முன்னோடியின் துணிவு -அழகுராஜ்

 முன்னோடியின் துணிவு - அழகுராஜ்


பஞ்சும் பசியும் -தொ.மு.சி ரகுநாதன்





       இந்த வருடத்தை இலக்கிய வருடம் என்றும் இலக்கிய கொண்டாட்டங்களும் கலந்துரையாடல்களும் விரிந்த வாசிப்பின் வழியே புதிய பல தகவல்களை பழைய பனுவல்கள் மற்றும் நிகழ்வுகள் வாயிலாக அறியும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கக்கூடிய வருடம் என்றும் எடுத்துக் கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. வைக்கம் நூற்றாண்டு, சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் நூற்றாண்டு, எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், அழ. வள்ளியப்பா நூற்றாண்டு, வள்ளலார் 200 போன்றவற்றோடு ரகுநாதன் நூற்றாண்டும் நிறைவுபெறுகிறது. இதில் அதிகம் கலந்துரையாடல்கள் மூலம் பேசப்படாதவை சேரன்மாதேவி குருகுல போராட்டமும் ரகுநாதனும் என்பது என் கருத்து. பேசப்படும் பிற எழுத்தாளர்களின் படைப்புகளும் சிந்தனையும் நேர்திசையில் கடத்தப்படுகிறதா? என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.


       “பஞ்சும் பசியும்" நாவல் வழி ரகுநாதனின் படைப்பிலக்கிய மேதமையைப் பேசுவது தான் இந்த கட்டுரை இப்போது எழுதப்படுவதன் நோக்கமாக இருக்கிறது. ரகுநாதன் தமிழ் இலக்கியத்திற்கு செய்த மிக முக்கியமான பங்களிப்பு என்பது அவர் செய்த முன்னோட்ட முயற்சிகளே. விமர்சனத்துறை, யதார்த்தவாத எழுத்துருவாக்கம், புதுமைப்பித்தன் மீதான விமர்சனங்களுக்கு ஆய்வு ரீதியாக மறுப்பு தெரிவித்தமை, பாரதி பற்றிய விரிவான ஆய்வுகள், கையெழுத்து இதழ் நடத்தியது, பல்வேறு இதழ்களில் தொடர் பங்களிப்புகளை நல்கியமை, பொதுவுடமை இயக்க செயல்பாடு, போராட்டங்களில் ஈடுபாடு, மொழிபெயர்ப்பு, திருச்சிற்றம்பலக்காரன் என்ற பெயரில் கவிதைகள் எழுதியமை, சிறுகதையாளர், நாவலாசிரியர், ஆய்வாளர், பேச்சாளர் என்று தொடர்ந்து செயல்பட்டவர் ரகுநாதன். இது அவருடைய பன்முக ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியதாக அமைகிறது. “தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி என ரகுநாதனைச் (1923-2001) சொல்லலாம். சோஷலிச யதார்த்தவாதம் என்று அழைக்கப்படும் இலக்கிய முறையில் முதல்கட்ட ஆக்கங்களை அவரே உருவாக்கினார்." என ஜெயமோகன் கூறுகிறார். அதேசமயம் ரகுநாதன், கு.அழகிரிசாமி முதலானவர்களுக்கு இருந்த மரபிலக்கிய புலைமையும் ஆர்வமும் கவனிக்கத்தக்க ஒன்று. மாக்சீம் கார்க்கியை மொழிபெயர்த்தவர் கலித்துறை அந்தாதி, இளங்கோவடிகள் யார் முதலான நூல்களையும் எழுதியுள்ளார் என்பதை இன்று பலர் மறந்துவிட்டனர்.


      பாரதியார் மற்றும் புதுமைப்பித்தனின் இலக்கிய தொடர்ச்சியாகவும் அவர்கள் இருவரைப் பற்றிய உண்மைகளை ஆய்வு ரீதியாக முதலில் உலகுக்கு தெரியப்படுத்தியவராகவும் ரகுநாதன் இருக்கிறார். ரகுநாதன் எழுதிய அனைத்து நூல்களிலும் பாரதியைப் பற்றிய குறிப்புகள் இருப்பதை வைத்து பாரதியியல் ஆய்வில் அவர் இருக்கும் இடத்தை நாம் அறிய முடியும். அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும், இலக்கிய விமர்சனம், கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்) பாஞ்சாலி சபதம் உறைபொருளும் மறைபொருளும், பாரதியும் ஷெல்லியும், பாரதி சில பார்வைகள், பாரதி காலமும் கருத்தும் என்ற நூல்கள் தகுந்த சான்றுகளாக இருக்கின்றன. வ.ரா, ரா.அ.பத்மநாபன், பெ.தூரன் வரிசையில் நிற்கக்கூடியவர் ரகுநாதன். மேலும் அவருக்குப் பின் எழுத வந்த எழுத்தாளர்களின் முன்னோடி வழிகாட்டியாகவும் பல இடங்களில் ரகுநாதன். போதிய அளவு இலக்கியத் தொடர்பும் பின்னணியும் கொண்டவராக காணப்படினும் எல்லாவற்றையும் துறந்து விட்டு ரகுநாதன் என்ற பெயரை மட்டுமே தனது அடையாளமாக்க வேட்கை கொண்டு சமரசமின்றி இலக்கியச் செயல்பாடுகள் வழிநின்றதால் இன்றளவும் தவிர்க்க முடியாத ஆளுமையாக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். தொண்டைமான் முத்தையா சிதம்பர ரகுநாதனின் குடும்பம் கல்வி சார்ந்த குடும்பம் என்பதை அவருடைய தாத்தா, தந்தை மற்றும் அண்ணன் ஆகியோரை வைத்து நாம் இனம் காண முடிகிறது. பின்னணி இருப்பினும் தனித்து சமரசமின்றி இலக்கியத்திற்காக சமரிட்டு நின்றவர் ரகுநாதன் என்பதை இதழ்களில் வெளியான அவரது கட்டுரைகள் வாயிலாக காணலாம். ‘ஆன்மாவை விலை பேசாத அபூர்வ எழுத்தாளருள் ஒருவர் ரகுநாதன். அவரிடம் ஆணவமுண்டு. ஆனால் அது அரை வேக்காட்டு இலக்கிய அறிவிலோ எழுத்துத் திறனிலோ பிறந்ததல்ல. அது பழுத்துக் கனிந்த தமிழ்ப் பண்பாட்டிலும் தன்மானத்திலும், நாட்டுப் பற்றிலும் மக்கட் பற்றிலும் பிறந்த ஆணவம். ஒவ்வொரு எழுத்தாளனிடமும் இருக்க வேண்டிய தூய முனைப்பு. ரகுநாதனின் ஆணவத்தை இலக்கிய ஆண்மை என்றே கூற வேண்டும். இந்த ஆண்மையை அவருக்கு அளித்த மாபெரும் குற்றவாளிகள் - கம்பனும் பாரதியும் புதுமைப்பித்தனுமேயாவர்...’ என்ற தி.க.சியின் கருத்து இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கத்தக்கது.


      நாவல் பற்றிய பின்னணி, கதையில் உள்ள கதாபாத்திரங்களின் தனித்தன்மை வாயிலாக பெண்ணியம், இருத்தலியம், யதார்த்தவாதம், மார்க்சியம், மனவியல், வரலாறு முதலிய களங்களை இலக்கிய ஓட்ட அடிப்படையில் சுட்டிக்காட்டுதல், கதை நிகழ்ந்த களத்தின் அமைப்பு மற்றும் வட்டார சொற்களுடனான மொழி ஆகிய மூன்று நிலைகளில் இக்கட்டுரை அமைகிறது.


      (1939-)1941 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் உலகம் முழுவதும் சராசரி நிலை குழம்பிப் போனது. கிராமத்தில் கூட மாற்றம் ஏற்படும் அளவிற்கான தாக்கத்தை போர் ஏற்படுத்தும் என்பதை எக்காளமிடக்கூடிய நிகழ்வும் தமிழகத்தில் அப்போதுதான் அரங்கேறியது. ஒரு மனிதனிடம் ஏதோ ஒரு சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தும் போது அது மறக்க முடியாத அல்லது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக மாறுகிறது. அப்படியான ஒரு நிகழ்வின் விளைச்சலில் நன்மையும் தீமையும் சேர்ந்தே இருக்கின்றன. “இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மேற்கு நாடுகளால் செல்வாக்குடன் எழுந்த இரண்டு சிந்தனைப் போக்குகள் இருத்தலியமும் அமைப்பியலும்" என்ற வாசகத்தில் உள்ள உண்மையை அன்றைக்கு இருந்த காலனியத்துவ இந்தியாவுடன் பொருத்திப் பார்க்க முடியும். பிரிட்டிஷ் காலனிய நாடாக இருக்கும் இந்தியாவிற்கும் பிரிட்டிஷ் நேரடியாக போரில் ஈடுபட்டதன் விளைவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இலக்கியங்களும் மாற்றத்தை நோக்கி நகரத் தொடங்கிய காலம் அது. தொடர்ந்து மனம் சார்ந்த எழுத்துக்களை நாவல்களாக எழுதிக் கொண்டிருந்த ரகுநாதன் யதார்த்தவாத அமைப்பியலை பேசும் நாவலை போர் நிகழ்ந்து பத்து வருடங்களுக்குப் பின்பு வெளியிடுகிறார். அந்தப் பத்து வருடங்களும் அவருடைய சிந்தனை முழுவதும் அந்த நாவல் பற்றியதாகவே இருந்தது என்கிற கருத்தினை “ஆசிரியரைச் சந்திப்போம்" என்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளதாக பேராசிரியர் தோதாத்ரி குறிப்பிடுகிறார். “நாவல் பிறக்கிறது" என்ற கட்டுரையிலும் ரகுநாதன் “10 ஆண்டுகளுக்கு முன் நடந்த போராட்டம் பற்றியது இந்த நாவல்" என்கிறார்.


“பல்லாண்டு காலம் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பிறவிப் பேற்றைக் காணாமல் மோனச் சிறையில் தவம் கிடந்ததுண்டு, கன்னிக் கோழியின் வயிற்றுக்குள்ளேயுள்ள கருக்குலையைப் போல் என் உள்ளத்திலேயே கதாபாத்திரங்களும், சம்பவங்களும் என்றோ எப்போதோ கருப்பிடித்து உறங்கும்; வளர்ந்துகொண்டிருக்கும். ஆனால், எந்த நேரத்தில் எந்தக் கரு பூரண வளர்ச்சிபெற்று வெளியுலகத்தைப் பார்க்கும் என்பது எனக்கே தெரியாது. சமயங்களில் சின்னக்கருவே பெரிய கருக்களை முந்திக்கொண்டு வளர்ந்துவிடும்" பஞ்சும் பசியும் நாவலின் பின்னுரையில் இடம் பெற்றிருக்கக்கூடிய இக்கருத்தின் படி ஒரு யதார்த்தவாத நாவலை பெரியக் கருவாக அவர் உருவாக்க முயற்சித்தது தான் பத்தாண்டு கால இடைவெளி என்று நாம் கருதிக் கொள்ள முடிகிறது. கீற்று இதழில் பேராசிரியர் தோதாத்ரி எழுதி இருக்கக் கூடிய கட்டுரையில் இதனை தாய் நாவலை ரகுநாதன் மொழிபெயர்த்ததோடு ஒப்பிட்டு அவருக்கு இருந்த முற்போக்கு இலக்கிய வடிவம் மீதான ஆர்வத்தை குறிப்பிடுகிறார். அதிலும் உண்மை இருக்கிறது.‌ மாக்சீம் கார்க்கியின் நாவல்கள் மட்டுமன்றி சந்திப்பு முதலான சிறுகதைகளையும் ரகுநாதன் மொழிபெயர்த்துள்ளார். ஆரம்பத்தில் பொதுவுடமை இயக்க செயல்பாட்டில் தீவிரமாக இருந்தவர், பிற்காலத்தில் இலக்கியம் சார்ந்து முழுமையாக இயங்கக் கூடியவராக மாறியது நாம் அனைவரும் அறிந்த செய்தி தான். இதே முறையைத்தான் பிற்காலத்தில் ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் கையிலெடுத்தார்கள் என்பதும் ஒப்பு நோக்கத்தக்கது.


       பஞ்சும் பசியும் நாவல் எழுதப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தை மூன்று பத்து வருடங்களாக பிரிக்கலாம். முதலாவது வடிவேலு முதலியார் வழி அதனைக் காணலாம். வடிவேலு முதலியார் என்பவர் இந்நாவல் முழுவதிலும் மாற்றத்தை விரும்பும் ஒரு பொறியாக வைக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் பின்னணியில் இருந்து அரசியல் ஆர்வம் அடைந்தவராகி பொதுவுடமை நோக்கி நகர்பவராக வடிவேலு முதலியார் சித்தரிக்கப்படுகிறார். 1930ஆம் வருடம் நடந்த அந்நிய துணிக்கடை மறியலில் அவர் ஈடுபடும் செய்தியை நாவலின் தொடக்கத்திலேயே காண முடிகிறது. பின்பு “யுத்தத்தால் ஏற்பட்ட துணி தேவை வேலை கொடுத்தது" என்கிற வரியின் வழி போர்க்காலத்தில் ஏற்பட்ட துணி தேவை குறிப்பிடப்படுகிறது. ஹிட்லர் செய்த கிளர்ச்சியின் மூலம் ஏற்பட்ட துணித் தேவை கடுமையாக நெசவாளர்களை உழைக்க வைத்ததோடு கள்ளச் சந்தையில் நூல் மற்றும் துணிகளை பெற்று பலர் முன்னேறுவதற்கும் வழி வகையாக மாறியதை நெசவாளர்களின் முன்னேற்றத்திற்குரிய வழியாக பார்க்கலாம். “யதார்த்தத்தை விட பல மடங்கு சக்தி உடையவை வாய்ப்புகள்" என்ற ஹிசெர்ல் கருத்துப்படி, வாய்ப்பினைப் பெற்று நெசவாளிகளும் வியாபாரிகளும் முன்னேறியது சமூக முன்னேற்றமாகிறது. ஒருவகையில் போர்க்காலத்தில் முன்னேறிய தறித் தொழிலாளிகளுடைய கதையாகவும் இந்நாவலை எடுத்துக் கொள்ளலாம். “சமூக மாற்றங்களின் வரலாற்றினூடே தான் இலக்கியமும் மாறி மாறி வந்திருக்கிறது" என்கிற மார்க்சிய கருத்தினையொட்டி கதையையும் கதைக்களம் மற்றும் கதை எழுதப்பட்ட காலத்தையும் புகுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. 1939,40 களில் ஏற்பட்ட அதீத துணி உற்பத்தி வளர்ச்சி அரசின் பொருளாதாரக் கோட்பாடுகளால் 41,42களில் தொய்வடைந்து இறங்கு நிலையை காண்கிறது. ஏறத்தாழ 10 வருடங்களுக்குப் பின் காலனித்துவ விடுதலை அடைந்த காலத்தில் 1951ல் “பஞ்சும் பசியும்" நாவல் வெளி வருகிறது. 


      1930,1941,1951 ஆகிய மூன்று வருடங்களின் புறச் சூழலையும் கவனத்தில் கொள்வதன் மூலம் கதைக்களத்தில் ஏற்படும் மாற்றத்தையும் முதன்மை கதாபாத்திரமாகிய கைலாச முதலியார் மனநிலையையும் உள்வாங்கிக் கொள்ள முடியும். மேலும் இந்த நாவல் பொருளாதாரத்தை மட்டுமின்றி பல்வேறு களங்களை பேசு பொருளாக்குகிறது. பொருளாதார உயர்வும் வீழ்ச்சியும் என்பதோடு கருத்தியல் மாற்றத்தையும் நாகரீக உருவாக்கத்தோடு இணைந்த முரண்களையும் முன்வைத்து இருப்பதாலேயே இன்றுவரை யதார்த்தவாத முயற்சியின் முன்னணி படைப்பாக தொடர்ந்து பேசப்படக்கூடியதாக இருக்கிறது. பொருட்கள் பற்றிய கதை, குடும்பம் பற்றிய கதை என்று தேங்கி விடாமல் கொள்கைகளை முன் வைக்கும் தீவிரம் பொருந்தி இருப்பதால் தொடர்ந்து வாசிப்புக்கு உள்ளாக்கக்கூடியதாகவும் காலத்திற்கு ஏற்ப பொருத்தி வைத்து பேசக்கூடியதாகவும் இந்நாவல் உருவேறி இருக்கிறது. ரகுநாதனின் பிற நாவல்களும் அதற்குரிய களத்தில் ஆழம் கொண்டிருப்பினும் இந்த நாவல் அது எழுதப்பட்ட காலத்தில் தனித்து தெரிந்தது என்பதை தாண்டி இன்றைய சூழலுக்கும் பொருந்தக்கூடியதாக அமையப் பெற்றிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. “சமூக மாற்றம் என்பது வெறுமனே ஒரு பொருளாதார மாற்றம் மட்டுமல்ல அது கருத்தியலின் சமூக மதிப்புகளின் மாற்றமும் ஆகும்"  என மேஜே கூறுகிறார். இந்நாவல் எத்தகைய அணுகுமுறைகளின் வாயிலாக எந்தெந்த இடங்களில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளது என்பதை பல்வேறு அடுக்குகளாகப் பகுத்து காண வேண்டியிருக்கிறது. யதார்த்தவாதத்தின் தோற்றமே பூர்ஷ்வா யதார்த்தவாதம், சோஷலிச யதார்த்தவாதம் என இருநிலைகளைக் கொண்டது. பஞ்சும் பசியும் நாவல் பூர்ஷ்வாதனத்தை‌ சுட்டிக்காட்டிவிட்டு சோசலிசத்தை பேசும் தன்மை பெற்றது. 


        “கலை வாழ்க்கையை பிரதிபலிக்கிறது" என்பது மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் கூற்று. இன்றுவரை கலை கலைக்காகவா? கலை மக்களுக்காகவா? என்று நடக்கும் விவாதம் முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்பதற்கு ஒப்பாக இன்று வரை நடக்கிறது. கலை, வாழ்க்கை, பிரதிபலிப்பு என்ற மூன்று பொருள் தரும் சொற்களால் கட்டப்பட்ட இந்த கூற்றையும் அந்த விவாதத்திற்குள் புகுத்த முடியும். வெங்கட் சாமிநாதன், க.நா.சு போன்றவர்கள் அழகியல் ரீதியாக இலக்கியத்தை அணுகக்கூடியவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. வெங்கட் சாமிநாதன் பஞ்சும் பசியும் நாவல் குறித்து எழுதிய கட்டுரையில் கொள்கை பிரச்சார வடிவமாக இந்த நாவல் இருக்கிறது எனச் சொல்லியதாக தெரிகிறது. ஆனால் இந்த நாவலில் கொள்கையை பரப்புதல் என்கிற எல்லை கடக்கப்படும் இடங்கள் இருக்கின்றன. “நம் மனதால் எந்த அளவுக்கு யதார்த்தத்தை உருவகப்படுத்த இயல்கிறதோ அந்த அளவுக்கு தான் யதார்த்தத்தின் இருப்பு நிலை உள்ளது என்று அமைப்புமயவாதம் வலியுறுத்துகிறது" என்கிறார் கோபிசந்த் நாரங்க். ரகுநாதன் உருவகப்படுத்தியுள்ள யதார்த்த இருப்பு நிலையின் கச்சிதமே இந்நாவல் இன்று வரை உயிர்ப்பெற்று இருப்பதற்கான மற்றொரு காரணம். கருத்து, பொருள், சம்பவம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் குறித்து  நம்முடைய மூளை தொடர்ந்து சிந்திக்கும் போது சிந்தனையில் தெளிவு பிறக்கிறது என்கிறது உளவியல் தத்துவம். மையக்கரு நிகழ்ந்து 10 ஆண்டுகளுக்குப் பின் இந்த நாவலை எழுதியதும் இந்த நாவல் கச்சிதத்தன்மை பெறுவதற்குரிய காரணமாகிறது. ரகுநாதனுக்கு முன்பு தமிழ் இலக்கியத்தில் யதார்த்தம் ஆங்காங்கே பேசப்பட்டு இருப்பினும் யதார்த்தவாதத்தை முதலில் முன்மொழிந்தவராக ரகுநாதனையே காணமுடிகிறது. சமுதாய இயக்கவிதிகளையும் எதிர்கால சமூக வளர்ச்சியையும் நன்கு விளங்கிக்கொண்டு அவ்வுணர்வுடன் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை மெய்மையுடன் சித்தரிப்பவனே சரியான யதார்த்தவாதி. இத்தகைய சிறப்புமிக்க யதார்த்தவாத இலக்கியநெறி தமிழ் இலக்கிய உலகில் பெருவழக்கு பெற்றுள்ளதென கூறமுடியாது." இந்தவகையில் ரகுநாதனின் பஞ்சும் பசியும் ஒன்றுதான் வியந்து கூறத்தக்கது என்று இலங்கை விமர்சகர் க.கைலாசபதி குறிப்பிடுகிறார். யதார்த்தவாத உலகை நாவல் வாயிலாக முன் வைக்கும் போது கதாபாத்திரங்களே கடத்தும் ஊடகமாக காணப்படுகிறது. இந்த நாவலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முரண்களின் மூலம் சூழப்பட்டவையாக இருக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் மற்றொரு கதாபாத்திரத்திடம் வேறுபட்டே நிற்கின்றது. “முரண்பாடு உண்மையின் இலக்கணம். முரண்பாடின்மை பொய்யின் இலக்கணம்" என்கிறார் ஹெகல். “ஒவ்வொரு கலைப்படைப்பிற்கும் பல பொருள்கள் உண்டு. இப்பன்மை நிலையானது அதற்கு யதார்த்த தன்மையைத் தருகிறது." என்றும் ஒரு‌ கருத்து உண்டு. இவ்விரு கருத்தாக்கங்களுக்குள் நின்று கதாபாத்திர ஆக்கம் நிகழ்ந்துள்ள தன்மையை புரிந்து கொள்ளலாம். பலவிதமான கதாபாத்திரங்களுக்குள் முரண்பாட்டினைச் செலுத்தி நாவலில் வரும் ஒரு பகுதியினருக்கு நியாயம் சேர்த்து அவர்களை உண்மையின் பக்கம் நிறுத்துகிறார் ரகுநாதன். இத்தகைய முரண்பாடுகள் தான் உண்மையை உணர்த்துவதற்கு அடித்தளமாகிறது. ஒரே குடும்பத்தில் நிகழும் முரண், ஒரே தொழில் செய்பவர்களிடையே நிகழும் முரண் என இரண்டு வகைகளுக்குள் எல்லா கதாபாத்திரங்களையும் உட்புகுத்திவிட முடியும். 


      வடிவேலு முதலியார் தான் நாவலின் மையம் என்ற தோற்றத்தை நாவலின் முதல் அத்தியாயம் நமக்கு கொடுக்கிறது. நாவலுக்குள் பொதுவுடமையும் போராட்டமும் பரவ ஊடகமாக இருக்கும் வடிவேலு முதலியாருக்கு அந்த கதாபாத்திரத்திற்கேற்ப வலுவேற்றி இருப்பது இந்நாவலின் நல்லதோர் அம்சம். பொருளாதார விடுதலையை நோக்கமாகக் கொண்டு அதை நோக்கி நகர்பவராகவே வடிவேலு முதலியார் சித்தரிக்கப்படுகிறார். 1930ல் கூலி உயர்வுக்கு குரல் கொடுத்து அந்நிய துணிக்கடை மறியலில் ஈடுபடுவதில் அவரது பொது வாழ்க்கை தொடங்குகிறது. காங்கிரஸ் தியாகி பட்டம் கொடுக்காததாலும் ஆகஸ்டு சுதந்திரத்தின் குறைபாடுகளாலும் காங்கிரஸ் மீதான அதிருப்தி மனநிலைக்கு நகர்ந்து பொதுவுடமை பக்கம் சாய்கிறார். விக்ரமசிங்கபுரத்தில் தொழிலாளர் சங்கம் அமைப்பதற்கு தொடர் முயற்சி மேற்கொள்ளக்கூடியவராகவும் அதற்கு முழுமையாக முனைப்புடன் செயல்படக்கூடியவராகவும் வடிவேலு முதலியார் காணப்படுகிறார். கைலாச முதலியாரின் தற்கொலையையும் மணி ஊரை விட்டு வெளியூர் ஓடிச் சென்றபோதும் “எதிர்த்து நிற்க துணிவு இல்லாதவர்கள்" என்று வருத்தம் கலந்த வசையை வடிவேலு முதலியார் பொழிகிறார்.  மணி பொதுவுடமைக் கொள்கையுடையவனாக ஊருக்கு திரும்பி வரும்போது அவனை குறித்து உவகை கொள்ளக் கூடியவராக வடிவேலு முதலியார் மாறுகிறார். இந்த இரண்டு சம்பவங்களை ஒப்பிட்டால் வடிவேலு முதலியாரினுடைய கதாபாத்திரம் மனித சார்பற்ற நிலையிலும் வேறெதும் வழியின்றி பொதுநோக்கு சார்ந்து தொடர்ந்து உந்தப்படும் இடத்திலும் நிற்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.


      கைலாச முதலியார் போன்றவர்களை சராசரி மனிதர்கள் என்ற வகைக்குள் அடக்கலாம். இறை பக்தி, நேர்மை, உதவி, நட்புறவு, தொழில் முன்னேற்றத்திற்காக சார்ந்து இருத்தல், குடும்பத்தை மேல் நிலைக்கு கொண்டு செல்ல முயல்தல், இருப்பிற்குள் நின்று தன்னைத்தானே திருப்தி செய்து கொள்ளுதல், தனது சூழ்நிலைக்கு கடவுளிடம் கேள்வியையும் விடையையும் கேட்டல் முதலியன அவரை சராசரி மனிதனாக அடையாளப்படுத்த போதுமான காரணிகள் ஆகிறது. தறி நெசவு செய்து போர் நடப்பதையொட்டி ஏற்பட்ட துணித் தேவையின் போது வியாபாரியான கைலாச முதலியாரை வியாபார மந்தம், தொழில் முடக்கம், காழ்ப்புணர்ச்சி, கடன் நெருக்கம் ஆகிய அனைத்தும் திரண்டு பேருரு கொண்டு நெருக்கி அவரை சாகடித்து விட்டது என்று நாம் கூறுவதில் தவறு ஏதும் இருக்காது. கைலாச முதலியார் மீது தாதுலிங்க முதலியாரும் அருணாச்சல முதலியாரும் கக்கிய வன்மமும் அவரது மரணத்தோடு நெருங்கிய தொடர்புடையது. கைலாச முதலியார் தன்னைச் சூழ்ந்த அந்தகாரத்தின் இருளை தன் குடும்பம் மீதும் தன்னுடைய மகன் மணி மீதும் காட்டுகிறார். பின் ஒட்டுமொத்த இயலாமையும் ஒன்று சேரும் இடமாக ஆறுமுகத்தின் உடல்நிலை மோசமானதும் கைலாச முதலியார் முகத்தை மறைத்து துன்பப்பட்ட பகுதியும் இருக்கிறது. அவரது மனதில் ஏற்பட்ட துன்பத்திற்கு சுற்றி இருந்த மனிதர்களும் சமூகச் சூழலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கையும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டி நிற்கிறது. “கைலாச முதலியாருக்கு முருக நாமம் கஞ்சா போதை போன்றது" என நாவலில் சொல்லப்படுகிறது. “மதம் ஒரு அபின்" என்கிறார் காரல் மார்க்ஸ். இவ்விரண்டு கூற்றையும் ஒப்பிட்டுப் பார்த்து ரகுநாதன் எந்த சார்பில் நின்று இந்த நாவலை முன் வைத்திருக்கிறார் என்பதை அறிய முடியும். வரிசை கட்டி இருக்கும் பிரச்சனைகளை சராசரி மனிதன் எப்படி எதிர்கொள்வான் என்பதற்கு உதாரணமாக கைலாச முதலியாரின் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. கைலாச முதலியாரிடம் இருக்கும் சராசரித்தன்மை அவரது குடும்பத்திலும் கடத்தப்படுகிறது. சங்கர் பெரிய முதலாளியின் மகனாக இருந்து கம்யூனிசம் பேசுவதற்கும் வீரையா அடித்தர குடும்பத்திலிருந்தும் கம்யூனிசம் பேசுவதற்கும் இடையில் மணி சிக்கித் தவிப்பதற்கு இந்த சராசரித் தன்மையே காரணம். கைலாச முதலியார் எடுத்த முடிவு எல்லா சராசரி மனிதர்களுக்கும் பொருந்தாது என்றாலும் ஒரு வகைப்பட்ட மனிதர்களினுடைய குணநலன்களாக கைலாச முதலியாரை நாம் கருதலாம். “நாவல் பிறக்கிறது" கட்டுரையில் 13வது அத்தியாயத்தில் நிகழ்ந்த கைலாச முதலியாரின் இறப்புக்கு துக்கம் கொண்டாடிய பின்பே நாவல் நகர்ந்ததாகவும் “நானே நினைத்து இருந்தாலும் கூட சாவினின்று அவரை காப்பாற்ற முடியாது. அவர் சாக நேர்ந்தது தான் யதார்த்த விதி" என்றும் “சாமி குடி புகுந்த மாதிரி கதாபாத்திரம் தன்னைத்தானே நகர்த்தும் எழுத்தாளர் அதன் பின் செல்வான்" என்பதாகவும் ரகுநாதன் கூறுகிறார். இத்தகைய கூற்றுகள் எழுத்தாளர் கதாபாத்திரங்களின் மீது கொண்ட அபிமானத்தோடு கதாபாத்திரங்கள் படைப்பை நகர்த்திச் சென்றது தெரிய வருகிறது. கைலாச முதலியாரின் மரணம் நெசவாளர்களது நிலைமையின் குறியீடு என்பதை “பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் எப்படி எப்படியோ என்று அச்சத்தால் உள்ளம் நடுங்கினார்கள்" என்கிற வரி ஆழமாக உணர்த்துகிறது. மனவியல் அடிப்படையில் தொடர்ந்து வந்த மரண செய்திகளும் அவருக்குள் தாக்கம் செலுத்தியிருக்கிறது. “எனது படைப்பின் உள்ளடக்கம் தான் எனது நடையை தீர்மானிக்கிறது புனைவின்மையையும் புனைவையும் பிரிக்கின்ற மெல்லிய கோட்டைத் தகர்ப்பதே எனது மிக முக்கிய பிரச்சனை" என்கிறார் கொலம்பியா எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வேஸ். இந்த நாவலில் புனைவின்மையும் புனைவையும் ஒருசேர ரகுநாதன் அளித்திருக்கிறார் என்பதற்கு கைலாசமுதலியார் ஒரு சான்று. 


      ஊரார் மத்தியில் தாதுலிங்க முதலியார் பெரிய முதலியார் என்று அறியப்படுகிறார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரிட்டிஷாருக்கு கீழ் இருந்த இந்தியா ஆங்கிலேயர்களுக்கு போர் உதவி செய்தது. காந்தியும் கூட உலகப்போர் சமயத்தில் பிரிட்டிஷ் அரசோடு நாம் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய கருத்தை தாதுலிங்க முதலியாரின் காங்கிரஸ் சார்போடு இணைத்து பார்க்கலாம். பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இருந்து பணஉதவி செய்தவர்களுக்கு  ராவ்சாகிப் என்ற பட்டத்தை போர் முடிந்த பின் கொடுக்கிறது. தாதுலிங்க முதலியாரும் அவர்களுள் ஒருவராக இருக்கிறார். பிற்காலத்தில் ராவ்சாகிப் பட்டத்தை துறந்தாலும் அவரது மங்கள பவனத்தின் வாசலில் மாட்டப்பட்ட பித்தளை போர்டில் மட்டும் அந்த பட்டம் இவரது பெயரோடு இணைந்து நின்று கொண்டிருக்கிறதாக சொல்லப்படுகிறது. மேலும் ப்யூக் கார், அணிந்திருக்கும் ஜரிகை வேட்டி, துண்டு, டயாபடிஸ் போன்ற பணக்காரத் தன்மை தாதுலிங்க முதலியாரின் குறியீடாக இருக்கிறது. இதனை ஓர் வரலாற்றுக் குறியீடாக நாம் எடுத்துக் கொள்ளலாம். தாதுலிங்க முதலியாரின் மனைவி தர்மாம்பாள் குடும்பத்தை அமைதியும் சந்தோசமும் உடையதாக எப்போதுமே வைத்துக்கொள்ள விரும்பும் இயல்புடையவராக காட்டப்படுகிறார். கைலாச முதலியாரின் மனைவி தங்கமாளுக்கும் அப்படியான ஒரு குணத்தைத் தான் ரகுநாதன் படைத்திருக்கிறார். இந்நாவலில் வரும் இரண்டு குடும்பங்களிலும் இருக்கக்கூடிய பெண்கள் அமைதியை விரும்பக் கூடியவர்களாகவே படைக்கப்பட்டிருப்பது அன்றைய கால குடும்பத்தில் இருக்கும் பெண்களினுடைய இயல்பின் ஒரு பகுதியை வெளிப்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகிறது. தன்னுடைய வருமானத்தை பெருக்குவதற்கு கள்ள சந்தையில் நூல் விற்கிறார் தாதுலிங்க முதலியார். அதற்கு உதவியாக இருந்தவர் கைலாச முதலியார் என்ற மற்றொரு பக்கமும் இரு குடும்பங்களுக்கும் இடையில் இருக்கிறது. தொழில் ரீதியான காரணங்களைக் கடந்து அவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக மாறுவதற்கு மைனர் முதலியார் மற்றும் சுப்பையா போன்றவர்களுடைய உள்ளீடு உணர்ச்சியைப் பற்ற வைப்பதில் முக்கிய நிலையில் இருக்கிறது. உலகப்‌போர் காலத் தொடர்பு மட்டுமின்றி தாது வருட பஞ்ச காலத்தில் அகவிலை மூலம் பணக்காரர் ஆனவர் தாதலிங்க முதலியார் என்ற செய்தியும் இடம் பெறுகிறது. வரலாற்று ரீதியாக தாதுலிங்க முதலியார் பணக்காரர் ஆனது, வியாபாரம் செய்தது, பட்டம் பெற்றது, பட்டத்தை துறந்தது, தொழிலாளர் சங்கத்தை எதிர்ப்பது என ஒவ்வொரு செய்தியையும் பார்க்க வேண்டும். 

 

       இருளப்பக் கோனார் தாதுலிங்க முதலியார் மூலமாக கைலாச முதலியாருக்கு அறிமுகமாகி அவருடனே வேலை செய்து கொண்டு அவரது குடும்பத்தில் ஒருவர் என்ற அளவிற்கு பிணைந்து வாழ்ந்தவர். உதவி செய்பவர்களை மறக்கக்கூடாது என்ற நன்றியுணர்விற்கும் நம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாக இருளப்பக் கோனார் கதாபாத்திரம் இருக்கிறது‌. தனது முதலியாரின் மகனுக்கு மருந்து வாங்க மனைவியின் தாலியை விற்கும் அளவிற்கு ஈடுபாடு காட்டுபவராக இருளப்பக் கோனார் கதாபாத்திரம் இடம் பெறுகிறது. கைலாச முதலியாரின் குடும்பம் முற்றிலுமாக சிதைந்து கிடக்கும் சூழலில் தனக்கு அடைக்கலம் கொடுத்த குடும்பத்திற்கு உதவியும் அடைக்கலமும் தந்து தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். மணியின் நண்பன் சங்கர் கூட மணியை கோழை என்று மனதில் நினைக்கும் இடம் வருகிறது ஆனால் இருளப்பக் கோனார் துளி கூட கைலாச முதலியார் குடும்பம் குறித்தும் குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் குறைவுபட நினைக்காமல் மீண்டும் நிலைமை சரியாக வேண்டும் என்று தான் தனக்குள் எத்தனப்படுகிறார். தனது ஒரே மகனை இழந்த அவர் தனது மகன் கிடைக்கும் அத்தியாயம் வரை அடிக்கடி மகன் குறித்த உணர்ச்சிவசத்திற்கு ஆட்பட்டவராக இருக்கிறார். மணியும் ராசையாவும் அவரவர் குடும்பத்தோடு இணையும் தருணங்களில் இருளப்பக் கோனார் வெளிப்படுத்தும் உணர்வை வைத்து அவரது கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து கொள்ளலாம். கன்னிவாடி சீரங்காரயன் சிவக்குமார் எழுதிய “காலம் உடன் வரும்" சிறுகதையில் மாயழகு, ஒச்சம்மா தம்பதியினர் நிரந்தர பிழைப்புக்காக தறி நெய்ய வருகின்றனர். இருளப்பக்கோனாரும் தறி நெய்யும் ஊருக்கு வேலை நிமித்தமாக வருகிறார் என்பதையும் இணைக்கும் பட்சத்தில் தறி நெசவு செய்யும் பகுதிகளின் சூழலைப் பார்க்க வேண்டியுள்ளது. இன்றளவும் தறி நெய்யக்கூடிய ஊர்கள் நாள் முழுவதும் நடமாட்டத்தோடு உயிர்ப்புடனேயே இருக்கின்றது என்பதற்கு இராஜபாளையம், சத்திரப்பட்டி, அருப்புக்கோட்டை முதலான ஊர்கள் சான்றாகின்றன.


       நாடகங்களின் அங்கமாக கோள் மூட்டும் கதாபாத்திரம் ஒன்று எப்போதுமே இடம் பெறுவதுண்டு. இந்த நாவலில் சுப்பையா முதலியார் கோள்மூட்டி உயிர்வாழும் ஜீவனாக இருக்கிறார். மைனர் முதலியாரை முழுமையாக சார்ந்து அவருக்கு ஒற்றராக காணப்படும் சுப்பையா முதலியார் அவரது பிரதிநிதியாக ஒவ்வொரு உரையாடலின் போதும் வந்து நிற்கிறார். “நாய்க்கு பயந்து அரவமில்லாமல் நடை இறங்கினார்" என நாவலில் சுப்பையா குறித்து சொல்லப்படுகிறது. இதனுடைய பின்னணியில் அவர் கையில் இரண்டு ரூபாய் நோட்டு இருந்ததை கவனிக்க வேண்டும். ஒற்று வேலை பார்த்து தனது முதலாளியிடம் ஐந்து ரூபாய் கேட்டு இரண்டு ரூபாயோடு திரும்பும் ஒருவர் வழியில் படுத்திருக்கும் நாய்க்கு பயந்து நடக்கும் தடம் தெரியாமல் வாய் பொத்தி வருவது போன்ற காட்சியை வாசிக்கும் போது கண் முன் நாடகம் தான் ஓடுகிறது. 


      மைனர் முதலியார் என்று அழைக்கப்படக்கூடிய அருணாச்சல முதலியார் கோவில் தர்மகர்த்தாவாக இருந்து கோவில் சொத்துக்களை கையாடல் செய்கிறார். மேலும் அவருடைய அப்பாவைக் குறித்து வரக்கூடிய செய்திகளும் கூட அவர்கள் பரம்பரை பணக்காரர்கள் என்பதாகவும் அவர்கள் வட்டிக்கு பணம் கொடுத்தும் அடமானங்கள் வாங்கியும் பல்வேறு கோவில் சொத்துக்கள் முதலான சொத்துக்களை தன் பெயரில் மாற்றியும் பணக்காரர்களான செய்தி வருகிறது. மைனர் முதலியாரை கோவில் பெருச்சாளி அழைக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்திருக்கிறது. மைனர் முதலியார் இருந்த தர்மகத்தா பதவிக்கு கைலாச முதலியார் வரவும் தலைக்கட்டு வரி வசூலித்து கஞ்சி காய்ச்சுதல் கோவில் திருவிழா நடத்துதல் வில்லுப்பாட்டு கும்ப விளையாட்டு கணியன் கூத்து என்று திருவிழா கொண்டாட்டத்தை ஊருக்குள் கொண்டு வருகிறார். 

 கைலாச முதலியாருக்கு வட்டிக்கு பணம் கொடுத்த மைனர் முதலியார் அதனை அழுத்தி கேட்டதோடு அவரை அவமானப்படுத்தியதும் அவருடைய தற்கொலைக்கு முக்கியமான காரணம். மைனர் முதலியாரின் தர்மகர்த்தா பதவி வெறியும் பண ஆசையும் கைலாச முதலியாரின் உயிரைப் பறித்தது எனலாம்‌. 


      கமலா சங்கரின் தங்கை, மணியின் காதலி, தாதுலிங்க முதலியாரின் மகள், புத்திக் கூர்மையும் தலைமைத்துவமும் நிறைந்த பெண் என பலவித அடையாளத்தோடு இருக்கிறார்‌. அதிகார தகர்ப்புடன் மாற்றிய வழியில் ஒலிக்கும் பெண்ணிய குரலாக கமலாவின் குரலை நாம் காண முடிகிறது. முற்போக்கு கருத்துக்களை கல்லூரியில் தைரியமாக எடுத்து வைத்து விமர்சனங்களை சந்திக்கும் கமலாவுக்கு எப்போதுமே துணையாக இருப்பது அவளது அண்ணன் சங்கர். அவன் கூறும் முற்போக்கு, பொதுவுடமை கருத்துக்களை தனக்குள் வாங்கி அதனை பிரதிபலிக்கும் தங்கையாக கமலாவும் முற்போக்கு பேசும் திறமையான பெண்ணை உருவாக்கும் குருவாக நல்ல எதிர்காலத்தை தனது தங்கைக்கு கொடுக்க விரும்பும் அண்ணனாக சங்கரும் இருக்கிறான். தனது காதலனுக்காக அப்பாவை எதிர்க்கும் நிலை வரைக்கும் துணிகிறாள் கமலா. கமலாவின் தாய்க்கு பிள்ளைகள் பக்கம் சாய்வதா? குழந்தைகள் பக்கம் நிற்பதா? என்ற குழப்பம் நாவலின் இறுதிவரை நிலவினாலும் தனது பிள்ளைகளின் செயலுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கக் கூடியவராகவே அவர் இருக்கிறார். தொடர்ந்து சங்கர், கமலா, தாதுலிங்க முதலியார், தங்கள் குடும்பம் என்ற சிந்தையை மட்டுமே உடைய பெண்ணாக கமலாவின் தாய் படைக்கப்பட்டு இருக்கிறார். இந்நாவலில் கமலாவின் காதலைப் பற்றி பேசாமல் இருந்துவிட முடியாது. மணி மீது தாதுலிங்க முதலியாருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. தனது தந்தையை எதிர்த்து பேசாத கமலா மணிக்காக தந்தையை எதிர்த்துப் பேசுகிறாள். அதன்பின் மணியின் குடும்பம் முழுவதுமாக உடைகிறதில் தாதுலிங்க முதலியாருக்கும் கணிசமான பங்கு உண்டு. மணி உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவனாக மாறுகிறான். அப்போது கமலாவிடம் காதல் மென்மேலும் கூடுகிறது. அதற்கு பின்பு மணி தன்னுடைய தனி மனக்குழப்பத்தின் மூலம் ஊரை விட்டு வெளியேறுகிறான். அவன் ஊரைவிட்டு வெளியேறிய பின்பும் மீண்டும் வருவான் என்ற காத்திருப்பு கமலாவிற்குள் இருக்கிறது. மணி மீதான கமலாவின் காதல் கூட அவளை மீண்டும் ஊருக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கலாம் என நினைக்கத் தோன்றும் வகையில் கமலாவினைப் பற்றிய விவரணைகளால் நாவல நகர்கிறது. சங்கப் பாடல்களில் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியினைப் பார்ப்பது போன்ற தோற்றம் கமலா மணி காதலை வைத்து சித்தரிக்கப்படுகிறது. எவ்வித எதிர்பார்ப்புமற்ற காதல் தற்போது இல்லை என்கிற வாதம் சமகாலத்தில் வழுக்கத் தொடங்கி இருக்கிறது. ஒருவகையில் அதில் உண்மையும் உண்டு. எப்போதுமே காதல் எதிர்பார்க்க வைக்கக்கூடிய உணர்வாகவே இருக்கிறது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு எதுவாக இருக்கிறது என்பதை வைத்து காதலின் தன்மை இறுதி செய்யப்படுகிறது. காதலும் காதலியுடன் எப்போதும் இணைந்தே இருக்க வேண்டும் ஒருவருக்கொருவர் தங்கள் உணர்வு நிலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் இருவரும் ஒருவரிடையே ஒருவர் பேசிக் கொள்வதற்கு நேரம் பகிர்ந்து கொள்ள வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகளை கடந்து பொருள் இருப்பு குறித்தும் பொருளாதார சூழல் குறித்தும் எதிர்பார்ப்பு வரக்கூடிய இடத்தில் காதலர்களுக்கு இடையிலான மன ஒருமைப்பாடு விரிசல் விடுகிறது. நாவல் எழுதப்பட்ட காலத்திலிருந்த சமூக அமைப்பிற்கு வேண்டுமானால் பொருள் சார்ந்த எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி காதலிக்கும் போக்கு குறைந்து இருந்திருக்கலாம். தற்போதைய நுகர்வு மைய கலாச்சார சூழலுக்கு அதை ஏற்கும் நிலை இல்லை என்ற வாதம் வலுவாக உள்ளது. பெரும்பான்மையான காலங்களில் ஏதோ ஒரு சமூகக் கூறு காதலிப்பவர்கள் ஒன்று சேர்வதற்கு தடையாக இருந்திருக்கிறது. கமலா மணியின் பிரிவில் வருந்தும் பகுதிகள் அவளது காதலின் அளவை வெளிக்காட்டுகிறது. நுகர்வு மைய கலாச்சாரத்திற்குள் உருவாகும் காதலில் ஒருவருக்கொருவர் பிடித்திருந்தாலும் ஒன்று சேர்வதில் இயலாததாகிறது. அரசு வேலை, பொருளாதாரச் சூழல், சாதி சமய சடங்குகள், சோதிட நம்பிக்கை என்று கூடுதல் கூறுகள் காலம் செல்ல செல்ல சூழல் மாற்றத்திற்கு ஏற்ப கனமானதாகிறது. எதிர்கால வாழ்க்கையைக் குறித்து திருமண வாழ்க்கைக்குள் செல்லும் முன்பு யோசிப்பதை இன்றைய யதார்த்த நிலையாக இருக்கிறது. நம்பிக்கையும் புரிதலுணர்வும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆனால் கமலாவின் காதல் அவளது அப்பாவினுடைய சொத்துக்களையும் உதறித் தள்ளி மணியுடன் வாழ்வதற்கு ஒப்புக் கொடுக்கக்கூடிய தன்மையுடையதாகவே சித்தரிக்கப்படுவதால் அந்த கதாபாத்திரம் கவரக்கூடிய வகையில் அமைகிறது.


      கமலாவின் காத்திருப்பைப் போன்று எத்தனை பெண்கள் இன்று காத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் புறவயச் சூழல் நெருக்கடிகளை பற்றிய ஆழமான சிந்தனையின் பிடிப்பில் தனது காதலை கைவிட முயலும் மணியும் தற்போதைய காலத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். கமலா, மணி காதலுறவில் கமலாவுக்கு இருந்த புரிதல் எல்லா காதலர்களுக்குள்ளும் இருக்கும் பட்சத்தில் பிரிவு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. அடுத்தடுத்து நெருக்கடி நிலையில் சுமைகளை தலையில் ஏற்றும் மணிக்கு கமலாவுடன் இனி ஒன்று சேர்வதற்கான வாய்ப்பில்லை என்ற சூழல் அவனை தன்னைத்தானே தொலைத்துக் கொள்ள முயல்வதற்கு முதன்மையான காரணமாகிறது. மணி போன்ற ஆண்களுக்கு காதலிக்கும் பெண் தன்னைவிட பொருளாதார முன்னேற்ற பிரிவுகளில் உயர்ந்து காணப்படும் நிலையில் இப்படியான முடிவை எடுப்பதையே தீர்மானிப்பர். கமலா தனது காதலில் உறுதியாக நிற்பதற்கு அவளது அண்ணன் பயிற்றுவித்த கொள்கைகளும் நூல்களும் பங்கு வகிக்கிறது என்பதையும் நாம் இந்த இடத்தில் கவனிக்க வேண்டியுள்ளது. சங்கருக்கு ஐவனோவ் நடாஷா காதல் காட்சிகளின் போது கமலாவும் மணியும் தான் நினைவுக்கு வருகிறார்கள். இந்த குறியீட்டின் மூலம் காலமும் புறச்சூழலுமே காதலை பிரிவு நோக்கித் தள்ளுகிறது. கமலா, மணி என்ற இருவருக்கு இடையிலான காதல் உறவின் முதிர்வுநிலை மனவியல் சாயலாகி ரகுநாதனின் புயல் நாவலின் பாணியைத் தொனிக்கிறது.


      இந்நாவலில் மணி, சங்கர், ராஜு, நடராஜன் என்று நான்கு இளைஞர்கள் வருகின்றனர். இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் நிற்கின்றனர். மணி நாவலின் பிற்பகுதி முழுவதும் முதன்மை கதாபாத்திரமாக மாறுகிறான். சங்கர் நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை தனது கொள்கை மீதான நம்பிக்கையை பரப்புரை செய்து கூட்டம் கூட்டி இயக்கம் கட்டமைக்கவும் தெளிவான கொள்கைகளை உணர்த்தவும் தன்னால் இயன்ற முயற்சிகளை எடுக்கிறான்.

ராஜு வறுமையால் உழைப்பின் மேன்மையை உணர்ந்து பேருழைப்புக்கும் உழைப்புக்கேற்ற ஊதியத்திற்கும் பாடுபடும் தலைமைக் குணத்தோடு மிளிர்கிறான். ஏதுமற்றவனாகி எல்லோருக்குமானவனாக மணி நிற்கிறான். இவர்களைத் தாண்டி டாக்டர் நடராஜன் நாவலுக்குள் வருகிறார். டாக்டர் நடராஜனுக்கும் சங்கருக்கும் இடையில் நடைபெறும் முதல் உரையாடலில் நாடகப் பாணியின் தொனி அதிகம் இருக்கிறது. கேலிப்பேச்சுகளும் தட்டையான நகைச்சுவையும் அந்த நாடகப்பாணிக்குரிய புள்ளி கணநேரத்தில் தோன்றி மறைய காரணமாக இருக்கலாம். பொதுவுடைமை சார்ந்த உரையாடலுக்கு இடமளிப்பவராகவும் தனது தொழில் மீது உண்மையுடையவராகவும் இருக்கும் நடராஜன் நாவலில் வரக்கூடிய பகுதிகள் குறைவாக இருப்பதாலும் அவர் ஒரு தொழில் முறை கதாபாத்திரமாக நிற்பதாலும் அதிக கவனப்படுத்துதலுக்கு உள்ளாகாமல் கவனக்குறைச்சலுக்கு உள்ளாகிறார். சங்கருக்கும் நடராஜனுக்கும் இடையில் நடைபெறும் முதல் உரையாடல் தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவருக்கும் பரப்புரை செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பவருக்கும் இடையில் நடக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. ஒரு மருத்துவராக நோயாளியின் மனநிலையையும் அவரது பின்னணியையும் கணக்கில் கொண்டு ஏற்ற முடிவுகளை முன்மொழியும் இடத்தில் சிறந்த மருத்துவராக நடராஜன் நிற்கிறார்.


      மார்க்சிய பொதுவுடமை தத்துவம் தான் இந்த நாவல் யதார்த்தமாக தொடர்ந்து பேசப்படுவதற்கான காரணமாக இருக்கிறது. சங்கர் தான் படித்த புத்தகத்தின் வாயிலாக அடித்தட்டு மக்களின் நிலையினையும் கஷ்ட காரியங்களையும் புரிந்து வைத்திருந்தான் ஆனால் மணியின் நிலைமை அப்படி அல்ல கஷ்டம் தெரியாமல் வளர்ந்த மணி தைரியம் இல்லாதவனாகவும் தூக்கம் இல்லாதவனாகவும் மாறக்கூடிய ஒரு நிலை வருகிறது. நிராசை, பயம், பொறுப்பு, வெறுப்பு, கடமை என்று எத்தனையோ கருத்தாக்கங்கள் அவனை சூழ்ந்து நிற்கிறது. “ வாழ்க்கையின் அவலமும் புரிந்து கொள்ள முடியாத அச்சுறுத்தும் சூழலில் மனிதன் சிக்கித் தவிப்பதுமே காஃப்காவின் இலக்கியம்." என ப.மருதநாயகம் குறிப்பிடுகிறார். கிட்டத்தட்ட மணி என்ற ஒரு கதாபாத்திரம் வழியாக காஃப்காவின் இலக்கியச் சாயலை பஞ்சும் பசியும் நாவலில் பெறமுடிகிறது. இந்நாவலில் ஒருபுறம் “என்னை மறக்காதே" என்று மணியின் தாயும் “நம்மை மறந்து விடாதீர்கள்" என்று மணியின் காதலி கமலாவும் “நாட்டினை மறக்காதே" என்று மணியின் நண்பன் சங்கரும் கூறுகின்றனர். இத்தனைக்கு நடுவில் “நானோ நான் என்னை மறக்கவே வழி தேடுகிறேன்" என்ற நிலைக்கு மணி வருகிறான். அம்பாசமுத்திரத்தில் இருந்து பாளையங்கோட்டை பகுதிக்கு அவன் செல்லக்கூடிய வழியில் தத்துவ ரீதியான கேள்விகள் அவனுக்குள் கிளம்பி அவனுடைய உளவியலில் பெருத்த மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. உயிர் பெரியதா? மானம் பெரியதா? என்கிற கேள்வியும் கமலாவே நான் மறந்து விடுவதா? அல்லது மறந்து விட முடியுமா? என்கிற மற்றொரு கேள்வியும் அவனை இம்சிக்கிறது. எத்தனையோ புறச்சூழல்கள் இடுக்கினாலும் காதலின் பிரிவு வலியும் அனைத்திற்கும் மேலாக நின்று சோதிக்கும் என்பதனை மணியினுடைய உள நிலையின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த சமயத்தில் அவன் பார்க்கக்கூடிய விவசாய சங்க போராட்டம் அவனுடைய மனதில் மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. “புதிய சிக்கல்களை உருவாக்கி பழைய சிக்கல்களை இடம்பெறச் செய்வது தான் மார்க்ஸ் கையாண்ட புதிய மார்க்கம்" என்கிற கருத்து மணியினுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றத்தை குறிப்பதாக இருக்கிறது. சிற்றிதழ் இயக்கங்கள் தனிமனித உணர்வுகளைத் தீவிரமாக பேசிய காலத்தில் முழுமுதலாக சமூகத்தின் பிரச்சினைகளை பஞ்சும் பசியும் வாதப் பொருளாக்கியிருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவே செய்வர். தனிமனிதன், சமுதாயம் என்பதைக் குறித்து வில்லியம்சன் “தனிமனிதர்கள் சமுதாயத்தின் அங்கங்கள், சமுதாயம் தனிமனிதர்களின் கூட்டம்." என்கிறார். இந்த நாவலின் அங்கம் வகிக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் தனிமனிதர்களாகவும் வறுமை படுத்திய பாடுகளால் ஒன்றிணைந்ததை சமுதாயமாகவும் பார்க்கும் தன்மை விசாலமாக இருக்கிறது.


      “பிரச்சாரம் உணர்வைத் தான் ஊட்ட முடியும் நடைமுறை இயக்கம் தான் உணர்வின் வெற்றியை உருவாக்க முடியும்." என்ற அடிநாதத்தின் கீழ் விவசாய சங்கம், தொழிலாளர் சங்கம் முதலிய இயக்கங்களை கட்டமைக்கும் வேலையை செய்யக்கூடிய ராஜூவுடன் “வேலை கொடு அல்லது சோறு போடு" என்ற முழக்கத்துடன் வந்த செங்கொடி பேரணியில் தன்னையே மறந்து மணி கலந்து கொண்டு அறிமுகம் ஆகிறான். சேலம், சின்னாளப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை என பல ஊர்களில் நெசவாளிகள் நிலமை மோசமாகிக் கொண்டே வருகிறது. விக்கிரமசிங்கபுரத்தில் தொழில் பாதிப்பு

ஏற்பட்டு மக்கள் போராட்டம் நிகழ்த்தி கூலி உயர்விற்கான கோரிக்கையை வைத்தனர். தறி கூலியாக ஒரு கழிக்கு 8ரூபாயாக இருந்ததை 12 ரூபாயாக உயர்த்தி தறிக்காரர்கள் கேட்டனர். பேரம் பேசுவது போல பேசி முதலாளிமார்கள் ஒரு கழிக்கு பத்து ரூபாய் என்று ஒப்புக்கொண்டனர். பின்பு அதன் படி தாதுலிங்க முதலியாரின் தனலட்சுமி ஸ்டோர்ஸ் கைத்தறி அண்ட் ஜவுளி மொத்த வியாபாரம் என்ற கிட்டங்கிக்கு தறிக்காரர்கள் சென்றபோது அவர் களிக்கு எட்டு ரூபாய் தான் தருவேன் என்று ஆணித்தரமாக சொல்கிறார். ஒரு கட்டத்தில் தறிக்காரர்கள் தங்களுடைய போராட்டத்தையும் கூலி உயர்வையும் விடக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தாதுலிங்க முதலியார் மற்றும் மைனர் முதலியாருக்கு இடையிலான பேச்சில் தாதலிங்க முதலியார் “லாபத்துக்கு பங்கம் வராமல் பாத்துக்கிடனும்னா உழைக்கிறவன் தலையில கை வைக்கிறதவிட வேற விதியில்ல" என்கிறார். நாவல் முழுவதிலும் சங்கர் புரட்சிகர கருத்தின் மூலம் கலகத்தை உண்டு பண்ணுவதாகவே நீடிக்கிறான். தாதுலிங்க முதலியார் அவனுடைய கருத்துக்களை அபாயகரமான கருத்துக்கள் என்று தொடர்ந்து அவனுக்கு எதிராக பேசக் கூடியவராக இருக்கிறார். 


      புத்தகம் சார்ந்த உரையாடல் வரக்கூடிய இடத்தில் தரமான புத்தகம் எது என்கிற விவாதம் நிகழ்கிறது. ரயில்வே புத்தகக் கடைக்கும் பஜார் புத்தகக் கடைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தின் வழியாக சங்கர் புத்தக அரசியலை மணிக்கு தெரிவிக்கிறான். மேலும் “சோசிலியசமும் பெண்களும்" என்ற நூலையும் பஞ்சும் பசியும் நாவலில் ரகுநாதன் சங்கர் கமலா போன்றவர்கள் மூலமாக அறிமுகப்படுத்துகிறார். பெர்லின் வீழ்ச்சி திரைப்படத்தை சங்கர் பார்க்கின்ற இடத்தில் போர் பற்றிய வரலாறு சுருக்கமாக முன்வைக்கப்படுகிறது.“அருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்று ஆறுமுகம் திருக்குறளை வாசிக்கும் இடம் தர்க்கபூர்வமானதாக மாறுகிறது. பொருள் முதல்வாத கோட்பாட்டினை பேசக் கூடியதாக அந்த குறளின் வழி ஆறுமுகத்தின் குரல் ஒலிக்கிறது. தொழிலாளிகள் என்றால் அவர்கள் சந்தோஷமாக இருக்கக் கூடாது, சினிமாவிற்கு செல்லக்கூடாது போன்ற கருத்தாக்கங்களை சொல்லக்கூடிய இடமாக தாதுலிங்க முதலியாரின் பேச்சு அமைகிறது. வேலைக்குத் தகுந்த கூலியைக் கொடுக்காமல் தனிப்பட்ட காரியங்கள் வரை முதலாளிகள் நுழையும் அளவிற்கான சூழல் இருந்தது குறிப்பிடப்படுகிறது. மனிதன் உழைப்பதற்கும் உழைத்ததன் மூலம் கிடைக்கும் வருவாயை சந்தோஷமாக அனுபவிப்பதற்கும் உரிமை உண்டு. அதற்கு எதிரான குரலாக தாதுலிங்க முதலியார் மைனர் முதலியார் முதலியோருடைய குரல் அமைகிறது. 


       கடன்காரர்களுடைய தொல்லை, மனைவி பிள்ளைகளுடைய நச்சரிப்பு, வெற்றிலை வாங்க காசு இல்லாமை போன்ற உணர்வுகளை மறப்பதற்கு வள்ளுவர் வாசகசாலையில் ஆண்கள் கூடுகின்றனர். கடன்காரர்களுடைய தொல்லை இந்நாவலின் முக்கியமான பகுதி. செய்தித்தாளில் தொடர்ந்து தற்கொலை பற்றிய செய்திகளை வாசித்து தற்கொலைக்கு நேராக கைலாச முதலியார் உந்தப்படுகிறார். கைலாச முதலியாரின் தற்கொலையை கண்ட பெண்கள் “தங்கள் தாலி பாக்கியம் எப்படி எப்படியோ என்று அச்சத்தால் உள்ளம் நடுங்கினார்கள்" என்ற வரி ஒட்டுமொத்த சமூகமும் எவ்வளவு தூரம் வேலை இழப்பின் மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒலிக்கும் அபயக்குரலாக  இருக்கிறது. வறுமை சுதந்திரம் தந்த சுயராஜ்யம் பரிசு என்றே மக்கள் மத்தியில் நிற்கிறது.


     “அளவு மாற்றம் குண மாற்றத்தை உருவாக்கும்" என்கிற கருத்தின் படி மக்கள் திரள் கூடும்போது தான் புரட்சிக்கான அல்லது மாற்றத்திற்கான ஒரு வித்து போடப்படுகிறது. வடிவேலு முதலியார் மற்றும் சங்கருக்கு உறுதுணையாக தறிக்காரர்கள் வந்தது விக்கிரமசிங்கபுரத்தில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. அதேபோல பேரணி ஒவ்வொரு மாற்றத்தை விரும்பும் மனிதர்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கக் கூடியதாக மாறுகிறது. “எதிர்கால சமுதாய முன்னேற்றத்திற்கான பார்வைகளையும் விதிகளையும் புரிந்து கொண்டதன் அடிப்படையில் அமைவது பார்க்கின்ற உண்மையை அப்படியே படம் பிடித்து காட்டுவது மட்டும் ரியலிசம் என்று கருத வேண்டாம்! அதில் கொள்கை அடிப்படையில் திட்டவட்டமான தேர்வும் அடங்கியுள்ளது." என்கிறார் வில்லியம்சன். இந்நாவலில் கொள்கையானது படைக்கப்பட்ட கதாபாத்திரங்களின் அறிவுநிலைக்கு ஏற்ப சரியான திட்டமாக முன்வைக்கப்படுகிறது. முதியவர் ஒருவர் “சாகிறதே சாகிறோம் நல்ல காரியத்திற்காக உயிரை விட்டோம்னாவது இருக்கட்டுமே" என்று சொல்லக்கூடிய இடத்தில் அவர் போராட்டத்திற்கு குரல் கொடுத்து ஆதரவளிக்கிறார். இந்நாவல் முழுவதிலும் தொழிலாளர்களினுடைய நிலையில் நின்று ஆட்சி அதிகார அரசியலுக்கு எதிரான கலகக்குரலாக மட்டுமே ரகுநாதன் இருக்கிறார். அரசாங்கத்தினுடைய பொருளாதாரக் கொள்கைகள் சார்ந்த விவரங்கள் ஏதும் இல்லாதது நாவலில் உள்ள குறையாக இருக்கிறது. கல்வி சார்ந்த பேச்சு வரக் கூடிய ஒரு இடத்தில் பரீட்சையில் அனைவரும் பாஸ் செய்து விட்டால்  பின்பு வேலை கொடுக்கிற சர்க்காரின் நிலை என்னவாகும் என்கிற ஒரு கருத்தும் முன்வைக்கப்படும் இடத்தில். வறுமையின் நிறம் சிவப்பு என்ற திரைப்படம் நினைவு கூறத் தக்கதாக இருக்கிறது.


     “இருத்தலுக்கு தனிமனித அர்த்தமே உண்டு. பொது அர்த்தம் கிடையாது."  இருத்தலியல் சிக்கலுக்கு கதாபாத்திரங்கள் ஆட்கொள்ளப்படுகின்றன. சங்கரன்கோவில் தவசி திருநாளின் போது எடுத்த படம் ஒன்றுதான் இருளப்பக் கோனாருக்கும் அவரது மகன் வீரையாவுக்கும் இடையிலான ஒரே நினைவு கூறத்தக்க சாட்சியம். இருத்தலியல் சிக்கலுக்கு உள்ளாகி தான் வீரையா ராஜுவாக மாறுகிறான். அதே போன்ற ஒரு நிலைக்கு மணியும் தள்ளப்படுகிறான். அவனுக்குள் ஏற்பட்ட எண்ணிலடங்காத கேள்விகளுக்கும் குழப்ப நிலைக்கும் பயத்திற்கும் காரணமாக அவனுடைய இருத்தல் மீதான கேள்வி முக்கிய இடம் பெற்றதாக அமைகிறது. தனக்குள் இருக்கும் இருப்பையும் தனக்கான இருப்பையும் தொலைத்து விடக்கூடிய புள்ளிக்குச் சென்று மீண்டு வரக்கூடிய ஒரு மனிதனின் கதையாக பஞ்சும் பசியும் நாவலை சொல்ல முடியும். குருவி கூடு கட்டுவதை பார்த்தும், தன்னை மறந்து போராட்டத்திற்குள் நுழைந்ததை வைத்தும் தன்னுடைய இருப்பினை மீட்டுருவாக்கம் செய்கிறான் மணி. மணியின் நிலை இப்படியிருக்க கமலா எல்லா சௌகரியங்களையும் மறந்து அவன் நினைவிலேயே வாடி வதங்குகிறாள். ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்த பெண்ணாக தங்கம்மாள் தனித்துவிடப்படுகிறாள். இவர்கள் ஒவ்வொருவரினுடைய இருத்தல் சார்ந்த சிக்கலும் தனித்தனியாக பார்க்கப்பட வேண்டியதாக இருக்கிறது. ஆனால் இங்கே அனைத்திற்கும் காரணமாக சுரண்டல் எனப்படக்கூடிய கொடிய நோயும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் தனிமனித இருப்பில் எழும் கேள்விகளுக்கு காரணமாகின்றது. மணி தன்னுடைய சொந்த ஊரை விட்டு வெளியேறுவது சாதாரண நிகழ்வு கிடையாது. அவனுடைய இருத்தல் மீதான கேள்வி அவனை வெளியூர் நோக்கி செல்ல வைக்கிறது. பொதுவாக இருத்தல் சார்ந்த கேள்வி மனிதனுக்குள்ளும் எழும்போது அவன் அதுவரை இருந்த இடங்களின் நினைவு தொடர்ந்து இம்சை படுத்தக்கூடியதாக மாறும்க்ஷ அதிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே அவன் வேற்றிடம் புகுவதற்கு முயல்வது இயல்பான நடவடிக்கையே ஆகும். அதே சூழ்நிலை தான் மணிக்கும் ஏற்படுகிறது. “கடைத்தர வாழ்க்கையின் அத்தனை குடும்பங்களையும் பயங்கரங்களையும் இனி தன்மைகளையும் அவள் கண்டான்." அவனுடைய இருத்தல் சார்ந்த கேள்விக்கு விடையாக அவனைவிட அதிகம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மனிதர்களின் சந்திப்பு அமைகிறது. “நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த உலகப் போகிற்கு கட்டுப்பட்டவர்கள்." என்ற வாசகம் அவனை வேறொரு நிலையை அடைந்து ஈடுபாட்டிற்கு உள்ளாக்குகிறது. 


      பஞ்சும் பசியும் நாவலில் இடம் பெற்று இருக்கக்கூடிய ஊர் மற்றும் வீட்டின் அமைப்பு குறித்த விவரங்கள் முக்கியமானவை ஆகும். கதை நிகழும் களம் இரண்டாவது அத்தியாயத்தில் முழுமையாக விவரிக்கப்படுகிறது. தென் தமிழக பகுதியில் நிகழும் இந்த கதையின் களம் அம்பாசமுத்திரம் ஆகும். அம்பாசமுத்திரத்திற்கும் கல்லிடைக்குறிச்சிக்கும் இடையில் ஓடும் தாமிரபரணி ஆறு, ஆங்காங்கே நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலை, ஹார்வி பஞ்சாலை, பாபநாச ஜல மின்சார உற்பத்தி நிலையம், அப்பர் டேம் என்ற காரையார் அணைக்கட்டு, ஆர்தர் ஹோப் ஏரி போன்ற நில அமைவுகளோடு அங்குள்ள போக்குவரத்து வசதிகள் நிலபுலன்கள் அனைத்தும் சொல்லப்படுகிறது. மேலும் கல்லிடைக்குறிச்சி பெரிய ஐயன்மார்களுக்கும் பார்ப்பன நிலப்பிரபுகளுக்கும் சைவ ஆதீன மடங்களுக்கும் பண்ணையார்களுக்கும் மட்டுமே அங்கிருந்த வேளாண் நிலங்கள் சொந்தமாக இருந்தது என்பதை சொல்லிவிட்டு அதற்கு பின்பு நாவலின் மையக்கருவாகிய நெசவுத் தொழிலுக்கு ரகுநாதன் வருகிறார். நெசவுத் தொழிலைப் பொறுத்தவரை அந்நிய முதலாளித்துவம், உள்நாட்டு பிரபுத்துவம் என்று இரண்டு நிலைகளில் நெசவாளிகள் துன்பப்படக்கூடிய சூழல் இருக்கிறது. வளர்ந்து வரக்கூடிய கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கும் ஊரைப் பற்றிய காட்சிகளாகவே கதை நிகழ்விடம் இருக்கிறது. அம்பாசமுத்திரம் இன்று அம்பை என்றும் நாவலில் வரக்கூடிய விக்கிரமசிங்கபுரம் வி.கே.புரம் என்றும் சேர்மாதேவி சேரன்மகாதேவி அல்லது சேரன்மாதேவி என்றும் இப்போது அழைக்கப்படுகின்றது. ஹார்வி மில்லை இப்போது மதுரா கோட்ஸ் மில் இன்று அழைப்பதாகவும் தெரிய வருகிறது. “அம்பாசமுத்திரம் விட்ட குறை தொட்ட குறையாக உள்ள அரைகுறை அடிமை நாட்டின் அனுபவ சித்திரமாக விளங்கி வருகிறது." என்று நாவலின் களம் சொல்லப்படுகிறது. போக்குவரத்து வசதியைப் பொறுத்தவரை ரயில், லாரி, கார், பஸ் என்று பல்வேறு வாகனங்கள் வந்து செல்லக்கூடிய ஊராக அம்பாசமுத்திரம் இருக்கிறது. வள்ளுவர் வாசகசாலை, அம்மன் கோவில், மூப்பனார் கடை என்று கதைக்களம் ஊரைச் சுற்றி நீள்கிறது. மதுரை பட்டினி பட்டாளம் குறித்து சொல்லக்கூடிய இடத்தில் மதுரையைப் பற்றிய குறிப்புகளும் நாவலில் இடம்பெறுகிறது. இருளப்பக் கோனார் நினைவாக அவரது மகன் வைத்திருக்கக்கூடிய படம் சங்கரன்கோவில் ஆடித்தவசு திருநாளில் எடுத்த படம் என்கிற குறிப்பு வருகிறது. இவ்வாறு பல ஊர்கள் பற்றிய செய்திகளை கொண்டதாக இந்நாவலுக்குள் இடம்பெறுகிறது. 


      ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய நெசவாளித் தெருவின் காட்சியை சொல்லியதோடு அங்கு இருக்கக்கூடிய மைனர் முதலியார் மற்றும் கைலாச முதலியார் வீடுகளோடு மற்றும் தாதுலிங்க முதலியாரினுடைய மங்கள பவனம் வீட்டையும் குறித்த விவரங்கள் வருகிறது. ஒன்பதாவது அத்தியாயத்தில் இருளப்பக் கோனாரின் குடிசையும் அவர் வசித்து வந்த ஊராகிய சிவகிரி ஜமீனும் பேசப்படுகிறது. அந்த நிலத்தில் ஜமீன் வசூல், கெடுபிடிகள், கடன், பட்டினி, ஜப்தி, அடி, உதை போன்ற வறுமை காட்சிகள் விளக்கப்படுகிறது. அங்குள்ள மக்கள் தங்களுக்கென்று இருந்த நிலங்களையும் ஜமீனிடம் விட்டு விட்டு தேயிலை தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றால் அங்கு கண்காணிகளிடம் அடிவாங்கி இறக்கின்ற நிலமையை முன்வைத்து நெசவுத் தொழிலாளர்கள் மட்டுமன்றி அனைத்து வகைப்பட்ட தொழிலாளர்களுடைய நிலையும் கவலைக்கிடமாக உள்ளது பதிவு செய்யப்படுகிறது.


       யதார்த்தவாதம் என்பது வாதங்களை முன் வைப்பதோ அல்லது உள்ளதை உள்ளபடியே சொல்வதோ மட்டும் அல்ல பயன்படுத்தக்கூடிய சொற்களிலும் தொடர்களிலும் நெருக்கத்தை கடத்துவதையும் யதார்த்தவாதத்தின் பண்புகளில் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம். ஏராளமான வட்டாரச் சொற்களையும் பழமொழிகளையும் புராண உவமைகளையும் கொண்டதாக இந்நாவல் அமைந்திருக்கிறது. அடையா நெடுங் கதவு, தீய்வு, தண்ணீர்த் தட்டு, டம்பாசாரி வாழ்க்கை, ஏழாம் பதிவிரதா, இச்சா பத்திய நிர்பந்தம், பிதுர்க்கைங்கரியம், அழிப்பாங்கதை போன்ற பல சொற்கள் நாவலில் இடம்பெற்றுள்ளது.


கொல்லன் பட்டறைல ஈக்கு என்ன வேலை -இருளப்பக்கோனார்


கர்ணன் போதையில அவரைத்தான் கையைக் காட்டி புட்டு போனானாம் - மைனர் முதலியார் கைலாசமுதலியாரைக் குறித்து


கர்ணனோடு உடன் பிறந்த கவசம் போல் -அம்மன் துணி 


கோடேறியவன் வீடு ஈடேறாது


சோறு கண்ட மூளியார் சொல்


அலை எப்ப ஓயும் தலை எப்ப முழுக


கருக்கலில் கபிலக்கரை


மலை விளங்கி மகாதேவனுக்கு கதவு ஒரு அப்பளம் - தாதுலிங்க முதலியார் குறித்து


நீலத் திரிந்து நின்றும் நீங்கா நிழல் போல


ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுத மேய்க்க 


குலத்தை கெடுக்க வந்த கோடாலி காம்பு- சங்கர் குறித்து தாதுலிங்க முதலியார் 


கூனனுக்கு மல்லாந்து படுக்க ஆசை கூடாது- மணி கமலா காதல் குறித்து தங்கம்மாள் 

       இப்படியாக பழமொழிகள் மற்றும் உவமைகள் தொடர்களாக நாவலின் சில இடங்களில் வருகிறது.


      கதை நிகழ்ந்த காலத்தை  மோரிஸ் மைனர் கார், ப்யூக் கார், லதா மங்கேஷ்கரின் இந்தி சங்கீதம் ரேடியாவில் ஒலிப்பது, வெற்றிலைப்பெட்டி, ஹைஸ்கூல் படிக்க செலக்சன் வைப்பது முதலான குறிப்புகள் வாயிலாக அடையாளம் காணும் வகையில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. “இலக்கியம் வரலாறு சார்ந்த யதார்த்தத்தின் பிரதிபடிமத்தை முன்வைப்பதில்லை, மாறாக சித்தாந்தத்துடன் இணைந்து செயல்பட்டவாறு யதார்த்தத்தின் விளைவை ஏற்படுத்துகிறது. யதார்த்தத்துடன் எந்த விதமாகவும் உறவு கொள்ளும் சுதந்திரம் இலக்கியப் பிரதிக்கு உண்டு அது தன்னிச்சையுடன் பாத்திரங்களையும் சூழ்நிலையும் நிர்மாணித்துக் கொள்கிறது." என்ற கருத்தோடு இந்நாவல் பொருந்துகிறது. உண்மையை எடுத்துரைப்பதால் சில இடங்கள் வேகமாக நகர்கின்றன. கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால்  கலை வறட்சி ஏற்பட்டுவிட்டதோ என்றும் சில சமயம் நான் எண்ணியதுண்டு. “வாழ்க்கை என்பது காலத்தைப் பொறுத்தது அல்ல; சிந்தனையையும் செயலையும் பொருத்தது. இலக்கியம் மனித சிந்தனையின் அளவுகோல்; சமுதாயமும் நாகரிகமும் செயலின் அளவுகோல்கள்."

என்று கூறும் ரகுநாதன் இந்நூலில் சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. “கலையானது ஒரு நிகழ்ச்சியின் அனுபவத்தை நமக்கு தருவதன் மூலம் அதற்கு இணையான லட்சியத்தை முழுவதுமாக புரிந்து கொள்ளத் துணை செய்கிறது" என்ற ஆல்துசரின் கருத்துக்கு சான்றாக பஞ்சும் பசியும் நாவலைக் கொள்ளலாம்.


      “யதார்த்த இலக்கியத்தின் உயர்நிலையே மானுட அன்புதான். மானுட அன்பு என்னும் சுடரை உள்ளுக்குள் கொள்ளாத இலக்கியங்கள் யதார்த்த இலக்கியங்கள் ஆக மாட்டா.” என்று தன்னுடைய சிறுகதைகள் குறித்து சொல்கிறார் ரகுநாதன். பிரிட்டிஷ் இந்தியாவின் பொருளாதார கொள்கையால் அனைத்து தொழிலாளர்களுமே கடுமையாக பாதிக்கப்பட்டனர். பஞ்சும் பசியும்  நாவல் நெசவாளிகளின் துயரை மட்டுமே பேசுகிறது. 1940ஆம் ஆண்டில் நிகழ்ந்த போராட்டங்களை மட்டும் பேசிவிட்டு பொருளாதார கொள்கையை தீர்க்கமான கேள்விக்கு உட்படுத்தாமல் போனது ஒருவகையில் குறையாக இருப்பினும் தமிழ் நாவல் வரலாற்றில் இந்நாவல் திருப்புமுனையாக மாறி முக்கியமான கதைப்போக்கை தீர்மானித்தது என்பதை மறுக்கமுடியாது. ரகுநாதனின் படைப்புகள் செக், ஹங்கேரியன், ஜெர்மன், போலீஷ், ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. அதேபோல ரஷ்ய இலக்கியத்தின் தமிழ் கண்ணியாக ரகுநாதனைப் பார்க்கலாம். ரகுநாதனின் ரஷ்ய இலக்கிய ஆர்வத்திற்குப் பின்னும் பாரதி இருப்பதாகவே நான் உணர்கிறேன். மாக்சீம் கார்க்கியின் படைப்புகள் மீது ரகுநாதனுக்கு அதிக நாட்டம் இருந்திருக்கிறது. கு. அழகிரிசாமியும் ரகுநாதனும் ரஷ்ய இலக்கியங்களை மொழிபெயர்த்தது குறிப்பிடத்தக்கது ஆகும். பஞ்சும் பசியும் நாவலின் செக் மொழிபெயர்ப்பு 50,000 பிரதிகளை கடந்து வாங்கப்பட்டிருக்கிறது. இதனை மொழிபெயர்த்த செக் நாட்டு அறிஞர் கமல் சுவலபில் நாவலில் இடம்பெற்ற அம்பாசமுத்திரத்தை நேரில் காண வேண்டும் என நினைத்திருப்பதை இந்நாவலின் இலக்கிய வெற்றி எனலாம். 


      தமிழ் இலக்கியத்தின் போக்கில் ஒரு முன்னோடி சிந்தனையாளர் தொ.மு.சி என்பதற்கு 22வயதில் இலக்கிய விமர்சனத் துறை பற்றி அவர் சிந்தித்ததும் இலக்கிய விமர்சனம் என்ற நூலை எழுதியதுமே போதுமானதாக இருக்கிறது. புதுமைப்பித்தன், டி‌.கே.சி, தி.க.சி, நா.வானமாமலை, கு.அழகிரிசாமி என அவர் இலக்கியத்திற்கு வைத்திருந்த நட்பு வட்டத்தில் இருந்த அனைவருமே கலை இலக்கிய பண்பாட்டுத்தளத்தில் முக்கியமான ஆளுமைகள் ஆவர். கலை இலக்கிய பெருமன்றத்தை தொடங்கியது, முற்போக்கு இதழ்களை தமிழுக்கு கொண்டு வந்தது முதலானவை ரகுநாதனின் செயல்பாட்டு வேகத்தை காட்டக்கூடியவை. இலக்கியத்திற்குள் மாற்றத்தைக் கொண்டு வந்து நவீனத்தை அறிமுகப்படுத்திய ரகுநாதனுக்கு மரபு இலக்கிய பரீட்சயமும் உண்டு என்பதை கவனிக்க வேண்டும். சிற்றிலக்கியங்கள் குறித்து “சமுதாய இலக்கியம் " என்றொரு நூலைப் படைத்திருக்கிறார். கம்பராமாயணத்தை இலக்கிய விமர்சனம் நூலில் விதந்தோதுகிறார். திருக்குறள் குறித்து ஒரு நூல் எழுதும் திட்டமும் ரகுநாதனுக்கு இருந்திருக்கிறது. சாந்தி, சரஸ்வதி, தாமரை ஆகிய இதழ்களின் வளர்ச்சிக்குப் பின் ரகுநாதனின் உழைப்பு இருக்கிறது. இலங்கையில் நிகழும் இலக்கிய முயற்சிகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதிலும் ரகுநாதனுக்கு பங்குண்டு. தாய், பாரதி காலமும் கருத்தும், புதுமைப்பித்தன் வரலாறு, மருதுபாண்டியர் சரித்திர நாடகம் மூலம் எனக்கு அறிமுகமான தொ.மு.சியின் பஞ்சும் பசியும் நாவல் இக்காலத்திற்கு தேவையான மானுட அறத்தை பேசுகிறது. 


துணைநின்றவை:


  • பஞ்சும் பசியும் - தொ.மு.சி ரகுநாதன்

  • இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும் - முனைவர் க. பஞ்சாங்கம்

  • அமைப்பு மையவாதம், பின் அமைப்பியல் மற்றும் கீழைக் காவிய இயல்- கோபிசந்த் நாரங்க் (தமிழில் எச். பாலசுப்பிரமணியன்)

  • மேலைத் திறனாய்வு அணுகுமுறைகள் - ப.மருதநாயகம்.

  • ஐரோப்பியத் தத்துவங்கள் - பேரா.ந.முத்துமோகன்

  • நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம் - ஜெயமோகன் 

  • இலக்கிய விமர்சனம் -தொ.மு.சி

  • முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் -தொ.மு.சி, பொன்னீலன்.

  • தொ.மு.சி என்றொரு தனித்துவ ஆளுமை - இரா.காமராசு, 22.அக்.2023, தினமணி நாளிதழ்

  • தொ.மு.சி. ரகுநாதன் கருத்துப் போராளி – முருகபூபதி, 16.ஜீன்.2023, அம்ருதா.

  • ரகுநாதன் படைப்புகள் ஓர் ஆய்வு- எஸ்.தோதாத்ரி, 13.பிப்.2023, கீற்று மின் பக்கம்.

  • தமிழ் மறுமலர்ச்சியின் முகம்- வேலாயுத முத்துக்குமார், அக்,2022, காலச்சுவடு.

  • தொ.மு.சி ரகுநாதன்... புதுமைப்பித்தன், கு.ப.ரா இருவரையும் கலந்து வடித்த கலைஞன்! - ச.தமிழ்ச்செல்வன், 17.பிப்.2018, விகடன்.

  • ‘பாரதி பித்தர்' தொ.மு.சி ரகுநாதன்- கலைமாமணி விக்கிரமன், 02.அக்.2010, தினமணி.


படைப்பு தகவு இதழில்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கூதிர் மின்னிதழ்

சிறிய பக்கங்களின் மாபெரும் சூதாட்டம்