தமிழி

 தமிழி(தமிழ் மொழி இலக்கியத்தின் வரலாறு)

 - முனைவர் வி. ஆனந்தகுமார்



     தமிழ்மொழி இலக்கியத்தின் வரலாறு என அட்டைப்படத்தில் போட்டிருந்தாலும் இந்த நூல் இலக்கியத்தை தாண்டி பல விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதுகுறித்த தகவல்களை திரட்டித் தந்துள்ளது. தமிழ் என்னும் சொல் தமிழியில் இருந்துதான் வந்தது என்றும், தமிழி, தமிழ்மொழி என்கின்ற சொல்லின் பிறழ்வு என்றும் எங்கோ படித்திருக்கிறேன். அதைப்போல இந்த நூலும் தமிழில் என்னும் சொல்லில் இருந்துதான் தமிழ் என்னும் சொல் வந்ததாக கூறுகிறது. 


     பல தமிழ் இயக்கத்தவர்களின், பேராசிரியர்களின் மதிப்புரை மற்றும் வாழ்த்துகளோடு தொடங்கும் இந்த நூல் குமரிக்கண்டம் தொடங்கி ஆதி மனிதன் தமிழன் தான் என நிறுவும் சில சான்றுகளை கூறி தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களையும், பிறப்பு முறையையும் சொல்வதோடு எழுத்துச் சீர்திருத்தம் குறித்த தகவல்களையும் உள்ளடக்கி உள்ளது.சங்கங்கள் வளர்த்த தமிழ், இலக்கிய வரலாறு (சங்கம், சங்கமருவியவை, அறம், பக்தி, சிற்றிலக்கியம், இக்காலத்தவை), இலக்கண வரலாறு, நடுகல், கல்வெட்டு, சுவடிகள், சிற்பங்கள், சிற்பக்கலை, கோயில் கலை, அகழாய்வு தகவல்கள், இசைக்கலை, நாடகக்கலை, திரைக்கலை, பரதநாட்டியம், தமிழ் எண்கள், தமிழர்களின் கணித அறிவு, தமிழர்களின் நேரம் பகுப்பு, அகராதி, பத்திரிக்கை, சொற்பொழிவு, உரையாசிரியர்கள், பெண்பாற் புலவர்கள், கிறிஸ்தவ தமிழ் அறிஞர்கள்(கால்டுவெல், வீரமாமுனிவர்), கவிஞர்கள்(பாரதியார், பாரதிதாசன், சுரதா) சொற்பொழிவாளர்கள், வானொலி, தொலைக்காட்சி, தமிழகம் வந்த உணவு பொருட்கள், தமிழ் மன்றங்கள், சிந்து வெளி நாகரிகத்திற்கும் தமிழுக்கும் இடையிலான தொடர்பு நிலைகள் பலரது ஆட்சிக்காலத்தில் தமிழின் நிலை தமிழியல் ஆய்வுகள் முதலியவற்றை தொகுத்து கூறும் நூலாக இந்த நூல் விளங்குகிறது. இருப்பினும் குமரிக்கண்டம் குறித்த சில தகவல்கள் சங்கத்தை சிவனும் முருகனும் அலங்கரித்தது போன்ற சில குறிப்புகளிலிருந்து நான் முரண்படுகிறேன். இருந்தாலும் இந்த நூலில் உள்ள பல தகவல்கள் தகுந்த சான்றுகளோடு தமிழின் பல பரப்புகளுக்குள் நுழைந்த தன்மையுடையதாக காட்சியளிப்பது சிறப்பானதாக அமைந்துள்ளது.


                                     -அழகுராஜ் (03.04.2021)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

நரகவாசிகளின் வியர்வை -தீனன்