கானகன்
கானகன்- லஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார் அவர்களின் பல படைப்புகள் குறித்த விமர்சனங்களை நான் கேட்கும் போதே அவைகளை வாசிக்க வேண்டும் என்று விரும்பியதுண்டு. முதலில் கொமோரா நாவல் அடுத்ததாக உப்பு நாய்கள், ரூஹ் ஆகியன.
கானகன் நாவலைப் பொறுத்தவரை இது ஒரு காட்டைக் குறித்த படைப்பு ஆகும். கான் என்றால் காடு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்தக் காட்டில் நடக்கும் கதை தான் இந்த நாவல். சிறுவயதிலே பழங்குடியினர் மிருகங்களை வேட்டையாடி அவைகளை கொன்று அதன் இறைச்சியை உண்டு வாழ்கின்றனர் என்ற கருத்து என்னிடம் நிலைபெற்று இருந்தது. என்னைப் போல இங்குள்ள பலரும் அவ்வாறு நினைத்தே இருக்கலாம். டார்ஷான் முதலிய படங்களில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவை பார்க்க முடியும். அதேபோல் தான் கானகன் நாவலிலும் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவை பளிச்சி எனப்படும் பழங்குடியின மக்களை வைத்து லஷ்மி சரவணகுமார் அவர்கள் சித்தரித்து இருப்பார்.
பழங்குடியின மக்களில் ஒவ்வொரு இனத்தவரும் மாறுபட்ட கலாச்சார பண்பாட்டைக் கொண்டவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் விலங்குகளையும் பறவைகளையும் மரங்களையும் அளவுக்கதிகமாக நேசிப்பவர்கள்.. தேவைக்கு மட்டுமே வேட்டையாடுபவர்கள். விலங்குகளின் உடல் மற்றும் சப்த மொழிகளை நன்கறிந்து செயல்படும் தன்மை கொண்டவர்கள்.. பலர் இறைச்சி உணவை சாப்பிடவே கூடாது.. காய்கறிகள், பழங்கள் தான் ஆரோக்கியமானவை என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தாலும், இறைச்சி உணவு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்று. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு அவர்களின் உணவுத் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றால் அதில் இறைச்சி உணவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
நாவலில் பல வேட்டையாடும் பகுதிகள் வந்தாலும், என்னை மெய்மறந்து வாசிக்க வைத்த பகுதி புலியை வேட்டையாடியதும், யானையை வேட்டையாடியதுமே ஆகும். மனிதனின் சுயநலப் போக்கு, காடுகள் அழிப்பு, உயிர்களின் சமநிலை தவறுதல், மனிதனின் காம வேட்கை என பலவற்றை எழுத்தாளர் தொட்டு சென்றுள்ளார். அமைதியாக வாழும் விலங்குகளிடம் மனிதன் மிருகத்தனமாக நடந்து கொள்வது. எந்த தேவையுமின்றி ஒரே நாளில் பல உயிர்களை அழிப்பதன் விளைவுகள் எவ்வளவு அபாயமானது என்பதை இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
மனிதன் தனது வீரத்தை வெளிப்படுத்தும் செயல் முறைகளில் ஒன்று வேட்டையாடுதல் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. எவ்வளவு பெரிய தேவையானாலும் மனிதன் ஒரு சினை அடைந்த பெண் விலங்கை வேட்டையாடுவது என்பது மிக குரூரமானது. அவ்வாறு வேட்டையாடினால், அதற்கான முடிவு எதுவாக அமையும் என்பதற்கு நாவலில் முடிவே காரணமாகும்.
தங்கப்பன், வாசி, சடையன் ஆகிய கதாபாத்திரங்கள் ஏதோ ஓர் இடத்தில் நின்று தொடர்ந்து நாவலை விறுவிறுப்பு தன்மையுடன் நகரத்தி செல்கின்றனர். சடையன் என்ற கதாபாத்திரம் இந்த நாவலில் வரும் இடங்கள் குறைவு என்றாலும் நாவலில் தீடீரென நிகழும் கதை மாற்றத்திற்கும் பழங்குடியின மக்களின் வாழ்வு முறையை முழுமையாக வெளிக்கொண்டு வருவதிலுமான முக்கிய பங்கு சடையனுக்கு உண்டு...
இலக்கியத்தை பொருத்தவரை சில சொற்கள் கதையின் அமைவிடத்தை கருதி வாசகரை அந்த இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்துவது இயற்கையே. அதேபோல, கானகன் நாவலிலும் கொச்சை சொற்கள் சில இடங்களில் வருகிறது. ஒரு இலக்கியம் யாரைக் குறித்து சொல்லப்படுகிறதோ அவர்களைக் குறித்த வரலாறாகவே பதிவு செய்யப்பட வேண்டும். அந்த வகையில் லஷ்மி சரவணகுமார் அவர்களின் இந்த படைப்பு காட்டைக் குறித்த புரிதலை நிச்சயம் அதிகப்படுத்தும்.
வனவிலங்குகள் அழிவு, பழங்குடி வாழ்வு என இயற்கை மற்றும் சூழலியல் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்திய நாவல். அனைவரும் வாசியுங்கள்..
-அழகுராஜ்
15.08.2020
கருத்துகள்
கருத்துரையிடுக