பெரியபுராணத்தில் சாதி குறித்த பதிவுகள்

 


பெரியபுராணத்தில் சாதி குறித்த பதிவுகள் 

-ரா.அழகுராஜ்

      சேக்கிழாரின் பெரியபுராணம் இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் காலத்தில் இயற்றப்பட்ட காப்பியம் ஆகும். இக்காப்பியம் எழுதப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் சமண சமய ஆதிக்கம் அதிகமிருந்த சோழ பகுதிகளை சைவ சமயத்தின் பக்கம் திருப்புவதாகும். திருத்தக்கத்தேவரின் சமண சார்புடைய சீவக சிந்தாமணிக்கு இருந்த புகழை சைவசமயத்தின் பக்கம் திருப்புவதற்கு ஒரு காப்பியம் தேவைப்பட்ட நிலையில் நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியின் விரிவான வடிவமாக பெரியபுராணம் எழுதப்பட்டிருக்கிறது. பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித் தேவர் ஆகும். சோழ மன்னனின் அமைச்சராக விளங்கிய சேக்கிழார் பெரியபுராணம் இயற்றிய பின் “தொண்டர் சீர் பரவுவார்” என வழங்கப்பட்டிருக்கிறார். இறைத்தொண்டர்களாக நாயன்மார்கள் பெரியவர்கள் என்ற பொருண்மையில் அமையப்பெற்று அவர்களது வரலாற்றைப் பதிவு செய்யும் தொண்டர் மா புராணம் “பெரியபுராணம்” எனப் பெயர் பெற்றிருக்கிறது. சேக்கிழார் வேளாண் குடியைச் சார்ந்தவர் என்பதை அவரது பெயரின் வழி அறிய முடிகிறது. கிழார் என்ற சொல் நிலக்கிழார் எனும் நிலவுடைமைப் பொருளில் புழக்கத்தில் இருப்பதை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். சேக்கிழார் பல்லவப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதை இரண்டாம் குலோத்துங்கச் சோழன் கொடுக்கும் “உத்தமச் சோழப் பல்லவன்” என்ற பட்டம் மூலம் அறியலாம். இத்துடன் அருண் மொழித் தேவர் என சேக்கிழாரின் இயற்பெயர் ஆகும். மேலும், இராமதேவர், மாதேவடிகள் என்றும் கல்வெட்டுகள் சேக்கிழாரைக் குறிப்பிடுகின்றன. இத்தகவல்கள் வேளாண்குடியைச் சார்ந்தவர்களும் தேவர் என்கிற பின்னொட்டைப் பெயருக்குப் பின் பயன்படுத்தியிருப்பதைக் காட்டுகிறது. சேக்கிழாரின் பெயர்கள் அனைத்தும் பல்வேறு விதமான பின்புலங்களை வெளிப்படுத்துவது போல அவரது காப்பியமும் சமுகம் சார்ந்த பல்வேறு பின்புலச் செய்திகளை உணர்த்தும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. 

     தேவாரம் முதலான சமயக் காப்பியங்களில் தெளிவும் தமிழ்நாட்டில் இருந்த ஊர்களைப் பற்றிய தகவல்களையும் தெரிந்த அமைச்சராக சேக்கிழார் இருந்தமையால் பெரியபுராணம் எழுத பணிக்கப்பட்டிருக்கிறார். பெரியபுராணத்தை தனித்த காப்பியமாக கருதுவதற்கு முன் அதற்கு மூலமாக இருந்த சுந்தரரின் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய நூல்களில் பதியப்பட்ட செய்திகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. திருத்தொண்டத்தொகை தொகை நூலாகவும், திருத்தொண்டர் திருவந்தாதி வகை நூலாகவும் திருத்தொண்டர் மாபுராணம் விரிநூலாகவும் இலக்கிய வரலாற்றில் நிலைத்திருக்கிறது. தொகை, வகை நூல்களில் சாதி குறித்த பதிவுகள் எத்தன்மையில் கையாளப்பட்டிருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதன் மூலமாக சாதிய நிலை நூற்றாண்டு இடைவெளியில் மாறி நிற்கும் நிலையினை மதிப்பிடலாம். கி.வா.ஜகந்நாதன் தனது “நாயன்மார் கதை” நூலில் திருத்தொண்டத் தொகையில் 63 நாயன்மார்களின் வரலாறு இருப்பதாகப் பதிவு செய்கிறார். சுந்தரரிர் திருத்தொண்டத்தொகையில் 60 நாயன்மார்களே குறிப்பிடப்பட்டுள்ளனர். நம்பியாண்டார் நம்பி தனது திருத்தொண்டர் திருவந்தாதியில் தான் சுந்தரர், சடையனார், இசைஞானியார் ஆகியோரை நாயன்மார் ஆக்கியுள்ளார். சேக்கிழார் பெரியபுராணத்தில் சாதிகளை இணைத்து வைக்க முயன்று சைவத்திற்குள் ஒரு மாறுதலை ஏற்படுத்த ஏற்படுத்த முனைந்துள்ளார்‌. சாதிய படிநிலையை எதிர்த்த சமண சமயத்திற்கு மறுதலையாக சைவம் நிலைநிற்பதற்கு சேக்கிழாரின் பெரியபுராணம் ஒரு முதல்படி ஆகும். 

      தமிழில் அத்தகைய பணியை பிற்காலத்தில் செய்தவர்களாக வைகுண்டர் மற்றும் வள்ளலார் ஆகியோரைக் கூறலாம். சைவ சமயத்திற்குள் வீர சைவர்கள் எனப்பட்ட லிங்காயத்துகளில் பசுவண்ணா, அக்கமகாதேவி ஆகியோரின் வசனங்கள் பிற்காலத்தில் சைவ சமயத்திற்குள் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த முனைந்தது. சைவப்பணியை மேற்கொள்ள சென்ற சேக்கிழார் அத்துடன் சமூகப்பதிவையும் செய்துள்ளதாக பெரியபுராணம் மூலம் காண முடிகிறது. தமிழ் நிலத்தில் நிகழ்ந்த செயற்பாடுகளை மூலமாகக் கொண்ட பெரியபுராணத்தை வடமொழியில் அகஸ்திய மத்தவிலாசம், உபமன்யு பக்தவிலாசம் என்ற பெயர்களில் மொழிபெயர்த்துள்ளனர். பெரியபுராணத்தைத் தழுவி இரண்டு புராணங்கள் எழுதப்பட்டிருப்பது காப்பியத்தின் வாசிப்புப் பரவலைத் தெரியப்படுத்துவனவாக உள்ளன. 

சாதி குறித்த பதிவுகள்:

      நெசவுத் தொழில் செய்த நாயன்மார் குறித்த குறிப்பும் உடைகள் மற்றும் கோவணம் வழங்கிய செய்தியும் பெரியபுராணத்தில் இருக்கிறது. சாலியர்கள் உள்ளிட்ட கைக்கோளர் பிரிவினர் நெசவுத் தொழில் செய்திடுனும் 12ஆம் நூற்றாண்டில் பறையர்களும் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட செய்தியை வரி முறைகளைப் பற்றி சொல்லும் கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது. அதில் “பறைத்தறி” என்றொரு சொல் இடம்பெறுகிறது. சாதியால் கீழ்மையானவர்களாக நாயன்மார்களில் சிலர் இருந்தாலும் பக்தன் அல்லது இறையடியான் என்ற முறையில் உயர்ந்தவர்களாக மதிக்கப்பட்டதாக பெரியபுராணம் கூறுகிறது. சாதி உட்பிரிவுகளைக் கடந்து வலங்கை, இடங்கை என்ற இரண்டு பிரிவுகளே பன்னிரண்டாம் நூற்றாண்டில் அதிகம் பார்க்கப்பட்டிருப்பதையும் கவனத்தில் வைக்க வேண்டியுள்ளது. “சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன்(1178-1218) கிபி 1218 ஆம் ஆண்டில் ஊட்டத்தூர் பகுதியில் குடிமக்களின் பாதுகாவலுக்கு ஆணை பிறப்பித்த கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் வண்ணான்(மருத்துவராகவும், அறுவை சிகிச்சையும் அளிப்பவர்), நாவிதன், குயவர், தட்டான், தச்சர், கண்ணார், காரக்கன்(மேஸ்திரி), கொல்லன், எண்ணெய் வணிகர், உப்பு வணிகர், இலை வணிகர், பள்ளி (காவல்காரர்), பூமாலைக்காரர், பறையர், கோயிற்குடியன், உவச்சன், வலையர், பாணன் என 18 இடங்கைப் பிரிவுகளைப் பற்றிச் சொல்கிறது” என ஜெயசீல ஸ்டீபன் சொல்கிறார். இதன் வாயிலாக பன்னிரண்டு மற்றும் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் வலங்கை, இடங்கை அமைப்பு அதிக முக்கியத்துவம் பெற்றிருந்ததை அறிய முடிகிறது. இதன்படி பெரியபுராண நாயன்மார்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் வலங்கைப் பிரிவினரா? இடங்கைப் பிரிவினரா? என்பதையும் தனியே ஆராயலாம்.

      நந்தனார் இறைபக்தியில் சிறந்தவர் என குறிப்பு உண்டு. நந்தனாரைப் போலவே பிற நாயன்மார்களும் சிவபக்தியில் உறுதியாக இருந்துள்ளனர். நந்தனார் மட்டுமே தனித்துப் பார்க்கத்தக்க நிலையில் மாறியதற்கான காரணமாக எது இருந்திருக்கும் என்ற கேள்வியுண்டு. ஒருவேளை அவர் பக்திப் பாடல்கள் மூலம் இறைவனைப் பாடினார் என வைத்துக் கொண்டால், அவர் பாடிய பாடல்கள் எங்கே? என்றொரு கேள்வியும் எழுகிறது. நீலகண்ட யாழ்ப்பாணருக்கும் இதை நிலை தான். கீழ்நிலையில் வைக்கப்பட்டிருந்த மக்களைக் கோயிலுக்குள் விடாமல் திசைதிருப்பும் பதிவுகளாக நந்தனாருக்கு நந்தி வழிவிட்ட செய்தியும், மலையில் எல்லோருக்கும் இறைவன் காட்சியளிக்கும் செய்தியும் இடம்பெறுகிறது. இதன் வாயிலாக சாதியை மையப்படுத்திய தீண்டாமை நிகழ்ந்ததை அறிய முடிகிறது. பக்தியின் பெயரால் தீக்குள் இறங்கி நந்தனார் உயிரை விடுவதை தீர்வாக பெரியபுராணம் முன்வைக்கிறது. பிரம்மதேயம் உருவானைதையொட்டி பிராமணர்களுக்கும் வேளாளர்களுக்கும் இடையே சமூகத்தை முன்னிட்டு கருத்து முரண் ஏற்பட்டு வேளாளர்கள் பிரம்மதேயங்களை எதிர்த்த பதிவு கல்வெட்டில் பதிவாகியுள்ளது. இந்த செய்திகள் ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டையொட்டிய செய்திகள் ஆகும். அந்த காலத்தைச் சார்ந்தவர்களும் நாயன்மார்களாக இருப்பதால் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். பெரியபுராணத்தில் 13வேளாளர்களும் 12 அந்தணர்களும் இடம்பெறுகின்றனர்‌. சுந்தரர் எழுதிய மூலத்தில் சுந்தரர் மற்றும் அவர் பெற்றோர் உட்பட மூன்று நாயன்மார்கள் கிடையாதென்றால் 13 வேளாளர்களும் 9அந்தணர்களும் திருத்தொண்டத் தொகையில் பதிவு செய்யப்படுகினறனர். அந்தணர்களைவிட வேளாளர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. வேளாளரான அப்பரின் பக்தராக அந்தணராகிய அப்பூதியடிகள் விளங்குவது உள்ளிட்ட செய்திகள் பெரியபுராணத்தில் இருக்கிறது. இவற்றை வைத்து வேளாளர்கள் அதிக முக்கியத்துவம் உடையவர்களாக இருந்தனர் எனலாம். மேலும் பிராமணர்கள் சாதிக்கு வெளியே நின்று சாதியினரை விட உயர்ந்த நிலையில் பார்க்கப்பட்ட செய்தியும் அதே காலகட்டத்தில் கிடைக்கிறது. 

      மானிடவியல் நோக்கில் “ஒரு சாதியார் வேற்றுச் சாதியினரை மணந்துகொள்ளுதல் இயலாது. சாதி அகமண முறையைக் கொண்ட ஓர் அமைப்பாகும்.” என பக்தவத்சல பாரதி கூறுகிறார். பெரியபுராணம் சாதி கடந்த திருமணத்தை பேசும் நூலாக உள்ளது. அதே சமயம் “சமய நிகழ்ச்சிகளிலும் சடங்கு முறைகளிலும் இறைப்பணிகளிலும் இவ்வாறான வேறுபாடுகள் நிகழ்கின்றன” என்ற கருத்தின் படி ஒவ்வொரு நாயன்மார்களும் தாங்கள் செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே தொண்டு செய்துள்ளனர். சோழர் ஆட்சிக்காலத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மிகுந்திருந்த பதிவுகளை “மேதினி வளருஞ் சாதி ஒழுக்கமும் நீதி அறமும் பிறழாது நிகழ” என்கிற இரண்டாம் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்தியிலும் “நீதிதரு குல நான்கும் நிலை நான்குநிலைநிற்ப” என்கிற மூன்றாம் இராசராசன் மெய்க்கீர்த்தியிலும் காணமுடிகின்றது. பெரியபுராணத்தில் சாதிகளைச் சார்ந்தவர்கள் அடியார்களாகவும் நாயன்மார்களாகவும் வருகின்றன செய்தி தெளிவாகப் பதிவாகியுள்ளது.

      சாதி என்பதற்கு “அகமண வழக்கம் வாயிலாக மக்களை வரையறுக்கப்பட்ட தனித்தனி அலகுகளாக்கி மற்ற எந்தவோர் அலகிலும் இணைவதைத் தடுப்பதே சாதியின் பொருளாகும். அகமணமே சாதிக்குரிய தனித்தன்மையான இயல்பு” என அம்பேத்கர் கூறும் கருத்து மானிடவியல் நோக்கில் அணுகத்தக்கதாகும். புதிய தலைமுறை உருவாவதற்கு நடுவில் திருமணம் ஒரு அமைப்பியல் முறையாக இருக்கிறது. சாதி கடந்து திருமணம் செய்த நாயன்மார்கள் ஏதேனும் காரணங்களை முன்வைத்து பிரிந்தனரா? அடியார்களின் கலப்பு மனத்தின் வாயிலாக குழந்தைகள் உருவானதா? என்பதையெல்லாம் தனியே ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. சுந்தரரை கலப்பு மணத்திற்கான எடுத்துக் காட்டாக கொண்டால் அவர் பரவை நாச்சியார் மற்றும் சங்கிலியாரை விட்டு சமயக் காரணங்களை முன்வைத்து பிரிந்ததையும் சேர்த்துப் பார்க்க வேண்டியுள்ளது.

      பெரியபுராண நாயன்மார்களில் வேளாளர்கள் (13), அந்தணர்கள் (12), முடி சூடிய மன்னர்கள் (6), குறுநில மன்னர்கள்(5) வணிகர்கள்(5), ஆதிசைவர்கள்(4), இடையர்கள்(2), மாமாத்திரர்(1), குயவர்(1), பாணர்(1), பரதவர்(1), வேடர்(1), சான்றார்(1), சாலியர்(1), செக்கார்(1), ஏகாலியர்(1), புலையர்(1), சாதி அறியப்படாதவர்கள்(6) என மொத்தம் அறுபத்தி மூன்று பேர் அடங்குவர். பல சாதியைச் சார்ந்தவர்களை சைவம் என்கிற நூலில் கோர்க்கும் மாலையாக இருக்கும் பெரியபுராணத்தில் சில வாடிய பூக்களும் உண்டு. மேற்கூறியவர்களில் வேளாளர்களே சைவ அடியார்களுக்கு அமுதளித்து தொண்டு செய்துள்ளனர். கண்ணப்ப நாயனார் இதற்கு விதிவிலக்காக இறைச்சியை சிவனுக்குப் படைத்துள்ளார். “பெருங்கோயில்கள் தனது நிலவுடைமைத் தன்மை காரணமாக நெல் தவிர்த்த பிற தானிய வகைகளைத் தவிர்த்தன.” எனும் செய்தியை பக்தவத்சலபாரதி கூறுகிறார். ஆகம நெறிகளுக்கு உட்பட்டு கோயில்களில் உணவு வழங்கும் வழக்கம் எப்போது வந்தது என்பதை காலப் பகுப்பாய்வின்வழி அடையாளம் காண வேண்டும். அன்றைய சைவ அடியார்களது உணவு முறை எத்தன்மை வாய்ந்தது என்பது குறித்த சில பதிவுகள் மாத்திரம் பெரியபுராணத்தில் கிடைக்கிறது. பிராமணர்களின் உணவில் நைவேத்தியம், தயிர்சாதம், பொங்கல், நெய், தேங்காய், மிளகு, சுக்கு, சர்க்கரை ஆகியன முதன்மையானது என 1558ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுவதாக அ.கா.பெருமாள் கூறுகிறார். பெரியபுராணம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்டிருக்கிறது. கல்வெட்டு செய்திக்கும் பெரியபுராணத்திற்கும் இடையில் நூற்றாண்டு இடைவெளி இருப்பதால் இத்தகைய உணவுகள் தான் அப்போதும் கோயில்களில் வழங்கப்பட்டிருக்குமா? என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது. இறைச்சியை சாப்பிடும் சாதியைச் சேர்ந்தவர்களும் பல்வேறு தொழிலைச் செய்தவர்களும் பெரியபுராண நாயன்மார்களாக இருக்கின்றனர். நெய் எப்போது அபிஷேக பொருளாக மாற்றப்பட்டது என்கிற ஆய்வும் ஒவ்வொரு நாயன்மார்களும் செய்யக்கூடிய தொழில்கள் காலகட்டத்தில் எப்படி இருந்தது என்பது குறித்த பிற செய்திகளையும் நாம் பெரிய புராணத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. அடியார்கள் கோவணம் அணிந்து திரிந்த செய்திகள் நாயன்மார் கதைகளில் வருகிறது. திருவிளையாடல்கள் என்ற பெயரிலான புனைவுகள் ஒரு பக்கம் இருப்பினும் உண்மையைக் கொண்டே புனைவுகள் உருவாகிறது என்கிற கருத்தையும் கவனத்தில் கொண்டு பெரியபுராண காலகட்டசமூக அமைப்புகளை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

நாயன்மார்கள்:

"தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்;

திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்;

இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்;

வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்;

விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்;

அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்;

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .

[ 1 ]

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்;

ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்;

கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்;

கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்;

மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன்,

எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும் அடியேன்;

அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்;

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .

[ 2 ]

மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்;

முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும், அடியேன்;

செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்;

திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்;

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க,

வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த,

அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்;

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .

[ 3 ]

திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்;

பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்;

பெரு மிழலைக் குறும்பற்கும், பேயார்க்கும், அடியேன்;

ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்;

ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு அடியேன்;

அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்;

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே. 

[ 4 ]

வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும்

மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா

எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்;

ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்;

நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்;

நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும், அடியேன்;

அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்;

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .

[ 5 ]

வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே

மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்;

சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்;

செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்;

கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்

  கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

[6]

  பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்

  பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்

  விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

  கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  

[7]

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த

  கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்

நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

  நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்

  தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்

  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  

[8]

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்

  காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை

  மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்

புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி

  பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

 [9]

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

  பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

  திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

  முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்

  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  

[10]

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

  வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்

  திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

  இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்

  ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே. 

[11]”

 என்ற சுந்தரரின் வரிகள் மூலம் நாயன்மார்களின் பிரிவு தெளிவாக முன்வைக்கப்படுகிறது.

      தில்லைவாழ் அந்தணர் என்ற அடியிலேயே திருத்தொண்டத் தொகை தொடங்குகிறது. 3000 பேர் நடராசரை தில்லையில் வழிபட்டு பூசை செய்து வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அந்தணர்கள்.

     திருநீலகண்ட நாயனார் பிச்சை எடுக்கும் திருவோடு செய்யும் வேலை செய்தவர் ஆவார். அவர் குயவர் என்பதை பெரியபுராணம் மூலம் அறிய முடிகிறது. திருவோட்டை அடிப்படையாக வைத்தே இவருடனான திருவிளையாடல் காப்பியத்துள் நடைபெறுகிறது.

      இயற்பகை நாயனார் என்று அழைக்கப்படும் ‘உலகியற் பகையார்’ உலக வாழ்க்கையை விரோதித்தவராக காட்டப்பட்டுள்ளார். காவிரி பூம்பட்டினத்தில் வாழ்ந்த வன்னியர் குலத்தவரான இவர் இறை பக்தியின் உச்சத்தில் தன் மனைவியை இறைவனுக்காகக் கொடுக்க துணிந்தவர் என்கிற செய்தி பெரியபுராணத்தில் இடம் பெற்றுள்ளது.

      இளையான்குடி மாற நாயனார் வேளாளர். இவர் சைவ அடியார்களுக்கு உணவளிக்கும் தொண்டினைச் செய்துள்ளார். வீட்டில் உணவேதும் இல்லாத சமயத்தில் பசியுடன் வந்த அடியார்களுக்கு விதைத்திருந்த முளைநெல்லை எடுத்து வந்து பயிர்க்குழி தானியங்களோடு சமைத்துப் பரிமாறிய செய்தி பெரியபுராணத்தில் உள்ளது.

      மெய்ப்பொருள் நாயனார் திருக்கோவிலூரில் உள்ள சேதி நாட்டை ஆட்சி செய்த குறுநில மன்னர். சிவனடியார் வேடமிட்டு தாக்க வந்தவர் முன் தன்னுடைய வீரத்தைக் காட்டி எதிர்நிற்காது பணிந்து சென்றவராக பெரியபுராணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

      விறல்மிண்டநாயனார் வேளாண்குலத்தைச் சார்ந்தவர். சுந்தரர் திருத்தொண்டத் தொகை எழுதி சைவ அடியார்களின் பெருமையைப் பேசுவதற்கு காரணமான இவர் இறையடியார்களுக்கு மண்டபம் கட்டியுள்ளார்.

      அமர்நீதிநாயனார் சோழநாட்டின் முக்கிய நகரமான பழையாறையைச் சார்ந்தவர். வணிக குலத்தவரான இவர் இறையடியார்களுக்கு உணவும் உடையும் வழங்கியுள்ளார். கோவணத்தை அடிப்படையாக வைத்து இவரை மையமிட்டதிருவிளையாடல் அமைகிறது.

      எறிபத்த நாயனார் மரபறியப்படாத சில நாயன்மார்களில் ஒருவர். இவரை அரசன் வணங்கிய செய்தி மட்டும் பெரியபுராணத்தில் இடம் பெற்றிருக்கிறது. 

     ஏனாதி நாத நாயனார் சோழ நாட்டின் எயினனூரைச் சார்ந்தவர். சேனாதிபதி என்பதே அப்போது “ஏனாதி” எனக் குறிக்கப்பட்டிருக்கிறது‌. சான்றார் இனத்தைச் சார்ந்த இவர் திருநீறுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார்.

      கண்ணப்ப நாயனார் நாயன்மார்களுள் காலத்தால் முந்தையவர். வேடவர் குலத்தைச் சார்ந்த திண்ணன் கண்ணப்பனாக மாறும் திருவிளையாடலை பெரியபுராணம் வழி அறியலாம். நாணன், சாடன் ஆகியோருடன் பன்றி வேட்டைக்கு சென்ற இவர் இறைவனுக்கு பன்றிக்கறி படைத்துள்ளார். இதனை இன்றைய இறைபக்தியாலான படையல் முறைக்கு சான்றாகக் கொள்ளலாம்.

     குங்கிலிக்கலைய நாயனார் சோழநாடு திருக்கடவூர் வீரட்டம் பகுதியைச் சார்ந்த அந்தணர். 

      மானக்கஞ்சாற நாயனார் சோழ நாட்டின் சேனாதிபதியாக இருந்துள்ளார். இவர் வேளாண் குடியைச் சார்ந்தவர். வேளாளர்கள் அரசப் படையில் இருந்ததை இதன் மூலம் அறிய முடிகிறது.

      அரிவட்டாய நாயனார் சோழநாட்டில் வேளாண் குலத்தில் பிறந்தவர். இவர் அடியவர்களுக்கு அமுதளித்து தொண்டு புரிந்துள்ளார். நெல்லரிசி, செங்கீரை மாவடு ஆகியன இவரது உணவில் இருந்திருக்கின்றன.

      ஆனாய நாயனார் ஆயர் குலத்தைச் சேர்ந்தவர். மழநாட்டில் வாழ்ந்த இவர் பசு, எருமை, ஆடு ஆகியவற்றை மேய்த்து பால் முதலான பொருட்களை இறைவனைக்கு அளித்துள்ளார்.

      மூர்த்தி நாயனார் திருநீரு மற்றும் ருத்ராட்சைக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர். இவர் பாண்டிய நாட்டு வணிகர்.

     முருக நாயனார் சேரநாட்டின் திருப்புகலூரைச் சார்ந்தவர். அந்தணராகிய இவர் ஆதிசைவ குலத்தில் பிறந்தவர். மாலை சாத்தும் பணியை இறைவனுக்கு இவர் செய்ததாக பெரியபுராண பாடல் கூறுகிறது.

      உருத்திர பசுபதி நாயனார் சோழ நாட்டின் திருத்தலையூரில் பிறந்த அந்தணர். 

திருநாளைப் போவார் என்று அழைக்கப்படும் நந்தனார் சைவ நாயன்மார்களும் முக்கியமானவர். சோழ நாட்டின் ஆதனூரில் வாழ்ந்த பஞ்சமராகிய இவருக்கு பெரிய புராணத்தில் தனிச்சிறப்பு இருந்துள்ளது. தோல் மற்றும் நரம்பு வேலை செய்து முரசு, பேரிகை முதலான இசைக் கருவிகளை உருவாக்கும் இவர் தில்லையில் அந்தணர் அதிகம் வாழும் பகுதியில் இருந்த நடராசரை காண்பதற்கு “நாளை நாளை” என்று நாட்களை கடத்தியதால் திருநாளைப் போவார் என்று அழைக்கப்பட்டார். கோவிலுக்குள் செல்ல அனுமதி தராது இறைவன் நந்தியை விலகச் சொல்லி கோவிலின் வெளியே நின்று நந்தனாருக்கு காட்சி கொடுத்த விந்தையை பெரியபுராணம் கூறுகிறது.

       திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தொண்டை நாட்டில் துணி வெளுக்கும் ஏகாலியர் (வண்ணார்) சாதியைச் சார்ந்தவர்.

      சண்டேசுவர நாயனார் சோழ நாட்டில் வாழ்ந்த அந்தணர் ஆவார். இவர் மணலில் பால் அபிஷேகம் செய்த தகவல் பெரியபுராணத்தில் இடம்பெற்றுள்ளது. 

      அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர் வேளாளர். இவரது இயற்பெயர் மருள்நீக்கியார். தாச மார்க்கம் கொண்டு இறைவனின் ஊழியராக செயல்பட்ட இவர் சமயக்குரவர்களில் ஒருவர்.

      குலச்சிறை நாயனார் பாண்டிய நாட்டின் அமைச்சர். இவரது சாதி மற்றும் குலம் சார்ந்த பதிவுகள் பெரிய புராணத்தில் இல்லை. எல்லா சாதியைச் சேர்ந்த சிவனடியார்களையும் காலில் விழுந்து இவர் வணங்கியிருக்கிறார். பாண்டிய மன்னனை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர் என புகழப்படுபவராக குலச்சிறை நாயனார் விளங்குகிறார்.

     பெருமிழலைக் குறும்ப நாயனார் சுந்தரரின் பக்தர். உணவும் பொருளும் அடியார்க்கு வழங்கிய இவரது சாதி மற்றும் குலம் பெரியபுராணத்தில் பதிவாகவில்லை.

      காரைக்கால் அம்மையார் காரைக்காலைச் சார்ந்த வணிகர் குலத்தவர். பெண் நாயன்மார்களுள் ஒருவரான இவரை சிவன் தாய் என அழைத்ததாக பெரியபுராணம் கூறுகிறது.

      அப்பூதியடிகள் வேளாண் குலத்தைச் சார்ந்த திருநாவுக்கரசரின் பக்தர். அந்தணர் குலத்தைச் சேர்ந்த இவர் உணவு மற்றும் நீரை திருநாவுக்கரசரின் பெயரால் மக்களுக்கும் அடியார்களுக்கும் வழங்கும் பணியைச் செய்துள்ளார் 

      திருநீல நக்க நாயனார் சோழ நாட்டு அந்தணர். பூசை செய்தல் மற்றும் அடியார்களுக்கு உணவு வழங்குதல் ஆகியன இவரது தொண்டாகும். பூசை லிங்கத்தில் மனைவியின் எச்சில் பட்டதால் மனைவியை ஒதுக்குமளவு இறைபக்தி நிறைந்தவராக இவரை பெரியபுராணம் சுட்டுகிறது.

      திருஞானசம்பந்தர் குறித்த விரிவான செய்திகள் பெரியபுராணத்தில் உள்ளது. புத்திர மார்க்கம் கொண்டு இறைவனின் மகனாக விளங்கியவர். பிள்ளை பாதி புராணம் பாதி என பெரிய புராணத்தை வழங்கும் அளவிற்கு 1256 பாடல்களில் சம்பந்தரின் வரலாறு இடம்பெற்று இருக்கிறது. திராவிட சிசு எனப்படக்கூடிய சம்பந்தர் அந்தணர் குலத்தைச் சார்ந்தவர். இருப்பினும் திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்துள்ளார் சிவிகை ஒன்றில் ஏறி சம்பந்தர் இறைத்தளங்களுக்கு சென்ற போது, நாவுக்கரசர் அவருக்கு முன்னமே நடந்து சென்றுள்ளார். 

       நமிநத்தியடிகள் சோழ நாட்டு அந்தணர். நீரால் விளக்கேற்றிய இவரது கதையில் தியாகராச பெருமாள் மலையில் எல்லா சாதியினருக்கும் காட்சியளித்த செய்தி வருகிறது.

     ஏயர் கோன் கலிக்காம நாயனார் வேளாளர் குலத்தைச் சார்ந்த சேனாதிபதி. இவர் பெருங்கலத்தில் பிறந்திருக்கிறார்.

      திருமூல நாயனார் காலத்தால் முந்தையவராக அறியப்படுகிறார். கூடு விட்டு கூடு பாயும் வித்தை தெரிந்த இவர் ஆடு மேய்க்கும் ஆயர் ஒருவர் இறந்த போது அவரது உடலில் புகுந்ததாக பெரியபுராணம் கூறுவதால் இவரை ஆயராகக் கருதலாம்.

     தண்டியடிகள் குருடர் என்ற செய்தி மட்டும் பெரியபுராணத்தில் கிடைக்கிறது. குளம் வெட்டிய இவரது சாதி தெளிவாக குறிப்பிடப்படவில்லை. 

     மூர்க்க நாயனார் திருவேற்காட்டைச் சார்ந்த வேளாளர். சூதாடி கிடைத்த செல்வம் மூலம் இறையடியார்களுக்கு உணவு அளித்துள்ளார். சூதாடியின் உணவையும் இறையடியார்கள் ஏற்றுக் கொண்டது இதன் மூலம் தெரிய வருகிறது.

      சோமாசி மறை நாயனார் சோழநாட்டு வேதிய குலத்தைச் சார்ந்த அந்தணர். உணவளித்தளும் யாகம் செய்தலும் இவரது பணியாகும்.

       சாக்கியர் சங்கமங்கையைச் சார்ந்த வேளாளர். லிங்க தரிசனத்திற்குப் பின் உணவு உண்ணும் வழக்கத்தைக் கடைப்பிடித்துள்ளார்.

     சீறப்புலி நாயனார் மறையவர் குலத்து அந்தணர். அடியார்க்கு உணவும் பொருளும் வழங்குவதோடு வேள்வியும் செய்ததாக பெரியபுராணம் இவரைக் குறித்து கூறுகிறது.

       சிறுதொண்டர் சோழ நாட்டின் மந்திரிகளாக விளங்கிய மாமத்திர குல அந்தணர். இவர் வீரர்களுக்கு படைப்பயிற்சி மற்றும் குதிரையேற்ற பயிற்சியை அளித்திருக்கிறார். 

      சேரமான் பெருமாள் நாயனாருடைய மரபு அறியப்படவில்லை. சேரமன்னர் துறவு போன பின்பு ஆட்சிக்கட்டிலில் ஏறிய செய்தி மட்டும் பெரிய புராணத்தின் வழி கிடைக்கிறது. அரசராக மாறிய செய்தி கிடைப்பதால் அக்காலத்தில் உயர்ந்த நிலையில் இருந்த ஏதேனும் ஓர் சாதியைச் சேர்ந்தவராக இவர் இருக்கலாம்.

      கணநாத நாயனார் சீர்காழியைச் சார்ந்த அந்தணர். சம்பந்தர் பக்தரான இவர் தாவரங்களை ஆராய்ச்சி செய்திருக்கிறார். மலர் மூலம் இறைவனை பூசை செய்யும் தொண்டினை செய்தவராக பெரிய புராணம் இவரைப் பற்றி கூறுகிறது.

      கூற்றுவ நாயனார் அரசகுலத்தைச் சார்ந்தவர்.

      புகழ்ச்சோழ நாயனார் உறையூரை ஆட்சி செய்த மன்னர். அடியார்க்கு உதவி செய்வதையே தன்னுடைய முதல் பணியாக கொண்டிருந்துள்ளார்.

      நரசிங்க முனைய அரைய நாயனார் திருமுனைப் பாடியைச் சார்ந்த குறுநில மன்னர். பாரி மகளிரை மணந்த இவர் போர் வீரன் மரபில் இருந்து வந்தவர். ஆடை மற்றும் உணவு கொடுத்து அடியார்களை ஆதரித்த செய்தி பெரியபுராணம் வழி கிடைக்கிறது. 

       அதிபத்த நாயனார் வணிகர் குலத்தைச் சார்ந்தவர். சிவனடியார்க்கு உணவும் பொருளும் வழங்கும் இயல்புடையவராக பெரியபுராணத்தில் காட்டப்பட்டுள்ளார்.

      கலிக்கம்ப நாயனார் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர். சிவனடியார்களுக்கு உணவும் பொருளும் வழங்கும் இயல்புடையவர்.

     கலியநாயனார் தொண்டை நாட்டின் திருவொற்றியூரில் வணிகர் குலத்தில் பிறந்தவர். எண்ணெய் விற்பனை செய்தவாரான இவர் விளக்கேற்றி பூசை செய்துள்ளார். எண்ணெய் தீர்ந்த பின் உதிரத்தால் விளக்கேற்றியவர் எ‌ன பெரியபுராணம் இவரைக் குறித்துச் சொல்கிறது.    

      சத்தியநாயனார் சோழ நாட்டு வணிக குலத்தில் பிறந்தவர்.

     ஐயடிகள் காடவர்கோன் பல்லவ நாட்டைச் சேர்ந்த குறுநில மன்னர்.

     கணம்புல்ல நாயனார் வேரூர் நாட்டாண்மை என்கிற செய்தி மட்டுமே பெரியபுராணத்தில் கிடைக்கிறது.

      காரி நாயனார் திருக்கடவூரைச் சேர்ந்தவர். தமிழ்ப்புலமை பெற்ற இவரது சாதி குறித்த பதிவுகள் பெரியபுராணத்தில் இல்லை.

     நின்றசீர் நெடுமாறன் பாண்டிய மன்னர் ஆவார். சமணத்திலிருந்து சைவத்திற்கு அப்பர் மூலம் மாறியவர். இவரைப் பற்றிய திருவிளையாடல் கதை இலக்கியச் சுவை நிறைந்தது.

     வாயிலார் நாயனார் வேளாண் மரபைச் சேர்ந்தவர்.

     முனையடுவார் நாயனார் வேளாண் மரபினர். மலையமான் திருமுடிக்காரி என்ப்படும் இவர் சிறந்த வீரராகவும் வள்ளல் தன்மை உடையவராகவும் இருந்துள்ளார்.

     கழற்சிங்க நாயனார் குறுநில பல்லவ மன்னர்.

     இடங்கழி நாயனார் கொடும்பாளூர் வேளிர் குலத்தைச் சேர்ந்த அரசர் என பெரியபுராணம் கூறுகிறது.

     செருத்துணை நாயனார் சோழ நாட்டில் வேளாண் குடியைச் சார்ந்தவர். 

     புகழ்த்துணை நாயனார் செருவில்லிப்புத்தூர் சிவமறையோர் குலத்து ஆதிசைவர்.

     கோட்புலி நாயனார் வேளாண் குடியைச் சார்ந்தவர்.

     பூசலார் நாயனார் தொண்டை மண்டலத்தைச் சார்ந்த அந்தணர்.

     மங்கையர்க்கரசியார் பாண்டிய அரசி. பெண் நாயனார்களில் ஒருவரான இவர் நின்றசீர் நெடுமாறனின் மனைவி.

      நேசநாயனார் நெசவுத் தொழில் செய்யும் சாலியர் ஆவார். அடியார்களுக்கு கோவணம் அளித்து தனது இறைத்தொண்டை செய்துள்ளார்.

     கோச்செங்கட் சோழ நாயனார் சோழர் குல அரசர்.

     திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர் குலத்தைச் சார்ந்தவர். கோயிலுக்கு வெளியே நின்று யாழிசைத்து இறைவனைப் பாடிய இவர் சம்பந்தரின் நண்பர் ஆவார்.

     சடைய நாயனார் சுந்தரரின் தந்தை ஆவார். ஆதிசைவகுல அந்தணராகிய இவரது குடும்பமே நாயன்மார் குடும்பம் ஆகும். இவரது மனைவி இசைஞானியார், மகன் சுந்தரர் ஆகியோர் நாயன்மார்கள். சுந்தரர் சகமார்க்கம் வழியாக இறைவனை அடைந்தவர். சுந்தரரின் மூலமாகவே சடையநாயனார் மற்றும் இசைஞானியார் நாயன்மார்கள் வரிசையில் வந்தனர் எனலாம். பெரியபுராணத்தின் பாட்டுடைத் தலைவரான சுந்தரர் அகமண முறையிலிருந்து விலகி கணிகையர் குலத்து பரவையாரையும் வேளாள மரபில் வந்த சங்கிலியாரையும் மணந்தார். இது தவிர்த்து வேளாண் குடியைச் சார்ந்த கோட்புலியார் வனப்பகை, சிங்கடி என்ற தன்னுடைய இரு பெண்களை சுந்தருக்கு மணம் முடிப்பதற்காக வளர்த்த செய்தி காணக்கிடைக்கின்றன.

      நாயன்மார்களைத் தவிர்த்து தொகையடியார்கள் மற்றும் மனுநீதிச் சோழன் குறித்த செய்திகள் பெரியபுராணத்தில் இடம்பெறுகிறது. முப்போதும் திருமேனி தீண்டுவார் என்கிற தொகையடியாரைத் தவிர்த்த பிற தொகையடியார்களின் சாதி குறித்த தகவல்கள் பெரிய புராணத்தில் இல்லை. அந்தணருக்கு அடுத்து குயவர், வணிகர், வேளாளர், அரசர் என பிற சாதியைச் சேர்ந்தவர்களையும் ஒரே காப்பியத்திற்குள் சேக்கிழார் பாடியுள்ளார். பெரியபுராணத்தில் இடம்பெறும் சாதியைச் சுற்றியுள்ள பண்பாட்டை விரிவாகப் பேசாமல் சாதி குறித்த பதிவுகளைத் தெரியப்படுத்துவதாக மட்டுமே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மேலும், சோழர், சேரர், பாண்டியர், பல்லவர் என நாட்டை குறித்த தகவல்களும் இக்கட்டுரையில் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பண்பாட்டை ஊரோடு இணைத்துப் பார்க்கும் மானிடவியல் போக்கின் அடிப்படையில் நாடு குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

துணைநின்றவை:

  • நாயன்மார் கதை பகுதி 1,2,3,4, கி.வா.ஜகந்நாதன், 1962, அமுத நிலையம்.
  • பெரியபுராண விளக்கம் பகுதி-1, கி.வா.ஜகந்நாதன், 1987, அமுத நிலையம்.
  • சாதியும் சமயமும் -சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக்குருக்கள், C.K. சுப்பிரமணிய முதலியார், 1950, வேதாகம சைவ சித்தாந்த சபை.
  • பண்பாட்டு மானிடவியல், பக்தவத்சலபாரதி, 2019, அடையாளம் பதிப்பகம்.
  • தமிழர் உணவு, பக்தவத்சலபாரதி (தொகுப்பாசிரியர்), 2021, காலச்சுவடு பதிப்பகம்.
  • இந்தியாவில் சாதிகள், அம்பேத்கர், எதிர் வெளியீடு.
  • தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல்: அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு, எஸ். ஜெயசீல ஸ்டீபன் (தமிழில்: கி.இளங்கோவன், புதுவை சீனு.தமிழ்மணி), அக்டோபர் 2023, NCBH பதிப்பகம்.
  • பெரியபுராண ஆய்வு மாலை, 2001 நவம்பர், பெரியபுராண இலக்கிய ஆய்வு மாநாடு, குமாரசுவாமித் திருமடம், வாரணாசி.

  • Shaivam.org

     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)