ரமேஷ் பிரேதனுக்கு இரங்கல்



      விகடன் தடம் இதழ் இளங்கலை  படிக்கும் போது அறிமுகமானது. இராஜபாளையத்திலிருந்து விருதுநகருக்கு ஒரு போட்டியில் கலந்துகொள்ள செல்வதற்கென தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்த சமயத்தில் வாங்கினேன். அதுவே விகடன் தடம் கடைசி இதழ். அத்துடன் இதழ் நின்றுவிட்டது. ரமேஷ் பிரேதன் அந்த இதழின் மூலமே அறிமுகமானார். அதன்பின் காந்தியைக் கொன்றது தவறுதான், அருகன் மேடு, ஐந்தவித்தான், பிரேமுடன் இணைந்து

எழுதிய இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும் போன்ற அவருடைய நூல்கள் சிலவற்றை வாசித்தேன். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் அவரைச் சந்தித்துவிட்டு வந்து கருப்பண்ணா, ஹரீஷ் ஆகியோர் பேசியதை எல்லாம் என்னுடன் பகிர்ந்து கொண்டனர். அப்போதே அவரை ஒருமுறையேனும் சந்நதித்து உரையாட வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது‌.

     பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துக்கு படிக்கச் சென்ற தொடக்கத்திலிருந்தே அவரைப் பார்த்து உரையாட வேண்டும் என்ற எண்ணமும் திட்டமும் இருந்தது. ஆனால் ஒரு வருடத்திற்கு பின்பு அவருடைய பிறந்தநாளன்று தான் சந்திக்க வாய்த்தது. இரண்டு மணிநேரத்திற்கு மேல் அவருடன் பேசினோம்‌ (நான், வெங்கடாசலம், வசந்த்). அவருடனான சந்திப்பு அந்நாளை மனநிறைவாக்கியது‌. அம்பேத்கர், புத்தர், வள்ளலார், பாரதியார், மொழி, தொன்மம், பின்நவீனத்துவம், அரசியல் என பலவற்றைக் குறித்து பேசினார்.

      அதற்குப் பின் கூதிர் இணைய இதழுக்காக மே மாதம் சந்தித்தோம்‌ (நான், மோகன், கிரண்குமார், தணிகைவேலன், சத்தியப்பிரியா, பிரகாஷ்ராஜ்). இம்மாதத்தின் தொடக்கத்தில் நேர்காணல் திருத்தம் தொடர்பாக மோகன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் அவரைச் சந்தித்தனர். அதன்பின் (இரண்டு வாரத்திற்கு முன்) அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடன் நான்கு முறை நேர்காணல் தொடர்பாகப் பேசினார். நீண்ட இடைவெளிக்குப் பின் எழுத்து வடிவில் வரக்கூடிய நேர்காணல் என்பதால் அதற்குரிய உற்சாகத்துடன் விசாரித்ததோடு சில திருத்தங்களும் செய்தார். அவர் நவீனத்துடன் புதிய எழுத்து முறையில் எழுதி வந்தவர் என்றாலும்கூட அவ்வப்போது தான் எழுதிய மரபுக்கவிதைகளை நினைவுகூர்பவர். விஷ்ணுபுரம் விருது பெறுகிற சமயத்தில் சந்திக்க வருவதாகக் கூறியிருந்தேன்‌. கண்டிப்பாக வாருங்கள் தோழர்‌ என்றார்.

    தனிப்பட்ட வாழ்க்கைக் கசப்புகளும் உடல் வாதைகளும் தன்னுடைய எழுத்தைப் பாதிக்கக்கூடாது என்ற கவனத்துடன் எழுத வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டவர். சூன்யதா நாவலுக்குப் பின் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். பௌத்தத் தத்துவங்களையும் மொழியையும் வைத்துப் பிணைந்து எழுதும் போக்கு அந்த நாவலில் இருப்பது பேச்சின் போது வெளிப்பட்டது. அது டிசம்பர் புத்தகக்காட்சிக்கு வெளிவரும் என்ற ஆவலோடு இருந்தேன்.

    ஒரு ஆண்டு வரை சந்திக்க வேண்டுமென நினைத்திருந்தும் ஏதோவொரு தயக்கத்தால் போக முடியாமலேயே இருந்தது. ஆனால் அந்தத் தயங்கமெல்லாம் முதல் சந்திப்பிலேயே உடைபட்டது. தோழர் என அன்புடன் விளித்து கல்விச் செயல்பாடுகள் குறித்தெல்லாம் அக்கறையுடன் விசாரித்தார். அவருடைய எழுத்துகளை வாசித்து நான் புரிந்துகொண்டதன் அடிப்படையில் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ஆழமான பதில்களைக் கொடுத்திருக்கிறார். அதில் பௌத்தத் தத்துவத்தையும் இன அரசியலையும் குறித்து அவர் பேசியதைக் கேட்டது ஒரு நல்ல அனுபவம். மொழி மற்றும் இன பிடிப்புடனும் அதேசமயம் எந்த சட்டகத்திற்குள்ளும் அடைபடாத வகையிலும் ஒருசேர செல்லும் வகையில் லாவகமாக பேச்சை நகர்த்தக்கூடியவர்‌‌. பாண்டிச்சேரியில் அவர் சுற்றித்திரிந்த நாட்களைப் பேசும்போதே தொன்ம நிலத்தின் சுவடுகளை அதனுடன் இணைத்துக் கொண்டு வருவார். அவருடைய எழுத்தைப் போலவே பேச்சும் வசீகரிக்கக்கூடியது.

ஆழ்ந்த இரங்கல்...


ரமேஷ் பிரேதனின் ஒரு கவிதை

குளிரூட்டப்பட்ட உணவகம் (காந்தியைக் கொன்றது தவறு தான் தொகுப்பிலிருந்து)

கண்ணாடித் தம்ளரில் 

எனது ரத்தத்தை ஊற்றி 

பருகியபடியே தொடர்கிறது 

எனது மரணத்துடனான உரையாடல்


உரையாடல் மூலம் நான் 

மரணத்தை ஒத்திவைக்க முயல்கிறேன் 

என்ற ரகசியம் 

வாழும் உடம்புக்குத் தெரியும்


மரணம் எப்பொழுதும் என்னுடன்

குறும்புன்னகையுடன்தான் பேசுகிறது 

ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி 

நெற்றியில் விழும் முடிக்கற்றைகளை ஒதுக்கியபடி 

ஆங்கிலத்துடன் இரண்டொரு தமிழ்ச் 

சொற்களைக் கலந்தபடி


எனது தம்ளர் காலியாகிவிட்டது 

எதிரே உதடுகுழைத்துப் பேசும் மரணத்திடம் 

கொஞ்சம் ரத்தம் கேட்டேன் 

ஐஸ்கிரீமுக்குத்தான் தன்னிடம் பணமிருக்கிறது 

என்று சொல்லியபடி எழுந்துவிட்டது


பருக ரத்தம் இல்லாததால் 

எனது உரையாடல் 

தற்காலிகமாக நிறுத்தப்பட்டது


மரணத்தை வசியப்படுத்த 

நிறைய பணம் வேண்டும் 

இந்த மரணத்தை நான் சாவதற்குள் 

ஒருமுறை புணர்ந்துவிட வேண்டும்

அப்போதுதான் ஆன்மா சாந்தியடையும்


குளிரூட்டப்பட்ட இடத்திலிருந்து வெளியே வந்தோம் 

இருவரையும் வெயில் எரித்தது 

குப்பென்று வேர்த்தது



மெய் முறிந்தால் மெய் - எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடனான உரையாடல் 

https://koothirmagazine.blogspot.com/2025/09/blog-post_11.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவார்ந்த பேச்சும் சலிப்பும் - அழகுராஜ் ராமமூர்த்தி

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்