தீராநதி
தீராநதி - வண்ணதாசன்
வண்ணதாசனின் 75 பிறந்தநாள் வெளியீடான இந்த நூல் ஐந்து சிறுகதைகளையும் தீராநதி என்ற ஒரு குறுநாவலையும் கொண்டதாக இருக்கிறது. இதில் உள்ள சிறுகதைகளில் கதாபாத்திரங்கள் போகிற போக்கில் சொல்லும் வார்த்தைகளுக்குள் மர்மத்தை மறைத்து வைத்துள்ளார் வண்ணதாசன், குறிப்பாக அதிகப்படியாக கதைகளில் வரும் வயதான கதாபாத்திரங்கள் அவர்களுக்குள் ஒழிந்துள்ள ஆசைகள் எல்லாம் மிக அழகாக அதேசமயம் விரசமின்றி பதிவாகி இருக்கிறது. வண்ணதாசன் எனும் படைப்பாளியின் புனைவுக்குள் உள்ள உண்மையை நாம் கண்டறிவது என்பது எளிதில் சாத்தியமில்லை.
தீராநதி கதையின் பெரும்பகுதி வங்கி அலுவலருக்கும் சுடலைத்தேவருக்கும் இடையிலான உரையாடலும் அவர்களுக்குள் இருந்த இனம் புரியாத ஓர் உணர்வும் தான். சுடலைத்தேவர் யார் என்றால் ஜெ.கேயின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் வரும் ஹென்றியைப் போன்ற ஒரு கதாபாத்திரம். ஆற்றில் உட்கார்ந்து தன்னையே மறக்கும் அளவு இயற்கையோடு ஒன்றிப் போய் பொன்னு என்பவனின் வாத்திய இசையை வெகுவாக ரசித்தது நம்மையும் ரசிக்கத்தான் வைக்கிறது. ஹென்றி பேபியைப் பார்ப்பது போல சிறுபிள்ளை ஒருத்தியின் நிர்வாணத்தில் விரசம் கொள்ளாமல் அதை வேறொரு கோணத்தில் அணுகியவர். தளவாய் மற்றும் வடிவு பற்றிய கதைகள், வடிவுக்கும் சுடலைத்தேவருக்கும் இடையிலான உறவு நிலைகள் பல வகையில சொல்லப்பட்டாலும் ஒரு இடத்துல சங்க இலக்கியத்தை நினைவு படுத்துற மாதிரி ஒரு நாரை அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குறத பாக்குறத அழகா சொல்லிருப்பாரு, தளவாய் அண்ணன் பட்டன் பைத்தியம் பிடித்து இருந்ததை ஊரில் உள்ள சில மூடநம்பிக்கையா இல்லை அறிவியல் அடிப்படையில் மரபு வழியில் அந்த மாதிரியான மனநல பாதிப்பு தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு வருமானு எனக்கு தெரியல, ஆனா வண்ணதாசன் அப்படி வாரிசு வரிசைல இப்படி யாராவது இருப்பாங்கனு சொல்றாங்கனு அவருக்கும் தெரியாத மாதிரியே சொல்றாரு. வடிவு திடீர்னு வந்து அந்த வங்கி அலுவலரு சண்முகம்கிட்டே நான் வடிவுனு சொன்னதும் அவர் சுடலைத்தேவர் சொன்ன கதைய எல்லாம் வடிவோட அவர் பொருத்திப் பார்த்தது வேடிக்கை தான். ஆறு, ஆற்றுமணல் என இந்த கதையில் வண்ணதாசனின் நுண்ணிய பார்வை வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாது மரப்பாச்சி பொம்மையை ஒரு குறியீடாகவே கதையினுள் கொண்டு வந்து நகர்த்தி கதையை முடித்துள்ளார்..
-அழகுராஜ் (06.04.2021)

கருத்துகள்
கருத்துரையிடுக