திரும்பிப் பார்த்து தீர்வுக்கான முடிவை எடுக்கலாம் - அழகுராஜ்



விரிவும் ஆழமும் தேடி அமைப்பின் இரண்டாவது அரங்க கூடுகை வைக்கம் போராட்டம் மற்றும் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் நூற்றாண்டு கருத்தரங்கமாகும். அம்பேத்கரியல் சார்ந்த முதல் கருத்தரங்கினுடைய‌ தொடர்ச்சியாக இந்த கருத்தரங்கினை கொள்வது சரியாக இருக்கும். பிரிவினைக்குட்படுத்தி உரிமை கொண்டாடும் போக்கு சமீபகாலமாக வழக்கத்திற்கு மேல் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் பொருத்தமான நிகழ்வுகளாக இத்தகைய கருத்தரங்கங்களை நாம் இனம் காண முடியும். முதல் கருத்தரங்கின் தொடர்ச்சி என இரண்டாம் இந்த இரண்டாவது கருத்தரங்கை சொல்வதற்கான தொடர்பு புள்ளியாக இவ்விரண்டு போராட்ட வரலாறுகளையும் எழுதியிருக்கக்கூடிய எழுத்தாளர் பழ.அதியமானின் நூலிலுள்ள அம்பேத்கர் நூல்களில் இருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்களை கூறலாம்.

      இந்த இரண்டு போராட்டங்களிலும் காங்கிரஸாராகவே வரதராஜுலு நாயுடுவும் பெரியாரும் விளங்கி இருக்கின்றனர். பிற்காலத்தில் இருவரும் எதிரெதிர் துருவ நிலைப்பாடு கொண்ட அரசியலில் ஈடுபட்டிருப்பினும் அந்தச் சூழலில் எப்படி இருந்தனர் என்பதை இவ்விரு நூல்களின் வாயிலாக அடையாளம் காண முடியும். காந்தியும் ராஜாஜியும் இரண்டு போராட்டங்களிலும் தலைகாட்டுகின்றனர். ராஜாஜியின் கருத்து காங்கிரஸின் வேலை இதுவல்ல கதர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விடுதலைப் போராட்ட வேலைகள் இருக்கிறது என்பதே‌ 1924,25 காலகட்டத்தில்  ராஜாஜியின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது. தீண்டாமை, சமூக சமத்துவம் ஆகியவை ராஜாஜிக்கு இரண்டாம் பட்சமாகவே இருந்திருக்கிறது. காங்கிரஸின் குறிக்கோள்களில் ஒன்று தீண்டாமை ஒழிப்பு என்பதை மறந்தவராகவே  ராஜாஜி எப்போதும் செயல்பட்டிருக்கிறார். ஒரு போராட்டம் தக்க முறையில் காத்திரமாக நடந்தால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான முன்மாதிரி வடிவமாக வைக்கம் போராட்டத்தை அணுகி, அதிலுள்ள சாதக பாதக நிலைகளை ஆய்வது இன்றும் பயன்தரக்கூடியது. நூறாண்டுகளுக்கு முன்பு எப்படி எல்லாம் மக்கள் நடத்தப்பட்டு இருக்கின்றனர் என்பதையும் அதற்கான உரிமை கேட்கும் மக்கள் எப்படி போராடினர் என்பதையும் பழ‌.அதியமானின் வைக்கம் போராட்டம் நூல் ஆவணப்பூர்வ அடையாளமாக்குகிறது.


      பத்திரிக்கை செய்திகள் மற்றும் ஆவணங்கள் ஆகியன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு கோணத்தில் நூல் ஆய்ந்து எழுதப்பட்டிருப்பதால் ஏற்றுக் கொள்ளக்கூடிய அனைத்து தரவுகளும் போதிய அளவில் காணப்படுகிறது. பத்திரிகைகள் எவரால் நடத்தப்பட்டது அது எந்தச் சார்புடையது எதன் பக்கம் தீவிரமாக நிற்கிறது என்பதை ஆய்வுக்கு உட்படுத்தி விளக்குவதுதான் ஒரு ஆய்வாளர் செய்யக்கூடிய முக்கியமான பணி. அந்தப் பணியினை பழ.அதியமான் அவரது அனைத்து நூல்களிலுமே செய்திருக்கிறார். அதில் சேரன்மாதேவி குருகுல போராட்டமும் திராவிட இயக்க எழுச்சியும் மற்றும் வைக்கம் போராட்டம் ஆகிய இரண்டு நூல்களும் முன்னணியில் நிற்கின்றன. வ.வே.சு ஐயர் நினைவகத்தில் இருக்கக்கூடிய கடிதங்களையும் பழ.அதியமான் பரீட்சை பார்த்திருக்கிறார். அவருடைய நினைவகத்தில் இருக்கக்கூடிய கடிதங்களில் இருக்கும் தவறுகளையும் நூலில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஒரு ஆய்வு என்பது தொகுப்பது என்பதோடு நின்று விடாமல் பின்னணி காரணங்களை விளக்குவதாக இருக்க வேண்டும் அப்படி விளக்கக்கூடிய ஆய்வு நூலாக பழ. அதியமான் எழுதியிருக்கக் கூடிய நூல்களினுடைய வரவு தமிழ் சூழலில் அறிவார்ந்த சிந்தனைத்தளத் தாக்கத்தின் வலிமையுடன் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.


     பத்திரிக்கை நடுநிலைமையுடன் இருக்க வேண்டும் என்ற கருத்தாக்கம் பலகாலம் இதழியலில் தேய்வழக்காக இருந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தினமலர் வெளியிட்ட செய்தி இந்த இடத்தில் குறிப்பிட்டு பார்க்க வேண்டியதாகும். காலந்தோறும் பத்திரிகைகள் சார்பெண்ணத்துடன் தான் நடத்தப்பட்டு வந்திருக்கிறது‌. ஒரு ஊடகமாக அவரவர் கருத்தை வெளிப்படுத்த பத்திரிகைகள் பயன்பட்டிருக்கிறது என்பதை போராட்ட கால நடவடிக்கைகள் மூலம் புரிந்து கொள்ள முடியும். பிராமண சார்பு பத்திரிகைகள் வைதீகர்கள் பக்கமும் பிராமணரல்லாதவர் பத்திரிகைகள் சிலவற்றை தவிர்த்து மீதி இருக்கும் அனைத்து பத்திரிகைகளும் பெரியார் மற்றும் வரதராஜுழு நாயுடு பக்கமும் இணைந்து தங்களுடைய ஆதரவு குரலை வெளிப்படுத்தி இருக்கின்றன. தலைவர்களுக்கு சார்பாக நிற்கக்கூடிய பத்திரிகைகளாகவே பத்திரிகைகள் எப்போதும் இருந்து வருகின்றது. சுதேசமித்திரன், நவசக்தி, தமிழ்நாடு ஆகிய இதழ்கள் வைக்கம் போராட்டத்திற்கு ஆதரவாகவும் மெட்ராஸ் மெயில் பாலபாரதி முதலானவை வைதீக ஆதரவு நிலைப்பாட்டிலும் இருந்திருப்பதை நாம் பகுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. சுதேசமித்திரன் வைக்கம் போராட்டம் மற்றும் சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில் இருவேறு நிலைப்பாடு கொண்டிருந்ததையும் கவனம் கொள்ள வேண்டும். எப்போதும் எந்த பத்திரிக்கையும் நடுநிலைச் சார்போடு இயங்குவது என்பது சாத்தியமில்லை ஏதாவது ஒரு சார்பு நிலை பத்திரிகைகள் மேல் ஒட்டிக்கொண்டு தான் இருக்கும். உண்மை நிலையை பத்திரிகைகள் நேர்மையாக கூறுகின்றனவா என்பதுதான் நாம் கவனத்தில் எடுக்க வேண்டியவை. குருகுல போராட்ட காலகட்டத்தில் வ.வே.சு ஐயரை ஆதரித்த சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகள் குருகுல பிரச்சனையை நிறுவன பிரச்சனையாக பார்த்தன வரதராஜுலு நாயுடுவை ஆதரித்த பத்திரிகைகள் குருகுல பிரச்சனையை சமூக பிரச்சனையாக பார்த்தன இப்படியாக பத்திரிகைகளினுடைய பார்வைகள் வழியாக அவற்றின் சார்பு நிலைப்பாட்டை நாம் அறிய முடிகிறது. வ.வே.சு ஐயர் பாலபாரதி இதழையும் திரு.வி.க நவசக்தி இதழையும் வரதராஜுலு நாயுடு தமிழ்நாடு இதழையும் பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களுக்குப் பின்பு 1925 மே மாதத்தில் தன்னுடைய குடியரசு இதழை பெரியார் தொடங்குகிறார். குடியரசு இதழில் போராட்ட காலத்தின் வேர்களை எல்லாம் பெரியார்  தொடர்களாக எழுதுவதையும் நாம் கவனித்து பார்க்க வேண்டும். 


வைக்கம் போராட்டத்தை பொருத்தவரை பெரியாருக்கு போராட்டத்தில் பங்கு இல்லை என்பதோடு அவரை ஏன் வைக்கம் வீரர் என்று அழைக்கின்றார்கள் என்ற கேள்வியையும் சேர்த்து கேட்கின்றனர். திரு.வி.க தான் நவசக்தியில் பெரியாருக்கு வைக்கம் வீரர் என்ற அடைமொழி கொடுக்கிறார். மற்றொரு பக்கம் காந்தியடிகளுக்கும் போராட்டத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன என்பதை ஒரு ஆய்வு தான் தரவுகள் அடிப்படையில் சொல்ல வேண்டி இருக்கிறது. அந்த ஆய்வினை 10 வருட காலத்திற்கும் மேலான உழைப்பினைச் செலுத்தி உண்மைநிலை இதுதான் என்று நம்மிடையே கொண்டு வந்திருக்கிறார் பழ.அதியமான். இந்த நூலின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், தமிழ்நாடு அரசு வைக்கம் போராட்டம் நூலை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் வெளியிட இருப்பதாக கூறி இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போராட்டத்தினுடைய வரலாறை வரிசைக்கிரமமாக நெறிப்படுத்தி கொடுத்த ஒரு ஆய்வாளருக்கு செலுத்தக்கூடிய மரியாதையாகவே அரசின் மொழிபெயர்ப்பு முன்னெடுப்பை கருத முடியும். மேலும் இந்த வைக்கம் போராட்டம் நூல் இன்றைய காலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய தேவையும் இருக்கிறது‌. வைக்கம் கோவில் நுழைவு போராட்டம் என்று பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறனர்‌. உண்மையைச் சொல்லப்போனால் அது கோவிலை சுற்றி இருக்கக்கூடிய வீதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடப்பதற்கு அனுமதி கேட்டு நடத்திய போராட்டம் என்பதை மறைத்து விடுகின்றனர். இங்கு தெரு என்பதும் கோவில் என்பதும் வேறு வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கோவில் இருந்த தெருக்களில் கூட நடப்பதற்கான அனுமதி இல்லாத சூழல்தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கிறது. இன்றும் கூட கோவில்கள் சார்ந்த சாதிய மோதல்களும் தீண்டாமை சிக்கல்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு கோவில் நிர்வாகம் சமஸ்தானத்தின் கீழ் செயல்படக்கூடிய நிலையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு அனுமதி கேட்டு போராடியிருக்கிறார்கள் என்பது தான் வியப்பளிக்க கூடியது. வைக்கதில் ஒரு நாய்க்கு கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய சுதந்திரம் கூட மனிதர்களுக்கு மறுக்கப்படுகிறது என்பதற்கு எதிரான ஓங்கிய குரலாக வைக்கம் போராட்டத்தை நாம் காணலாம்.


காந்தி ஒவ்வொரு முறையும் எப்படிப்பட்ட தீங்கு வரினும் சத்தியாகிரகிகள் வன்முறையில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். மேலும் எவருடைய மனதும் புண்படாதவாறு போராட்டம் வெற்றி அடைய வேண்டும் என்பதும் அவருடைய நோக்கமாக இருந்திருக்கிறது. எவர் எவருக்காக போராட வேண்டும் போராட்டத்தின் முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை உற்று கவனிக்க கூடியவராகவும் காந்தி இருந்திருக்கிறார். கேரளாவில் வைக்கம் போராட்டத்தை வைக்கம் சத்தியாகிரகம் என்றே அழைக்கின்றனர். மூன்று பேர் கோவில் வீதியினை அடைந்து எங்களை உள்ளே நடந்து செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்கக்கூடிய வகையில் மிகவும் சாதுவாக இந்த போராட்டமானது நடைபெற்று இருக்கிறது. புதிய போராட்ட வடிவம் என்பதால் செயல்படுத்துவதில் அதீத கவனத்தை செலுத்தி இருக்கின்றனர். தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டமும் கைவிடப்படக்கூடிய சூழலல நெருங்கும் நேரத்தில் இந்த போராட்டத்தை மீட்டுக் கொண்டுவந்தவர் பெரியார் என்று சொன்னால் அதில் மிகையேதும் இல்லை. 



      1924 ஏப்ரல் 13 ஆம் நாளில் பெரியார் வைக்கத்திற்கு சென்ற போது அரசுக்கு எதிராக போராட வந்த அவரை அரசே வரவேற்றது என்பது தான் இதில் நாம் உற்றுப் பார்க்க வேண்டிய நிகழ்வாகும். பெரியாருக்கு அந்தக் காலகட்டத்தில் எப்படிப்பட்ட மதிப்பு பிற தலைவர்கள் மத்தியில் சமஸ்தானங்கள் மத்தியில் இருந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு தகுந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. டி. கே. மாதவன், கே. பி. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் முதலான தலைவர்கள் இந்த போராட்டத்தை தொடங்கியிருந்தால் கூட இதனை மறுமலர்ச்சி அடைய செய்து முனைப்போடு கொண்டு சென்றவர்  பெரியார். கேரள போராட்டத் தலைவர்களை விட ஒரு படி முன்னேறி பெரியார் மட்டும்தான் இரண்டு முறை வைக்கத்திற்காகப் போராடி சிறைக்கு சென்று இருக்கிறார். போராட்ட இயக்கத்தின் தலைவர்களை கைது செய்து விட்டால் சத்தியாகிரகம் படுத்து போய்விடும் என்று அரசாங்கம் கருதிய போது அவர்களின் கைது நடவடிக்கைக்கு பின்னான மாற்றுத்தலைவராக பெரியார் வந்து நின்று அந்தப் போராட்டத்தை வீறுகொண்டெழ செய்திருக்கிறார்‌. பெரியார் மட்டுமல்லாது நாகம்மையாரும் இந்த போராட்டத்தில் பெண்களோடு இணைந்து போராடியிருக்கிறார். சத்தியாகிரகிகள் ஒருவித உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்கள் உயிர் போனாலும் அதை மீறி நடக்க மாட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக மிக சாதுவான முறையில் இந்த போராட்டத்தை கலந்து கொண்ட அனைத்து போராட்டக்காரர்களும் ஒன்றிணைந்து செயல்படுத்தி இருப்பது தான் இந்த போராட்டத்தினுடைய மற்றுமொரு வெற்றியாக நம் முன்னே காணப்படுகிறது. நான் விரும்பி வைக்கத்திற்கு புறப்பட்டு போகவில்லை அங்கிருந்த நிலைமையையும் அங்கிருந்த தலைவர்களினுடைய அழைப்புகளுமே என்னை அங்கு கொண்டு சென்றது என பெரியார் ஓரிடத்தில் சொல்கிறார்.


     இந்தப் போராட்டம் சொல்லக்கூடிய செய்தி வெறுமனே ஆலய நுழைவு என்பதோடு நின்று விடாமல் சமூக அடுக்குகளுக்கு இடையில் இருக்கக்கூடிய இடைவெளியை குறைப்பதுமாக இருந்திருக்கிறது. ஈழவர்களும் நாயர்களும் புலையர்களும் இணைந்து போராடியது தான் இந்தப் போராட்டம் அடைந்து இருக்கக்கூடிய மற்றுமொரு வெற்றி. போராட்டத்தின் முடிவினை நாம் திரும்பிப் பார்த்தோமானால் போராடிய தொண்டர் ஒருவருடைய கண்ணில் சுண்ணாம்பு தேய்த்தவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். எந்த பெரியாருக்கு எதிராக அவர் இறந்து விட வேண்டும் என்று யாகம் நடத்தப்பட்டதோ அந்த பெரியார் உயிரோடு இருந்த நிகழ்ச்சியும் எதிராக செயல்பட்டவர்கள் இறந்து போனதும் வரலாறு பதிவுகள்.


      கோவை அய்யா முத்துவின் கட்டுரை மிக முக்கியமான கட்டுரையாக இருக்கிறது. அதில் பாரதத்தினுஉடைய பெருமை, தீண்டாமை பேய், வைக்கம் சத்தியாகிரகம், சாதிய இருப்பிற்கான காரணம், சாதிய ஏற்றத்தாழ்வு, ஆபத்து காலங்களில் மக்கள் கவனமாக நடந்து கொள்ளக் கூடிய முறை போன்றவற்றோடு மகாத்மா காந்திக்கான அழைப்பையும் விடுக்க கூடியதாக அந்த கட்டுரை அமைந்திருக்கிறது. மேலும் காந்திக்கும் வைதீகர்களுக்கும் நடந்த உரையாடல் முக்கியமான பகுதி. உரையைக் காட்டிலும் உரையாடலின் மீது கவனம் அதிகம் குவியும் அப்படிப்பட்ட கவனம் குவியப்பட்ட உரையாடலாக காந்திக்கும் வைதீகர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல் காணப்படுகிறது. இந்த உரையாடலை விரிவு ஆழமும் தேடி சிறு புத்தக வடிவில் பங்கேற்பாளர்களுக்கு கொடுத்து காந்தியினுடைய நிலைப்பாடு என்ன? தீண்டாமைக்கு எதிரான காந்தியினுடைய குரல் எப்படிப்பட்டது என்பதை தெளிவாக சொல்லக்கூடியதாக இருக்கிறது. அதேபோல சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில் பக்தவத்சலம் மற்றும் பி.கந்தசாமி ஆகியோருக்கு இடையில் நடந்த விவாதம் முக்கியமான ஒரு விவாதம் ஆகும். அவரவர் கருத்தை அவரவர் நிலையில் நின்று வெளிப்படுத்தக் கூடியதும் மாற்றுக் கருத்திற்கு பதிலளிப்பதுமான உரையாடலின் வழியாகத்தான் ஓர் திருந்திய முடிவினை நாம் எட்ட முடியும். அப்படியான உரையாடல்களையும் விவாதங்களையும் அதியமான் தன்னுடைய இரண்டு நூல்களிலும் சரியான முறையில் எடுத்துக் காட்டி இருக்கிறார்


      நாம் பத்திரிக்கை செய்திகள் குறித்து பத்திரிக்கை செய்திகளின் வழியாக ஆய்வாளர் நமக்கு கொடுக்கக்கூடிய அல்லது காட்டக்கூடிய தகவல்களை குறித்து பார்த்து விட்டோம்.  இலக்கியத்தின் உடைய பங்கு போராட்டத்திற்குள் இருந்ததா என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. ஏணியேற்ற நிலையம் என்ற அ‌. மாதவையாவின் சிறுகதை சேரன்மாதேவி போராட்டத்தை மையப்படுத்திய ஒரு சிறுகதையாகும். முகமது பஷீர் முதலானவர்களும் பிற்காலத்தில் வைக்கம் போராட்டம் குறித்து தங்கள் புனைவுகளில் எழுதியிருக்கின்றனர். இலக்கியத்திலும் இடம்பெறக்கூடிய அளவிற்கு இவ்விரு போராட்டங்களும் காணப்பட்டு இருக்கின்றது. இவற்றைத் தாண்டி தமிழ் மக்களின் ஆதரவு வைக்கம் போராட்டத்திற்கு அதிகளவில் இருந்துள்ளது. வைக்கம் தீண்டாமை விடுதலையின் அடையாளத்திற்கான சொல்லாகவே தமிழ்நாட்டில் இன்றுவரை புழங்குகிறது. சேரன்மாதேவி குருகுல பிரச்சினையிலும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தலையிட்டிருக்கின்றனர்.


      வைக்கம் போராட்டம் நுழைவை வற்புறுத்தியது என்றால் சேரன்மாதேவி போராட்டம் இருப்பை உறுதிப்படுத்த தோன்றியது என கூறலாம். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இந்தியாவின் ஒட்டுமொத்த பகுதிகளிலும் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியதாக இவ்விரு போராட்டங்களையும் நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்தியாவிலிருந்த பெரும்பாலான தலைவர்கள் உற்று நோக்கிய போராட்டமாக வைக்கம் போராட்டமும் தமிழ்நாட்டின் உள்ள அதிக தலைவர்களின் உடைய ஈடுபாடு இருந்த போராட்டமாக சேரன்மாதேவி குருகுல போராட்டமும் இருந்திருக்கிறது. பெரியார் தலைவரான போது அதனை ராஜாஜியும் வரதராஜுலு நாயுடு தலைவரான போது வ.வே.சு அயரும் எதிர்க்கும் அளவிற்கான தாக்கத்தை காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்படுத்துமளவு தீவிரமாகவும் விடாப்பிடியாகவும் போராட்டம் கைக்கொள்ளப்பட்டதை நாள்வரிசையில் அமைந்த குறிப்புகள் வழி காணமுடிகிறது. 1970ல் வ‌வே.சு ஐயரின் மகன் வி‌.சு கிருஷ்ணமூர்த்தி சேரன்மாதேவி போராட்டக்காரர் மீது எரிச்சல் இருப்பதாக எழுதி இருக்கிறார். ஒரு போராட்டம் அது நடந்து முடிந்து 50 வருடத்திற்கு பின்பும் கூட இவ்வளவு பெரிய புகைச்சலை கொண்டிருக்கிறது என்றால் இன்னும் தீண்டாமையும் சனாதனமும் தன்னுடைய இருப்பை உறுதி செய்வதற்கு பல்வேறு நிலைகளில் நின்று போராடிக் கொண்டிருக்கிறது என்பதே நமக்குத் தெரிகிறது. தமிழ் குருவுல வித்யாலயம் எனப்பட்ட பரத்வாஜா ஆசிரமக் குருகுலத்தில் தமிழ் ஆசிரியராக இருந்த த.மு சொர்ணம் பிள்ளை மீது இலக்கியப் புரட்டு புகார் இருந்திருக்கிறது இந்த இலக்கிய புரட்

டை மு‌.அருணாசலம் முதலான தமிழ் அறிஞர்களினுடைய கருத்தின் மூலம் நாம் தெரிய முடிகிறது. வ.வே‌சு ஐயரினுடைய குருகுலத்தில் அவரது எண்ணம் மற்றும் கட்டுப்பாட்டை மீறி சில நடவடிக்கைகள் நடந்து இருக்கிறது என்பதும் அவர் பல்வேறு காரியங்களில் உறுதி உடையவராக நில்லாமல் தன்னை நெகிழ்வுடையவராக மாற்றி இருக்கிறார் என்பதும் சேரன்மாதேவி போராட்ட வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. பிராமணர் பிராமணரல்லாதார் உணவு பிரச்சனையில் தொடங்கிய போராட்டம் தான் சேரன்மாதேவி குருகுலத்தில் நிகழ்ந்த போராட்டம்‌. காந்தியின் சத்தியாகிரக ஆசிரமம் சிரத்தானந்தரின் காங்கேரி குருகுலம் ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனம் போன்ற பிற பள்ளிகளும் சேரன்மாதேவி குருகுல போராட்டத்திற்குள் ஒப்புமை நோக்கில் பேசப்பட்டிருக்கிறது. பந்தி வித்தியாசம் கல்வி வித்தியாசமாக மாறக்கூடிய நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதை முன்வைத்தே போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. குருகுலம் கல்வியை கற்றுத் தருவதை விட வர்ணாசிரம படிநிலைகளை கற்றுத் தருவதன் மீதுள்ள அதிருப்தியாகவும் குருகுல போராட்டத்தை நாம் கருத முடியும். பிற்காலத்தில் சனாதனத்தை நியாயப்படுத்துவதற்கு வ.வே.சு ஐயர் முனைந்திருப்பதும் தான் தப்பித்து கொண்டு மறைமுகமாக நின்று ஆசிரமத்தில் குருகுலத்தை நடத்த இருந்ததும் பத்திரிகை தகவல்கள் வாயிலாக தெரிகிறது.


குருகுலத்திற்கு இடம் வாங்கி தந்தவர் வைரவன் சண்முகம் செட்டியார். நிதி உதவி அளித்தவர்களில் பெரும்பாலானோர் பிராமணர் அல்லாதவர்கள் அப்படி இருக்க பிராமணர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை ஏன் கொடுக்கப்படுகிறது என்கிற கேள்வி நியாயமான கேள்வியாகவே இருக்கிறது. குருகுலம் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் சமத்துவத்தை கடைப்பிடித்த வ.வே.சு ஐயர் பிற்காலத்தில் அந்த சமத்துவத்தை மாற்றி கலைத்துப் போட்டது தான் அவர் மீதான நம்பிக்கையை இழக்க வைத்திருக்கிறது. காவிய கண்ட கணபதி சாஸ்திரி முதலானவர்கள் சாஸ்திரத்தில் முற்போக்குக்கு இடம் உண்டு என்று போராட்டத்தை முன்னிட்டு பல்வேறு தீர்வுகளைக் கொடுத்திருக்கின்றனர்‌. அப்படியிருந்தும் கூட அவை சரியான முறையில் காது கொடுத்து கேட்கப்படாத நிலை தான் இருந்திருக்கிறது. எம், கிருஷ்ணமாச்சார்யா, மகாதேவ ஐயர் முதலானவர்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து தூண்டி விடுவதிலும் அல்லது இவற்றை பெரிதாக்குவதிலும் ஈடுபட்டது வெளிப்படையாக தெரிகிறது. வரதராஜுலு நாயுடு ஒரு நல்ல தீர்வை எதிர்பார்த்தவராக தொடர்ந்து உரையாடலை வளர்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். 1922 ஆம் ஆண்டு தமிழ்நாடு இதழில் நாயுடு குருகுல உதவிக்காக எழுதியிருக்கிறார் த

திரு.வி.கவும் நவசக்தி இதழில் குருகுலத்திற்கு உதவி செய்யுமாறு எழுதியிருக்கிறார். இவ்வாறு குருகுலம் தொடங்கப்படக்கூடிய நேரத்தில் ஆதரவு திரட்டிய பத்திரிகைகள் எல்லாம் பிற்காலத்தில் எதிரணிக்கு திரும்புவதற்கு அல்லது எதிர் பட்டு நிற்பதற்கு காரணம் சமத்துவமின்மை என்ற ஒரு காரணம்தான். 1935இல் வரதராஜுலு நாயுடு இந்து மகாசபையில் சேர்ந்தார் என்பதையும் கவனிக்க வேண்டியதிருக்கிறது‌. சேரன்மாதேவி மற்றும் வைக்கம் போராட்டம் நடந்த காலகட்டத்தில் நீதிக் கட்சியை சார்ந்தவர் வரதராஜுலு நாயுடு என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது எழும்பிய போதிலும் கூட தன்னை ஒரு காங்கிரஸ்காரராகவே எப்போதும் செயல்பாட்டு வழியாக நிலை நிறுத்தியிருக்கிறார். ஒருவரின் கருத்தை எப்படி அவர் தோன்றிய பின்னணிகொண்டு அடக்கலாம் என்பதாக இந்த நிகழ்வு இருக்கிறது.


       நாங்குநேரி பள்ளி சம்பவம், கோயில் பிரச்சனைகள், கல்விக்கொள்கைக்குள் சனாதன செயல்களை புகுத்துதல், நவீன மாற்றத்தை பிடரிமயிர் பிடித்து இழுத்து பின்னே சாய்க்க முயற்சித்தல் போன்ற தொடர் செயல்பாடுகள் நடக்கும் இந்நேரத்தில் நாம் இவற்றையெல்லாம் விவாதிக்க வேண்டியதிருக்கிறது. தென்னிந்தியாவின் இரண்டு போராட்டங்கள் இந்தியாவின் முன்னோடி அடையாளம் என்பதை இப்போராட்ட வரலாறுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து விவாதிப்போம் வரலாற்றில் இருந்து இன்றைய சூழலுக்கு பொருந்தும் வழியைத் தேர்ந்தெடுத்து அதன் வழி முன்னேறுவோம்.

                                    -அழகுராஜ்



       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)