சிறிய பக்கங்களின் மாபெரும் சூதாட்டம்

 சிறிய பக்கங்களின் மாபெரும் சூதாட்டம் -அழகுராஜ்


      சுரேஷ்குமார இந்திரஜித் 1982 முதல் 2005 வரை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு மாபெரும் சூதாட்டம். இதில் மொத்தம் 39 கதைகள் இடம்பெற்றுள்ளன. இதன் தொகுப்பாக்கம் இறங்குவரிசை முறையில் அமைந்து கதைகளுக்கு வலுசேர்க்கிறது. இந்த சிறுகதை தொகுப்புக்குள் 1982ல் வெளிவந்த “அலையும் சிறகுகள்" சிறுகதை தொகுப்பும் 1993இல் வெளியான “மறைந்து திரியும் கிழவன்" தொகுப்பும் அடக்கம். எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் சுரேஷ்குமார இந்திரஜித் எழுதியுள்ள 25 கதைகளை “பின்நவீனத்துவவாதியின் மனைவி" என்ற நூலாக தொகுத்துள்ளார். அதில் மொத்தம் 25 கதைகள் இடம் பெற்றுள்ளது. அதில் 16 கதைகள் மாபெரும் சூதாட்டம் தொகுப்பில் இல்லாத கதைகள் ஆகும். அந்த கதைகளையும் மாபெரும் சூதாட்டம் தொகுப்பையும் சேர்த்து சுரேஷ்குமார இந்திரஜித்தின் 55 கதைகளை குறித்ததாக இக்கட்டுரை அமைகிறது .

      சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் காட்சிகளை சிக்கனமான சொற்களைக் கொண்டு கையாண்டிருக்கும் தன்மை கதைக்குள் தொய்வின்றி செல்வதற்கும் வாசிப்பதற்கும் ஏதுவாக உள்ளது. அசோகமித்திரனின் “மணல்" குறுநாவலில் சரோஜினியின் தாய் இறக்கும்போது குடும்பம் சிதைபடுகிறது. அவள் தான் குடும்பத்திற்கு பாலமாக இருந்திருக்கிறாள் என்கிற உண்மை அப்போதுதான் அனைவர் மனதிலும் வெளிப்படும். இதே நிலைதான் சுரேஷ்குமார இந்திரஜித்தின் அப்பத்தா சிறுகதையிலும் அமைகிறது. பெண்களின் இருப்பு குடும்ப கட்டமைப்புகளுக்குள் செலுத்தும் அதிகப்படியான உரிமையையும் ஆதிக்கத்தையும் கட்டமைப்பு குலையாமல் காக்கும் காவல் நேர்மையையும் பேசும் வகைப்பட்டதாக இக்கதையின் முக்கிய பகுதிகள் இருக்கிறது. பிரம்மாண்டம், மரங்கள், உயிருள்ள பிணம், விரித்த கூந்தல் ஆகிய கதைகளின் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆழ்ந்த கவித்துவத்தின் சொட்டுகள் வடிய குறுங்கதைகளாகவே தேங்கி நின்று அழகான காட்சி அமைப்பை காட்டுகிறது. இத்தகைய தேக்க நிறுத்த நிலையுடனான கற்பனை கலைஞனுக்கு அவசியம் என்பதற்கு இந்த கதைகளை சிறந்த உதாரணம் எனக் கொள்ளலாம்.


   கனவுகளும் உள் மன ஓட்டமும் சில கதைகளில் முக்கிய இடம் பெறுகின்றது. இதில் இரு வகை கனவுகளை அல்லது கனவு வெளிப்பாட்டு முறைகளை இனம் காண்பதற்கான வெளியே இந்த கதைகள் திறந்து வைத்திருக்கிறது. முதலாவது கனவு பிரதேசத்தின் வழியான பிரவேசங்கள், இரண்டாவது முரண்களும் பொய்யும் கலந்த கற்பனை வளம் மிக்க புனைவுகளான கனவு காட்சிகளால் உருவானவை என இரண்டு நிலைகளில் கூறலாம். காலத்தின் அலமாரி, கமூரி ரிடாகாவின் பேட்டி, எலும்புக்கூடுகள், சந்திப்பு ஆகிய நான்கு கதைகளும் கனவு பிரதேச அடிக்கட்டுமானத்தின் கீழ் மேலெழும்பி நிற்பவை. யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் நாவலில் வரும் ஸொமிட்ஸியா போல இந்த நான்கு கதைகளிலும் சமுரியா, கரேஷியா, மரேலியா என்ற மூன்று பிரதேசங்கள் வருகிறது. கனவின் வழியே ஒரு தேசத்தினை கட்டமைப்பதும் அதனைப் பற்றி சிந்திப்பதும் சுவாரஸ்யம் கூடியவை. இங்கு தேசம் என்பது அங்கு வாழும் மக்கள் அவர்களது பழக்க வழக்கம் நிலப்பரப்பின் தன்மை முதலிய அனைத்தையும் உள்ளடக்கியதாக எண்ணத்தக்கது. அந்த எண்ணத்தின் வழியே இந்த நான்கு கதைகளையும் நாம் அணுகி பயணித்தால் சிறந்த வாசிப்பனுபவம் பெறலாம்.


    பறக்கும் திருடனுக்குள், திருமண வரவேற்பு, தொடர்பு, ஒரு இடத்திற்குப் பல வரைபடங்கள் ஒரு காலத்திற்குப் பல சரித்திரங்கள், மறைந்து திரியும் கிழவன், நள்ளிரவில் சூரியன் ஆகிய கதைகளில் உள் மனத்தின் நினைவுகள் கனவுகளோடு கலந்து நிற்கிறது. கனவுகள் உருவாகுவதும் கனவுகள் கலைந்த பிறகான யதார்த்தமும் இந்த கதைகளின் திருப்பங்களாகின்றது. ரகசியங்களையும் ரகசியமாகச் செய்யும் செயல்களையும் உண்மை மாறாத யதார்த்தத்துடன் நுண்மையாக பதிவு செய்துள்ளார் சுரேஷ்குமார இந்திரஜித். தனித்து பார்க்க வேண்டிய பெரும் உள்ளடக்கம் கொண்ட விவரணைகளுக்கு இடம் தரக்கூடிய பகுதிகளை ஒற்றை வாக்கியத்தில் சரியாக கடத்துவது சிந்தனையைத் தூண்டுகிறது. சுழலும் மின்விசிறி கதையில் வேலைக்காரப் பெண் மின்விசிறியின் சாவியை அணைத்தோமா என யோசிப்பதும் தனது ரகசியத்தின் நடவடிக்கைகள் அம்பலப்பட்டு விடுமோ என்பதன் விளைவாகவே குமுறுகிறது. இடப்பக்க மூக்குத்தி கதையில் வரும் புகைப்படம் ஏதோ ஒரு ரகசிய வார்த்தையை முணுமுணுக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சித்தரிப்பு அந்த கதையை சுவாரஸ்யத்திற்கும் உள்ளானதாக்குகிறது. அம்மையப்பன, தம்பிரான், உறங்காப்புலி, சின்னயானை, லூயி பெர்டினான்டு, சௌதாயினி, இந்திரஜித், சந்திராஜித், சந்திரசூடன், ப்ரெடரிக் ஜான்சன், ஆல்பிரட் சின்னதுரை, ராபின்சன் போன்ற பெயர்கள் கதையின் மீதான ஆர்வத்தை உண்டுபண்ணுகிறது. இந்த ஆர்வத்தின் கிடக்கை புதிய செய்திகள் என்ன சொல்லப் போகிறார் என்கிற பெருத்த எதிர்பார்ப்பை கதையின் மீது ஏற்படுத்துகிறது. இந்த செயல்பாட்டை கதையில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களைக் கொண்டு நிகழ்த்தும் ரசாயன மாற்றத்தின் தாக்கம் என்று வரையறுக்கலாம். 


     குழந்தைகள் எந்த அளவிற்கு பிரியத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்களோ அதே அளவிற்கு அல்லது அதற்கும் சற்று கூடுதலாக அச்சுறுத்தல் தருபவர்களாக மாறுகிறதை காட்டும் கதைகளாக சில இருக்கின்றன.  உறவு, திரை, ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பெண், கால்பந்தும் அவளும் முதலியன குழந்தையை அச்சுறுத்துதலாக காட்டும் கதைகளாக இருக்கிறது‌ இதன் நடுவில் சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் என்ற கதை மட்டும் ஒரு குழந்தை கதையாக மிளிர்வதையும் நாம் தனித்து பார்க்க வேண்டும்.




      பறக்கும் திருடனுக்குள் பின் நவீனத்துவவாதியின் மனைவி ஆகிய இரண்டு கதைகளும் பகடி முயற்சிக்கான கதைகளாக இருக்கிறது‌. குண்டாஸ் முதலான தண்டனைகள் ஏற்படுத்தும் அதிர்வை செடிகளும் வர்ண பூக்களும் கதையில் காண முடிகிறது. மறைந்து திரியும் கிழவன் கதையில் பழுக்க காய்ச்சிய கம்பியில் குத்துவது சொல்லப்படுகிறது. இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தில் வட்டிக்கு கொடுக்கக் கூடிய ஒருவர் தான் வட்டிக்கு கொடுத்த பணத்தை சரியாக செலுத்தாதவர்களை இதே மாதிரியான தண்டனையின் மூலம் அச்சுறுத்துவார். சந்திப்பு கதையை பொருத்தவரை அதில் வரும் முக்கியமான நிகழ்வு வயிற்றை எலியை விட்டு கடிக்க வைப்பதாகும். இது ஒரு தண்டனை நடவடிக்கை. காலத்தின் அலமாரி கதை சதி வழக்கத்தின் மற்றொரு வடிவமாக பெட்டியை வைத்து முழு உரு கொள்கிறது.


       கூந்தல் என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு புனைவாக பெருத்த கதையாடலை காலம் தோறும் கவனம் கோரும் விதத்தில் நிகழ்த்தி வருகிறது சுரேஷ்குமார் இந்திரஜித் கதைகளும் அதற்கான தொன்மம் கலந்த நவீன வடிவாக நிற்கிறது. அப்பத்தா கதையில் முதல் மருமகன் கிளர்ச்சி அடைவது கூந்தலின் மூலம் தான் விரிந்த கூந்தலானது திரௌபதியின் கூந்தலுக்கு நிகராக கதைக்குள் இருந்து பரிணமிக்கிறது. கூந்தலைப் போன்றே சிரிப்பையும் புன்னகையையும் புன்முறுவலையும் மாற்றி மாற்றி சுரேஷ்குமார் இந்திரஜித் தனது கதைகளின் மூலம் காட்டியுள்ளார். யோசனைகளின் ஆழ நிலையை சுழலும் மின்விசிறி கதை மூலம் அண்ணாந்து பார்க்க முடிகிறது. பீகாரும் ஜாக்குலினும் கதையை இந்தியாவை முதன்மையாகக் கொண்ட புனைவு உரையாடலாக வாசிக்க முடியும். வரலாற்று நாட்குறிப்புகளை தாங்கியதாக ஒரு இடத்திற்கு பல வரைபடங்கள் ஒரு காலத்திற்கு பல சரித்திரங்கள் கதை காணப்படுகிறது. இந்த கதையில் ஈழம் சார்ந்த குறியீடுகள் அதிகம் காணப்படுவது வரலாற்றின் பக்கங்களை நினைவாக்கும் சாதனமாகும். மறைந்து திரியும் கிழவன் கதை வெள்ளையனே வெளியேறு, யுவபாரத் இயக்கம் போன்ற தேசிய விடுதலை இயக்க பின்னணியுடன் கூடிய கதை கூறல் முறைக்குள் சில வித்தியாச பாணியை கொண்டதாக அமைந்துள்ளது. அறிக்கை கதை தொழிலாளர் போராட்டத்தை முன்னிறுத்துகிறது இப்படியான கதைகள் அனைத்தும் குறிக்கப்பட்ட தரவுகளையும் புனைவுகளையும் வைத்து ஏதோ ஒரு உண்மையை எடுத்துரைப்பதாகவே இருக்கிறது. இத்தனை தகவல்களை வித்தியாசமான பாணி முறைக்குள் தனித்து நிகழ்த்தும் வித்தையை இந்திரஜித் நிகழ்த்தி இருக்கிறார்.


திரை, உறவு, இருள், நடனமங்கை, சந்திக்கும் இரு உலகங்கள், அந்த முகம், கடந்து கொண்டிருக்கும் தொலைவு, ஆங்கிலப் புத்தகம் வாசிக்கும் பெண், கணவன் மனைவி, அப்பத்தா, அவரவர் வழி, பயணம் உள்ளிட்ட கதைகள் உறவு முறைக்குள்ளும் உறவு நிலைகளுக்குள்ளும் இருக்கும் சிக்கலை ஒவ்வொரு புள்ளிகளாக தொட்டுச் செல்கிறது. இத்தகைய சிக்கல்களை கூறுபவர் திருமணத்தைக் குறித்து சொல்லவும் திருமணம் மூலம் நிகழும் உறவு நிலைகளை சொல்லவும் தவறவில்லை. கனவு, ஒரு திருமணம் முதலானவை அத்தகைய கதைகள். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் திருமண கோலத்தில் மணமேடையில் கண்ணனுக்காக உட்கார்ந்திருக்கும் காட்சியின் சுவைக்கு நவீன வடிவமாக ஒரு திருமணம் கதை இருக்கிறது.      


      தேடிச் செல்லும்போது தவறிச் செல்வது இயல்பானதாக நடக்கும் எஸ் ராமகிருஷ்ணன் தனது கதா விலாசம் நூலில் தாலிக்கு தங்கம் வாங்க வந்த ஒரு பெண்ணை குறித்து கூறியிருப்பார் அப்படியான தவறிச் செல்களை பிம்பங்கள் கதையில் சுரேஷ்குமார் இந்திரஜித் காட்டி இருக்கிறார் காத்திருந்தவள் கதையில் உள்ள மொழி திறக்க வைக்க கூடியதாக எனக்கு இருந்தது. ரமேஷ் பிரேதனின் அருகன் மேடு நாவலை நினைவுபடுத்துவதும் அதனை வாசித்த பொழுதுகளின் நினைவுகளை தூண்டுவதாகவும் கடல்சார்ந்த இக்கதையின் விவரித்து பறக்கும் மொழி அலையோடுவதை உணர முடிந்தது. அறிக்கை கதை தொழிலாளர் போராட்டம், தந்தையின் கொலை, ஊதிய உயர்வு, சின்ன முதலாளியின் ஹீரோயிசம் என சினிமாவிற்குரிய வேகமும் விறுவிறுப்பும் கூடியதாக காணப்படுகிறது. இப்படியாக சுரேஷ்குமார் இந்திரஜித் கதைகளில் பெரும்பாலும் துரத்தி வரக்கூடிய அல்லது ஒரு மாறிலியாக டீக்கடைகளும் சிகரெட்டுகளும் சிகரெட்டுகள் விற்கப்படும் டீக்கடைகளும் தொடர்ந்தவாறு இருக்கின்றன. வெற்றி தோல்வி குறித்த சிந்தையற்ற ஆட்டமாக காதலையும் கணவன் மனைவி வெற்றியடைய வேண்டும் என்கிற நோக்கில் ஆடும் ஆட்டமாக திருமணத்தையும் மற்றவர்களுடைய சீட்டை பார்த்து அதற்கேற்ப ஆட வேண்டும் நம் சீட்டை யாரும் பார்க்க கூடாது என்கிற ஆட்டமாக குடும்பத்தையும் மாபெரும் சூதாட்டம் நமக்கு காட்டுகிறது. “எந்தப்போக்கும் வாழ்வினுடைய காலத்தினுடைய சூதாட்டங்களினால் கணிப்பிற்குட்படுவதில்லை. நடந்த காரியத்தின் காரணங்களை ஆராய்ந்து அடுக்குவது சுலபம். வலுவான காரணங்கள் இருக்க, அவற்றிற்கான காரியங்கள் ஏன் நடக்கவில்லை என்பதை அறிய முடியாது நடந்ததை நடக்க விதிக்கப்பட்டதாக நினைத்து ஏற்றுக் கொள்ள சூதாட்டம் வெற்றிகரமாக ஆட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது."


(சுதந்திரச் சிந்தனையின்47வது நிகழ்வில்(05.02.2023) பேசிய உரை)

-அழகுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கூதிர் மின்னிதழ்

முன்னோடியின் துணிவு -அழகுராஜ்