போர்ப்பின்னணி இந்தியத் திரைப்படங்கள் - அழகுராஜ் ராமமூர்த்தி
2017ஆம் ஆண்டு சங்கல்ப் ரெட்டி எழுதி இயக்கிய திரைப்படம் THE GHAZI ATTACK. தெலுங்கு சினிமாவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. இது கடற்படையால் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டு நிகழ்த்தப்படும் போரை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தி மொழிக்கு அமிதாப் பச்சன், தெலுங்கு மொழிக்கு சிரஞ்சீவி, தமிழ் மொழிக்கு சூர்யா ஆகியோர் தங்கள் குரலை இப்படத்திற்கு வழங்கியுள்ளனர்.
1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது இந்தியாவின் ஐஎன்எஸ் கரஞ்ச் நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக பாகிஸ்தானின்ஷபிஎன்எஸ் காஸி நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு நாடுகளும் வெவ்வேறு நிலைப்பாட்டை அறிவிக்கைகளாக உலக அரங்கில் வெளிப்படுத்தியுள்ளன. அவற்றில் எது உண்மை என்பது புதிராகவே தொடர்கிறது. அதனடிப்படையில் இப்படத்தின் கதையை வரலாற்றுப் புனைவாகவே கொள்ள வேண்டும். இந்திய கடற்படையின் ஒரு நீர்மூழ்கிக் கப்பல், ஒரு நிர்வாக கடற்படை அதிகாரி மற்றும் அவரது குழுவினர் கண்காணிப்பு பணிக்காக நீர்மூழ்கிக் கப்பலில் செல்லும் சம்பவத்தையொட்டி படம் தொடங்குகிறது. பாகிஸ்தான் கப்பலைக் கண்டால் இந்திய கடற்படை அலுவலகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் கப்பற்படை உயர் அதிகாரிகளின் ஆணையின் படியே செயல்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கண்காணிப்பு பணிக்கு இந்திய நீர்மூழ்கிக் கப்பல் செல்கிறது.
எப்படி இந்த கண்காணிப்பு பணி தொடங்குகிறது. கண்காணிப்பு பணியின் போது இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் ஒன்றுக்கொன்று எப்படி மற்றொன்றின் இருப்பை அறிந்துகொண்டன. தாக்குதல் முறைகளைக் கையாண்டன உள்ளிட்டவற்றை சுவாரசியமாகவும் நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள் செயல்படுவதைக் குறித்த தெளிவான காட்சிகளுடனும் படம் உருவாகியுள்ளது. இதில் பெண் மருத்துவர் ஒருவர் அகதியாக இந்திய நீர்மூழ்கிக் கப்பலுக்குள் அடைக்கலம் பெறக்கூடிய காட்சியும் இடம்பெறுகிறது. பழுதடைந்த கப்பலை வைத்து தொழில்நுட்ப மற்றும் போர் சாதூர்யத்தன்மை கொண்டு தப்பிப்பதும் எதிரிப்படையை லாவகமான போர்த்தந்திரம் கொண்டு வீழ்த்துவதும் இப்படத்தின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. அனைவரும் அவசியம் பார்க்கப்பட வேண்டிய படமாக இப்படத்தைக் கருதுகிறேன்.
படத்திற்கான இணைப்பு:
https://youtu.be/r72yGWYXWew?si=Hrfg80Ruc6Yl8ZJe
தொடர்புடைய கட்டுரை:
Ghazi Attack Real Story,INS Vikrant : இந்திய கப்பலை தாக்க வந்த நீர்முழ்கியை ஜலசமாதியாக்கிய இந்திய கடற்படை... அடுத்து நடந்தது? - ins rajput defeat ghazi in the ocean here is the full story of that incident - Samayam Tamil https://share.google/TSSbCst7QcsHs2zRG
2023ஆம் ஆண்டு வெளியான இந்திய தெலுங்கு மொழி திரைப்படம் DEVIL THE BRITISH SECRET AGENT. இப்படம் ஸ்ரீகாந்த் விஸ்ஸா திரைக்கதையில் அபிஷேக் நாமா மற்றும் நவீன் மேதாரம் இயக்கத்தில் வெளியானது.
விடுதலைக்கு முந்தைய இந்தியாவில், 1945ஆம் ஆண்டில் நடக்கும் கதையாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. சுபாஷ் சந்திரபோஸ் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருவது குறித்த அறிவிப்பையும் அந்த அறிவிப்பில் இருக்கும் இரகசியக் குறியீடுகளைப் புரிந்துகொண்டு இந்தியாவிற்குள் நுழைந்தவுடன் அவரைக் கைது செய்ய திட்டமிடும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் நடவடிக்கைகளும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் படமாக்கப்பட்டுள்ளது. தந்திக்கருவியை இயக்குவது அதனை இயக்கும் முறை மற்றும் இரகசிய குறியீடுகளுடன் கட்டமைக்கப்பட்ட இந்திய தேசிய இராணுவம் என பல்வேறு ஆக்கப்பூர்வமான தகவல்களைக் கொண்ட இந்தப் படம் வரலாற்றையொட்டிய புனைவுப் படமாகும். இந்தப் படத்தில் சுபாஷ் சந்திரபோஸின் வருகையை ஒட்டிய செய்திகள் மையம் என்றாலும் கூட கதை வேறொரு கொலையை ஒட்டிய விசாரணையின் வழியாக மையத்தைச் சென்றடையும் திரைக்கதையைக் கொண்டுள்ளது.
உளவுத்துறை இந்திய தேசிய இராணுவத்திலும் பிரிட்டிஷ் அரசிடமும் எப்படி வலுவாக இருந்து ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன என்பதும் உளவாளிகளாக இருப்பவர்களால் இரகசிய நடவடிக்கைகள் எப்படி மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் இப்படத்தில் விறுவிறுப்பான ஓட்டத்துடன் காட்சியாக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி, தந்திக்கருவி, கார், வாள், கலங்கரை விளக்கம், ஜமீன்தார் வீடுகளின் அமைப்பு, பத்திரிகையாளர்கள் போன்றவற்றோடு ஜமீன்தார் செயல்பாடுகள், தீவிரவாதப் போராட்டக்காரர் மிதவாத போராட்டக்காரராக நடித்தல் போன்றவையும் படத்திற்கு வலுசேர்க்கும் அம்சங்கள் ஆகின்றன. பார்க்கப்பட வேண்டிய விறுவிறுப்பான படமாக இப்படத்தைக் கூறலாம்.
படத்திற்கான இணைப்பு:
https://youtu.be/9Cr4S2ACjW8?si=B4i75NPYN-lX-Gpz
கருத்துகள்
கருத்துரையிடுக