பருவத்தால் நிகழும் பிணைப்புக்கு அப்பாலான பிளவு -அழகுராஜ் ராமமூர்த்தி

 பருவத்தால் நிகழும் பிணைப்புக்கு அப்பாலான பிளவு -அழகுராஜ் ராமமூர்த்தி

 


   இரண்டு கன்னட நாவல்களைப் படித்தேன். இரண்டும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவை. ஒன்று ஜெயா வெங்கட்ராமன் மொழிபெயர்ப்பில் வெளியான எஸ். எல். பைரப்பாவின் பிளவு, மற்றொன்று நஞ்சுண்டன் மொழிபெயர்ப்பில் வெளியான யு. ஆர். அனந்தமூர்த்தியின் பிறப்பு. இவ்விரு எழுத்தாளர்களையும் கிரீஷ் கர்னாட் மூலமாகவே அறிந்தேன். ஒரு நாடக உரையாடலுக்காக கிரீஷ் கர்னாடின் நாடகங்களைப் படித்து அது குறித்த தகவல்களைத் திரட்டிய போது அவர் திரைப்படத் துறைக்குள் நுழைந்த தொடக்கம் குறித்த தகவல்களை அறிய நேர்ந்தது. கிரீஷ் கர்னாட் திரைப்படத்துறைக்குள் நுழைந்த ஆரம்பக்கட்டத்தில் இரண்டு நாவல்கள் திரைப்படமாவதில் பங்காற்றியிருக்கிறார். ஒன்று யு. ஆர். அனந்தமூர்த்தி எழுதிய சம்ஸ்காரா, மற்றொன்று எஸ். எல். பைரப்பா எழுதிய வம்ச விருக்ஷா. இவ்விரண்டு நாவல்களையும் அப்போதே படிக்க வேண்டும் என எண்ணினேன். அது இப்போது வரை சாத்தியப்படவில்லை. எஸ். எல். பைரப்பாவின் பருவம் நாவலை நான் புதுவைப் பல்கலைக்கழகத்தின் மைய நூலகத்தில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். இருப்பினும் அதனை எடுத்து படித்ததில்லை. இப்படி படிக்க நினைத்து படிக்காமல் விட்ட புத்தகங்கள் சில உண்டு. ஆனாலும்கூட அவ்விரு எழுத்தாளர்களின் வேறு நாவல்களை அடுத்தடுத்து வாசிக்க இப்போது வாய்த்தது. 

   பிறப்பு, பிளவு என்ற இரண்டு நாவல்களையும் இணைத்து எழுதுவதற்கு சில காரணங்கள் உண்டு. இரண்டு நாவல்களும் மனிதர்களுக்குள்ளே இருக்கும் காமத்தால் குடும்ப அமைப்பிலும் குடும்ப அமைப்பின் அரிச்சுவடியான மரபுவழி தொடர்ச்சியிலும் ஏற்படும் சந்தேகங்களை மையமாகக் கொண்டவை. ஆணுக்கு ஆழ்மனதில் தன்னிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட குழந்தையை காண்பதில் இருக்கும் ஆவலை உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்த இவ்விரு நாவல்களும் முனைகின்றன. ஆணுக்குத் தன் குழந்தை மீதுள்ள வாஞ்சையை ஒட்டிய சில சந்தேகங்கள் முக்கியமான கேள்விகளாக இரு நாவல்களிலும் இடம்பெறும் ஆண் கதாபாத்திரங்களுக்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. சமூக அமைப்பு உருவாக்கப்பட்டதையொட்டி உடைமைப்பொருட்கள் கைமாறும் வாரிசு முறையும் தன்னியல்பாகத் தோற்றம் கொண்டது. அதிலிருந்து ஆணுக்கு வாரிசுகள் சொத்தாகவும், இம்சையாகவும் கொலை கருவிகளாகவும் வரலாறு நெடுக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறையில் தன்னுடைய முகத்தை வெளிப்படுத்திக் காட்டின. ஷாஜகானுக்கு அவுரங்கசீப் வாரிசாக அமைந்ததும் இராஜராஜ சோழனுக்கு இராஜேந்திர சோழன் வாரிசாக இருந்ததும் ஒரே மாதிரியான விளைவாக அமையவில்லை. இப்படியாக ஒவ்வொரு ஆணுக்கும் அவரவர் வாரிசுகள் பல்வேறு வகையில் சூழல், நடத்தப்படும் விதம், உள்ளுக்குள் முளைத்து வளர்ந்துள்ள நடத்தை முறைகள் என பல்வேறு காரணங்களால் வெவ்வேறு விதமாக மாறி நிற்பதை வரலாறு நெடுக காண முடிகிறது. வாரிசு முறை உடைமைப் பொருட்களையும் சமூக மதிப்பையும் கடத்தும் வாயிலாக அமைந்த நிலை ஒருபுறமிருக்க மறுமுனையில் பெற்றவர்களைக் காக்கும் பொறுப்பாகவும் வயது முதிர்ந்த காலத்தில் மரணத்தின் வாசலைத் திறக்கப் போராடிக் கொண்டிருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆன்ம அமைதியாகவும் வாரிசுகளின் முகங்கள் மாறின. பட்டினத்தார், சிறுதொண்டர் போன்றவர்கள் தங்கள் தாயின் இறுதி சடங்கில் கலந்துகொண்டதை இதனுடன் பொருத்திப் பார்க்கலாம். பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான இப்படியான உறவுப் பிணைப்பு காலப் போக்கில் உருவானது. உடைமை சமூக உருவாக்கத்தின் வாயிலாக உடைமைப் பொருட்களை பெற்றோர்கள் கைமாற்றி தருவதும் அவர்கள் கொடுத்த உடைமைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களை நினைவுகூர்வதுமான சடங்குகளைப் பின்பற்றும் போக்கு காலப்போக்கில் மாறி வந்திருக்கிறது. ஆனால் இவ்விரு நாவல்களும் இப்படிப்பட்ட புற உலகு சார்ந்த காரணங்களைத் தீவிரமாக பேசுவதிலிருந்து தப்பி அகவுலகை சித்தரிக்க முயன்றுள்ளன. எனினும் தவிர்க்க முடியாது புறம் சார்ந்த எதிர்பார்ப்பும் விலகலும் தேவைப்படும் இடங்களில் வெளிப்பட்டு நாவலுக்கு அர்த்தம் சேர்க்கின்றன.

      இனப்பெருக்கத்திற்குரிய வழிமுறையாக இருக்கும் புணர்ச்சிக்கும் காமத்திற்கும் இடையிலிருக்கும் பயண தூரங்களைக் கணக்கிடும் முயற்சியை இவ்விரு நாவல்களின் சில பகுதிகளில் காண முடிகிறது. காமத்தைப் பசியாகவும் புணர்ச்சியை சாப்பிடுவதாகவும் நாம் உவமித்துக் கொள்ளலாம். பசியின் விளைவாக சாப்பிட்டாலும் சாப்பிட்ட உணவிலிருக்கும் சுவையின் மூலமாக நாம் திருப்தியடைவதற்கும் சாப்பிட்டதால் பசி அடங்கியது என வயிற்றை நிரப்பியதற்கும் இடையிலான தூரமாக காமத்திற்கும் புணர்ச்சிக்கும் இடையிலான தூரம் அமைகிறது. பல பெண்களுடன் உறவு கொண்ட 'பிறப்பு' தினகர், 'பிளவு' ஜெயக்குமார், பிரபாகர், துரைராஜ் போன்றவர்களின் வாழ்வில் இத்தகைய தூரத்தின் கணக்கீட்டைச் செய்வதற்கு ஏற்றதாக நாவலின் களம் அமைக்கப்பட்டிருக்கிறது. ருசிக்காக சாப்பிட ஆரம்பித்தவர்கள் பசியை அடக்க சாப்பிடத் தொடங்கியதும் பசியின் மீதும் சாப்பிடுவதன் மீதும் வெறுப்புக் கொள்வதுமாக மாற்றங்கள் பல்வேறு சூழ்நிலைகளில் நிகழ்கின்றது. அந்தச் சூழ்நிலைகளும் அதற்குரிய பின்னணியும் சமூக அமைப்பிலும் தனிமனித தேவை மற்றும் எதிர்பார்ப்பிலும் எப்படி பொருந்துகின்றன மற்றும் விலகுகின்றன என்பதை கதைப்போக்கின் வழியே உணர முடிகிறது.

      இனப்பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டு புணர்ச்சியில் ஈடுபடவில்லை என்றாலும் கூட கரு உருவானது தொடங்கி குழந்தைகளைத் தன்னுடைய ஒரு பாகமாகவும் தனக்குப் பின்னும் உலகில் வேர் விட்டிருக்கும் தொடர்ச்சியாகவும் எண்ணி கனவு காணத் தொடங்கும் மனிதனின் மன இயல்பு சித்திரமாகியுள்ளது. வரன்முறையற்ற காமத்தை மையமாகக் கொண்டு ஒரு பெண்ணின் பலவித தொடர்புகளால் குழந்தை எந்த ஆணால் உற்பத்தியானது என்ற குழப்பத்தை சம்பந்தப்பட்டவர்களுக்குள் ஏற்படுத்தும் ஆக்கமாக பிளவு, பிறப்பு என்னும் இரண்டு நாவல்களும் இருக்கின்றன. எழுத்துருவாக்க முறையில் அனந்தமூர்த்தியிடம் காணப்படும் மென்மையும் முதிர்ச்சியும் பைரப்பாவிடம் வெளிப்படும் வேகத்திலும் ஆவேசத்திலும் இருந்து வேறுபடுகிறது. அனந்தமூர்த்தி அனைத்துக் குழப்பங்களுக்கும் மத்தியில் சமரசத்தைத் தீர்வாக முன்வைத்து நகர்வதிலிருந்து பைரப்பா வேறுபட்டு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என துடிதுடிக்கும் முடிவை நோக்கித் தன்னுடைய ஓட்டத்தை நகர்த்துகிறார். இவ்விரண்டு வேறுபாட்டை எடுத்துரைக்கும் முறைக்கு ஒத்த கதைக்களப் பின்னணியும் அதற்கேற்ற காலமும் இருக்கிறது. தொலைக்காட்சி, கடிதம் ஆகியன அதிகம் பழக்கத்தில் இருந்த காலகட்டமாகவும் வசதி படைத்த குடும்பத்தினர் தொடர்வண்டிப் பயன்பாட்டை தங்கள் பயண முறைமையாக கொண்டிருந்த காலமாகவும் பிறப்பு நாவலின் காலம் இருக்கிறது. பிளவு நாவல் விமானம், அலைபேசி ஆகியவற்றின் பயன்பாடு மிகுந்த காலமாக அமைகிறது. இதனடிப்படையில் இவ்விரண்டு நாவல்களின் காலமும் சில பத்தாண்டுகள் மட்டுமே முன்னும் பின்னுமாக வேறுபடுகின்றன. கதை நிகழும் காலத்தின் பண்பாட்டிற்கேற்ப கதைக்களத்திற்கு பொருந்துமாறு கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

       காமத்தின் விளைவாக கூடியவர்கள் பிரிந்து வெவ்வேறு திசைகளில் வழி தொடர்பற்றவர்களாக பிரிந்தபின் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் கரு உருவாகி அவளுக்கு இரட்டை அதிர்ச்சி ஏற்படுகிறது. முதலாவது, திருமண பந்தத்திற்கு முன் குழந்தையைச் சுமப்பதால் ஏற்படுவது. இரண்டாவது, குழந்தை உற்பத்தியானதற்கு காரணமான ஆண் யார்? என்ற குழப்பத்தால் விளைவது. பிறப்பு நாவலில் கங்குவின் மகன் பிரசாத் நாராயணனால் பிறந்தவனா? தினகரனால் பிறந்தவனா? சரோஜாவின் மகன் தினகர் சாஸ்திரிக்கு பிறந்தவனா? வைத்தியருக்கு பிறந்தவனா? பிளவு நாவலில் மங்களாவின் மகன் தேஜு விஜயகுமாருக்கு பிறந்தவனா? பிரபாகருக்கு பிறந்தவனா? என்கிற கேள்விகள் கங்கு, சரோஜா, மங்களா ஆகியோர் இரண்டு ஆண்களுடன் ஒரே நேரத்தில் தொடர்பில் இருந்ததால் அவர்களுக்குள் உருவாகும் குழப்பத்தைக் காட்டுகின்றன. இதில் சர்ச்சைக்குரிய வகையில் பிறந்திருக்கும் அனைத்து குழந்தைகளும் ஆண் குழந்தைகளாகவே இருக்கின்றன. பெண் பாத்திரங்கள் தங்களுக்குள் புலம்புவதைப் பங்கு போடும் விதமாக அவர்களுடன் தொடர்பிலிருந்த ஆண்கள் சில காலத்திற்குப் பின் அவர்களுடன் இணைந்து இது என்னுடைய குழந்தை தானா? என்று உருவ விசாரிப்பின் மூலம் தங்களைத் தாங்களே குழப்பிக் கொள்கின்றனர். 

     இரண்டு நாவல்கள் வேறுபடும் இடம் குழந்தையை ஏற்பதிலும் வெறுப்பதிலும் அடங்கியிருக்கிறது. 'பிளவு' பிரபாகருடன் மங்களாவுக்கு இருந்த தொடர்பு தெரிய வந்ததால் ஜெயக்குமார் மங்களாவுடன் தேஜுவையும் வெறுக்கிறான். இதற்கு மறுதலையாக 'பிறப்பு' நாவலில் சாஸ்திரிகள் தினகர் தன்னுடைய மகனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினகரை மனதளவில் நேசிக்கிறார். அதேபோல நாராயணனும் பிரசாத்தை தன்னுடைய மகனாக எண்ணியே அவன் நலனில் அக்கறை கொள்கிறார். காமத்தின் விளைவால் எதிர்பாராமல் குழந்தை பிறப்பதைச் சிக்கலாகக் கொண்ட இந்த மூன்று உறவு நிலைகளைத் தாண்டியதாக பிளவு நாவலின் டாக்டர் இலாவுக்கு வினய்சந்திரனுடனான விலகலுக்கு பின்னான துரைராஜ் உடனான உறவு இருக்கிறது. இந்த இரண்டு நாவல்களிலும் நாம் தனித்து பார்க்கக்கூடிய இடமாகவும் டாக்டர் இலா, வினய்சந்திரன் மற்றும் துரைராஜ் ஆகியோர்களைப் பற்றிய கதை இருக்கிறது. ஏனென்றால் காமத்தைத் தாண்டி சுய கௌரவம், தன்னையும் தன் நிலைப்பாட்டையும் விட்டுக் கொடுக்காத வைராக்கியம், தன்னுடைய காமத்தைத் தீர்க்கும் வழியை தானே தேர்வு செய்யும் சுதந்திரம் போன்றவற்றினூடாகத் தான் இலாவுக்கும் வினய்சந்திரனுக்கும் நடுவில் துரைராஜ் வருகிறான். துரைராஜ் இலாவுடன் இணைந்ததற்கும் பிற நாவல்களில் வரும் உறவு முறைக்கும் இடையில் உள்ள வேறுபாடாக நாம் இதனைக் கருத முடிகிறது. திருமணம் நடந்து உள்ளத்தாலும் உடலாலும் கணவன் மனைவி விலகியிருந்த நாட்களை ஈடுசெய்யும் விதமாக அமைந்த இவர்களின் உறவில் அகத்துடன் புறம் சார்ந்த கருத்தாக்கங்களும் வலுபெறுகிறது.

      ஜெயக்குமார், வைஜயந்தி, அவர்கள் மகள் வத்ஸலா என்ற புட்டக்கா ஆகியோர் காரில் சென்ற போது நிகழ்ந்த விபத்தின் விளைவே நாவலின் ஒரு பகுதி கதையாக வளரும் வாய்ப்பாக அமைகிறது. நிகழ்ந்த விபத்தில் ஜெயக்குமார் உயிர் தப்புகிறார். வைஜெயந்தி மரிக்கிறார். புட்டக்கா உயிர் தலையில் அடிபட்டு உயிர் பிழைக்கிறாள். தலையில் அடிபட்டதன் விளைவாக மூளை வளர்ச்சி தடைபடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் வைஜெயந்தியின் தனிப்பட்ட உதவியாளராக இருந்த மங்களாவுடன் ஜெயக்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டு தேஜூ பிறக்கிறான். ஜெயக்குமார் மற்றும் பிரபாகரனுடன் ஒரே நேரத்தில் மங்களா உறவில் இருக்கிறாள். இவர்கள் கதையில் முக்கியமாக ஒரே நேரத்தில் ஒரு பெண் இரண்டு ஆண்களுடன் உறவில் இருப்பதைத் தாண்டி மூளை வளர்ச்சி குன்றிய பெண் குழந்தைக்கு தாய் இல்லாத சூழல் நிமித்தமாக அக்குழந்தையின் தந்தை பலவகைகளில் அடையும் விமர்சனங்கள் முக்கியத்துவப்படுகின்றன. இந்தியாவில் உறவு மற்றும் சொத்துரிமை அடிப்படையில் பதியப்படும் வழக்குகளின் சாராம்சங்கள் வழக்குக்குரிய நபர்களின் உளக்கிடை போன்றவற்றை விவாதத்திற்கு உரியதாக மாற்றும் கதையம்சங்களை உடையதாக ஜெயகுமார் மங்களா இருவரையும் சுற்றி நிகழும் கதைகள் இருக்கின்றன.

      தன்பாலின சேர்க்கைக்கு பழக்கப்படுத்தப்படும் பெண்ணியவாதிகள், காமத்திற்காக பாலியல் தொழிலாளிகளைத் தேடிப் போகும் ஆண்கள் பற்றிய செய்திகள் புள்ளி போல சிறியதாக இந்நாவலுக்குள் தென்பட்டாலும்கூட அவற்றால் விளையும் விளைவுகள் பார தூரமானவையாக மறைமுகமாக கதைக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிளவு நாவலில் வரும் டாக்டர் இலா மற்றும் வினய் சந்திரன் பற்றிய கதை ஏனையவற்றிலிருந்து வேறுபடுகிறது. இலா வினய் சந்திரனை விட்டுப் பிரிந்து சில காலத்திற்குப் பிறகே துரைராஜுடன் தொடர்பு கொள்கிறார். இரண்டு நாவல்களிலும் வரும் ஏனைய பெண் பாத்திரங்களான மங்களா, சரோஜா, கங்கு ஆகியோர் ஒரேநேரத்தில் ரகசியமாக இருவருடன் தொடர்பில் இருக்கின்றனர். இதனடிப்படையில் ஒரு வேறுபாடு இவ்விரு நாவல்களுக்குள் உள்ள கதைகளுக்கிடையே ஏற்படினும் ஆண் பாத்திரங்கள் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் தொடர்பில் இருப்பது மையக்கதையாக உருபெறாமல் பெண்கள் இரு ஆண்களுடன் உறவில் இருப்பதே மையக்கதையாக உருபெறுவதன் அடிப்படையில் ஒன்றுக்கொன்று ஒத்திசைவு பெறுகிறது. இதன்வழி ஒரே நேரத்தில் இரண்டு எதிர்பாலினத்தவருடன் உறவு ஏற்படுவதற்குரிய காரணிகள் ஒவ்வொருவருக்கும் இடையே மாறுபடுகிறது. மங்களாவிற்கு பணமும் இலாவிற்கு உரிமை மற்றும் சுய தேர்வு குறித்த ஈகோவும் சரோஜாவுக்கு கணவன் மீதான வெறுப்பும் கங்குவிற்கு வயதையொட்டி எழும் குழப்பமும் காரணங்களாக அமையப்பெறுவதை இவ்விரு நாவல்களின் வழியாக அறிய முடிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"கவிப்பேரரசர்களின் கவியமுதம்" நூலறிமுகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

கரப்பான் அரசியலில் எச்சரிக்கை தேவை -அழகுராஜ் ராமமூர்த்தி

தேடல் பறவை