கலாதீபம் லொட்ஜ் - வாசு முருகவேல்
கலாதீபம் லொட்ஜ் - வாசு முருகவேல்,
வாசிப்பு அனுபவம் - அழகுராஜ்.
ஒரே நாட்டிற்குள் இருக்கும் பிராந்தியங்களின் பிரிவினைவாதத்தை முன்வைக்கும் சம்பவக் கோர்வையாக கலாதீபம் லொட்ஜ் நாவலைக் கூறலாம். இந்த நாவல் பேசியிருக்கக்கூடிய செய்தி புலம் பெயராமல் நாட்டிற்குள்ளேயே சிதறி கிடக்கும் தமிழ் மனங்களின் தனித்த குரலாக ஒலிக்கிறது. போர்ச்சூழல், வறுமை, வேலை வாய்ப்பின்மை, விடுதலை இயக்கம், எல்லாத் தனிமனிதர்களுக்குமான உணர்வு தங்களுக்கும் இருப்பதை உணர்ந்து கொள்ளுதல் முதலான விஷயங்களே இந்த நாவலின் உள்ளுணர்வு.
புலம்பெயர்ந்து போய் புதியதொரு நாட்டில் அகதியாக அடைக்கலம் புகுந்து இலங்கை தமிழர்கள் படும் பாடுகளையும் போர்சூழலில் திடீர் திடீரென நிகழும் சம்பவங்களையும் எவருமே இன்றி தனித்துவிடப்பட்ட சூழலும் கேலி கிண்டல் தொனிக்கும் விரக்தியின் உச்சத்தில் நின்று சிரிக்கும் கனத்த மூச்சுக்காற்றை வெளித்தள்ளி தெரியும் பற்களையும் நாம் அநேகம் கதைகளாக பார்த்திருக்கிறோம். ஆனால் உள்நாட்டின் தலைநகர் பிரதேசத்திற்கு ஒடுங்கிய கிராமத்திலிருந்தோ தீவிலிருந்தோ வரும் ஒருவன் படக்கூடிய பாடுகளும் சிரமங்களும் குறித்து எத்தனை தூரம் நாம் யோசித்து இருப்போம் என்பது கேள்விக்குறியே. அந்தக் கேள்விக்குறி வடிவத்தின் கீழ் புள்ளியை சற்று நீடிக்க செய்து சந்திரனின் வழியாக ஒரு வாழ்வியக்க தன்மையை பிசிறுகள் தட்டாமல் வாசு முருகவேல் சொல்லியிருக்கிறார்.
சாதாரணமான இயல்புகளுடன் கூடிய நிலத்தில் பிறந்து வளர்ந்தவனே கிராமத்திலிருந்து பெருநகரப் பகுதிகளுக்குள் செல்லும்போது தன்னைச் சுற்றி இருக்கும் எல்லா மனிதர்களையும் அறம் எனும் தராசுக்குள் நிறுத்தி வைத்து அவர்களை மதிப்பீடு செய்ய ஆரம்பிக்கின்றான். சொந்த நிலத்தில் இத்தகைய மதிப்பீடுகளுக்கான வேலை பெருமளவில் குறைக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஏனென்றால் அவனுக்கு அவனது ஊரில் ஆதரவாக நிற்பதற்கும் கை கொடுப்பதற்கும் பலவித உதவிகளை அளிப்பதற்கும் அல்லது இவற்றையெல்லாம் செய்யாமல் சற்று அமர வைத்து பேசுவதற்கேனும் ஆட்கள் இருப்பார்கள். இதே சூழலை புதிதாக நுழைந்திருக்கும் பெருநகரத்தில் எதிர்பார்ப்பது என்பது பெரும் தவறே. எல்லாவித சௌகரியங்களும் கூடிய மனிதர்கள் நிறைந்த சட்டம் சீராக செயல்படும் நாட்டிற்கே இப்படியான நிலையென்றால் இவை அனைத்தையும் இழந்த ஒரு மனிதன் எப்படி இருந்திருப்பான் என்பதை நாவல் பேசுகிறது.
தனது தாய் நிலத்தில் தன்னை குடிமகனாகக் கொண்ட நாட்டின் ஒரு பகுதி எப்படியெல்லாம் வஞ்சனைப்படுத்தி உணர்வு ரீதியாகவும் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அச்சுறுத்துகிறது. அந்த அச்சுறுத்துதலுக்கு பழகிப்போவதில் இளைஞர்களுக்கும் தனி ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் குடும்பப் பெண்களுக்கும் முதியவர்களுக்கும் இளம் பெண்களுக்கும் விதவைப் பெண்களுக்கும் இருக்கக்கூடிய வாய்ப்புகள், சவால்கள் எல்லாம் பல்வேறு கதாபாத்திரங்கள் வாயிலாக அதிக மேல்தோற்ற வர்ணனைகள் இன்றி செயல்பாட்டு வடிவங்களை மட்டும் கருவாக்கி வெளித்தள்ளியுள்ள விதம் இந்நாவலை வேகமாக வாசித்து முடிக்க வைத்து விடுகிறது எனினும் இதில் இன்னும் கொஞ்சம் இலக்கியத்தின் சுவையைச் சேர்த்து விவரித்திருந்தால் இடையில் ஏற்படும் வேகத்தினை கொஞ்சம் நயமாக கொண்டு போய் இருக்கலாம்.
மனிதன் எதற்கும் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ளும் இயல்புள்ளவன் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் கூற்றோடு வடிவமைக்கப்பட்ட இந்நூல் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் சேர்க்கிறது. மனிதன் தன்னை பழக்கப்படுத்தும் கட்டாயத்திற்கு சில சமயம் உள்ளாக்கப்படுவதுண்டு. ஒவ்வொரு மனிதர்களுடைய பின்னணியும் அல்லது எதிர்காலத் திட்டமுமே இந்த பழக்கப்படுத்துவதற்கான அச்சாரமாக இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு அவர்களது பின்னணியே பலவித பழக்கப்படுத்துதலுக்குள் அவர்களை உந்தித் தள்ளி உள்ளே புகுத்துகிறது. இதில் உந்தி தள்ளும் நிலை தான் பழக்கப்படுத்த அவர்களுக்கு இயற்கையாக வாய்க்கும் நிலை.
மனிதனின் அத்தியாவசிய அடிப்படைகளில் உணவு உடை இருப்பிடம் ஆகியன இருக்கிறது. இந்த மூன்றிற்கும் தங்களை பழக்கப்படுத்துவது பிழைத்தலுக்கான மூலம் என்பதை உணர்ந்து எப்படி தங்களை பழக்கப்படுத்துகின்றனர் என்பது தான் இதில் உள்ள உள்விசயம். தங்கள் தாயகமான தமிழ் பிரதேசங்களில் இருந்து கொழும்புவிற்குச் செல்லும் மனிதர்கள் கொழும்பு நகரில் தங்குவதற்கு குறிப்பாக லாட்ஜ்களில் தங்குவதற்கு அங்குள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது. காவல் நிலையத்தில் பதிவு செய்யாதிருக்கும் பட்சத்தில் தமிழர்களை கைது செய்யலாம் என்பது அங்குள்ள சட்ட நடவடிக்கை. இத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழர்கள் ஆட்கொள்ளப்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாக இருக்கிறது. இந்த இடத்தில் காவல் நிலையத்தில் இருப்பவர்களும் அங்கு வேலை தரக்கூடிய இடத்தில் இருப்பவர்களும் சிங்களவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிங்களம் தெரிந்த தமிழரின் உதவி இல்லை என்றால் தமிழரின் கதி அதோ கதிதான் என்ற நிலையே கொழும்பு முழுக்க இருந்துள்ளது. “உன்னிடம் அடையாள அட்டை இருக்கிறதா?" வசிப்பதற்கு பதிவு செய்து உள்ளாயா? என்ற கேள்விகளை நீங்கள் தமிழர்கள் என்றால் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டி வரும் சூழலில் எப்படி அவர்கள் தங்கள் காலத்தை கழித்திருப்பார்கள் என்பதை யோசிக்கும் போதே அங்குள்ள நிலையை சற்று புரிந்து கொள்ளலாம்.
கொத்தடிமைகள் போல கூட்டமாகச் செல்லும் தமிழர்களுக்கு மேன்ஷன்கள் போன்று இருக்கும் லாட்ஜ்கள் தான் தங்கும் இடம். திருகோணமலை லாட்ஜ் முதலான பல்வேறு லாட்ஜுகள் இருப்பினும் இந்த நாவலுக்கான களமாக இருப்பது கலாதீபம் லாட்ஜும் அங்கு வசிக்கும் மனிதர்களுமே. எனக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் பள்ளி கல்லூரி நடத்துவதோடு ஒயின்ஸ் பார், பாக்கெட்டின் கம்பெனி, தியேட்டர், லாட்ஜ் என பல்வேறு தொழில்களை ஒருசேர செய்து கொண்டிருப்பதை அறிவேன். இதில் ஒவ்வொரு தொழில்களுமே அவர் செய்யும் பிற தொழில்களுக்கு உதவும் வகையில் கூட்டாக அமைந்தும் இருக்கிறது. இதன் மூலம் தனக்குள்ளேயே சமரசம் செய்து கொண்டு வெளித் தேவையை போதுமான அளவு தொழில் நிமித்தம் குறைக்க முடியும் என்கிற நிலையை அடைந்துள்ளார். கலாதீபம் லாட்ஜின் உரிமையாளரும் இதே போன்ற தன்மை கொண்டவராகத்தான் காணப்படுகிறார். பேக்கரி கருவாட்டு கடை லாட்ஜ் என விரிகிறது அவர் தொழில் தளங்கள். வேலைக்குச் செல்லும் தமிழர்களுக்கு அவர்களது நிலைக்கு ஏற்ப பேக்கரியிலோ கருவாட்டுக் கடையிலோ வேலை ஒதுக்கப்பட்டு லாட்ஜின் கீழ் பகுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால் அந்த உரிமையாளருக்கு லாபமும் உண்டு. மேன்சன் போன்ற அறைகளில் குடும்பமாக தங்கும்போது வேறு சில பிரச்சனைகளும் உருவெடுக்கத்தான் செய்யும் என்பதை சுரேஷ், ஏழாம் நம்பர் அறையில் வசிக்கும் பெண் மற்றும் அவரது கணவனுடன் சேர்த்து சொல்லி யதார்த்தத்தில் ஒரு பகுதியை சரியாக பிரித்து இந்நாவல் களமேறுகிறது.
தங்குவதற்கும் தங்கும் இடத்திற்கும் இவ்வளவு பெரிய சிரமம் இருக்க இங்கு வரக்கூடிய மனிதர்கள் யார் என்பதை பார்க்க வேண்டும். வெளிநாடுகளுக்கு கொழும்புவிலிருந்து செல்வதே வசதியான முடிவு என்று ஏஜென்சியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், சொந்த நிலத்தில் பிழைப்பதற்கான வழியின்றி தப்பித்து வந்தவர்கள், இயக்கத்தில் இருந்து விலகி தனது தனிப்பட்ட வாழ்வு மீதான அக்கறை கொண்டவர்கள், எல்லாவற்றையும் இழந்து எங்கேயும் பிழைக்க வழி கிடைக்குமா என ஏங்குபவர்களென பலதரப்பட்டவர்கள் கொழும்புவிற்கு வருகின்றனர். கொழும்புக்கு வரும் பிரயாணத்தில் சந்திரன் என்னும் சிறுவன் கடல் மீதான நம்பிக்கையை இழக்கிறான். அவன் சிறுவன் அவன் பெரிதாக எதை யோசித்து விடப் போகிறான் என இந்த பகுதியை கடந்து விட முடியாது தீவுகளில் வசிக்கும் ஒருவர் அதுவும் குறிப்பாக சிறுவன் ஒருவன் கடல் மீதான நம்பிக்கையை இழப்பது முக்கியமான குறியீடு. இப்படி ஒவ்வொருவரும் பயணங்களுக்கு நடுவே பலவிதமான பிரயாண சிரமங்களுக்கு ஆட்பட்டே ஒவ்வொருவரும் கொழும்புவிற்கு வருகின்றனர்.
கொழும்புவில் இருப்பவர்களில் வெளிநாடு போக பணம் கொடுத்தவர்கள் பாடு பெரும்பாடு. ஒரு கட்டத்தில் வெளிநாடு போவது என்பது கௌரவ பிரச்சனை என்கிற அளவிற்கான நிலை பலருக்கு ஏற்படுகிறது. வெளிநாட்டில் தஞ்சம் புகும் மோகம் மனித சலசலப்பு ஆகியன அங்கு வசிப்போரின் விவாத பொருளுக்கு உள்ளாக்கப்படுகிறது. வெளிநாட்டிற்கு செல்வதற்கு மருத்துவ பரிசோதனைகளை முடித்து சான்றிதழ் பெற வேண்டும் என்பது சட்டமுறைமை. அதனைப் பெறுவதற்கு மக்கள் படக்கூடிய சிரமங்களை “கனடா என்னும் பெருவாழ்வு அப்போது சிறுநீரில் தான் தங்கி இருந்தது" என வாசு முருகவேல் சொல்கிறார். கட்டுப்பாடான மருத்துவ சோதனையை எப்படி ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் இளம் பெண்களும் கடக்கின்றனர் என்கிற பகுதி இந்த நாவலில் குறிப்பிடத்தகுந்த இடமாகும்.
கிழிந்த உடைகள் சூழ்ந்த உடலை வைத்து சுற்றித் திரியும் தமிழர்களது உணவுப் பழக்க மாறுதல்கள் கதைக்குள் தொடப்பட்டு இருக்கிறது. இடியாப்பம், சொதி, மீன் ஆகியன ஏற்ற உணவாக இருப்பினும் குளோரின் கலந்த தண்ணீர் சிறிய சிறிய வடைகள் போன்றவை கொஞ்சம் மாறுதலுக்கு உட்பட்ட உணவு வகைகளாக அவர்களுக்கு கிடைக்கின்றது. வெளியூர்களில் இருக்கும் போது உணவுப்பாடு பெரும்பாடு. உடலுக்கு ஒத்துப் போகக்கூடிய உணவு கிடைப்பதே அரிதான காரியம். கொழும்புவிற்கு சென்ற தமிழர்களது பின்னணி மற்றும் அவர்கள் பார்க்கும் வேலை ஆகியனவும் இதில் அடக்கம்.
ஏதும் இல்லாத எதிலி வாழ்வில் சாராயமும் ஒரு அங்கமாக ஆகிப்போகிறது சிலருக்கு. அதில் கணேசும் ஒருவர். கணேசின் செயல்பாடு அதற்கு பஞ்சவர்ணம் செய்யும் எதிர்வினை முதலானவை சிரிப்புகளுடன் கூடியவை. ஏதேனும் ஒரு விசேஷ நாட்களில் கூட்டமாக உட்கார்ந்து இருக்கும்போது கணேசை போல செயல்படுபவர் ஒருவர் இருக்கத்தான் செய்வார் அவர்தான் அன்றைய நாளுக்கான பொழுதுபோக்கு. பஞ்சவர்ணம் சிங்களம் தெரிந்தவர். மேனேஜர் நிலையில் இருப்பவர். அவர் அதிகம் குடிப்பது அவர் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றதாகாது. சமீபத்தில் “அன்பும் அறமும்" என்ற சரவணன் சந்திரனின் கட்டுரை நூலன்றை வாசித்தேன். அந்நூல் தமிழர்கள் தங்கள் மது பழக்கத்தால் உள்ளூரில் இருந்து உலக அளவில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள், மரியாதை, பொருளாதார பலம், நம்பிக்கை போன்றவற்றையெல்லாம் எவ்வாறு இழக்கின்றனர் என சரியான எடுத்துக்காட்டுகளுடன் சொல்லி இருப்பார். மது அருந்துவது தவறல்ல எனினும் நாம் எங்கு எவருடன் அருந்துகிறோம் மது அருந்திய பின் எதை செய்கிறோம் என்பதுதான் நம்மை தீர்மானிக்கிறது. அந்த விஷயத்தில் பஞ்சவர்ணம் சரியாக செயல்பட்டதால் தான் ஓரளவு அங்கிருந்த தமிழ் மக்களுக்கு அனுசரணையாக சிங்களவர்கள் மத்தியில் நடந்து கொள்ள முடிந்தது. மது பழக்கத்தில் இருந்து லாட்டரி சீட்டு சுரண்டுதல், செருப்பு அணிதல் வரை அனைத்தும் ஆளுமையுடன் தொடர்புடைய காரணிகளாகவே இருப்பது பல நிலைகளில் சுட்டிக்காட்டப்படுகிறது.
கொழும்புவிற்கு சென்ற பெண்ணான கொழும்பன்ரி கதை ஒரு தனித்த பெண்ணின் கதையாக விவரிக்கப்பட வேண்டிய அளவு பெரியது என்கிற ஓட்டமே எனக்குள் வந்தது. கொழும்புவிற்கு வரும்போது அவளுக்கு பெரிதாக துணிச்சல் ஏதுமில்லை. தனக்கான ஆதரவை பெருக்குவதற்கு அவள் அலைந்த அலைச்சலானது அவளை துணிச்சல் உள்ளவர்களாக மாற்றுகிறது. அவளது துணிச்சலை பார்த்தே தாரணி முகம் தெரியாத அவளது மகன் மீது ஆசை வைத்து கடிதம் எழுதுகிறாள். பசிக்கு அடுத்தபடியான உணர்வாக காதலை நாம் கூறலாம். எல்லா மனிதர்களுக்குமானது காதல். தனக்கென ஒரு காதல் வாழ்வு அமைய வேண்டுமென்பது அனைவருக்குமான அந்தரங்க ஆசையாக இருக்கத் தான் செய்கிறது.
கருவாட்டுக் கடையில் காலம் கழித்த சங்கருக்கு நர்சிங் படித்த பெண் மீது விருப்பம் வந்து அதை வெளிப்படுத்த அந்தப் பெண் சொல்லும் வார்த்தை “நான் போனதும் அழைப்பேன். விரும்பினால் வா" என்பதே. அந்தப் பெண் மீதான ஆழமான நேசமும் இந்தச் சொற்கள் கூட்டிய வழுவும் அவளுக்காக எதையும் செய்யும் அளவிற்கு உள்ளுக்குள் ஊறி வளர்ந்தது. வார்த்தைகளை பெண்கள் உதிர்க்கும் போது அது அவளை உண்மையாக நேசிக்கும் காதல் வயப்பட்ட இளைஞனுக்கு பெருத்த மன தைரியத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது. புறச் சூழலில் நெருக்கடிகளுக்கு மத்தியில் இப்படியான வார்த்தைகளும் நேசத்திற்குரிய பெண்ணின் பார்வையையுமே மனோதிடத்தை கொடுத்து எதையும் சமாளிக்கலாம் என்ற நிலைமையை வரவைக்கிறது.
உண்மையோ பொய்யோ நர்சிங் படித்த பெண் ஒருத்தி கருவாட்டு கடை தொழிலாளி மீது உதிர்க்கும் இந்த வார்த்தை அவனுக்கு தன்னம்பிக்கையும் சுய கௌரவத்தையும் மதிப்பையும் அவனது ஆளுமை சார்பாக கொடுத்தது. அந்த ஆளுமையின் விளைவைத் தான் அவளது சந்திப்புக்கு பின் அவன் அடைந்த இன்பமாக அந்த தெருவும் அவரை சுற்றி இருந்த நண்பர்களும் பார்த்து ஆச்சரித்தனர். மனிதனை முழுவதுமாக வலுவாக மாற்றும் சக்தியும் ஒட்டுமொத்த வலுவையும் மழுங்கடிக்கும் சக்தியும் காதலுக்கு உண்டு. அதுவும் ஏதுமற்றவனின் காதல் அதீத சக்தி கூடியது. எவரது அன்பு மொழிகளையும் அந்தரங்கத்தில் பெறாத ஒருவன் புதிதாக முதலாக அவற்றையெல்லாம் பெறும்போது அடையும் இன்பமும் அதற்கு பதிளீடாக அந்த பெண் அவனது உள்ளத்திற்குள் வந்து அவனுக்காகத் தன்னை கொஞ்சம் நெகிழ்வாக்குவதுமே உண்மையான எதிர்பார்ப்பற்ற அன்பின் வெளிப்பாடாகிறது.
ராணுவத்தின் அச்சுறுத்தலோடு விடுதலை அமைப்புகளில் சார்பியலும் இந்நாவலில் பதிவாகியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் பரிசோதித்து ராணுவம் தன்னை அதிகாரக் குறியீடாக வெளிப்படுத்தும் நிலை ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் ஜே.வி.பி அமைப்பு நிகழ்த்திய வன்ம உணர்வும் சிங்களர்கள் தமிழர்களிடமிருந்து சாதி பார்த்து வேலை தரக்கூடிய நிலையும் ஒன்று சேர்ந்து நிற்கும் சூழலில் என்ன செய்வது என்பதை “தைரியம் மட்டுமே கடைசிவரை சுமக்க வேண்டியது. கவலைகள் சுமக்க வேண்டியவை அல்ல" என்பதாக வாசு முருகவேல் சொல்லியுள்ளார். புலிகள் பற்றிய சிறு விவாதத்தின் தொடக்கம் வந்து மேல் எழும்பாமலே ஓரிடத்தில் முடிவு பெறுகிறது. மேலும் ஜே.வி.பி கொழும்பில் இருந்த தமிழர்களுக்கு செய்த பாதகங்கள் நாவலில் இழையோடிக் கிடக்கிறது. கம்யூனிச அமைப்பின் கிளையாகப் பிரிந்து வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்த ஜே.வி.பி சாதாரண மக்களுக்கும் துன்பத்தை தந்துள்ளது. ராணுவத்தின் துன்பத்தையும் இப்படியான அமைப்புகளின் துன்பத்தையும் அவ்வப்போது அனுபவிப்பதை மக்கள் தங்கள் வாடிக்கையாக்கிக் கொண்டனர். இதில் மாலத்தீவை பிடிக்க சென்ற ப்ளோட் அமைப்பு பற்றிய தகவல்களும் அடக்கம். ராணுவத்தின் சித்திரவதையே மூன்றாம் மாடி என்ற குறியீட்டுடன் மக்கள் பேசியது பிடாரி கோவில் தனிக் கோயிலாக அமைந்திருந்தது போன்ற தகவல்களும் தரவுகள் கூடியவையாக நாவலை அமைக்கிறது.
குமார, தர்மபால போன்றவர்கள் கீழே கொட்டும் நிலையில் உள்ள காய், கனிகளை சாமர்த்தியம் கூட்டி விற்று தங்கள் பிழைப்பை நடத்தியுள்ளனர். இந்த இடத்திலும் கூட சரவணன் சந்திரனின் “அன்பும் அறமும்" கட்டுரை நூலில் உள்ள குழந்தை அண்ணன் பற்றிய கதை நோக்கத்தக்கது. கழிவு காய், கனிகளை வாங்கி விற்கும் தொழிலை குழந்தை அண்ணன் செய்கிறார். அவர் காட்டிய நேர்மையும் அவருடைய கபடற்ற தன்மையும் தொழில் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதோடு நுகர்வோர் கவனம் பெருகி தொழிலையும் வளர்க்கிறது. கொழும்புவில் அதேபோன்ற வேலையையே குமார, தர்மபால ஆகிய இருவரும் செய்ய முயன்றுள்ளனர் இப்படியாக பல்வேறுபட்ட தொழில்களை செய்து தங்களை கொழும்புவில் வாழ பழக்கப்படுத்திக் கொண்ட அந்த மக்களுக்கு கொழும்பு வாழ்க்கை பிடித்ததாக மாறியது. சந்திரன் நாவலின் ஓர் இடத்தில் இப்போதெல்லாம் கொழும்பிலே இருப்பது பிடித்திருக்கிறது என்பதாகச் சொல்கிறான். இந்த மாற்றம் சென்னை போன்ற பெரு நகரத்தில் தன்னை பழக்கப்படுத்தியவர்களால் அதிலிருந்து வெளிவர முடியாமல் இருக்குமளவிலான பிணைப்பை ஒத்தது. எது எப்படி இருப்பினும் வலிகளால் உற்பத்தி செய்யப்பட்ட வாழ்வையே அவர்கள் நுகர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதற்கு உணர்வு குவியலைச் சேர்க்க கவிஞர்கள் சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன் புதுவை ரத்தினதுரை, தமிழ் நதி, தமிழச்சி தங்கபாண்டியன், நிலாந்தன், அகரமுதல்வன், தீபச்செல்வன், எஸ்.போஸ் ஆகியோரின் கவிதைகள் உதவியுள்ளது. “ நீண்ட நேரம் தனிமையில் அழுதான்." “பெரும் வலியுடன் அவனால் நித்திரை கொண்டிருக்கக்கூட முடியவில்லை." போன்ற வலிகள் உணர்த்தும் செய்தி பைத்தியத்தின் மனநிலையை உடல் அசைவில் வெளிகாட்ட முடியாத நிலையைப் போன்ற ஊசிகளால் குத்தப்பட்டது.
பிரிவு தனித்தனி கதைகளை உற்பத்தி செய்கிறது. பிரிவுகளின் வேதனையை அனுபவித்துப் பின் சேர்வதில் இருக்கும் சுகா அனுபவம் அலாதியானது. கொழும்பன்ரியும் அவள் மகன் சங்கரும் பேசுவதற்கான முடிவில்லாத கதைகள் இருந்தன. அந்த சந்திப்பு அது அனைத்தையும் கொட்டி தீர்க்கும் மணி நேரங்களை உள்ளடக்கி இருந்திருக்காது. அம்மா மகன்களைப் போல தாய் மண்ணும் அதைக் காத்து தனதாக்கி உரிமை கொண்டாடும் போராளிகளும் பிணைப்புக் கொண்டு மாறி மாறி பேசுவது வரலாற்றின் பகுதிகளாக எஞ்சி கிடைக்கிறது. ஒரே மூச்சில் வாசிக்கத்தக்க வலியும் உள் நாட்டிலேயே அகதிகளாகி இருக்கும் மனிதர்களின் வாழ்வியலை சொல்லித் தரக்கூடிய நாவலாக கலாதீபம் லொட்ஜ் நாவலைக் கருதலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக