சிந்தை இதழின் தொடக்கத்தில் சில
சிந்தை இதழின் தொடக்கத்தில் சில
-அழகுராஜ்
சிந்தை இதழை வாசித்தேன். அதிலிருந்து சில கட்டுரைகள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளேன்.
https://www.sindhai.com/editorial
இராஜபாளையத்தைச் சார்ந்த டாக்டர் கு. கணேசன் அவர்கள் உறக்கம் குறித்த தொடரை சிந்தை இதழில் எழுதவுள்ளார். அதன் முதல் பகுதி வெளியாகியுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் உறக்கம் ஒரு பொதுப் பிரச்சனையாக மாறி வரும் சூழலில் இக்கட்டுரை அதன் முக்கியத்துவத்தை அடைகிறது.
ஒவ்வொரு வயதினரும் பலவித பிரச்சினைகளைத் தங்கள் சிந்தையில் செலுத்தி அதன் விளைவாக தூக்கத்தைத் தொலைக்கின்றனர். தூக்கத்தைத் தொலைப்பதன் விளைவாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுத்துக் கொள்கின்றனர். உடல் மற்றும் மனம் சார்ந்த பெரும்பாலான பிரச்சனைகளுக்கு முதல் தீர்வாக தூக்கம் அமைகிறது. அனைத்து மனிதர்களும் தங்களது வாழ்வின் ஏதேனும் ஒரு புள்ளியில் தூக்கத்தின் போதாமையை உணர்ந்திருப்பர். இக்கட்டுரை அது குறித்த மேலதிக தகவல்களுடன் தொடர்ந்து வெளிவருமென நாம் உறுதியாக நம்பலாம்.
https://www.sindhai.com/essays/what-is-happening-in-gaza-1241007
இஸ்ரேல் நாட்டை வரலாற்றின் வழியே பார்த்தால் அடிமைபடுத்துதல், அடிமைப்படுதல், ஆக்கிரமித்தல், ஆக்கிரமிப்புக்கு உட்படுதல் என்ற வினைகள் நூற்றாண்டு தோறும் மாறி மாறி வருவதைக் காணலாம். இதற்கு ஹிட்லருக்கும் யூதருக்கும் இடையில் நடந்த யுத்தமும் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போதைய சூழலில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான தொடர் தாக்குதல்களில் காசாவை மையமிட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலை கவிதையைக் கொண்டு விளக்குகிறார் ஆசை.
கவிதையை அடிப்படையாக வைத்து பல்வேறு தரவுகளைக் கொண்டு கட்டமைக்கப்படும் கட்டுரைகளை வாசிப்பதிலும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் கட்டுரைகளில் கவிதைகள் இடம்பெறுவதையும் வாசிப்பது எனக்கு விருப்பமான செயல். அத்தகைய எழுதியல் முறை இக்கட்டுரையில் வெளிப்பட்டுள்ளது.
இப்படியாக எழுதப்பட்ட கட்டுரைகளில் ஈழத்தை மையமிட்டு ஏகப்பட்ட கட்டுரைகள் வந்துள்ளன. அவை அடர்த்தி மிகுந்தவையாக வெளிவந்துள்ளன. பேராசிரியர் ரவிக்குமாரும் தனது "கைரேகை கொடியில் கனவுப்பூ" நூலில் ஒரு போர்க்காலத்தில் ஆதரவற்று நிற்கும் குழந்தையை காட்சிபடுத்தியிருப்பார். இப்படி ஈழத்துக் கவிஞர்கள் மட்டுமன்றி ஏனைய தமிழக கவிஞர்களும் செய்திகளில் பார்க்கும் கோரக் காட்சியை மையமிட்டு கவிதைகள் பல எழுதியுள்ளனர். ஆசையின் இக்கட்டுரை செய்தியை கவிதையிலிருந்து தொடங்கி பல்வேறு தகவல்களை உள்ளடுக்கிச் செல்கிறது
https://www.sindhai.com/essays/who-was-jeffrey-epstein-mysterious-financier-global-scandal-1247829
எப்ஸ்டீன் ஆவணங்கள் குறித்து நேற்று மாலை மலர் இணைய இதழில் வேலை பார்க்கும் நண்பர் தினேஷ் ஒரு கட்டுரையை அனுப்பி வைத்தார். நேற்று முன்தினம் The Crimson Rivers என்ற படத்தைப் பார்த்து அவர் பேசியதை தொடர்புபடுத்தி அக்கட்டுரையை அனுப்பினார். Super race பற்றிய செய்திகள் அதன் மையம்.
முகமது ரியாஸ் எழுதியுள்ள இக்கட்டுரை உலகத் தலைவர்கள் தொடர்புபடும் பாலியல் சந்தையைப் பற்றிய செய்தியாக இருக்கிறது. சிந்துபாத் என்ற திரைப்படத்தில் பாலியல் தவிர்த்து உலகளவில் கடத்தப்படும் இளம்பெண்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்று இருக்கும். பாலியலுக்காகவும் இதர உடலியல் தேவைகளுக்காகவும் கொத்துக் கொத்தாக பெண்கள் கடத்தப்பட்டு வருகின்றனர். இதில் எப்ஸ்டீன் ஆவணங்களில் என்னென்ன செய்திகள் தெரிய வருகின்றன என்பதை ரியாஸ் நமக்கு தமிழில் வழங்கியுள்ளார்.
https://www.sindhai.com/essays/anna-the-great-democrat-1247457
அறிஞர் அண்ணாவை எளிமையாக மதரா அறிமுகப்படுத்தியுள்ளார். அண்ணாயிசம் என்பதற்கு முறையான விளக்கம் எம்ஜிஆர் மூலம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா என்ற கேள்வி இன்றுவரை எழுப்பப்படுவதுண்டு. அவர் சொன்னாரா இல்லையா என்பதைக் கடந்து இக்கட்டுரை அண்ணாவின் அரசியல் பாதை எப்படிப்பட்டது என சுட்டிக்காட்டுகிறது. தம்பிக்கு கடிதங்கள் மற்றும் மாலை நேர பொதுக்கூட்டங்கள் இரண்டிலும் அறிவார்த்தமான பல்வேறு உலகம் தழுவிய தகவல்களை தனது இயக்கத்தவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் உரையாடலை வளர்த்தெடுப்பதுமான ஆரோக்கியமான அரசியலை வெகுமக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கான தொடக்கமாக அண்ணா இருந்தாரெனலாம். பல்வேறு அரசியல் இயக்கங்கள் தங்களது கொள்கைகளை வகுப்புகள் மூலம் சொல்லித் தருவதுண்டு. ஆனால் அதனைப் பொதுவில் நிகழ்த்தும் சாத்தியங்களின் பக்கம் தனது கவனத்தை வைத்தவர் அண்ணா என்பதை அண்ணா என்றொரு உண்மையான ஜனநாயகர் கட்டுரை உரைக்கிறது.
இதுதவிர பெரியார் -ராஜாஜி தொடர்பு, முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் கொள்கைப்பூர்வமான நாடாளுமன்ற உரை என ஒவ்வொரு கட்டுரையின் தேர்வும் சமகால அரசியலில் திகழும் சம்பவங்களோடு இணைத்துப் பார்க்கத்தக்க சில அம்சங்களைத் தனக்குள் கொண்டுள்ளன. பெரியாரை விருப்பு வெறுப்பு தாண்டி அவருடைய செயல்பாடுகளை மட்டுமே வைத்து அணுகத்தொடங்கியுள்ள இப்போதைய வாசிப்புச் சூழலில் அண்ணா மற்றும் பெரியார் பற்றிய இக்கட்டுரைகள் சில புதிய யோசனைகளைக் கிளப்பியுள்ளன. நேரம் வாய்த்தால் அவற்றைக் குறித்து வரும் நாட்களில் விரிவாக பேசலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக