திராவிட இந்தியா


திராவிட இந்தியா - டீ.ஆர். சேஷையங்கார் மொழிபெயர்ப்பு - க.ப. அறவாணன்.



     திராவிட கொள்கைகளின் மீதான பிடிப்பு எனக்கு இருந்தாலும் கூட திராவிடம் என்கிற சொல் தமிழ் எனும் பழம்பெரும் சொல்லை மட்டுப்படுத்துகிறதோ என்கிற ஐயம் எப்போதுமே எனக்குள் இருப்பது உண்டு. இந்த நூலைப் பொருத்தவரை திராவிட கொள்கைகளை தாங்கிய நூல் இதுவென சொல்ல முடியாது. ஏனென்றால், இது திராவிடத்தை கொள்கை மற்றும் தத்துவங்கள் சார்ந்து அணுகாமல் இனவியல் அடிப்படையிலான வரலாற்றோடு அணுகுகிறது. இதிகாசங்களையும் இலக்கியத்தையும் வெறும் கட்டுக்கதைகளாகவும் புனைவுகளாகவும் மட்டும் பார்க்காமல் அதனுள் ஒழிந்துள்ள வரலாற்று சான்றை வெளிப்படுத்துவதற்கான முயற்சியை நூலின் முதலில் இருந்து முடிவு வரை சேஷையாங்கார் செய்துள்ளார். இதுவரை ஆரியர்கள் கணவாய் வழியே வந்த வந்தேறிகள் என்பதுதான் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், இந்த நூலில் ஒரு புதிய கருத்தியல் தோன்றுகிறது. அது என்னவென்றால் ஆரியர்களுக்கு முன்பே திராவிடர்கள் எகிப்தைத் தாண்டி உள்ள பகுதிகளில் இருந்து பஞ்சாப் வழியாக தென்னிந்திய பரப்புக்குள் வந்தனர் என்பது தான். அது மட்டுமன்றி தமிழர்களின் பண்பாட்டு மாற்றத்தில் திராவிடர்கள் பங்கு அளப்பரியது என சொல்வதோடு சிந்து சமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகத்தோடு திராவிட நாகரிகம் ஒப்புமைப்படுத்தப்பட்டு ஆரிய நாகரிகத்தில் இருந்து வேறுபடுத்திப் படுகிறது. வரலாறை மட்டுமே பேசாமல் இது போன்ற வரலாற்றுக்கு முந்தைய காலம் என பலவற்றை சொல்லும் இந்த நூலில் முச்சங்கம் குறித்த செய்திகளை சொல்லும் போது அதில் ஏதோ புனைவு இருப்பதாகவே எனக்கு பட்டது. இனவியல் மற்றும் மொழியியல் பார்வை வழி ஆரியர்களை திராவிடர்களிடம் இருந்து வேறுபடுத்தி திராவிடர்கள் ஆரியருக்கு முந்தையவர்கள் என இந்த நூல் நிறுவுகிறது. திராவிட மதம் என முதலில் சைவத்தைக் கூறி பிறகு திருக்குறளை திராவிட மதம் என இந்த நூல் இரு வேறு விதமாக சொல்வதில் முரண் புலப்படுகிறது. இன்றைய திராவிட இயக்கங்கள் பேசும் கொள்கைகளில் சாதி, மத ஒழிப்பு உள்ளது. இந்த நூலில் வரும் திராவிட வரலாற்றுப் பார்வை திராவிடர்கள் தெய்வநம்பிக்கை உள்ளவர்களாகவும் ஆரியர்களின் யாகம் முதலான சடங்குகளில் இருந்து வேறுபட்ட சடங்கு முறை கொண்டவர்களாகவும் காட்சியளிக்கின்றனர். சாதியைக் குறித்த கண்ணோட்டத்தில் பார்க்கும போது ஆரிய வருகைக்கு முன்பே சாதி போன்ற பிரிவுகள் திராவிடர்களுக்குள் இருந்ததாகவும் அதைத் திராவிடர்கள் தான் தோற்றுவித்தனர் என்றும் சாதியின் வளர்ச்சி மற்றும் விரிவில் மட்டுமே ஆரியர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தினர் எனச் சொல்வதோடு திராவிட ஆரிய கலப்பு ஏற்பட்டு கடவுளர்களின் பெயரும் இந்து மதமும் எவ்வாறு தோன்றியிருக்க வேண்டும் என்கிற பார்வையை இந்த நூல் முன் வைக்கிறது. 


     திராவிடர்களின் வாணிக முறை, உறவு நிலைகள், ஆட்சிப் பிரிவுகள், சமயம், நீதிமுறை, வேளாண்மை, பாதுகாப்பு உள்ளிட்ட பண்பாட்டு அம்சங்களை இலக்கிய சான்றுகள் வாயிலாகவும் பல அறிஞர்களின் கூற்றுக்கள் மூலமாகவும் இந்த நூல் வெளிப்படுத்துகிறது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலம்பு, மணிமேகலை, மகாபாரதம், இராமாயணம் ஆகியன இலக்கியம் மற்றும் இதிகாச காப்பியங்கள் என்ற அடிப்படையில் பலவாறாக ஆராயப்பட்டு இருக்கிறது. இந்த நூலின் வாயிலாக திராவிடர்கள் யார் அவர்களது செயல் மற்றும் வரலாறு இந்தியப் பகுதிகளில் எவ்வாறு இருந்துள்ளது என்பதை தெளிவுற அறிய முடிகிறது..


                                     -அழகுராஜ் (17.04.2021)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்