பஞ்சாமிர்தம் -100 -அழகுராஜ் ராமமூர்த்தி
பஞ்சாமிர்தம் -100 -அழகுராஜ் ராமமூர்த்தி
தமிழில் ஆயிரக்கணக்கான இலக்கிய பத்திரிகைகள் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆரம்பகால பத்திரிகைகளின் தோற்றத்தை ஊன்றி கவனித்தால் எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய படைப்புகளை வெளியிடுவதற்காகவே பத்திரிகை தொடங்கியது தெரியவருகிறது. தற்போதும் கூட சில பத்திரிகைகள் அப்படி வருகின்றன. இப்படியான பல்வேறு பின்னணிகளை கொண்டு நூறாண்டுகள் கடந்து நிற்கும் தமிழ் இலக்கிய பத்திரிகை வரலாற்றில் நூற்றாண்டை காணும் ‘பஞ்சாமிர்தம்’ இதழை பற்றிய அறிமுகமாக இப்பகுதி அமைகிறது.
ஐரோப்பியர்களின் வருகைக்கு பின் தமிழ் இலக்கியத்தில் நடந்த மாற்றத்தில் பத்திரிகைகளின் பங்கு குறிப்பிடதகுந்தது. பத்திரிகைகளின் வருகையே தமிழ் இலக்கிய வகைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான கருவிகளாக திகழ்ந்திருக்கின்றன தமிழ் புத்திலக்கியங்களில் முன்னோடிகளாக கருதப்படும் அனைவரும் பத்திரிகையாளர்களாக செயல்பட்டிருக்கின்றனர். அ.மாதவையா தமிழர் நேசன் மற்றும் பஞ்சாமிர்தம் ஆகிய இரண்டு இதழ்களை நடத்தியிருக்கிறார். இவரது இலக்கிய வரவும் பத்திரிகை வழியாகவே நிகழ்ந்திருக்கிறது .
தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சார்ந்த அ.மாதவையா 1892 ஆம் ஆண்டில் தம்முடைய இருபதாம் வயதில் சென்னை கிறித்தவக் கல்லூரி மலரில் ஆங்கில கவிதை எழுதியதன் வழி எழுத்துலகிற்குள் நுழைகிறார். அதே ஆண்டில் ஆகஸ்ட் முதல் நவம்பர் முடிய நான்கு மாதங்கள் பி.ஆர்.ராஜமய்யரின் ‘விவேக சிந்தாமணி’ மாத இதழில் சுந்தரம்பிள்ளையின் ‘’மனோன்மணியம்’’ நாடகத்தைத் திறனாய்ந்து நீண்ட மதிப்புரையை நான்கு பாகங்களாக எழுதியுள்ளார். ‘’விவேக சிந்தாமணி’’ புதிய இலக்கிய வகைகளுக்கு முன்னுரிமை தந்து செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புத்திலக்கியங்களின் முன்னோடிகளாக கருதப்படக் கூடிய பாரதியார், வ.வே.சு ஐயர், பி. ஆர்.ராஜமய்யர், அ.மாதவையா ஆகியோர் சில இடங்களில் ஒருவருக்கொருவர் மறைமுக கண்ணியாகவே செயல்பட்டிருக்கிறார்கள்.
நாடகத் திறனாய்வு செய்து எழுதிய அனுபவமே பிற்பாடு அவரை நாடகங்கள் எழுதத் தூண்டியிருக்கிறது. ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ நாடகத்தை மொழிபெயர்த்து உதயலன் அல்லது கொற்கைச் சிங்களவன் என்று மொழியாக்க நாடகமாக (transcreation) அவர் வெளியிட்டபோது நீண்ட விளக்கமாக, நாடக ஆராய்ச்சி உரை ஒன்றையும் அவர் வெளியிட்டதற்கு இந்த அனுபவம் துணை செய்ததாக கொள்ளலாம். படைப்பு அல்லது மொழியாக்க செயல்பாட்டிற்கு திறனாய்வு பார்வை கொடுக்கும் பங்களிப்பை இதன் மூலம் அறிய முடிகிறது.
1892ஆம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் முடிய ஆறு பகுதிகளாக ‘’விவேக சிந்தாமணி’’ இதழில் சாவித்திரி சரித்திரம் என்னும் பெயரில் தொடர்கதை ஒன்றை அ.மாதவையா எழுதினார். இதுவே தமிழில் வெளியான முதல் தொடர்கதை ஆகும். இதற்கு முன் வெளிவந்தவை நேரடி நூல்கள். விவேக சிந்தாமணி இதழில் அ.மாதவையா மூலம் முதன்முதலில் நாவல் ஒன்று தொடர்கதையாக வரும் வழக்கம் உருவாகியிருக்கிறது. இடையில் நிறுத்தப்பட்ட இந்த தொடர்கதை 1903ல் ‘முத்து மீனாட்சி’ என்ற பெயரில் நாவலாக வெளிவந்திருக்கிறது. ராஜமய்யரின் இதழில் முதன் முதலாக அ.மாதவையா தொடர்கதை என்னும் வழக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையிலான முரணால் தொடர்கதை பாதியிலேயே நிறுத்தப்படுகிறது. அடுத்ததாக. அ.மாதவையாவின் புதினப் போக்கைப் பின்பற்றுபவர்கள் என எழுத்தாளர்களை க.நா.சுப்பிரமணியம் பட்டியலிடும் போது அதில் முதலில் இடம்பெறுபவர் மகாகவி பாரதியார் என்கிறார். பாரதியார் மற்றும் மாதவையா கதைகளில் முற்போக்கு கருத்துகள் இடம்பெறும் இடம் ஒரே தன்மையில் இருப்பது இங்கே ஈண்டு நோக்கத்தக்கது. பாரதியாரும் வேதநாயகம் பிள்ளை, . பி. ஆர்.ராஜமய்யர், அ.மாதவையா பற்றி தன்னுடைய எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார். பாரதியாரின் ‘வந்தே மாதரம்’ மொழிபெயர்ப்பு ஆவணி 1925 ‘’பஞ்சாமிர்தம்’’ இதழில் வெளியாகி இருக்கிறது. மேலும் மாதவையா சில இடங்களில் பாரதியின் கவிதைகள் குறித்த கருத்துக்களையும் வெளியிட்டு இருக்கிறார். இதனையே முந்தைய பத்தியில் கண்ணி என்று குறிப்பிட்டேன்.
அ.மாதவையா நடத்திய முதல் இதழ் தமிழர் நேசன். 1917 முதல் 1924 வரை ஏழு தொகுதிகளாக வெளிவந்த ‘’தமிழர் நேசன்’’ கல்வி இதழ் ஆகும். ‘தமிழர் கல்விச் சங்கத்து பத்திரிகை’ என்ற குறிப்புடன்
‘’தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’’
என்ற திருக்குறளும் இதழின் முகப்பு பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. ‘’தமிழர் நேசன்’’ இதழில் புறநானூறு ஆராய்ச்சி, அகராதி பள்ளிக்கூடம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் பற்றிய செய்திகள் அறிவியலில் வேதியியல், தாவரவியல் உள்ளிட்ட பிரிவுகளை அடக்கிய பல்வேறு செய்திகளோடு ஓவியங்களும் இவ்விதழில் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் மணிமேகலைத் துறவு, பாரிஸ்டர் பஞ்சகதம் என்ற இரண்டு நாடகங்களை இதழில் மாதவையா எழுதியிருக்கிறார். ஏன் இந்த இதழ் நின்றது என்பது பற்றிய தகவல்களை என்னால் அறிய முடியவில்லை ஒருவேளை கல்வி சங்கத்தில் இதழாக இருப்பதால் சங்கத்தின் நிலை இதழில் நடத்த முடியாமல் போய் இருக்கலாம் என்று கருதப்பட்ட இடம் இருந்தாலும் ஏழாவது தொகுதியின் முன்னுரையிலிருந்து தமிழபிமானி என்பவரின் தொடர்கதை வெளிவர இருக்கும் அறிவிப்பும் தொடர்ந்து இதழுக்கு வியாசங்கள் அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழர் நேசன் நின்ற பிறகு பஞ்சாமிர்தம் தொடங்கப்படுகிறது. பஞ்சாமிர்தம் இதழின் தலையங்கத்தில் அ.மாதவையா இதழ் தொடங்குவது பற்றி குறிப்பிடும்போது, "தமிழிலே மாதப் பத்திரிக்கைகள் பல வெளிவருகின்றன; எனினும், இவை பெரும்பாலும் ஒரு சில விஷயங்களையே கையாளுகின்றன. நமது நாகரிக வாழ்க்கைக்குரிய பல துறைகளையும் கருதி நடைபெறும் மாதப்பத்திரிக்கை நான் அறிந்தவரை தமிழில் ஒன்றேனும் இல்லை. இங்கிலீஷில் பலவும் , வங்காளி , குஜராத்தி, மராத்தி, தெலுங்கு முதலிய மொழிகளில் சிலவும் இத்தகைய பத்திரிகைகள் உள. மற்ற எவ்விதத்தினும் இந்தப் பாஷைகளுக்குத் தாழாததும் , யாவற்றினும் மேலான பழம்புகழ் இவை படைத்ததுமான நமது அருமைத் தாய் மொழிக்குள்ள இக்குறையை நிரப்புவது என்னினும் மிக்க அறிவும் படிப்பும் முன் வராமையினால், உள்ளவர் பணியாயினும் வேறு எவரும் நாட்டுப் பற்றும் பாஷாபிமானமும் உள்ள தமிழ் மக்களின் உதவியைக் கொண்டு உழைத்துப் பார்க்கத் துணிந்து, நான் முன் வரலானேன்" என்கிறார். இந்த இடத்தில் தமிழை மாதவையா தாய்மொழி என குறிப்பிட்டுள்ளார். தொடக்கத்தில் நாம் அவர் தெலுங்கு குடும்பத்தை சார்ந்தவர் என்று சொன்னதை இவ்விடத்தில் ஒப்பு நோக்கி பார்த்தால் முரண் இருக்கவே செய்கிறது. இவ்விரண்டு கருத்துகளில் முதலாவது ஜூன் வேங்கடராமனிடமிருந்தும் இரண்டாவது பஞ்சாமிர்தம் இதழிலிருந்தும் எழுத்தாளப்பட்டிருக்கிறது. “திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி, இந்த மக்களை, மானமும் அறிவும் உள்ள மக்களாக ஆக்குவதுதான் என்னுடைய ஒரே பணி; அந்தத் தொண்டை நான் ஏன் என்மேல் போட்டுக் கொள்கிறேன்? அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது, என்று நீங்கள் கேட்கலாம். வேறு எவரும் செய்ய முன்வராததாலேயே நான் செய்கிறேன். எனக்கு அந்த ஒரு தகுதியே போதும்” என்ற பெரியாரின் புகழ் பெற்ற வாசகமே ‘’பஞ்சாமிர்தம்’’ இதழின் முதல் தலையங்கத்தை பார்க்கும் போது நினைவிற்கு வருகிறது. மாதவையாவின் படைப்புகளும் பெரியாரின் சீர்திருத்த கருத்துக்களும் ஒரே தன்மையன என்பதையும் இவ்விடத்தில் கவனிக்க வேண்டியுள்ளது.
பஞ்சாமிர்தம் உருவாக்குவதில் தனது நோக்கமாக மாதவையா, "ஆங்கு ஆங்கு முளைத்தெழும் தேசிய உணர்ச்சிப் பயிருக்கு இப்பத்திரிகை மூலமாய் ஊக்க உரம் இட்டு, அறிவு நீர் பாய்ச்சி, அவ்வுணர்ச்சியைத் தழைத்தோங்கச் செய்ய முயலுவது என் முக்கிய நோக்கம்."என்கிறார். "நான் ஒரு மானுடன்; நான் மதியாதன மானுட வாழ்வில் இலை’’ முகப்பு வாசகத்தை தாங்கிய பஞ்சாமிர்தம் இதழில் அ.மாதவையாவுடன் அசலாம்பிகை அம்மாள், பெ.நா.அப்புஸ்வாமி ஐயர், சி.தா.அமிர்தலிங்கம் பிள்ளை, அரங்கசாமி ஐயங்கார், ஆர்,அனந்தகிருஷ்ண சாஸ்திரி, மா.அனந்த நாராயணன், பா.ஆதிமூர்த்தி, ஆதிநாராயண செட்டியார், இராகவாசாரியார், சி.ராஜகோபாலாசாரியார், ஸி.எம்.ராஜு செட்டியார், இராமகிருஷ்ண மாணவரில்லம், டி.எஸ்.இராமசந்திரன், டி.எஸ்.இலக்குமணப் போற்றிகள், எம்.லக்ஷ்மி அம்மாள், மு.பொ.ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை, எஸ்.என்.ஐயர், காவிய கண்ட கணபதி சாஸ்திரி, காந்தி, பிரான்சிஸ். கிங்க்ஸ்பெரி. வி.எஸ்.குப்புஸ்வாமி, கோணக் கோபாலன், லேடி. சதாசிவையர் (மங்களம்மாள்), எஸ்.சத்தியமூர்த்தி, கே.ஆர்.ஆர்.சாஸ்திரி, வெ.சாமிநாதசர்மா, வே.ஆ.சிதம்பரப்பிள்ளை, சிவத்தியானந்த மகரிஷி, ஜி.கே.சிவஸ்வாமி, கே.என்.சீதாராம், சீனிவாசையங்கார், சுப்ரமணிய ஐயர், வி.சுப்ரமணிய ஐயர், கே.ஆர்.சுப்ரமணிய ஐயர், வெ.ப.சுப்ரமணிய முதலியார், பி.வி.செகதீசையர், டி.வி.சேஷகிரி ஐயர், எம்.எஸ்.சேஷாசலையர், கே.ஜி. சேஷையர், சோமசுந்தர தேசிகர், எஸ்.சோமசுந்தர பாரதி, ரே.சௌதிரி, ஓ.ப.தேசிகன், சி.எஸ்.நல்லமுத்தம்மாள், சி.ஆர்.நாயுடு, வே.நாராயணையர், டி.எ.இராமலிங்க செட்டியார், ஆ.வ.பத்மநாப பிள்ளை, திவான் பகதூர் ச.பவானந்தம் பிள்ளை, எச்.ஏ.பாப்புலி, மா.பாமணி, மகாலட்சுமி அம்மாள், மஹேஷ குமார சர்மா, மீனாம்பாளம்மாள், எஸ். முத்துலக்ஷ்மி அம்மாள், எஸ்.டி.மோஸஸ், ஆர்.வாசுதேவ சர்மா, வி.விசாலாக்ஷியம்மாள், கே.விஸ்வநாதையர், விபுலானந்த சுவாமிகள், வேங்கடபதி ராஜு, லாலா லஜபதிராய் முதலியோர் பங்களித்துள்ளனர்.
இலக்கிய ஆராய்ச்சி கட்டுரைகள், கவிதைகள், தொடர்கதைகள், சுயசரிதை, அரசியல் சார்ந்த கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், கல்வி மற்றும் கலை சார்ந்த தகவல்கள், கூட்டுறவு சங்கம் மற்றும் கைத்தொழில் பற்றிய கட்டுரைகள், சரித்திரம் மற்றும் சாஸ்திர ஆராய்ச்சி, மதம் சார்ந்த தகவல்கள், பத்திரிகை ஆசிரியரின் பத்திராதிபர் குறிப்புகள், பத்திரிகை பற்றிய மதிப்புரைகள், விளம்பரங்கள், மாதர் பகுதி, அனுபவப் பகிரல் போன்றவை இதழில் உள்ளடக்கங்களாக இடம்பெற்றிருக்கிறது. பத்திராதிபர் பகுதியில் அ.மாதவையா பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் பற்றிய பல்வேறு வகைப்பட்ட கருத்துக்களை தெரிவித்ததோடு குழந்தை திருமண எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார். கிங்க்ஸ்பெரியின் சமயம் சார்ந்த கட்டுரைகள் வரலாற்றை மையப்படுத்தியதாக அமைந்திருக்கின்றன. இந்தியாவைக் கடந்து சுவிட்சர்லாந்து பற்றிய வரலாறு, ஐரிஸ் கவிஞர் பாட்ரில் மாக்கில் சுயசரிதை தொடர், ஆதிநாராயண செட்டியாரின் அயர்லாந்து வாழ்க்கை பற்றிய நினைவு கட்டுரைகள் ஆகியன தனித்தன்மை வாய்ந்த பகுதிகளாக இருக்கின்றன. டால்ஸ்டாய், தாகூர், லாலா லஜபதி ராய் ஆகியோரின் கருத்துக்கள் மற்றும் படைப்புகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கின்றன. சிசு மரணம் பற்றிய பகுதி பத்திரிக்கையில் இடம் பெற்றிருப்பதன் வழி இதன் வெளியான காலத்தில் அதிக சிசுக்கொலை நடந்திருப்பது தெரிய வருகிறது. ஆரிய சமாஜ ஆதரவு நிலைப்பாடும் இதழின் பல்வேறு பகுதிகளில் தெரிகிறது. இதழின் சிறப்புகளில் ஒன்று மொழிபெயர்ப்பு மற்றும் படைப்பு என்ற இரண்டு வகைகளிலும் பெண்கள் பஞ்சாமிர்தம் இதழில் அதிக பங்களிப்பினை செய்திருப்பதாகும்.
பஞ்சாமிர்தம் இதழில் அ.மாதவையாவின் நிலவரி ஏலம், ஏணியேற்ற நிலையம், முருகன் ஆருடம், கண்ணன் பெருந்தூது ஆகிய நான்கு கதைகளும் பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாவது பகுதியும் இடம் பெற்றிருக்கிறது.17 கவிதைகள், 12 கட்டுரைகளோடு சில தொடர் கட்டுரைகளையும் அ.மாதவையா பஞ்சாமிர்தம் இதழில் எழுதியிருக்கிறார். ‘’அ.மாதவையா இந்திய இலக்கிய சிற்பிகள்’’ நூலின் முன்னுரையில், ‘’பஞ்சாமிர்தம் இதழ்கள் முழுவதையும் படித்துக் குறிப்பெடுக்கவும், புகைப்பட நகல் எடுக்கவும் அன்புடன் அனுமதி தந்த சென்னை சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழக மேலாளரும் மறைமலையடிகள் நூல் நிலையம் புரவலருமான திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் நூலகத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி’’ என்றும் ‘’பஞ்சாமிர்தம் இதழின் சில பகுதிகள் பற்றிய குறிப்புகளை தந்துதவிய பேராசிரியர் டாக்டர். மெ. இராணி ஜான்சிபாய் (மதுரை) அவர்களுக்கு என் நன்றி’’ என்றும் இருவருக்கு சு.வேங்கடராமன் நன்றி தெரிவித்திருக்கிறார். இதன் வழி நூலகம் மற்றும் தனி நபர்கள் இடையே பஞ்சாமிர்தம் பார்வைக்கு கிடைத்த செய்தி தெரிய வருகிறது. சித்திரை 1924 முதல் கார்த்திகை 1975 வரை பஞ்சாமிர்தம் 20 இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. கடைசி இதழ் அ.மாதவையா நினைவு சரம கவிகளுடனும் அவரது படைப்புகளுடனும் வெளிவந்திருக்கிறது.
அ.மாதவையர் என்ற பெயரிலே இதழ்களில் எழுதி இருந்தாலும் மாதவையா என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு கல்வி மற்றும் சமுதாய சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அதனாலேயே இவரது எழுத்துக்களிலும் சமூக சீர்திருத்த கருத்துக்கள் அதிகம் இடம் பெற்றிருந்தன. அ.மாதவையாவின் எழுத்துகள் பிரச்சார வகைப்பட்டவை என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும் அவர் செய்த இலக்கிய மற்றும் சமூக பங்களிப்பு எவராலும் மறுக்க முடியாததாகும். நாவல், சிறுகதை, பத்திரிகை மட்டுமின்றி உதயலன் என்னும் கொற்கைச் சிங்களவன், திருமலை சேதுபதி, மணிமேகலைத் துறவு, பாரிஸ்டர் பஞ்சநதம், இராஜமார்த்தாண்டன் ஆகிய நாடகங்களையும் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்க வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அ.மாதவையா 1925 அக்டோபர் 22ஆம் நாள் பிற்பகல் 3.40மணியளவில் சென்னை பல்கலைக்கழக ஆட்சி மன்ற கூட்டத்தில் தமிழில் கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசி முடித்தவுடன் மூளை நரம்பு வெடித்து குருதி கசிய மரிக்கிறார் அவரது நினைவு இதழுடன் பஞ்சாமிர்தம் இதழும் நின்று போனது.
துணை நின்றவை:
அ.மாதவையா (இந்திய இலக்கிய சிற்பிகள்) - சு.வேங்கடராமன், 1999, சாகித்ய அகாதமி.
முதல் ஐந்து தமிழ் நாவல்கள், க.நா.சுப்பிரமணியம், செப்டம்பர், 1957, அமுதநிலையம்.
அறியப்படாத தமிழ் உலகம் -: கே. கணேஷ், பா. இளமாறன், ஐ. சிவகுமார், 2011, பாரதி புத்தகாலயம்.
https://www.vikatan.com/literature/arts/109485-writer-amadhavayya-life-history-series-2
கருத்துகள்
கருத்துரையிடுக