWM5l7xY?si=gj8HWzaAbI-Wgykl


Reclaim temples link-

 https://share.google/mlV95wt1SkRYxGgi7

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)