நாளைய நாடகத்திலிருந்து சொல்வது என்ன?
07.12.2024 அன்று யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவனத்தில் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கிரீஸ் கர்னாட் நாடகங்கள் குறித்துப் பேசினேன். அந்த நாள் நாடகப் பேராசிரியர் சே. இராமானுஜம் அவர்களின் நினைவு நாள் என்பதை தோழர் ஞா. கோபி நினைவுகூர்ந்து பேசினார். அதுவரை பெயரளவில் மட்டுமே அறிந்திருந்த அவர் குறித்த அறிமுகம் முறையாக அந்த நாளில் கிடைத்தது. தமிழ் நாடகத்துறையில் செயல்பட்ட முக்கியமான ஆளுமை ஒருவரின் நினைவு நாளில் தொடர்ச்சியாக செயல்படும் நாடக அமைப்பின் ஏற்பாட்டில் பேசுவதை எண்ணி மகிழ்வதா? அல்லது அவர் ஒரு நாடகப் பேராசிரியர் என்பதைத் தவிர்த்த எந்தவொரு முறையான அறிமுகமும் இல்லாமல் இந்த நாளில் நாடக உரையாடலைத் தொடங்குவதா? என்ற இரு வேறுபட்ட மனநிலையுடன் அன்றைய உரை தொடங்கியது. அதன்பின் அவரைக் குறித்து தேடி தெரிந்து கொண்டேன்.
ஜெயமோகன் "நாளைய நாடகம்" என்ற தனது கட்டுரையில் பேராசிரியர் இராமானுஜத்தை எடுத்துக்காட்டாக கொண்டு சுந்தரராமசாமியின் கருத்தை மேற்கோளிட்டு தன்னுடைய கருத்துகளை எழுதியுள்ளார். இதில் பேரா. இராமானுஜத்தை நாடக மற்றும் ஓவியக் கலைஞர்களின் பிரதிநிதியாக வைத்து அவர்களது கலைத்துவத்தில் ஊனத்தை ஏற்படுத்த விளைவது தெரிகிறது. நாடகத்திலும் திரைப்படத்திலும் நடிக்கும் நடிகர்கள் உட்பட இசை, ஓவியம் என பல துறைகளைச் சார்ந்த கலைஞர்கள் இலக்கியத்தை வாசிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு அடிக்கடி வைக்கப்படுவதுண்டு. அதேபோல நாடகத்துறையில் இயக்குபவர்களுக்கு நாவல், சிறுகதை, கவிதை, புனைவல்லாத நூல்களெல்லாம் தொடர்ந்து விவாதிக்கப்படுவதைப் போல நாடகப் பிரதிகள் விவாதிக்கப்படவில்லை என்ற கருத்தை வைப்பர். அதேசமயம் நாடகத்தின் வழியே கற்பனாவாத உந்துதல் அடைந்து கவிதை மற்றும் சிறுகதை எழுதப்படுவதும் ஒரு கதையை வாசிக்கும்போது நாடக அமைப்புக்கேற்ற காட்சி வடிவம் மனத்திரையில் எழுவதுமான சாத்தியங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது.
கலையில் இயக்குபவர்களுக்கு இலக்கியம் ஆக்கப்பூர்வமான துணையாக இருப்பது எவ்வளவு உண்மையோ அதேயளவு நாடகம் இலக்கிய உருவாக்கத்திற்குரிய பிரக்ஞையை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மையே. "நல்ல நாடகப்பிரதி நல்ல இலக்கியப்பிரதியாகவும் நிலைகொள்ளக்கூடியது." என்கிற ஜெயமோகனின் கருத்து வாசிக்கும் வாசகர்களின் வாசிப்புத் தன்மையைப் பொறுத்த அனுபவம். பாரதிதாசன், அண்ணாவின் நாடகங்களும் பம்மல் சம்பந்தனாரின் நாடகங்கள் மற்றும் நாடக மொழிபெயர்ப்புகளும் இலக்கிய இன்பத்தைத் தருகின்றன. அதேசமயம் மேற்குறிப்பிட்டவர்களின் நாடகங்களில் வரும் சில வசனங்கள் நாடகத்தை கலைப்பூர்வமற்ற உரையாடல்களாகவும் பேச்சாகவும் மாற்றிவிடுவதுமுண்டு. அவை நவீன நாடக வகையைச் சார்ந்தவை இல்லையென்றாலும் கூட நாடகப்போக்கின் மாற்றத்தில் குறிப்பிடத்தக்கவை. இப்படி பலவகைகளில் நாடகங்கள் எழுதப்படுவதும் மேடையேற்றப்படுவதுமாக இருக்க ஒருவருக்கு நாடகத்தைப் பார்த்த அல்லது வாசித்த திருப்தி இல்லையென்பதால் அனைவருக்கும் அப்படியே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இது அவரவர் தெரிவு மற்றும் இரசனையைப் பொறுத்தது. ஒருவர் நினைத்த வகைமாதிரி மற்றொருவரின் கண்ணுக்குப் புலப்படவில்லை என்பதால் முற்றாக அவருடைய பங்களிப்பின் மீது சந்தேகத்தைத் தூண்டுவது ஆக்கப்பூர்வமான விமர்சனமல்ல.
ஔவை நாடகத்தில் போதுமான அளவு இலக்கியத் தன்மை இல்லை என்றும் வலிந்து உருவாக்கப்பட்டது போன்ற சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன என்றும் கருதி விமர்சனத்தை வைப்பதன் வழியே அதனை சிறந்த நாடகமில்லை என ஒதுக்கிவிட முடியாது. அதிலும் சில சுடர்விடும் பகுதிகள் இருக்கவே செய்கின்றன. இதனால் நிகழ்த்து நிலைக்கும் வாசிப்புக்கும் இடையிலான பிளவு இயல்பாக எழுகிறது. இதுபற்றி தெரிந்துகொள்ள இருவகைப்பட்ட நாடகப் பிரதிகள் பற்றிய அறிமுகம் தேவையாக இருக்கிறது. ஒன்று நாடகக் குறிப்புகளிலிருந்து வளர்த்தெடுக்கப்படும் நாடகப்பிரதி. மற்றொன்று இலக்கியமாக வாசிப்பதற்கென எழுதப்படும் நாடகப்பிரதி. இவ்விரண்டுக்கும் இடையில் சில நுணுக்கமான வேறுபாடுகள் உண்டு. அவற்றைப் புரிந்துகொள்வதன் வழியாக ஜெயமோகனின் கட்டுரையில் உள்ள கருத்துகளில் இருந்து மாறுபாடு எழுகிறது.
இவ்விரு வகைப்பட்ட நாடகப் பிரதியில் நாடகங்களை அதிகம் பார்த்திராத ஒரு வாசகருக்கு பெறும் அனுபவமும் நாடகங்களை அதிகம் பார்த்துப் பழக்கப்பட்ட வாசகரின் வாசிப்பனுபவமும் கட்டாயம் வேறுபடும். அத்தகைய வேறுபாட்டின் அடிப்படையில் ஜெயமோகன் குறிப்பிடும் "நல்ல" நாடகப்பிரதி அல்லது இலக்கியப் பிரதி வேறுபடுகிறது. இலக்கிய வகைப்பட்ட மொழியில் எழுதப்படும் நாடகங்களில் சில சிறுகதைகளில் வரும் சாதாரண உரையாடல்களாகவே எஞ்சி நின்று சலிப்பை ஏற்படுத்துவதுண்டு. அச்சூழலில் நடிப்பதற்கென எழுதப்பட்ட காட்சி அமைப்பு குறிப்புகளுடன் வளர்த்தெடுக்கப்பட்ட நாடகப் பிரதிகளின் உழைப்பைக் கோரும் வாசிப்பு வித்தியாசமானதாக அமைகிறது. ஆனால் அவை தமிழ்ச்சூழலில் இலக்கியப்பிரதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாசிக்கப்படுவதில்லை. இப்படியான சோதனை முயற்சிகளின் மீதான நிராகரிப்புணர்வை வளர்க்கும் விதமாகவே ஜெயமோகனின் கருத்துகள் அமைகின்றன.
நாடகம் வாசிப்பதைக் கடந்து நடிப்பதற்குமானது. கற்பனையில் எழும் காட்சியை உடல் இயக்கத்தால் பார்வையாளர்கள் முன் உருவகித்து நிறுத்தும் கலை வெளிப்பாட்டு முறையை லாவகமாக கையாளும் நாடகப் பயிற்றுனர்களுக்குள் இருக்கும் கலைத்தன்மைக்குரிய அங்கீகாரத்தை மறுக்கும் தொனியை ஜெயமோகன் தனது கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார். நாடகப் பயிற்றுனர்களுக்கும் நாடக இயக்குனர்களுக்கும் ஒருவித தனித்தன்மை உண்டு. அந்தத் தனித்துவத்திற்கு ஏற்றவாறே தேர்வும் அமையும். நவீன நாடகப் போக்கில் எல்லா வகைப்பட்ட நாடகங்களையும் எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு நாடகக்குழுவை மற்றொரு நாடகக்குழு விமர்சனக் கண்ணோட்டத்துடனேயே அணுகும் போக்கு வளரந்துள்ள சூழலை நாம் மறந்துவிடக்கூடாது. எல்லாவித நாடகங்களுக்கும் அதற்குரிய பார்வையாளர்கள் இருந்து வருகின்றர். அதன் அடிப்படையிலேயே இராமானுஜம் அவர்களுக்கு தென்படாத நாடகக்கூறு ஜெயமோகனுக்கு தென்பட்டிருக்கிறது. ஜெயமோகன் நினைத்துள்ள நாடக வடிவத்தை விட சிறப்பான நாடக வடிவத்தை வேறொரு கதைக்கு இராமானுஜம் கொடுக்க முடியாதா என்ன? வணிக எழுத்து என இலக்கியவாதிகள் சிலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நூல்களுக்கு வாசகர் மத்தியில் வரவேற்பு மிகுந்திருப்பதற்கு ஒத்ததாகக் கூட ஜெயமேகனின் நாடகத்தை தனது நாடகத்தை நிகழ்த்தும் அனுபவத்திலிருந்து இராமானுஜம் ஏன் நினைத்திருக்கக்கூடாது. அப்படியான ஒரு எண்ணம் அவருக்கு இருந்தது என்கிற ஒரு காரணத்திற்காக அவரது நாடகச் செயல்பாடுகளை மலினப்படுத்துவது சரியான முறை ஆகுமா?
அதேபோல இலக்கிய பரீட்சயம் இல்லாதவர்கள் பிற துறைகளில் கலைஞராக இருக்கவே கூடாது என்பதை வலியுறுத்தும் மனநிலையும் ஏற்கத்தக்கதல்ல. நாளைய நாடகம் கட்டுரை நிகழ்த்த முடியாதென சொன்ன நாடகத்தை நிகழ்த்தி காட்டுவதன் வழி நிகழ்த்த முடியாதென சொன்னவருடைய நாடகப் பங்களிப்பை சாதாரணமாக்குவதும் தன் நாடகத்தை விதந்தோதுவதுமாகவே அமைந்துள்ளது. தன்னையும் தன் கலை வடிவத்தையும் மேன்மையானதென சொல்வதற்காக பேரா. இராமானுஜம் அவர்களின் நாடகப் பங்களிப்பு மட்டுமல்லாது தமிழ் நவீன நாடக சோதனை முயற்சிகளையே பொருட்படுத்தாத தொனி ஜெயமோகன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக